பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் ஒரு இடம் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) வெல்லாது என்று கணித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இந்தக் கருத்துக் கணிப்புகள் தமிழ்நாட்டைக் கணிக்கத் தவறிவிட்டன என்றுதான் தோன்றியது. துக்ளக்கின் இதயாவின் கணிப்புக்குப் பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து ரங்கராஜ் பாண்டேவும் இதேபோன்ற கணிப்பை முன்வைத்தபோது ஆச்சரியமாகவும் பின்னர் இப்படித்தான் தீர்ப்பு வருமோ என்ற பயமும் தொற்றிக்கொண்டது. ஆனாலும் கடைசிவரை எப்படியும் பத்து இடங்களாவது என்.டி.ஏ வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தது. மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வரத் துவங்கிய ஒரு மணி நேரத்துக்கெல்லாம் எல்லாம் புரியத் தொடங்கியது.
ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத முதல் தேர்தல். அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் என்று பலமான கூட்டணி. இந்தியா முழுக்க மோடி அலை. ஆனாலும் தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அசுர வெற்றி பெற்றிருக்கிறது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத நிலையில் நடக்கும் தேர்தல் என்பதால், அமமுக தனித்து நிற்கும் தேர்தல் என்பதால், தேர்தலுக்கு முன்பாகவே கணிக்கமுடியாது என்று சொல்லப்பட்டது. இது ஓரளவுக்கு இப்போதும் சரிதான். ஏனென்றால் இத்தனை வாக்கு வித்தியாசத்திலான திமுகவின் மிகப்பெரிய வெற்றியை யாருமே கணிக்கவில்லை.
அதேபோல் அமமுக, மநீம போன்ற கட்சிகள் பெரிய அளவில் வாக்குகளைப் பிரிக்கும் என்று கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டதும் பொய்த்துப் போனது. மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக பெரிய அளவில் வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பில்லை என்றே நான் நம்பினேன். அப்படித்தான் நடந்தது.
எல்லா முடிவுகளும் வந்துவிட்ட நிலையில் யோசித்துப் பார்த்தால்-
* பிரம்மாண்டமாக தோற்றமளிக்கும் இந்த வெற்றி ஸ்டாலினின் தொடர் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. இதனை பாஜக-அதிமுகவினர் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஸ்டாலினின் உழைப்பை அவர்கள் குறைவாக மதிப்பிட்டார்கள். என்னதான் மீம்கள் மூலம் கிண்டலடிக்கப்பட்டாலும் ஊர் ஊராக அவர் தைரியமாக மக்களிடம் சென்று பேசியது நிச்சயம் இந்த வெற்றிக்குப் பங்களித்திருக்கிறது. இதிலிருந்து பாஜகவுக்குப் படிக்க நிறைய இருக்கிறது என்பதை எழுத வேண்டியிருப்பதே பாஜகவுக்கு எவ்வளவு அவமானம் என்பதை பாஜகவினர் உணர வேண்டும்.
* காங்கிரஸ் தனித்துப் பெரிய பூஜ்ஜியம்தான் என்றாலும் அது திமுகவுடன் சேரும்போது பெரிய மாற்றம் நிகழவே செய்கிறது.
* தமிழ்நாட்டில் கூட்டணி ஏற்படுத்திய கையோடு ஒரு வெற்றியைப் பெற்றதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எண்ணிக்கொண்டுவிட்டது.
* கூட்டணிக்காகப் பெரிய அளவில் இங்கே பிரசாரம் செய்யப்படவில்லை.
* கூட்டணியைத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டால்தான் அது மக்களிடம் பரவும். இங்கே தலைவர்களிடம் ஒரு இணக்கமே இல்லை
* எடப்பாடி பழனிசாமி ஒருவரைத் தவிர மற்ற அனைவரின் பிரசராமும் ஏனோதானோ என்றே இருந்தது. குறிப்பாக பாஜக தலைவர்கள் தமிழ்நாடு முழுக்க பிரசாரம் செய்வதை விட்டுவிட்டுத் தங்கள் தொகுதிக்குள் மட்டுமே இருந்துகொண்டுவிட்டார்கள்.
* அதிமுகவின் பிரசாரமும் பெரும்பாலும் சட்டசபை இடைத் தேர்தல்களில் திமுகவைத் தடுத்து நிறுத்துவதை மட்டுமே மையமாகக் கொண்டு அமைந்துவிட்டது.
* தங்கள் தரப்பை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பதைத் தாண்டி, எதிர்த்தரப்பை எப்படி இல்லாமல் ஆக்குவது என்ற போராட்ட நிலைக்குள் எந்நிலையிலும் இக்கூட்டணியின் பிரசாரம் செல்லவே இல்லை.
* சனாதன தர்மத்துக்கு எதிரான போர் என்று திமுக கூட்டணி அறிவித்தபோது அதை பாஜக கூட்டணி சரியாக எதிர்கொள்ளவில்லை. இதனால் ராமநாதபுரத்தில்கூட பாஜகவால் வெல்ல முடியாமல் போய்விட்டது.
* திடீர்க் கூட்டணி தந்த சிக்கல்களை பாஜக கூட்டணியால் தாண்டமுடியவில்லை.
இனி என்ன செய்யலாம்?
ஒரு தேர்தலுக்கு சற்று முன்பு மட்டுமே கூட்டணி உருவாவதால் வரும் சிக்கல்கள், எப்போதுமே பாஜக இருக்கும் அணியைத்தான் பாதிக்கின்றன. எனவே பாஜக தனது கூட்டணியை வெகு முன்பே உருவாக்க வேண்டும். இதனால் சந்தர்ப்பவாதத் திடீர்க் கூட்டணி என்ற மாயையை உடைக்கலாம்.
2014 தேர்தலில் பாஜக மூன்றாவது அணியாகப் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்தக் கூட்டணி தொடர்ந்திருந்தால் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்றம் வந்திருக்கும். ஆனால் தமிழகக் கட்சிகளுக்குப் பொறுமை இல்லை. தொடர்ச்சியான வெற்றி அதிலும் உடனடியான வெற்றி என்ற மாயையில் சிக்கி, அவர்கள் அக்கூட்டணியை உடைத்தார்கள். இன்றாவது அத்தவறைச் செய்யாமல் இருக்கவேண்டும்.
இக்கூட்டணியில் யாரால் யாருக்கு நஷ்டம் என்ற ஆய்வுகள் இனி வெள்ளம் போலப் பாயும். அதைக் கண்டுகொள்ளாமல் இக்கூட்டணி தொடரவேண்டும். இத்தேர்தலில் நடந்திருக்கும் ஒரு நல்ல விஷயம், இடைத் தேர்தல்களில் திமுக 13 இடங்களை வென்றிருப்பதற்கு இணையாக அதிமுகவும் 9 இடங்களில் வென்றிருப்பதுதான். ஸ்டாலின் முதல்வர் ஆவதை மக்கள் விரும்பவில்லை என்பதை இந்த முடிவு மெய்ப்பிக்கிறது. இப்படிச் சொல்வதை திமுகவால் நிராகரிக்கமுடியாது. ஏனென்றால், மக்களவைத் தேர்தலில் அசுர வெற்றி பெற்றிருக்கும் அதே நேரத்தில், அந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டசபைத் தேர்தல்களில் ஏன் திமுக வெல்லவில்லை என்பதை விளக்குவது திமுகவுக்குக் கடினம். 22 இடங்களையும் திமுக வென்றிருக்குமானால் இந்நேரம் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராகி இருப்பார். அப்படி நடக்கவில்லை. கெட்டதிலும் ஒரு நல்லதாக இப்படி அமைந்திருக்கிறது. அதாவது பாஜக கூட்டணியில் இருந்தாலும், மக்கள் வாக்களிப்பார்கள் என்று நாம் புரிந்துகொள்ளலாம். எனவே யாரால் யார் தோற்றார்கள் என்பதைப் புறம்தள்ளிவிட்டு, இக்கூட்டணி தொடரவேண்டும்.
மேலும் இக்கூட்டணி தொடர்ந்தே ஆகவேண்டும் என்பதற்கான இன்னொரு காரணம், அனைத்துக் கட்சிகளுக்கும் வேறு வழி இல்லை என்பது. பாஜகவால் தனித்து இப்போதைக்கு வெல்ல முடியாது. அன்புமணிக்கு இருக்கும் முதல்வர் கனவின் நேரடிப் போட்டியாளர் ஸ்டாலின் என்பதால், அவருடன் கூட்டணி சேர்வது, தனது கனவைக் கைவிடுவதற்குச் சமம். எடப்பாடி அரசு அடுத்த தேர்தலிலும் அமையவேண்டும் என்றால் கூட்டணி இல்லாமல் அது அதிமுகவுக்கு சாத்தியமே இல்லை. தேமுதிக மீண்டும் திமுகவுடன் சேருமானால், அக்கட்சி இன்னொரு மதிமுகதான் என்று உறுதி செய்யப்பட்டுவிடும். இந்நிலையில் அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கும் ஒரே வாய்ப்பு, இக்கூட்டணியைத் தொடர்ந்துகொண்டே எப்படி வெல்வது என்று யோசிப்பதுதான்.
இக்கூட்டணி எவ்விதச் சிக்கலும் இல்லாமல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தொடருமானால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. சட்டசபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு முடிக்கப்பட்டுக் கூட்டணியாகத் தேர்தலைச் சந்திக்கவேண்டும். அனைத்துத் தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றிப் பேசுதலை அதிகம் செய்யவேண்டும். இவையெல்லாம் மக்களிடம் ஒரு இணக்கத்தைக் கொண்டு வரும்.
மோடியின் அலை இந்தியா முழுக்க வீசிக்கொண்டிருக்க, தமிழ்நாட்டில் மட்டும் அந்த அலை இல்லாமல் போயிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மோடி எதிர்ப்பு மற்றும் ஹிந்துத்துவ எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகப் புகுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. தினம் எழுந்தால் ஏதேனும் ஒரு போராட்டம், ஏதேனும் ஒரு துரோகம் கண்டுபிடிப்பு என்றே ஹிந்துத்துவ எதிர்ப்பாளர்கள், போராளிகள் என்ற முகத்திரையில் பரப்பிக்கொண்டிருந்தார்கள். இதைத் தீவிரமாகத் தடுக்க பாஜக தரப்பு தவறிவிட்டது. இதனால்தான் கோவையில்கூட சி.பி. ராதாகிருஷ்ணனால் வெல்ல முடியவில்லை.
இனி வரும் ஐந்து ஆண்டுகளில் இது இன்னும் தீவிரமாகும். இப்படி தமிழ்நாட்டைப் போராட்டக் களமாகவே வைத்திருப்பது தேர்தலில் உதவுகிறது என்று ரத்தச்சுவை கண்டுவிட்ட கட்சிகள், இதையே இன்னும் தீவிரமாக முன்னெடுக்கும். பாஜக-அதிமுக கூட்டணி இதை எதிர்கொள்வது எப்படி என்று கற்றுக்கொள்ளவேண்டும்.
இந்திய எதிர்ப்பாளர்களுக்கு லாவணி பாடிக்கொண்டிருக்காமல் அவர்களை வைக்கவேண்டிய இடத்தில் மத்திய அரசு வைத்திருந்தால் இந்த அவலம் நேர்ந்திருக்காது. இனியாவது பாஜக தன்னிடம் உள்ள அரசின் பலத்தையும் அதிகாரத்தின் பலத்தையும் புரிந்துகொண்டு, இந்திய நாட்டுக்கு எதிரான பிரசாரங்களை நியாயமாகக் கையாளுவது நல்லது. இல்லையென்றால் பிரிவினைவாதம் மிக எளிதாக மக்களிடம் பரப்பப்படும். இப்போதே நாட்டுப்பற்று என்பது ஒரு கிண்டலுக்குரிய விஷயம் என்று தமிழ்நாட்டு மக்கள் மனதில் விதைக்கப்பட்டாகிவிட்டது.
வலுவான, மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான மாநிலத் தலைமையுடன் பாஜக, தனது கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொண்டால் தமிழ்நாட்டிலும் பாஜகவின் கொடி பறக்கும் நாள் தூரத்தில் இல்லை. தான் செய்த நன்மைகளை மக்களிடம் கொண்டு செல்வது, இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களை உடைப்பது, பாஜகவுக்கு எதிரான பொய்களைத் தோலுரிப்பது, இவற்றையெல்லாம் செய்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கட்சிக்குப் பயன்படுத்திக்கொள்வது போன்றவற்றை பாஜக பெரிய அளவில் செய்வது முக்கியமானது. தனது இடம், தனது ஆதரவாளர்களின் இடம், தனது செல்வாக்கு, தனது தொகுதியில் தனது வெற்றி என்று இயங்கினால், இதேபோன்ற தோல்விகள்தான் காத்திருக்கும்.
கூட்டணி அமைப்பது நிச்சயம் ஒரு பலமே. ஆனால் அந்த பலம் மட்டுமே வெற்றியைக் கொண்டு வந்துவிடாது. மோடி அலை இருந்தும், நல்ல கூட்டணி இருந்தும், இந்தியா முழுக்க சூறாவளி பிரசாரம் செய்த மோடியின் உழைப்பே, தமிழ்நாட்டு பாஜகவுக்கு நல்ல எடுத்துக்காட்டு. அயராத உழைப்பு, வலுவான பிரசாரம், எதிர்ப்புக் குரலுக்கான தீவிரமான பதில் – இவற்றை மட்டுமே நம்பித் தேர்தலை எதிர்கொள்வது நல்லது. அப்போதுதான் அமைக்கப்படும் கூட்டணியின் பிரம்மாண்டத்துக்கு நியாயமான வெற்றி கிடைக்கும்.
ஸ்டாலின் 2014 தேர்தலிலும் சரி, 2019 தேர்தலிலும் சரி, தொடர்ந்து மக்களிடம் சென்று பேசினார். அவருக்குச் செய்யப்பட்ட கேலிகள், கிண்டல்கள் என எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. தனது பலவீனத்தை இப்பிரசாரத்தின் மூலம் அவர் கடந்தார். ஆந்திராவில் இதே பாணியைப் பின்பற்றி ஜெகன்மோகன் ரெட்டி வென்றிருக்கிறார். அதாவது மக்களிடம் தொடர்ந்து சென்று உரையாடினால் அவர்கள் உங்களை நம்புவார்கள். அவர்களிடம் நிச்சயம் உங்களுக்கு எதிரான கேள்விகள் இருக்கும். நீங்கள் பதில் சொல்லமுடியாமல் போகலாம். ஆனாலும் தொடர்ந்து மக்களிடம் உரையாடினால் அவர்கள் நெருங்கி வருவார்கள். ஸ்டாலினுக்கு இது நடந்திருக்கிறது. ஸ்டாலினுக்கே நடந்திருக்கிறது. எனவே பாஜக தன்னை தமிழகத்தில் எப்படிப் பலப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்கான பாதை காத்திருக்கிறது. பயணம் மட்டுமே நிகழவேண்டும்.