Posted on Leave a comment

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள் (கடிதம் 3) | தமிழில்: VV பாலா

கடிதம் 3

திரும்பி பார்க்கையில் ஒரு வருடம் உருண்டோடி விட்டது. அந்த
சந்தோஷமான நாள் திரும்பவும் வந்திருக்கிறது. வீட்டில் இருந்து ஒரு செய்தி வருவதும்
வீட்டிற்கு ஒரு கடிதம் எழுதுவதும் எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் என்பது சிறையில் இருக்கும்
ஒருவருக்குதான் நன்றாகத் தெரியும். நாம் நேசிக்கும் ஒருவருடன் கடற்கரையில் அமர்ந்து
நிலவொளியில் உரையாடுவதைப் போல மனதுக்கு ரம்மியமானது அது. ஒரு நிமிடம் பொறு. மணி அடித்துவிட்டது.
நான் போய் உணவு உட்கொள்ள வேண்டும். காலை மணி பத்தாகி விட்டது… நான் மற்ற கைதிகளுடன்
அமர்ந்து உணவு உட்கொண்டு திரும்பி வந்து விட்டேன். ஆமாம் நான் ஏற்கெனவே சொன்னது போல
அது மிக இனிமையானதுதான். உண்மையில் வீட்டிற்கு கடிதம் எழுதும் நாள்தான் எனக்குப் புத்தாண்டுத்
தினம் போல. என் ஆண்டுக்கணக்கை நான் அன்றிலிருந்துதான் தொடங்குவேன். எனக்கு நெருக்கமானவர்களுடன்
உரையாடும்போது எனக்குப் புத்துணர்ச்சியும் உற்சாகமும் கிடைக்கின்றன. அது என்னை மேலும்
ஒரு வருடத்திற்கு ஜீவித்திருக்கச் செய்கிறது. நான் ஏற்கெனவே கடிதம் எழுதாமல் உன்னைத்
தந்தி கொடுக்க வைத்ததற்கு மன்னிக்கவும். அதிகாரிகள் எனக்கு அதை பற்றித் தெரிவித்திருந்தனர்.
கடிதம் எழுதி ஒரு வருடம் ஆகிவிட்டபடியால் அடுத்த கடிதம் எழுத எனக்கு அனுமதி உண்டென்றாலும்
இங்குள்ள தபால் துரையின் மெத்தனத்தால் கடிதம் எழுதியபின் ஆறு அல்லது ஏழு வாரங்களுக்குப்
பிறகுதான் அது கல்கத்தாவிற்கு அனுப்பப்படுகிறது. அதனால்தான் அடுத்த கடிதத்திற்கு பதினான்கு
மாதங்கள் ஆகின்றது. ஆனால் நீ அனுப்பும் கடிதங்கள் இந்த இருவதாம் நூற்றாண்டில் எத்தனை
சீக்கிரம் வர இயலுமோ அதனை சீக்கிரத்தில் வந்து விடுகின்றது. உன்னுடைய கடிதத்தின் மூலம்
நீ ஆரோக்யமாக இருப்பதையும் நீ தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதையும்
தெரிந்து கொண்டேன். தேர்வுகள் ஒருபுறம் இருந்தாலும் நீங உன் ஆரோக்யத்திற்கு முக்கியத்துவம்
அளிக்க வேண்டும். இளமையான ஆரோக்கியமான உன்னைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆவலாக
உள்ளது. நீ இப்போதுதான் இளமை பிராயத்தினுள் நுழைகிறாய். இப்போது சக்தியும் உத்வேகமும்
அதிகமாக இருக்கும். அதனை எக்காரணம் கொண்டும் யாருக்காகவும் வீணடிக்காதே. உடல் ஆரோக்கியத்தைப்
போல மன ஆரோக்கியமும் முக்கியம். நீயே ஒரு டாக்டர் என்பதால் உன்னிடம் ஆரோக்கியத்தைப்
பற்றி வலியுறுத்துவது தேவையற்ற செயல்தான். ஆனால் இளமைப் பருவத்தில்தான் நாம் கண்மூடித்தனமாக
சில காரியங்களைச் செய்து நம் சக்தி அனைத்தையும் வீணாக்கிக் கொள்வோம். இப்போது சக்தியை
வீணாக்காமல் இருப்பது பிற்காலத்தில் நமக்குத் தேவைப்படும்போது உதவும். இல்லாமல், உன்
கண் பார்வை மங்கினால் நானே உன்னிடம், ‘டாக்டர் உங்கள உடல் நிலையை சீராக்கிக் கொள்ளுங்கள்’
என்று கோபமாகச் சொல்வேன். (நான் சொல்வதைக் கேட்டு உனக்குச் சிரிப்பு வரலாம். நான் டாக்டர்
அல்ல. அதனால் என் கண் பார்வைத் திறன் குறைவது பிரச்சினையில்லை. எல்லா வழக்கறிஞர்களுக்கும்
இந்தப் பிரச்சினை வரும்.) எனக்கு விருப்பமானவர்கள் சிலர் BA மற்றும் MA ஆகியவற்றை முடித்துவிட்டார்கள்
என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இது மிகவும் உயர்வானது. ஆனால் இதனைக் காட்டிலும்
உயர்வான விஷயம் அவர்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டு அதில் வரக்கூடிய தடைகளை நீக்கி வெற்றி
பெறுவது. பலகலைக்கழகங்கள் வழங்கும் பதக்கங்களை விட சமுதாயம் வழங்கும் பதக்கங்களே மிக
உயர்வானவை. நான் இன்னமும் அவர்களை நினைவில் வைத்திருக்கிறேன். அவர்கள் என்னிடம் அந்த
வெற்றியைப் பற்றி நேரடியாகக் கூறினால் நான் மகிழ்ச்சி அடைவேன். அப்படித் தெரிவிக்கச்
சொல்லி உன்னிடம் கூறுபவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு எழுது.
நீ அனுப்பிய புத்தகங்கள் அருமையானவை. ‘மகாத்மா பரிச்சய’
– என்ன ஒரு அருமையான மொழிபெயர்ப்பு! அதன் அறிமுகத்தில் முதல் இரண்டு வரிகளும் பொருத்தமாகவும்
அடக்கமாகவும் இருந்தன. அதன் முதல் சில பக்கங்களைப் படிக்கும்போது அந்த வார்த்தைகளே
என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. அதனை யார் எழுதி இருப்பார்கள் என்று எனக்குத்
தெரியும். புத்தகத்தின் சொல்வளமும் மையகருத்தும் ஒன்றுகொன்று அழகு சேர்ப்பதாய் இருந்தது.
மக்களிடையே பிரபலமாகி உள்ள ‘பாரத் கவ்ரவ் மாலா’ போன்ற தொடர்கள் அரசியல் வரலாறு, விஞ்ஞானம்,
பொருளாதாரம் குறித்த கட்டுரைகளையும் தாங்கி வர வேண்டும். வேதாந்த தத்துவப் புத்தகங்களைப்
பொருத்தவரை நமக்கு அதற்க்கான நேரம் இன்னும் வரவில்லை என்றே நான் கருதுகிறேன். அமெரிக்கர்களுக்கும்
ஆங்கிலேயர்களுக்கும் வேதாந்த தத்துவங்கள் தேவைப்படுகின்றன. அவர்களுடைய வாழ்கை முழுமையான
முன்னேற்றம் அடைந்துள்ளது. அவர்கள் ஷத்ரியத் தன்மையில் இருந்து பிராம்மண தன்மையின்
விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் தத்துவங்களை நிஜ வாழ்வில் செயல்ரீதியாகக்
கொண்டு வருவதற்கான சரியான நிலை அதுதான். ஆனால் இந்தியா தற்போது அந்த நிலையில் இல்லை.
நாம் தற்போது வேத வேதாந்தங்களைக் கற்கும் நிலையில் இல்லை.
சூத்திரர்களுக்கு வேதம் மறுக்கப்பட்டதன் மூல காரணம் இதுதான்.
அது குறுகிய மனப்பான்மையாலோ அல்லது கொடூர சிந்தனையாலோ அல்ல. அப்படியென்றால் அதே தத்துவங்களை
விவரிக்கும் புராணங்களை பிராமணர்கள் எழுதி இருக்க மாட்டார்கள். இவ்வளவு உயர்ந்த தத்துவங்களைப்
பெறுவதற்கு தகுதி இல்லாத நிலையில் நம்முடைய நாடு தற்போது இருக்கிறது. பாஜிராவ் 2 ஒரு
பெரிய வேதாந்தி, அதனாலேயே அவரால் ஒரு தேசத்திற்கும் பென்ஷனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப்
புரிந்து கொள்ள இயலாமல் போய்விட்டது. நாம் வரலாறு, அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம்,
போன்றவற்றைப் படித்து நம் வாழ்க்கைத் தரத்தை முதலில் மேம்படுத்தி கொள்வோம். முதலில்
க்ரிகஸ்தாஸ்ரம தர்மத்தை ஒழுங்காகக் கடைப்பிடித்துவிட்டுப் பிறகு வானப்ரஸ்த ஆஷ்ராமத்தின்
வாயிலில் அடி எடுத்து வைப்போம். இந்த புத்தகங்கள் எல்லாம் தற்போது விதவைகள், முதியவர்கள்,
ஒய்வூதியம் பெற்று வீட்டில் இருப்போர் போன்றவர் படிக்கட்டும். அவர்கள்தான் பழைய நினைவுகளில்
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் படிக்கட்டும் இந்தக் கடவுள், ஆத்மா, மனிதன் போன்றவற்றை
அலசும் புத்தகங்களை! இளைஞர்கள் எதிர்காலம் குறித்த கனவில் வாழட்டும். பெனாரஸ் ஒரு தியாகியைக்
கூட அளித்ததில்லை, அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கென எந்தத் தியாகத்தையும் செய்யவில்லை.
என்னைப் பற்றியும் கொஞ்சம் எழுதுகிறேன். கடந்த ஒரு வருடத்தில்
எனக்கு எந்த நோயும் வரவில்லை. என் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது. உடல் எடையும் குறையவில்லை.
அதுவே ஒரு சாதனைதான் இல்லையா? சிறையின் இந்த சிறு அறையில் நான் தினமும் சீக்கிரம் எழுந்து,
சரியான அளவு உணவை சரியான நேரத்திற்கு உண்டு, சீக்கிரமே படுத்தும் விடுகிறேன். இதனாலேயே
நான் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். வருங்கால டாக்டரான உனக்கு என்னுடைய இந்த அட்டவணை
மிகவும் உபயோகமாக இருக்கும். உடலைப் போலவே என்னுடைய மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது.
இப்போது நான் இருக்கும் சிறை அறையில் தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க
முடிகிறது. அறையில் இருந்தபடியே ரோஜா, லில்லி போன்ற மலர்களைப் பார்கிறேன். அவற்றைப்
பார்க்கும்போது என் மனம் தத்வார்த்த விசாரங்களில் ஈடுபடுகிறது. மிகவும் மகிழ்ச்சியாக
அப்போது நான் உணர்கிறேன். சில சமயங்களில் ஒரு சிறு குழந்தை போல அழவும் செய்வேன். அப்போது
நான் கொண்ட கொள்கை எனக்கு நினைவிற்கு வந்து என்னைத் தேற்றும். தனி மனித சுகத்திற்கோ
அங்கீகாரதிற்கோ வேண்டியா நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கினோம் என்ற எண்ணம் வந்து என்னை
அந்தத் துக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வரும். பெயர், புகழ், சொத்து போன்றவற்றை
எண்ணி நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. சந்தோஷமும் நம்முடைய இலக்கில்லை. இந்தப்
போராட்டத்தில் அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பது தெரிந்தே ஈடுபட்டிருக்கிறோம்.
மற்றவர்களுக்காவும் மனித குலத்திற்காகவும் தியாகம் செய்ய வேண்டியே இதில் ஈடுபட்டிருக்கிறோம்.
அப்படி இருக்க இதில் ஏமாற்றம் எங்கிருந்து வரும்? நாம் செய்வது ஒரு தவம். நம்முடைய
சமுதாயம் மேம்பட ஒவ்வொரு நிமிடமும் உழைக்கிறோம். இதைவிட மேலான காரியம் வேறென்ன இருக்கிறது?
இந்த சிந்தனை மனதில் படர்ந்த உடன் மனம் மறுபடியும் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விடுகிறது.
மனம் அழுந்திக் கிடக்கும்போதெல்லாம் இமயமலையைப் பற்றி எண்ணிக்கொள்வேன். அது உருவாகாத
காலம் ஒன்றிருந்தது. அது இல்லாமல் போகும் காலம் ஒன்றும் வரும். இந்த நிலவு, இந்த சூரியக்
குடும்பம் பற்றி எல்லாம் சிந்திக்கத் தொடங்குவேன். பிரபஞ்சத்தைப் பற்றிய சிந்தனையில்
ஆளும்போது மனம் அதில் ஒரு சிறு துகளாகிய நம்மை மறக்கும்.
எனதருமை பால் (Bal), நாங்கள்
இருவரும் இங்கு நல்ல ஆரோக்
கியத்துடன்
இருக்கிறோம். எங்களைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். எங்களுக்கு இருப்பதெல்லாம் உன்
ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பற்றிய கவலைகள்தான். இவை இரண்டிற்கும் நீ உத்தரவாதம்
அளித்தால் நாங்கள் வேறு எதனைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம். மகிழ்ச்சியாக இருப்போம்.
சிறை வாழ்க்கையினால் நாங்கள் துன்புறவில்லை. அதனையும் மீறி நாங்கள் மகிழ்ச்சியுடன்
இருக்கிறோம். நீ இங்கு வருவதற்கு அதிகாரிகளிடம் கொடுத்த மனு குறித்து எழுதியிருந்தாய்.
இங்குள்ள விதிமுறைகளின்படி நான் இந்நேரம் சிறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு இந்தத்
தீவில் வாழ அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய நடத்தை நல்லபடியாகவே இருக்கிறது.
ஆனால் எங்கள் இருவரையும் வெளியே அனுப்பவில்லை. இதனை மறுபரிசீலனை செய்யக்கோரி அரசிடம்
வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். சீக்கிரத்திலேயே நம்முடைய பாபா ஐந்து வருடங்களைப் பூர்த்தி
செய்து விடுவார். அதன் பிறகு நீ இங்கு வர விண்ணபிக்கலாம். ஆனால் எங்கள் விடுதலையும்,
உறவினர்களை இங்கு அழைத்து வந்து சேர்ந்து வாழ்வதும் நடக்கும் என்று தோன்றவில்லை. மற்ற
கைதிகளுக்கெல்லாம் அது நடக்கிறது. இதற்கு இங்குள்ள அதிகாரிகளையும் குறை சொல்ல முடியாது.
ஏனென்றால் இந்திய அரசின் உத்தரவுப்படியே அவர்கள் செயல்படுகிறார்கள். எனவே இங்குள்ள
அதிகாரிகளிடம் இருந்து ஏதேனும் தகவல் கிடைக்கவில்லை என்றால் நீ நேரடியாக இந்திய அரசிடம்
கோரிக்கை விடுக்கலாம். அரசு நியாயப்படி என்ன செய்ய வேண்டுமோ அதனை ஓரளவு செய்யும். நாங்களும்
அவர்களை நினைவுபடுத்திக்கொண்டே இருப்போம். வேறென்ன செய்வது? நீ உன்னுடைய ஆரோக்கியத்தையும்
பாதுகாப்பையும் பற்றி மட்டும் அக்கறை கொண்டால் போதுமானது. நான் உன்னிடம் உயர் நீதிமன்றத்தில்
சொன்னதை நினைவில் வைத்திரு.
அன்பிற்குறிய யமுனாவிடம் மகிழ்ச்சியான நாள் ஒன்று விரைவில்
விடியும் என்று கூறு. நம்பிக்கையுடன் காத்திருக்கச் சொல்.
நம் அன்புக்குரிய வாஹினியிடமும் நம்பிக்கையுடன்
இருக்கச் சொல்.
அவர்கள் புராணங்களை மட்டுமில்லாமல் மராத்தி இலக்கியங்களையும், உலகின் நவீன படைப்புகளையும்
படிக்கட்டும். நம் சகோதரன் சாகாராமின் மறைவுச் செய்தி கேட்டவுடன் வருந்தினேன். நாங்கள்
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதுதான் சந்தித்தோம். அவன் துணிச்சலுடன் வாழ்ந்தான்,
துணிவுடன் மறைந்தான். இதைவிட வேறு என்ன வேண்டும். அவன் மனைவி ஜானகி வாகினியை நான் நேரில்
பார்த்ததில்லை. நீ வரைந்து அனுப்பிய படங்களின் மூலம்தான் பார்த்திருக்கிறேன். அவர்களின்
நிலை பரிதாபத்திற்குரியது அல்ல. மிகவும் போற்றுதலுக்கு உரியது. அது தனிமையில் இருந்தாலும்
கூட. நான் அவர்களை நினைவில் வைத்திருக்கிறேன் என்று கூறவும். வசந்த் குட்டி எப்படி
இருக்கிறான்? அந்தப் பெரிய மனிதன் எனக்கு ஏதாவது எழுதுவானா? அவனுக்கு இப்போது ஏழு வயதிருக்கும்
இல்லையா? அவன் தாய் எப்படி இருக்கிறார்கள்? நான் அவர்களை டோங்கிரி சிறையில் கடைசியாகப்
பார்த்தேன். ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு ஒரு நல்ல சகோதரிதான்.
வசந்த் குட்டிக்கு என்னுடைய அன்பு முத்தங்களையும் அவனுடைய அம்மாவிற்கு என் அன்பையும்
கூறவும். நம் உறவினர் எல்லோரையும் நான் விசாரித்ததாகக் கூறவும். நான் தமாஷாக அம்மா
என்று அழைக்கும், உனக்கு உறுதுணையாக இருக்கும் அந்த சகோதரியிடமும் நான் விசாரித்ததாகக்
கூறவும். சிறையில் இருப்பதால் நான் அவர்களுடைய பெயரை குறிப்பிடவில்லை. என்னுடைய மனதிற்கு
நெருக்கமானவர்கள் யார் என்று உன்னிடம் கூறியிருக்கிறேன். அவர்கள் எல்லோரையும் நான்
விசாரித்ததாகக் கூறவும். அவர்களில் யாரேனும் தனிப்பட்ட முறையில் அவர்களை விசாரிக்க
வேண்டும் என்று கூறுவார்களேயானால் நான் அவர்களைப் பெயரைக் குறிப்பிட்டு விசாரிப்பேன்.
எனக்கு அனுப்ப வேண்டிய புத்தகங்களின் பட்டியலை அனுப்பி உள்ளேன். நேரமாகி விட்டது, மிகுந்த
தயக்கத்துடன் உன்னிடம் இருந்து விடைபெறுகிறேன்.
உன் சகோதரன்
தாத்யா.

Leave a Reply