Posted on Leave a comment

370 வது பிரிவு நீக்கம் | ஓகை நடராஜன்


(புகைப்படம் நன்றி: Business Today)

‘பெரிதினும் பெரிது கேள்’ – பாரதியின் இந்த வாக்குக்கு ஏற்ப அண்மையில் நடந்திருக்கும் ஒரு விஷயம், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவு விலக்கி வைக்கப்பட்டிருப்பது. இதன் விளைவாக காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டிருந்த தனி நபர்களுக்கான சிறப்பு உரிமை தரும் 35ஏ என்கிற பிரிவும் செயலற்றதாக்கப்பட்டிருக்கிறது. இதை ஏன் நாம் பெரிதினும் பெரிது கேள் என்ற அளவில் சொல்ல வேண்டும்? சீர் செய்ய முடியாது என்கிற நிலைக்கு கிட்டத்தட்ட வந்துவிட்ட ஒரு பிரச்சினை இது. உலக நாடுகளில் பல இடங்களில் இருக்கும் எல்லைத் தகராறுகளில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளில் மிக முக்கியமானதும் அபாயகரமானதுமான பிரச்சினை இதுவே. இதைக் காரணம் காட்டி உலக வல்லரசுகள் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு பேரபாயம் எப்பொழுதும் நம் தலைக்கு மேல் ஆயிரம் கத்திகளாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மிக லாகவமாக, இனி எதிர்காலத்தில் வேறு பிரச்சினைகள் வராத அளவிற்குத் தீர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு காரியம் 370வது பிரிவு நீக்கம். நாம் இதை இப்படித்தான் வர்ணிக்க முடியும். ‘பெரிதினும் பெரிது கேள்.’ இதற்கு மேல் வார்த்தைகள் இதற்கு இல்லை என்ற அளவில் பாரதி இதை நமக்கு அன்றே சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்.

இந்தக் காஷ்மீர் பிரச்சினைக்கு ஆரம்பகால காரணமாக அதுவரை நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் எடுத்த ஒரு முக்கியமான முடிவைச் சொல்லலாம். இந்தியா பாகிஸ்தான் பிரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை அவர்கள் செயல்படுத்தி நமக்குச் சுதந்திரத்தை வழங்கினார்கள். அதேபோல ஆங்கிலேய அரசுக்குக் கப்பம் கட்டுகின்ற பல சிறிய பெரிய சமஸ்தானங்களை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சேர்த்துவிட்டுச் சென்றிருந்ததால் இன்றைக்கு உலக அரசியல் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் அந்த அளவுக்குப் பொறுப்பை நாம் ஆங்கிலேயரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்களே இரண்டாம் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் இருந்த உலக அரசியல் காரணமாகத் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று இந்தியாவை விட்டு வெளியேறினார்கள்.

அப்படி அவர்கள் வெளியேறியபோது அவர்கள் விட்டுச் சென்ற குழப்பங்களை நாமே தீர்க்க வேண்டிய நிலையில், சர்தார் வல்லபபாய் படேல் மிகச் சாதுரியமாக அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்தார். ஆனாலும் அவருக்கு மேல் அதிகாரத்தில் பிரதமராக இருந்த நேரு, காஷ்மீர் பிரச்சினையை மட்டும் தாமாகக் கையாண்டு அதை இந்த அளவுக்கான குழப்பத்தின் உச்சிக்கு செலுத்திவிட்டுச் சென்றுவிட்டார். காஷ்மீருக்கான உரிமையை பாகிஸ்தான் அதற்கு சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து கேட்க ஆரம்பித்துவிட்டது. அதற்குக் காரணம் அந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது மட்டுமே. ஆனால் உலக நாடுகளும் இந்தக் காரணத்துக்காக அவ்வப்போது பாகிஸ்தான் பக்கமும் இந்தியா பக்கமும் மாறி மாறி இருந்து கொண்டு இருந்தாலும், ஒரு மிகப் பெரிய உண்மையை உலக மக்களும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளும் உணர்ந்திருக்கின்றன. அதாவது இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருந்தாலும், இந்துக்களின் நாடாக இருந்தாலும், மிகப்பெரிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் நாடாகவும் இருக்கிறது. ஏறத்தாழ எல்லா மாநிலங்களிலும் கணிசமான அளவில் முஸ்லிம்கள் பரவியிருப்பதை இந்தியாவின் ஒரு தன்மையாகவே உலகம் பார்க்கிறது. அந்த அளவில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால் அது பாகிஸ்தானுடன் சேர வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் பொருளற்றதாகிப் போய்விடுகிறது.

ஆனால் பாகிஸ்தான் என்கிற நாடோ அன்றிலிருந்து இன்றுவரை தனது மொத்த அரசியலையும் ராணுவத்தையும் காஷ்மீருக்காகவே அலைக்கழித்து, கிட்டத்தட்ட பித்து பிடித்த நிலையில், இவ்வளவு நாளும் வேறு எந்தத் துறையிலும் எதையும் சாதிக்காமல் இருந்து வந்திருக்கிறது. இப்போது அந்தப் பித்தின் உச்சத்தில் இருக்கிறது. இதற்காக மூன்று முறை நம் மீது போர் தொடுத்துத் தோற்றும் போயிருக்கிறது. இதனால் இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்கிற ஒரு வேட்கை பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் தேசியக் கொள்கைக்கும் ஆதாரமாகவே எப்பவும் இருந்துகொண்டிருந்தது. சென்ற 5 ஆண்டு பாஜகவின் ஆட்சியின்போது இதில் ஈடுபடாமல் உலகளாவிய கௌரவத்தைப் பெற்று தன்னிகரற்று பாரதத்தை செலுத்திய பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய 2019 தேர்தலுக்கான அறிக்கையில் இந்த 370 பிரிவை நீக்குவதாக வாக்குறுதி அளித்து, அதை மீண்டும் ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களில் சட்டென நிறைவேற்றியது.

இதனால் ஏற்படப் போகும் மாற்றங்களை யூகிப்போம்.

இந்தச் செயலாக்கத்தில் உச்சகட்ட பாதகமாக என்ன நிகழும்? பாகிஸ்தானின் தற்போதைய மும்முரமும் அதற்குத் துணை போகின்ற சீனாவின் அடாவடித்தனமும் இதை ஒரு மூன்றாவது உலகப் போருக்கு இட்டுச் செல்லக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இது பயமுறுத்தல் இல்லை. மூன்றாவது உலகப்போருக்கான சாத்தியம் தற்போதைய உலக அரசியலில் உலகின் பல இடங்களில் இருந்துகொண்டே இருக்கிறது. இதன் பின்னணியில் இதற்கான வல்லமையோடு இருக்கக்கூடிய ஒரு நாடு சீனா. சீனாவின் ஈடுபாடில்லாமல் ஒரு உலகப்போர் இனிமேல் வருவதற்கு வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்பொழுது இந்த காஷ்மீர் பிரச்சினையில் சீனாவின் நேரடித் தலையீடு நடக்க ஆரம்பித்திருக்கிறது. அதிலும் இந்த காஷ்மீர் பிரச்சினையினால் சீனாவுக்கு நேரடி பாதிப்புகள் அதிகமாகவே இருக்கப் போகின்றன. அதனால், மூன்றாவது உலகப் போருக்கு இட்டுச்செல்லக்கூடிய ஒரு பேரபாயமான நடவடிக்கையாக இதை நாம் காணலாம்.

ஆனால் அதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கலாமா என்று கேட்டால் அதைவிட பைத்தியக்காரத்தனமும் பய்ந்தாங்கொள்ளித்தனமும் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தியா என்கிற நாடு உலகின் உன்னதமான நாடாக இருந்த ஒரு காலகட்டத்தை எட்டிப் பிடிக்கச் சென்று கொண்டிருக்க வேண்டிய நிலையில், அதற்கு மிகப் பெரும் தடைக்கல்லாக இருக்கிற இந்தக் காஷ்மீர் பிரச்சினையை தீர்த்துக் கட்டினால்தான் இந்தியா தனது உன்னதத்தை நோக்கிய பயணத்தைச் செய்ய முடியும்.

இதற்கு அடுத்தபடியாக அடுத்த ஒரு நிகழ் சாத்தியம் என்று பார்த்தோமானால் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஓர் அணு ஆயுதப்போர் நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தான் அணு ஆயுத நாடு. அதன் தற்போதைய நிலையில் அதன் ராணுவ பலம், இந்தியாவின் ராணுவ பலத்தோடு ஒப்பிடக்கூடிய நிலையில் இல்லை. அதுமட்டுமல்ல, இந்தியாவின் முப்படைகளின் வளர்ச்சி பாகிஸ்தானை விட பன்மடங்கு உயர்ந்து இருக்கிறது. ஆகவே ஒரு போரில் பாகிஸ்தான் நமக்கு ஏதாவது ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்றால் அது பாகிஸ்தானின் அணு ஆயுதப் பிரயோகமாக மட்டுமே இருக்க முடியும். இந்த ஒரு செயல் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த அழிவுக்கு இட்டுச் சென்றுவிடும். இந்தியாவுக்கு அணு ஆயுத வலிமை இருந்தாலும், பாகிஸ்தான் அதைப் பற்றிக் கவலைப்படாமல், தன் அழிவையும் மீறி இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்பையே பெரிதாக எண்ணும் அளவுக்கு அங்கு ராணுவ மனநிலை அந்த நாடு பிறந்ததிலிருந்து வளர்ந்திருக்கிறது. அதற்காக நாம் நம் காரியங்களைச் செய்யாமல் இருக்க முடியாது. இதையும் சமாளிப்பதற்கான தீர்வுகளை யோசித்துக்கொண்டே இருப்பதுதான் நமக்கிருக்கும் கடமை.

இந்த இரண்டு விதமான பேரபாயங்களையும் அதன் சாத்தியங்களையும் தாண்டி வேறு என்னென்ன நடக்கும்? இதனால் நமக்குப் பல நன்மைகள் கண்ணுக்குத் தென்படுகின்றன. இது நமக்கு மட்டுமல்ல பாகிஸ்தானுக்கும் நன்மை பயக்கக் கூடியது. உலகத்துக்கே நன்மை பயக்கக் கூடியது. இந்திய தேசிய நீரோட்டத்தில் காஷ்மீரும் கலந்து, இப்பொழுது இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்கள் எப்படித் தங்களுடைய மொழி மற்றும் கலாசாரத் தனித்தன்மையைப் பேணிக்கொண்டே இந்திய தேசியத்தில் அங்கமாகவும் இருக்கின்றனவோ அதைப் போலவே காஷ்மீரும் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இதில் லடாக் என்கிற பிரதேசத்தைப் பிரித்தெடுத்து அந்த மாநில மக்கள் நன்றாக வாழ்வதற்கான வழியை ஒரு மாயாஜாலம் போல இந்த முடிவு மூலமாக அரசு செய்திருக்கிறது. இனிமேல் லடாக் என்பது அங்கிருக்கும் கார்கில் நகரத்தையும் சேர்த்து அமைதிப்பூங்காவாகவும், முன்னேற்றக் களமாகவும் மாறப்போகின்றது. இதை உடனடி நிகழ்வாக நாம் இந்த முடிவிலிருந்து பார்க்கலாம்.

ஜம்மு-காஷ்மீர் என்ற இரண்டு பகுதிகளில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் ஜம்முவையும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கையும் பிரிக்காமல் வைத்திருப்பது, அதுவும் தற்காலிகமாக ஒரு சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக வைத்திருப்பது, அருமையான ஒரு முடிவு. விரைவில் அங்கு சுமுகமான சூழல் எட்டப்படுவதற்கான அனைத்து வேலைகளையும் ஒவ்வொன்றாகச் செய்ய ஆரம்பித்தால் அங்கே இயல்புநிலை விரைவிலேயே திரும்புவதற்கு வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருக்கின்றன. அதாவது அந்த மாநிலங்களுக்கான தனித்தன்மையை பாதிக்கும் எந்தச் செயலையும் செய்யாமல், தேசிய நீரோட்டத்தில் இணைக்க நாம் வடகிழக்கு மாநிலங்களைக் கையாளுவதைப் போலவே செய்துவிட்டால் வருங்காலத்தில் பிரிவினை கோஷங்களுக்கான சாத்தியங்கள் மறைந்து போகும். மேலும் அங்கு வரப்போகும் பொருளாதார முன்னேற்றங்கள் பக்கத்திலேயே இருக்கும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய நிலை வரும்பொழுது அங்கிருக்கும் மக்களின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறும். இந்திய அரசாங்கத்தின் மேல் விதைக்கப்படும் வெறுப்புணர்வை விமர்சனங்களையும் இந்த முன்னேற்றம் நிச்சயமாக நீக்கிவிடும்.

இந்த நிலையில் நாம் ஒரு சிறு ஒப்பீட்டை தமிழ்நாட்டில் செய்து பார்க்கலாம். தமிழ்நாட்டில் தென்படுகிற பிரிவினைவாத சக்திகள், எப்போது பாகிஸ்தான் என்ற தனிநாடு வேண்டும் என்ற எண்ணம் உதித்ததோ அப்போதே தொடங்கிவிட்டது. இதற்காகவே ஈ.வெ.ராமசாமி ஜின்னாவின் காலில் விழுந்து திராவிடஸ்தான் கேட்டிருக்கிறார். நல்ல வேலையாக ஜின்னாவுக்கு இருந்த இயல்பான சுயநலத்தால் இதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். ஆனால் அப்போது விதைக்கப்பட்ட அந்தப் பிரிவினை கோஷம், இன்றுவரை சீமைக் கருவேலம் எப்படித் தமிழ்நாட்டில் பரந்துவிரிந்து தன்னுடைய இருப்பை உறுதி செய்திருக்கிறதோ அப்படி உறுதி செய்திருக்கிறது. பொதுவான தமிழ் மக்கள் இந்த எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதில்லை. ஆனாலும் அந்த நிலை இப்போது ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இப்போது கிட்டத்திட்ட பாகிஸ்தான் ஆதரவாகவே திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய நிலைப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதும் கூட தமிழ்நாட்டுப் பிரிவினைவாதத்தின் ஒரு மூர்க்கமான வெளிப்பாடுதான்.

காஷ்மீரில் இனி நடக்கும் நிகழ்வுகள் இங்கே தமிழ்நாட்டிலும் மறைமுகமாக, மென்மையாக பிரிவினை எண்ணமற்ற ஒரு நிலையை உருவாக்கும் என்று நம்பலாம். பெரிதினும் பெரிது கேட்டு, பெரிதினும் பெரிது வரப்போகும் ஒரு பெரிய முடிவு 370வது பிரிவை நீக்கியதுதான்.

இந்தப் பிரச்சினையை நமது அரசு கையாண்ட விதமும் நிறைவேற்றிய விதமும் கிட்டத்தட்ட உலகமும், ஏன் நாமம் கூட எதிர்பாராத ஒரு நிகழ்வு. இதைச் செயல்படுத்துவதில் இருந்த லாகவம் பிரமிக்கத்தக்கது. அதற்குப்பின்னால் கொடுக்கப்பட்ட வியூகம் பிரம்மாண்டமானது. இதைப் பழுதின்றி செயல்படும் திட்டமாக வடிவமைத்திருப்பது எண்ணி எண்ணிப் பார்த்து வியந்து மாளாத அளவுக்கு ஓர் அற்புதம்!

Leave a Reply