Posted on Leave a comment

வேலை (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்

தமிழரசனின் வேலை அவன் மனைவி செல்விக்குப்
பிடிக்கவில்லை.
“என்ன வேலை இது? ரெண்டு கிழங்களுக்கு வீட்லெ
எடுபிடி வேலை செய்துகிட்டு?
“அப்படிச் சொல்லாதே செல்வி. அவங்கதான் எனக்கு
ஆரம்பத்திலேர்ந்து எல்லாமே. கிராமத்திலேர்ந்து இங்கே மாறி வந்தப்ப, கூடவே என்னையும்
கூட்டிக்கிட்டு வந்தாங்க. படிக்க வசதியில்லாத நெலையிலே, இங்கெயே அவங்க வீட்லயே
வெச்சுக்கிட்டாங்க. ஒரு டிகிரி வாங்கவும், கம்ப்யூட்டர் கத்துக்கவும் உதவினாங்க.
“அதுக்காக…. அவங்க வீட்லயே வேலை செய்யணும்னு
ஏதாவது எழுதியிருக்கா? வெளி உலகத்துல ஆபீஸ், பிஸினஸ்ன்னு ஒண்ணும் கெடையாதா?
நாளைக்கு, வீடு வாசல்ன்னு வாங்க வேண்டாமா?
“அதான் சாப்பாடு போட்டு, சம்பளமும் தராங்களே
செல்வி?
“நானும்தான் ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன். எனக்கு
பி எஃப், கிராசுவிட்டி எல்லாம் ஒரு சேமிப்பா வரும் – உனக்கு?
“ம்… உனக்கு அந்த வேலைக்கு அஞ்சு லட்சம்
சொளையா குடுத்து வாங்கினது. மாசம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு, உயிரே போறா
மாதிரி வேலை. கூடவே, பசங்களை திட்டக்கூடாது, கடுமையா ஒண்ணும் சொல்லக்கூடாதுன்னு
ஆயிரம் ரூல்ஸ். இதுக்கு நடுவிலே, சென்சஸ் எடுக்கறது, எலெக்‌ஷன் ட்யூடின்னு
டார்ச்சர் வேற.
“அதுக்கு என்ன செய்யறது. நிரந்தர வேலை எங்கே
கிடைக்குது? சாதி சர்டிபிகேட்டு அது இதுன்னு ஆயிரம் கேக்கறாங்க – பணம் வேற செலவு
செய்யணும். எல்லாம் செய்தாலும் வேலை நிச்சயமில்லே. இப்பத்திய நிலை அப்படித்தானே
இருக்குது? ம்.. எங்கப்பா சொன்னா, அந்தப் பெரிய மனுஷன் உனக்கும் ஒரு வேலை வங்கித்
தருவாரு…
“பத்து லட்சம் கொடுத்தா செய்யறேன்னாராம்!
உனக்காகக் கொடுத்த அந்தப் பணத்த பொரட்ட எவ்வளவு சிரமப்பட்டோம்? அதுவும் அந்த
ஐயாதான் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாரு. இப்போ இது வேறயா?
அன்றாடம் இந்த உரையாடல் ஏதாவது ஒரு வடிவில்
சண்டையாக நடந்துகொண்டே இருக்கும். எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்ப்பதைப் போல,
செல்வியின் உறவினர்களும் அவ்வப்போது வந்து ‘என்னதான் சொன்னாலும், ஆபீஸுக்குப் போறா
மாதிரி ஆகுமா? என்னவோ எடுபுடி வேலைக்கு, கிளியாட்டம் பொண்ணக் குடுத்துட்டோம்
என்று
செல்வியின் சீற்றத்தை விசிறிவிட்டுப் போவார்கள்.
தமிழரசன் தனது கம்ப்யூட்டர் அறிவால் நிறைய
வேலைகள் செய்பவன். புத்தகங்களுக்கு லே அவுட் செய்வது, முகநூலில் பதிவது,
ப்ளாக்கில் எழுத உதவுவது என எல்லாம் அத்துப்படி.
 
அவனை ஆதரித்த சங்கரன் தம்பதியினர், தனியாக ஒரு
ஃப்ளாட்டில் வசிக்கின்றனர். எண்பது வயது தாண்டிய
சங்கரன் ஒரு நல்ல இலக்கியச் சிந்தனையாளர், எழுத்தாளர். ஏதோ தாசில்தார் உத்தியோகம்.
ரிடையர்மெண்டுக்குப் பிறகு சென்னை வந்து விட்டார். நாற்பது வருடங்களுக்கும் மேலாக
எழுதி வருபவர். பக்கம் பக்கமாகக் கையால் எழுதியவர், இப்போது சொல்லிச் சொல்லி,
லாப்டாப்பில் பதிவிடுகிறார். கதை, கட்டுரை எனத் தன் ப்ளாக்கில் எழுதுவதும்,
முகநூலில் பதிவதும்
 அவருக்கு
எளிதாகிவிட்டன. மாத, வார சஞ்சிகைகளில் நகைச்சுவையாக எழுதுவதும் அவருக்குப்
பிடித்தமான ஒன்று. எல்லாவற்றுக்கும் முழுவதுமாக உதவுவது தமிழரசன்தான். ஒரு வேலை
என்பதைவிட, தனக்கு மிகவும் பிடித்த ஒன்றைச் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியும், ஆத்ம
திருப்தியும் அடைந்தான் அவன்.
 
சங்கரன் செல்லும் எல்லாக்
கூட்டங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் உடன் செல்வது, புகைப்படம் எடுப்பது, வங்கி,
வெளியூர் செல்வது என எல்லாவற்றுக்கும் தமிழரசனே பெற்ற பிள்ளையைப்போல அவருடன் வலம்
வந்தான். வேளை தவறாமல் டிபன், காபி, சாப்பாடு எல்லாம் சங்கரனுடன் தமிழரசனுக்கும்
தருவது சங்கரனின் மனைவிதான். வீட்டுப் பண்டிகைகள், விசேஷங்கள் அனைத்துக்கும்,
வீட்டுக்கு வரும் சங்கரனின் மகனுக்கும், மகளுக்கும் தமிழரசனே எல்லா உதவிகளையும்
செய்வான்.
 
சங்கரனின் வலது கரம் தமிழரசன்தான். எழுதுவதில் மட்டும்
அல்லாமல், மருந்து மாத்திரை எடுத்துக் கொடுப்பது, புத்தகங்கள் வடிவமைப்பது, எல்லாமே
அவன்தான்.
மகன், மகள் இருவருக்கும் அவரவர் வாழ்க்கையை
அமைத்துக் கொடுத்துவிட்டு,
தன்
மனைவியுடன் தனியாக வாழ்வதில்தான் சுதந்திரமாக உணர்ந்தார் சங்கரன். அந்த
சுதந்திரத்தில் தலையிடாத தமிழரசனை அவருக்குப் பிடித்திருப்பதில் வியப்பு
ஒன்றுமில்லை. வீட்டிற்கு வருவோர் போவோர், புத்தகப் பதிப்பாளர்கள், சங்கரன்
நண்பர்கள் என எல்லோருக்கும் தமிழரசனைத் தெரியும் – அவன் மூலமாகவே அவரைத் தொடர்பு
கொள்வது எளிது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
மாதம் பிறந்தால், தமிழரசனின் வங்கிக் கணக்கில்
ஒரு கணிசமான தொகையைச் செலுத்திவிடுவார் சங்கரன். தமிழரசனின் திருமணத்துக்குப் பிறகு,
அந்தத் தொகை இரட்டிப்பானது.
இதெல்லாம் செல்விக்குப் புரிவதேயில்லை. தன்
கணவனும், நல்ல உடை, கூலிங்
கிளாஸ், கையில் தங்கக் கடிகாரம், கழுத்தில் தங்கச் சங்கிலி எல்லாம் அணிந்து,
மோட்டார் பைக்கில் ஒரு ஆபீஸ் போவதைப் பார்க்க ஆசைப்படுகிறாள்.
“என்ன செல்வி, மாப்பிள்ளை அந்த எழுத்தாளர்
வீட்டிலேயே பழியா கெடக்கிறாரு? மாமாகிட்ட சொல்லி நல்ல வேலை ஒண்ணு வாங்கிக்கலாமில்லே?
இப்போ நல்ல நல்ல வாய்ப்பெல்லாம் அரசாங்கம் நமக்குக் கொடுக்கிறாங்கள்ள?
தமிழரசன் மறுத்துவிட்டான். “பெரியவரு கூடத்தான்
இருப்பேன். அவருக்கு உதவி செய்யறதுதான் என் வேலை. அவர்கிட்டே நெறைய்ய
கத்துக்கிறேன். அவர் மூலமா வெளி வேலைங்களும் எனக்குக் கெடைக்குது. அந்தம்மா என்னெ
பெத்த புள்ளையாட்டம் அன்பா கவனிச்சுக்கிறாங்க. எனக்கு ஒரு கொறையும் இல்லே.
செல்விக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. இரண்டு
வருஷமா இதே போர்தான். கையில் குழந்தை வேறு. குழந்தை பிறந்தபோது, சங்கரன்
தம்பதியினர் குழந்தைக்குத் தங்கச் சங்கிலி போட்டதையும், கை நிறைய பணம்
கொடுத்ததையும் செல்வி மறக்கவில்லை. ஆனாலும், தமிழும் தன் பிறந்த வீட்டு
ஆண்களைப்போல், வெள்ளையும் சொள்ளையுமாய் ஆபீஸ் செல்லாதது ஒரு பெரிய குறையாகவே
பட்டது.
அந்த மாத இதழுக்கு அனுப்ப வேண்டிய கட்டுரைக்குத்
தாமதம் ஆகிவிட்டது. தமிழரசன் கம்ப்யூட்டரில் டைப் அடித்து, மெயில் செய்துவிட்டு,
வீட்டுக்குக் கிளம்ப, வழக்கத்தைவிட நேரம் அதிகமாகிவிட்டது. இந்தப் பரபரப்பில்,
செல்வியைக் கடைக்கு அழைத்துப் போகக் கொடுத்திருந்த வாக்கு மறந்துவிட்டது.
வீடு அலங்கோலமாகக் கிடந்தது. கோபமாகச் செல்வி. “போய்ருய்யா,
அவங்களோடயே போய்ரு. உனக்கு எதுக்குய்யா பொண்டாட்டி, கொழந்தை
எல்லாம்?
ஆவேசம் வந்தவள் போல் கத்தினாள். என்ன சொல்லியும் கேட்காமல்,
இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, விடுவிடுவென்று மணப்பாக்கத்தில் இருக்கும்
தன் அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டாள். ‘செல்வி, செல்வி
கூப்பிட்டவாறு
பின்னாலேயே ஓடினான் தமிழரசன். எதிரில் வந்த ஆட்டோவில் ஏறித் திரும்பிப்
பார்க்காமல் சென்றுவிட்டாள் செல்வி.
தமிழரசன் இரவு முழுதும் தூங்கவில்லை. தான்
வேண்டாம் என்று சொல்லச் சொல்ல, கேட்காமல் தனக்குத் திருமணம் செய்து வைத்த சங்கரன்
ஐயா மீது கோபமாக வந்தது. இவர்களுக்கு என்னதான் வேண்டும்? புரியாமல் குழம்பினான்.
குழந்தை கபிலனின் சிரித்த முகம் மனதை மேலும் வருத்தியது.
மறுநாள் தமிழரசனின் முகம் வாடியிருப்பதைப் பார்த்த
சங்கரனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. சங்கரன் மனைவியும், “தோ பாரு தமிழு, உன்னையே
நம்பி தாலியக் கட்டிக்கிட்டு வந்திருக்கா செல்வி. என்னதான் பொறந்த
வீட்டுக்குப் போனாலும், அங்கெ அவளுக்கோ, உனக்கோ மரியாதை இருக்காது. அவள்
சந்தோஷமும் முக்கியமில்லையா? அவ என்ன கேக்கறா? வேற நல்ல வேலைக்குத்தானே போகச்
சொல்றா? குடும்பத்தைத் தவிர வேற எதுவுமே முக்கியமில்ல தமிழு. பேசாம அவ சொல்றா
மாதிரி அவ மாமாகிட்ட சொல்லி அந்த வேலைக்கே போயிடேன்
என்றாள்
ஆதரவாக.
சங்கரனும், “ஆமாம் தமிழு, அரசு உத்தியோகம்தான்
புருஷ லட்சணம். எனக்கு சனி, ஞாயிறுலே வந்து எல்லாம் செய்துடேன். எனக்கும் வயசு
ஆறது, நவீன எழுத்துக்களோட போட்டி போட முடியும்னு தோணல்லெ. ஏதோ ஆத்ம திருப்திக்கு
எழுதறேன். வாரத்தில் இரண்டு நாள் வந்து உதவி செய்யேன், அதுபோதும்
என்று
அன்புடன் சொன்னார்.
தமிழரசனுக்கு மனம் கேட்கவில்லை. மேலும்
சமீபத்தில்தான் சங்கரனுக்கு சர்க்கரை வியாதி அதிகமாகி, சிறுநீரகமும் முரண்டு
பிடிக்கத் தொடங்கியிருந்தது. இந்த நிலையில் இவர்களைத் தனியே விட தமிழரசனுக்கு
மனமில்லை.
 
ஆனாலும், செல்வியின் பிடிவாதமும், அவள் வீட்டு
மனிதர்களின் வற்புறுத்தலும், தமிழரசனை நிலைகுலையச் செய்தன. சங்கரன் தம்பதியினரின்
அறிவுரையிலும் நியாயம் இருப்பதாகப் பட்டது.
 
பெரிய மனிதரின் செல்வாக்கு, கை மாறிய தொகை, சரியான
நேரத்தில் விழுந்த காலியிடம் எல்லாம் சேர்ந்து, தமிழரசனை, செல்வி விரும்பிய அரசுப்
பணியில் அமர்த்தின. மறுநாளே மலர்ந்த முகத்துடன், செல்வி வீட்டிற்கு வந்துவிட்டாள்.
வேலை ஒன்றும் பெரியதாக இல்லாவிட்டாலும்,
தமிழரசனுக்குக் கொஞ்சம் மனதில் குறுகுறுப்பு இருந்தது. சீனியாரிட்டி, தகுதிகளை
மீறிக் கிடைத்த
வேலையினால் ஏற்பட்ட குற்ற உணர்வு. எல்லோரும் தன்னையே
கவனிப்பது போலிருந்தது. வேலை நேரத்தில், வீண் அரட்டையிலும், சாப்பிடும் இடத்திலும்
பொழுதைக் கழிக்கும் அலுவலர்களைக் கண்டாலே எரிச்சலாய் வந்தது. சிறையில் இருப்பதைப் போல் இருந்தது
தமிழுக்கு. சங்கரன் ஐயாவுடன் செய்த வேலையில் இருந்த சுதந்திரமும் விருப்பமும் இங்கு
இல்லாதது மனதில் ஒரு வெறுமையைக் கொடுத்தது.
பகல் முழுவதும் அலுவலகம், மாலையிலும் வார
இறுதியிலும் சங்கரன் வீடு எனத் தன் வேலைகளைக் கவனித்து வந்தான் தமிழரசன்.
 
வயதும் நோயும் சங்கரனைப் படுக்கையில் தள்ளின.
வீட்டிலேயே இருபத்திநாலு மணிநேரமும் நர்ஸ், மருந்து, மாத்திரைகள், வாரம் ஒரு முறை
டாக்டர் விசிட் என சங்கரனை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள் அவரது குழந்தைகள்.
தமிழரசனும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவருடன் இருந்தான்.
அன்று காலையில் அலுவலகம் சென்றவுடன், அன்றைய
செய்தித்தாளில் வந்திருந்த செய்தி உண்மை எனத் தெரிந்தது. வேலை வாங்கிக் கொடுத்த
பெரிய மனிதர் மற்றும் தமிழரசனின்
இரண்டு மேலதிகாரிகள் மீது ஊழல் புகார் – விசாரணை. அதிகாரிகள் வேலை இடைநீக்கம் என
அலுவலகமே இறுக்கமாயிருந்தது. தனக்கு என்ன மாதிரி அரசு ஆணை வருமோ என்ற
மனக்கலக்கமும் தமிழரசனுக்கு இருந்தது. சாப்பிடும் இடம், மரத்தடி, காரிடர் எல்லா
இடங்களிலும் இதே பேச்சாய் இருந்தது. மறைமுகமாகத் தனக்கும் சஸ்பென்ஷன் தகவல் வரலாம்
என்ற பேச்சும் காதில் விழுந்தது. அரசியல் புயலில் யாருக்கு என்ன இழப்பு வரும்
என்று யாரால் கூறமுடியும்?
அமைதியாக, மனதுக்குப் பிடித்த வேலையைச்
செய்துகொண்டிருந்த நாட்கள் தமிழரசனின் மனதில் வந்து போயின. இப்போது தினமும் ஒருவித
மன இறுக்கத்துடன் வேலைக்கு வர வேண்டியிருந்தது. மேலதிகாரிகள் கூப்பிடும்போதெல்லாம்
மெமோ கொடுப்பதற்குத்தானோ என்று அச்சமாய் இருந்தது. வாங்குவதைப் போலவே, லஞ்சம்
கொடுப்பதும் குற்றம்தான் என்று தெரிந்தும், இந்த வேலையை வாங்கியதில் வருத்தம்
இருந்தது. வேலைக்கு மட்டுமன்றி, இப்போது தன் தலைக்கே ஆபத்து வந்துவிட்டதைப் போல் உணர்ந்தான்.
சங்கரன் ஐயா சொல்லும் ‘எதிலும் நியாயமும், நேர்மையும் இருக்கணும்
என்னும்
வார்த்தைகளில் புதைந்துள்ள உண்மை உள்ளத்தைச் சுட்டது.
 
லேசான தலைவலி. அரை நாள் விடுப்பில் வீட்டிற்குக்
கிளம்பினான்.
பையில் செல்வி வாங்கிக் கொடுத்த புது போனில் செய்தி வந்தது. சங்கரன் மறைந்து
விட்டார். ‘ஐயா, உங்க கூடவே இருந்திருந்தா, நிம்மதியா இருந்திருப்பேனே
என்று
அழுது அரற்றினான் தமிழரசன்.
சங்கரனின் காரியங்கள் முடிந்து, ஒருநாள்
தமிழரசனை அவர் மகன் கூப்பிட்டனுப்பினார். “தமிழு, அப்பாவுக்கும்
அம்மாவுக்கும் உன் மேலதான் ரொம்பப் பிரியம். தன் புத்தகங்கள் விற்று வருகின்ற
ராயல்டிலே பாதிய உனக்குக் கொடுக்கணும்னு உயில் எழுதியிருக்கார். தன்னோட ஃபிக்சட்
டெபாசிட் ரூபாய் ஐந்து லட்சத்துக்கு, உன்னையே நாமினியா போட்டிருக்கார். உனக்கு
எப்போ வேணுமோ அப்போ எடுத்துக்கலாம். எனக்குத் தனியா ஒரு லெட்டர்லே, நீ விரும்பினா,
என் கம்பெனியிலேயே வேலை கொடுக்கவும் சொல்லியிருக்கார்
என்று
தெரிவித்தார். மனதில் பாரம் அழுத்த, ஹாலில் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்த
சங்கரனை விழுந்து வணங்கினான் தமிழரசன்.
விசாரணைக் கமிஷன் தன் வேலையைச் செய்தது.
தமிழரசனுக்கு வேலை போனது. விசாரணை முடியும் வரை உள்ளூரிலேயே இருக்க உத்தரவாகியது.
வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் விசாரணைக் கமிஷன் முன் ஆஜர் ஆவது ஒரு வேலையாகிப்
போனது.
 
செல்விக்கு இப்போதெல்லாம் தன் கணவன் மோட்டர்
பைக்கில் வேலைக்குப் போவது பிடிப்பதில்லை.
 

Leave a Reply