சு.வெங்கடேசனின் உரையும் மறுப்பும் | ஜனனி ரமேஷ்(இந்து) கல்யாண மாலை நிகழ்ச்சியில் ‘இயற்கை அறம்’ என்ற தலைப்பில் சக எழுத்தாளரும், ‘காவல் கோட்டம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளருமான  சு.வெங்கடேசன் ஆற்றிய உரையைக் கேட்டேன்.

(புகைப்படம் நன்றி: விகடன்.காம்)
முதல் பிழை

நீதி நூல்களை மேற்கோள் காட்டிய வெங்கடேசன் அத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் சம்பிரதாயங்களை, பூஜை புனஸ்காரங்களைக் கடைப்பிடித்துப் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவோர்தான் சொர்கத்தை அடைவார்கள் என்று சாஸ்திர நூல்கள் (அதாவது இந்து நூல்கள்) சொல்கின்றன என்று உரையைத் தொடங்கி உள்ளார். தொடர்ந்து தமிழனின் அறிவுச் சொத்தான சிறுபஞ்ச மூலத்தில் வரும் ‘நீர் வழிந்தோட வாய்க்கால் தோண்டுபவன், குளம் வெட்டுபவன், கிணறு எடுப்பவன், விளை நிலம் உருவாக்குபவன், மரம் நடுபவன்’ ஆகியோர் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்பதை மேற்கோள் காட்டியுள்ளார்.

சிறுபஞ்ச மூலத்தை மேற்கோள் காட்டித் தமிழின் சிறப்பை மேம்படுத்துவதை விடவும், சம்பிரதாயங்கள், பூஜை, புனஸ்காரங்கள், பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவோர்தான் சொர்க்த்துக்குப் போவார்கள் என்று சொல்லும் இந்து தர்மத்தைக் கொச்சைபடுத்த வேண்டும் என்பதே வெங்கடேசனின் நோக்கம். அவர் எந்தக் கட்சியையும் சேராதவராக, நடுநிலையாளராக இருந்திருந்தால், அல்லாவை வணங்கும் முஸ்லிம்கள் நற்கதி அடைவார்கள், இயேசுவைக் கும்பிடும் கிறித்துவர்கள் சொக்கத்துக்குப் போவார்கள் ஆகிய சொற்களையும் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இந்து மத விரோதியாக, இந்துக் கடவுளை நிந்திப்பவராக, இந்துக் கடவுள்களை மட்டுமே நம்பாதவராக (அல்லா, இயேசு விதிவிலக்கு), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினராக இருப்பதால், மேடையில் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஒருவேளை (முஸ்லிம் அல்லது கிறித்துவ) கல்யாண மாலை நிகழ்ச்சி ஏதாவது இருப்பின் அதில் பேச வெங்கடேசனுக்கு அழைப்பு வருமெனில் அங்கே அல்லாவை வணங்கும் முஸ்லிம்கள் நற்கதி அடைவார்கள், இயேசுவைக் கும்பிடும் கிறித்துவர்கள் சொக்கத்துக்குப் போவார்கள் என்று உங்கள் நூல்கள் கூறுகின்றன.. ஆனால் எங்கள் தமிழ் நூலான சிறுபஞ்சமூலம் ‘நீர் வழிந்தோட வாய்க்கால் தோண்டுபவன், குளம் வெட்டுபவன், கிணறு எடுப்பவன், விளை நிலம், மரம் நடுபவன்’ ஆகியோர் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்று சொல்லும் துணிச்சல் அவருக்கு இருக்குமா?
கட்டாயம் அந்தத் தைரியத்தையும், துணிச்சலையும், இந்து மத விரோத எண்ணத்தில் ஊறிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் வெங்கடேசனிடம் எதிர்பார்க்க முடியாது. போதாக் குறைக்கு இப்போது அவர் மதுரை நாடாளுமன்ற வேட்பாளராக வேறு அறிவிக்கப்பட்டிருக்கிறார். வாக்குகள் சேகரிக்கப் பிரசாரத்துக்குப் போகும் இடங்களில் இப்படிப் பேசுவாரா? சிறுபான்மை ஓட்டு மொத்தமாகப் காலியாகிவிடும். அதுமட்டுமா? அடுத்த வினாடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரது வேட்பு மனுவை வாபஸ் வாங்கிக் கட்சியிலிருந்தே நீக்கி விடும்!

(இந்து) கல்யாண மாலை நிகழ்ச்சியில் குழுமியிருந்த அனைவரும் இந்துக்கள். வேற்று மத நிகழ்ச்சியில் அவர்கள் சம்மந்தப்பட்ட மதங்கள் குறித்து இவ்வாறு பேச முடியாது என்பதையும் அவர் உணர்ந்திருப்பார்.

இரண்டாவது பிழை

‘அன்னதானம்’ சமணத்தின் கொடை என்பது பிழையின் உச்சம். சமணத்தின் தோற்றமே அதிகபட்சம் 3000 ஆண்டுகளுக்குள்தான். சமண மாதம் தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வேதங்களிலும், சங்க இலக்கியங்களிலும் அன்னதானம் மிக முக்கியமாகப் போற்றப்படுகிறது. குறிப்பாக அன்னதானம் என்பது இந்து மதத்தின் ஆணிவேர் என்பதுடன் மிக முக்கியமான தர்மமாகவும் கருதப்படுகிறது.

சமணம் தோன்றாத வேதத்தில், வியாசர் எழுதிய மகாபாரதம் வன பர்வத அதியாயத்தில் மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னதாக ஸ்லோகங்கள் உள்ளன.

அதிதி தேவோ பவ” = ‘விருந்தாளிகள் கடவுள்’ (தைத்ரீய உபநிஷத், சிக்ஷாவல்லி 1-20) விருந்தினர்களைக் கடவுளாகக் கருத வேண்டும் என அன்னதானத்தின் மேன்மையை விளக்குகிறது. கிருஷ்ணர் பகவத் கீதையில் அன்னதானத்தின் சிறப்பை எடுத்துக் கூறுகிறார்.

சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. பசித்தவர்களுக்கு அன்னமிடுதல் கோடி புண்ணியம் என்கிறது.

சமணம் தோன்றாத சங்க இலக்கியங்களில்,

‘விருந்து தானும் புகுவது கிளந்த யாப்பின் மேற்றே’ என்று விருந்தோம்பலையும், அன்னதானத்தையும் (தொல்காப்பியம் – பொருளதிகாரம்)

கோவலர் மழவிடைப் பூட்டிய குழாஅய்த் 
தீம்புளி செவியடை தீரத் தேச்சிலைப் பகுக்கும்
புல்லிநன்னாடு ‘(அகம் 311,9-12) 

விருந்தினர் இரவில் காலம் கழித்து வரினும் மனம் மகிழ்ந்து விருந்தோம்பினர் (நற்றிணை,142)

இரவில் வாயில் கதவை அடைக்கும் முன் விருந்தினர் உளரா எனப் பார்த்து இருப்பின் அழைத்து வந்து உணவளிப்பர். (குறுந்தொகை, 205, 12-14) 

விருந்தினருக்கு விடைகொடுத்து அனுப்பும்போது குதிரை பூட்டிய தேரினைக்கொடுத்து, ஏழடி பின்தொடர்ந்து சென்று வழியனுப்புதல் பண்டைய வழக்கமாகும். (பொருநராற்றுப்படை, 165, 166) 

விருந்தோம்பலில் விருப்பம்கொண்டு அதற்காகவே பொருளிட்டச் சென்றுள்ளனர் (அகம்,205,12-14).

பொருளையெல்லாம் இழந்து வறுமையுற்ற காலத்தும், விருந்தினரைச் சிறப்பாக ஓம்புதலைச் சங்க மக்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர்.வறுமையுற்று விருந்தோம்பா நிலையிலும் ஒருவன் முதல் நாள் தன் பழைய வாளை விற்றும், அடுத்த நாள் யாழை அடகு வைத்தும் விருந்தோம்பினான். (புறம்,316,5,7)

வரகும் தினையும் இரவலர்க்கு ஈந்து தீர்ந்தன வேறு வகையில் பொருள் பெற வழியில்லை. அந்நிலையில் விதைக்கு இருந்த தினையை உரலில் இட்டுக் குத்தி மகளிர் விருந்தோம்பினர். (புறம்,333)

அதியமான் வறுமையுற்ற காலத்தும் விருந்தோம்பினான் என்பதை புறநானூறு கூறுகிறது (103) (95).

 .. இந்திரர் 
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத் 
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்; 
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி, 
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர்; 
பழி எனின், உலகுடன் பெறினும், கொள்ளலர் 

– புறம் 182, க.மா.இளம்பெருவழுதி.

சிறுகுடி கிழான் பண்ணனை ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாராட்டுகிறான் – புறம்.173-ல்.

பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாரரட்டுகையில் உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே என்ற வரியைப் பாடுகிறார். 

இதே வரி பின்னர் மணிமேகலையிலும் வருகிறது – புறம்.18-ல்.

கோவூர்க்கிழார் பாடிய பாடலில் விருந்தின் சிறப்பு காட்டப்படுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் – தமிழரின் பண்பாடு என்பது கோவூர்க் கிழார் கருத்து (புறம்.46).

மறுமைப் பயனை மனதிற் கொள்ளாமல், மக்களின் வறுமையைத் தீர்க்கவே ஈத்துவப்பர் என்று கூறப்படுகிறது புறம்.141 (பரணர்), புறம்134 (முடமோசி).

இப்பாடல்களில் விருந்தினரை உபசரித்துவிட்டு, அடுத்தவர்க்காகக் காத்திருக்கும் செய்தி வருகிறது! (அகம்.203, புறம்.177)

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்துமே சமண மற்றும் பௌத்த மதக் காப்பியங்கள். சைவம் (சிவன்), வைணவம் (விஷ்ணு) ஆகிய பெயர்கள் தவிர்த்து இவற்றில் அருகன் என்ற சமணத் தீர்த்தங்கரர்களின் பெயர்கள் காணப்படும். இந்து மதத்தைத் தூற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ‘அன்னதானம்’ என்பது சமணர்களின் கொடை என்பது தவறான வாதம். சமண மதம் தோன்றுவதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வேதங்களிலும், சங்க இலக்கியங்கள் (எட்டுத் தொகை மற்றும் பத்துப் பாட்டு) ஆகியவற்றிலும் அன்னதானம் / விருந்தோம்பல் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெளிவு.Leave a Reply