Posted on Leave a comment

தமிழக பாஜக – திடீர் சோதனை | ஓகை நடராஜன்

பல நாட்களாக மருத்துவச் சோதனை ஏதும் செய்யாமல் ஐம்பதுகளில்
இருக்கும் ஒரு மனிதன், திடீரென்று ஒரு பொது மருத்துவச் சோதனை செய்யும்பொழுது, அனைத்து
விதமான வியாதிகளும் ஆரம்பக் கட்டத்திலோ அல்லது கொஞ்சம் வளர்ந்தோ அல்லது மிகத் தீவிரமாகவோ
இருப்பதாக மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவரும். அந்த மனிதருக்கு அந்தந்த வியாதிகள்
ஏற்கெனவே தன் இருப்பைச் சில காரணிகளால் காட்டிக்கொண்டிருந்திருக்கும். ஆனால் அவற்றை
அவர் அலட்சியம் செய்திருப்பார். சில வியாதிகள் எந்த அறிகுறியும் காட்டாமல் இருந்திருக்கும்.
அவை பரிசோதனையின்போது மட்டுமே வெளியே தெரியவரும்.
இவ்வாறான ஒரு திடீர் பரிசோதனையால் மிகப் பாதகமான பல முடிவுகளை
ஒரே நேரத்தில் சந்திக்க நேர்ந்த அந்த மனிதரின் மனநிலையில்தான் தமிழக பாஜக இருக்கிறது.
அல்லது தமிழக பாஜகவின் ஆத்மார்த்தமான, உள்ளார்ந்த, பரிபூரணமான நேர்மையான தொண்டர்கள்
அந்த மனநிலையில் இருக்கிறார்கள். அந்தத் திடீர்ப் பரிசோதனை இப்பொழுது நடந்து முடிந்த
2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். பெரும்பான்மையான தமிழக பாஜக தொண்டர்கள்
மிகவும் சோர்ந்து போய் இருக்கிறார்கள். அவர்களைத் தேற்றுவதற்கான தலைவர்களும் சோர்ந்து
போய் இருக்கிறார்கள். இந்தத் தோல்வியை எதிர்பார்க்கவில்லை என்றாலும்கூட, இதை இயல்பாக
எடுத்துக் கொண்டிருக்க கூடிய இயல்பு நிலையை அவர்களுக்கு ஆண்டவன் தரவில்லை. ஏனென்றால்
பெறப்பட்ட தோல்வியின் அளவு, அயர்ச்சி, தளர்ச்சி இவற்றின் உச்ச விளிம்புகளைத் தாண்டிச்
சென்று விட்டிருக்கிறது. பலமான பல தொகுதிகளிலும்கூட, இருக்கும் பலத்தையும் இழந்து நிற்பது
எந்த ஒரு தொண்டனுக்கும் மிகச்சோர்வை தருகிற விஷயம். பாஜக தரப்பில் சொல்லப்படுகிற காரணங்களாக
இவற்றைச் சொல்லலாம்: தமிழகத்தில் பாஜகவுக்குச் சரியான கட்டமைப்பு இல்லை, மேலும் வாக்குச்சாவடி
அளவிலான உழைப்பு என்கிற அளவில் தமிழக பாஜக செயல்படவில்லை. இவை மட்டுமே. இந்த உண்மையை
பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆனாலும் கூட அவர்கள் உழைக்காமல்
இல்லை, கூட்டணி அமைக்காமல் இல்லை, முயலாமலும் இல்லை. ஆனால் அதற்கான பலன் ஏதும் கொஞ்சம்
கூட இல்லவே இல்லை என்கின்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தமிழக அரசியலில் ஒரு மூலைக்கு அவர்கள் எல்லோரும் தள்ளப்பட்டிருந்தாலும்,
அந்த மூலைக்கும்கூட வெளியே இருப்பதாக பாஜக தொண்டர்கள் நினைக்கும் அளவிற்குத் தோல்வியின்
வீரியமும் விரிவும் விஸ்வரூபம் எடுக்கின்றன. ஆனால் இந்த மருத்துவப் பரிசோதனை ஒப்பீட்டை
இந்த அளவில் நிறுத்துவோம். ஏனென்றால் அந்த வியாதியஸ்தனைப் போலல்லாமல் என்றென்றும் தேயாமல்
இருக்கப்போகிற ஒரு கட்சி பாஜக. இந்தத் தேர்தல் முடிவுகளைத் தேர்தலுக்குப் பின்னான சில
வெளிப்பாடுகளை வைத்துச் சோதிப்போமானால், கிடைக்கும் காரணங்களை, தெரிந்த காரணங்கள்,
தெரிந்தும் தெரியாமல் இருக்கும் காரணங்கள், தெரியாத காரணங்கள் என்ற மூன்று பிரிவுகளில்
அடக்கலாம்.
தெரிந்த காரணங்களைப் பார்ப்போம். தெரிந்த காரணங்களுக்கான
தீர்வுகள் தெரிந்தே இருக்கின்றன. இவற்றில் முதன்மையானது, பாரதிய ஜனதா கட்சித் தரப்பில்
இருந்து சொல்லப்படுகிற கட்டமைப்பு வசதியை இன்னும் பலப்படுத்த வேண்டும், உறுப்பினர்
எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும், வாக்குச்சாவடி அளவிலான உழைப்புப் பணிகளை முற்படுத்த
வேண்டும் போன்றவை. இவை சர்வ நிச்சயமாகத் தெரிந்த காரணங்கள்தான். இதில் 2014 பாராளுமன்ற
தேர்தலுக்குப் பிறகும், 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகும், பாரதிய ஜனதா கட்சி முனைப்புக்காட்டி
இந்தக் குறைகளைச் சரி செய்வதற்கான முயற்சிகளை, போதிய அளவில் இல்லாவிட்டாலும், செய்துதான்
இருக்கிறார்கள். ஆகையால் இந்த ஒரு காரணம் மட்டும் தோல்விக்கான காரணமாக இருக்க முடியாது.
சென்ற தேர்தல்களைவிடச் சற்று அதிகமாக வாக்கு வந்திருந்தால், அந்த அதிகமான வாக்குகளுக்கு
வேண்டுமானால் இந்த அதிகமான உழைப்பு காரணமாக இருந்திருக்கும். ஆனால் அது நிகழாமல் அடியோடு
வேறு விதமாய் நிகழ்ந்திருக்கிறது. ஆகையால் இந்தக் காரணத்தை நிராகரிக்கலாம். இன்னொரு
தெரிந்த காரணம் என்னவென்றால் பாஜகவுக்கு ஊடக பலம் இல்லை, பாஜக தரப்பில் பேசுவதற்கு
ஊடகங்கள் இல்லை என்கிற ஒரு காரணம். இது காரணம்தான். ஆனால் நாடெங்கிலும் எல்லா மாநிலங்களிலும்
கூட பாஜகவுக்கு என்று ஊடகங்கள் இல்லை. அந்த வகையில் அதற்கென்று தனியான ஊடகம் அல்லது
ஊடகங்கள் தமிழகத்துக்குத் தேவைப்படுவது என்பது தமிழகச் சூழலில், சூழலுக்கான அதிகப்படியான
ஒரு தேவை என்ற அளவில் மட்டுமே அதை எடுக்க முடியும். பொதுவாகச் சொல்லப்படுகிற தொண்டர்களின்
எண்ணிக்கை குறைவாக இருப்பது, பண பலம் குறைவாக இருப்பது, உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக
இருப்பது போன்ற காரணிகள், பாஜக தோன்றிய காலத்திலிருந்து தமிழகத்தில் இருக்கும் குறைகள்தான்.
இந்தக் குறைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே இருக்கின்றனவே தவிர, கூடிப் போகவில்லை.
ஆகையால் இந்தப் பொத்தம் பொதுவான காரணங்களைத் தோல்விக்கான காரணமாக எடுப்பது என்பது இயலாது.
தெரிந்தும் தெரியாமல் இருக்கும் காரணங்கள். இவற்றில் முதன்மையாகச்
சொல்லக்கூடியது என்னவென்றால் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் மாற்று மதங்களின் தீவிரமான
செயல்பாடுகள். இந்தச் செயல்பாடுகளை அனைவரும் அறிந்திருந்தாலும் இதன் அறியப்படாத ஒரு
அம்சம் என்னவென்றால், இந்தச் செயல்பாட்டுக்கான ஒட்டுமொத்த பலன் திராவிட முன்னேற்றக்
கழகக் கூட்டணிக்குச் சென்றிருப்பதுதான். தமிழ்த் தேசியம் பேசும் சீமான், திருமுருகன்
காந்தி, திருமாவளவன், வைகோ போன்ற அனைவரும், இஸ்லாமிய கிருத்துவ அமைப்புகளைச் சேர்ந்த
மதப் போதகர்களும், பம்மாத்துச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இவையொத்த அரசியல்காரர்களும்
சேர்ந்து ஒருமையாக பாஜகவை எதிர்த்து, எதிர்ப்புச் சிதறாமல் மொத்தமாக ஓர் இடத்திற்குச்
சென்றிருப்பது எதிர்பார்க்கக் கூடியது இல்லை. இதற்கான முயற்சியை அவர்கள் ஒவ்வொருவராக
சேர்ந்து எடுத்தார்களா என்று தெரியவில்லை ஆனால் இவர்கள் அனைவரின் முயற்சியையும் ஒன்று
சேர்க்கும் ஒரு வேலையை வாக்காளர்கள் செய்துவிட்டார்கள். அறிந்த பிரச்சினையின் அறியாத
பக்கம், நேரடியாகத் தோல்விக்கான உந்துவிசையாகச் செயல்பட்டிருக்கிறது. தெரிந்த காரணங்களுக்கு
எப்படித் தீர்வுகள் தெரிந்தே இருக்கின்றனவோ அதேபோலத் தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்ற
இந்தக் காரணங்களுக்குத் தீர்வுகள் தெரிந்தும் தெரியாமலும்தான் இருக்கின்றன. இந்த இடத்தில்
ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். அது, இந்திய இறையாண்மைக்கும், இந்திய கலாசாரத்துக்கும்
எதிராகச் செய்யப்படும் பிரசாரங்களை, இருக்கும் சட்டங்களை வைத்தே, மாநில, மத்திய அரசாங்கங்கள்,
குறிப்பாக மத்திய அரசாங்கம் செய்யவில்லை என்பதைத்தான்.
தெரியாத காரணங்கள். தெரியாத காரணங்களிலே முதன்மையாக இருப்பது
ஒட்டுமொத்த ஊடகக் கூட்டணி. இது பட்டவர்த்தனமாகத் தெரிந்த விஷயம்தானே, ஏன் இதைத் தெரியாத
காரணம் என்று கூற வேண்டும் என்ற ஒரு கேள்வி எழலாம். ஏன் இதைத் தெரியாத காரணம் என்று
கூற வேண்டும் என்றால், இந்த ஒட்டுமொத்த ஊடக கூட்டணிச் செயல்பாடு, மக்கள் மனதை இவர்கள்
எதிர்பார்த்ததற்கு மேலாகவே கரைத்துக் கனிய வைத்திருக்கிறது என்பது, இதைத் தெரியாத காரணியாக
மாற்றியிருக்கிறது. மேலும் 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய ஊடகங்களில்,
பெரும்பான்மையான ஊடகங்கள் மோடிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் ஓரளவு எதிராகவே இருந்தன.
இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியை மோடி அவர்களும் பாரதிய ஜனதா கட்சியும் பெற்றிருந்தார்கள்.
ஆனால் இங்கே தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி செய்கின்ற நல்ல காரியங்களையும் கூட தமிழகத்துக்குச்
செய்கிற இழப்பாகத் தங்களுடைய ஒளியைப் பாய்ச்சி, மக்கள் முன் நிறுத்தி, கண் கூசும் அந்த
ஒளியில் மக்கள் வேறு எதையும் பார்க்காமல் செய்த ஒரு வல்லமையை ஊடகக் கூட்டணி நிகழ்த்திக்
காட்டி இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகப் பிரசாரமும் அல்லது தமிழ்த் தேசிய பிரசாரமும்
தம்முள் பல ஓட்டைகளைக் கொண்டிருப்பவை. அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது
காங்கிரஸ் அல்லது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு, நிரூபிக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகள்
உள்ளன. இவர்களுக்கு என்று சொல்மதிப்பு என்பது பொதுமக்களிடம் இருப்பதில்லை. இருந்ததில்லை.
ஆனால் இந்தச் சொல்மதிப்பை இவர்களுக்கு ஒரு மாயம் போல ஏற்படுத்தி, அதை பாரதிய ஜனதா கட்சிக்கு
எதிராக ஜொலிக்கச் செய்திருக்கிறார்கள். இந்த ஊடகக் கூட்டணி தங்களுடைய பேரொளியை மக்கள்
முன் தொடர்ந்து அயராமல் பாய்ச்சி அவர்கள் கண்களைக் கூசச் செய்தது குருடாகச் செய்திருக்கிறார்கள்.
இந்தக் குருடு நிரந்தரமானதோ என பாஜக தொண்டர்கள் திகைக்கிறார்கள்.
இதை ஏன் இவ்வளவு அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்றால் 1967ம்
ஆண்டுக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செலுத்துகின்ற தமிழ்நாட்டில்
ஒவ்வொரு தேர்தல் முடிவும் மக்கள் ஏதோ ஒரு முடிவை நோக்கிப் பொதுப்புத்தியாகச் சிந்தித்துச்
செயல்படுவதைக் காட்டுகிறது. அந்த வகையில் இந்தத் தேர்தலில் மக்களின் பொதுப் புத்தியை
அதிவிரைவாக, ஒரு குவியமாக, பாஜக எதிர்ப்பு என்கின்ற உந்து சக்தியால் திமுக ஆதரவு என்ற
புள்ளியை நோக்கி, எந்தவிதமான ஐயத்திற்கும் இடமில்லாமல் நகர்த்திச் சென்று சேர்த்துவிட்டு
இருக்கிறது. இந்தக் காரணத்துக்கு என்னதான் தீர்வாக இருக்கமுடியும்? உடனடியாக ஏதும்
தெரிவதாக இல்லை. ஏனென்றால் இந்த ஊடகங்கள் ஏதோ ஒரு விலைக்காக விலை போயிருக்கின்றன. ஊழியம்
செய்கின்றன. அந்த விலையை பாரதிய ஜனதா கட்சியால் கொடுக்க முடியாது என்பது நிதர்சனம்.
அதாவது அந்த விலை, இந்திய இறையாண்மைக்கும் இந்தியப் பண்பாட்டுக்கும் இந்து மதத்துக்கும்
கொடுக்கப்படுகிற விலை. அதனால்தான் பாஜகவால் கொடுக்க முடியாத நிலை என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்த விலையை விலையில்லாமல் செய்வதே தீர்வாக இருக்கலாம். ஆனால் எப்படி என்பதே கேள்வியாக
இருக்கிறது.
இதை ஒரு பாரதிய ஜனதா கட்சிக்காரனின் அலசல் என்று எண்ண வேண்டியதில்லை.
தமிழ்நாட்டின் நல்ல எதிர்காலத்தை உத்தேசிக்கும் எவருடைய எண்ண ஓட்டமாக இதுவே இருக்கக்கூடும்.

Leave a Reply