Posted on Leave a comment

பன்முகக் கலாசாரங்களில் மாதவிடாய்: ஒரு வரலாற்று அணுகுமுறை | கஞ்சாநகரம் துங்கபாலா

 சபரிமலை விவகாரம்
சமய சுனாமி ஒன்றை 2015 வருட இறுதியில் எழுப்பியது.. இப்புத்தக ஆசிரியர் நிதின் ஸ்ரீதர்
அதைப்பற்றி எழுதிய ஆறு பகுதிகள் கொண்ட கட்டுரை India Facts பத்திரிகையில் 2016ல் பிரசுரிக்கப்
பட்டது.. சபரிமலை ஒரு சமய விவகாரமா அல்லது ஒரு பெண்ணுரிமை சம்பந்தப்பட்டதா என்ற அலசலுக்குக்
கிடைத்த வரவேற்பு 2018ல் (Menstruation across Culture:A Hitorical Perspective ) என்னும்
அருமையான புத்தகமாக -மிளிர்ந்திருக்கிறது.


ஆனால், சபரிமலை விவகாரம் ஒரு தூண்டுதலே தவிர, இப்புத்தகம் சபரிமலை சர்ச்சை பற்றியதல்ல
என்று ஆசிரியர் முதலிலேயே குறிப்பிட்டு விடுகிறார்..
ஆசிரியர் நம்மை பொ.யு. ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னாலான கலாசாரங்களுக்கே அழைத்துப்
போகிறார். அது ஒரு அறிவுபூர்வமான உணர்ச்சிக் கொந்தளிப்பான பயணமாகவே இருக்கிறது. மாதவிடாய்
குறித்து இந்து மதம் கூறும் ஆழமான வேதாந்தம் கலந்த கருத்துக்களை மிகத் தெளிவாக, விரிவாக
முதல் பகுதியில் குறிப்பிடுகிறார். பின் மற்ற மதங்கள் கலாசாரங்களின் கருத்துக்களை அலசிவிட்டு
இந்து மதமுடன் ஒப்பிடுகிறார்.
பயணம் தொடர்வதற்கு முன் வாசகர்கள், மாதவிடாய், வெளியில் விவாதிக்கத் தகுதியுள்ள
விஷயமல்ல; வீட்டிற்குள் பெண்கள் மத்தியில் சன்னக் குரலில் பரிமாறப்பட வேண்டிய விஷயம்
என்ற எண்ணத்தை மூட்டை கட்ட வேண்டும். திறந்த மனத்துடன் விரிவான ஆராய்ச்சி முறையில்
அணுக வேண்டும்.
ஸனாதான தர்மம்
இந்து ஸனாதன தர்மம் மாத விலக்கை நிலவின் வளர்ச்சி, தேய்வு மறைவுடன் சம்பந்தப்படுத்துகிறது.
ஆயுர்வேதம், ஜோதிடம், வான சாஸ்திரம், பாலியல் படிப்பு எல்லாமே இக்கருத்தை ஆதரிக்கின்றன.
சந்திரனுக்கும் மன உணர்ச்சிகளுக்கும் தொடர்பு இருப்பதால் பௌர்ணமிக்குப் பின் சினை முட்டை
உருவாகி வளர்பிறையில் வளர்ந்து பின் தேய்ந்து அமாவாசையில் உடைந்து உதிரப் பெருக்காகிறது.
அதனால் தான் 28 நாள் சுழற்சி. இதை யூத மதமும் மற்ற சில கலாசாரங்களும் கூட சொல்கின்றன.
பௌர்ணமியன்று ஆண் பெண் இருவரது குணநலன்களும் உச்சகட்டத்தில் இருக்கும். அப்போது
உருவாகும் குழந்தை உயர்வாக இருக்கும் என இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மாதவிடாய் என்பது ஒரு புது உயிரை, ஜீவாத்மாவை இவ்வுலகிற்குக் கொண்டுவர உதவும்
முக்கியமான நிகழ்வு. அது கொண்டாட்டம். அந்த விலகி இருக்கும் மூன்று நாடகள் பெண்களுக்குத்
தவம் போலத் தம்மைத் தூய்மைப் படுத்தும் நேரம்.
இதற்காக ஆசிரியர் மேற்கோள் காட்டிய புத்தகங்கள்: யஜுர் வேத தைத்ரிய ஸம்ஹிதா,
ஆங்கீரஸ ஸம்ஹிதா, ஷுஷ்ருத ஸம்ஹிதா மனு ஸ்மிரிதி முதலியன.
அவை என்ன சொல்கின்றன?
  1. மாதவிடாய் இயற்கை நிகழ்வு.
  2. கரு முட்டைகள் கருவாகுமுன் உடைவது இந்திரனின் பாப நிவர்த்தி. (ஒருமுறை இந்திரனுக்கு பிரும்மஹத்தி தோஷம் ஏற்பட்டபோது மூன்றில் ஒரு பங்கை பூமியும், மற்ற இரண்டு பங்கை மரங்களும் பெண்களும் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டனர். இதனால் பூமியில் பள்ளங்களும், மரத்திற்குப் பால் வடிதலும், பெண்களுக்கு மாதவிடாயும் தோன்றின. பதிலுக்கு வரமாக பூமியிலிருந்து தாவரங்களும், மரத்திலிருந்து தளிர்களும், பெண்ணிடமிருந்து புது உயிரும் தோன்றின.
  3. மாதவிடாயின் அந்த மூன்று நாட்கள் அசுத்தமானது. உடலிலிருந்து வெளியேறும் எந்தக் கழிவு நீரும் அசுத்தமானதுதான். அந்த மாதிரி நேரங்களில் ஆண் பெண் யாருமே கோவிலுக்குப் போவதோ யாகம் அல்லது சடங்கு சம்பிரதாயங்களில் பங்கு பெறுவதோ தவறு.
  4. அந்த நேரங்களில் பெண்கள் வீட்டு வேலைகளிலிருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும். இது பெண்களின் உடல் ஓய்விற்காக.
  5. அது பெண்களுக்கு ஒரு தவம் போல். அது ஒரு சுய தூய்மைப்படுத்தும் நிகழ்வு. மனத்தை ஒருநிலைக்குக் கொண்டு வரும் முயற்சி.
  6. அது ஒரு பெரிய திருவிழா போன்ற நிகழ்வு.
இந்து சமயத்தில் மாத விடாய் போற்றப்படுகிறது. அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு போன்ற
இடங்களில் திருமணம் போலவே விழா எடுக்கிறார்கள். நாம் மஞ்சள் நீராட்டு விழா பற்றி நன்கு
அறிவோம்.
இந்தக் கருத்துக்கள் பெண்ணுரிமை இயக்கங்களுக்கு மட்டுமல்ல. மற்றவர்க்கும் கோபம்
வரவழைக்கும். ‘இந்திரன் ஏன் மூன்றில் ஒரு பங்கு தோஷத்தைப் பெண்களுக்குத் தர வேண்டும்?
ஏன் தனிமைப்படுத்த வேண்டும்? அது என்ன தவம்?
நிதின் ஸ்ரீதர் ஆயுர்வேதம், யோக சாஸ்திரத்திலிருந்து விளக்கம் தருகிறார்.
“மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ரஜோகுணம் உச்சத்தில் இருக்கும். கோபம் வெறுப்பு ஆத்திரம்
எல்லாமே அதிகமாக வெளிப்படும். அபான வாயு அதிகமாக வெளியே விடுவார்கள். இது உடலின் சமான,
உடான போன்ற மற்ற வாயுக்களை சீர்குலைத்து பிராணவாயுவைப் பாதிக்கும். இதனால்தான் இந்த
நிலையில் பெண்கள் யாகம் உள்ளிட்ட சம்பிரதாயச் சடங்குகளில் கலந்து கொள்ளக்கூடாது. மனம்
சஞ்சலப்படும். ஆண்களுக்கும் இந்தத் தடை உண்டு. உதாரணமாக ‘சாவுத் தீட்டு
. அதனால் பெண்கள்
தாழ்த்தப்படுகிறார்கள் என்ற வாதம் தவறு
என்கிறார் ஆசிரியர்.
ஆயுர் வேதம், பெண்கள் மாதவிடாய்த் தருணத்தில் ஒய்வடுத்தல் அவசியம் என்கிறது.
மிக்க கடினமான வேலை செய்வது அவர்கள் உடல் நிலையைப் பாதிக்கும். சாத்வீக உணவு ரஜோ குணத்தை
மட்டுப்படுத்தும் என்றும் சொல்கிறது.
தாந்த்ரீகம்
இப்பிரிவில் பெண் தெய்வமாகிறாள். சக்தியாக வழிபடப்படுகிறாள். அஸ்ஸாமில் காமாக்யா
கோவில் ஒரு சக்தி பீடம். இங்கு யோனி ரூபத்தில் வழிபாடு. அம்மனுக்கு மூன்று நாள் மாதவிலக்கு
சமயம் கோவில் மூடப்படும். அங்கு இயற்கையாக நீர் ஊறும். அதை சிவப்புத்துணியால் மறைத்து
விடுவார்கள். நாலாம் நாள் நீராட்டல். பின் பிரசாதம். கேரளாவிலும் பகவதி கோவிலில் சபரிமலை
கோவிலின் முக்கிய நம்பூதிரியின் மனைவி, தேவியின் ‘உடையாடையை
சோதித்து பகவதியின்
மாத விலக்கை அறிவிப்பார். தேவி தனி அறைக்கு அழைத்துச் செல்லப்படுவார். நான்காம் நாள்
பம்பை நதியில் ‘திருப் புத்தாராட்டு
க்குப் பின் பூஜை. சிவப்புத்துணி பிரசாதம்.
அஸ்ஸாமில் பூமித்தாய்க்கும் மாதவிடாய் உண்டு. அந்த நேரம் நிலம் உழுவது கூடாது.
பூமிக்கு ஓய்வு தருவதற்காக. கர்நாடகாவில் துளு மக்களும் பூமியின் மாதவிடாயைக் குறிப்பிட்ட
நாட்களில் ‘கேடஸ்ஸா
என்னும் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள்.
தாந்த்ரீக வழிபாட்டில்
மாதவிடாய்
இங்கு வியப்புறும் (இன்று அருவருக்கும்) வண்ணம் மாதவிடாய் பூஜிக்கப்படுகிறது.
பெண் என்பவள் சக்தி. ஆண் என்பவன் சிவன். பெண்ணின் மாத விடாய் நேரம், ஆண் அவளுடன் உடலுறவு
கொள்ளும் அந்த சிவசக்தி பிணைப்பைப் பூஜை செய்து வழிபட்டால், அந்த ‘அமிர்த நீரை
ப் பருகினால் சித்தி
கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த நேரத்தில் காம உணர்வு அறவே கூடாது.
இந்தக் குறிப்புகள் மூலம் இந்து மதம் பெண்மையையும், மாதவிடாயையும் போற்றுகிறது
என்கிறார் ஆசிரியர்.
தேவிபுரம் என்னும் ஆந்திரப் பிரதேச ஊரில் உள்ள ஸ்ரீ சக்ர வடிவக் கோவிலில் லலிதா
பரமேஸ்வரி அம்மனை யோனி ரூபத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அங்குள்ள அமிர்தானந்த
நாத ஸரஸ்வதி சொல்வதைக் குறிப்பிடுகிறார். “பெண்கள் உயிருள்ள நடமாடும் தெய்வங்கள். இங்கு
பெண்கள்தான் பூஜாரிகள். மாதவிலக்கிலும் பூஜை செய்யலாம். தேவியின் சன்னிதானத்தில் எல்லோரும்
தெய்வங்கள்தான்.
இந்தக் காரணம் சபரிமலை விவகாரத்திற்குப் பொருந்தும் என்ற ஒரு கருத்தும் இங்கு
மெலிதாக வெளிப்படுகிறது. பருவமெய்திய பெண்கள் கோவிலுக்கு வந்தால் பல தேவிகளின் சக்தி
பக்தர்களை ஆகர்ஷித்து, பிரதான தெய்வத்தின் சக்தி சிதறடிக்கப்படும். அதனால் இளம் பெண்கள்
வருவது தடை செய்யப் பட்டது என்றும் வாதிடப்படலாம்.
ஜைனமதம், புத்த
மதம், சீக்கிய மதம்
சமணம், மாதவிடாய்க் காரணத்தினால் பெண்களுக்குத் துறவியாகும் அந்தஸ்தைத் தரவில்லை.
ஸ்வேதாம்பரத் துறவிகள் வயதானபின் துறவு பூண்டாலும் இளம் முனிவர்களுக்குக் கட்டுப்பட
வேண்டும்.
புத்த மதம் பெண்களுக்கு ஆண்களை விட துயரம் அதிகம் என்கிறது.
அவை, பருவமடைதல், கருவுறுதல், பிள்ளைப் பிறப்பு, கணவனுக்கு சேவகம், மாமன் மாமியை
அனுசரிப்பது. இத்தனை தொல்லைகளால் அவர்களால் ஞானம் பெற்று முக்தி அடைய முடியாது.
ஆனால் சீக்கிய மதம் மாதவிடாயிலும், பெண்கள் குருத்வாரா போக, பஜனை, பிரார்த்தனைச்
சடங்குகளில் பங்கெடுக்க அனுமதிக்கிறது. பாவம் என்பது மாதவிடாயில் இல்லை. பொய் சொல்வது,
பிறன் மனை விழைவது, பிறர் பொருளை அபகரிப்பதுதான் பாவம் என்பது அதன் கொள்கை.
நிதின் ஸ்ரீதர்
ஆசிரியர் இங்கு சொல்லுகிறார், “இந்துப் பெண்கள் கோவில் போக முடியாமல் சடங்கு,
யாக வேள்விகளில் கலக்க முடியாவிட்டாலும் பக்தி மார்க்கத்தில் துறவிகளாகலாம்; மாதவிடாய்த்
தருணத்தில் தவறாக, தீண்டல் கலந்திருந்தால் வயதானபின் எடுக்கும் ரிஷி பஞ்சமி விரதம்
அதற்குப் பிராயச் சித்தம். ஆங்கீரஸர், வஸிஷ்டர், காச்யபர், விஸ்வாமித்திர், அத்திரி
போன்ற ரிஷிகள் அதற்கு அருளுகின்றனர்.
இந்த வாதங்கள் எல்லாமே இன்றைய காலகட்டத்தில் செல்லாக் காசாகிவிட்டன. இதை ஆசிரியர்
ஒத்துக் கொள்கிறார். புது யுகப் பெண்களுக்கு விலகுவது, வேலை செய்யாமல் இருப்பது எல்லாமே
முடியாத காரியம். கூட்டுக் குடித்தனங்கள் போய் விட்டன. எல்லாமே மூடநம்பிக்கை என்ற கருத்து
பரவலாகி விட்டது.
ஆசிரியர் அதன் காரணம் ஆங்கிலக் கல்வி, நகரமயமாக்குதல் விளம்பரங்கள் மேற்கத்திய
நாகரீகத்தின் தாக்கம் எல்லாவற்றையும் சுட்டிக் காட்டுகிறார்.
க்ரீக், ரோம, எகிப்திய,
சுமேரிய, மெஸபடோமிய நாகரிகங்கள்
இவை அனைத்திலும் மாதவிடாய் எனும் நிகழ்வு அசுத்தமாக, புனிதமற்றதாக, ஆண்களுக்கும்,
பண்ணை மிருகங்களுக்கும் தீங்கு உண்டுபண்ணும் நிகழ்ச்சியாகவே இருந்தது. பெண்கள் ஒரு
தவிர்க்கப்பட வேண்டிய பிறவிகள் என்ற கீழ்த்தர நோக்கம் கொண்டிருந்தனர். விலக்கி வைத்தல்,
குறைவான உணவு கொடுத்தல் எல்லாமே அவர்களிடமும் இருந்தன. முக்கியமாக, கணவன் மனைவி உறவு
கட்டாயத் தடையாயிருந்தது.
இதற்குத் தண்டனையும் இருந்தது. இந்து தர்மத்தில் குழந்தை ஊனமாகப் பிறக்கும்
என்று ஸம்ஹிதிகள் சொல்லுகின்றன. யூத மதம் அவர்களை ஊரை விட்டே விலக்கி விடுகிறது. குழந்தை
பிறக்கும் சமயம் அப்படிப்பட்ட பெண்கள் இறந்து விடுவார்கள் என அவர்கள் பிரார்த்தனையிலேயே
சொல்லப்பட்டிருக்கிறது.
தென் வட அமெரிக்கப் பழங்குடிகளின் நிலைப்பாட்டையும் அலசுகிறார். மாதவிடாய் தூய்மை,
புனிதமற்றது. அவர்களுக்கும் விலகல், தனிமைப்படுத்தல் உண்டு. ஆனால் சற்றுக் கொடுமையானது.
காட்டிற்குள் போய்விட வேண்டும். பாம்பு கடித்து இறந்தால் மற்றவர்களுக்குக் கவலை இல்லை.
பின் நாட்களில் கொஞ்சம் மாறி குடிசைக்குள்ளேயே ஒரு பரண் போட்டுத் தங்கினார்கள். ஆணைப்
பார்த்தால் அவன் மரணம் அடைவான். அவள் சமைத்தால் அது விஷமாகி விடும். உணவும் மிக்க குறைவாக,
அவர்களே சமைத்து உண்ண வேண்டும். உண்ட மண் பாத்திரங்களைப் பூமியில் புதைக்க வேண்டும்.
ஏனெனில் அவற்றைத் தொட்டால் மாடு ஆடு போன்ற உயிரினம் இறந்து விடும்.
இவை எல்லாமே மூட நம்பிக்கை. தவிர, ஆண் மகன் உயிர் முக்கியம் என்ற ஆணாதிக்க நோக்கத்தைக்
காட்டுகிறது. ஏவாள் செய்த பாவத்தினால் ஆண் புனித நிலை இழந்துவிட்டான். அந்தப் பாவத்தின்
பலன்தான் பெண்களுக்கு மாதவிடாய் சாபமாக மாறியது என பைபிள் கூறுகிறது.
யூதர்கள் மாதவிடாயின் முதல் 5 நாட்களை ‘நிட்டா (Niddah) என்று
அழைத்தார்கள். அடுத்த ஏழு நாட்கள் சுத்தமில்லாத தினங்கள். அச்சமயம் ஆண்கள் பெண்ணின்
துணிகள், அவளின் வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றை உபயோகிக்கக் கூடாது; அவள் பாடல்களைக்
கேட்கக் கூடாது; பெண்ணிற்கும், அவனுக்கு மது ஊற்றக் கூடாது; அவன் கால் கழுவக்கூடாது;
அவன் படுக்கையை விரிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள்.
இந்துக் கலாசாரத்தில் துர்காவும் புவேனேஸ்வரியும் எப்படி பூப்பெய்திய பெண்களுக்குக்
காப்போ அதுபோல் கிரேக்கர்களுக்கு ‘ஆர்ட்டிமிஸ்
என்ற பெண் தெய்வம் காப்பு. ஒரு பெண்
பூப்பெய்தினால் ஏதன்ஸ் நகரில் கரடி நடனம் ஆடுவார்கள். முரட்டுக் கரடியை (ஆர்ட்டிமிஸ்ஸின்
செல்லப் பிராணி) அடக்குவார்கள். அதன் பொருள், அதுவரை அந்தச் சிறுமிக்கு இருந்த திமிர்த்தனம்
அடங்கி அவள் திருமணத்திற்குப் பக்குவமாகி விடுவாளாம். ஆர்ட்டிமிஸ் அச்சிறுமியைப் பிள்ளைப்
பேறு சமயத்தில் காப்பாற்றுவாளாம்.
அதே போல் ரோமாபுரியில் சிறுமிகளைக் காக்கும் கடவுள் டயானா. மெஸபடோமிய நாகரீகத்தில்
(இப்போதைய இராக், குவெய்ட், ஸிரியா, துருக்கி) யில் இஷ்டார், இனன்னா. டயானா நிலவுடன்
சம்பந்தப்பட்ட கடவுள். இஷ்டார் வீனஸுடன் தொடர்புடைய தெய்வம். பூப்பெய்தல் நடனத்தில்
வழியெங்கும் உதிரத்தைத் தெளித்துக்கொண்டு போய், கடைசியில் இஷ்டார் கடவுளின் சிலையில்
தெளிப்பார்களாம்.
இத்தனை சுவாரஸ்யமான கதையைச் சொன்ன ஆசிரியர் இத்தனையுமே இடைக்கால ஐரோப்பாவில்
மூட நம்பிக்கையென்று தகர்த்தெறியப்பட்டுவிட்டது என்கிறார். பொ.யு. 70ல் ஜெருசலேம் கோவில்
உடைந்த பின்னர் மாதவிடாய்ப் பெண்கள் கோவிலுக்குப் போகக்கூடாது என்ற தடை நீங்கியது.
ரோமில் ‘மியாஸ்மா என்ற மாதவிலக்குத் தீண்டல் நடைமுறையில் இருந்தது. எந்தப்
பாதிரி இறந்தாலும் சர்ச்சைப் புனிதப்படுத்தும் சடங்கும் இருந்தது.
ரஷ்யாவில் மாதவிடாய்ப் பெண்கள் ‘அல்டார் அருகில் போகத்தடை. ஸ்பெயின், போர்ச்சுகலில்
அப் பெண்கள் செம்மறி ஆடுகள் அருகில் போனால் அவைகளின் பால் வற்றி விடும். ஆனால் இடைக்
காலத்தில் (medieval Europe) கிறுத்துவ மதம் எல்லா விதிகளையும் தளர்த்தியது. மாதவிலக்குக்
காலங்களில் பெண்கள் கண்டிப்பாக சர்ச்சிற்கு வரவேண்டும் என்றது. பெண்களே தம்மிடம் புனித
ஆவி இல்லை, தீய ஆவிதான் உண்டு என்று நினைத்த தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிந்தது.
மாதவிடாய் நேரத்தில் எல்லோரும் செய்வினை, பில்லி சூனியக்கார்களாவார்கள், பேய்
பிசாசுகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என்று லட்சக் கணக்கான பெண்களைக் கொன்று குவித்தனர்.
இது இங்கிலாந்தின் மிக மோசமான கறைபட்ட சரித்திரம்.
இத்தகைய மேற்கத்திய சிந்தனைகள் இநதியாவில் பரவி நம் எண்ணங்களைச் சீர்குலைத்து
பண்பாட்டையும் சிதைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார் ஆசிரியர்.
மற்ற மதங்களில் மாதவிடாய் என்பது பாவம். ஆனால் நம் கலாசாரத்தில் அது புனிதம்,
போற்றப்பட்டது என்கிறார்.
புதுயுகப் பெண்கள் அது மறைக்கப்பட வேண்டிய விஷயம் என்று நினைக்கிறார்கள். தான்
என்றும் போல் எல்லா வேலையும் செய்வேன் என்பதெல்லாம் மேலை நாட்டைப் பின்பற்றுவதால் வந்த
சீர்குலைவு. ஆயுர் வேதம், உடலுக்கு ஓய்வில்லை என்றால் பின்னாளில் பல பிரச்சினைகள் உருவாகும்
எனக் கூறுவதை மேற்கோள் காட்டுகிறார்
ஆசிரியரின் இறுதிச் சொற்கள்: “ஒருதலைப் பட்சமான கண்ணோட்டத்துடன் பார்க்காமல்,
இந்திய கலாசாரம் மற்றும் இதர நாகரீகங்களிலும் மாதவிடாய் எப்படி நோக்கப்பட்டது என்று
புரிய வைக்கும் ஜன்னலாக இப்புத்தகம் உதவும் என்று நினைக்கிறேன்
என்கிறார்.
நீண்ட நாளாய் வாழ்ந்து தழைக்கும் இந்து தர்மத்தின் மேல் அவர் வைத்துள்ள ஆசை,
மதிப்பு ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது.
ஒரு டைம் மெஷினில் பல்லாயிரம் வருடம் பயணித்த அனுபவம். பல கதைகள். பல கலாசாரங்கள்.
பல பழக்க வழக்கங்கள். நம்பிக்கைகள். மறுக்க முடியாத சரித்திர உண்மைகள். மறக்க இயலாத
பண்பாட்டுக் கலாசாரங்கள். சிலர் ஒத்துப் போகலாம். சிலர் விவாதம் பண்ணலாம்.
ஒன்று நிச்சயம். நிதின் ஸ்ரீதர், மிக மெதுவாகப் பேசப்படும் ரகசியமான ஒரு விஷயத்தை,
பண்டைய புராதனமான கலாசாரங்கள் எந்தக் கோணத்தில் நோக்கின என்பதை நல்ல புரிதலுடன் அலசிப்
பார்க்க நமக்கு ஒரு சுவாரஸ்யமான சுற்றுப்பயண அனுபவம் கொடுத்திருக்கிறார்.

Leave a Reply