Posted on Leave a comment

வீர் சாவக்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பின் முன்னுரை | தமிழில் SG சூர்யா

குறிப்பு: அந்தமான் சிறை அனுபவங்கள் என்ற பெயரில் தமிழில் வெளியாகும் புத்தகம் வெகு முன்பே My transportation for Life என்று ஆங்கிலத்தில் வெளியானது. அந்தப் புத்தகத்துக்கு எழுதப்பட்ட முன்னுரை தமிழில் இங்கே.

அன்பார்ந்த வாசகரே,

மராத்திய மொழியில் முதலில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்க, இதன் ஆசிரியர் சிறையில் பட்ட இன்னல்களைப் போலவே, மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டன.

சுதந்திரப் போரில் சிறிய பங்கை மட்டுமே ஆற்றிய பல சுதந்திரப் போராட்ட வீரர்கள், விடுதலைப் போரில் தாங்கள் சிறைப்பட்ட கதைகளை மிகைப்படுத்திச் சொல்லிக்கொண்டிருக்கையில், மிகப்பெரும் இன்னல்களையும் சித்திரவதைகளையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்ட ஸ்வந்திர வீர் சாவர்க்கர் என்று நம்மால் அழைக்கப்படும் சாவர்க்கர், தனக்கும் தன்னுடன் இருந்த சக கைதிகளுக்கும் அந்தமான் செல்லுலர் சிறையில் இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றி எதுவும் வெளியில் கூறாமல் இருந்தார். அப்படிச் செய்வது நாகரிகமாக இராது என்றும், அது தற்பெருமையாகக் கருதப்படும் என்றும், அந்தமானில் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அதீதமானது என்று கூறி மக்கள் நம்பாமல்கூடப் போகலாம் என்றும் அவர் அஞ்சினார். அது மட்டுமில்லாமல் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தங்கள் உயிரையும்கூடப் பொருட்படுத்தாமல் தியாகம் செய்த சக போராளிகளை ஒப்பிடும்போது இது ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல என்றும் அவர் கருதினார்.

பருந்திடம் மாட்டிக்கொண்ட ஒரு பறவையின் கூக்குரலாகட்டும், செயின்ட் ஹெலினா-வில் இருந்து பாரீஸுக்குக் கொண்டுவரப்பட்ட தங்கள் மன்னன் மாவீரன் நெப்போலியனின் உடலைப் பார்த்துக் கதறிய பிரெஞ்சு மக்களின் அழுகுரலாகட்டும், அவை ஒரு சோகத்தின் இயல்பான உணர்ச்சி வெளிப்பாடுகளாகத்தான் பார்க்கப்படும். ஆனால் அத்தகைய உணர்ச்சி வெளிப்பாடுகள்கூட பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கடுமையான நடைமுறைகளால் வெளிப்படுத்த முடியாதபடி இருந்தது. அதனையும் மீறி வெளியே சொல்லப்படப் போவது அங்கே அனுபவித்த கொடுமைகளின் உண்மையான தீவிரத்தைப் பிரதிபலிக்கப் போவதில்லை. அதனால் தன் மனதில் உள்ளவற்றை எந்தத் தடையுமில்லாமல் வெளியில் சொல்ல அதற்கென சரியான ஒரு தருணத்தை எதிர்பார்த்து அவர் காத்திருந்ததை நாம் குறைகூற முடியாது. ஆனால் ஒருவேளை அப்படி ஒரு தருணம் அமையாமலேயே போயிருந்தால்? அவருடைய அமைதியினால் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மாபெரும் அநீதியை நாம் தெரிந்துகொள்ள வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். ஆனால் அவரோ அரைகுறையாக அங்கு நடந்தவற்றைப் பற்றிச் சொல்வது தற்பெருமை போல் அமைந்துவிடும் என்றே கருதினார்.

அவர்மேல் மதிப்பு வைத்திருப்பவர்களும், அவருக்கு நெருக்கமானவர்களும் அவரிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்ததால், அவர் தனது போராட்டத்தைப் பற்றிய முழுமை பெறாத இந்த விவரிப்பைப் பதிப்பிக்கச் சம்மதித்தார். இதன்மூலம் நம் மக்களுக்குச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எத்தகைய கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பது ஓரளவாவது தெரிய வரும் என்று எல்லோரும் வற்புறுத்தியதால் ஆசிரியர் வீர சாவர்க்கர் அந்தக் கோரிக்கைக்கு இணங்கினார். இதனால் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ மறைந்த லோகமான்ய பால கங்காதர திலகர் நடத்தி வந்த ‘கேசரி’ என்ற வார இதழில் 1925-26ல் தொடராக வெளிவந்தது.

ஆனால் எதற்கும் அஞ்சாத அந்தத் தேசிய இதழும் கூட இதில் இடம் பெற்றிருந்த சில பகுதிகளைப் பிரசுரிக்கத் தயங்கியது. ஆகவே இந்தக் கதையின் இரண்டாவது பாகத்தை வேறொரு பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டி வந்தது. ‘ஷ்ராத்தானந்த்’ என்ற பத்திரிகையில் 1927 ஜனவரி 20ம் தேதியிலிருந்து இது வெளிவந்தது. கடைசியில் 1927ம் ஆண்டு மே மாதம் மொத்தக் கதையும் முதல்முறையாக வெளியிடப்பட்டது.

ஆசிரியர் ஸ்வதந்திர வீர் சாவர்க்கர் அப்போது 1909ம் ஆண்டு ஜாக்சன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302, 109 ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கப்பட்டிருந்தார். அவருக்கு முதல் ஆயுள் தண்டனை 1910ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதியும், பின்னர் 1911ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி இரண்டாவது ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டன. 50 ஆண்டுகாலக் கடுங்காவல் சிறைத்தண்டனை பெற்ற அவர் 1960ம் ஆண்டுதான் விடுதலை செய்யப்படவிருந்தார். 1911ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி வீர் சாவர்க்கர் அந்தமான் கொடும்சிறையில் அடைக்கப்பட்டார். அந்தச் சிறையில் இழைக்கப்படப்போகும் கொடுமைகளினால் அவர் அங்கிருந்து வெளிவர மாட்டார் என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால் அதற்கு மாறாகச் சிறையில் எழுந்த ஒவ்வொரு பிரச்சினைக்கும் எதிராக எல்லோரையும் ஒருங்கிணைத்து அவர் போராடினார். இதன் காரணமாக அந்தச் சிறைக்கு ஆயுள் தண்டனைக் கைதிகளை இந்தியாவிலிருந்து அனுப்புவது கொஞ்சம் கொஞ்சமாக நின்று போயிற்று. அங்கிருந்த கொடுங்கோலனான ஜெயிலரும் தன் இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ள வேண்டி வந்தது. வீர சாவர்க்கர் அதன் பிறகு கல்கத்தா, ரத்னகிரி மற்றும் எரவாடா சிறைகளுக்கு மாற்றபட்டார். பிறகு
கடைசியாக இரண்டு நிபந்தனைகளின் பேரில் அவர் விடுதலையும் செய்யபட்டார்.

இந்த புத்தகம் 1927ம் ஆண்டு மே மாதம் முதலில் பதிப்பிக்கப்பட்டாலும், 1927ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தான் ஷ்ரத்தானந்த் பத்திரிக்கையில் முதலில் இதுகுறித்து அறிவிப்பு வந்தது. அப்போதுதான் பம்பாய், அகோலா, நாக்பூர், அமராவதி போன்ற மையங்களில் இந்தப் புத்தகம் பற்றிய அறிவிப்புகள் வெளியாயின. ஒருவேளை, அதற்கு முன்பு வரை பிரதிகள் தயார் செய்யப்பட்டு ரகசியமாக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம். பதிப்பித்த முதல் மூன்று வருடங்களுக்குள் அதாவது 1930ம் ஆண்டிற்குள் முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்திருக்கவேண்டும். ஏனென்றால் ஷ்ரத்தானந்த் பத்திரிக்கையில் 1930ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி இந்தப் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பையும் ஆசிரியரின் கவிதைகள் மற்றும் வாழ்க்கை பற்றிய நூல்களையும் வெளியிட பதிப்பகங்களை வரவேற்று அறிவிப்புகள் வெளிவந்தன.

விரைவிலேயே இந்தப் புத்தகத்தின் குஜராத்தி மொழிபெயர்ப்பு வெளியாகியது. உடனடியாக 1934ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பிரஸ் ஆக்ட் (அவசர நிலை அதிகாரங்கள்) 1931, விதி 19ன் கீழ் இந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டது. பல பத்திரிகைகள் இந்தத் தடையைக் கண்டித்தன. உதாரணத்திற்கு, 1934ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி வந்த ‘கேசரி’ இதழில், ‘இது மராத்தி வாசகர்களால் பல வருடங்களாகப் படிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதனால் நாட்டில் எந்தச் சட்ட ஒழுங்கு சீர்குலைவும் ஏற்படவில்லை. இந்தச் சட்டம் அப்போதே மூன்று வருடங்களாக அமலில் இருந்து வந்திருக்கிறது. மூன்று வருடங்களாக இந்தச் சட்டத்திற்கு முரணாக எதுவும் நடக்கவில்லை எனும்போது இப்போது இதனைத் தடை செய்ய திடீரென்று என்ன நடந்துவிட்டது’ வாதிடப்பட்டது. தடை செய்யப்பட்டு ஒன்பது நாட்கள் கழித்து, அதாவது 1934ம் ஆண்டு 26ம் தேதி பம்பாயில் தோபி தாலோ என்ற இடத்தில் ஒரு பிரிட்டிஷ் அதிகாரி ரத்னகிரியில் உள்ள வீர் சாவர்க்கரின் தொண்டர்களில் ஒருவரால் சுடப்பட்டார். சுட்டவர், மறைந்த வாமன் ராவ் சவான். இது நடந்த 24 மணி நேரத்திற்குள் ரத்னகிரியில் இருந்த வீர் சாவர்க்கரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தடைக்கான எதிர்ப்பே அந்த பிரிட்டிஷ் அதிகாரியின் மீது நடந்த கொலை முயற்சி.

தடை செய்யப்பட்டவுடன் இந்தப் புத்தகத்தின் குஜராத்திப் பதிப்பை வெளியிட்ட பிரஸ்தான் பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பகத்தின் அலுவலகத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இந்தப் புத்தகத்தின் பிரதிகள் கைப்பற்றப்பட்டன. அதேபோல பிரஜாபந்து என்ற வார பத்திரிகையின் பதிப்பாளரும் அச்சிடுபவருமாகிய இந்திரனந்தன் பல்வந்த்ராய் தாக்கூர் என்பவருக்கு இரண்டாயிரம் ரூபாய் காப்புத் தொகை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மராத்தியில் வெளியானபோது எந்தப் பிரச்சினையும் இல்லை, குஜராத்தியில் வெளியானவுடன் தடை செய்யப்படுகிறது என்றால், இந்த புத்தகத்தைக் குறித்து யார் புகார் அளித்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் பலர் மனதில் எழுந்தது. ஒருவேளை இது, சிவாஜியையும் ராணா பிரதாப்பையும் ஆயுதம் தாங்கிப் புரட்சி செய்தவர்கள் என்ற காரணத்திற்காகக் குறை கூறிய, பிரத்வி சிங் மற்றும் இதர புரட்சியாளர்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்று கூறிய, இந்து முஸ்லிம் ஒற்றுமை என்ற பெயரில் முஸ்லிம்களை தாஜா செய்து கொண்டிருந்த எவரோ ஒருவராக இருக்கக்கூடும்.

1937ம் ஆண்டு மறைந்த நாராயண் ராவ் சாவர்க்கர் இந்தப் புத்தகத்தின் பதிப்பாளர் என்ற முறையில் இந்தப் புத்தகத்தின் மீதான தடையை நீக்கக் கோரி விண்ணப்பித்தார். அதேபோல பல தனி நபர்களும் நிறுவனங்களும்கூடக் கோரிக்கை விடுத்தன. 1937ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீ.வீ.சாத்தே என்பவர் அந்தமான் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளுக்கு ஆதரவாக ஒரு பேரணி ஒன்றை நடத்தினார். அந்தப் பேரணியின் முடிவில் புனேவில் உள்ள ஷன்வர் வாதாவிற்கு எதிரே நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் அவர் வீர் சாவர்க்கர் எழுதிய புத்தகத்தின் 191ம் பக்கத்திலிருந்து ஒரு பகுதியை, புத்தகத்தின் மீதான அநியாயமான தடையை எதிர்க்கும் விதமாக, வாசிக்கப் போவதாக அறிவித்தார். உடனேயே அப்போதைய சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீ தேவுல்கொவங்கர் என்பவர் அவர் கைகளிலிருந்து அப்புத்தகத்தைப் பறித்தார். உடனேயே வீர் சாவர்க்கரால் சின்காத் வெற்றியைக் குறித்து எழுதப்பட்ட மற்றொரு தடை செய்யப்பட்ட பாடலான ‘தன்யா சிவாஜி முதல் ரனகாச்சி தன்யாச்சி தானாஜி’ என்ற பாடலை அவரும் மற்றவர்களும் பாட ஆரம்பித்தனர். கைப்பற்றப்பட்ட வீர் சாவர்க்கரின் புத்தகங்களைத் திரும்ப ஒப்படைக்கவேண்டும் என மற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர். அரசாங்கம் அந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகச் சொன்னது. ஆனால் உண்மையில் எதுவும் நடக்கவில்லை.

1945ம் ஆண்டு காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதும் அந்தக் கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது. சிலர் தடையை மீறி அந்தப் புத்தகங்களைப் பதிப்பிப்போம் என்று கூறினர். 1946ம் ஆண்டு மே 22ம் தேதி ஒருவழியாகத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால் தடை இருந்ததோ இல்லையோ, வீர் சாவர்க்கரின் புத்தகங்கள் ரகசியமாகப் பதிப்பிக்கப்பட்டுப் பெருவாரியான மக்களால் படிக்கப்பட்டும் வந்தன. இரண்டாவது முறையாக, சட்டபூர்வமான பதிப்பு 1947ம் ஆண்டு வெளிவந்தது. ஹிந்து ராஷ்ட்ர க்ரந்தமாலா-வின் ஐந்தாவது வெளியீடாக பர்சுரே புரானிக் அனி மண்டலி என்ற இயக்கம் இதனை வெளியிட்டது.

1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி காந்திஜி கொல்லப்பட்டார். அந்தக் கொலை வழக்கில் சுதந்திர இந்தியாவை ஆண்ட முதல் அரசு உள்நோக்கத்துடன் வீர் சாவர்க்கரையும் குற்றம்சாட்டி இணைத்தது. ஆனால் பின்னர் அவர் நீதிமன்றத்தால் நிரபராதி என்று கூறி விடுவிக்கபட்டார். ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைக்குப் பயந்து மக்கள் அவரது புத்தகங்களை வாங்கப் பயந்தனர். அதனால் பம்பாயில் உள்ள நடைபாதைகளில் மிகக் குறைந்த விலைக்கு, அதாவது ஒரு ரூபாய்க்கு அந்தப் புத்தகங்கள் விற்கப்பட்டன. ஆனால் புத்தகத்தின் விற்பனை மேலும் அதிகரித்தது. பிறகு அது அதன் உண்மையான விலைக்கே விற்கப்பட்டது.

குஜராத்திப் பதிப்பு மட்டுமில்லாமல் கன்னடம் மற்றும் ஆங்கிலப் பதிப்புகளும் விரைவிலேயே வெளிவந்தன. தற்போதைய ஆங்கில மொழிபெயர்ப்பு பம்பாய் முலுந்த் பகுதியில் இருக்கும் நாராயன் டோபிவாலா கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் வீ.என்.நாயக் என்பவரால் செய்யப்பட்டது. இது 1949ம் ஆண்டு பம்பாயில் உள்ள சத்பக்தி பிரகாஷன் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு தற்போது இரண்டாவது பதிப்பு வெளிவந்திருக்கிறது. ஆனால் காந்தி கொலை வழக்கினால் ஏற்பட்ட பிரச்சினைகளை இதுவும் சந்திக்க வேண்டியிருந்ததால் இந்தப் புத்தகத்தின் ஹிந்திப் பதிப்பை அப்போது கொண்ட வர இயலவில்லை. அது பிற்பாடு நாக்பூரில் உள்ள பிரித்விராஜ் பிரகாஷன் என்ற பதிப்பகத்தால் 1966ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதன் சுருக்கப்பட்ட பதிப்பு ஹிந்துவாணி என்ற பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. மத்திய அரசாங்கத்தின் ஆதரவோடு இயங்கும் சாஹித்ய அகாதமி பதிப்பகமும் இதனை 14 இந்திய மொழிகளில் வெளியிட உத்தேசம் உள்ளதாக அறிவித்தது. ஆனால் பின்னர் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. என்ன காரணம்? அது அரசாங்கத்துக்குத்தான் தெரியும்.

இந்தப் புத்தகத்தின் முதல் பகுதியை 1963ம் ஆண்டு சமக்ர சாவர்க்கர் வாங்மயா என்ற நிறுவனம் பதிப்பித்தது. பிறகு 1968ம் ஆண்டு இது தனி புத்தகமாக ஜி.பி.பராசுரே பிரகாஷன் மந்திர் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அப்போது வீர் சாவர்க்கரின் விடுதலைக்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததால், அவரால் தன்னுடைய பல கருத்துக்களுக்கு விரிவான விளக்கங்கள் கொடுக்க இயலவில்லை. அதனால் ஸ்ரீ பாலாராவ் சாவர்க்கர் இந்தப் பதிப்பில் பல அடிக்குறிப்புக்களைக் கொடுத்திருந்தார்.

இந்தப் புத்தகம் அந்தமானிலும் ரத்னகிரி, எரவாடா சிறைகளிலும் வீர் சாவர்க்கருக்கு இழைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற சித்திரவதைகளையும் கொடுமைகளையும் சித்தரித்திருந்தது. அதேபோல எந்த விதமான அனுகூலமான சூழ்நிலைகளும் இல்லாத நிலையில் 13 ஆண்டுகள் எல்லா விதமான கொடுமைகளையும் எதிர்த்து நின்று சளைக்காமல் போராடிய அவரது தீரத்தையும் அது பறைசாற்றியது. தன் இளமைக்காலம் சிறையில் வீணாகியபோதும், எந்த விதமான நம்பிக்கையும் இன்றி அந்தமான் சிறையில் நிர்கதியான சூழலில் அவர் வாடியபோதும், மற்ற கைதிகளைப் போல மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கவில்லை. மாறாக மனதைச் சம நிலையில் வைத்திருந்தார். இதனால் அவரால் ஆயிரக்கணக்கான வரிகள் கவிதைகளாக எழுத முடிந்தது. தத்வார்தமாய்ச் சிந்திக்க முடிந்தது. இன்று நாட்டைப் பீடித்திருக்கும் பல இன்னல்களுக்கான தீர்வை அந்தச் சூழ்நிலையிலும் அவரால் சிந்தித்துச் சொல்ல முடிந்தது. அவற்றை நம் ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் நிலைமை மேலும் மோசமாகும்போது அவற்றைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும். தேசத்தை முன்னேற்றுவதற்கான பல பரிமாணங்களை அவர் சிந்தித்தார். அவரது இத்தகைய தீர்கமான கருத்துக்களைப் படிக்கும்போது நமக்கு அவர் எழுதிய கவிதை வரிகளான

‘கற்சுவர்களோ இரும்புக் கதவுகளோ நம்மைச் சிறைப்படுத்தாது’

என்பது நினைவுக்கு வருகிறது. இது அவருடைய அசைக்கமுடியாத மன உறுதியையும் தேசப்பற்றையும் குறிக்கிறது. தீர்க்கதரிசியான அவர் மிகச் சிறந்த செயல்வீரரும் ஆவார். நாடு அடிமைத்தளையின் உச்சத்தில் இருந்தபோதிலும் அவர் தன் வாழ்நாளின் எந்தவொரு நிமிடத்தையும் வீணாக்காமல் தன் தாய்நாட்டின் மீட்சி குறித்தே சிந்தித்துச் செயல்பட்டுக்கொண்டிருந்தார். பாரதத் தாயின் இப்படிப்பட்ட ஒரு மகத்தான புதல்வனை நாம் இதுநாள்வரை முட்டாள்தனமாக உதாசீனப்படுத்தி வந்தோம் என்பதுதான் இதிலே மிகவும் வருந்தத்தக்க விஷயம். இதனால் நஷ்டம் நமக்குத்தான். இனி வரும்காலங்களிலாவது நமக்குத் தெளிவு கிடைக்கும் என்று நாம் நம்புகிறேன்.

– எஸ்.டி. காட்போலே.
போரிவில்லி, பம்பாய்.

பின்குறிப்பு: வீர் சாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள் – இரட்டை ஆயுள்தண்டனையும் நாடு கடத்தப்படுதலும்’ புத்தகம் கிழக்கு பதிப்பகம் வாயிலாக விரைவில் வெளியாக இருக்கிறது.

Leave a Reply