அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’: அறியப்பட்ட ஆளுமைகளின் அறியப்படா முகங்கள் | செ.ஜகந்நாதன்
தமிழறிஞர்கள், அ.கா.பெருமாள், காலச்சுவடு.

காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’ என்னும் நூல் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த, பழந்தமிழ் இலக்கியங்களுடன் தொடர்புடைய 40 தமிழ் அறிஞர்களைப் பற்றிய தொகுப்பு நூல்.

ஐந்து ஆண்டுகாலம் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் இடம்பெற்றுள்ள 40 நபர்களைத் தவிர மேலும் 80 பேரைப் பற்றிய தகவல்களை ஆசிரியர் சேகரித்து வைத்துள்ளதாக முன்னுரையில் கூறுகிறார். அச்செய்திகளும் எதிர்காலத்தில் நூலாக்கம் பெறக்கூடும்.

நூலில் இடம்பெற்றுள்ள 40 நபர்களும் சீரான தன்மை உடையோர் அல்லர். தனித்தமிழை முன்னிறுத்திய மறைமலையடிகள்; தேவநேயப்பாவாணர்; தமிழொடு வடமொழிப் பேரறிவும் வாய்க்கப் பெற்ற பண்டித மணி கதிரேசஞ் செட்டியார்; திராவிடச் சார்பாளர் எனத் தமிழறிஞர்களாலும் திராவிடக் கொள்கையை எதிர்த்துப் பேசியவர் என திராவிட இயக்கத்தவர்களாலும் ஒரு சேரப் புறக்கணிக்கப்பட்ட கா.அப்பாத்துரையார் எனப் பல்வேறு சிந்தனைத் தளங்களில் செயல்பட்ட ஆளுமைகளை அறிமுகம் செய்யும் வகையில் நூல் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆளுமையைப் பற்றிய கட்டுரையைத் தொடங்கும்போதும் சுவாரசியமான அறிமுகத்துடன் வாசகர்களைக் கட்டுரைக்குள் அழைத்துச் செல்லும் உத்தி அழகானது.

தமிழ் அறிவுப் புலங்களில் அதிகம் அறியப்படாதவர்களான, கிரேக்க – சம்ஸ்க்ருத நாடகங்களை ஒப்பிட்டு ஆராய்ந்தவரும் 60,000 உட்தலைப்புகளுடன் கூடிய நாடகக் கலைக் களஞ்சியம் தயாரிக்கத்தகுந்த வல்லமை வாய்க்கப்பெற்றிருந்தவருமான ஆண்டி சுப்பிரமணியம் பற்றியும் தமிழ்ப் பயண நூல் எழுத்தாளர்களில் முன்னோடியான சே.ப.நரசிம்மலு நாயுடு, தமிழ் இலக்கியங்களின் கால நிலையை வானியல் அறிவுடன் ஆராய்ந்த எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை, தமிழ்க் கவிதையியல் திறனாய்வுத் துறையில் புதிய பரிணாமங்களைக் காட்டிய ஆ.முத்துசிவன் போன்ற ஆளுமைகளை அறிமுகம் செய்துள்ளது இந்நூலின் சிறந்த பணி.

அறியப்படாத ஆளுமைகளை அறிமுகம் செய்ததைப் போல தமிழ் அறிவுப் புலங்களில் நன்கு அறியப்பட்டவர்களின் அறியப்படாத முகங்களையும் இந்நூல் அறிமுகம் செய்கிறது.

உதாரணமாக சேரன்மாதேவி குருகுலப் பஞ்சாயத்திற்காகவே அதிகம் விமர்சிக்கப்பட்ட வ.வே.சு ஐயரின் பன்மொழிப் புலமை, தமிழ்மொழிப்பற்று, புத்திலக்கிய ஆதரவு, மொழிபெயர்ப்பு மற்றும் ஒப்பியல் துறை பங்களிப்பு ஆகியவற்றை வ.வே.சு வைப் பற்றிய கட்டுரை திறம்பட எடுத்துரைக்கின்றது.

‘கம்பராமாயண சாரம்’ நூலுக்காகவே பெருமளவு கொண்டாடப்படும் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் கால்நடைகளுக்கு ஏற்படும் வியாதி தொடர்பாக மூன்று நூல்களும் கால்நடை மருத்துவம் சார்ந்த மொழிபெயர்ப்புகளும் செய்தவர் என்பதும், பாரத சக்தி மகா காவியத்துக்காக அதிகம் பேசப்படும் சுத்தானந்த பாரதியார் தமிழிசை இயக்கத்திற்குப் பெரும்பங்காற்றியுள்ளார் என்பதும், ‘கைகேயியின் நிறையும் தசரதன் குறையும்’ போன்ற ஆய்வுகளுக்காகவும் திராவிட இயக்கச் சிந்தனை மரபின் முன்னோடித் தமிழாசான்களாகவும் அறியப்படும் சோமசுந்தர பாரதியாரின் சுதந்திரப் போராட்ட ஈடுபாடும் இந்நூல் தரும் அரிய தகவல்கள்.

தன் 30ம் வயதில் ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளை சிவஞான போதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்ற செய்தியைப் படிக்கும்போது பெருவியப்பு எழுவதைத் தவிர்க்க இயலாது.

அறிஞர்களின் கருத்துக்கு ஏற்புகள் இருந்ததைப் போல் எதிர்ப்புகள் வலுவாகவே இருந்துள்ளன. மா.இராச மாணிக்கனாரின் ‘தமிழர் திருமணத்தில் தாலி’ குறித்து அவருக்கும் ம.பொ.சிக்கும் நடந்த விவாதங்கள் சான்று.

சில சூழல்களில் விவாதங்கள் தீவிரத்தன்மையையும் எட்டியுள்ளன. ‘கனங்குழை’ என்ற திருக்குறள் சொல்லுக்கு அன்மொழித்தொகை என இலக்கணக்குறிப்பு எழுதிய சிவஞான முனிவரின் கருத்தை மறுத்து எழுதியமைக்காக சைவப்பற்றாளர்களான யாழ்ப்பானத் தமிழறிஞர்களுக்குப் பயந்து அரசஞ் சண்முகனாருக்கு இன்சூரன்ஸ் எடுத்து அவரை யாழ்ப்பாணத்துக்குப் பேச அழைத்துப் போக வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.

தமிழின் முதல் எள்ளல் இலக்கியமான மருமக்கள் வழி மான்மியம் படைத்ததும் தமிழ்க் கதைப் பாடல்கள் பற்றி முதன்முதலாக ‘திவான் வெற்றி’ என்ற கதைப் பாடல் பற்றி ஆங்கிலக் கட்டுரை எழுதியதும் தனித்துவப்பணி; செவ்வியல் படைப்புகளான சங்கப் பாடல்கள் கடினமானவை எனினும் அவற்றைப் பிரித்துப் பொருள் புரிந்து படிக்கும் மாதிரியை உருவக்கிய கி.வா.ஜ தான் தமிழின் நாட்டுப்புறவியல் ஆய்வுகளுக்கு முன்னோடி எனச் சில ஆளுமைகள் ஆழமாகத் தடம் பதித்த பகுதிகளை நூல் சுட்டிச் செல்கிறது.

‘அல்லிக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவு பாண்டியர் தொடர்பானது என ராகவையங்கார் கூறும் கருத்து இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டியது’ என்றும், ஏ.சி.செட்டியார் மேற்கொண்ட தமிழ்ச் சமூகக் கட்டமைப்புக்கும் யாப்பிலக்கணத்துக்கும் இடையிலான தொடர்பு விரிவாக அலசப்பட வேண்டும் என்பதும் போன்ற பகுதிகள் எதிர்கால ஆய்வாளர்களுக்கான மேலாய்வுக் களங்களை இனங்காட்டுவன.

திருப்பனந்தாள் மடத்தில் பாவாணருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், ஆண்டி சுப்பிரமணியத்தின் நாடகக் கலைக் களஞ்சியத்தை சென்னைப் பல்கலைக் கழகம் தொலைத்த அதிர்ச்சி என சோகத் தருணங்கள் காணப்படினும் 70 வயதில் மனைவி, மகள், மருமகன் ஆகியோரை இழந்தபோதும் தன் தனிப்பட்ட துக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கம்பராமாயணப் பதிப்புக்காக உழைத்த மு.ராகவையங்காரின் மனவலிமை நமக்கு உற்சாகம் தருகின்றது.

பரிதிமாற் கலைஞர் உரையாசிரியரான நச்சினார்க்கினியருக்கு வெண்கலச் சிலை வைக்க வேண்டும் என வலியுறுத்தினாராம். ‘தமிழ் மொழியின் பேரைச் சொல்லி ஒருவருக்குச் சிலை வைத்து வழிபாட்டை உருவாக்குவது எதிர்காலத்தில் மோசமான சூழ்நிலையை உருவாக்கும்; யோசித்துப் பார்’ எனக் கூறி சில மூத்த தமிழறிஞர் மறுத்தனராம். மொழிவளத்திற்கான சேவை மிகவும் தட்டையாக நடைபெறும் தற்காலச் சூழலில் அந்த அறிஞர்களின் வருவது உரைக்கும் திறன் வியப்பாக உள்ளது.

ஆளுமைகளை அறிமுகம் செய்தல், ஆய்வுக்க களங்களைச் சுட்டுதல், அறிஞர்களின் வாழ்வையும் பணியையும் நோக்கிய தேடலை முடுக்கிவிடுதல் போன்ற வகையில் இந்நூல் தமிழ் இலக்கியச் சூழலில் கவனம் தரத்தக்க தொகுப்பாகும்.

Leave a Reply