Posted on Leave a comment

வர்ணம், சாதி, தீண்டாமை இந்தியாவில் மட்டுமா? (புத்தக அறிமுகம்) | சுப்பு

வர்ணம், சாதி, தீண்டாமை இந்தியாவில் மட்டுமா?, ச.ஆரோக்கியசாமி,
பாபா பதிப்பகம், 3473 – 1, தெற்கு 2ம் வீதி, புதுக்கோட்டை – 622001, விலை: ரூ.140.00

ஒரு கொள்கை, ஒரு சித்தாந்தம் ஆகியவற்றைத் தமக்குரியதாக வரித்துக்கொண்டு
அதைப் பொதுமக்களிடம் கொண்டுசெல்வது என்பது ஜனநாயக வழிமுறை. இயக்கங்களைப் பற்றிய ரூல்
புக் இதைத்தான் சொல்கிறது, ஆனால் திராவிட இயக்கங்களின் செயல்பாடு இப்படியிருந்ததில்லை.
திராவிடக் கருத்தியல் என்பது தமிழ்ச் சமூகத்தில் வெகுவாகப்
பரவிவிட்டதாலும் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சொற்றொடர்கள் மாற்றுத் தரப்பிலும்
புழங்குவதாலும் ஆட்சியதிகாரம், கல்வி நிலையங்கள், ஊடகங்கள் எல்லாமே அந்தப் புகைமூட்டத்தில்
சிறைபட்டிருப்பதாலும் எது உண்மை, எது மாயை என்று பிரித்தறிய முடியாத சூழல் இங்கு நிலவுகிறது.
இந்த இருட்டுப் பிரதேசத்தில் ஒளியேற்றுவதற்கான முயற்சியைப்
பலர் செய்திருக்கிறார்கள். தோழர் பி.ராமமூர்த்தி எழுதிய ‘ஆரிய மாயையா திராவிட மாயையா
– விடுதலைப் போரில் தமிழகம்
இதில் முக்கியமான ஒன்று, இதே வரிசையில் இப்போது வந்திருக்கிறது
ச.ஆரோக்கியசாமியின் புத்தகம்.
கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, இந்தி எதிர்ப்பு, இந்தியா
எதிர்ப்பு என்கிற போர்வையில் பிராமண எதிர்ப்பை முன்வைத்த ஈ.வெ.ரா மலேசியாவில் சுற்றுப்பயணம்
செய்தார். அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
“கடவுள் இல்லை என்று சொல்கிற நீங்கள் இந்து சமயக் கடவுள்களை
மட்டும் விமர்சிப்பது நியாயமா?
இதற்கு ஈ.வெ.ரா கொடுத்த பதில் அவ்வளவு கௌரவமாக இல்லை.
“இந்துக் கடவுள்கள் மட்டும்தான் வைப்பாட்டி வைத்திருக்கிறார்கள்.
மற்ற மதங்களில் அப்படியில்லை.
இதற்குப் போட்டியாக அகர வரிசையில் ஒவ்வொரு மதத்தையும் எடுத்துக்கொண்டு
முறைப்படியாக ஒரு வைப்பாட்டி பட்டியல் தயாரித்துவிட்டு அந்தத் தரத்தின் அடிப்படையில்
மதங்களை மதிப்பீடு செய்யலாம். நமக்கு அது உசிதமாகப்படவில்லை.
அதற்குரிய தகுதியோடு அந்தப் பதிலை ஒதுக்கிவிடுகிறோம், ஆனால்
ஈ.வெ.ரா சம்பந்தப்பட்ட எல்லாக் கேள்வி பதில்களையும் அப்படிச் செய்துவிட முடியாது. அவரால்
உருவாக்கப்பட்ட அல்லது உருவேற்றப்பட்ட சில பிம்பங்கள் தமிழ்ச் சமூகத்தில் நிலைபெற்றுவிட்டன.
அவற்றை எதிர்கொள்வதற்கு விரிவான பதிவுகள், உரைகள் அல்லது புத்தகங்கள் அவசியமாகின்றன.
அத்தகைய அவசியமான பணியைச் செய்திருக்கிறார் ச.ஆரோக்கியசாமி.
வர்ணம், சாதி, தீண்டாமை ஆகியவை இந்தியாவில் மட்டும்தான் இருக்கின்றன
என்பது திராவிட இயக்கத்தால் நூறாண்டுகளுக்கு மேலாகச் சொல்லப்பட்டு வரும் பொய். இதை
மறுத்து எழுதியிருக்கிறார் ஆரோக்கியசாமி.
இனி வருவது ச.ஆரோக்கியசாமியின் கருத்து.
வருணங்கள் என்பது வேலைப் பிரிவினை அடிப்படையில் உருவான சமூகக் கட்டமைப்பு. இது
உலகம் முழுவதுக்கும் உள்ள பொதுவான அம்சமாகும். அரசர்கள், மதகுருமார்கள், வணிகர்கள்,
உழைப்பவர்கள் அல்லது அடிமைகள் என்பதுதான் அந்தப் பிரிவு. இந்தியாவில் இது பிராமணர்,
சத்திரியர், வைசிகர், சூத்திரர் என்று அடையாளப்படுத்தப்பட்டது. கிரேக்கம், பாபிலோனியா,
ரோம், எகிப்து, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ருசியா, சீனா, ஜெர்மனி என்று எங்கெங்கெல்லாம்
அரசர்கள் ஆட்சி நடைபெற்றதோ அங்கெங்கல்லாம் இந்த நான்கு வர்ண வேலைப் பிரிவினைகள் இருந்தன.
இந்து மதம் போலவே புத்த மதமும், கிறித்துவ மதமும், முகமதிய மதமும் இந்த வேலைப்.
பிரிவினை முறையை ஆதரித்து அங்கீகரித்துள்ளன. உழைக்கும் மக்களை அடக்கிவைத்திருந்த அரசாட்சிக்கெதிராக
எந்த மதமும் போராட்டம் நடத்தியதாக சரித்திரச் சான்றுகள் இல்லை…
“அரசன், அடிமை இருவருமே இன்ப துன்பங்களை அனுபவிப்பதாக புத்தர் தெரிவித்தார் என்று டாக்டர்
அம்பேத்கர் எழுதிய புத்தகத்தில் இருக்கிறது. புத்தருடைய செல்வாக்கு இருந்த காலத்திலும்
அது செல்லுபடியான இடத்திலும் அரசர்களும், அடிமைகளும் இருந்திருக்கிறார்கள். தவிர தீண்டாமைக்கெதிராக
புத்தர் போராடியதாக எந்த ஆதாரமும் இல்லை.
பல நூற்றாண்டுகளாக கிறித்துவ மன்னர்கள் அனைவருமே நான்கு வர்ணங்களைப் பாதுகாத்து
வந்துள்ளனர். நபிகள் நாயகம் முஸ்லீம் மதத்தைப் பரப்பிய காலத்திலும் மற்ற நாட்டோடு போர்
புரிந்த காலத்திலும் அடிமை முறையும் தீண்டாமையும் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
முஸ்லீம் மதத்திலும் செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு அடைமொழி
வைத்து அடையாளப்படுத்துகிற பழக்கம் இருக்கிறது. இது உட்பிரிவுகளுக்கும் பொருந்தும்.
முஸ்லீம் மதத்தில் அறுபத்தி நாலு பிரிவு இருக்கிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அதை
ஆய்வுக்குட்படுத்தினால் செய்யும் தொழிலால் உருவான சாதிப் பெயர்களாக இருக்கின்றன. அங்கேயும்
சாதிய அடுக்குகள் உண்டு. உயர்வும் தாழ்வும் உண்டு. திருமண உறவு முறைகள் அந்தந்த சாதிக்குள்ளேயே
நடக்கின்றன.
இந்தியாவில் சூத்திரர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்தார்கள் என்றால்
அடிமை முறையில் நிலவிய நாடுகளில் கருப்பர்களை, நீக்ரோக்களைத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைத்தார்கள்.
இந்தியா முழுவதுமே தலித்துகளைத் தலைநிமிர்ந்து நடக்கவைத்தது யார்? கேரளாவில்,
கர்நாடகாவில், ஆந்திராவில், மராட்டியத்தில், பிகாரில் தலித்துகள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு
விதை விதைத்தவர் யார்? அங்கெல்லாம் பெரியார் போய் பிரசாரம் செய்தாரா. காந்திஜி அல்லவா
தலித்துகளைத் தலைநிமிர்ந்து நடக்க வைத்தார். கலப்பு மணம் என்றால் ஆணோ, பெண்ணோ இருவரில்
ஒருவர் ஹரிஜனாக இருந்தால் மட்டுமே அதை கலப்பு மணம் என்பேன் என்றார் காந்திஜி.
தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தைத் தயாரித்துச் சட்டமாக்கியது
காந்திய காங்கிரஸ் என்பதை நாம் மறக்கக்கூடாது.
என்கிறார் ச.ஆரோக்கியசாமி.
ஆரோக்கியசாமியின் வாதங்களைக் கிள்ளிக்கொடுத்திருக்கிறேன். அதை வாங்கிப் படித்து அள்ளிக்கொள்ள வேண்டியது வாசகர்களின் பொறுப்பு.
Leave a Reply