Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலைவழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் – பகுதி 1 | தமிழில்: ஜனனி ரமேஷ்


நிற்பவர்கள்:
சங்கர் கிஸ்தயா, கோபால் கோட்ஸே, மதன்லால் பஹ்வா, திகம்பர் பட்கே
அமர்ந்திருப்பவர்கள்: நாராயண் ஆப்தே, சாவர்க்கர், நாதுராம் கோட்ஸே, விஷ்ணு கார்கரே

பின்புலம்: மகாத்மா
காந்தி கொலை வழக்கு தொகுதி II (குற்றம் சுமத்தப்பட்டவர் அறிக்கைகள்) அதிகாரப்பூர்வ
ஆவணங்களிலிருந்து மீள் உருவாக்கம் செய்யபப்பட்டவை. கீழ்க்கண்டவை சாவர்க்கர் எழுத்து
வடிவிலான வாக்குமூலம் ஆகும்:
சிறப்பு நீதிமன்றம், செங்கோட்டை, தில்லி
குற்றவியல் எண் ….. 1948
வாதி
Vs
கோட்சே மற்றும் பலர் – குற்றம் சுமத்தப்பட்டவர்கள்
இபீகோ 120பி, 302 பிரிவுகளின் கீழ் வழக்குப்
பதிவு
குற்றம் சுமத்தப்பட்டவர் எண் 7, விநாயக்
தாமோதர் சாவர்க்கர் கீழ்க்கண்டவாறு பணிந்து சமர்ப்பிப்பது
என்
மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றங்களையும் நான் இழைக்கவில்லை அதற்கான நோக்கமும் இல்லை.
இந்த
வழக்குக்கான சாட்சி 1948 ஜனவரி 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்ற நிகழ்வுகள் சம்மந்தப்பட்டவர்களின்
தனி நபர் செயல்கள் என்றும், கூட்டுச் சதியின் விளைவு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தி
இருந்த நிலையிலும், இந்த நிகழ்வுகளுடன் தொடர்புடைய குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஒப்புக்
கொண்ட நிலையிலும்,
இந்த
நீதிமன்றத்தின் விசாரணை முடிவுகள் எப்படி இருப்பினும், நான் விழுமிய முறையில் வலியுறுத்துவது
என்னவெனில், அரசு வழக்கறிஞர் குற்றம் சுமத்தியபடி நான் எந்தவொரு கூட்டுச் சதிக்குக்
காரணமாகவும் இல்லை, அதில் ஈடுபடவும் இல்லை அல்லது அதுபோன்ற குற்றவியல் நிகழ்வுகள் குறித்து
அறியவும் இல்லை.
குற்றப்
பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி நான் எந்தக் குற்றத்துக்கும் உடந்தையாக இருக்கவில்லை,
அதற்கான காரணமோ அவசியமோ இல்லை.
என்
தரப்பு வாதத்தைத் தெளிவுபடுத்த எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நிலை குறித்துச் சில
முக்கிய விஷயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். 1905ம் ஆண்டு பம்பாய் பல்கலைக்கழகத்தில்
பட்டம் பெற்றேன். சட்டம் படிக்க இலண்டன் க்ரேஸ் இன் கல்லூரியில் சேர்ந்து 1909ல் பார்
கௌன்சிலில் இணையத் தகுதி பெற்றேன். மராட்டியம் மற்றும் ஆங்கில மொழிகளில் கவிதை, நாடகம்,
விமர்சனம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதி உள்ளேன். நான்
எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகள், இந்தியாவின் ஒன்றுக்கும்
மேற்பட்ட பல பல்கலைக்கழகங்களால் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் பாடங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் நாக்பூர் பலகலைக்கழகம் இலக்கியத்துக்கான எனது சேவைகளைப் பாராட்டிச் எனக்கு
‘டாக்டர்’ பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது. அஸ்ஸாம் முதல் சிந்து வரை, காஷ்மீர்
முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் நடைபெறும் அரசியல், சமூகம்,
மதம், இலக்கியம் தொடர்பான பல்வேறு அமர்வுகள், கூட்டமைப்புகள், கருத்தரங்குகளுக்குத்
தலைமை தாங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இது தொடர்பான விவரங்களையும், சம்மந்தப்பட்ட
ஆவணங்களையும், ப்ராக்சிக்யூஷன் தரப்பு ஏற்கனவே ஆதாரமாகப் பதிவு செய்துள்ளது. (பி.டபிள்யூ
57, பக்கங்கள் 222 & 223, பி.டபிள்யூ 69 பக்கங்கள் 319 & 320 பார்க்கவும்)
சாவர்க்கர் சதன்
– பத்தாண்டுகளுக்குமுன்பு பம்பாய் தாதர் பகுதியில் நான் புதிதாகக் கட்டிய ‘சாவ்சர்க்கர்
சதன்’ என்னும் வீட்டில் குடியிருக்க வந்தேன். இந்த வழக்கைப் பொருத்தவரை இந்த வீட்டைப்
பற்றிய சில விவரங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். ‘சாவர்க்கர் சதன்’ இரு அடுக்குகள்
கொண்ட வீடாகும். தரைத் தளத்தில், நடுக் கூடம், இந்து சங்கதான் அலுவலகத்துக்காக, இந்து
மகாசபாவைப் போலவே, எந்த வாடகையும் இல்லாமல், எனது சொந்தச் செலவில் பரமாரிக்கப்பட்டு
வருகிறது. உள்ளூர் இந்து சபா ஊழியர்கள் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து வருவோர், இந்து
சபா பணிகள் குறித்து விவாதிக்க இங்கே வழக்கமாக வருவார்கள். இந்து சபா ஊழியர்களும்,
வருகை தருவோரும், படிப்பதற்காக ஏராளமான தினசரிகளும், சஞ்சிகைகளும் அங்கே வைக்கப்பட்டிருக்கும்.
அது வரவேற்பு அறையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அலுவலக ஊழியர்களும், வாடகைக்குக்
குடியிருப்போரும் உபயோகப்படுத்தத் தொலைபேசி இணைப்பும் உண்டு. இந்து சங்கதான் அலுவலகம்
தொடர்பான தட்டச்சு மற்றும் எழுத்துப் பணிகளும் நடைபெற்று வந்தன. அன்றாட வேலைகளைக் கவனிக்க
செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலக நிர்வாகம் தொடர்பான மிக முக்கிய மற்றும் அவசரப்
பணிகள் இருந்தால் மட்டுமே அவர் என்னைத் தொடர்பு கொள்வார். கடந்த நான்கு அல்லது ஐந்து
ஆண்டுகளாக திரு ஜி.வி.தாம்லே எனது செயலாளராகவும், திரு கஸர் எனது பாதுகாவலராகவும் இருந்து
வருகின்றனர். திரு கஸர் நடுக் கூடத்துக்குப் பின்புறம் உள்ள அறையில் வசித்து வருகிறார்.
இந்த
வீட்டின் தரைத் தளத்திலுள்ள நடுக் கூடத்தின் இடதுபக்கம் நுழைந்தால் பல அறைகள் வாடகைக்கு
விடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளாக திரு ஏ.எஸ்.பிட்டே தனது குடும்பத்துடன்
இங்கே வாடகைக்குத் தங்கியிருக்கிறார். ‘ஃப்ரீ இந்துஸ்தான்’ என்னும் ஆங்கில வார ஏட்டின்
ஆசிரியரான அவர் பம்பாய் மற்றும் மராட்டிய மாகாண முன்னணித் தலைவரும் ஆவார். இந்த நடுக்
கூடத்தின் வலது பக்கத்தில் திரு ஜி.வி.தாம்லே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
என்னுடைய செயலாளராக இருப்பதுடன் திரு ஜி.வி.தாம்லே தாதர் மற்றும் பம்பாய் மாகாண இந்து
சபாக்களின் தனித்துவ மற்றும் பிரபல ஊழியராகவும் உள்ளார்.
நான்
என் குடும்பத்துடன் வீட்டின் முதல் மாடியில் வசித்து வருகிறேன். என் தனிப்பட்ட அலுவலகம்
மற்றும் வரவேற்பு அறை முதல் மாடியிலுள்ள நடுக் கூடத்தில் அமைந்துள்ளது. எனது உடல்நிலை
தொடர்ந்து சரிந்து வருவதால், செயலாளரின் சிறப்பு அனுமதி இல்லாமல், பொது மக்களோ, ஊழியர்களோ,
என்னைச் சந்திக்க முதல் மாடிக்கு அனுமதிக்கப்படுவதில்லை. என்னைப் பார்க்க சிறப்பு அனுமதி
பெற்ற பிறகே நேர்காணல்கள் அனைத்துக்கும் நேரம் ஒதுக்குகிறேன். முதல் மாடியிலும் சில
அறைகளை ஒருவருக்குக் குடும்பத்துடன் வாடகைக்கு விட்டிருக்கிறேன்.
பொதுவாக
என்னைப் பற்றி அதிகம் சொல்லிக் கொள்ள விரும்பாத நான், ப்ராக்சிக்யூஷன் தரப்பு என் மீது
சுமத்திய சில மறைமுகக் குற்றச்சாட்டுகள் காரணமாக, விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில்
உள்ளேன். இந்தியா மற்றும் சில தருணங்களில் வெளி நாடுகளிலிருந்து கூட ஆயிரக் கணக்கானோர்
சாவர்க்கர் சதனுக்கு வருகை தந்துள்ளனர். இளவரசர்கள் தொடங்கி விவசாயிகள் வரை, சனாதனத்
தலைவர்கள் தொடங்கி சோஷியலிஸ்ட் தலைவர்கள் வரை, இந்து சபா தலைவர்கள் தொடங்கி காங்கிரஸ்
தலைவர்கள் வரை, பள்ளி மாணவர்கள் தொடங்கிக் கல்லூரி மாணவர்கள் வரை, பல்வேறு கட்சிகளைச்
சேர்ந்த பிரபலங்கள், ஊழியர்கள், இளைஞர்கள் என அன்றாடம் பலர் நாள் முழுவதும் சாவர்க்கர்
சதனுக்கு வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஆப்பிரிக்கா
மற்றும் உலகின் ஏனைய நாடுகளின் பத்திரிக்கைப் பிரதிநிதிகளும், பிரபல அரசியல் விமர்சகர்களும்
என்னை பேட்டி எடுக்க சாவர்க்கர் சதனுக்கு வந்துள்ளனர். என்னைச் சந்திக்க வருவோரை ஒழுங்குபடுத்த
நுழைவு வாயிலில் ஒன்றிரண்டு கூர்க்காக்களும், சீக்கியர்களும் பாதுகாப்புக்கு இருப்பார்கள்.
(சாட்சி பி.டபிள்யூ 57 பக்கங்கள் 222 & 223 பார்க்கவும்).
இந்து மகாசபா – 1937ம்
ஆண்டு இந்து மகாசபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆறு முறை தொடர்ந்து அதன் தலைவராக
இருந்தேன். சமீபமாக எனது உடல் நிலை ஒத்துழைக்காததால் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன்.
லாலா
லஜ்பத்ராய், பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகிய பிரபலங்கள் நிறுவிய மகாசபா பதிவு பெற்ற
சங்கம் என்பதை விளக்க இந்த வழக்குக்கு இதுபோதும். விஜயராகவாச்சாரியார், ராமானந்த் சாட்டர்ஜி,
என்.சி.கேல்கர், பாய் பரமானந்த், டாக்டர் மூஞ்சே உள்ளிட்ட பிரபலங்கள் இதன் தலைவர்களாகப்
பதவி வகித்துள்ளனர். இதன் நிறுவனர்களும், தலைவர்களும், இந்திய தேசியக் காங்கிரஸின்
தலைவர்களாகவும், பிரபலங்களாகவும் இருந்துள்ளனர். மகாசபாவின் முக்கிய நோக்கம் ‘இந்து
சங்கதான்’ அதாவது இந்துக்களின் அரசியல், சமுக ஒருங்கிணைப்பு மற்றும் ராணுவமயமாக்கல்
ஆகும். அரசியல் அறிவியல் ரீதியாக இந்துக்களை இந்தியாவில் ‘தேசியப் பெரும்பான்மையினர்’
என்று அழைப்பதால், ஆற்றலும், பாதுகாப்பும், உறுதியும் கொண்ட பாறைபோன்ற அடித்தளத்தின்
மீது வலுவான சுதந்திர இந்திய நாடு உருவாகும் வகையில், இந்துக்களின் ஒருங்கிணைப்பும்,
கூட்டமைப்பும் அமைய வேண்டும். அவ்வாறு உருவாகும் இந்தியா மதசார்பற்ற நாடாக விளங்க வேண்டும்.
வாழும் ஒவ்வொரு விசுவாசம் மிக்க குடிமகனும் மதம், சாதி, இன, வேறுபாடு இன்றிச் சமமான
உரிமையும், கடமையும் பெற வேண்டும். தேசிய அளவில் இந்துக்களுக்கான உரிமைப் பங்கைத் தாண்டி
ஒரு இஞ்ச் அளவு கூட அதிகம் வேண்டாம். ஆனால் அதே சமயம், இந்துக்களுக்குக் கிடைக்க வேண்டிய
நியாயமான உரிமையைப் பிடுங்கிக்கொண்டு, முஸ்லிம்கள் என்ற ஒரு காரணத்துக்காக, அவர்களது
தகுதியைத் தாண்டிப் பங்களிப்பது, அப்படிச் செய்யாவிட்டால் அவர்கள் விசுவாசமாக இருக்கமாட்டார்கள்
என்பதற்காக அப்படிச் செய்வதை இந்திய நாடு பொறுத்துக் கொள்ளாது. அது துரோகத்தின் மீது
நம்பிக்கை வைப்பதற்குச் சமானமாகும். சிறுபான்மை மதம் / இன ரீதியிலான தனி வாக்குரிமைக்கு
வழிவகுக்கும் ‘கம்யூனல் அவார்ட்’ (Communal Award) திட்டத்தை மகாசபை கடுமையாக எதிர்த்ததற்கு
முக்கியக் காரணம், கிட்டத்தட்ட ஒரு இஸ்லாமியருக்கு 3 வாக்குரிமையும், 3 இந்துக்களுக்கு
1 வாக்குரிமையும் மட்டுமே கிடைக்கும் என்று அது சொன்னதால்தான்.
அகில
இந்திய அளவில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் இந்து மகாசபா என மூன்று முக்கிய மற்றும்
பெரிய அமைப்புகளாக உருவாகும் வகையில் மகாசபா மிக வேகமாக வளர்ச்சியையும், அங்கீகாரத்தையும்
பெற்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாடு மற்றும் ஏனைய ஆலோசனை அமைப்புகளில்
பங்கேற்கப் பிரதிநிதிகளை அனுப்பி வைக்க அதற்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. மேலும் அதன்
தலைவர் என்ற முறையில் பல்வேறு தருணங்களில் நேர்காணல்களுக்கும், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கான
கருத்துக்களைப் பதிவு செய்ய பல்வேறு வைஸ்ராய்கள் மற்றும் ஆளுநர்களிடமிருந்து எனக்கும்
அழைப்பு வந்துள்ளது. க்ரிப்ஸ் மிஷன் வந்திருந்த சமயத்திலும் அரசு அழைப்புக்கு இணங்க
மகாசபாவின் கருத்துக்களை எடுத்துரைக்க எனது தலைமையில் குழு பங்கேற்றது. தாய்நாட்டின்
ஒற்றுமையை வேரறுக்கும் வகையில் கூறுபோட்ட க்ரிப்ஸ் திட்ட விதிகளை எந்த சமரசமும் செய்து
கொள்ளாமல் ஏற்றுக்கொள்ள மறுத்த ஒரே அமைப்பு, மூன்று அகில இந்திய அமைப்புகளில், மகாசபா
மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மகாசபாவுக்கு
அனைத்து மாகாணங்களிலும், இந்தியாவின் எல்லா மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளன. மகாசபா
உருவாக்கிப் பிரச்சாரம் செய்த இந்து சங்கதானுக்குப், பின்னாளில் சாவர்க்கரிஸம் என்று
பிரபலமான சித்தாந்தத்துக்கு, இளைஞர்கள் தொடங்கி பிரபல தலைவர்கள் வரை ஆயிரக் கணக்கான
இந்துக்கள் மகத்தான ஆதரவளித்தனர். தொடர்ந்து ஆறு ஆண்டுகள் மகாசபை தலைவர் பொறுப்பில்
இருந்த காரணத்தால் அதன் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவே நான் பார்க்கப்பட்டேன்.
என்னுடைய அமைப்பு ரீதியான கடிதத் தொடர்புகள், பயணங்கள், எழுத்துகள், பேச்சுகள் மூலம்
இந்தியா முழுவதிலுமுள்ள ஆயிரக் கணக்கான மகாசபா தலைவர்கள், ஊழியர்கள், உறுப்பினர்கள்
ஆகியோருடன் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டேன்.
இதுபோன்ற
எண்ணற்ற இந்து மகாசபா ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுள் ஒருவராகத்தான் பண்டிட்
நாதுராம் கோட்சே எனக்குப் பிரத்யேகமாக அறிமுகம் ஆனார். திரு ஆப்தேவும் ஒரு கடிதம் மூலம்,
நகரில் பணியாற்றும் இந்து சபா ஊழியர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். கலெக்டர்
அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து ரைஃபிள் கிளப் தொடங்கவும் ஆர்வமுடன் இருந்தார். குவாலியர்
இந்து சபா தலைவர் என்ற முறையில் டாக்டர் பர்சுரேவும் அறிமுகமானார். கர்கரே நகரைச் சேர்ந்த
இந்து சபா ஊழியர் என்பதையும், இந்து மகாசபா மூலம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
விவரத்தையும் அறிந்துகொண்டேன். திரு பட்கே எனக்கு எழுதிய கடிதம் மூலம் அவர் இந்து சங்கதான்
ஊழியர் என்றும் சட்டத்துக்கு உட்பட்டு உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை விற்பனை செய்வதையும்
தெரிந்துகொண்டேன். குற்றம் சுமத்தப்பட்ட மற்றவர்களான சங்கர், கோபால் கோட்சே மற்றும்
மதன்லால் ஆகியோர் யாரென்றே எனக்குத் தெரியாது. அவர்களின் பெயர்களைக்கூட நான் அறிந்திருக்கவில்லை.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் இந்து சபா
ஊழியர்களாக நான் அறிந்திருந்தவர்கள்:
இந்து
மகாசபாவின் உள்ளூர், மாவட்ட மற்றும் மாகாணக் கிளைகள் அமைப்பு ரீதியான விதிகளுக்கு இணங்க
அவர்களது பணி குறித்த அறிக்கைகளை பம்பாயிலுள்ள எனது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும்.
பூனா இந்து சபாவிலிருந்து வரும் அறிக்கைகளிருந்து திரு பட்கே சம்பளத்துக்கும், சில
சமயம் சம்பளம் இல்லாமலும் பிரச்சாரக்காகப் பணியாற்றியதைத் தெரிந்துகொண்டேன். உரிமம்
பெற்ற ஆயுதங்களை விற்பனை செய்ய அவர் நடத்திக் கொண்டிருந்த கடை குறித்த ஒன்று அல்லது
இரண்டு அறிக்கைகளை எனக்கு அனுப்பியதுடன், நிதி உதவியும் கோரி இருந்தார். இக்கடிதங்கள்
பற்றி எனது எழுத்து வடிவிலான வாக்குமூலத்தில் பின்னர் விரிவாக விளக்குகிறேன். இதைத்
தாண்டி எனக்குத் திரு பட்கே பற்றி வேறு எதுவுமே தெரியாது. தனிப்பட்ட முறையிலும் என்னுடன்
அவர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.
குவாலியர்
இந்து மகாசபா பணி குறித்த அறிக்கைகளை டாக்டர் பர்சுரே சில ஆண்டுகள் எனக்கு அனுப்பி
வைத்தார். இந்து சங்தான் இயக்கத்துக்கு உதவும் நோக்கத்துடன் ‘இந்து ராஷ்ட்ர சேனா’ என்ற
பெயரில் தன்னார்வக் குழுவை அமைத்துள்ளதாக எனக்குக் கடிதம் எழுதினார். ப்ராக்சிக்யூஷன்
தரப்பு சாட்சிகளுள் ஒருவர் தன்னை சேனா அமைப்பின் உறுப்பினர் என்றும், அதன் பயிற்சிகளில்
பங்கேற்றுள்ளதாகவும், ராஷ்ட்ர சேனாவின் நோக்கம் இந்து இளைஞர்களை ஒருங்கிணைப்பது என்றும்
இந்த நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார் (பி.டபிள்யூ.39 பக்கம் 137 பார்க்கவும்).
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் தலைவர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து டாக்டர்
பர்சுரே பற்றிய செய்திகள் எதுவும் எனக்கு வரவில்லை. அவரும் தனிப்பட்ட முறையில் என்னுடன்
எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. நகரிலுள்ள இந்து சபா அறிக்கைகள் மூலம் இந்து
ராணுவமயமாக்கலுக்காகவும், சங்கதானுக்காகவும், திரு ஆப்தேவுடன் ஷுத்திப் பணிக்காவும்
கடுமையாக உழைத்து வருவதாகத் திரு கர்கரே பற்றி அடிக்கடி நான் கேள்விப்படுவேன். இந்து
சபா சார்பில் நகராட்சித் தேர்தல்களில் கர்கரே வெற்றி பெற்றது குறித்து திரு ஆப்தே ஓரிரு
முறை எனக்குக் கடிதம் எழுதி உள்ளார். ஆனால் கர்கரே ஒரு தடவை கூட எனக்குக் கடிதம் எழுதியதில்லை.
தனிப்பட்ட முறையில் என்னைச் சந்திக்கவும் இல்லை (பி.டபிள்யூ 129 பக்கம் 3 பார்க்கவும்).
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நான் உடல்நலம் குன்றியதிலிருந்து அவரைப் பற்றி எந்தவொரு
தருணத்திலும் நான் கேள்விப்படவும் இல்லை. திரு ஆப்தே மற்றும் திரு பண்டிட் கோட்சே ஆகிய
இருவரும் நகர் மற்றும் பூனாவிலுள்ள இந்து சபா ஊழியர்களாகத் தாங்களாகவே என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு
பின்னர் தனிப்பட்ட முறையில் என்னுடன் பழக்கமானார்கள்.
ஆப்தே, கோட்சே மற்றும் அவர்களது கடிதப்
போக்குவரத்து
மகாசபா
திட்டத்தில் இந்து ராணுவமயமாக்கல் விஷயம் மிக முக்கிய அம்சமாக எப்போதுமே இடம் பெற்று
வந்ததுள்ளது. இந்த நோக்கத்துடன் சில பணிகளை நகர் ஊரிலிருந்து ஆப்தே செய்து வருவதாக
அவரது கடிதத்திலிருந்து தெரிந்துகொண்டேன். இதுகுறித்து அங்குள்ள தலைவர்களிடம் நடத்திய
விசாரணையில் அது உண்மை என்றும், அதற்கான அரசு அனுமதியை அப்போதைய உள்துறை உறுப்பினரிடமிருந்து
அவர் பெற்றுள்ளதாகவும் கேள்விப்பட்டேன். பின்னர் பூனாவில் ஸ்ரீ ரகுநாத ராவ் பரஞ்ச்பே
தலைமையில் ரைஃபிள் க்ளப்களின் கூட்டத்துக்கான மையத்துக்கும் திரு ஆப்தே ஏற்பாடு செய்திருந்தார்
(டி27 & டி28 என்று குறிக்கப்பட்டுள்ள திரு ஆப்தேவின் கடிதங்களைப் பார்க்கவும்).
இதைத் தொடர்ந்து ராணுவ அதிகாரிகளால் அவர் கௌரவ தொழில்நுட்ப ஆளெடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன்,
நிறைவாக விமானப் படையில் கிங்க்ஸ் கமிஷனாகவும் உயர்ந்தார். இந்து சபாவிலும் பணியாற்றினார்.
அவர் எனக்கு எழுதி, நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 10-12 கடிதங்களில் பெரும்பாலானவை
ரைஃபிள் க்ளப் அறிக்கைகள் மற்றும் இந்து சபாவில் அவர் பணியாற்றியது தொடர்பானவையே.
ஆப்தேவைப்
போலவே கோட்சேவும் அதே வழியில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். மராட்டியத்தின் பல்வேறு
பகுதிகளுக்குப் பிரச்சாரக் என்ற முறையில் மேற்கொண்ட பயணம், உள்ளூர் சபா தொடர்பான அவரது
பணிகள், கருத்துகள், ஆலோசனைகள் குறித்து எனக்கு அறிக்கைகள் அனுப்பி வைப்பார். எங்களது
அமைப்பு ரீதியான கட்டமைப்பு விதிகளின்படி ஒவ்வொரு மாவட்ட மற்றும் மாகாண ஊழியரும் இதுபோன்ற
அறிக்கைகளை எனது தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாகும். கோட்சே எனக்கு
எழுதி நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 15 அல்லது 20 கடிதங்கள் அனைத்துமே மேற்கூறிய
அமைப்பு ரீதியான அறிக்கைகள் தொடர்பானவை மட்டுமே ஆகும்.
கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோர் எனக்கு எழுதிய சில கடிதங்களைப் ப்ராக்சிக்யூஷன்
தரப்பு எனக்கு எதிரான சாட்சியங்களாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ‘அக்ரணி’க்கு
எழுதிய கடிதங்களில் எனது பயணம் உள்பட சில தலைப்புகளில் இடம்பெற்றவைகளைப் ப்ராக்சிக்யூஷன்
தரப்பு மேற்கோள் காட்டி எனக்கும் அவர்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல் நிரூபிக்க
முனைந்துள்ளது. ஆனால் விரிவாக ஆராய்ந்தால், எனக்கும் அவர்களுக்கும் இடையேயான உண்மையான
தொடர்பைத் தெரிவிப்பதுடன், அவை இயற்கை நியதிக்கும் சட்டத்துக்கும் உட்பட்டவை என்பதையும்
விளக்கும். ப்ராக்சிக்யூஷன் தரப்பு எனக்கு எதிராகத் தாக்கல் செய்த அதே கடிதங்கள் மூலமே
என் தரப்பு நியாயத்தை நிரூபிப்பேன்.
(தொடரும்…)

Leave a Reply