Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) – லாலா லஜ்பத் ராய் (பகுதி 3) | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

பகுதி 3 
மதங்களைக் கூடியவரை அறிவார்ந்த சிந்தனைகளுக்கு
உட்படுத்தவேண்டும்
ஒன்றுபட்ட
இந்தியாவை உருவாக்கும் நோக்கம் கொண்ட அனைவரும், இந்தியா பல நம்பிக்கைகள் மற்றும்
பல மதங்களின் நிலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; இந்த நம்பிக்கைகள் மற்றும்
மதங்கள் பற்பல பிரிவுகளையும் துணைப் பிரிவுகளையும் கொண்டுள்ளன.; இந்தப் பிரிவுகள்
மற்றும் துணைப்பிரிவுகள் பல்வேறு சம்பிரதாயங்கள், சடங்குகளைக் கடைப்பிடிக்கின்றன;
இந்தச் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களில் சில ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன.
மதங்கள், அதன் பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகள், அவர்களின் சடங்குகள் சம்பிரதாயங்கள்
ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் விஷயத்தில், குறிப்பாக அவை ஒருவருக்கொருவர்
முரண்படுகையில், அவற்றின் முழுமையான சுதந்திரத்திற்கு எந்தவொரு அரசும் உத்தரவாதம்
அளிப்பது சாத்தியமில்லை. இந்தச் சடங்கு சம்பிரதாயங்களில் சில மனிதாபிமானமற்ற,
கொடூரமான, ஒழுக்கக்கேடானவை. எந்த ஒரு சிறிய அல்லது பெரிய சமூகத்தின் மதச்
சடங்குகளையும் விழாக்களையும் கண்டிப்பாகவும் முழுமையாகவும் கடைப்பிடிப்பதற்கான
உரிமையை வலியுறுத்துவதும் அதற்காக அழுத்தம் கொடுப்பதும் சாத்தியமற்றது, ஒன்றுபட்ட
இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கு எதிரானது. ஆயினும் பிரிட்டிஷ் அரசாங்கம், மத
நடுநிலைமை என்ற நிலைப்பாட்டிற்கு இடையிலும் அவ்வப்போது மத நடைமுறைகள் விஷயத்தில்
தலையிட்டுள்ளனர். உதாரணமாக, ஹிந்துப் பழமைவாதிகள் மதத்தின் ஒரு பகுதி என்று கருதிய
சதி மற்றும் சிசுக்கொலையின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை அவர்கள் சட்டத்தின் மூலம்
தடைசெய்தனர்.
இதுபற்றிய
விவரங்களை விரிவாக ஆராய்வது இங்கே எனது நோக்கம் அல்ல, ஆனால் இந்திய மதங்களைப்
பற்றிக் கற்கும் ஒரு மாணவர், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் வருகையும், அதைத்
தொடர்ந்து மேற்கத்திய அறிவு மற்றும் மேற்கத்திய அறிவியலின் பரவலும், அதனோடு இணைந்த
சமஸ்கிருதம் மற்றும் அராபிக் மொழிகளின் ஆய்வின் மறுமலர்ச்சியும், பல மதச்
சீர்திருத்த இயக்கங்கள் தொடங்கப்படுவதற்கு வழிவகுத்தன என்ற எனது கருத்தை எளிதில்
உறுதிப்படுத்த முடியும். இந்த இயக்கங்கள் பல நூற்றாண்டுகளின் அறியாமை மற்றும்
குருட்டு நம்பிக்கையால் பீடிக்கப்பட்டிருந்த இந்திய மதங்களை தூய்மைப்படுத்தும்
நடவடிக்கையில் முனைந்தன. அவர்களுக்குக் கிடைத்த புதிய அறிவின் வெளிச்சத்தில், ஒரு
மதத்தின் பெயரில் நடைமுறையில் உள்ள பல சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் அந்த
மதத்தின் நூல்களால் அனுமதிக்கப்படவில்லை என்பதையும், அம்மதங்களைச் சேர்ந்த
நிறுவனர்கள், ஆரம்பகாலச் சிந்தனையாளர்களின் கருத்தாக்கங்களுக்கு எதிரானவை
என்பதையும் மக்கள் கண்டறிந்தனர். இன்றும் இதுபோன்ற மனிதாபிமானமற்ற, ஒழுக்கக்கேடான
பல்வேறு சடங்குகளையும் வழிமுறைகளையும் நம்பும் சமூகங்கள் உள்ளன என்பதை மறுக்க
இயலாது. சமூகம் யாருடைய நம்பிக்கையிலும் தலையிட முடியாது. ஆனால் அதே சமயம்
எந்தவொரு முற்போக்கான சமூகமும் அத்தகைய நடைமுறைகளை மதத்தின் பெயரில், அதன்
பெரும்பான்மையான உறுப்பினர்களின் மனித நேயம், ஒழுக்கநெறி ஆகியவற்றிற்கு எதிராக,
கண்மூடித்தனமாக முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது,
ஒரு அரசியல்
கண்ணோட்டத்தில், மத வேறுபாடுகள் குறைக்கப்படுவது மிகவும் அவசியமான ஒன்று.
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் மதத்தின் பெயரால், அவரது மதம் சார்ந்த நம்பிக்கை
என்று அவர் கருதும் எதையும் பின்பற்ற அவருக்கு உரிமை உண்டு என்ற நிலை ஏற்பட்டால்
இங்கு எந்த ஒற்றுமையும் சாத்தியமில்லை என்பது வெளிப்படையானது. ஒன்றுபட்ட இந்தியா
என்ற கருத்தாக்கம் வெவ்வேறு மதங்கள் பிரிக்கும் வேறுபாடுகளைக் காட்டிலும் வேறுபட்ட
மதங்கள் ஒப்புக் கொள்ளும் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
என்று கோருகிறது. எனவே ஒன்றுபட்ட இந்தியா என்ற கருத்தாக்கம், மதங்களையும் மதம்
சம்பந்தப்பட்ட சடங்குகளையும் எவ்வளவு இயலுமோ அவ்வளவு தூரம் அறிவுக்கு ஏற்புடையதாக
மாற்றும் தேவையை வலியுறுத்துகிறது. தனது மதத்தின் ஒரு அங்கம் என்று ஒருவர்
நம்புகின்ற அனைத்தையும் முழுமையாகவும், கட்டுப்பாடற்றதாகவும் கடைப்பிடிக்க
அவருக்கு உரிமை உண்டு என்ற கூற்று, பகுப்பாய்வின் சோதனைக்கு அப்பாற்பட்டதாக இருக்க
முடியாது. ஒவ்வொருவரின் உரிமையும் மற்றவர்களின் நியாயமான உரிமைகளால்
மட்டுப்படுத்தப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், முரண்பட்ட சடங்குகளை கடைப்பிடிக்கும்
வழக்கங்கள் கடுமையாக எதிர்க்கப்படவேண்டும்.. தவறான நம்பிக்கைகளை அடிப்படையாகக்
கொண்ட இத்தகைய கருத்துக்கள் அனைத்தும் வெவ்வேறு சமூகங்களுக்கிடையில், வெறுப்பை
அதிகரித்தல், ஒரு சமூகத்தை மற்றொன்றிடமிருந்து பிரித்தல் மற்றும் தடைகளை
உருவாக்குதல் போன்றவற்றை உருவாக்கி, வகுப்புவாத உணர்வை மேலும் கடுமையானதாகவும்
கசப்பானதாகவும் ஆக்குகிறது. இது படிப்படியாக அகற்றப்பட வேண்டும்..
துரதிர்ஷ்டவசமாக,
இந்தியாவில் மதச் சீர்திருத்த நகர்வுகள் கூட சில சந்தர்ப்பங்களில் தவறான
திருப்பத்தை எட்டியுள்ளன. அவை அறம் சாராத, சம்பந்தப்பட்ட மதம் சாராத சடங்கு
சம்பிரதாயங்களைப் பின்பற்றும் வழக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன
என்றாலும், வகுப்புவாத உணர்வு, மீண்டும், இதுபோன்ற சடங்குகளைக் கடைப்பிடிப்பதன்
மூலம் வேறுபாடுகளை நிலைநிறுத்துவதோடு, ஒரு சமூகத்தை இன்னொரு சமூகத்திலிருந்து
பிரிக்கும் ஒரு திடமான சுவரை உருவாக்குகிறது. ஆர்ய சமாஜ், முஹம்மது சீர்திருத்த
இயக்கம் மற்றும் சீக்கிய சீர்திருத்த இயக்கம் ஆகியவை அனைத்தும் இந்தப் போக்கைச்
சித்தரிக்கின்றன; மகாத்மா காந்தியும் அவர் பலமாக ஆதரித்த கிலாஃபத் இயக்கமும் இந்த
உணர்வை அதிகப்படுத்தியுள்ளன என்பதை மறுக்க முடியாது.
மகாத்மா
காந்தியின் ஆளுமை ஒரு வகையில் புதிரானதாக உள்ளது. நடைமுறையில் அவர் தாராளவாதிகளின்
தாராளவாதி, பரந்த எண்ணம் கொண்ட மனிதாபிமானம் கொண்டவர். பல்லாயிரக்கணக்கான
இந்துக்கள் தங்கள் மதத்தின் இன்றியமையாத பகுதியாக கருதுகின்றனர் என்ற போதிலும்,
தீண்டாமையை மனிதாபிமானமற்றது, வேரோடு அழிக்கப்படவேண்டியது என்று அவர்
அறிவிக்கிறார். மறுபுறம், அவரது சில கோட்பாடுகளின் அடிப்படையில், அவர் சில
நேரங்களில் குறுகிய மனப்பான்மையையும் பிரிவினை சார்ந்த மூடநம்பிக்கைகளையும்
ஆதரிப்பதாகத் தெரிகிறது. இது, அவரது வருகைக்கு முன்பு தங்கள் மதங்களில் செல்வாக்குகளை
இழந்துகொண்டிருந்த பண்டிதர்களுக்கும் மவுல்விகளுக்கும் ஒரு புதிய வாழ்க்கையை
அளித்துள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று நான்கு வருடங்களில் ஹிந்துப்
பிரிவினைவாதிகள் முன்பை விட வெறுப்பைக் கக்குகிறவர்களாகவும் இஸ்லாமிய, சீக்கியப்
பிரிவினைவாதிகள் அவர்களைவிட வெறுப்புணர்ச்சி கொண்டவர்களாகவும் மாறியுள்ளனர். இந்த
மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே பிற்போக்குவாதிகள் மீண்டும் அதிகாரத்திற்கு
வந்துள்ளனர், சமூகங்களை ஒருவருக்கொருவர் ஒதுக்கி வைப்பதிலும், மதத்தின் பெயரில்
நடைமுறையில் உள்ள பல மட்டமான சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும்
கவனத்தைச் செலுத்தி பல்வேறு சமூகங்களை இணைப்பதை விட பிரிப்பதில் அதிகம் முனைப்பாக
உள்ளனர்.
யாருடைய
எண்ணங்களையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை, ஆனால் தற்போதுள்ள நிலைமைகள்
சரியாக ஆய்வு செய்யப்பட்டால், கடந்த மூன்று ஆண்டுகளில் குறுங்குழுவாதமும் குறுகிய
எண்ணம் கொண்ட மதவெறியும் மிகவும் பலமடைந்துள்ளதைக் காணலாம். குறிப்பாக கிலாஃபத்
இயக்கம் முஹம்மதியர்களிடையே அதை பலப்படுத்தியுள்ளது. அதன் எதிர்வினையும் தாக்கமும்
ஹிந்துக்களிடையேயும் சீக்கியர்களிடையேயும் உள்ளது. சீர்திருத்தத் திட்டத்தின் கீழ்
கொண்டுவரப்பட்ட வகுப்புவாத பிரதிநிதித்துவம், வலுவான வகுப்புவாத எண்ணங்களை
உருவாக்கி, இரு முக்கிய சமூகங்களிடையேயான உறவுகளைச் சிக்கலானதாகவும்
வெறுப்புணர்ச்சி கொண்டதாகவும் ஆக்கியதை நாம் புறக்கணிக்க இயலாது. நம்முடைய
தற்போதைய அக்கறை இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையைப் பற்றியதாகும்.
நாம்
உண்மையிலேயே நேர்மையாக ஒரு ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினால், நாம் இந்த நாட்டில்
உள்ள பல்வேறு மத சமூகங்கள், மதத்தில் அத்தியாவசியமானவை மற்றும்
அத்தியாவசியமற்றவற்றுக்கு இடையே ஒரு தெளிவான வேறுபாட்டை வெளிக்காட்ட வேண்டும்.
முழு மதச் சுதந்திரம் என்பது பிற சமூகங்களின் நியாயமான உரிமைகளை பாதிக்கும்
வகையிலோ அல்லது அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையிலோ சடங்கு
சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதற்கான முழு, கட்டற்ற சுதந்தரத்தை அளிப்பது என்று
அர்த்தமல்ல. அத்தகைய உரிமையை, தனிநபராகவோ அல்லது சமூகமாகவோ வலியுறுத்துவதும்,
பிரிட்டிஷ் அரசாங்கம் அத்தகைய உரிமையை நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கையும்
இந்தியாவில் பெரும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. உதாரணமாக, வடமேற்கு எல்லைப்புற
மாகாணத்தின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கிராமத்தின் மக்கள் தொகையில் 99
சதவிகிதம் இஸ்லாமியர்கள். ஹிந்துக்கள் 1 சதவிகிதம் மட்டுமே. பல மசூதிகள்
அமைந்துள்ள கிராமத்தின் தெருக்களில் ஊர்வலமாகத் தனது சிலையை ஊர்வலமாக எடுத்துச்
செல்ல ஒரு ஹிந்து தனது உரிமையை வலியுறுத்துவது மிகவும் முட்டாள்தனமான செயல்.
அஜூதியா, மதுரா, பிந்த்ராபன் அல்லது ஹரித்வார் போன்ற இடங்களில் ஒரு இஸ்லாமியர்
பசுவைப் பலியிடும் உரிமையை வலியுறுத்துவதும் அதே மாதிரியானதே.
துரதிர்ஷ்டவசமாக
பிரிட்டிஷ் ஆட்சி, ஹிந்துக்கள் மற்றும் முகமதியர்கள் இருவரையும் அத்தகைய உரிமைகளை
வலியுறுத்தவும், அவை மறுக்கப்பட்டால் போராடவும் ஊக்குவித்துள்ளது. தனிமனிதவாதம்
என்ற தத்துவமும், முழுமையான மத சுதந்திரம் பற்றிய கருத்தாக்கமும், நான் ஏற்கெனவே
சுட்டிக்காட்டியுள்ளபடி, முற்றிலும் தவறானவை. தற்போது இந்தியாவில் பிரிட்டிஷ்
ஆட்சியினால் விளைந்தவை. இந்தியர்களின் மனதில் வலுவாக வேரூன்றி நம்முடைய தேசிய
வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பவை. எனவே
ஒரு உண்மையான தேசிய வாழ்க்கையை உருவாக்குவதற்கான முதல் படி, இந்த வகையான
விஷயங்களில் சரியான கருத்துக்களை பொதுமக்களின் மனதில் விதைப்பதற்கு ஒரு பரவலான
பிரசாரத்தை மேற்கொள்வதேயாகும். ஆனால் ஹிந்து மற்றும் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளின்
ஏதோ ஒன்றை ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வில் உடைத்துக்கொண்டிருக்கும் ஆண்களும்
பெண்களும் அந்தந்த மதங்களால் நிராகாரிக்கப்படுவதற்குப் பதிலாக அவற்றின் தலைவர்களாக
ஏற்கப்படுவது என்னைப் பொருத்தவரை ஒரு விரும்பத்தகாத முரண்பாடாகவும், தற்போதைய
நிலையில் புதிரான விஷயமாகவும் உள்ளது.
என்னுடைய
வாதத்தின் தொகுப்பு இதுதான், ஹிந்துக்களுக்கும் முகமதியர்களுக்கும் இடையிலான
தற்போதைய பதட்டத்திற்கு ஒரு காரணம், மத சம்பிரதாயங்களை அனுசரிக்கும் விஷயத்தில்
முழுமையான சுதந்திரம் என்ற கருத்து புத்துயிர் ஊட்டப்பட்டதேயாகும். நான் ஏற்கெனவே
கூறியது போல, மற்றொருவரின் நம்பிக்கையில் யாரும் தலையிடவோ கேள்வி கேட்கவோ முடியாத
நிலை உருவாகியுள்ளது. இத்தகைய நம்பிக்கை முழுக்க முழுக்க தனிமனிதனைச் சார்ந்தது.
ஆனால் அவற்றை நாம் கடைப்பிடிக்கும்போது, நாம் வாழும் சூழலையும், அண்டை அயலாரின்
நல்லெண்ணத்தையும் அமைதியையும், சமூக மோதலைத் தவிர்ப்பதையும் கருத்தில் கொள்ள
வேண்டும். இதற்காக சுதந்தரத்தைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கவேண்டும்.
இந்தியா
போன்ற ஒரு நாட்டில், இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட அல்லது ஒருவரின் நம்பிக்கையின்
பேரில் அனுமதிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஒவ்வொரு மத
நடைமுறையையும் புனிதமானது, மாறாதது என்று சொல்லி அந்தக் கருத்தை ஊக்குவிப்பது,
எனது தாழ்மையான கருத்தின்படி, விஷமத்தனமானது, எதிர்க்கப்படவேண்டியது. இந்தியாவின்
வளர்ச்சியின் தற்போதைய கட்டத்தில், அதற்கு தேவையானது பகுத்தறிவும்
சகிப்புத்தன்மையும்தானே தவிர பழமைத்தன்மையும் மதவெறியும் அல்ல. துரதிர்ஷ்டவசமாக,
கடந்த தசாப்தத்தில் பகுத்தறிவு மற்றும் சகிப்புத்தன்மையை விட பழமைத்தன்மை, மதவெறி
ஆகியவற்றின் வாசனைதான் சுற்றுச்சூழலில் அதிகம் உணரப்படுகிறது. ஒத்துழையாமை இயக்கம்
இந்தச் சூழலை உருவாக்க தன்னாலான பங்கை அளித்திருக்கிறது. இந்தியாவில் கிலாஃபத்
இயக்கம் அரசியல் அடிப்படையில் அல்லாமல் ஒரு மதத்தின் அடிப்படையில் தனது நிலைப்பாட்டை
எடுத்திருப்பது ஏற்புடையதல்ல. அதை ஆதரிக்க அரசியல் காரணங்கள் இருந்தன. உண்மையில்
மதத்தைவிட அரசியலை அடிப்படையாகக் கொண்ட கிலாஃபத் போன்ற ஒரு இயக்கத்தில் மகாத்மா
காந்தியும் அந்த இயக்கத்தின் தலைவர்களும் மதத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது
துரதிருஷ்டவசமானது.
ஒத்துழையாமை
இயக்கத்தின் பல்வேறு அம்சங்களுக்கு மதரீதியான அனுமதி பெற வேண்டும் என்ற ஆசை
மற்றொரு பெரிய தவறு. இது ஒரு குறுங்குழுவாத மறுமலர்ச்சிக்கு நேரடியாக வழிவகுத்து,
ஒன்றுபட்ட இந்தியாவின் கருத்தாக்கத்திற்கு விரோதமான தாக்கத்தைச் செலுத்தக்கூடிய
சக்திகளை மீண்டும் சிம்மாசனம் ஏற வழிவகுத்திருக்கிறது. ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை
என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஒத்துழையாமை இயக்கம், அவர்களின் பிரிவினைக்குக்
காரணமான சக்திகளில் ஒன்றாக மாறிப்போனது. படித்த இந்துக்கள், முசல்மான்கள் மற்றும்
சீக்கியர்கள் இப்போது போல மதத்தின் பெயரில் அற்பமான மற்றும் சிறிய விஷயங்களுக்கு
இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை.
சாஸ்திரங்களும் ஷரியத்களும் ஆய்வு செய்யப்பட்டு, குறுகிய மனப்பான்மை மற்றும்
மதவெறியின் சூழ்நிலையை உருவாக்க மட்டுமே அந்த ஆய்வுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தாடியைச்
சவரம் செய்யத் துணிந்ததற்காக இளம் இஸ்லாமியர்கள் மவுல்விகளால் கடுமையாகக்
கண்டிக்கப்படுவதை நான் கண்டிருக்கிறேன், தேசிய காங்கிரசின் வருடாந்திரக்
கூட்டத்தில் ஒரு முஸ்லீம் தலைவர் கருவி இசையை நிறுத்த முயல்வதை இந்தியா முழுவதும்
கண்டது. முன்னெப்போதும் நாம் கற்பனை செய்யாத வகையில் மதத்தின் பெயரால் மிகவும்
ஆச்சரியப்படும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதை நாம் காணுகிறோம். கடந்த நான்கு
ஆண்டுகளில், எந்தவொரு மதரீதியான அங்கீகாரமும் ஆன்மிக மரியாதையும் பெறாத
மவுலானாக்கள்., பண்டிதர்கள் மற்றும் ஞானிகளின் படை உருவாகியுள்ளது.
நான்
யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் எனது கருத்தை விளக்குவதற்காக இந்த
உண்மைகளை நான் கூறுகிறேன். உதாரணமாக, மசூதிகளுக்கு முன்பு இசை வாசிப்பதை எடுத்துக்
கொள்ளுங்கள். கடந்த நாற்பது ஆண்டுகால எனது அனுபவத்தில், இந்தக் கேள்விக்கு
முக்கியத்துவமும் இருந்ததாக நான் ஒருபோதும் உணரவில்லை, ஆனாலும் நான் தொடர்ந்து
செய்தித்தாள்களை வாசிப்பவனாகவும், நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்பவனாகவும் இருந்தேன்.
உலகெங்கிலும் பயணம் செய்த, மிகவும் பரந்த மனப்பான்மை கொண்ட ஹிந்துக்கள் சிலர்,
இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தீண்டத்தகாத தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை
உணர்வார்கள் என்பது எனக்கு வேதனையாக உள்ளது. ஹிந்து அல்லாதவர்களால் தொட்ட உணவைக்
குடிப்பது அல்லது சாப்பிடுவது தங்கள் மதத்திற்கு எதிரானது என்று நம்பும்
இந்தியர்கள் இருக்கும் வரை, இந்தியா ஒரு தேசமாக அரசியல் ரீதியாக ஒன்றுபடும் என்று
நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஒரு பெரிய சமாஜத்தின் தலைவர் காங்கிரஸ்காரர்களை
ஒற்றுமைக்காக தங்கள் மதத்தை விற்றதாக ஒருமுறை கண்டனம் செய்ததை நான் நினைவில்
கொள்கிறேன். இந்த விற்பனையானது, அவரது கருத்தில், அவர்கள் முகமதியர்களுடன்
சுதந்திரமாகச் சாப்பிடுவதிலும், (உணவைக்) குடிப்பதிலும் இருந்தது.
உண்மை
என்னவென்றால், ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கான விருப்பத்தைக் கொண்ட, ஒன்றுபட்ட
இந்தியாவை உருவாக்க விருப்பப்படும் ஏராளமான இந்துக்களும் முஸ்லிம்களும்
ஒற்றுமைக்கு ஒரு விலை இருப்பதையும் அதை அடைவதற்கு முன்பு அவர்கள் அதைச் செலுத்தவேண்டும்
என்பதையும் உணரவில்லை. ஹிந்துக்கள் அல்லது முகமதியர்கள் தங்கள் மதத்தின்
அத்தியாவசியங்களை ஒற்றுமைக்காக தியாகம் செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை.
என்னைப் பொருத்தவரை, தனிப்பட்ட முறையில், அறத்தின் தேவைகள் குறைவு, அவை
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஒற்றுமையை உருவாக்கக் கூடியவை. ஆனால்
இந்துக்கள் மற்றும் முகமதியர்களின் முக்கிய அமைப்புகள் இந்த விஷயத்தில் எனது
கருத்துக்களை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்க எனக்கு உரிமை இல்லை. எவ்வாறாயினும்,
ஹிந்துக்கள், முகமதியர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் மத மற்றும்
சமூக வாழ்க்கையில் தாராளமாகவும் பகுத்தறிவுடனும் இருக்கும் மனதையும் உருவாக்கிக்
கொள்ளாவிட்டால் ஒற்றுமை என்பது ஒருபோதும் நிறைவேறாத ஒரு கனவு என்று நான்
வெளிப்படையாகச் சொல்வேன்.
தற்போது
ஹிந்து, முஸ்லீம், சீக்கிய இனவாத வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும் குறுகிய மத
சூழ்நிலை ஒன்றுபட்ட இந்தியாவின் கருத்தாக்கதிற்கு ஆபத்தானது. எவ்வளவு விரைவில்
இந்தச் சமூகங்களின் தலைவர்கள் இந்த உண்மையை உணர்ந்துகொள்கிறார்களோ, அது நம்
அனைவருக்கும் நல்லது. இரு மதங்களைப் பின்பற்றுபவர்களும் அரசியல் ரீதியாக
ஒன்றுபடுவதை சாத்தியமில்லாததாக்கும் அளவுக்கு ஹிந்து மதம் அல்லது இஸ்லாம் மிகவும்
குறுகலானது என்ற கருத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது. வெளிப்படையாகச்
சொல்வதென்றால், அரசியல் சுதந்திரத்தை நாம் உண்மையிலேயே விரும்பினால் இந்த
விஷயத்தில் ஐரோப்பாவைப் பின்பற்ற வேண்டியிருக்கும். மதம் அரசியலில் இருந்து
பிரிந்து செயல்பட வேண்டும். சமூக வாழ்க்கை விரிவுபடுத்தப்பட வேண்டும். அரசியல்
வாழ்க்கை என்பது பரந்த தேசியக் கொள்கையை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.
மதம் நம் வாழ்க்கையிலிருந்து விலக்கப்படவேண்டும் என்றோ அல்லது நமது அரசியல்
கட்டமைப்பானது மதரீதியான தாக்கங்களைக் கொண்டிருக்கக்கூடாது என்றோ நான்
சொல்லவில்லை. ஆரோக்கியமான மதரீதியான தாக்கங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தனிப்பட்ட
மற்றும் தேசிய வளர்ச்சிக்கு அவசியம். இந்த அளவில் நான் மதத்துக்கோ அல்லது
அறத்திற்கோ எதிராக எதுவும் கூறவில்லை. ஆனால் மதத்தின் சடங்குகள் சம்பந்தப்பட்ட
அம்சம் தனிநபர்கள் அல்லது சமூகங்களின் மையமாக மட்டுமே இருக்க வேண்டும். பல்வேறு
மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு, பல்வேறு மதம் சார்ந்த சமூகங்களுக்கு இடையில்
தடைகளையோ அரசியல் வேறுபாடுகளையோ உருவாக்கும் விதத்தில் இவை செயல்பட நாம் அனுமதிக்கக்கூடாது.
பின்குறிப்பு
: மேற்கண்டவற்றை எழுதிய பிற்பாடு, மகாத்மா காந்தியின் ஹிந்து மதம் மற்றும் ஹிந்து
முஸ்லீம் ஒற்றுமை பற்றிய கட்டுரைகளை மீண்டும் படித்தேன். ஹிந்து மதம் குறித்த
அவரது கருத்துக்கள் மிகவும் தாராளமயமானவை. இருப்பினும் சாதி அமைப்புக் குறித்த
அவரது விளக்கத்திலிருந்தும் பசு வழிபாட்டைப் பற்றிய விளக்கத்திலிருந்தும் ஒருவர்
வேறுபடக்கூடும். அவரது ஒரு கட்டுரையில் அவர் இவ்வாறு கூறுகிறார்: “ஒவ்வொரு சிறிய
விஷயத்தையும் ஆழ்ந்த மத முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக நாம்
புனிதப்படுத்தக்கூடாது என்று நான் கருதுகிறேன்
; மேலும்: “அத்தியாவசியமற்ற எல்லா விஷயங்களிலும், ஒரு ஹிந்து எது தேவையோ
அதற்கு அடிபணிய வேண்டும்.
அத்தியாவசியமற்றவற்றின் ஒரு உதாரணமாக
அவர் குறிப்பிடுகிறார்: “ஒரு மசூதிக்கு அருகில் 24 மணிநேரமும் அமைதியாக இருக்கவேண்டும்
என்ற முஸல்மானின் உணர்வை ஒருவர் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
அவரது எழுத்துகளில் இதுபோன்று முஸ்லீம்களுக்கு எதிராகக்
கூறப்பட்ட அறிவுரை எதையும் நான் காணவில்லை. பசு பாதுகாப்பிற்காக அவர் மன்றாடியது வேறு
பாணியில் அமைந்துள்ளது. ஒற்றுமைக்காக இரு சமூகத்தினரும் தம் மத நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்கவேண்டாம்
என்ற தொனியில் அமைந்த அவரது மற்ற அவதானிப்புகளை எங்கோ நான் கண்டிருக்கிறேன்.

Leave a Reply