Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 19 | சுப்பு


அரசியல் சட்டமும் ஆடை மாற்றமும்

இந்திய நாட்டையே
அதிர்ச்சிக்குள்ளாக்கிய அவசரநிலை அறிவிப்பால் பெரும்பாலான அரசியல் இயக்கங்கள்
செயலிழந்து போய்விட்டன. இருந்தாலும் எதிர்ப்புக் குரல்களை ஒரேயடியாக அவரால்
ஒடுக்கமுடியவில்லை.
 
ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் காமராஜர்
சோழிங்கர் பொதுக்கூட்டத்தில் (27-06-1975) ‘அடிப்படை உரிமைகளைக் காக்க போராட்டம்
நடத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். சங்கத்துக்காரர்களின் முயற்சியால்
அவசரநிலையை எதிர்த்து நாடெங்கும் சத்யாகிரகம் நடத்தப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை
சேலம், மதுரை, பரமக்குடி உள்ளிட்ட பல இடங்களில் சத்யாகிரகம் வெற்றிகரமாக நடந்தது.
நிறைவாக சென்னை மெரினா கடற்கரையில் 26-01-1976 அன்று சத்யாகிரகம் நடந்தது.
 
மெரினாவில் சத்யாகிரகம் நடக்கும் என்ற
அறிவிப்போடு கூடிய போஸ்டர்களை அடையாரில் நாங்கள் ஒட்டினோம். தவிர, ஆர்வத்தின்
காரணமாக மெரினா பீச்சிற்கு நானும் ராஜேந்திரனும் கோட்டூரான் ஸ்ரீதரும்
போயிருந்தோம்.
 
அங்கே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் யாரும்
எங்கள் கண்ணில் தென்படவில்லை. மணல்வெளி முழுவதும் அங்கங்கே ஒருவர் என்ற
ஏற்பாட்டில் குதிரைப்படை போலீஸ் மட்டும் மிரட்டிக்கொண்டிருந்தது.
 
குறிப்பிட்ட நேரத்தில், சினிமாவில்
கிளைமாக்ஸ் காட்சி வருவதுபோல எல்லாம் நடந்தது; குடும்பத்தோடும் குழந்தைகளோடும்
அமர்ந்திருந்தவர்கள், அவர்களையெல்லாம் புறப்பட்டுப் போகச் சொல்லிவிட்டு,
போராட்டக்காரர்களாக மாறி கோஷம் போட்டனர். ஏற்கெனவே கடற்கரை மணலில் புதைத்து
வைக்கப்பட்டிருந்த பிரசுரங்களை அவர்கள் தோண்டி எடுத்தார்கள், விநியோகித்தார்கள்.
 
போராட்டக்காரர்களைக் குதிரை போலீஸ்
தாக்கியது, சுற்றி வளைத்துப் போலீஸ் வண்டியில் ஏற்றியது. இந்தக் காட்சியை ஸ்ரீதர்
கேமராவில் படமெடுத்தான். இதைப் பார்த்துவிட்ட ஒரு போலீஸ்காரர் கேமராவைப் பிடுங்க
முயற்சி செய்தார். போலீஸைத் தாக்கிவிட்டு ஸ்ரீதர் கேமராவை மீட்டு வந்தான்.
போலீஸ் படை சுதாரித்துக்கொள்வதற்குள்
நானும் ராஜேந்திரனும் ஸ்ரீதரும் தப்பித்து ஓடினோம், ஓடினோம் – கண்ணகி
சிலையிலிருந்து காந்தி சிலை வரை. என்னுடைய நீண்ட நெடிய வாழ்க்கையில் நான் அதிக
தூரம் ஓடியது அன்றுதான் என்று நினைக்கிறேன்.
இந்த இடத்தில் ஸ்ரீதரைப் பற்றிய
இடைச்செருகல் ஒன்றைத் தருகிறேன்.
 
சென்னையில் அடையாருக்கும்
நந்தனத்துக்கும் இடைப்பட்ட பகுதி கோட்டூர் என்ற கிராமம். இங்கே வைணவர்களுக்கான ஒரு
கோவில் இருக்கிறது. ஸ்ரீதரும் அந்தச் சமூகம்தான். அடையார் நண்பர்கள் ஸ்ரீதரை
செல்லமாக கோட்டூரான் என்று அழைப்பது வழக்கம்.
 
ஸ்ரீதரை நான்தான் சங்கத்துக்கு அழைத்து
வந்தேன். அவனுக்கு விஷயஞானம் கம்மி. ஆனால் வேலையில் வேகம் அதிகம். ஒருமுறை அன்றைய
பிராந்த பிரச்சாரக்காக இருந்த கோபால்ஜி (இராம கோபாலன்) அடையார் ஷாகாவிற்கு
வந்தார். எங்களோடு உரையாடும்போது ஒவ்வொருவரிடமும் ஷாகாவிற்கு வந்ததற்கான காரணங்களைக்
கேட்டார். வட்டமாக உட்கார்ந்திருந்த நாங்கள் அவரவர் அறிவுக்கு எட்டிய அளவில் தேச
பக்தி, தெய்வ பக்தி, முகலாயப் படையெடுப்பு என்று ஏதேதோ சொன்னோம். இதுபோன்றக்
கேள்வியை எதிர்பார்க்காத சிலர் மழுப்பினோம்.
 
வந்தது ஸ்ரீதரின் முறை.
‘இங்கதான் நம்பளவாள் எல்லாம் இருக்கா’
என்று சொன்னான்.
 
கோபால்ஜி என்னைக் கேட்டார் ‘ஏம்பா, இது
பிராமண சங்கம்னு சொல்லியிருக்கியா?’
நான் சொன்னேன், ‘எதுவும் சொல்லல.
வெறும் கொள்கையை வைத்துக்கொண்டு ஆளில்லாமல் என்ன செய்வது? ஆட்களைச்
சேர்த்துவிட்டால் கொள்கையை அப்புறம் சொல்லிக்கொள்ளலாம்.’
ஷாகா, பள்ளிக்கூடத்து மைதானத்தில்
நடந்தது, அதுவும் பின்மாலைப் பொழுதில். அந்த இருட்டில் கோபால்ஜி சிரித்தாரா முறைத்தாரா
என்பது எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
 
*
ஒருபக்கம் அவசரநிலை என்ற பெயரில்
நாட்டில் ஜனநாயகத்தின் கூறுகளே இல்லாமல் செய்துகொண்டிருந்த பிரதமர் இந்திராவுக்கும்
மூச்சுவிட நேரம் தேவைப்பட்டது போலும். இன்னொரு பக்கம் இந்திராவின் சர்வாதிகாரப்
போக்கை எதிர்த்து உலக நாடுகளில் எழுந்த எதிர்ப்பும் காரணமாக இருக்கலாம். அவரே
தன்னுடைய அராஜக ஆட்சிக்கு இடைவெளியாக கால் புள்ளி அளவு காலம் ஒதுக்கினார். அதிலும்
அவருடைய சுயநலம்தான் கலந்திருந்தது. இப்படி உருவானதுதான் 42வது அரசியலமைப்புச்
சட்டத் திருத்தம்.
 
நீதித்துறைக்குப் பதில் சொல்ல வேண்டும்
என்பதில் அவருக்கு ஒப்புதல் இல்லை.
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்
ஆகியவற்றின் வல்லமையைக் கட்டுப்படுத்தவும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்
கூறுகளை நீர்த்துப் போகச் செய்யவும், அடிப்படை உரிமைகளை வெற்றுக் காகித அளவில் கட்டுப்படுத்தவும்
இந்திரா செய்த ஏற்பாடுதான் 42வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம். தன்னுடைய
அதிகார துஷ்பிரயோகத்தை மறைப்பதற்காக இந்தியா ஒரு மதசார்பற்ற, சோஷலிஷ நாடு என்ற
மேற்பூச்சை மட்டும் பூசிவிட்டார்.
 
இந்தக் கொடுமையிலும் நமக்கு லாபகரமான
விஷயம் ஒன்று இருந்தது. 1975 நவம்பரில் நாடாளுமன்றத்தில் இந்தத் திருத்த மசோதாவை
அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, அரசாங்கத்தின் கெடுபிடிகளை சற்றுத் தளர்த்தி
இதுபற்றிய சொற்பொழிவுகளுக்கும் உரையாடல்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டது.
 
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு
சங்கத்துக்காரர்களால் நாடுமுழுவதும் அரங்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அடையாறில்
கண்ணன், ரமணி மற்றும் கோபால் ஆகிய மூன்று இளைஞர்கள் இதற்காகத் துணிச்சலாக வேலை
செய்தனர்.
கண்ணனைப் பற்றி முந்தைய அத்தியாயம்
ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறேன். இருந்தாலும் நினைவூட்டுவதற்காகச் சொல்கிறேன்.
சங்கப் பணியாக கட்டை வண்டி இழுத்த கண்ணன் என்று வைத்துக்கொள்ளலாம்.
 
என்னதான் நாங்கள் எல்லோரும் இளமைத்
துடிப்போடு இருந்தாலும் அவசரநிலைக் காலத்துக் கெடுபிடிகளை நேரடியாக
உணர்ந்தவர்களால்தான் அதிலுள்ள சிரமத்தை உணரமுடியும். இருந்தாலும் எங்களிடம்
உற்சாகம் அதிகளவில் இருந்ததால் சிரமங்களைப் புறந்தள்ளிவிட்டுக் காரியத்தில்
இறங்கினோம். அதிலும் ஒருவரையொருவர் முந்த வேண்டும் என்ற போட்டியும் இருந்தது.
அடையார் காந்திநகரில் உள்ள காவல்
நிலையத்தின் எதிரே இந்திராவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டவேண்டும் என்று ஒரு யோசனை –
50 ரூபாய் பந்தயம். 50 ரூபாய்க்கு ஆசைபட்டு இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது
கோட்டூரான் ஸ்ரீதர்.
இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம்; அவசரநிலை
எதிர்ப்புகளுக்கான பணிகளுக்காக நம்பிக்கையானவர்களிடம் நிதி திரட்டி அதை
நம்பிக்கையானவர் என்று நாங்கள் நம்பிக்கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து
வைத்திருந்தோம். இது சட்ட விரோதமாக வசூலிக்கப்பட்ட பணம்தானே என்ற தைரியத்தில் அவர்
மக்கர் பண்ண ஆரம்பித்தார். எத்தனைமுறைதான் அவர் வீட்டிற்கு நடப்பது? ஒருகட்டத்தில்
தெருமுனையில் அவரை மடக்கிவிட்டோம். அப்போது கண்ணன் சொன்னது ‘இந்திரா இந்தியாவை
ஆளலாம்; ஆனால் அடையாரை நாங்கதான் ஆளறோம்.’
மறுநாள் காலையில் நிதி கைமாறிவிட்டது. 
ரமணி, சென்னை குருநானக் கல்லூரியில்
புதுமுக வகுப்பு மாணவன். அங்கேயே மாணவர்களைத் திரட்டி அவசரநிலைக்கெதிராக ஒருநாள்
ஸ்டிரைக் செய்து அது பிரச்சினை ஆகிவிட்டது. வீடுதேடி வந்த உளவுத்துறை அதிகாரிகள்
சின்னப் பையன்தானே மடக்கிவிடலாம் என்று நினைத்தனர். ரமணியின் பெற்றோர்களுக்கும்
ஏதோ தடியடி, கைது என்று இல்லாமல் வீடுதேடி வந்து நல்ல வார்த்தையாக பேசுகிறார்களே
என்று நெகிழ்ந்துவிட்டனர்.
 
வந்த அதிகாரிகளிடம் ‘அவசரநிலை என்பது
ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் விரோதமானது’ என்று சொல்லிமுடித்தான் ரமணி.
 
அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்த
அதிகாரி ஒருவர் சொன்னார், ‘தம்பி, நீ சொல்லறது எல்லாம் நியாயம்தான். ஆனால்
ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற தலைவர்களே உள்ள போய்ட்டாங்க. உன்னால என்ன செய்ய
முடியும்?’ என்று கேட்டார்.
 
பளிச்சென்று வந்தது பதில்.
ரமணி சொன்னான். ‘இந்திரா காந்தி செய்யறது
தப்புனு தெரியுதில்ல. உங்களால எதிர்க்க முடியல. என்னால முடியுது. எழுந்து போய்
வேலையைப் பாருங்க.’
 
இந்தத் துணிச்சலுக்கு ரமணி கொடுத்தது
பெரிய விலை. இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்ட ரமணி அனுபவித்தது
ஆறுமாத சிறைத் தண்டனை.
கோபாலும் மத்திய தர வர்க்கம்தான்.
இளமைப் பருவம்தான். ஒல்லியான உடல், அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத அளவில் ஒரு
வீரம். கோபாலுக்கும் அவசர நிலையை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்ததற்காக ஆறு மாதம்
சிறைத் தண்டனை வர இருந்தது…
காந்திநகரில் இருக்கும் கல்கி
மண்டபத்தில் நாற்பத்து இரண்டாவது அரசியல் சட்டதிருத்தம் தொடர்பான கூட்டம் நடந்தது.
இதற்காக அழைக்கப்பட்டவர்கள் 200 பேர். வந்தவர்கள் 16 பேர். கூட்டத் தலைவர்
விடுதலைப் போராட்ட வீரர் N.S.வரதாச்சாரி. கண்ணன், கோபால், ரமணி, நான்,
ராஜேந்திரன், தெய்வ சிகாமணி ஆகியோர்தான் பொதுமக்கள். எட்டுப் பேர் போலீஸ்.
பேச்சாளர் ஸ்தாபன காங்கிரஸ்காரர்
எர்னெஸ்ட் பால். தண்டையார் பேட்டையிலிருந்து ஆட்டோவில் வந்த எர்னெஸ்ட் பால்
இளைஞர், குமரி அனந்தனுக்கு வேண்டப்பட்டவர். அவருக்குத் துணையாக இரண்டுபேர்
வந்திருந்தார்கள், மாலையோடு. துணைக்கு வந்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல்
மண்டபத்துக்கு வெளியே நின்றார்கள். இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
‘கூட எதுக்கு ஆள கூட்டிட்டு வந்தீங்க?
அவங்களையும் அரெஸ்ட் பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க?’ என்று கேட்டேன்.
 
‘நம்பள அரெஸ்ட் பண்ணிட்டா வீட்டுக்குத்
தகவல் சொல்லணும்ல, அதுக்குத்தான்’ என்ற பதிலில் அவருடைய அரசியல் முதிர்ச்சி
வெளிப்பட்டது…
இதே காலகட்டத்தில் திராவிட முன்னேற்றக்
கழகத்தின் சார்பில் சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த
யோகலஷ்மி கல்யாண மண்டபத்தில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது (03-08-1976).
அவசரநிலையைப் பொருத்தவரை, தொடர்ந்து திராவிட இயக்க எதிர்ப்பு, திமுக எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பு
என்கிற வகைமையிலேயே பயணித்துக்கொண்டிருந்த நான்கூட ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்
ஒன்று உண்டு – அது அவசர நிலையின்போது, அதை எதிர்த்து நின்ற கருணாநிதியின் உறுதி.
யோகலஷ்மி கல்யாண மண்டபத்தில் நடந்த
கூட்டத்திற்கு நானும் நண்பர்களும் போயிருந்தோம். அரசாங்கத்தின் கெடுபிடிகளை மீறி
அரங்கம் நிரம்பி வழிந்தது ஆச்சரியமாக இருந்தது.
 
முதலில் பேசிய திமுக பேச்சாளர் ஒருவர்
கூட்டமெங்கும் நிரவியிருந்த போலீஸ் வலிமையைப் பார்த்துப் பயந்துவிட்டார் என்று
நினைக்கிறேன். அது ரகுமான்கானாக இருக்கலாம். பெயர் சரியாக நினைவில் இல்லை,
சொதப்பிவிட்டார் என்பது மட்டும் நினைவிலிருக்கிறது.
‘காலத்திற்கு ஏற்றபடி, சமூகத்தின்
தேவைகளுக்கு ஏற்றபடி சட்டத்தில் திருத்தங்களைச் செய்யலாம். ஒரு பெண் குழந்தையாக
இருக்கும்போது அதற்கு நாம் அணிவிப்பது பாவாடை; அது வளர்ச்சியடைந்த பிறகு மேலாடை
தேவைப்படும்; அடுத்த கட்டமாகப் புடைவை. இப்படித்தான் சட்டத்தின் திருத்தங்களை சமூக
வளர்ச்சியின் குறியீடாகப் பார்க்க வேண்டும்’ என்றவாறு பேசி அவர் அமர்ந்துவிட்டார்.
அதாவது இந்திரா செய்தது சரிதான் என்கிற ரீதியில் உளறிவிட்டார். இது கூட்டத்தில்
சலசலப்பை ஏற்படுத்தியது.
நிறைவாக உரையாற்ற வந்தார் திமுக தலைவர்
மு.கருணாநிதி.
அவருடைய நீண்ட உரைக்காகத்தான் அந்தக் கூட்டம்
காத்திருந்தது;
தன்னுடைய உரையின் இடையே முந்தைய பேச்சாளரின் பாவாடை,
மேலாடை, புடைவை மேற்கோளைக் குறிப்பிட்டுத் தன்னுடைய எதிர்வினையால் கூட்டத்தைக்
கவர்ந்துவிட்டார்.
 
‘காலமாற்றத்தில் உருவம் மாறுகிறது.
உருவத்திற்கு ஏற்றபடி உடை மாறுகிறது. அதெல்லாம் தவறில்லை, அழகுதான். பெண்ணுடைய
வளர்ச்சிக்கு ஏற்றபடி ஆடை மாற்றம் அவசியம்தான், சமூகத்திற்கும் சமூகத்தின்
வளர்ச்சிக்கும், அதற்கான சட்டங்களுக்கும் இது பொருந்தும். வளர்ச்சிப்படிகளில்
பாவாடை புடைவையாக மாறலாம்; ஆனால் இப்போது நாட்டிலே பரவிக்கொண்டிருக்கிற கலாசாரப்படி
ஆணா, பெண்ணா என்று அறியமுடியாதபடி அணிந்துகொள்கிற கால்சட்டையும் மேல்சட்டையும்தான்
நமக்கு உறுத்தலாக இருக்கிறது. சட்டத் திருத்தங்கள் செய்யலாம்; ஆனால் சட்டத்தின்
அடிப்படைக் கூறுகளை அழித்துவிடக் கூடாது’ என்று சொல்லி முடித்தார்.
 
வீட்டிற்குத் திரும்பிவரும் வழியில்
நண்பர்களிடம் நான் சொன்னேன், ‘கருணாநிதியைப் பாத்தியா, ரகுமான்கானை மடக்கிவிட்டார்.’
கூட இருந்த கண்ணன், ‘கருணாநிதியை நம்பாதே. ரகுமான்கானிடம் நீ இப்படிப் பேசு, நான் அப்படிப்
பேசுகிறேன் என்று சொல்லியிருப்பார். எல்லாமே செட்டப்’ என்று சொல்லி
முடித்துவிட்டான்.
(தொடரும்…)

Leave a Reply