Posted on Leave a comment

சில பயணங்கள் – சில பதிவுகள் – பகுதி – 20 | சுப்பு

பித்தெடுத்தவன் காதலி


அவசர நிலையின்போது கொள்கை வேறுபாடு இல்லாமல்
அனைத்துக் கட்சியினரும் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். ஸ்தாபன காங்கிரஸ், பாரதிய லோக்
தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜன சங்கம், சோசலிஸ்ட் கட்சி, அகாலிதளம் போன்ற
தேர்தலில் போட்டியிடும் கட்சித்தலைவர்களும், இந்த வட்டத்திற்குள் வெளியே இருக்கும்
ஆர்.எஸ்.எஸ்., ஆனந்த் மார்க், நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் சிறையில் இருந்தனர்.
சிறைவாசம் இவர்களிடையே உரையாடலைச் சாத்தியப்படுத்தியது.
எதேச்சாதிகாரத்தை எதிர்க்க ஒருமித்த நடவடிக்கை அவசியம் என்ற கருத்து சிலரிடம் எழுந்தது.
ஜனதா கட்சிக்கான ஜனனம் இதுதான்.
இந்நிலையில் இந்திராகாந்தி, ‘அவசரநிலை தளர்த்தப்பட்டு
பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்
என்று அறிவித்தார். சிறையிலிருந்தவர்கள்
விடுதலை செய்யப்பட்டனர். ஜெயபிரகாஷ் நாராயண், ஆசார்ய கிருபாளி
னி ஆகியோரின்
ஆசியோடு உருவானது ஜனதா கட்சி. ஜன சங்கத்தின் அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிஷன் அத்வானி,
ஸ்தாபன காங்கிரசின் மொரார்ஜி தேசாய், சோசலிஸ்ட் கட்சியின் பிஜு பட்நாயக், சரண்சிங்,
காங்கிரசில் இருந்து வெளியேறிய பாபு ஜெகஜீவன்ராம், தி.மு.க.விலிருந்து வெளியேறிய இரா.
செழியன் ஆகியோரின் ஆளுமை இதற்கு வலு சேர்த்தது.
தமிழ்நாட்டில், ஜனதா கட்சிக்கும், திமுகவுக்கும்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே தேர்தல் உடன்படிக்கை ஏற்பட்டது. எதிரணியில்
அ.இஅ.தி.மு.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி.
மார்ச் 1977 பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.
வெற்றிபெற வேண்டுமென்று நான் கடுமையாக உழைத்தேன். ஆர்.எஸ்.எஸ்., தி.மு.க., மார்க்சிய
கம்யூனிஸ்ட் சார்புடைய இளைஞர்களெல்லாம் ஒன்று சேர்ந்து இரவு பகலாகத் தேர்தல் வேலை செய்தோம்.
வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், நிதி வசூலித்தல்
போன்ற எல்லாத் தேர்தல் வேலைகளையும் கச்சிதமாகச் செய்தோம். தி.நகரில் ஜெகஜீவன்ராம் பேசுவதற்காக
ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டம் துவங்குவதற்கு முன்
அங்கே கூடியிருந்த மக்கள் முன்னிலையில் நாங்கள் ‘ஜனதா பாலிஷ்
போட்டோம். தங்களுடைய செருப்பையும், ஷூவையும் பாலிஷ் செய்து கொள்ளுமாறு
நாங்கள் மக்களைக் கூவி அழைத்தோம். மக்களும் பாலிஷ் போட்டுக் கொண்டுத் தாராளமாக நிதி
உதவி செய்ததில் ஒரு மணி நேரத்தில் 400 ரூபாய் சேர்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த
அந்தக் கூட்டம், இந்த நிதியை நாங்கள் மேடையில் சேர்ப்பதற்காக விலகி வழிவிட்டது. மேடையேறி
நிதியை நாங்கள் மு.கருணாநிதியிடம் ஒப்படைத்தோம்.
நாங்கள் முழு நம்பிக்கையோடு வேலை செய்தாலும்
தி.மு.க. தென்சென்னை தொகுதியில் தோல்வி கண்டது. இருந்தாலும் ஜனதா கட்சி அகில இந்திய
அளவில் வெற்றி பெற்று அரசு அமைத்தவுடன், ஆர்.எஸ்.எஸ். வேலைகளை பகிரங்கமாகவும், இன்னும்
பரந்த அளவிலும் செய்ய முடிந்தது.
அரசியல் நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, கண்மூடித்தனமாகச்
செலவு செய்துவிட்டதாலும் ஒரு வருட காலம் கவனிக்காமல் விட்டுவிட்டதாலும் வலை வியாபாரம்
கை நழுவிப்போய்விட்டது. மீண்டும் வலை வியாபாரத்தைத் துவக்க முடியவில்லை. கோவா மிஷினுக்கு
இப்போது ஆர்டர்கள் அதிகமாகிவிட்டதால் எங்களுக்கு முன்பிருந்த அளவுக்கு இப்போது மரியாதை
இல்லை. வியாபாரத்தில் எங்களுக்குப் போட்டியாய் இருந்தவர்களும் கோவா வலையைக் கொண்டு
வந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
கண்ணன் (அடையார் ஆர்.எஸ்.எஸ்.) மீன்பிடிக்கும்
விசைப்படகு ஒன்றை வாங்க விரும்பினான். இந்தக் கண்ணனும் நானும்தான் முன்பே விவேகானந்தர்
நினைவாலயத்தின் புத்தகத்தை வெற்றிகரமாக விற்பனை செய்திருந்தோம். நானும் கண்ணனும் ராஜேந்திரனும்
கூட்டாளிகளாகச் சேர்ந்து ஒரு மீன்பிடிப் படகை வாங்கினோம். படகு வாங்குவதில் நான் ராஜேந்திரனை
நம்பியே இறங்கினேன். வாங்கின தொகைக்கு மேல் இந்தப் படகு எங்களுக்குச் செலவு வைத்தது.
எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதைச் சரியாகக் கணிக்க முடியாததால் எங்களுக்குள் சச்சரவு
ஏற்பட்டது. மிகுந்த பிரயாசைக்குப் பிறகு படகு தயாரானது. படகிற்கு ராஜேந்திரன் விருப்பப்படி
‘அஸ்வத்தாமா
என்று பெயரிடப்பட்டது. என்னுடைய விருப்பப்படி
படகின் பின்பக்கம் கடற்கொள்ளைக்காரர்களின் சின்னம்போல் குறுக்கே இரண்டு வாட்களும் இடையே
ஒரு மண்டை ஓடும் வரையப்பட்டன. அப்போது சென்னை ராயபுரத்திலிருந்த படகுகள் எல்லாம் மீன்
பிடிப்பதற்காக ஆந்திராவுக்குப் பயணப்பட்டன. நாங்களும் போவதென்று முடிவு செய்தோம்.
இதற்கிடையே நான் என்னுடைய இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு
அடையாரிலிருந்து பெசன்ட் நகருக்கு வந்துவிட்டேன். பெசன்ட் நகரில் ராகவன் என்ற நண்பனுடைய
ப்ளாட்டில் குடியேறினேன். இந்த வீட்டில் நான் இரண்டு வருடங்கள் இருந்தேன். ராகவன் விஷ்ணுவுடைய
அண்ணன், ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தான். கடற்கரை ஓரமாக இருந்த இவனுடைய
வீடு ஆர்.எஸ்.எஸ். வேலைகளுக்குப் பயன்பட்டது.
ராகவன் பிரம்மச்சாரிக்கட்டை. கொடை வள்ளல். இந்த
வியாபார உலகத்தில் இவரைப் போன்றவர்கள் அபூர்வம். ராகவனுடைய வீட்டுக்குப் பக்கத்தில்
ஒரு உடுப்பி ஓட்டல் இருந்தது. உடுப்பி ஓட்டலில் ஏதாவது தொழிலாளிக்கு வேலை போய்விட்டால்
அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. ராகவனை நம்பி வரலாம். ராகவன் வீட்டில் அவர்கள் தங்கிக்
கொள்ளலாம். இருப்பதைப் பகிர்ந்து சாப்பிடலாம். இருக்கிற, அதாவது ராகவனிடம் இருக்கிற
காசையும் சிகரெட்டுக்கோ, சினிமாவுக்கோ பகிர்ந்து கொள்ளலாம். எந்தப் பிரச்சினையுமில்லை.
மாதக் கடைசியில் மட்டும் பற்றாக்குறை வரும்போது ராகவனுக்குக் கோபம் வரும். சத்தம் போடுவான்.
அதுவும் கொஞ்ச நேரத்திற்குத்தான். பிறகு இப்படிச் சத்தம் போட்டுவிட்டோமே என்ற வருத்தத்தில்
வட்டிக்குக்கடன் வாங்கி எல்லோரையும் சினிமாவுக்குக் கூட்டிப்போவான். நான் இங்கே வந்தபோது
இந்த ரீதியில் இரண்டு வாலிபர்கள் இங்கேயிருந்தார்கள்…
பெசன்ட் நகரிலிருந்து ஒருநாள் சைதாப்பேட்டைக்கு
பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தேன். பஸ்ஸில் வந்த ஒரு காங்கிரஸ் நண்பனைக் கலாட்டா செய்து
கொண்டிருந்தேன். அவன் தமாஷாக பஸ்ஸில் இருந்தவர்களைப் பார்த்து, ‘ஐயா நீங்களே பாருங்களையா
என்று நீதி கேட்டான். பின் சீட்டில் இருந்த ஒருவன் என்னோடு சேர்ந்து
அவனைக் கேலி செய்தான். நான் என் ஸீட்டை விட்டு எழுந்து பின் சீட்டுக்காரனுக்குக் கை
கொடுத்து ‘வெல்கம்
என்றேன். இரண்டு தினங்களுக்குப் பிறகு இந்தப்
பின் சீட்டுக்காரனை நண்பனொருவன் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு அழைத்து வந்து எனக்கு அறிமுகம்
செய்தான். நாங்கள் ஏற்கெனவே பஸ் பிரயாணத்தில் சந்தித்து விட்டோமென்று கூறினேன்.
நங்கநல்லூரிலிருந்து புதிதாக பெசன்ட் நகருக்குக்
குடிவந்துள்ள அவன் பெயர் ரமணன் (இன்று இசைக்கவி ரமணன்) என்று தெரிந்து கொண்டேன். ஆர்.எஸ்.எஸ்.
கூட்டங்களில் விளையாட்டுகள் முடிந்த பிறகு எல்லோரும் சுற்றி உட்கார்ந்துகொண்டு உரையாடுவோம்.
அன்று ரமணனைப் பேசச் சொன்னபோது, “எனக்குப் பேசவராது. ஒரு கவிதை சொல்கிறேன்
என்றான். நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இருட்டில் ஒருவரையொருவர்
சரியாகப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. ‘வீசும் ஒளிவிழிப்பார்வையில்
என்று துவங்கிய கவிதை எனக்கு அதிர்ச்சி வைத்தியமாயிற்று. சில நிமிடங்களில்
கவிதை முடிந்தாலும் என்னால் எதுவும் செய்ய முடியாமல் செயலிழந்து போனேன். அந்த வார்த்தைகளிலிருந்து
ஏதோ ஒரு சக்தி புறப்பட்டு என் நரம்புகளில் பின்னிக் கொண்டது. நான் அதுவரை அனுபவித்திராத
சில உணர்வுகளை அப்போது அனுபவித்தேன். கூட்டம் முடிந்தவுடன் ரமணன் என் பக்கத்தில் இருந்தான்.
யாரோ ஒரு பையன் ரமணனிடம் என்னைக் காட்டி, “ஜீயும், ஒரு கவிஞர்தான்
என்றான். நான் வெட்கத்தில் தலையைக் குனிந்துகொண்டேன்.
ரமணனை சந்தித்தவுடனே எனக்கு மற்ற விஷயங்களிலிருந்த
பிடிப்பு விலக ஆரம்பித்தது. மணிக்கணக்கில் ரமணன் சொல்வதை சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருப்பேன்.
இன்னொருவர் சொல்வதை நான் உன்னிப்பாகக் கவனித்தல் என்பது முதன்முறையாக நிகழ்ந்தது. ரமணனுடைய
இசைத் திறன், மொழி வளம், கற்பனைப் பெருக்கு இவற்றில் கட்டுண்டு வேறு சிந்தனைகளை நான்
அகற்ற விரும்பினேன். புதியதொரு பொன்னுலகத்தில் நான் அடியெடுத்து வைத்தேன்.
பெசன்ட் நகரின் கடற்கரையும், சவுக்குத் தோப்பும்
எங்கள் வாசஸ்தலங்களாயின. நேரம் போவது தெரியாமல் வெயிலைப் பற்றிக் கவலைப்படாமல் நாங்கள்
உலாவருவோம். பெரும்பாலும் ரமணன்தான் பேசுவான், நான் இடையிடையே. கௌரிசங்கர் என்ற இன்னொரு
நண்பனும் கலந்து கொள்வான்.
திருவான்மியூர் கலாஷேத்திராவில் ஒரு ஆசிரியைப்
பயிற்சிப் பள்ளி உள்ளது. அங்கே ‘பாரதி யார்?
என்ற தலைப்பில்
பேசும்படி ரமணனை அழைத்திருந்தார்கள். அன்று ரமணன் பேசிய பேச்சை நான்தான் எழுதிக் கொடுத்தேன்.
சௌகரியமான முறையில் மேற்கோள்களைத் திரட்டி, என்னுடைய அன்றைய அரசியல் கொள்கைக்கு ஏற்றவாறு
அந்த உரையை அமைத்திருந்தேன். கிட்டத்தட்ட பாரதியார் ஹிந்துராஷ்டிரத்தை ஆதரித்தார் என்ற
தொனியில் அது இருந்தது.
ரமணன் பேசும்போது அங்கிருந்த மாணவிகளுடன் நானும்
கௌரியும் உட்கார்ந்திருந்தோம். அவன் விவேகானந்தரைப் பற்றிக் குறிப்பிட்டபோது அங்கிருந்த
கிறித்துவ கன்யாஸ்திரிகள் கண் கலங்கியதை நான் பார்த்தேன். எனக்கு அது நம்பமுடியாத காட்சியாக
இருந்தது. நடுவில் சந்தேகம் வந்ததும் ரமணன் அங்கிருந்தபடியே எங்களிடம் கேட்டுத் தெரிந்து
கொண்டான். ஒரு விஷயம் தனக்குத் தெரியவில்லை என்பதை எப்படி ஒருவன் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள
முடியும் என்பது எனக்கு அதிசயமாக இருந்தது.
நானும் ரமணனும் அவன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தோம்.
நன்றாக ஆரோக்கியமாக இருந்தவனுக்கு என் கண் முன்னே ஜுரம் வந்துவிட்டது. எதனால் இப்படி
என்று நான் கேட்டதற்கு “அம்மா வேலைக்காரிய திட்றா
என்றான். ஒருவர்
இன்னொருவரைத் திட்டுவதனால், மூன்றாமவருக்கு ஜுரம் வருகிறது என்பது எனக்குப் புதுமையாயிருந்தது.
என்னை அறியாமல் எனக்குள் ஒரு ரசவாதம் அப்போது
நடந்து கொண்டிருந்தது. இதற்குக் காரணம் ரமணன் ஏற்படுத்திய தாக்கம்தான் என்பதை நான்
முதலில் உணரவில்லை. போகப்போக அது புலப்பட்டது. ஒருநாள் மாலைப்பொழுது பெசன்ட் நகர் சுடுகாட்டை
ஒட்டியுள்ள வீதியில் நானும் ரமணனும் பேசிக்கொண்டிருந்தோம். தன்னுடைய நங்கநல்லூர் வாசத்தைப்
பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தவன், அங்கே உள்ள நண்பர்களைப் பற்றி விவரித்துக்கொண்டே வந்தவன்,
காளியைப் பற்றிய கவிதை ஒன்றைச் சொல்லிவிட்டு அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து நான் மீண்டு
வருவதற்குள் “பராசக்திதான் இதைக் கொடுத்தாள்
என்று சொல்லி
முடித்தான்.
இருட்டிவிட்டது என்பதாலும், அப்போதே சென்ட்ரலுக்குப்
போய் நான் ரயிலைப் பிடிக்க வேண்டும் என்பதாலும் அவனிடம் விடைபெற்றேன். எங்களுடைய மீன்பிடிப்படகு
அஸ்வத்தாமாவை ஆந்திராவில் இருக்கும் நிஜாம் பட்டினத்திற்குக் கடல்வழியாக அனுப்பியிருந்தோம்.
அதோடு சேர்ந்து கொள்வதற்காக ரயில் பயணம். ஆனால் விஷயம் அங்கேதான் தொடங்கியது.
ராகவன் வீட்டுக்கு வந்து பெட்டியை எடுத்துக்கொண்டு
ஆட்டோவில் ஏறி சென்ட்ரலுக்கு வந்தேன். ரயிலில் ஏறினேன். கண்ணனும் என்னோடு சேர்ந்துகொண்டான்.
பெசன்ட் நகர் சுடுகாட்டில் தொடங்கி ரயில் பயணம்
வரை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஒரு கேள்வி என் மூளையில் தொத்திக்கொண்டது. ‘ரமணன்
பராசக்தியைப் பார்த்தானா, பராசக்திதான் கவிதையைக் கொடுத்தாளா, ஜிப்பாவும் ஜீன்ஸ் பேன்ட்டும்
போட்டுக்கொண்டு தவறாமல் வெற்றிலையையும், புகையிலையையும் வாயில் குதப்புகிறவனால் பராசக்தியைப்
பார்க்க முடியுமா?
இப்படியான கேள்விகள் என் சிந்தனைப் போக்கை
கட்டிப்போட்டுவிட்டன. இன்றுவரை எனக்குப் புரியாத ஒரு காரணத்தால் அப்போது எனக்கு அதுவே
மிக முக்கியமான விஷயமாகப்பட்டது.
உடன் வந்த கண்ணன் எவ்வளவோ பேச்சு கொடுத்தாலும்
என் மனம் அதில் ஒட்டவில்லை. ஒரு கட்டத்தில் ஏதோ சரியில்லை என்பதை யூகித்துக்கொண்ட கண்ணன்
“என்ன யோசிக்கிற
என்றான். கண்ணனைத் தவிர்ப்பதற்காக “கவிதை எழுதப்போகிறேன் என்றேன். சொல்லிவிட்டேன் என்பதற்காக பேப்பரையும் பேனாவையும் கையில்
எடுத்தேன். கண்ணன் அங்கிருந்து விலகி மேல்-பர்த்தில் படுத்துக்கொண்டான்.
கவிதை எழுதி நமக்கு அதிகப் பழக்கம் இல்லை. ஒன்றிரண்டு
முயற்சிகள் செய்ததுண்டு. அதற்காகப் பாராட்டப்பட்டதும் உண்டு. ஆனால் அதற்கெல்லாம் காதல்,
கந்தசஷ்டி விரதம் என்று ஏதோ ஒரு பின்னணி இருந்தது. இப்போது இரவின் நிசப்தத்தில் ஓடுகிற
ரயிலும் ஓடாமல் நின்றுவிட்ட என் புத்தியும்தான் துணை. கவிதை என்பது கடவுள் உலகத்தின்
திறவுகோல் என்பது போலவும், அது ரமணனின் கைவசம் இருப்பது போலவும், முயன்றால் நாமும்
அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது போலவும் ஒரு தீர்வு அரும்பியது. தெளிவு தெரிந்தது.
வெகுநேரம் மனதில் வெற்றிடத்தை உணர்ந்தேன். எல்லா
அசைவும் ஆட்டமும் வெளியில்தான்! உள்ளே இருக்கும் மைதானத்தில் ஓட்டமில்லை. அந்த நள்ளிரவுப்
பொழுதைப் புறந்தள்ளிக்கொண்டு புறப்பட்டது கவிதை.
பித்தெடுத்தவன் காதலி.தொடரும்…
Leave a Reply