Posted on Leave a comment

அந்தமானிலிருந்து சாவர்க்கரின் கடிதங்கள் (பகுதி 4) | தமிழில்: VV பாலா

நான்காவது கடிதம்

(புகைப்படம் நன்றி: savarkar.org)
செல்லுலார் சிறை.
9-3-1915.
போர்ட் ப்ளேயர்
எனது
அன்பிற்குரிய பால் (Bal).
உனது
கடிதம் கிடைத்து, ரிப்வான்வின்கிலைப் (
Ripvanwincle) போலத் தூங்கி கொண்டிருந்த
நான், 7 – 8 மாதங்கள் கழித்து இப்போது பதில் எழுத முனைத்திருக்கிறேன். உன்னிடமிருந்து
கடிதம் வருவது உன்னைப் பார்ப்பதற்கு சமம். அதற்கு ஒரு காரணம், உன் கடிதங்களில் நீ கொடுக்கும்
சினிமா போன்ற விவரணைகள். மற்றொரு காரணம், சிறையில் இருப்பதனால் நாம் படிக்கும் விஷயங்கள்
நமக்குக் காதால் கேட்பது போன்ற ஒரு அனுபவம் ஏற்படுகிறது என்பதும். பிறவியிலேயே பார்வை
அற்றவர்கள், கேட்கும் விஷயங்களை கற்பனை செய்து கொள்வதைப் போல, சிறையின் தனிமை நமக்கு
அது போன்றதொரு அனுபவத்தைக் கொடுக்கிறது. நான் எப்போதெல்லாம் உன் கடிதத்தைப் படிக்கின்றேனோ
அப்போதெல்லாம் உன்னையும் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நம் வீட்டில் உள்ள மற்ற சொந்தங்களையும்
அங்கே நடந்த நிகழ்ச்சிகளையும் பார்ப்பது போல உணர்கிறேன். நீ நன்றாக ஆரோக்கியமாக இருப்பது,
நல்லபடியான வாழ்க்கை வாழ்வது எனக்கும் நம் அன்பு சகோதரர் பாபாவுக்கும் மகிழ்ச்சியைக்
கொடுக்கின்றது. எங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்.
நீ சென்ற வருடம் அனுப்பிய புத்தகங்கள் மொத்தம் 16. இந்த வருடம் 13. அதில் அக்டோபரில்
இரண்டு, நவம்பரில் இரண்டு என்று நான்கு ஆங்கிலம், மற்றவை சம்ஸ்க்ரிதமும் மற்ற பிராந்திய
மொழிகளும். இந்த விவரம் சரியா என்பதை நீ எழுது. அடுத்த முறை நீ பார்சல் அனுப்பும்போது
உன் கைப்பட அதில் உள்ளவற்றைப் பட்டிலியலிட்டு அனுப்பு. இங்கே அவற்றைப் பெற்றுக்கொள்ளும்
போது சரிபார்க்க அது உதவும்.
சமாஜ
ரஹஸ்ய நாவல் நன்றாக இருந்தது. (ஏன் அதனை இரண்டு பிரதி அனுப்பி இருந்தாய்?) அது ஒரு
நல்ல புதினம். இன்னொரு விஷயம் – நம் சமுதாய அமைப்புக்களிலேயே இந்த சாதி அமைப்பு என்பது
நம் நாட்டின் மிக பெரிய சாபக்கேடு. இது இந்த மாபெரும் ஹிந்து சமுதாயத்தை அழித்து விடக்
கூடிய அபாயம் இருக்கின்றது. நாம் இதனை நான்கு சாதிகள் உள்ள அமைப்பாகக் குறைப்போம் என்ற
வாதம் எல்லாம் பயன் தராது. அது நடக்கவும் நடக்காது. இது வேரோடு பிடுங்கி களையப்பட வேண்டும்.
அதற்கான சிறந்த வழி, அதனை எதிர்த்து பிரசாரம் செய்வது. நம் இலக்கியங்கள், நாடகங்கள்,
புதினங்கள் என்று எல்லாவற்றிலும். ஒவ்வொரு தேசபக்தனும் இரட்டை நிலைப்பாடுகளை எடுக்காமல்
தன் மனதில் உள்ளதைத் தெளிவாக வெளிப்படுத்தவும் அதேபோல் அதனை செயலில் காட்டவும் வேண்டும்.
ஆனால் அதே நேரம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தும்போது நாம் நம்முடைய சொந்தங்கள் இடையே
எந்த பிணக்கும் வந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நம்முடைய ஆட்கள் கேட்கும்
கேள்விகளுக்கு எல்லாம் திருப்திகரமாக பதில் அளிப்பது என்பது இயலாத காரியம். நான் அதற்காகத்தான்
‘சமாஜரகஸ்யம்’ போன்ற பல கதைகளை எழுத உள்ளேன். அவற்றில் இந்த சமுதாயத் தீமைகளைச் சாடுவேன்.
இவற்றால் ஒரு காலத்தில் நன்மை இருந்திருக்கலாம், ஆனால் இப்போது இது செத்து விட்டது.
அதனால் இதனை, நீ விரும்பினால் கண்ணீருடன், புதைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. என்னைப்
பார்க்க உனக்கு அரசு இந்த வருடம் அனுமதி அளிக்க போகிறது என்ற செய்தி எனக்கு மகிழ்ச்சியைத்
தந்தது. அதற்காக நான் அதிகாரிகளுக்கு நன்றி சொல்வேன். ஆனால் வாகினி இந்த வருடம் இந்தப்
பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று நான் கருதுகிறேன். நீ தனியாக வா. இங்குள்ள வசதிகளை
எல்லாம் பார்த்துவிட்டு அடுத்த வருடம் வேண்டுமானால் அவளையும் அன்பிற்குரிய மாயி-யையும்
(Mai) அழைத்துக் கொண்டு வா. அவர்களைப் பார்க்க கூடிய பாக்கியத்தை இந்த வருடம் நான்
தியாகம் செய்வதுதான் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. அதுவும் அவர்களுடைய நன்மைக்காகத்தான்.
அதனால் இந்த வருடம் நீ தனியாக வரவும்.
இந்தியப்
படைகள் ஐரோப்பாவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அவர்கள் அங்கு சென்று உலகின் மிக சக்தி வாய்ந்த ராணுவத்திற்கு எதிராக தீரத்துடன் போர்
புரிந்து பெருமை பெற்றிருகின்றனர். இந்த மண்ணில் இன்னமும் ஆண்மை மடியவில்லை. அயல்நாட்டிற்குப்
பயணம் செய்வதை நாம் ஊக்குவித்து கொண்டிருந்தோம். வருடத்திற்கு பத்து பன்னிரண்டு பேர்
அயல்நாடுகளுக்கு சென்றாலே நாம் எதோ சாதித்து விட்டதைப் போல மகிழ்ச்சி அடைவோம். ஆனால்
நம்மால் செய்ய முடியாதது இப்போது கடவுள் அருளால் தானாக நடக்கிறது. பழமையில் ஊறி இருந்த
ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் இப்போது சீக்கியர்கள் கூர்க்காக்கள் மற்றும் ராஜபுத்திரர்கள்
போல் தங்கள் நிலைகளில் இருந்து மாறி கடல் கடந்து அரசு செலவில் பயணிக்கிறார்கள். நம்
பண்டிட்கள் கடல் கடந்து போகலாமா கூடாதா என்று சாஸ்திரங்களைப் புரட்டி ஆராய்ச்சி செய்து
கொண்டிருக்கட்டும். அனுமதி உண்டோ இல்லையோ, ஹிந்துக்கள் கடல் கடந்து சென்று விட்டார்கள்.
அவர்கள் அதன் மூலம் ஒரு புதிய சகாப்தத்தையும் படைத்து விட்டார்கள். சிலுவைப் போர்கள்
மூலம் ஆசியாவின் மேம்பட்ட நாகரீத்தோடு தொடர்பு கொண்ட ஐரோப்பியர்களுக்கு என்ன நேர்ந்ததோ,
அது இப்போது நம் வீரர்களுடன் ஐரோப்பியர்கள் தொடர்பு கொள்வதால் இந்தியாவிற்கும் ஆசியாவிற்கும்
ஏற்படும்.
பஞ்சாபில்
உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனு அளித்த அவர்களது
கருணை மிக்க செயலுக்கு நாம் பாராட்டவேண்டியதில்லை. எங்களில் பலர் ஏற்கெனவே போர்முனைக்குச்
செல்ல முன்வந்துவிட்டோம் என்பது உனக்குத் தெரிந்திருக்கும். அரசாங்கமும் இது குறித்து
குறிப்பு ஒன்றை வெளிட்டு உள்ளது. ஆனால், அதற்கு இதுவரை பதில் எதுவும் வரவில்லை.
அதே
போல பார்லிமெண்டில் எதோ ஒரு உறுப்பினர் என்னைப் பற்றி அல்லது எங்களைப் பற்றிக் கேள்வி
எழுப்பியதாக வந்த வதந்தியைப் பற்றிக் கொஞ்சம் எழுது. அது உண்மையாக இருந்தால் அது குறித்து
மேற்கொண்டு தகவல்களைக் கூறு. குரு மற்றும் ரவி குறித்த கவிதைகள் உனக்குக் கிடைத்ததா?
மதிப்பிற்குரிய
கோகலே அவர்கள் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை உலுக்கியது. அவர் ஒரு சிறந்த தேசபக்தர்.
ஒரு சில சமயம் அவர் அவசரத்தில் பதட்டத்தில் சில விஷயங்களைக் கூறுவார், செய்வார். பிறகு
சில மாதங்கள் கழித்து அது அவராகவே அது குறித்து வெட்கப்படுவார். ஆனால், அவருடைய வாழ்க்கை
தன்னலம் இன்றி தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும். அவர் எப்போதும் நாட்டின்
நலனைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தார். அதில் துளிகூட சுயநலம் இருக்காது. வாழ்க்கை
முழுவதும் இந்தியாவுக்காகவும் அதன் நன்மைக்காகவுமே உழைத்தார். அவரை நேரில் சந்தித்து
லண்டனில் அவர் என்னிடம் கூறிய விஷயங்கள் குறித்து அவரோடு விவாதிக்க வேண்டும் என்று
நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் மரணம் எங்களைப் பிரித்துவிட்டது. எனக்கும்
அவருக்கும் சில விஷயங்களில் கருத்து ஒன்றிப் போகவில்லை, அதற்கு அப்போது அவர், “நல்லது
மிஸ்டர் சாவர்க்கர், நாம் ஆறு வருடங்கள் கழித்து சந்திப்போம். அப்போது இந்த குறிப்புகளை
நாம் ஒப்பிட்டுப் பார்ப்போம்” என்றார். மகாராஷ்டிரம் கவுன்சிலுக்கு அவரைப் போல சிறந்த
நபர் ஒருவரைப் பிரதிநிதியாக அனுப்பி வைக்க வேண்டும். அவர் சாதித்த அளவு ஒவ்வொரு இந்தியனும்
சாதித்தால் எப்படி இருக்கும்!
அடுத்த
முறை நீ புத்தகங்கள் அனுப்பும்போது ஜன்மபூமி மற்றும் கௌதமன் போன்ற நாவல்களை அனுப்பு.
சகோதரர் அவற்றைப் படிக்க வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் ஆக்கிரமிப்பால்
நீ மேடம் காமாவிடம் தொடர்பு கொள்ள இயலாமல் போய்விடுமே என்று நான் அஞ்சிகொண்டிருந்தேன்.
நான் இங்கு வந்த பிறகு அவர்தான் உனக்குத் தாய் போல வழிகாட்டிக் கொண்டிருந்தார். நம்முடைய
மிக கஷ்டமான நேரங்களில் நமக்கு உறுதுணையாக இருந்தவர் அவர். ஆனால் இத்தகைய சூழலிலும்
அவர் உனக்குக் கடிதங்கள் மூலம் தொடர்பில் இருந்தார் என்பதைக் கேட்டு நான் மகிழ்ச்சி
அடைந்தேன். நமக்கு நெருக்கமானவர்கள் இழிக்கும் துரோகத்தால் நிலைகுலைந்து போயிருக்கையில்
இவர்களைப் போன்ற தூய அன்பு கொண்டவர்களின் தொடர்பு நமக்கு மனிதநேயத்தைக் குறித்து நம்பிக்கை
கொள்ளச் செய்கிறது. அவருடைய தூய்மையான வாழ்வு குறித்தும் கஷ்டத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு
உதவும் அவருடைய பாங்கு குறித்தும் நான் எவ்வளவு மதிப்பு கொண்டிருக்கிறேன் என்பதை அவருக்கு
நேரடியாகக் கடிதம் மூலம் என்னால் தெரிவிக்க இயலவில்லை. நம் உறவினர்களிடம் நான் அவரைக்
குறித்து விசாரித்ததைத் தெரிவிக்கும் முன், நீ இவரிடம் என் அன்பையும் விசாரிப்பையும்
தெரிவித்து விடு. அவர்களைக் காட்டிலும் இவர் நம் மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறார்.
ஏன் அவர் நமக்கு இதைச் செய்கிறார் என்பது ஆச்சரியம். அதையும் அவர் மீண்டும் மீண்டும்
செய்கிறார் என்பது பெரிய ஆச்சரியம்.
நீ
அனுப்பிய புத்தகங்கள் மூலம், தெலுங்கு மாகாணங்களில் பரவி வரும் இயக்கம் இங்குள்ள பலரையும்
தொற்றிக்கொண்டுள்ளது. ஆந்திர சபா ஒரு பெரிய இயக்கம்தான். ஆனால் தமிழில் இருந்து பிரிந்து
போய் தனி மாகாணமாக ஆவது என்பது சரியான போக்கு அல்ல. இத்தகைய பிராந்திய வாதங்களின் எதிரொலியாக
தேசிய அளவில் ஆந்திர மாதாகி ஜெய் போன்ற கோஷங்கள் வருவது வருத்தத்திற்குரிய ஒன்று. இது
பிற்பாடு வரபோகும் ஆபத்தான பிரிவினை வாதங்களுக்குக் கட்டியம் கூறுவது போல உள்ளது. சுதேசி
என்ற மாபெரும் இயக்கத்திற்குக் கிடைத்துள்ள எதிர்வினை இது போன்ற நிலைப்பாடுகள். இவை
ஆரம்பத்திலேயே சரி செய்யப்பட வேண்டும். வங்க தேசத்தில் பிரிவினை ஏற்பட்டபோது அதற்கும்
சுதேசிக்கும் இருந்த சிறிய தொடர்பே இத்தகைய எதிர்வினைகளுக்கு காரணம். இப்போது ஒவ்வொரு
மாகாணமும் அது போலப் பிரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறது. ஆனால் தேசம் என்ற பாதுகாப்பு
இல்லாமல் இந்தப் பிராந்தியங்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்? மகாராஷ்டிரா, பெங்கால்,
மெட்ராஸ் எல்லாமே செழித்து ஓங்கும், ஆனால் அது இந்தியா என்ற கட்டமைப்பிற்குள் இருக்கும்
வரைதான். எனவே, ஆந்திர மாதாகி ஜெய் என்று கோஷம் எழுப்புவதற்கு பதில் பாரத் மாதா கி
ஜெய் என்று கோஷம் எழுப்புவோம், ஆந்திரம் அதன் ஒரு பகுதிதான். அதே போல வங்க ஆபார் என்ற
கோஷத்திற்கு பதில் ஹிந்த் ஆபார் என்று கோஷம் எழுப்புவோம். ஒவ்வொரு மாகாணமும் பிரிவினை
என்ற எண்ணத்தை விட்டுவிட்டு ஒன்றாக இணைந்து மொழிகளால் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையும்
தடைகளையும் நீக்க வேண்டும். சிறிய தேசங்கள் குறித்து சிந்திக்கும்போது பெல்ஜியத்தில்
நடந்தது நமக்கு எச்சரிக்கை அளிக்கட்டும். தன்னை அறியாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் நமக்கு
நன்மை ஒன்றைச் செய்திருக்கிறது என்றால், அது நம்மிடம் உள்ள பேதங்களை எல்லாம் மறந்து
நம்மை ஒன்றிணைத்திருப்பதுதான். இப்போது இந்த ஒற்றுமையை வலுப்படுத்தாமல், நாம் நமக்குக்
கிடைத்த இந்த வரப்பிரசாதத்தைப் பயன்படுத்தாமல், பிரிவினை பேசி கிடைத்த வரத்தை சாபமாக
மாற்றிக்கொண்டிருக்கிறோம்.
எனக்குத்
தோன்றியவற்றை எல்லாம் எழுதிவிட்டேன். உன் கடிதம் மற்றும் நீ அனுப்பிய புத்தகங்கள் பற்றியும்
கேட்டு விட்டேன். அடுத்த முறை நான் அனுப்பும் பட்டியலில் இருக்கும் புத்தகங்களை அனுப்பு.
அவற்றை பார்சலாக அனுப்பாமல் செப்டம்பர் ஒன்றாம் தேதி நீ வரும்போது கொண்டு வந்தாலும்
போதும். அது முடியவில்லை என்றால் பார்சல் அனுப்பு. நம் நண்பர்களிடம் தொடர்பு கொண்ட
பிறகு இந்தக் கடிதத்திற்குப் பதில் போடு. நீ கடிதத்தில் குறிப்பிட்ட அந்த நல்ல மனிதரை
நீ சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஒரே சிந்தனை கொண்டவர்கள் ஆதலால் உங்கள் இருவருக்கும்
ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். அவரிடம் நான் விசாரித்ததாகக்
கூறவும். அவரை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். நம் பேராசிரியர் எப்படி இருக்கிறார்?
மிகுந்த போராட்டங்களை சந்தித்த பின் ஒரு பறவை இப்போது கூட்டிற்குத் திரும்பி இருக்கும்
என்ற எண்ணம் எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது. அவர் விடுதலையானது நானே விடுதலை ஆனது போல
சந்தோஷத்தை எனக்கு அளிக்கின்றது. சாகாராமும் இப்போது அங்கிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கொண்ட கொள்கைக்காக மரணம் எய்தினான் என்றாலும் அது முட்டாள்தனமான முடிவு. இப்போது அதை
நினைத்தாலும் மனது வலிக்கின்றது.
எங்களைப்
பற்றி நீ வருத்தம் கொள்ள வேண்டாம். தண்டனை பெற்ற நிறைய கைதிகள் இங்கு விடுதலை பெற்று
வருகிறார்கள். எங்களைப் போல ஆயுள் தண்டனை பெற்றவர்கள் மட்டும்தான் இப்போது இங்கே இருக்கின்றோம்.
போர் நடந்து கொண்டிருக்கும் வரை அதிகாரிகளை சங்கடபடுத்தும் வகையில் எதையும் கேட்க வேண்டாம்
என்று நான் தீர்மானித்திருக்கிறேன். தற்போது எங்கள் இருவருடைய உடல் ஆரோக்கியமும் நல்ல
நிலையில் இருக்கிறது. இப்போது சிறை நிர்வாகத்தை காப்டன் மேஜர் மர்ரே என்பவர்தான் பார்த்துக்
கொண்டிருக்கிறார். அவர் இங்கு இருக்கும் வரை விதிகளை மீறி எங்களுக்கு எந்த விதமான தீங்கும்
இழைக்கப்படாது என்பதில் நீ உறுதியாய் இருக்கலாம். நீ அனுப்பும் ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு
புத்தகமும் எனக்கு ஒழுங்காக வந்து சேர்ந்து விடும். எங்களுடைய தினப்படி வாழ்க்கை சென்ற
வருடத்தைப் போலவே சென்று கொண்டிருக்கிறது. இங்கு சிறையில் முதல் நாள் என்ன நடக்கின்றதோ
அதுவே தொடர்ந்து நடக்கும். இது சிறை ஒழுங்கின் சிறப்பு. அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களைப்
போலவே ஒவ்வொருவருக்கும் நம்பர் தரப்பட்டு ஒரு கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறோம். நான்
கடந்த வருடங்களில் உனக்கு எழுதி அனுப்பிய வழிகாட்டி புத்தகம், நான் இங்கு இருக்கும்
வரையில் எங்கள் சிறை வாழ்கையை சித்தரிப்பதாக இருக்கும். நாங்கள் சீக்கிரம் எழுந்து,
கடுமையாக உழைத்து நேரா நேரத்திற்குச் சாப்பிடுகிறோம். எல்லாம் அதே நேரத்தில் அதே இடத்தில
நடக்கும். ஒரே மாதிரியான உணவே இங்கு தயாரிக்கப்படும். அதே போலத்தான் மருத்துவ வசதிகளும்.
நான் வேலை முடிந்த பிறகும் சில நாட்கள் மாலையிலும் படிக்கின்றேன். சில சமயங்களில் பெயர்
தெரியாத பூக்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு அப்படியே தூங்கிப்போவேன். இங்கு சிறையைப்
பற்றி ஒன்று கூறியாக வேண்டும். இங்குள்ள கைதிகளுக்கு தாங்கள் நினைத்ததைச் செய்யவும்
சொல்லவும் சுதந்திரம் கிடையாதே தவிர, அவர்கள் கனவு காண எந்தத் தடையும் இல்லை. இந்தச்
சலுகையை நான் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் இரவில் நான் சிறையிலிருந்து
தப்பித்து வெளியே சென்று உன்னைப் போன்ற எனக்கு நெருக்கமானவர்களைச் சந்தித்து வருகிறேன்.
ஒவ்வொரு இரவும் இதனை நான் செய்கிறேன். ஆனால் கருணை கொண்ட சிறை அதிகாரிகள் இதனைக் கண்டுகொள்வதில்லை.
நீ விழித்து எழும்போது சிறையில் கண் விழித்தால் போதும் என்பதே அவர்கள் சொல்வது.
போர்
முடிந்ததும் எங்கள் எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பொது மனு ஒன்றினை நீ
அனுப்பு. இந்தியாவில் மட்டுமல்ல, சுயாட்சி நடக்கும் எந்தவொரு நாட்டிலும் மக்களின் விருப்பதிற்கு
மாறாக அரசியல் கைதிகளைச் சிறையில் வைத்திருக்க இயலாது. மக்களுடைய கோரிக்கை இன்றி எந்த
அரசாலும் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்க இயலாது. போர் முடிந்த பிறகு இந்தியர்களிடம்
அத்தகைய மனு ஒன்று அனுப்பப்படுமேயானால் நாங்கள் விடுதலை செய்யப்படலாம். இல்லையேல் எங்களை
விடுதலை செய்ய அரசாங்கத்தால் இயலாது. மக்கள் எங்களுக்காகக் குரல் கொடுக்கவில்லையென்றால்
நாங்கள் விடுதலை பெறுவதிலும் அர்த்தம் இல்லை. போர்ட் ப்ளேயர் எங்களை இங்கேயே வைத்துக்
கொண்டிருக்கும். எப்படி இருந்தாலும் நீ எங்களுடைய விடுதலைக்காக மனுவினை அனுப்பு. இங்கு
கூடுதல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் எல்லாம் கூட தங்கள் குடும்பத்தை இங்கே கொண்டு வந்து
குடி அமர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் சிறை விதிகளின்படி நமக்குக்
கிடைக்க கூடிய சலுகைகளைத்தான் கேட்கிறோம். கூடுதலாக வேறெதையும் அல்ல. இதற்காகத் தொடர்ந்து
நீங்களும் நாங்களும் மனு கொடுத்துக்கொண்டிருந்தால் நமக்கு இதில் வெற்றி கிடைக்கும்.
கடந்த
வருடம் நம்முடைய அன்பிற்குரிய வாகினி எழுதிய கடிதத்தில் நமது குட்டி தோண்டி எப்படி
இருக்கிறாள் என்பதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
அன்பிற்குரிய யமுனாவிடம் நான் விசாரித்ததாகக் கூறவும். அவளுடைய உடல்நலம் எப்படி இருக்கின்றது?
அவள் படிக்கின்றாளா? பல்வந்த் ராவ் இப்போது எந்தக் கல்லூரியில் எந்த வகுப்பு படித்துக்
கொண்டிருக்கிறான்? மற்ற குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? மதிப்பிற்குரிய அண்ணியிடம்
என் வந்தனங்களைக் கூறவும். எந்தத் தவறும் செய்யாத அவர் செய்திருக்கும் தியாகம் மிகப்
பெரியது. சென்ற வருடம் வந்த மாயியின் கடிதத்தின் மூலம், வாகினி என்னைப் பற்றி நினைவில்
வைத்திருக்கிறாள் என்பதை அறிந்துகொண்டேன். நான் அவர்களையும் மற்றும் நம் நண்பர்கள்
எல்லோரையும் தினமும் நினைத்துக்கொள்வேன். என் மனம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தாலும்,
அவ்வப்போது இவர்களைப் பற்றிய நினைவு வந்து மகிழ்ச்சியும் துக்கமும் ஒருசேரக் கலந்த
ஒரு உணர்வில் அது ஆழ்ந்துவிடும். அவர்கள் என்னை எப்போதும் மறவாதிருக்க வேண்டும் என்பதே
என் பிரார்த்தனை. என்பால் நேசம் கொண்டவர்களும் என்னை நேசிக்க அனுமதித்தவர்களும் என்
மனக்கோவிலில் எப்போதும் குடி கொண்டிருக்கிறார்கள்.
அன்பிற்குரிய
சகோதரா, உன் மருத்துவப் படிப்பு உனக்கு நல்ல பயன் தரும் என்று எண்ணுகிறேன். படிப்பிற்காக
உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். உனது உடல் எடை என்ன என்பதைக் கூறவும்.
அன்பிற்குரிய பால், உனக்கும், வசந்திற்கும், நம் சகோதரி மாயிக்கும் என் அன்பும் ஆசிர்வாதங்களும்.
விடை பெறுகிறேன்.

உன் சகோதரன்
தாத்யா. 

Leave a Reply