குழந்தை என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கவனம் முழுக்க என்மேல் இருந்தது. ஆனால் என் கவனம் முழுக்க e-bay தளத்தில் எனக்குத் தேவையான பழைய காலத்திய கதவுக் கைப்பிடிகளைத் தேடுவதில் இருந்தது.
கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நிமிடங்கள் நான் இந்தத் தேடலில் என்னை மறந்திருந்தேன். அதன்பின்தான் என் குழந்தை என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் கையிலிருந்த ஸ்மார்ட் போனின் நீலநிற ஒளியில் அவளது சின்ன முகம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அவளது கவனம் என் மேல், என் கவனமோ என் ஸ்மார்ட் போன் மேல்! இந்தக் காட்சியை ஒரு வெளி ஆள் போலப் பார்த்தேன். அந்த நொடிகளை இப்போது நினைத்தாலும் என் இதயம் வலிக்கிறது. நிச்சயம் என் வாழ்வு இப்படி இருக்கக்கூடாது என்று தீர்மானித்தேன்.
அடுத்த ஒன்றரை ஆண்டுகளை இந்தப் பழக்கம், இது தரும் போதை, இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளான நடத்தையில் மாறுதல், கவனமின்மை, நரம்பு மண்டலப் பாதிப்பு இவை பற்றிய ஆராய்ச்சியில் கழித்தேன். எப்படி இவற்றைக் கட்டுப்படுத்துவது, ஒரு ஆரோக்கியமான உறவை ஸ்மார்ட் போனுடன் வளர்த்துக் கொள்வது என்பது பற்றி முடிவுக்கு வந்தேன்’ என்கிறார் “How to Break Up With Your Phone: The 30-day Plan to Take Back Your Life” என்ற புத்தகத்தை எழுதியிருக்கும் திருமதி காதரீன் ப்ரைஸ் (Catherine Price).
சராசரியாக ஐந்து மில்லியன் பயனாளர்கள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் அவர்கள் கையிலிருக்கும் போனுடன் கழிப்பதாக ஒரு தகவல் சொல்லுகிறது. நம்முடைய ஸ்மார்ட் போனுடன் ஆன இத்தகைய உறவு ஒரு ஆரோக்கியமான உறவு இல்லை என்று நம் எல்லோருக்குமே தெரியும்.
சரி, இதற்கு என்ன தீர்வு?
இனி நான் கைபேசியைப் பயன்படுத்தவே மாட்டேன் என்பதல்ல தீர்வு. கைபேசி என்பது நமக்குத் தேவையான ஒன்றாகிவிட்டது. அதனுடனான உறவை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம்? கைபேசியுடனான உறவு நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நாம் அதன் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. நமக்கும் நமது கைபேசிக்கும் ஆன எல்லைகளை மேம்படுத்திக் கொள்ள முடியுமா? ஒரு ஆரோக்கியமான உறவை வளர்த்துக் கொள்ள முடியுமா?
நிச்சயம் முடியும். திருமதி காதரீன் ப்ரைஸ் சொல்லும் வழிகளை நாமும் பின்பற்றிப் பார்க்கலாமே. இதோ அவர் தரும் குறிப்புகள்:
மாற்றி யோசியுங்க:
‘இனிமேல் கைபேசியுடன் நான் கழிக்கும் நேரத்தைக் குறைக்கப்போகிறேன்.’ நம்மில் நிறைய பேர் நினைப்போம். இப்படி நினைப்பதே நம்மை வருத்தத்தில் ஆழ்த்திவிடும். மாற்றி யோசியுங்கள். கைபேசியில் நான் செலவழிக்கும் நேரம் எனக்குப் பிடித்த, என்னை மகிழ்விக்கும் ஒரு செயலை நான் செய்யாமல் இருக்கும் நேரம் என்று நினைக்க ஆரம்பியுங்கள். ஒரு தோழியுடன் அந்த நேரத்தைக் கழிக்கலாம்; அல்லது புதிதாக ஒரு பொழுதுபோக்கைக் கற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால், ஏற்கெனவே தெரிந்த தையல் வேலையைச் செய்யலாம். ஓவியம் வரையலாம். பாதியில் நிறுத்தியிருந்த வேலையை முடிக்கலாம். மனதுக்குப் பிடித்த ஒரு விளையாட்டில் (நிச்சயம் செல்போன் விளையாட்டு அல்ல) நேரத்தைக் கழிக்கலாம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
செல்போனில் குறைந்த நேரம் செலவழிக்கப் போகிறேன் என்பதற்குப் பதில் என் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதில் அல்லது என் வாழ்க்கையுடன் அதிக நேரம் செலவழிக்கப் போகிறேன் என்று மாற்றி யோசியுங்கள்.
உங்கள் கவனத்தைக் காசாக்குகிறார்கள், உஷார்!
நமது வாழ்க்கையின் மேல் நமது கவனம் இருக்கவேண்டும். ஆனால் நம் கவனமோ கைபேசி மேல் இருக்கிறது. இந்த நேரத்தில் எனது கவனம் எதன் மேல் இருக்கவேண்டும் என்ற கேள்வி எழும்போது நம் நேரத்தை நாம் எப்படிச் செலவழிக்க வேண்டும் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது, இல்லையா?
நமது ஸ்மார்ட் போனில் இருக்கும் பலவிதமான சமூக வலைத்தளங்கள் நமக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. எதற்காக இவைகளை நமக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும்? இவர்களுக்கு எங்கிருந்து பணம் வரும்? எப்போதாவது இதைப்பற்றி யோசித்திருக்கிறீர்களா? அவர்களுக்கு நமது கவனம் தேவை. நாம் நிறைய நேரம் அவற்றில் செலவிடவேண்டும். அதுதான் அவர்களது நோக்கம். அதில் விளம்பரம் செய்பவர்கள்தான் அவர்களது வாடிக்கையாளர்கள். அவர்களின் மூலம் இவர்களுக்குப் பணம் கிடைக்கிறது. அதாவது நமது கவனத்தை அவர்கள் காசு பண்ணுகிறார்கள். இப்போது யோசியுங்கள்: உங்களது கவனம் எதில் இருக்கவேண்டும்? வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுவதிலா? கைபேசியில் நேரம் போவது தெரியாமல் மேய்வதிலா?
உங்கள் வாழ்வின் வெற்றி உங்கள் கையில்
உங்கள் குறிக்கோள்களை நினைவுபடுத்தும் தூண்டுகோல்களை உருவாக்குங்கள். அவற்றைப் பயன்படுத்தி வெற்றிக்குத் தயாராகுங்கள். நிறைய நேரம் படிப்பதில் செலவழிக்க வேண்டுமென்றால் உங்கள் படுக்கையறை மேஜையில் ஒரு புத்தகத்தை வையுங்கள். புதியதாகச் சமைக்க வேண்டுமா, அதற்கான சாமான்களை விலாவாரியாகப் பட்டியலிடுங்கள். உங்கள் கைபேசியின் சார்ஜர் படுக்கையறைக்கு வெளியே இருக்கட்டும். அலாரம் வைக்க என்று தனியாக ஒரு கடியாரம் வாங்குங்கள்.
உங்களை உங்கள் குறிக்கோளிலிருந்து வெளியே இழுக்கும் தூண்டுகோல்களைத் தவிர்த்துவிடுங்கள். உதாரணத்திற்கு சமூகவளைத்தளச் செயலிகளை உங்கள் கைபேசியில் செயலிழக்கச் செய்யுங்கள். தகவல் சொல்லிகளை (notifications) – மின்னஞ்சல் உட்பட – தவிர்த்துவிடுங்கள். சாப்பிடும் நேரங்களில் யார் கைகளிலும் கைபேசி இருக்கக்கூடாது என்பது உங்கள் குடும்பத்தில் எழுதப்படா விதியாக இருக்கட்டும்.
வேகத் தடை
எத்தனை முறை ஜஸ்ட் ஏதாவது வந்திருக்கிறதா பார்க்கலாம் என்று செல்போனைக் கையில் எடுத்துவிட்டு மணிக்கணக்கில் அதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறோம்? இந்த வழக்கத்தை முதலில் நிறுத்துங்கள். இவையெல்லாம் உங்களிடத்தில் ஒரு அதிருப்தியை உண்டாக்கும். ஐயோ, இவ்வளவு நேரம் வீணாக்கிவிட்டோமே என்று உங்களைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும். சாலையில் எதிர்படும் வேகத் தடை போல செல்போனை கையில் எடுப்பதற்கும் தடைகள் இருக்கட்டும். உங்கள் செல்போனைச் சுற்றி ஒரு ரப்பர்பேண்ட் போட்டு வையுங்கள். அது செல்போனைத் தொடவிடாமல் உங்களைத் தடுக்கும். இல்லையென்றால் உங்கள் லாக்-ஸ்க்ரீனில் ‘போனை எடுத்துப் பார்க்க வேண்டுமா?’ இப்போது என்ன அவசரம்?’, ‘தேவையா?’, ‘எதற்கு?’ போன்ற கேள்விகளைப் போட்டு வையுங்கள்.
உடல்/மனம் சார்ந்த மாற்றங்கள்
கைபேசியில் மும்முரமாக இருக்கும்போது உங்கள் உடல்மொழிகளைக் கொஞ்சம் கவனியுங்கள்: எந்த நிலையில் உங்கள் உடல் இருக்கிறது? நேராக, நிமிர்ந்து முதுகு வளையாமல் உட்கார்ந்திருக்கிறீர்களா? நீங்கள் இப்போது உங்கள் கைபேசியில் செய்து கொண்டிருக்கும் வேலை உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறதா? அதைத் தொடரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் உடலில் மனதில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் உணர ஆரம்பித்தீர்கள் என்றால் கைபேசி தரும் போதையிலிருந்து நீங்கள் உங்களை விலக்கிக் கொள்வது சுலபமாகிவிடும்.
குறிப்பாக கேம்ஸ் ஆடும்போது ஒரு நிலையில் வெற்றி பெற்றவுடன் ஏற்படும் மகிழ்ச்சி, அடுத்த நிலையில் முதல்முறை வெற்றி கிட்டாதபோது ஏற்படும் கோபம் முதலியவற்றைக் கூர்ந்து கவனியுங்கள். ஒரேமுறையில் நான்கு அல்லது ஐந்து நிலைகளைத் தாண்டிச் சென்றுவிட வேண்டும் என்ற வெறி மெதுவாக உங்கள் மனதில் ஏற்படும். அது இயலாதபோது உங்கள் மனநிலையைக் கவனியுங்கள். சாதாரணமாக யாராவது வந்து பேசினால்கூட சுள்ளென்று ஒரு கோபம் பொங்கும். இதெல்லாம் நீங்கள் கைபேசியின் கட்டுப்பாட்டிற்குள் வர ஆரம்பித்துவிட்டீர்கள் என்பதன் அறிகுறிகள். ஆரம்பத்திலேயே இந்த ஆட்டங்களிலிருந்து விடுபட்டு விடுங்கள். ‘வெற்றி பெற வேண்டுமா? நண்பர்களிடம் உதவி கேளுங்கள்’ என்று உங்களுக்கு மெல்ல வலைவிரிக்கப்படும். உஷார்!
கைபேசி இல்லா நேரங்கள்
அவ்வப்பொழுது கையில் கைபேசி இல்லாமல் பழகுங்கள். நடைப்பயிற்சியின் போது கைபேசியை வீட்டில் விட்டுவிட்டுச் செல்லுங்கள். மணி பார்க்க கைகடியாரத்தைக் கட்டிச் செல்லுங்கள். அலுவலகத்திற்குப் பேருந்தில் செல்லும்போது ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு செல்லுங்கள். கைபேசியை எடுத்துப் பார்க்கவேண்டும் என்று கை அரிக்கும்; அடக்குங்கள். அந்த அடக்குமுறை உங்கள் உடம்பில், மனதில் என்னென்ன மாற்றங்களை உண்டு பண்ணுகிறது என்று கூர்ந்து கவனியுங்கள். அந்த ஆர்வம் சற்று நேரத்தில் தானாகவே மறைந்துவிடும்.
உங்களைக் காக்கும் தொழில்நுட்பம்
நீங்கள் ஒருநாளைக்கு எத்தனை மணிநேரம் கைபேசியைப் பயன்படுத்தினீர்கள் என்பதை அறிய பலவித செயலிகள் இருக்கின்றன. அவை காட்டும் பயமுறுத்தும் தகவல்களைக் காணத் தயாராகுங்கள். உங்களை அறியாமலேயே பலமணி நேரங்களை விரயம் செய்திருப்பீர்கள். பிரச்னை கொடுக்கும் வலைத்தளங்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள பல செயலிகள் இருக்கின்றன. சில வலைத்தளங்கள் எத்தனை நேரம் நீங்கள் கைபேசியைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியும் என்று உங்களைச் சவாலுக்கு அளிக்கும். அதனைப் பயன்படுத்துபவர்களில் எத்தனை பேர் எத்தனை நேரம் ‘ஆஃப்லைனில்’ இருந்திருக்கிறார்கள் என்றும் சொல்லும்.
ஆப்பிள் போன்களில் ஒரு செயலி இணைத்திருக்கிறார்கள். இதன்மூலம் ‘வாகனம் ஓட்டும்போது தொந்திரவு செய்யவேண்டாம்’ என்று உங்கள் போனில் போட்டுவிடலாம். யாராவது உங்களை நீங்கள் வாகனம் ஓட்டும்போது கூப்பிட்டால் இந்தச் செயலி அவர்களுக்கு ஒரு தயார்நிலைச்செய்தி அனுப்பிவிடும். வாகனம் ஓட்டும்போது பேசிக்கொண்டே செல்வதைத் தடுக்கும் ஒரு நல்ல செயலி இது. ஆண்ட்ராய்ட் கைபேசியிலும் இந்தச் செயலி இருக்கிறது. நீங்கள் எவ்வளவு நேரம் கைபேசியை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் லாக்-ஸ்க்ரீனில் காட்டும் இந்தச் செயலி.
ஒரு தொழில்நுட்பம் இன்னொரு தொழில்நுட்பத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும்.
வெளிஉலக உந்துதல்கள்
பேருந்துகளில் செல்லும்போது அல்லது நடந்து செல்லும்போது மற்றவர்கள் தங்களது கைபேசிகளை எடுத்துப் பார்க்கும்போது உங்களுக்கும் பார்க்க வேண்டுமென்று தோன்றலாம். அப்போது உங்களது நோக்கம் என்ன என்று சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். நீங்கள் உங்கள் கைபேசியுடன் ஆரோக்கியமான உறவை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஒரு புதிய ஆரோக்கியமான பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். அப்படியும் உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நீண்ட ஆழ்ந்த மூச்சு ஒன்றை விட்டு உடலைத் தளர்த்திக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும்.
இவை எதுவுமே உங்கள் கைபேசியை உங்களிடமிருந்து விலக்கவில்லை என்றால் உங்கள் வாழ்க்கையை ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்: எத்தனை பேர் தாங்கள் இறக்கும் தருவாயில் ‘நான் முகநூலில் இன்னும் சிறிது நேரத்தைக் கழித்திருக்கலாம்’ என்று சொல்வார்கள்? மறுபடி மறுபடி ஒரு கேள்வியை உங்களிடமே கேட்டுப்பாருங்கள்: ‘இது என் வாழ்க்கை. இதில் எத்தனை நேரம் நான் கைபேசியில் வீணாகக் கழிக்கப் போகிறேன்?’
அந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?
முப்பது நாட்கள் நீங்கள் இந்த வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், உங்கள் கைபேசியை விவாகரத்து செய்துவிடலாம் என்கிறார் திருமதி காதரீன் ப்ரைஸ். முயற்சி செய்யுங்களேன்.