Posted on Leave a comment

ஜெட் ஏர்வேஸ்: அபார உயர்வும் அசுரச் சரிவும் | ஜெயராமன் ரகுநாதன்



“எக்ஸ்க்யூஸ்
மீ! மணி ஏழாச்சே! இன்னுமா போர்டிங் ஆகலை?

“இல்லை. கிளம்ப
அரை மணி ஆகும்!
“லேட்டா? நீங்க
அனௌன்ஸ்மெண்ட் பண்ணலியே?
“அதான் இப்ப
சொல்றோமே, போதாதா?
இது ஒரு வகை
அனுபவம்.
“ப்ளீஸ்! ஒரு
கிளாஸ் தண்ணீர்!
“இப்ப முடியாது!
இந்த சர்வீஸ் முடிந்தவுடன் தருகிறேன்!
“மிஸ்! நான்
குடிக்க தண்ணீர் கேட்டேனே?
“சாரி! இன்னும்
அரை மணியில லேண்டிங்! அதனால முடியாது!
எழுபதுகளில்
இந்தியன் ஏர்லைன்ஸில் பிரயாணம் செய்த துரதிஷ்டசாலிகளைக் கேட்டால் ஒரு பாட்டம் அழுவார்கள்.
வேற கதி இல்லாமல் எல்லாவித சித்திரவதைகளை அனுபவித்துக்கொண்டும் இந்திய ஏர்லைன்சில்தான்
பயணம் பண்ன வேண்டிய ஒரு காலத்தில், வாராது வந்த மாமணிதான் ஜெட் ஏர்வேஸ்.
புத்தம் புது
விமானங்கள், சிக்கென்று உடை உடுத்திய நடுவானக் கன்னிகள், அபார பணிவு கலந்த சேவை, சுவையான
உணவு, சிரித்த முகத்துடன் பதில் என்று விமானப் பயண அனுபவத்தையே தலைகீழாக மாற்றிப்போட்ட
ஜெட் ஏர்வேஸ். சரியான நேரத்துக்குக் கிளம்பி சரியான நேர்த்தில் சென்றடைந்து விமானப்
பயணத்துக்கென தனி அளவுகோலையே ஏற்படுத்தினார்கள்.
1992ல் ஆரம்பித்த
ஜெட் ஏர்வேஸ் அடுத்த வருடத்திலேயே 6.6% சந்தைப்பங்கைப் பிடித்ததோடு அன்றி, அதற்கடுத்த
வருடத்திலேயே அதை 42%க்கு உயர்த்தியது. ஆரம்பித்த முதல் வருடத்திலேயே ஜெட் ஏர்வேஸில்
பயணித்தவர்களின் எண்ணிக்கை 730,000 பேர்கள்! முழுக்க முழுக்க வாடிக்கையாளர் சேவையையே
மையமாக வைத்து இயங்கியதாலேயே இந்த அசுர வளர்ச்சி அடையமுடிந்தது. இவ்வளவு தரமான சேவை
அளித்தும் ஜெட் ஏர்வேஸினால் லாபம் சம்பாதிக்க முடிந்ததன் காரணம், அவர்களின் செலவுக்கட்டுப்பாட்டு
முறைமை. அப்போது இந்தியன் ஏர்லைன்ஸின் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை விகிதம் ஒரு விமானத்துக்கு
397ஆக இருக்க, அதே விகிதம் ஜெட் ஏர்வேஸில் 163 மட்டுமே! வெகு விரைவிலேயே வெளிநாட்டுக்கும்
சேவை ஆரம்பித்துவிட்ட ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயல் 2004-2006ம் வருடம் பன்னாட்டு
விமானப்பயணச் சங்கத்தின் தலைவராகவும் நியமிக்கப்படும் அளவுக்குப் பாராட்டப்படுபவரானார்.
கிட்டத்தட்ட இந்தப் பொறுப்பில் அவர் 2016 வரை இருந்தார் என்பது விசேஷச்செய்தி!
2007ல் ஏர் சஹாரா
என்னும் சின்ன விமான நிறுவனத்தை 507 மில்லியன் டாலர் (ரூ 3500 கோடி) கொடுத்து வாங்கிய
ஜெட் ஏர்வேஸ், அதற்கு ஜெட் லைட் என்று பெயர் மாற்றி இயக்க ஆரம்பித்தது.
2013ல் ஜெட்
ஏர்வேஸின் வளர்ச்சிக்கு உதவ தலைவர் நரேஷ் கோயல் அபுதாபியைச் சேர்ந்த எடிஹாத் ஏர்வேஸுக்கு
(Etihad Airlines) தன் 24% பங்குகளை அளித்து 379 மில்லியன் டாலர்களைப் பெற்றார். அன்றைய
தேதியில் ஜெட் ஏர்வேஸிடம் 55 விமானங்கள் ஓட, ஒரு கோடி பேர் பயணம் செய்திருந்தனர். அதன்
வரவு 9800 கோடி ரூபாயாக உயர்ந்து லாபகரமான விமான நிறுவனமாகத் திகழ்ந்தது.
ஆனால் கடந்த
சில வருடங்களாக ஜெட் ஏர்வேஸின் நிதி நிலைமை படிப்படியாக வலுவிழந்து இன்று மொத்தமாக
மூடப்படும் அளவுக்குப் போய்விட்டிருக்கிறது. 2018ம் ஆண்டு ஜெட்டுக்கு இருந்த சந்தைப்பங்கு
16.6%. ஆனால் ஒரே வருடத்தில் இந்த ஜனவரியில் அது 13.3% ஆகக் குறைந்துவிட்டது. போட்டி
நிறுவனங்களான இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் விஸ்தாரா போன்றவை படிப்படியாக முன்னேற, ஜெட் மட்டும்
இறங்குமுகமாகவே நழுவிக்கொண்டிருக்கிறது.
கடுமையான பணத்தட்டுப்பாடும் விஷமாய் ஏறும்
கடன் சுமையுமே முக்கிய காரணங்கள் என்கிறார்கள் விற்பன்னர்கள். சமீப காலங்களில் பெரும்
சரிவைச்சந்தித்த விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸைவிட ஜெட் ஏர்வேஸின் சரிவு
மிகப்பெரியது. ஜெட்டின் கடன் சுமை போன வருடம் ரூ 8411 கோடி கிங்ஃபிஷருடைய கடன் சுமை
அதுவும் ஏறும் வட்டியினால், ரூ 7524 கோடி. ஜெட்டின் பணியாளர்கள் எண்ணிக்கை 16000. ஆனால்
கிங்ஃபிஷரிலோ 5700 பேர்தான். மேலும் கிங்ஃபிஷரிடம் 69 விமானங்கள் இருக்க ஒரு நாளைக்கு
370 விமானச்சேவைகள் செய்து வந்தது. ஆனால் ஜெட்டிடம் 119 விமானங்கள் இருக்க, ஒரு நாளைக்கு
600 விமானச்சேவைகள் செய்து வந்தது. இதனாலேயே ஜெட்டின் வீழ்ச்சி படு வேகமாக நிகழ ஆரம்பித்தது.
இந்த வீழ்ச்சிக்கு
முக்கியக் காரணமாக விற்பன்னர்கள் சொல்லுவது நரேஷ் கோயலின் நிர்வாக பாணிதான். அவர் கடுமையான
நிர்வாக முறைகளையும் தான் சொல்லுவதுதான் செய்யப்படவேண்டும் என்னும் சர்வாதிகாரப்போக்கும்
ஜெட்டில் மேலாண்மையைப் பாதித்தது. அவருடன் கூடப் பணிபுரிந்த பல மிக நல்ல நிர்வாகிகள்
இந்தப் பாணி பிடிக்காமல் விலகிவிட்டனர்.
கோயலின் இந்த
மேலாண்மை ஒரு காலத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டுமே போட்டியாக இருந்தபோது செல்லுபடியாயிற்று.
ஆனால் பல தனியார் விமானச்சேவைகள் வந்துவிட்ட பிறகு மாறிவிட்டிருக்கும் சூழலில் நரேஷ்
கோயலால் தன் நிறுவனத்தை முன்போல லாபகரமாகச் செயல்பட வைக்க முடியவில்லை.
ஸ்பைஸ் ஜெட்
கூட சில வருடங்களுக்கு முன்பு கடுமையான சோதனைகளைச் சந்தித்தது. ஆனால் அதன் தலைவர் அஜய்
சிங் நிறுவனத்தை விரைவிலேயே நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார். காரணம் ஸ்பைஸ்
ஜெட்டிடம் இரண்டே வகையான விமானங்கள் இருந்தன. குறைவான பன்னாட்டுப் பயணங்கள் மற்றும்
உள்நாட்டிலும் அதிகச் சிக்கல்கள் இல்லாத போக்குவரத்து. எனவே ரூ 1500 கோடி ரூபாய் அதிக
முதல் செலுத்தி நிர்வாகத்தைச் சீரமைத்து ஸ்பைஸ் ஜெட் விரைவிலேயே லாபகரமாக இயங்க ஆரம்பித்துவிட்டது.
ஆனால் ஜெட் ஏர்வேஸால் அவ்வளவு சுலபமாக நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியமில்லை
என்பது வல்லுநர்களின் கருத்து.
ஏற்கெனவே இந்திய
விமானச்சேவை சஹாரா, ஏர் இண்டியா மற்றும் ஸ்பைஸ் ஜெட்டின் வீழ்ச்சிகளைப் பார்த்துவிட்டது.
இப்போது ஜெட்டும் வீழுமானால் அது எல்லோருக்குமே – வங்கிகள். அரசு, பயணிகள் மற்றும்
ஜெட் ஏர்வேஸுக்கு பெரும் இழப்புதான்.
சமீபத்தில் சில
வங்கிகளும் அரசும் முனைந்து ஜெட் ஏர்வேஸின் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பல முயற்சிகள்
செய்து வருகிறார்கள். கோயல் தலைமைப்பீடத்திலிருந்து இறக்கப்படலாம். புது நிர்வாகிகள்
சேர்க்கப்பட்டு, வீண் செலவுகள் குறைக்கப்பட்டு, விமானங்கள் குறைக்கப்பட்டு சீராக இயங்கினால்
ஜெட் ஏர்வேஸ் மீண்டுவிடலாம் என்கிறார்கள். இதன் ஆரம்பமாக போன வருடத்தில் எடுக்கப்பட்ட
முயற்சிகளால் ரூ 500 கோடி வரை செலவினங்கள் குறைக்கப்பட்டுவிட்டதாகச் செய்திகள் வருகின்றன.
இதற்கு நடுவில் ஜெட் ஏர்வேஸின் பணியாளர்கள் ஜெட் ஏர்வேஸ் மீண்டு வர வாய்ப்புத்தர வேண்டும்,
ஜெட் ஏர்வேஸின் விமான லைசென்ஸை ரத்து செய்யக்கூடாது என்றெல்லாம் கோரிக்கை வைத்துப்
போராட்டம் செய்வதோடு நீதிமன்றத்துக்கும் போயிருக்கின்றனர்.
மிக நன்றாகச்
செயல்பட்டு வந்த விமான நிறுவனம் நிர்வாகச் சீர்கேடால் மூடப்படுவது இந்தியாவின் வர்த்தக
நிலைமைக்கு நல்ல செய்தி அல்ல. உலகெங்குமே பல விமான நிறுவனங்கள் கடும் சங்கடங்களைச்
சந்தித்து வருகின்றன. ஆனால் அவற்றைச் சீராக்குவதில் வங்கிகளும் அரசும் முக்கியப் பங்கு
வகிக்கவேண்டும். ஜெட் மீண்டு வந்து விமானச் சேவையைத் தொடர்வது விமான நிறுவனங்களின்
ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுத்து இந்திய விமானப்பயணத்தின் விஸ்தீரணத்தை, முக்கியமாகப்
பன்னாட்டு விமானச் சேவையைப் பலப்படுத்தி, பொருளாதார நன்மைகளைப் பெருக்கக்கூடும்.
அந்த நீல வண்ண
கம்பீர விமானங்களும் மாறாத புன்னகையுடன் சுடச்சுட அருமையான உணவுத்தட்டை உங்கள் கையில்
வைத்து ‘எஞ்சாய் யுவர் மீல்
என்னும் மென்மையான சேவையும் மீண்டும் தொடர ஜெட் ஏர்வேஸை வாழ்த்துவோம்.

Leave a Reply