2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் – ஓர் ஆய்வு | லக்ஷ்மணப் பெருமாள்


உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23, 2019 அன்று வெளியாகின. மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543. இதில் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 272. பாரதிய ஜனதா கட்சி தனித்து 303 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 91 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே பெற்றது.


2014 – 2019 ஓர் ஒப்பீடு

 • 2014 தேர்தலில் பாஜக 282 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் பெற்றன. 2019 தேர்தலில் பாஜக 303 இடங்களையும், காங்கிரஸ் 52 இடங்களையும் பெற்றுள்ளது. பாஜகவின் வாக்கு சதவீதம் 31.34% (2014) லிருந்து 37.6% க்கு 2019 தேர்தலில் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் 18.34% (2014) மற்றும் 18.34% (2019) வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரசால் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க இயலவில்லை.
 • தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 (2014) இடங்களைப் பெற்று இருந்தது. தற்போது 16 இடங்கள் அதிகமாகப் பெற்றுள்ளது.
 • ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 60 (2014) இடங்களைப் பெற்றது. தற்போது 91 இடங்களைப் பிடித்துள்ளது. 2014 தேர்தலின்போது திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட்டு விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
 •  பாஜக 50% க்கும் அதிகமான வாக்குகளை 16 மாநிலங்களில் (யூனியன் பிரதேசம் உட்பட) பெற்றுள்ளது. குஜராத் (62.1%), ராஜஸ்தான் (58.2%), மத்தியப் பிரதேசம் (58%), டெல்லி (56.3%), இமாச்சலப் பிரதேசம் (69%), உத்தரகாண்ட் (62.1%), சத்தீஸ்கர் (50.2%), ஹரியானா (57.8%), அருணாச்சலப் பிரதேசம் (57.9%), கர்நாடகா (51.38%), கோவா (51.18%), சண்டிகர் (50.64%), ஜார்கண்ட் (50.96%) ஆகும். இவை தவிர உத்திரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கூட்டணியோடு 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது பாஜக.
 • பாஜக வெற்றி பெற்ற 303 தொகுதிகளில் 224 இடங்களில் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வென்றுள்ளது.
 • மேற்குவங்காளம், திரிபுரா, ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் அதிக இடங்களையும் கைப்பற்றி உள்ளது.
மேற்கு வங்கம் 17.2% (2014) – 40.2% (2019) – 2014ல் 2 இடங்கள், 2019ல் 18 இடங்கள்.
திரிபுரா 5.8% (2014) – 48.9% (2019) – 2014ல் 0 இடங்கள், 2019ல் 2 இடங்கள்.
ஒடிஷா 21.3% (2014) – 38.3% (2019) – 2014ல் 1 இடம், 2019ல் 8 இடங்கள்.
தெலுங்கானா 11.2% (2014) – 19.8% (2019) – 2014ல் 1 இடம், 2019ல் 4 இடங்கள்.
(ஆதாரம்: எகனாமிக் டைம்ஸ்)
 • உயர்சாதிக் கட்சி பாஜக என்ற பிம்பத்தை, 2014, 2019 ஆகிய இரு மக்களவைத் தேர்தல்களிலும் பாஜக உடைத்தெறிந்துள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவிலுள்ள தொகுதிகளில் பாஜகவே அதிக இடங்களைப் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 84 எஸ்சி இடங்களில், பாஜக 46 (2019) இடங்களைப் பெற்றுள்ளது. 2014 தேர்தலில் 40 இடங்களைப் பெற்றது. இதில் குறிப்பாக உத்திரப்பிரதேசம் (14), மேற்கு வங்காளம் (5), கர்நாடகா (5), ராஜஸ்தான் (4), மத்தியப் பிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் மட்டும் 32 இடங்களைப் பிடித்துள்ளது. எஸ்டி பிரிவுக்குட்பட்ட 47 இடங்களில் பாஜக 31 (2019) இடங்களை வென்றுள்ளது. 27 (2014) தேர்தலில் பெற்றதைக் காட்டிலும் அதிகமாக 4 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. எஸ்சி பிரிவில் 6 இடங்களை அதிகமாகப் பிடித்துள்ளது. கீழே உள்ள அட்டவணையில், எஸ்சி, எஸ்டி ஒவ்வொரு கட்சியும் பெற்ற இடங்களையும் வாக்கு சதவீதத்தையும் காணலாம்
 (Source: Times of India)
 •  2014 தேர்தலோடு ஒப்பிடுகையில் பாஜக எஸ்சி தொகுதிகளில் 5.90% அதிகமாகவும், எஸ்டி தொகுதிகளில் 6.7% அதிகமாகவும், பொதுப் பிரிவில் 5.40% அதிகமாகவும் பெற்றுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் காங். மற்றும் பாஜக பெற்ற வாக்கு சதவீத வித்தியாசம் முக்கியச் செய்தியைக் காட்டுகிறது. ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களின் கட்சி என்ற பெருமையை காங்கிரஸ் இழந்து விட்டுள்ளது
பிரிவு காங். வாக்கு சதவீதம் பாஜக வாக்கு சதவீதம்
எஸ்சி தொகுதிகள் 17.10% 34.60%
எஸ்டி தொகுதிகள் 28.70% 40.10%
பொதுப்பிரிவு 19.00% 36.80%

 •  ஒட்டுமொத்தமாக முஸ்லிம் எம்பிக்களின் எண்ணிக்கை 23 லிருந்து 27 ஆக உயர்ந்துள்ளது. பாஜக நிறுத்திய ஆறு முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர். அதிகபட்சமாக திரிணமுல் காங்கிரஸ் (5), காங்கிரஸ் (4), சமாஜ்வாடி (3), பஹுஜன் சமாஜ்வாடி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3), நேஷனல் கான்பெரன்ஸ் (3) அடங்குவார்கள். ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தொகுதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட 79 தொகுதிகளில் 41 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது முறியடிக்கப்பட்டுள்ளது. காங்கிரசோ ஆறு இடங்களை மட்டுமே வென்றுள்ளது. கடந்த 2014 தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டால் பாஜக கூடுதலாக ஏழு இடங்களைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 12 இடங்களிலிருந்து ஆறு இடங்களை இழந்துள்ளது.
 • 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவும் காங்கிரசும் 186 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதின. இதில் 16 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 170 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. பாஜகவின் வெற்றி விகிதம் 91.4%. 2014 தேர்தலில் காங்கிரசோடு ஒப்பிடுகையில் 84% வெற்றியை ஈட்டி இருந்தது பாஜக. கடந்த 2014 தேர்தலில் பாஜகவுடன் நேரடியாக மோதியபோது 24 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த முறை 16 இடங்களாக சுருங்கி விட்டுள்ளது.
 • 2019 மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்களில் இருந்து காங்கிரசின் ஒரு எம்பி கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஒரேயொரு எம்பி மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள். பாஜகவை பொருத்தவரையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், லட்சத்தீவு, மேகாலயா, அந்தமான் நிக்கோபார், தாத்ரா நாகர்வேலி, மேகலாயா, மிசோரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் (யூனியன் பிரதேசம் உட்பட) இருந்து ஒரு எம்பி கூட வெற்றி பெறவில்லை.

 பாஜகவின் வெற்றி சூத்திரமும் காங்கிரசின் தவறான வியூகமும்

 • பாஜகவின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணங்கள்: பயனாளர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கொண்டு சேர்த்தது; இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு; அனைத்துக் கிராமங்களுக்கும் மின்வசதியை ஏற்படுத்தித் தந்தது; பிரதமரின் ஆயுஸ்மான் பாரத் திட்டம்; இலவசக் கழிப்பறைகள் திட்டம்; விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் அறிவிப்பு; விவசாயப் பயிர்களுக்கான விலை உயர்வு, விலைவாசிக் கட்டுப்பாடு, எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கான அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியது; 10% ஏழைகளுக்குப் பொதுப்பிரிவில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது; முத்ரா வங்கிகள் மூலமாகக் கடன் உதவி ஆகிய திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதுதான். இதன் விளைவைத் தேர்தல் முடிவில் அறுவடை செய்ய முடிந்திருக்கிறது.
 • இந்தியாவின் தேசப் பாதுகாப்பை உறுதி செய்தது, வெளியுறவுக் கொள்கையில் கொண்டு வந்த அதிரடி மாற்றங்கள், வெளிநாடுகள் மத்தியில் இந்தியாவைப் பெருமைமிகு நாடாக மாற்றியது மோடி என்கிற எண்ணம் மக்களிடம் பரவலாகக் காணப்பட்டதும், ராணுவத்தைப் பலப்படுத்தும் வகையில் அரசின் செயல்பாடுகள் அமைந்ததும் மக்களிடம் பேராதரவைத் தேடித் தந்துள்ளது.
 • மேற்கூறிய விஷயங்கள் அரசின் செயல்பாடுகள் என்றாலும் அரசியலில் தேர்தல் கூட்டணி, பிரசார வியூகம், கட்சி மற்றும் ஆட்சியின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வியூகங்களை வகுத்தல் என அனைத்திலும் பாஜக காங்கிரசைக் காட்டிலும் பதினாறடி பாய்ந்து சென்றது.
 • சில மாநிலங்களில் கடந்த தேர்தலைக் காட்டிலும் குறைவான இடங்களைப் பெற்றாலும் (குறிப்பாக பீகாரில் 17 (22 – 2014) இடங்களைக் குறைத்துக் கொண்டு கூட்டணியை வலுப்படுத்தியது, மகாராஷ்டிராவிலும் அதே அணுகுமுறை, தமிழகத்தில் இடங்களைப் பெறாவிட்டாலும் மெகா கூட்டணிக்காக ஐந்து இடங்களுக்கு ஏற்றுக் கொண்டது எனக் கூட்டணி வியூகத்தோடு தேர்தலைச் சந்தித்தது.
 •  பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அருகில் கூட நெருங்காத நிலையில்தான், மாற்றுக் கட்சிகளின் தலைவர்கள் போட்டியில் இருந்தார்கள். மேலும் பாஜக பிரதமராக மக்களின் அபிமானத்தைப் பெருமளவு பெற்ற மோடி ஒருபுறம் என்றால், எதிர் அணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்ற எந்த நோக்கமும் இல்லாமல் தேர்தலை எதிர்கொண்டது போன்ற அரசியல் காரணங்கள் பாஜகவை மீண்டும் அரியணையில் அமர்த்தியுள்ளன.
 • வலிமையான பாரதம், பாதுகாப்பான பாரதம் இதுதான் பாஜகவின் தேர்தல் கோஷமாக இருந்தது.
 • குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பாஜக உயர்சாதி இந்துக்களுக்கான கட்சி என்கிற நிலையை மாற்றி அனைத்து இந்துக்களின் தலைவனாக, பெரும் இந்து சமூகத்தின் அடையாளமாக நரேந்திர மோடி விளங்கினார். கர்நாடகா தவிர மற்ற தென் இந்திய மாநிலங்களில் அத்தகைய பார்வை இல்லாவிட்டாலும் வட இந்தியாவில் இந்துக்கள் அப்படி ஒருங்கிணைந்தார்கள். இஸ்லாமியப் பெண்களின் மத்தியிலும் முத்தலாக் மூலம் மோடி பிரபலம் அடைந்தார். எனவேதான் பட்டியல் பிரிவுத் தொகுதிகள் மட்டுமல்லாமால் சிறுபான்மையினரின் தொகுதிகளிலும் அதிக இடங்களைப் பாஜகவால் பெற முடிந்துள்ளது.

காங்கிரஸ் தோற்றதற்கான காரணம்: • காங்கிரஸ் ராகுலைப் பிரதமராக முன்னிறுத்தாதது ஒருபுறம். காங்கிரஸ் தாங்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள் என்பதற்குப் பதிலாக மோடியை அகற்றுங்கள் என்று பிரசாரம் செய்தது. இது அவர்களுக்கு எந்தப் பலனையும் தரவில்லை
 • மோடி எதிர்ப்பு விஷயத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலக் கட்சிகள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தாலும் தேர்தல் கூட்டணி என்று வரும்போது சில மாநிலங்களில் காங்கிரசைப் பெரிய மாநிலக் கட்சிகள் அரவணைக்கத் தயாரில்லை. காங்கிரஸ் தேவையில்லாத சுமை என்பதும், தங்களை வைத்து காங்கிரஸ் வெற்றி பெற்றால் தங்களின் பிரதமர் கனவு என்னாவது என்பதுமாக காங்கிரசோடு கூட்டணி ஏற்படுத்தாமல் விட்டன. ஒவ்வொரு மேடையிலும் மோடியை வீழ்த்த ஒன்றிணைந்த கட்சிகள் தேர்தலுக்கு முன்பாகக் கூட்டணி வைக்கத் தயாராக இல்லாமல் போயின. சில மாநிலங்களில் தனக்கு மிகக் குறைந்த இடங்களை மட்டுமே மாநிலக் கட்சிகள் தரும் என்பதால் காங்கிரஸே ஆம் ஆத்மி போன்ற கட்சிகளோடு கூட்டணியை ஏற்படுத்தவில்லை. உபியில் சமாஜ்வாடி, பஹுஜன் சமாஜ்வாடி கூட்டணி அமையவில்லை. இதன் தாக்கம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானிலும் தொடந்தது. மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணி அமைக்காமல் போனது போன்றவை, தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டதற்குச் சமமாக மாறியது.
 •  அடுத்து காங்கிரசின் பிரசார வியூகம். பாஜக அரசை எதிர்த்து அவர் முன்வைத்த வேலையில்லாத் திண்டாட்டம் வட இந்தியாவில் எந்தத் தாக்கத்தையும் இந்தத் தேர்தலில் ஏற்படுத்தவில்லை. தற்போது எந்த இளைஞர்களும் அரசு வேலை வாய்ப்பை நம்பி இல்லை என்பதால்தான் இந்தப் பிரசாரம் எடுபடவில்லை. மாறாக பாஜக அரசு 5,00,000 ரூபாய் வரை வரி விலக்கு கொண்டு வந்ததால் பெரும்பாலான முதல்முறை வாக்காளர்கள் மற்றும் 30 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் மத்தியில் பாஜகவிற்குப் பெருமளவு ஆதரவு கிடைத்தது. வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிப் பேசியவர் ஆரம்பத்தில் ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது என்ற பிரசாரத்தை முன்வைத்தார். ஆனால் அதைக் கூட்டணியில் இருந்த ஸ்டாலினோ, சரத்பவாரோ கூட முன்வைக்கவில்லை. மேலும் பரப்புரையின்போது உச்சநீதிமன்றம் மோடியைத் திருடன் என்றும் ஊழல்வாதி என்றும் சொல்லியுள்ளது என்று சொன்னார். அதை மக்கள் ரசிக்கவில்லை. மேலும் உச்சநீதி மன்றத்தில் இதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டி வந்தது.
 • புல்வாமா தாக்குதலில் வீரர்கள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அரசு நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கைச் சந்தேகப்பட்டதும், புல்வாமா பதிலடியில் அரசு நாடகம் நடத்துகிறது என எதிர்க் கட்சிகள் பேசியதும் வட இந்திய மக்களிடம் எரிச்சலைக் கிளப்பியது.
 • நியாய் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 72,000 ரூபாய் விவசாயிகளுக்குத் தரப்படும் என்ற கோஷத்தைக் கூட முழுமையாக எடுத்துச் செல்லாமல், மீண்டும் மீண்டும் மோடியை மட்டுமே நோக்கித் தாக்குதலைத் தொடந்ததற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை.
 • தாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதற்குப் பதிலாக முற்றிலுமாக எதிர்மறையாகப் பிரசாரம் செய்தது காங்கிரஸுக்கு முற்றிலும் எதிராக முடிந்துள்ளது.

 பாஜகவின் வெற்றியைப் புரிந்து கொள்வது எப்படி?

2014 தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம், நரேந்திர மோடி தன்னை வளர்ச்சி நாயகனாக முன்னிறுத்தியது. அடுத்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பத்தாண்டு ஆட்சியில் ஏற்பட்ட ஊழல். ஆட்சிக்கு எதிராக மக்களிடம் ஏற்பட்ட வெறுப்பு ஆகியவற்றால் மிகப் பெரும் தோல்வியைத் தழுவியது காங்கிரஸ். பாஜகவோ 30 ஆண்டுகளுக்குப் பிறகு 282 இடங்களைப் பெற்று தனிப்பெரும்னையுடன் ஆட்சியை அமைத்தது.

2019 தேர்தலில் பாஜக குறைந்த இடங்களைப் பெற்றிருந்தாலோ அல்லது தனிப்பெரும்பான்மையோ பெறாமல் போய் இருந்தால் கூட, இந்திய ஊடகங்கள் இது பாஜகவின் தோல்வி என்றே பேசிக்கொண்டு இருந்திருக்கும். பாஜக கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்தால் கூட இது பாஜகவின் தோல்வி என்று விவாதங்களை நடத்தி இருக்கும். ஆனால் இந்த வெற்றி, ஆட்சிக்கு ஆதரவான வாக்குகள் மட்டுமல்ல. மோடி என்ற தலைவனின் மீது மக்கள் வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கை. இந்தியாவின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த இன்றைய நிலையில் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை மக்கள் அவர் மீது வைத்துள்ளார்கள். அதன் விளைவாகவே கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்களைப் பாஜகவிற்கு வழங்கி உள்ளார்கள்.

பாஜகவின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம், ஆர்எஸ்எஸ்சில் உள்ள தொண்டர்களின் தன்னலமற்ற பிரசாரமும், பாஜகவின் தலைவரான அமித்ஷாவின் அயராத உழைப்பும் வியூகங்களும் முக்கியக் காரணங்கள். சமூக வலைத்தளங்கள், மன் கி பாத், அரசு விழாக்கள், தொழில் துறை மாநாட்டு உரைகள், வெளிநாட்டுப் பயணங்களில் இந்தியர்கள் மத்தியிலான உரை, பாஜகவின் சமூக ஊடகங்கள் எனப் பிரதமர் மோடி நேரடியாக மக்களிடம் உரையாடியதன் பலன், பாஜகவின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று.

மெயின் ஸ்ட்ரீம் மீடியா என்றழைக்கப்படும் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் மோடி ஏன் தங்களைச் சந்திக்கவில்லை, பத்திரிகையாளர் சந்திப்பை ஏன் மோடி வைப்பதில்லை என்று கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தன, ஆனால் மோடியோ பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில், கும்பலாகக் கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் அரசியல் தலைவர்களை பதற்றத்துக்குள்ளாக்கி, அதில் அவர்கள் விடும் வார்த்தைகளை வைத்து, அவர் எப்படி இப்படிச் சொல்லலாம் என்று குறிப்பிட்ட அரசியல்வாதியின் பிம்பத்தை உடைப்பதைப் பெருமையாக நினைக்கின்றன, இன்றைய ஊடகங்களும் பத்திரிகையாளர்களும். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் ரஜினிகாந்தின் பத்திரிகையாளர் சந்திப்பைச் சொல்லலாம். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று நல்லெண்ணத்துடன் சொன்ன கருத்தை எடுத்துக்கொண்டு, ‘போராட்டங்களை அவமதிக்கிறாரா? இழிவு படுத்துகிறாரா?’ என்று திரித்துவிடும் ஊடகங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இவர்களின் கீழ்த்தரமான நடவடிக்கைகளைப் புரிந்துகொண்ட பிரதமர் மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களைப் மதிப்பதில்லை. காரணம், நான் மக்களுடன் நேரடியாக உரையாடுகிறேன், ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் முன்பாக வைக்கிறேன் என்பதே அவர் ஊடகங்களுக்குக் கொடுக்கும் செய்தியாக உள்ளது. என் மீதான விமர்சனத்தையோ ஆட்சி மீதான விமர்சனத்தையோ ஊடகங்கள் மக்களிடம் வைக்கட்டும். மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களோ, அவர்களைத் தேர்வு செய்யட்டும் என்பதான அவரின் செயல்பாடுகளால்தான் அனாவசியாமாக அவர் ஊடகங்கள் வசம் சிக்காமல் உள்ளார். மேலும் மோடியின் செய்திகளை மக்கள் விரும்பிப் பார்ப்பார்கள், அதனால் சேனலின் டிஆர்பி ஏறும் என்பதால்தான் அத்தனை ஊடகங்களும் மோடி எங்கு பேசினாலும் நேரடி ஒளிபரப்பைச் செய்கின்றன.

தாராளமயவாதிகளும், இடதுசாரி சிந்தனையாளர்களும் எதிர்க்கட்சிகளும்மோடி சிறுபான்மைக்கு எதிரானவர்என்ற பிரசாரத்தையும், ‘இந்துத்துவம் விஷம், மோடி பிரிவினைவாதிஎன்ற கோஷத்தையும் கைவிடாமல் இருக்கும் வரையிலும், மோடி வீழத்தப்பட இயலாத தலைவராகவே இருப்பார். அரசின் செயல்பாடுகளைக் கவனித்து மக்கள் ஒருபக்கம் வாக்களித்தாலும், உணர்வு ரீதியாகவே இறுதியில் வாக்கு செலுத்த முடிவெடுக்கிறார்கள். இரண்டிலும் மோடி முன்னணியில் இருப்பதால்தான் அவர் வீழ்த்த இயலாதவராக 2000லிருந்து இன்று வரை உள்ளார். மோடி குஜராத்தின் முதல்வரான நாளில் இருந்து இன்றுவரை தனிப்பெரும்பான்மையுடன்தான் ஆட்சியைக் கைப்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமையான பாரதம், வளமான இந்தியா, தூய்மையான இந்தியா, நீர்ப்பிரச்சினையைத் தீர்க்கும் அரசு, ஏழைகளின் நலன் பாதுகாக்கும் அரசை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள். அவ்வகையில் பாரதப் பிரதமர் மோடி 2019 தேர்தலில் தமது சாதனையைச் சொல்லி வாகை சூடி உள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளும் மக்கள் நம்பிக்கையைப் பாஜக அரசு பெற வாழ்த்துவோம்

உசாத்துணை
Leave a Reply