Posted on Leave a comment

சேவையே வாழ்வாக: பிரதாப் சந்திர சாரங்கி | ஜடாயு

Image result for pratap chandra sarangi
2019 மே 30ம் தேதி மோதி 2.0 அரசின்
பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோதியைத் தொடர்ந்து
அமைச்சர்கள் ஒவ்வொருவராக சம்பிரதாயமாக பதவியேற்றுக் கொண்டிருக்கின்றனர்.  பிரதாப் சந்திர சாரங்கி என்ற பெயர் கூறப்படும் போது
கூட்டத்திலிருந்து மாபெரும் கரவொலிகளும் பாரத்மாதா கீ ஜெய் கோஷங்களும் எழுகின்றன. அந்த
ஒடிசலான மனிதர் மேடையில் நடந்து வரும்போது, 
மோதி, அமித் ஷா இருவரும் கைகூப்பி பணிவோடு வணங்குகின்றனர்.  இத்தகைய பெருமைக்கும் மதிப்புக்கும் உரிய ஒதிஷா
பாஜக தலைவர்களுள் ஒருவரான 64-வயது சாரங்கி, இந்திய அரசின் கால்நடைகள், பால்வளம், மீன்வளம்
& சிறு-குறு-தொழில் துறைகளுக்கான மத்திய இணை அமைச்சராக அறிவிக்கப் பட்டிருக்கிறார்.  இவரது  அப்பட்டமான
எளிமையும்,  நேர்மையும், தன்னமலமற்ற சேவையும்
ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஒதிஷாவின் பலாஸோர் (Balasore) பாராளுமன்றத்
தொகுதியில்  பிஜு ஜனதா தளக் கட்சியின் ரவீந்திர
ஜேனா என்ற பிரபல தலைவருக்கு எதிராகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார் சாரங்கி. இதற்கு
முன்பு  2004 மற்றும் 2009 தேர்தல்களில் வென்று
தனது சொந்த ஊரான நீலகிரியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.
1955ல் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து,
1975ல் பட்டப் படிப்பை முடித்த சாரங்கிக்கு, சிறுவயது முதலே ஆன்மீக நாட்டம் இருந்தது.  ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.  தனது இருபதுகளிலேயே, சன்னியாசியாகும் விருப்பத்தைத்
தனது குருவும் அப்போதைய பேலூர் ரா.கி.மடத் தலைவருமான சுவாமி ஆத்மஸ்தானந்தாவிடம் தெரிவித்தார்.  அவரது மனப்பாங்கு துறவறத்திற்கு முற்றுலும் தகுதியானது
என்று சுவாமிஜி கருதினாலும்,  ஒரு மகனாக விதவைத்
தாயாரை இறுதிக் காலம் வரை கவனித்துக் கொள்ளும் முதன்மையான தார்மீகக் கடமை அவருக்கு
உண்டு என்று அறிவுறுத்தி சன்னியாசம் தர மறுத்து விட்டார்.  மக்களுக்கு, குறிப்பாக அவரது பிரதேசத்தில் வாழும்
பழங்குடி மக்களான வனவாசிகளுக்கு தன்னமலமற்ற சேவை செய்வதன் மூலமே தெய்வீக நிலையடையலாம்
என்று ஆசிர்வதித்தார்.  தனது சேவைப்பணிகளுடன்
கூட, 2018ல் தனது தாயாரின் மறைவு வரை சாரங்கி அவரை அருகிருந்து கவனித்து பணிவிடை செய்து
வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது குருவின் ஆணையை ஏற்ற சாரங்கி,
ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துடன் முழுமையாகத் தன்னை இணைத்துக் கொண்டார். கண சிக்ஷா மந்திர்
யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பலாஸோர், மயூர்பஞ்ச் மாவட்டங்களின் வனவாசி மக்களுக்காக  ஸமர் கரா கேந்திரா எனப்படும் பள்ளிகளைத் தொடங்கினார்.  இவை படிப்படியாக வளர்ந்து அப்பகுதிகளில் கணிசமான
வனவாசி மக்களுக்கு  தரமான கல்வியை அளித்து வருகின்றன.
இதோடு கூட, அடிப்படை சுகாதாரம், கிராமியத் தொழில் அபிவிருத்தி, வனவாசிகளின் உரிமைகளைப்
பாதுகாத்தல் என்று பல தளங்களில் அவர் செயலாற்றி வருகிறார்.   ‘நானா’ (மூத்த சகோதரர்) என்று அப்பகுதி மக்களால்
பிரியத்துடன் அழைக்கப் படும் சாரங்கியின் சேவையைப் பற்றிய விவரங்கள் எந்தப் படாடோடமும்
இல்லாமல் கிராம மக்களின் பேச்சுகள் செவிவழிச் செய்திகள் வழியாகவே பரவின. அதன்பின்பு
பா.ஜ.க அவரைத் தலைவராக முன்னிறுத்தியது. அரசியல் தலைவராக ஆனபிறகும் அவர் தனது தேர்ந்தெடுத்த
இலட்சிய வாழ்க்கையில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் இயல்பாகவே வாழ்ந்து வந்தார்.  சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது தனக்குக் கிடைத்த
நிதி, சம்பளம், அதன்பிறகு கிடைத்த ஓய்வூதியம் அனைத்தையும் சேவைப்பணிகளிலேயே செலவிட்டார்.  2019 தேர்தலின் போதுதான்,  ஓலைக்கூரை வேய்ந்த குடிசை வீடே அவரது வசிப்பிடமாக
இருப்பதும்,  கட்சிப் பணிகளுக்கும் பிரசாரத்திற்கும்
தனது சைக்கிளிலேயே அவர் சென்று வந்து கொண்டிருக்கிறார் என்பதும் ஒதிஷாவிற்கு வெளியே
பரவலாகத் தெரிய வந்தன. ஒதிஷாவின் கந்தமால் போன்ற பழங்குடியினர் மாவட்டங்களில் தலைவிரித்தாடிய
கிறிஸ்தவ மிஷனரிகளின் மதப்பிரசார, மதமாற்ற செயல்பாடுகளும்  அதற்கான வனவாசி சமூகங்களின் எதிர்வினைகளும்
1990கள் தொடங்கி வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தன. 
சாரங்கி செயலாற்றும் பகுதிகளில் அதன் பாதிப்பு தீவிரமாக இல்லாததற்குக் காரணம்  இத்தகைய சேவைப்பணிகளும், அதனுடன் இணைந்த அவரது அரசியல்
பின்னணியுமே ஆகும்.
சாரங்கி அமைச்சரானதைத் தொடர்ந்து,  இந்து விரோத செக்யுலர் ஊடகங்கள் அவருக்கு எதிராக
பொய்ப் பிரசாரங்களை உடனே ஆரம்பித்து விட்டன. 
1999ல்  ஒதிஷாவின் கியோஞ்சார் மாவட்டத்தில்
மனோஹர்பூர் என்ற ஊரில் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் என்ற ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மிஷனரியும் அவரது
மகன்களும் ஜீப்பில் எரித்துக் கொல்லப் பட்ட வன்முறைச் சம்பவம் நிகழ்ந்தது.  இந்தப் படுகொலையை விசாரணை செய்வதற்காக அமைக்கப்
பட்ட வாத்வா கமிஷன் ஸ்டென்ய்ஸ் அந்தப் பகுதிகளில் சில ஆண்டுகளாகவே கடும் மதமாற்றப்
பிரசாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளதையும் அதனால் கணிசமான அளவில் வனவாசிகளின் கோபத்திற்கு
ஆளாகியுள்ளதையும் பதிவு செய்தது. சி.பி.ஐ விசாரணையைத் தொடர்ந்து 2003ல் தாராசிங் உள்ளிட்ட
12 பேரை குற்றவாளிகளாக விசாரணை நீதிமன்றம் உறுதி செய்தது.  தாராசிங் பஜ்ரங்க் தள் அமைப்பின் முன்னாள் உறுப்பினராக
இருந்து கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து வெளியேறியவர்;  மற்றபடி இந்தக் குற்றச்செயலுக்கும்  பஜ்ரங்க தளம் அமைப்பிற்கும்  எந்த தொடர்பும் இல்லை. இது தனிப்பட்ட அளவில் திட்டம்
தீட்டிச் செய்யப் பட்ட வன்முறைச் செயல் என்று நீதிமன்றம் தெளிவாகவே கூறியிருக்கிறது
[1].  இந்நிலையில், அந்தக் குறிப்பிட்ட
காலகட்டத்தில்  பஜ்ரங்க தளம் அமைப்பின் தலைமைப்
பொறுப்பில் சாரங்கி இருந்ததால்,  அவருக்கும்
அந்தச் சம்பவத்தில் தொடர்பு உண்டு  என்று முற்றிலும்
ஆதாரமற்ற அவதூறு பிரசாரம் செய்யப் படுகிறது. 
அவர்மீது உள்ள கிரிமினல் வழக்குகள் அரசியல் விரோதம் காரணமாகப் பதியப்பட்டவையே
அன்றி அவற்றுக்கும் இந்த வன்முறைச் சம்பவத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை.  காங்கிரஸ், இடதுசாரி, திருணமுல் போன்ற இந்துவிரோத
கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ்., பாஜக தலைவர்கள் மற்றும் இந்து சமூக
சேவகர்கள் மீது  பொய்வழக்குகளைப் போடுவதை ஒரு
வழக்கமாகவும் உத்தியுமாக வைத்திருக்கின்றனர் என்பது நன்கு தெரிந்ததுதான் (சமீபத்திய
சபரிமலை விவகாரத்தின் போது கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் மீது அங்குள்ள பிணராயி விஜயன்
தலைமையிலான இடதுசாரி அரசு ஒரே வருடத்திற்குள் 200க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளைப்
போட்டிருப்பது ஏளனத்திற்கும் நகைப்பிற்கும் ஆளாகியுள்ளது).   இத்தகைய அவதூறுப் பிரசாரம் முளையிலேயே கிள்ளி எறியப்பட
வேண்டும்.
சம்ஸ்கிருத மொழியில் நல்ல புலமையும்,  அதன்மீதான ஆழ்ந்த பற்றும் சாரங்கியின் ஆளுமைக்கு
இன்னொரு சிறப்பான பரிமாணத்தை அளிக்கின்றன. 
சம்ஸ்கிருத பாரதி என்ற அமைப்பின் முக்கியமான காரியகர்த்தராக உள்ள சாரங்கி, வனவாசி
மக்களிடத்திலும் சம்ஸ்கிருதக் கல்வியைப் பரவலாக்கியுள்ளார். அவரது முயற்சிகளால் சுமார்
100க்கும் மேற்பட்ட வனவாசி இளைஞர்கள் பட்டப்படிப்பில் சம்ஸ்கிருதத்தை முக்கியப் பாடமாகப்
பயிலும் அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். சிலர் திருப்பதி ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத சம்ஸ்தான்
போன்ற பிரபல சம்ஸ்கிருத உயர்கல்விக் கூடங்களிலும் பயில்கின்றனர்.   சமீபத்திய தேர்தல் வெற்றிக்குப் பிறகு தூர்தர்ஷனில்
வந்த சம்ஸ்கிருத நேர்காணலில்  இனிய, எளிய சம்ஸ்கிருதத்தில்
தனது வாழ்க்கைப் பயணம் மற்றும் சமூக, சிந்தனைகளை அவர் பகிர்ந்து கொண்டார் [2].  “மீனவப் பெண்ணின் திருமகனாக அவதரித்த வியாசர்தான்
வேதங்களைத் தொகுத்து நெறிப்படுத்தினார்.  மீனவர்கள்,
வனவாசிகள் உட்பட இந்து சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வேதம் பயின்று ஞானம்
பெறுவதற்கான அதிகாரமும் தகுதியும் உண்டு” என்ற தனது கருத்தையும் விளக்கினார்.  உண்மையில் அவரது குடும்பப் பெயர் ஷடங்கீ என்பதும்,
அது ஒதிஷா உச்சரிப்புடனான ஆங்கிலத்தில் Sarangi என்று ஆகியுள்ளதும், இந்த நேர்காணலில்தான்
எனக்குத் தெரிய வந்தது. ஷடங்கீ  என்றால் ஆறு
வேத அங்கங்களையும் பயின்றவர்கள் என்பது பொருள் (சதுர்வேதி என்பது போல).  ஒரு ரிஷியாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கர்மயோகிக்கு
மிகவும் ஏற்ற பெயர்தான்.  
அரசியல் களத்தில் பணபலம்,  வாரிசு உரிமை, அதிகார பின்னணி போன்றவை அப்பட்டமாகக்
கோலோச்சி வரும் சூழலில்,  பிரதாப் சந்திர சாரங்கி
என்ற மனிதரின் மாபெரும் எழுச்சி  தியாகம், சேவை,
இலட்சியவாதம், எளிய வாழ்க்கை ஆகிய விழுமியங்களின் மீதான இந்திய மக்களின் நம்பிக்கைகளை
உறுதிப்படுத்தும் ஒளிக்கீற்றாக வந்திருக்கிறது என்றே கூறலாம்.
*
சுட்டிகள்:

Leave a Reply