Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு: சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 4) – தமிழில்: ஜனனி ரமேஷ்



பகுதி 4
மூன்றாவதாக, அதே
காரணத்துக்காக பேட்ஜின் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் அவரே பேசியதாவது: ‘அடுத்த
5 அல்லது 10 நிமிடங்களில் ஆப்தேவும், கோட்சேவும் கீழே இறங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து
சாவர்க்கரும் உடனே இறங்கினார். கோட்சே மற்றும் ஆப்தேவிடம் சாவர்கர் கூறியதாவது: ‘வெற்றியுடன்
திரும்பி வாருங்கள்’. இந்த வாக்கியத்தை நான் சொன்னேன் என்றே வைத்துக் கொண்டாலும், அது
நிஜாம் ஒத்துழையாமை அல்லது அக்ரணி தினசரிக்கு நிதி திரட்டுதல் அல்லது இந்து ராஷ்ட்ர
பிரகாஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்றல் அல்லது வேறெந்த சட்டப்பூர்வ விஷயத்துக்கான
பொருள்களாகவும், பணிகளாகவும் இருக்கலாம். மாடியில் என்னுடன் ஆப்தேவும் கோட்சேவும் என்ன
பேசினார்கள் என்று பேட்ஜுக்குத் தெரியாத நிலையில் ‘வெற்றியுடன் திரும்பி வாருங்கள்’
என்று எது குறித்து நான் சொன்னேன் என்று அவரால் கட்டாயம் உறுதிப்படுத்த முடியாது.

நான்காவதாக என்
வீட்டை விட்டு வெளியேறி இன்னொருவர் வீட்டுக்கு வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது
நான் ஆப்தேவிடம் சொன்னதாக ஆப்தேவே பேட்ஜிடம் கூறிய ‘காந்திஜியின் நூறு ஆண்டுகள் முடிந்துவிட்டது’
என்பது வெறும் செவி வழிச் செய்தி மற்றும் எங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததாகும்.
காரணம் அது நான் ஆப்தேவிடம் சொன்னதாகவும், அதை அவர் பேட்ஜிடம் சொன்னதாகவும் கூறப்படும்
வரியாகும். இந்த வாக்கியத்தை நான் ஆப்தேவிடம் சொன்னதை பேட்ஜ் நேரடியாகக் கேட்டிருக்க
முடியாது. நான் ஆப்தேவிடம் கூறியதாக பேட்ஜிடம் ஆப்தே பொய் கூட சொல்லியிருக்கலாம். நான்
ஆப்தேவிடம் சொன்னதாகக் கூறப்படுவதை நிரூபிக்கவோ உறுதிப்படுத்தவோ எந்த சாட்சியும் ஆதாரமும்
இல்லை.
எனவே, மக்களிடம்
எனக்கிருக்கும் தார்மிகச் செல்வாக்கைப் பயன்படுத்தித் தங்களது குற்றவியல் கூட்டுச்
சதியை வலுப்படுத்த, பேட்ஜ் பொய் சொன்னாலும் சரி அல்லது கோட்சேவும் ஆப்தேவும் பொய் சொன்னாலும்
சரி, எப்படியிருப்பினும், அந்தக் கூட்டுச் சதிக்கான குற்ற அறிவு அல்லது பங்கேற்புடன்
என்னைத் தொடர்புபடுத்தும் நேரடி மற்றும் பொருள் சான்று இல்லாத நிலையில் என்னைக் குற்றவாளியாக்க
முடியாது.
ஐந்தாவதாக, எல்லாவற்றுக்கும்
மேலாக, கோட்சேவும் ஆப்தேவும் இந்த வாக்கியங்களை பேட்ஜுடன் பேசவே இல்லை என ஆக்கப்பூர்வமாக
மறுத்துள்ளனர். 1948 ஜனவரி 17 அன்று நடைபெற்றதாக பேட்ஜ் கூறும் நிகழ்வை முழுமையாக ஆப்தேவும்
கோட்சேவும் மறுத்துள்ளனர். மேலும் அன்றைய தினம் பேட்ஜுடனோ மற்றவர்களுடனோ, சாவர்க்கர்
சதனுக்கு வண்டியில் பயணிக்கவும் இல்லை, சாவர்க்கரைச் சந்திக்கவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆப்தே மற்றும் கோட்சே கூறியிருப்பது பேட்ஜ் கூறிய முழுக் கதைக்கு முற்றிலும் மாறாக
இருப்பதால் அது பேட்ஜ் சுமத்திய குற்றச்சாட்டின் அடிப்படையையே தகர்த்துவிட்டது.
ஆறாவதாக, சாவர்க்கர்
சதனுக்கு வருகை தந்தபோது ஆப்தே மற்றும் கோட்சேவுடன் இணைந்து ஓட்டுநர் கோஷியானுக்குச்
சொந்தமான டாக்ஸியை வாடகைக்கு எடுத்ததாக பேட்ஜ் கூறியுள்ளார். இந்த டாக்ஸி ஓட்டுநர்
கோஷியான் (பி.டபிள்யூ.80) தனது வாக்குமூலத்தில் (பக்கம் 391 & 392) ‘சிவாஜி பூங்காவில்
நான் டாக்ஸியுடன் காத்திருந்தேன். நான்கு பயணிகள் கீழே இறங்கினர். நான் பார்த்தவரை
எனக்கு வலப்பக்கமுள்ள சாலையின் மூலையிலுள்ள இரண்டாவது வீடு வரை சென்றனர். ஐந்து நிமிடங்களில்
அவர்கள் மீண்டும் டாக்ஸி இருந்த இடத்துக்கு வந்துவிட்டனர்’ எனப் பதிவு செய்துள்ளார்.
பேட்ஜின் கதையை உறுதிப்படுத்த இப்போது இந்த டாக்ஸி ஓட்டநர் அழைக்கப்பட்டிருந்தால்,
இந்நிகழ்வுடன் என்னைத் தொடர்புபடுத்தும் முயற்சியில் அவர் தோல்வி அடைந்துவிட்டார் என்றே
கருத வேண்டும். டாக்ஸி ஓட்டநருக்கு என் வீட்டைச் சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை;
அந்த வீட்டின் பெயர் கூடத் தெரியவில்லை; டாக்ஸியில் வந்த பயணிகள் வீட்டிலுள்ள யாரைச்
சந்திக்க விரும்பினார்கள் என்பது குறித்தும் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை; அது இரண்டாவது
வீடுதான் என்பதை உறுதியாகக் கூறாமல், மேம்போக்காகத், தெளிவின்றி ‘தொலைவில் நான் நின்று
கொண்டிருக்கும் இடத்திலிருந்து பார்க்கும் போது எனக்குப் வலப்பக்கமுள்ள சாலையின் மூலையிலுள்ள
இரண்டாவது வீடு’ என்றுதான் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவர்கள் வீடு வரை சென்றதை
மட்டுமே பார்த்ததாகக் கூறினாரே தவிர அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததைப் பார்த்தேன் என்று
சொல்லவில்லை.
எனவே அவரது சாட்சி,
பேட்ஜ் எனது வீட்டுக்கு வந்ததையும், ஏனைய விவரங்கள் குறித்த அவரது குற்றச்சாட்டையும்
நிரூபிக்கத் தவறிவிட்டது. பேட்ஜின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு மாறாகக் கோஷியானின்
சாட்சி அவருக்கு எதிராகவே அமைந்துவிட்டது. அவர்கள் ஐந்தே நிமிடங்களில் டாக்ஸிக்குத்
திரும்பி விட்டதாகக் கோஷியான் கூறியுள்ளார் (பக்கம் 392). மேலும் குறுக்கு விசாரணையின்போது
டாக்ஸி ஓட்டுநராக நேரத்தின் மீது கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே அவரது நேரத்தின் மீது நம்பிக்கை வைக்கலாம். பேட்ஜின் கதை உண்மையாக இருக்கும் பட்சத்தில்
20-25 நிமிடங்களுக்குள் அவர்களால் டாக்சிக்குத் திரும்பி இருக்கவே முடியாது.
கோஷியான் தொடர்கையில்
‘டாக்சியுடன் வீடு வரை வந்து நின்றுவிட்டதாகவும் அங்கிகிருந்து அறைக்குள் செல்வதற்குக்
குறைந்தபட்சம் பத்து நிமிடங்களாகவது ஆகும்’ என்றார். இதனைத் தொடர்ந்து பேட்ஜ் கூறுகையில்
‘கோட்சேவும், ஆப்தேவும், மாடிக்குச் சென்று ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குப் பிறகு
கீழே இறங்கி டாக்சிக்குத் திரும்பிவிட்டனர்’ என்றார். எனவே இருபது – இருபத்தைந்து நிமிடங்களுக்கு
முன்பாக அவர்களால் டாக்ஸிக்குத் திரும்பி இருக்கவே முடியாது. டாக்சி ஓட்டுநரின் சாட்சி
மற்றும் பேட்ஜ் கதை ஆகிய இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு பின்னவர் (பேட்ஜ்) சொல்வது
நம்பத் தகுந்ததாக இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது. எனவே இரண்டையுமே எனக்கு எதிரான சாட்சியாக
எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்வதே நலம்.
பேட்ஜின் குற்றச்சாட்டை
சங்கர் மறுப்பதைப் பார்க்கவும் (இடதுபக்கம் 24-A குறிப்பைப் பார்க்கவும்).
ஏழாவதாக, இந்த நிகழ்வு
தொடர்பான பேட்ஜின் குற்றச்சாட்டைச் சங்கரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டாக்சியிலிருந்து
சங்கரும் இறங்கி அவர்களுடன் (பேட்ஜ், ஆப்தே, கோட்சே) சாவர்க்கர் சதனுக்குச் சென்றது
மற்றும் அவர்கள் மூவரும் வீட்டுக்குள் நுழைந்தபோது வெளியே காத்திருக்கச் சொன்னது ஆகியவை
குறித்த பேட்ஜின் குற்றச்சாட்டு தொடர்பாகச் சங்கரிடம் நீதிமன்றம் கேள்வி கேட்டபோது
‘சிவாஜி பூங்காவுக்கு அவர்களுடன் டாக்சியில் சென்றேன். அங்கே டாக்சி நின்றது. பேட்ஜ்,
ஆப்தே மற்றும் கோட்சே மூவரும் கீழே இறங்கி எங்கோ சென்றனர். நான் அவர்களுடன் செல்லாமல்
டாக்சியிலேயே தங்கிவிட்டேன். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது எனக்குத் தெரியாது.
நான் சாவர்க்கர் சதன் என்ற பெயரைக் கூட கேள்விப்பட்டதில்லை’ என்று பதிலளித்துள்ளார்.
“காந்திஜியின் நூறாண்டுகள்
எண்ணப்பட்ட வருகின்றன….” என்று ஆப்தேவிடம் தத்யாராவ் சாவர்க்கர் சொன்னதாக, பேட்ஜிடம்
ஆப்தே கூறியது உண்மையா என்று நீதிமன்றம் கேட்ட இரண்டாவது கேள்விக்கு சங்கர் அளித்த
பதில் பின்வருமாறு: ‘அவர்களுக்குள் மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.
நான் டாக்சியின் முன் இருக்கையில் ஓட்டுநருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்ததாலும்,
மராத்தி மற்றும் ஆங்கில மொழிகள் தெரியாததாலும், அவர்கள் பேசியது காதுகளில் விழவும்
இல்லை, புரியவும் இல்லை.’
எனவே ஆப்தே, நாதுராம்
மற்றும் சங்கர் ஆகியோருடன் கோஷியான் ஓட்டுநருக்குச் சொந்தமான டாக்சியில் 1948 ஜனவரி
17ம் தேதி சாவ்ர்க்கர் சதனுக்குச் சென்றதாகப் பேட்ஜ் கூறும் குற்றச்சாட்டை எவருமே உறுதிப்படுத்தவில்லை
என்பதுடன், அனைவருமே முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
நன்றி:
ஃப்ரண்ட்லைன் – தி ஹிந்து
(13) பேட்ஜ் தனது
வாக்குமூலத்தில் (பக்கம் 220) ஆப்தேவுடனும், கோட்சேவுடனும் சேர்ந்து காந்திஜியையும்
மற்றவர்களையும் கொல்வதற்கு தில்லி செல்ல முடிவெடுத்ததற்கு முக்கியக் காரணம் கோட்சேவும்,
ஆப்தேவும், பல முறை தனக்குப் பண உதவி செய்துள்ளதாகக் கூறியுள்ளார்; மேலும் அவர்களுடன்
எப்போதும் இணைந்து செயல்படுவதாகவும், அவர்கள் சொன்னதுபோல் செய்ததாவும் பதிவு செய்துள்ளார்;
தத்யாராவ் சாவர்க்கர் இச்செயலைச் செய்து முடிக்கத் தனக்கு ஆணையிட்டதாக ஆப்தே கூறியதாக
அவர் புரிந்து கொண்டதால், அவரது உத்தரவைச் செய்து முடிக்க வேண்டியது தனது கடமை என்று
பேட்ஜ் நினைத்திருக்கலாம்.
இது குறித்து நான்
சமர்ப்பிப்பதாவது:
முதலாவதாக, இதுபோன்ற
குற்றப் பணியைச் செய்யுமாறு நான் ஆப்தேவிடம் சொன்னதற்கு எந்தத் தனிப்பட்ட ஆதாரமும்
இல்லை. இந்தப் பொய்யை ஆப்தே கண்டுபிடித்திருக்கலாம் அல்லது பேட்ஜ் பொய் சொல்லியிருக்கலாம்.
எப்படி இருப்பினும், நான் மேலும் பதிவு செய்துள்ள காரணங்களின் அடிப்படையில், இந்தக்
குற்றச்சாட்டு மூலம் பேட்ஜ் என்னைக் குற்றவாளியாக்க முடியாது.
இரண்டாவதாக, பேட்ஜ்
சொல்வதுபோல் 1948 ஜனவரி 15 சதித் திட்டத்தில் சேர்ந்துகொள்ள உண்மையிலேயே முடிவெடுத்திருந்தால்,
பிறகு பேட்ஜைப் போன்ற ஒருவர், அவரது சொந்த சாட்சியத்தின்படி, அவரது உயிருக்கோ, தனிப்பட்ட
பாதுகாப்புக்கோ, பொறுப்பற்றவராகவோ மூடனாகவோ இருப்பவராகத் தோன்றவில்லை. சாதாரண மனிதனுக்குள்ள
இயல்பான குணத்தின்படி ஆப்தேவுக்கு இதுபோன்ற செயலைச் செய்ய நான் ஆணையிட்டேனா என்று அப்போதே
என்னிடம் பேட்ஜ் நேரடியாகவே கேட்டிருக்கலாம். மேலும் பேட்ஜ், அவரே கூறியதுபோல், ஆப்தேவுடனும்
கோட்சேவுடனும் சாவர்க்கர் சதனுக்கு இரு நாள்கள் கழித்து, அதாவது 1948 ஜனவரி 17 அன்று
சென்றதாகவும், பேட்ஜ் காதுகளுக்குக் கேட்குமாறு ‘வெற்றிகரமாகத் திரும்பி வாருங்கள்’
என்று நான் அவர்களிடம் சொன்னதாகவும் கூறியுள்ளார். பேட்ஜ் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்
வகையில் இதுபோன்ற பயங்கரமான பணியைச் செய்து முடிக்க நான் உத்தரவிட்டேனா என்று ஆப்தே
மற்றும் கோட்சே முன்னிலையில் அப்போதே உடனுக்குடன் பேட்ஜ் என்னிடம் கேட்டுத் தெளிவு
பெற்றிருக்கலாம். ஆனால் பேட்ஜ் இதுபோல் எதையும் செய்யவில்லை.
மூன்றாவதாக, பேட்ஜ்
உயிருக்கே ஆபத்தாக முடியும் ஒரு பயங்கரமான பணியைச் செய்து முடிக்கத் தில்லிக்குப் புறப்பட்டுச்
செல்லுமாறு, நான் ஆணையிட்டதாகச் சொல்லப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு மீது அவருக்கு
உண்மையிலேயே ஏதேனும் ஆச்சரியமான மற்றும் பொறுப்பற்ற மரியாதை இருக்குமானால், காந்திஜியைத்
தாக்குவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாமல், சம்பவ இடத்திலிருந்து முன் கூட்டியே
ஓடியதும், தலைமறைவாக இருந்ததும், அவரே ஒப்புக் கொண்டதுபோல், ‘தன்னைக் காப்பாற்றிக்
கொள்வதைப் பற்றி மட்டுமே ஏன் எண்ணினார்?’
நான்காவதாக, பேட்ஜ்
ஒருவேளை தில்லிக்குச் சென்றிருந்தால், அது பண விஷயமாக இருந்திருக்கலாம் அல்லது தில்லி
மற்றும் பஞ்சாப்பிலுள்ள அகதிகளிடம் அவர் விற்பனை செய்து கொண்டிருந்த ‘பொருளுக்கு’ மிகப்
பெரிய தொகையை எதிர்பார்த்திருக்கலாம் அல்லது ‘ஆணை’ என்னும் ஆதாரமற்ற குற்றச்சாட்டைத்
தவிர வேறெந்தக் காரணமாகவும் இருந்திருக்கலாம்.
(14) பேட்ஜின் உள்நோக்கமும்
நடத்தையும்: மேலே காணப்படும் பேட்ஜ் சாட்சியத்தை விரிவாக ஆய்வு செய்தத்தில், என்னைப்
பொருத்தவரை, பெருமளவு ஜோடிக்கப்பட்டவை என்பதுடன், எனக்கு எதிராக எந்த மதிப்புமிக்க
ஆதாரமும் இல்லை என்பதும் நிரூபணம். எனக்கு எதிராகத் தவறான சாட்சி அளிக்க வேண்டும் என்னும்
பேட்ஜின் உள்நோக்கமும் தெளிவாகி உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் எப்படியேனும் என்னை
இந்த வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்று காவல்துறை தீவிரமாக முனைவதை பேட்ஜ் தெரிந்துகொண்டார்.
பொது வாழ்க்கையில் மதிப்போடும் கௌரவத்தோடும் வாழும் புகழ்பெற்ற மனிதரை இதுபோன்ற வழக்கில்
சிக்க வைத்தால் மட்டுமே நாடு முழுவதும் செய்தி பரபரப்பாவதுடன் சுய விளம்பரமும் கிடைக்கும்
என்றும், வேறு வழிகளில் கிடைக்காது என்றும், காவல்துறை நம்புவதை பேட்ஜ் உணர்ந்திருப்பார்.
எனவே கடுமையான குற்றச்சாட்டுகளின்
அடிப்படையில் குற்றவாளிக் கூண்டில், கவலை மற்றும் இக்கட்டான சூழலில் உழன்று கொண்டிருக்கும்
பேட்ஜ், எப்படியாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ‘அப்ரூவராக’ மாறுவதுதான் ஒரே வழி என்பதை
அறிந்து கொண்டிருக்கிறார்; எனக்கு எதிராகச் சாட்சியம் அளித்தால் மட்டுமே காவல்துறை
தன்னைத் தவிர்க்க முடியாத அப்ரூவராக ஏற்றுக் கொள்ளும் என்னும் உட்கிடையான நிபந்தனை
காரணமாக இம்முடிவுக்கு வந்துள்ளார். ஆகவேதான் இந்த நிபந்தனையை நிறைவு செய்து தன்னைக்
காப்பாற்றிக் கொண்டுள்ளார். பேட்ஜ் புத்திசாலித்தனத்துடன், நேர்மையற்ற குணமும் உடையவர்
என்பதற்கு நீதிமன்றத்தில் அவர் அளித்த சாட்சியங்களே ஆதாரம். அவரது வாக்குமூலத்தில்
சில தருணங்களில் தற்பெருமையாகவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அடுத்தவர் வாழ்க்கையைப்
பற்றிக் கவலைப்படாமல் பொய் சொன்னதாகவும், தகுதி இருப்பதுபோல் போலியாக நடித்ததாவும்,
அவரே ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பான அவரது சாட்சியத்தில் சில நிகழ்வுகள் பின்வருமாறு:
(a)  பேட்ஜ் கூறுகிறார்: ‘நான் உரிமம் இல்லாமலும், சட்டத்துக்குப்
புறம்பாகவும் வெடி மருந்துகளும், குண்டுகளும், விற்பனை செய்து கொண்டிருந்தேன் என்பது
உண்மைதான் (பேட்ஜ் வாக்குமூலம் பக்கம் 228)
(b) கராத்தின் வீட்டில்
வெடி மருந்துகள் அடங்கிய பையை மறைத்து வைத்ததற்குக் காரணம் அது என்னிடம் இருப்பது தெரியக்
கூடாது என்னும் முக்கிய நோக்கம் மற்றும் நான் கைது செய்யப்படுவேன் என்ற அச்சமுமே ஆகும்
(அதே பக்கம்).
(c) டாக்ஸியில்
இரு ரிவால்வர் துப்பாக்கிகள் அடங்கிய பையை டாக்ஸி ஓட்டுநருக்குத் தெரியாமல் வைத்ததன்
காரணம், தேடுதலின்போது ஒருவேளை அவை கண்டுபிடிக்கப்பட்டால், டாக்சி ஓட்டுநர்தான் மாட்டிக்கொண்டு
கைதாவார், நான் தப்பித்துக் கொள்வேன் (பக்கம் 240).
(d) பேட்ஜ் தனது
உண்மைப் பெயரை மறைந்து ‘பந்தோபந்த்’ என்னும் போலியான பெயரை வைத்துக்கொண்டார் (பக்கம்
215)
(e) பயணச் சீட்டு
வாங்காமல் பேட்ஜ் பயணித்ததுடன், டிக்கெட் கலெக்டர்களுக்கு லஞ்சமும் கொடுத்துள்ளார்
(பேட்ஜ் வாக்குமூலம் பக்கம் 237)
(f) பணத்துக்காகப்
பொய்யான தகவல்களைக் கூறியதாக அவரே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். ‘எனக்கு அவசரமாகப்
பணம் தேவைப்பட்டது. தீக்ஷித் மகராஜ் என்னிடம் வாங்கிய ரிவால்வர் துப்பாக்கிக்காகக்
குறைந்தபட்சம் ரூ 350/-ஆவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே அவரிடம் அந்த
ரிவால்வரை நான் பணம் கொடுத்துதான் வாங்கினேன் என்று பொய் சொன்னேன். உண்மையில் அது எனக்கு
வேறொரு பொருளுக்குப் பரிமாற்றாகத்தான் கிடைத்தது.’ (பக்கம் 236).
எனவே, மேலே குறிப்பிட்டதுபோல்
நேர்மையற்ற முறையில் வாக்குமூலம் அளித்த பேட்ஜ் போன்ற ஒரு அப்ரூவர் தன்னைக் காப்பாற்றிக்
கொள்ளவும், மன்னிப்புப் பெறவும், என் மீது கூட தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிச் சாட்சி
அளிக்கலாம்.
(15) பேட்ஜின் சாட்சியத்தில்
என்னை நேரடியாகத் தொடர்புபடுத்திய பகுதியை மட்டுமே நான் மேலே விவரித்துள்ளேன். காந்திஜி,
நேரு அல்லது ஸுஹ்ரவார்தி ஆகியோரைத் தீர்த்துக் கட்டக் கொடுமையான ஆணையை நான் ஆப்தேவுக்கு
வழங்கியதை நிரூபிப்பதற்கு எந்தவொரு தனிப்பட்ட சாட்சியும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி
உள்ளேன். ஆகவே அரசு சாட்சியாக மாறியுள்ள அப்ரூவர் பேட்ஜ் சொன்ன கதை என்னைக் குற்றவாளியாக்க
முனைவதால் அதை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பேட்ஜின்
சாட்சியத்தில் எனக்குத் தொடர்பில்லாத சில விஷயங்கள் விவரிக்கப்பட்டு, நீதிமன்றம் ஒருவேளை
சில தகவல்களுக்காக உறுதிப்படுத்தி இருந்தாலும் கூட, ஆதாரமற்ற சதிச் செயலுடன், எனது
தனிப்பட்ட தொடர்பு அல்லது பங்கேற்பை நீரூபிக்க இயலாத பட்சத்தில், அப்போதும் கூட அவற்றை
அப்ரூவரின் சாட்சியாக எனக்கு எதிராக உறுதிப்படுத்த முடியாது. இந்த விஷயத்தை இன்னும்
சிறப்பாகத் தெளிவுபடுத்தப் பிரிவு 133 கீழ் சர்கார் சாட்சிச் சட்டம் 7ஆவது பதிப்பிலிருந்து
ஒன்று அல்லது இரு பத்திகளை மேற்கோள் காட்டுகிறேன்:
“பொருள் விவரங்களுடன்
சாட்சியை உறுதிப்படுத்துவதுடன், குற்றம் சாட்டப்பட்ட நபரின் அடையாளத்தையும் உறுதிப்படுத்தும்
வகையில் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவரை மட்டும்
உறுதிப்படுத்தினால் போதாது, சாட்சியினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் உறுதிப்படுத்த வேண்டும்.
அவரது சாட்சி மூலம் சிறைக் கைதியாக ஒருவர் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், உறுதிப்படுத்தப்படாத
மற்றொருவர் மீதான அவரது சாட்சியை ஏற்றுக் கொள்வது நடுநிலை ஆகாது.” (பக்கம் 1253).
“குற்றத்துக்கு
உடந்தையாக இருப்பவர் தனிப்பட்ட சாட்சி மூலம் அவர் குற்றம் சுமத்தும் ஒவ்வொரு நபரின்
அடையாளத்தையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது வழக்கமான நடைமுறைச் சட்டமாகும்.
குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவர் குற்றத்தின் ஒவ்வொரு சூழலையும் அறிந்திருப்பார்
என்பதால், தனது நண்பரைக் காப்பாற்ற அல்லது பகைமையைச் திருப்திப்படுத்த (அல்லது தன்னைக்
காப்பாற்றிக் கொள்ள) குற்றத்துக்குத் தொடர்பே இல்லாத அப்பாவியைக் குற்றவாளிகளுள் ஒருவராக
அடையாளம் காட்டத் துணிவார்.” (பக்கம் 1254).
(16) பேட்ஜின் மூன்று
கடிதங்கள்
ப்ராக்ஸிக்யூஷன்
தரப்பு மூன்று கடிதங்களைச் சாட்சி / ஆவணம் பி87, பி88 மற்றும் பி89 சமர்ப்பித்துள்ளது.
முதல் இரண்டு கடிதங்கள் 1943ல் பேட்ஜ் எனக்கு அனுப்பியவை. உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை
விற்பதற்காக அவர் நடத்திய சஸ்திர பண்டாருக்காக நன்கொடை அனுப்புமாறு அவற்றில் கோரியிருந்தார்.
பேட்ஜ் தனது வாக்குமூலத்தில் திரும்பத் திரும்ப தன்னை இந்து மஹாசபா ஊழியர் என்றும்
1947ல் உரிமை தேவையில்லாத ஆயுதங்களை மட்டுமே விற்பனை செய்து வந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்
(பி.டபிள்யூ 57, பக்கங்கள் 218, 229, 242). ஆயுதச் சட்டத்தை ரத்து செய்வதுடன், ஆயுத
விற்பனைக்கு உரிமம் வழங்குவது மற்றும் ராணுவப் பயிற்சியைப் பரவலாக்குவது ஆகியவற்றுக்கு
ஆதரவாக நான் வெளிப்படையாக ஓர் இயக்கம் நடத்தி வந்த காரணத்தால் இந்து மஹாசபா தலைவர்
என்ற முறையில் எண்ணற்ற கடிதங்களும், அறிக்கைகளும், நிதி உதவி கேட்டு எனக்கு வந்தன.
மூன்றாவது கடிதம்,
பேட்ஜ் நடத்திய படிக்கும் அறைக்கு இந்து சங்கதான் மற்றும் இந்து மதம் தொடர்பான சில
புத்தகங்களை இலவசமாக அனுப்பியதற்காக எனது செயலாளர் திரு வி ஜி தாம்லேவுக்கு நன்றி தெரிவித்து
அவர் அனுப்பிய ரசீதாகும். இந்த ரசீதில் துக்காராம் பாடல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனது அலுவலகம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்து இயக்கம் தொடர்பான
புத்தகங்களை இந்தியா முழுவதுமுள்ள நூலகங்களுக்கும், படிக்கும் அறைகளுக்கும் இலவசமாகவே
அனுப்பி வைப்பது வழக்கமாகும். தற்போது ப்ராக்ஸிக்யூஷன் வசமுள்ள எனது அலுவலகக் கோப்புகளில்
இதுபோல் ஏராளமான ரசீதுகள் உள்ளன. எனவே இதன் மூலம் நான் பணிவுடன் தெரிவிப்பது என்னவெனில்,
இந்த ஆவணங்களுக்கும், இப்போதைய வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுடன் இவற்றில்
குற்றம் சுமத்தும் அளவுக்கு எதுவுமில்லை என்பதுமே ஆகும்.

Leave a Reply