Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) – லாலா லஜ்பத் ராய் – பகுதி 2 | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

ஒற்றுமை மாநாடும் உரிமைகளின் தொடர்பும்

(லாலா லஜ்பத் ராய்)
டெல்லி ஒற்றுமை மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களின்போது, என்னை ஒரு விஷயம் அதிகம் பாதித்தது. அது என்னவென்றால், நல்ல திறனுள்ள, நாட்டுப்பற்றுள்ள இளம் முகமதியர்கள், அதே போல் சில ஹிந்துக்கள், ‘அறுதியான, முழு உரிமைகள் (absolute rights) என்ற கருத்தாக்கத்தின் மீது பெரும் பிடிப்புக்கொண்டிருந்தார்கள். பசுக்களைக் கொல்வதற்கான உரிமை முகமதியர்களுக்கு இருந்தது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வந்தது. அந்த உரிமையை அவர்கள் தானே முன்வந்து தியாகம் செய்தால்தான் குறைக்க இயலும். இந்த முழு உரிமைகளின் அடிப்படையில்தான், காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டிருந்த திறமையான, தன்னைத் தியாகம் செய்த பல இளைஞர்கள் வரைவுத் தீர்மானங்களைத் தயார் செய்தனர். நான் பலமுறை சுட்டிக்காட்டியபடி, முழு உரிமைகள் பற்றிய கருத்து தவறான ஒன்றாகும், சட்டத்தில் அதற்கான அடிப்படை ஏதுமில்லை. தலைவரான பண்டித மோதிலால் நேருவும் இதே பார்வையைக் கொண்டிருந்து அதை மிகச் சிரமப்பட்டு விளக்கினார். இருப்பினும், விளக்கங்கள் மிகவும் திருப்திகரமாக இருப்பதாக எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. பலரும் இதே கருத்தாக்கத்தைக் கொண்டிருந்ததால், அதைப் பற்றி நீண்ட விளக்கம் ஒன்றை அளிக்க விரும்புகிறேன்.
எந்தவொரு தனிநபரிடமோ அல்லது நாட்டின் ஒரு பகுதியாக உள்ள எந்தவொரு சமூகத்திடமோ முழுமையான உரிமைகள் அளிக்கப்படவில்லை என்று நான் கூறுகிறேன். உரிமைகள் அந்தந்த நிலைமைகளைச் சார்ந்தே அமைந்திருக்கின்றன. முழுமையான உரிமைகளின் அடிப்படையில் அமைந்த எந்த ஒரு சமூகமும் இருபத்து நான்கு மணிநேரத்திற்குக் கூட ஒன்றாக இருக்க இயலாது. முழு உரிமைகள் என்பது தவறான கோட்பாடாகவும், நடைமுறையில் தீங்கு விளைவிப்பதாக இருப்பதால், அந்தக் கருத்தாக்கம் நீண்ட காலம் முன்பே உடைந்துவிட்டது. இந்தக் கட்டுரையைப் பெரும் சிந்தனையாளர்கள், மேற்கத்திய சட்ட நிபுணர்களின் மேற்கோள்களைக் கொண்டு நான் நிரப்ப விரும்பவில்லை. இந்தக் கருத்து என்னைப் பொருத்தவரை மிகவும் எளியதாக இருப்பதால் அதை விளக்க அதிகம் சிரமப்படத்தேவையில்லை என்று கருதுகிறேன். ஒரு உயிரினத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு அதன் உறுப்புகளாக உள்ளவற்றின் பரஸ்பர கடமைகளைச் சார்ந்ததாக உள்ளது. உயிரினத்தின் எந்த ஒரு பகுதிக்கும் முழுமையான உரிமைகள் இல்லை.
முதலாவதாக, ஒரு தனிநபரின் அனைத்து உரிமைகளும். மற்றவர்களின் சம உரிமைகளைச் சார்ந்தே உள்ளன. இதுவே ஒரு சமூகத்தின் பல்வேறு உறுப்பினர்களுக்கிடையேயான பரஸ்பர கடமைகளையும் பொறுப்புகளையும் உருவாக்குகிறது. நன்கு கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு சமூக உயிரினத்தில் காரணமில்லாமல் இன்னொருவருடைய சட்டபூர்வமான நலன்களுடன் மோதக்கூடிய செயலைச் செய்யும் உரிமை எவருக்கும் இல்லை. சொல்லப்போனால், நல்லெண்ணத்தையும் முன்னேற்றத்தையும் காண்பதற்கு, மிகவும் மேம்பட்ட உறுப்பினர்கள் சில நேரங்களில் தங்கள் நலன்களைப் பொதுநலனுக்காக, சமூகத்தின் மற்ற உறுப்பினர்களுக்காகத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஏழைகளைக் காப்பது, தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்களின், அதாவது விதவைகள், அனாதைகள், பார்வையிழந்தவர்கள், முடவர்கள், வயதானவர்கள், சிறுவர்கள் ஆகியோரின் நலத்தைப் பேணுவது என்ற அனைத்தும் இந்த வகையின் கீழ் வருகிறது.
யூரோப்பின் வரலாற்றில் மனித உரிமைகள் மீது மிகுந்த கவனம் செலுத்திய காலம் ஒன்று இருந்தது. அது பிரெஞ்சுப் புரட்சியின் காலம். தாமஸ் பெயினின் ‘மனித உரிமைகள் (Rights of Man) அந்தத் தலைமுறையின் மனநிலையின் ஒரு பொதுவான பிரதிபலிப்பு ஆகும். ஆனால், ஐம்பது வருடங்களுக்குள்ளாகவே அந்தக் கோட்பாடு முற்றிலும் தவறானதாக, தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டது. மாஜினியின் ‘மனிதர்களின் கடமைகள் (Duties of Man), பெயினின் ‘மனித உரிமைகள் நூலுக்கு முழுமையான, உறுதியான பதிலடியாக அமைந்தது. பிரெஞ்சுப் புரட்சி மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது. அதன் அரசியலமைப்பும் அதன் அடிப்படையிலேயே அமைந்தது. அமெரிக்க அரசியலமைப்பும் அதே முயற்சியைச் செய்கிறது. ஆனால் நடைமுறையில், இரண்டிலும் உரிமைகள் வரம்புகளுக்கு உட்பட்டவையாகவே உள்ளன.
உதாரணமாக, அந்த அரசியல் சட்டங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சுச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைகள் சுதந்திரம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். தங்களுடைய நாட்டின் நலன் என்று வரும்போது, பிரஞ்சு மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் இந்த உரிமைகள் மீது கைவைக்காமல் இருந்துவிடும் என்று யாராவது நினைக்க முடியுமா? முதலாம் உலகப்போரின்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். அரசியல் சட்டம் உத்தரவாதம் அளித்த அடிப்படை உரிமைகள் எப்படி மக்களிடமிருந்து ஏதாவது ஒரு சாக்கில் அரசின் நடவடிக்கைகள் மூலமோ அல்லது மாநில சட்டத்தின் மூலமோ விலக்கிக்கொள்ளப்படுவதைக் கண்கூடாக என்னால் பார்க்க முடிந்தது. தங்கள் விருப்பமில்லாமல், போரில் ஈடுபடவைப்பதைத் தவிர்க்கும் உரிமை எல்லோருக்கும் இருந்தது. ஆனால், இந்தப் போரின்போது, பல அரசுகள் இந்த உரிமையை நிராகரித்தன. தங்களது விருப்பத்திற்கு எதிராக மக்கள் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த உரிமை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மனச்சாட்சியுள்ளோர் எத்தகைய கடுமையான போராட்டங்களில் ஈடுபடவேண்டியிருந்தது, அதன் காரணமாக அவர்கள் எந்தவிதமான துன்பங்களைச் சந்திக்கவேண்டியிருந்தது என்பதை எல்லோரும் அறிவார்கள். ஒரு தனிமனிதர் அவர் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் சிந்திக்க முடியும், ஆனால் அந்த எண்ணத்தைப் பேச்சிலோ செயலிலோ அவர் காண்பிக்க முற்படும்போது அவரது உரிமைகள் நிபந்தனைகளாலும் வரம்புகளாலும் மட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தக் கேள்வியின் சட்டபூர்வமான, அரசியலமைப்புச் சார்ந்த அம்சம் இதுதான்.
அதன் அறம் சார்ந்த அம்சத்தைப் பொருத்தவரை, உரிமைகளை விட கடமைகளை வலியுறுத்துவதே மேலானது என்பது தெளிவாக உள்ளது. கடமைகளை விட உரிமைகளை வற்புறுத்துபவர்கள் சுயநலவாதிகளாக, கர்வம் கொண்டவர்களாக, தன்னைப் பற்றியே சிந்திப்பவர்களாக உள்ளனர். கடமைகளை வலியுறுத்துகின்றவர்கள் இதற்கு நேர்மாறானவர்கள். மனிதகுலத்தின் மேம்பாட்டிற்கும் சேவை மனப்பான்மைக்கும் அடிப்படை உரிமைகளை விட கடமைகளை வலியுறுத்துவதில்தான் உள்ளது. உலகின் எல்லாப் பெரிய மதங்களின் போதனையும் இதுதான். புத்தர், கிறிஸ்து, காந்தி ஆகியோரின் போதனை இதுவே. ஒவ்வொரு நாளும் அளிக்கும் அனுபவத்தின் பாடமும் இதுதான். ஒரு உயர்ந்த சமூகத்தின் சிறந்த தன்மைக்கான எடுத்துக்காட்டு, அதன் உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய எந்தவொரு செயலையும் செய்யாமல் இருப்பது, அதற்காக உரிமைகள் என்று அழைக்கப்படுகிற தங்களது நலனையும் குறைத்துக்கொள்ளுவது என்பதுதான். எப்படியோ, ஒரு விஷயம் நிச்சயம். ஒரு சமுதாயத்தின் எந்தவொரு உறுப்பினரும் மற்றவர்களின் உரிமைகள் மீது மோதக்கூடிய அவரது உரிமையைச் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. இரண்டு பக்க உரிமைகளும், அவை ஒன்றுக்கொன்று பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இளைஞர்களில் சிலர், இந்த ‘உரிமைகளின் கோட்பாட்டை வலியுறுத்துவதைக் கண்டு நான் ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில், திரு இராஜகோபாலச்சாரி மாநாட்டில் ஏற்கெனவே குறிப்பிட்டது போல், காந்தியின் போதனை என்பது உரிமைகளை விட கடமைகளின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த கேள்வியை இன்னும் சிறிது ஆழமாகச் சிந்திக்க நம் இளைஞர்களுக்கு நான் அறிவுறுத்துவேன். நாட்டு இளைஞர்களுக்கு நான் அறிவுரை வழங்குவேன். இந்த விஷயத்தைப் பற்றிய பற்றிய எழுத்துகளை இன்னும் கவனமாக வாசிப்பதற்கும், இந்த தீங்கு விளைவிக்கும் கோட்பாட்டின் தொல்லையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளவும் நான் ஆலோசனை கூறுவேன். இது நடக்காவிடில், இந்தியாவின் ஒற்றுமைக்குச் சாத்தியமே இல்லை. நாம் பன்மொழிகளைக் கொண்ட ஒரு நாடு என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும், தங்கள் சுதந்தரத்திற்காகப் போராட வேண்டியிருந்த எந்த ஒரு யூரோப்பிய, மேற்கத்திய நாடுகளையும் விட நமது ஒற்றைப்படைத்தன்மை குறைவு. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அதன் மக்கள் அனைவரும் உரிமைகளால் அல்லாமல் கடமைகளால் ஈர்க்கப்பட்டாலொழிய, அத்தகைய ஒரு நாடு சுதந்தரத்தை வென்றெடுக்க முடியாது; அப்படியே சுதந்தரம் அடைந்தாலும் அதைத் தக்கவைத்துக்கொள்ள இயலாது. ஒவ்வொருவரும் அவருடைய நலனை மட்டுமே நினைத்தால், ஒற்றுமை இருக்காது. ஒற்றுமை இல்லாமல் சுதந்திரம் இல்லை.
(தொடரும்.)

Leave a Reply