Posted on Leave a comment

தேவையா இந்துத்துவ அறிவியக்கம்? | அரவிந்தன் நீலகண்டன்


அண்மையில் இணைய இதழான சொல்வனத்தில் எழுத்தாளர்
அம்பை சிறப்பிதழில் அவரது வாழ்க்கையில் நடந்த இரு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தேன்.
இரண்டுமே அவர் என்னிடம் உரையாடல்களின்போது சொன்னவை. ஒன்று: அவர் டெல்லியில் உள்ள கல்லூரி
விரிவுரையாளர் சேவைக்கான நேர்காணலுக்காகச் சென்றிருக்கிறார். அதில் அவரிடம் விடுதலைப்
போராட்ட வீரர்களின் பெயர்களைப் பட்டியலிடச் சொல்கிறார்கள். அன்று அம்பைக்கு ‘அரசியல்
சரித்தன்மை’ தெரியாது. அவர் சொல்லும் பெயர்களில் ஒன்று சாவர்க்கர். அவருக்கு அந்த வேலை
கிடைக்கவில்லை. அவர் அதை இந்த பதிலுடன் இணைத்துப் பார்க்கவில்லை. ஏதோ வேலை கிடைக்கவில்லை,
அவ்வளவுதான். ஆனால் பின்னாட்களில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. ‘ஏன் சாவர்க்கரின்
பெயரைச் சொன்னீர்கள்? நீங்கள் வித்யார்த்தி பரிஷத்தா என்கிற ஐயம் அன்றைக்கு உங்கள்
மீது ஏற்பட்டது.’ சாவர்க்கர் பெயரை சொன்னது அவரை நேர்காணல் செய்த முக்கிய இடதுசாரி
பேராசிரியர்களுக்கு உடனடி ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கிறது.
பின்னாட்களில் அவர் ஜவஹர்லால் நேரு பல்கலை
மாணவி என்பதும் அவர் இந்துத்துவ இயக்கத் தொடர்புகள் ஏதுமற்றவர் என்பதைத் தெள்ளத்தெளிவாக
தெரிந்த பின்னருமே இந்திய வரலாற்று ஆராய்ச்சி அமைப்பு (ICHR, Indian Council for
Historical Research) இல் வேலை கிடைக்கிறது. அங்கு ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்குவது
குறித்த முடிவுகள் எடுக்கப்படும் கூட்டங்களில் அம்பை அமரக்கூடிய வாய்ப்பு அவருக்குக்
கிடைக்கிறது. அவரால் முடிவுகள் எடுக்க முடியாது. ஆனால் அந்தக் கூட்டங்களுக்கு அவர்
சாட்சி. அங்கு நடந்த விஷயங்களை அவர் தார்மீகமாக வெளியில் சொல்ல முடியாது. ஆனால் ஒட்டுமொத்தமாக
அதன் போக்கை அவரால் சொல்ல முடியும். அதற்கு தார்மீகத் தடை எதுவும் இல்லை. அவர் அதை
ஒரே வரியில் சொல்கிறார்: ‘மார்க்சியப் பார்வை இல்லாத ஆராய்ச்சிகள் பெருமளவில் ஏற்கப்படுவதில்லை.
அங்கு தெள்ளத்தெளிவாக மார்க்சிய சார்பு இருந்தது.’
இவை இரண்டுமே அம்பை முக்கியமானவை எனக் கருதவில்லை.
போகிற போக்கில் உரையாடலில் சொல்லிச் சென்ற விஷயம். ஆனால் இவற்றைத் தரவுகளாகப் பயன்படுத்தலாமா
எனக் கேட்டபோது சரி எனச் சொன்னார்.
ICHR என்பது இந்திய வரலாற்று ஆராய்ச்சிக்காக
இந்தியக் குடிமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அமைப்பு. 1970களிலேயே அல்லது அதற்கும்
முன்பாகவே இவை இடதுசாரிகளின் ஆதிக்கத்துக்குள் வந்துவிட்டிருந்தன. நேருவிய மார்க்சியர்கள்,
மார்க்சிய இஸ்லாமியர்கள் (அல்லது இஸ்லாமிய மார்க்ஸியர்கள்) என இருவகையான அறிஞர்கள்
இருந்தனர். இவர்களே தலைநகரிலிருந்து எப்படிப்பட்ட விதத்தில் இந்திய வரலாறு எழுதப்பட
வேண்டுமென்று முடிவு செய்தார்கள். எப்படிப்பட்ட விதத்தில் இந்திய வரலாறு எழுதப்படுவதற்கு
மட்டுமே இந்திய அரசின் நிதி உதவியும், இந்திய அரசு இயந்திரமும் பயன்படுத்தப்படும் என்பதை
முடிவு செய்தார்கள். சாவர்க்கரின் பெயரைச் சொல்வது கூட உங்களுக்கு அரசாங்க வேலைகளை
இழக்க செய்யும் என்கிறபடியிலான மிகக் கடுமையான ஆனால் கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகள்
உருவாக்கப்பட்டிருந்தன. 1990கள் வரை அரசாங்க வேலை என்பது மட்டுமே நிரந்தரமான வருவாய்க்கான
வழி என இருந்த நிலையில் இந்த கண்ணுக்குத் தெரியாத நிர்ப்பந்தங்கள் எத்தனை வலிமையானவை
எனச் சொல்லத் தேவையில்லை. வேலை தேடும் இளைஞனுக்கு ஏறக்குறைய நெற்றிப்பொட்டில் வேலை
வாய்ப்புத் துப்பாக்கியை வைத்து ‘இடதுசாரி சித்தாந்தத்தை ஏற்கிறாயா, இல்லாவிட்டால்
வேலையில்லாத் திண்டாட்டத்தில் சாகிறாயா’ எனக் கேட்பதுதான் இது.
இது பாசிசம் இல்லை என்றால் வேறெது பாசிசம்?
இன்னும் சொன்னால் இது பாசிசத்தின் அடுத்த நிலை. பெனிட்டோ முஸோலினி நேருவியர்களைப் பார்த்து
‘அட என் செல்லங்களா’ எனச் சொல்லியிருப்பார். ‘நானாவது இந்திரா போல தெரு ரவுடித்தனமான
அடக்குமுறைகளை மட்டும்தான் செயல்படுத்தினேன். நேருவிய பாசிஸ்ட்களான நீங்களோ அடுத்த
தளத்துக்கு போய் அறிவு நிலை பாசிசத்தை அல்லவா அமைப்பு ரீதியாகச் செயல்படுத்திவிட்டீர்கள்’
என உச்சி மோந்து மெச்சியிருப்பார் நம்மூர் ரொமிலா தாப்பர்களையும் இர்பான் ஹபீப்களையும்.
இந்த நிலையில்தான் இன்றைக்கு கேள்வி எழுகிறது.
எங்கே இந்துத்துவ அறிவியக்கம்? ‘இந்த இந்துத்துவர்களுக்கு சிந்தனையாளர்களைக் கண்டாலே
ஆகாது. ஏனென்றால் இவர்களுக்கு சிந்தனை சுதந்திரம் பிடிக்காது. இவர்கள் ஒரு ரொமிலா தாப்பரை
உருவாக்கியிருக்கிறார்களா? இவர்களால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போல ஒரு அமைப்பை
உருவாக்க முடியுமா? முடியாது. இவர்களுக்குச் சிந்திக்க தெரியாது. கூச்சல் போடத்தான்
தெரியும். பாசிஸ்ட்கள். வெத்தலையோ பான்பராக்கோ குதப்பிக் கொண்டு கடப்பாறை எடுத்துக்கொண்டு
ஜெய்ஸ்ரீ ராம் என கோஷம் போட மட்டுமே தெரிந்தவர்கள். நாங்கள்? நாங்கள் அறிவு ஜீவிகள்.
இந்திய பண்பாட்டை ஆக்ஸ்போர்ட்டிலும் காம்ப்ரிட்ஜிலும் சென்று கற்றவர்கள்.’ ஆம், ரொமிலா
தாப்பர் முதல் சகரிகா கோஷ் வரை இந்திய வரலாற்றைக் கற்க இங்கிலாந்து சென்ற அறிஞர் பெருமக்கள்தான்.
எனவே ‘இங்குள்ள பண்பாட்டு மையம் தொடங்கி விளிம்பு நிலை மக்கள் வரை குளிர் பதனூட்டப்பட்ட
அறைகளிலிருந்து முற்போக்கு பத்வா அளிக்க நாங்களே தகுதியானவர்கள். சமானிய பாமரரான நீங்கள்
அதையே உங்கள் வரலாறாகவும் சமுதாய யதார்த்தமாகவும் ஏற்க வேண்டும்.’
இடதுசாரிகள் போல மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சி
அமைப்பு அதிகாரங்களைக் கைப்பற்றி உருவாக்கப்பட்ட இந்துத்துவ அறிவியக்கம் என்று ஒன்று
இல்லைதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்துத்துவ உயிரியக்கம் என்று ஒன்று என்றென்றுமாக
இருக்கிறது. அதில் ஒரு பாகமாக வாழ்கிறது அறிவியக்கம். பாரத மரபில் உயிருக்கும் அறிவுக்கும்
பிரிவு எதுவும் இல்லை. தொல்காப்பிய சூத்திரம் அறிவையே, அறிதலையே உயிரினங்களின் அடிப்படையாக்கி
அளித்தது. ப்ரபோத விதிதம் – எவ்வித அறிதலும் பிரம்மத்தின் வெளிப்பாடு, அதுவே உயிரியக்கம்
என்பது உபநிடதம்.
இதன் தொடர்ச்சியே மாபெரும் அத்வைத ஞானியான
வித்யாரண்யரிடமிருந்து விஜயநகரம் உருவாவது. குரு கோவிந்த சிம்ஹனைப் போல சரித்திர ஞானமும்
சாஸ்திர ஞானமும் கொண்டவரிடமிருந்தே காலசா உருவானது. ராமகிருஷ்ண-விவேகானந்த மரபிலிருந்து
சூல்கொண்ட செயல்முறை வேதாந்தம் டாக்டர் ஹெட்கேவார்-குருஜி கோல்வல்கரால் ராஷ்ட்ரீய ஸ்வயம்
சேவக சங்கமாயிற்று. சங்க கங்கையின் ஞான பிரவாகத்தில் இந்த தேசத்தின் அறிவியக்கம் எப்போதும்
போல் இந்த தேசத்தின் உயிரியக்கத்தின் பிரிக்கமுடியாத கூறாகவே உள்ளது.
ஒரு சிறிய சோதனையைச் செய்யுங்கள். உங்களுக்குக்
கிடைக்கும் இன்றைய இலக்கிய அறிவுஜீவி இதழ்களை, கட்டுரைகளை, ஆசிரியர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
அவர்களின் அனைத்து இந்தியத்தன்மை கொண்ட மேல்பூச்சுகளுக்குள்ளும் நீங்கள் அவர்களின்
மேற்கத்திய பிச்சைப்பேறுகளைக் கண்டு கொள்ளலாம்.
ஒரு எடுத்துக்காட்டு. இங்கு ‘தலித்’துகளின்
வாழ்க்கையைத் தாது வருடப் பஞ்சத்தின்போது சித்திரப்படுத்தும் ஒரு நாவலை எடுத்துக் கொள்வோம்.
மிகக் கவனமாக அதில் மிஷினரிகள் வேறு, காலனிய அதிகாரிகள் வேறு என்கிற வேறுபாடு சித்தரிக்கப்பட்டிருக்கும்.
கிறிஸ்தவ இறையியல் மேற்கத்திய நாடுகளில் ஏற்றெடுத்துள்ள ஒரு தூய்மைப்படுத்தல் இது.
என்னதான் மிஷினரி சுவர்களுக்குள் சுதேச அமெரிக்கக் குடிகளும் ஆப்பிரிக்க இன மக்களும்
கொடுமைகளை அனுபவித்திருந்தாலும் அவற்றை எல்லாம் இன்றைக்கு மிக அமைதியாக ஆனால் நிச்சயமாக
மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் மிஷனரி வரலாற்றெழுத்தர்கள். மிஷனரிகள் வேறு காலனியாதிக்கம்
வேறு. இதையே நீங்கள் நாவலில் காண முடியும். என்னதான் மிஷினரிகள் பஞ்சங்கள் மூலம் இந்துக்கள்
தன் மதிப்பு இழந்து மிஷினரி பிரச்சாரங்களுக்குச் செவி மடுத்தார்கள் எனப் பஞ்சங்களை
மனிதத்தன்மை கொஞ்சமும் இன்றிப் புகழ்ந்தாலும் நம்மூர் நாவலில் ஒரு தூய கிறிஸ்தவன் காலனியத்துக்கு
அப்பாலாக பஞ்சங்களில் மடியும் நம்மூர் மக்களுக்காக இரங்குவான். நம்மூரிலோ பஞ்சங்களில்
மடிபவர்கள் தலித்துகளாக மட்டுமே இருக்க நம்மூர் ‘மேல்சாதியினரோ’ பிரிட்டிஷ் அதிகார
வர்க்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்வர். இது உண்மையில் மேற்கத்திய நியோ காலனியம் பிச்சை
போட்ட ஒரு பார்வை. சரித்திரத் தரவுகள் சொல்வது வேறு. எல்லா சாதியினரும் பஞ்சத்தால்
கஷ்டப்பட்டார்கள். தக்காண மராட்டியத்தின் வசுதேவ பல்வந்த் பட்கே முதல் தஞ்சை மாவட்ட
சைவ ஆதீனங்கள் வரை பஞ்சத்தை எதிர்த்து தங்களாலான சேவைகளைச் செய்தார்கள். கிறிஸ்துவின்
ஊழியர்களுக்கோ இவை ஒன்றும் அவ்வளவு உவப்பானதாக அமையவில்லை.
ஆனால் நாவல் மேற்கத்தியப் பண்பாட்டின் மானுட
நேசத்தையும் கிறிஸ்தவத்தின் எளியோர் மீதான அன்பையும் இந்தியர்களின் மானுடமற்ற சாதியக்
கொடுமையுடன் வேறுபடுத்திக் காட்டுவதாக அமையும். அதாவது 2010களில் தமிழில் வரும் படைப்புக்கும்
19ம் நூற்றாண்டு மிஷினரி பிரச்சார மூன்றாந்தர இலக்கியத்துக்கும் வேறுபாடு நகாசு வேலைகளில்
இருக்கிறதே அன்றி அதன் உள்ளீட்டில் இல்லை.
இப்படி பொதுமைப்படுத்துவதையும் பாரதத்தை எதிர்மறையாக
சித்தரிப்பதையும் கடுமையாக எதிர்த்தவர்களில் காந்தியும் ஒருவர். அவரது முன்னோடி விவேகானந்தர்.
காதரீன் மேயோவை இலை நடுவில் வைத்துவிட்டு காந்தியை உறுகாய் போல் வைத்து அதே காந்தியை
காரியமானது கறிவேப்பிலை என ஒதுக்கும் ஒரு சிந்தனை இன்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இவர்கள்தான் கேட்கிறார்கள், ‘எங்கே இந்துத்துவ சிந்தனை மரபு?’
பாரத சிந்தனை மரபென்பது இன்றைக்கு இந்துத்துவ
இயக்கத்தில் மட்டுமே நீரோட்டமாக இருந்து வருகிறது. தீனதயாள் உபாத்யாயா, தத்தோ பந்த்
தெங்கடி, தரம்பால், ஜெயின் சகோதரிகள் (மீனாட்சி & சந்தியா), சீதாராம் கோயல், ராம்
ஸ்வரூப் என நீளும் இந்த சிந்தனை மரபு மக்கள் வரிப்பணத்தில், அரசமைப்பு அதிகாரத்தில்
உருவானதல்ல. ஆனால் அவற்றின் தெளிவும் ஆழமும் சுய வேர்ப் பிடிப்பும் கொண்ட சிந்தனைக்கு
சமானமான ஒரு பத்தி கூட இத்தனை ஆண்டுகளில் ஒட்டுமொத்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சிகளிலிருந்து
எழுந்ததில்லை. தீன தயாள் உபாத்யாயா ஆராய்ச்சி மையத்தின் தலைமையிலிருந்த காலம் சென்ற
நானாஜி தேஷ்முக் சித்ரகூடத்தின் கிராமங்களை வழக்குகளில்லாத கிராமங்களாக மாற்றினார்.
மிகச் சிறந்த சிந்தனையாளர்தான். ஆனால் அவரது சிந்தனை என்பது வெளிப்பட்டதென்னவோ அவரின்
செயல்பாடுகளில். அவரது வாழ்க்கையே அவரது சிந்தனை.

நானாஜி
தேஷ்முக்
சில ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூரில் ஜீவா
என்கிற சூழலியல் ‘போராளி’ ஒருவரின் உரையைக் கேட்டேன். இந்த ஜீவா என்பவர் தமிழ்நாட்டின்
முதன்மைச் சூழலியல் சிந்தனையாளரென எழுத்தாளர் அதிகார வர்க்கத்தால் முன்னிறுத்தப்படுபவர்.
‘விதையில்லாத திராட்சையை தின்னுற நீ? அப்ப உனக்கு விதையில்லாமல் போயிடும். உனக்கு ஆண்மை
போயிடும்’ என்று ஆவேச ஆட்டம் ஆடுவதுதான் அவரது ‘உரை’யாக இருந்தது. இப்படிப்பட்டவர்கள்
சிந்தனைச் சிற்பிகள். ஆனால் இன்றைய தேதியில் மிக முக்கியமான சூழலியல் மாற்றங்களை தமிழ்நாட்டில்
கொண்டு வந்திருக்கும் அமைப்பு விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டம்
என்கிற நார்டெப். இவர்கள் மிகக் குறைவான அரசு ஆதரவுடன் தமிழ்நாட்டில் ஆற்றியிருக்கும்
பணிகள் அபரிமிதமானவை. ஆனால் என்ன, இவர்களால் இப்படி ஜீவா போல முட்டாள்தனமாக ‘சூழலியல்
சீமான் தனமாக’ பேச முடியாது. இவர்களின் செயல்பாடுகளே இவர்களின் அறிவியக்கம். புளியங்குடி
அந்தோனி சாமியின் புழக்கடை பயோகேஸ் கலன் அதை சொல்லும்.
ராம் ஸ்வரூப் 1970களில் 80களில் எழுதிய நூல்களைப்
படியுங்கள். இன்றைக்கு மேற்கத்திய நாடுகளில் நடக்கும் மத அனுபவங்களின் நியூரோ அடிப்படைகள்
குறித்த ஆராய்ச்சிக்கான சட்டகத்தை நீங்கள் அவரிடம் காணலாம். ஏன் இந்தியாவில் இந்த ஆராய்ச்சிகள்
நடக்கவில்லை? பதஞ்சலியும் திருமூலரும் பிறந்த மண்ணில் சமய அனுபவங்களின் நரம்பியல் அடிப்படைகள்
குறித்து ஏன் ஒரு ஆராய்ச்சியும் இல்லை? ஏனென்றால் அது நேருவிய மார்க்சிய பத்வாக்களால்
அறிவுலகத்தில் விலக்கப்பட்டதாயிருக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், பாரதத்தின் அறிவியல்-அறிவியக்க
முன்னேற்றத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பாணி அறிவு ஜீவிகள் மிகப்பெரும் தடைக்கற்கள்.
அவர்கள் அறிவுலகில் கோலோச்சுவதற்காக இந்திய தேசமே கட்டுண்டு கிடக்கச் செய்தார்கள்.
இவர்களின் நேருவிய பாசிசத்தின் பளிங்கு மாளிகைகளுக்குக் கீழே பாதாளச் சிறைகளில் பாரதிய
சிந்தனை மரபைச் சிறைப்படுத்த யத்தனித்தார்கள். அதைத்தான் உடைத்திருக்கிறது இந்துத்துவம்.
இந்துத்துவம் இவர்களின் அதிகார மாளிகைகளை அச்சுறுத்துகிறது. பரிபூரண சிந்தனைச் சுதந்திரத்தின்
முதல் கீற்றை நேருவிய-மார்க்சிய இருளில் ஆழ்த்தப்பட்ட தேசத்தின் ஆன்மாவுக்கு அளிக்கிறது.
இருளிலேயே இருந்து பழகி சுகித்த சாக்கடைவாசிகளுக்கு
அந்த ஒளியின் துளி நஞ்செனக் கசப்பதில் ஆச்சரியமென்ன?

Leave a Reply