Posted on Leave a comment

அஞ்சலி: சுஷ்மா ஸ்வராஜ் | SG சூர்யா



(ஓவியம்: லதா ரகுநாதன்)


1952ம்
ஆண்டு பிப்ரவரி 14ம் நாள், திரு. ஹரதேவ் ஷர்மா மற்றும் திருமதி லக்ஷ்மி தேவி ஆகியோருக்கு
மகளாகப் பிறந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். இவரது தந்தை சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்
இருந்தவர். சமஸ்கிருதம் மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸ் பிரிவுகளில் பட்டம் பெற்ற இவர்,
சட்டமும் பயின்றார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யா பரிஷத்
(ABVP)ல் 1970 முதல் சேவை புரியத் துவங்கினார். 1973 முதல் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப்
பணியாற்றத் துவங்கினார்.
இந்திரா
ஆட்சி செய்தபோது, காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நெருக்கடி நிலையால் பல இன்னல்களை சந்தித்த
இவர், பா.ஜ.கவில் இணைந்து படிப்படியாக உயரத் துவங்கினார். 1977 முதல் 1982 வரை மற்றும்
1987 முதல் 1990 வரை இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். 1977ல் ஹரியானா மாநில
அமைச்சரவையில் பங்குபெற்றார். 1979ம் ஆண்டு ஹரியானா மாநில பா.ஜ.க தலைவராகப் பொறுப்பேற்றார்.
1990ம் ஆண்டு ராஜ்ய சபா எம்.பியாக பதவி ஏற்றார். 1998ம் ஆண்டு டெல்லியின் முதல் பெண்
முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.
தகவல்
தொடர்புத் துறை, தொலைத்தொடர்புத் துறை, சுகாதாரத்துறை, குடும்ப நலத்துறை, வெளியுறவுத்
துறை எனப் பல்வேறு துறைகளில் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இவர் சுகாதாரத்துறை அமைச்சராக
இருந்தபோதுதான் போபால், ஒடிசா, ராஜஸ்தான், பீகார், சட்டிஸ்கர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தார்.
கடந்த
பா.ஜ.க ஆட்சியில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக
இருந்தார். இன, மத வேறுபாடின்றி உலகெங்கும் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை ஒரு வெளியுறவுத்துறை
அமைச்சராக உறுதி செய்தார். ட்விட்டர் மூலம் அனைத்து இக்கட்டான பிரச்சினைகளுக்கும் எளிதில்
தீர்வு கண்டார்.
இலங்கை பிரச்சினையில் சுஷ்மாவின்
அணுகுமுறை
சுஷ்மா
ஸ்வராஜ் குறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில் “இலங்கையில்
தமிழ் மக்களின் பிரச்சினைக்காக உணர்வுபூர்வமாக குரல் கொடுத்த ஒரு தலைவர் அவர். சுஷ்மா
ஸ்வராஜ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்திய நாடாளுமன்றக் குழுவிற்குத் தலைமை
தாங்கி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அப்போது, இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினை
தொடர்பாக காத்திரமான அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார். மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில்
இரா.சம்பந்தனுடன் இணைந்து விரைவில் அரசியல் தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி ஒரு சுமூகமான
உடன்பாடு காண வழி செய்தார். வெளியுறவு அமைச்சராக இருந்தபோது தமிழ் மக்களின் பிரச்சினையில்
மிகக் கவனமாகச் செயற்பட்ட ஒரு தலைவராவார். குறிப்பாக இலங்கைக்கு வருகை தந்த அனைத்து
சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்க அவர் தவறியதில்லை. இந்திய
மீனவர்கள் இடைடேயான மீனவர்கள் பிரச்சினையில் இவரது தலையீட்டிலேயே இழுவைப்படகுகள் முற்றாகத்
தடை செய்யப்பட்டன. அவை தொடர்பான முழுமையான அறிக்கையும் இவரால் வெளியிடப்பட்டது. நியாயத்தின்
பக்கம் நின்று கடைசி வரை போராடியவர் அவர்” என தெரிவித்துள்ளார்.
04/02/2011
வேதாரண்யம், பூங்காவனம் என்ற பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்
கொல்லப்பட்ட போது, பாதிக்கப்பட்ட அனைவரின் வீடுகளுக்கும் சென்று குடும்பத்தினருக்கு
ஆறுதலும், உதவித்தொகையும் வழங்கியதோடு, இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில்
கேள்வி எழுப்புவேன் எனக் கூறிச் சென்றார்.
பாராளுமன்றத்தில்
இலங்கை அரசுக்கு வெளிப்படையாக எச்சரிக்கை செய்தது மட்டுமல்லாமல், இந்தியாவுக்கான இலங்கைத்
தூதரை அழைத்து, “இனியும் இது போன்று நடக்கும் என்றால் அதற்கான எதிர்வினையை இலங்கை சந்திக்கத்
தயாரக இருக்க வேண்டும்” என எச்சரிக்கை செய்தார். அதுவரை தமிழக மீனவர்கள் என்றிருந்த
நிலையில் இந்தியத் தமிழ் மீனவர்கள் என்ற சொல்லைப் புதிதாகப் பயன்படுத்தியவர் சுஷ்மா
ஸ்வராஜ் அவர்கள். நமது மீனவர்கள் இலங்கையினால் பாதிக்கப்பட்டபோது அடுத்த நாளே தானாக
முன்வந்து டெல்லியில் மாபெரும் கண்டனக் கூட்டத்தை சுஷ்மா ஸ்வராஜ் நடத்தினார்.
31/01/2014ல்,
இராமேஸ்வரத்தில் நமது மீனவ சகோதரர்களின் நல்வாழ்விற்காக தமிழக பா.ஜ.க கடல்தாமரை மாநாடு
நடத்தியபோது, அதில் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், பா.ஜ.கவின் அரசு
ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்காகத் தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று அங்கேயே அறிவித்தார்.
இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மீனவர்களின் நலனுக்காகத் தனி அமைச்சகம் அமைத்து
மீனவ சமுதாயத்தைப் பெருமைபடுத்தியுள்ளார் என்றால் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்
சுஷ்மா ஸ்வராஜ்தான்.
பிரதமர்
நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு 2014ல் பதவி ஏற்ற பின்பாக, மத்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் பொறுப்பு வகித்த சுஷ்மா ஸ்வராஜ், இந்தியாவின் கௌரவத்தையும், பெருமையும் உலக
அரங்கில் நிலைநாட்ட தனது முழு கவனத்தையும் செலுத்தி ஓய்வின்றிப் பணியாற்றினார். தனது
சிறுநீரகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட பின்பும் கூட
தனது பணியை அவர் நிறுத்தவில்லை.
சுஷ்மா
ஸ்வராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், இலங்கை மற்றும் இந்தியத்
தமிழ் மீனவர்களுக்கிடையே 7 முறை நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இலங்கை மற்றும்
இந்திய அரசுக்கிடையே மீனவர்கள் நலன் குறித்து 6 முறை பேச்சுவார்த்தை நடந்தது. நமது
மீனவர்களின் துயரத்தை நிரந்தரமாகப் போக்க, ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக இந்திய, இலங்கை
அரசுகளின் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு 3 மாதங்களுக்கு ஒருமுறை இக்குழு சந்தித்து
விவாதிக்க வேண்டும் என்பதோடு, அதிகாரிகள் மட்டத்திலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை சந்திக்கவும்
ஏற்பாடு செய்தார்.
ரூபாய்
1500 கோடியில் இந்தியத் தமிழ் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு வசதியாகப் படகுகளைக்
கட்ட அவர் திட்டத்தை வகுத்துக் கொடுத்து, அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன. பிரதமர்
நரேந்திர மோடியின் அரசு பதவி ஏற்றவுடன், அதுவரை ஒரு வருடத்திற்கும் மேலாக இலங்கைச்
சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வைத்ததுடன்,
இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நமது மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு
செய்தார். ஈரான், பஹ்ரைன், செஷல்ஸ், இலங்கை, ஏமன் போன்ற பொல்வேறு நாடுகளில் சிறை பிடிக்கப்படும்
நமது மீனவர்களை மீட்க உறுதுணையாக நின்றார்.
நம்முடைய
மீனவர்கள் இலங்கை அரசினால் தொடர்ந்து சிறை பிடிக்கப்படும் போது, நமது மீனவர்களைக் கொஞ்சம்
கைதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள், நான் ஒவ்வொரு முறையும் நமது மீனவர்களின் விடுதலைக்காக
இலங்கை அரசிடம் மடிப்பிச்சை கேட்பது போலக் கேட்கிறேன் எனப் பலமுறை கூறியுள்ளார். பெற்ற
தாய் தன் மகனுக்குக் கஷ்டம் வரும்போது எப்படித் துடிப்பாளோ அந்த உணர்வை, அந்தத் தாய்
உள்ளத்தை சுஷ்மா ஸ்வராஜ் அவர்களிடம் நான் எப்போதும் கண்டுள்ளேன் என முன்னாள் அமைச்சரும்,
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வீரமங்கை
சுஷ்மா
ஸ்வராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், வெளிநாட்டில் சிக்கித்
தவித்த ஏராளமான இந்தியர்கள் தாய் நாடு திரும்ப பெரும் உதவியாக இருந்துள்ளார். ஏராளமானோருக்கு
அவர் பெரும் உதவி புரிந்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் சிக்கித் தவித்தாலும், இந்திய
வெளியுறவுத்துறை உங்களுக்கு பக்கபலமாக நின்று உதவும் என்றும், நான் காப்பாற்றுவேன்
என்றும் மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
80 ஆயிரம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை
சிக்கல்களில் இருந்து மீட்டுத் தாயகம் கொண்டு வந்து சேர்த்தவர்: பிரதமர் மோடி புகழாரம்
பிரதமர்
மோடி சென்ற ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தபோது வாஷிங்டன்னில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின்
சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“உலகில்
எந்த மூலையில் இந்தியர்களுக்குப் பாதிப்பு என்றாலும் சமூக வலைத்தளம் மூலம் தகவல்களைப்
பெற்று உடனடி நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது. சுஷ்மா சுவராஜுக்கு
யாராவது தகவல் அனுப்பினால் அடுத்த 15 நிமிடத்தில் அவர் அதற்கு பதில் அளிக்கிறார். இரவு
2 மணிக்கு கூட அவருக்குத் தகவல் அனுப்பினாலும் அதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 3 ஆண்டில் இந்தத் துறை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. உலகம் முழுவதும்
80 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியபோது அவர்களை பத்திரமாக தாயகத்திற்கு
திரும்ப அழைத்து வரப்பட்டனர். பாகிஸ்தானில் உஷ்மாஅகமது என்ற இந்திய பெண் துப்பாக்கி
முனையில் கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். இந்தியாவின் மகளான அவரை பத்திரமாக
இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வந்தோம். இதற்கு சுஷ்மா சுவராஜ்தான் காரணம்.”
காதலியைப் பார்க்கச் சென்று பாகிஸ்தான்
சிறையில் வாடிய இளைஞரை மீட்டவர்
மும்பையைச்
சேர்ந்தவர் ஹமீது நேஹல் அன்சாரி. பொறியாளரான இவருக்கு பேஸ்புக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த
பெண் ஒருவர் தோழியாக அறிமுகமானார். அங்குள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள கரக்
நகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணும் அன்சாரியும் தினமும் சாட் செய்தனர். நட்பு காதலாக மாறியது.
இந்நிலையில்
திடீரென அந்தப் பெண், அன்சாரியுடனான நட்பைத் துண்டித்தார் இதனால் சோகமான அன்சாரி தனது
தோழியை சந்திக்க ஆப்கானிஸ்தான் வழியாக 2012ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். கரக் நகரில்
அவரை பாகிஸ்தான் போலிஸார் கைது செய்தனர். ஆவணங்கள் இல்லாமல் உளவு பார்க்கச் சென்றதாகக்கூறி
பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2015ம் ஆண்டு அவருக்கு மேலும் 3 ஆண்டு சிறைத் தண்டனையை
வழங்கியது.
அவரை
விடுவித்து இந்தியா அழைத்து வர அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெரும்
முயற்சி மேற்கொண்டார். பெஷாவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, உத்தரவு பெற்று, அன்சாரி
இந்தியா அழைத்து வரப்பட்டார்.
இந்தியா
மீட்டுவரப்பட்ட அவர், முதலில் சந்தித்தது சுஷ்மாவைத்தான். அவரது சந்திப்பு உருக்கமானதாக
இருந்தது. ஒட்டுமொத்த இந்தியாவும் சுஷ்மாவைப் பாராட்டியது. இந்தநிலையில் சுஷ்மா ஸ்வராஜ்
மறைந்த செய்தி கேட்டு அன்சாரி பெரும் சோகத்துக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து அவர்
கூறியதாவது:
‘சுஷ்மா
ஸ்வராஜ் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவரது இழப்பை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.
நான் நாடு திரும்ப அவர் செய்த உதவிகள், அவரின் முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல.’
எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை அரவணைத்த
சுஷ்மா
கேரள
மாநிலம் கொச்சியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பென்சன், பென்சி ஆகியோர்
அவர்கள் பயின்ற தனியார் பள்ளியிலிருந்து 2003ல் வெளியேற்றப்பட்டனர். அந்தக் குழந்தைகளுக்கும்
எய்ட்ஸ் நோய் ஏற்பட்டிருப்பதால் மற்றவர்களுக்கும் இது பரவிவிடும் என்ற அறிவியலுக்குப்
புறம்பான அச்சத்தின் காரணமாக, இந்த ஈவு இரக்கமற்ற நடவடிக்கையை அப்பள்ளி நிர்வாகம் மேற்கொண்டது.
இந்தத்
தகவல் தெரியவந்ததை அடுத்து, அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா
ஸ்வராஜ், நேரடியாக கொச்சிக்குச் சென்று அந்தக் குழந்தைகளைக் கட்டியணைத்து முத்தமிட்டார்.
தொடுவதாலும், முத்தமிடுவதாலும் எய்ட்ஸ் நோய் பரவாது என்பதை உணர்த்துவதற்காக சுஷ்மா
அவ்வாறு செய்தார். இந்தச் சம்பவத்துக்கு பிறகு, அந்தக் குழந்தைகள் மீண்டும் பள்ளியில்
சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
உலகப் பெண்களின் உள்ளத்தைத் தொட்ட
சுஷ்மா
சுஷ்மா
சுவராஜ் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மூத்த ஆலோசகரும், மகளுமான
இவாங்கா டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், “சுஷ்மா
சுவராஜ் மறைவால் கருணையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட தலைவரை இந்தியா இழந்துவிட்டது.
அவர் இந்தியப் பெண்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கும் ஆதரவாகப் போராடக்கூடியவராக
இருந்தார். அவரை தெரிந்து வைத்திருப்பது கவுரவமான விஷயம்” என்று கூறியுள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின்
இழப்பு இந்தியாவுக்கும் பாஜகவுக்கும் பேரிழப்பு.

Posted on Leave a comment

லண்டனில் இருந்து மீண்டும் இரு கலைப்பொருள்கள் | எஸ்.விஜய்குமார்

லண்டனில் இந்தியாவின் 73வது சுதந்திர தின இந்தியக் கொடியேற்றக்
கொண்டாட்டத்தின்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்று நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மிக முக்கியமான இரண்டு கலைப் பொருட்களை மீட்டெடுத்துத் தருவதில்
அந்நாட்டு மெட்ரோபாலிட்டன் போலிஸ் உதவியுள்ளது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மீட்கப்பட்ட
நாளந்தா புத்தாவைத் தொடர்ந்து, இந்த வருடமும் மிக முக்கியமான இரு கலைப்பொருள்கள் திரும்ப
வந்துள்ளது.
லண்டனைச்
சேர்ந்த பெயர் வெளியே அறிவிக்கப்படாத நிறுவனம் ஒன்று தானே முன்வந்து இரண்டு கலைப் பொருள்களைத்
தந்துள்ளது. தொலைந்துபோன சிலைகளைக் மீட்டெடுக்கும் செயல்திட்டத்தை இந்த நிறுவனம் தொடர்ச்சியாகக்
கண்காணித்து வந்துள்ளது என்பது ஹோம்லேண்ட் செக்யூரிட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்
இருந்து தெளிவாகிறது.
நியூயார்க்கில்
உள்ள மிகப் பிரபலமான சுபாஷ் கபூரின் கூட்டாளிகளை எதிர்த்து ‘ஹோம்லேண்ட் செக்யூரிட்டி
வழக்கு’ பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நேரத்தில் இந்தக் கலைப் பொருட்கள் வந்துள்ளதைப்
பார்த்தால், என்ன நடந்திருக்கும் என்பதை யூகிப்பதில் கஷ்டம் இருக்காது.
கபூர்
மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக சில வாரங்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவில் இருக்கும் கபூரின் கூட்டாளிகளின் பெயர் முதன்முறையாக வெளிப்பட்டது. அதோடு
இந்த பயங்கரமான கள்ளச்சந்தை கலைப் பொருள் விற்பனையில் உள்ள உதவியாளர்களின் பெயரும்
அம்பலமானது. இதன் மூலம் நிழல் உலகில் நடமாடும் தொழில் ரீதியான சிலை செப்பனிடும் மனிதர்கள்
(
restorer) ஒரு
கலைப்பொருளை
மாற்றி
அதை விற்க எந்த அளவுக்கு எல்லா நியாயங்களையும் தாண்டிப் போவார்கள்
என்பது புரிந்தது.

(
https://www. theartnewspaper. com/subhash-kapoor)
இப்படி
சிலையைத் தூய்மை செய்து செப்பனிட்டு சரி செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த சிலை செப்பனிடுபவர்
தொடர்பான சில உதாரணங்கள் நம்மிடம் ஏற்கெனவே உண்டு. இதனால் புறாக்களுக்கு மத்தியில்
இருக்கும் பூனையை நம்மால் கண்டுகொள்ள முடிந்தது. கபூர் கைதாகி 8 வருடங்களுக்குப் பின்பும்,
இந்தியா மற்றும் அமெரிக்காவைத் தாண்டி அவர் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஏற்கெனவே கலைப் பொருள்களை வாங்கி இருந்த பிற நாட்டைச் சேர்ந்தவர்கள், தாங்களாக முன்வந்து
ஒப்புக்கொள்ளாமல், தாமதம் செய்து தப்பிவிடவேவிரும்பினார்கள்.
சட்ட அமலாக்கத்துறை எப்படி இந்தியாவிலிருந்து சட்டத்துக்குப்
புறம்பாக அநியாயமாகக் கலைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன என்பதை ஆராயும் என்று உறுதியாக
நம்புகிறோம்.
கலைப்பொருள்களின் விவரங்கள்:
 கலைப்பொருள்:
நவநீத கிருஷ்ணா
 உலோகம்:
வெண்கலம்
 பாணி:
பொது யுகம் 17ம் நூற்றாண்டு, நாயக்கர் காலம், தமிழ்நாடு, இந்தியா
இதுவரை
செய்யப்பட்ட பூர்வாங்க சோதனைகளை வைத்துப் பார்க்கும்போது, இன்றுவரை பதிவு செய்யப்பட்டிருக்கும்
எந்த ஒரு திருட்டுடனும் இது பொருந்திப் போகவில்லை. சமீப காலம் வரை இந்த வெண்கலச் சிலை
வழிபாட்டில் இருந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. சரியான ரசீதுகள் உள்ளிட்ட தரவுகள் இல்லை
என்பதாலும், சட்ட ரீதியக ஏற்றுமதி செய்யப்பட்டதற்குரிய நிரூபணம் இல்லை என்பதாலும்,
இதை இந்தியா பறிமுதல் செய்வதற்கான போதுமான காரணங்கள் இருக்கின்றன. இந்த வெண்கலச் சிலை
எங்கே களவாடப்பட்டது என்பதைக் கண்டறிய இன்னும் விசாரணைகள் நடத்தப்படவேண்டும். இது இந்திய
கள்ளச்சந்தை வியாபார வலைப்பின்னலை அம்பலப்படுத்த உதவும். அதோடு இதைக் கொள்ளை அடிக்க
உதவிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களையும் கண்டறிய முடியும்.
கலைப்பொருள்:
கலைநயம் மிக்க தூண்
 பொருள்:
சுண்ணாம்புக் கல்
 பாணி:
பொ. யு. மு 2ல் இருந்து பொ. யு. 2 வரை. வட்டமானு, ஆந்திரா, இந்தியா.

அதிகம்
அறியப்படாத, அந்திராவின் புத்த தலங்கள், திருடர்களாலும் கொள்ளைக்காரர்களாலும் அதிகம்
குறிவைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே சண்டாவரம் புத்தர் கதை சொல்லும் புடைப்புச் சிற்பம்
2017ல் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது. வியர்நெர் கேலரீஸ் வழியாக இதே
போன்ற ஒரு சுண்ணக் கல்தூண் ஒன்றும் ஏற்கெனவே விற்கப்பட்டுள்ளது. (சண்டாவரத்தில்
2002ல் பதியப்பட்ட எஃப். ஐ. ஆருடன் குறைந்தது ஒன்றாவது சரியாகப் பொருந்திப் போகிறது.)
சுண்ணக்
கல்தூண் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா பகுதிகளில், அதாவது முறையே
அமராவதி, பாணிகிரி, கனகனஹள்ளி மற்றும் வட்டமானு போன்ற பகுதிகளில் கட்டடம் கட்டப் பயன்படுத்தப்படுகிறது.
சுற்றுச்சுவரில் உள்ள ஒரு கம்பத்தின் பகுதி ஒன்றைப் போல் இருக்கும் இந்த சுண்ணக்
கல்தூண்கள் அமராவதி அல்லது கனகனஹள்ளி போன்ற இடங்களில் இருந்து வந்தவையாக இருக்கமுடியாது.
அங்கே இருப்பவை வேறு பாணியிலானவை. பாணிகிரியில் இன்னும் அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டுள்ளது.
இங்கே கிடைத்த புதிய கண்டடைவுள் இன்னும் பொதுவில் வைக்கப்படவில்லை. அப்படியானால் நிச்சயம்
இது 1980ல் அகழ்வாய்வு செய்யப்பட்ட வட்டமானுவாகத்தான் இருக்கவேண்டும்.
மேல்பகுதி
அற்ற சுற்றுச் சுவர் தூண்கள், உதாரணமாக, சந்தாவரத்தைச் சேர்ந்தவை. எனவே நாம் இதே போன்ற
தூண்களையே நாம் சார்ந்திருக்க வேண்டியது உள்ளது. எது இதனுடன் மிக அதிகம் பொருந்திப்
போகிறது என்று பார்த்தால், இது வட்டமானுவில் இருந்து வந்தவை என்று அறியலாம்.
வட்டமானு
அகழ்வாராய்ச்சி அறிக்கைகளில் உள்ள தூண்களுடன் ஒரு ஒப்பீடு:
வெகு
முன்பே அகழ்வாராய்ச்சி செய்த பிர்லா அறிவியல் அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிப் பொருள்களுடன்
ஒரு ஒப்பீடு:

மேற்கண்டவற்றில்
இருந்து எங்கள் முடிவு என்னவென்றால், இந்த சுண்ண சுற்றுச்சுவர் கல் தூண் ஆந்திராவில்
இருந்து, பெரும்பாலும் வட்டமானு அல்லது அதன் அருகில் உள்ள அகழ்வாராய்ச்சியில் கிடைத்ததாகவே
இருக்கவேண்டும். இந்தச் சிலைத் திட்டு விஷயத்தில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட, சாந்தூ
என்ற (டெல்லியைச் சேர்ந்த ரஞ்சித் கன்வருக்கு எதிராக ஹோம்லேண்ட் செக்யூரிட்டி தொடுத்த
வழக்கில் சொல்லி உள்ளபடி) குறியீட்டுப் பெயர் கொண்ட திருடன் இதே தளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
இதே போன்ற சிலைகளுடன் நின்றிருக்கும் புகைப்படத்தையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.
இந்தியத்
தொல்லியல் ஆய்வகமும் மாநில தொல்லியல் துறையும் தங்கள் கலைப் பொருள் இருப்பை தணிக்கை
செய்யலாம். வட்டமானு அகழ்வாராய்ச்சியின் மூலம் நிறைய முக்கியமான பொருள்களை சேகரித்திருக்கும்
பிர்லா அறிவியல் அருங்காட்சியகமும் தணிக்கை செய்யவேண்டும். அதோடு,
இதுவரை
கவனத்துக்கு வராத இடங்களில் எங்கேனும் சட்டத்துக்குப் புறம்பாகத் தோண்டப்பட்டு அந்த
இடம் அழிவுக்குள்ளாகிறதா என்பதைக் கண்காணிக்கச் சொல்லி காவல்துறை உத்தரவிடலாம்.

எங்களுடன் இருக்கும் தன்னார்வலர்களுக்கும்,
அடையாளங்களை ஒப்பிட தொழில்முறையில் உதவும்
நிபுணர்களை உள்ளடக்கிய குழுவான ப்ரோ போனோவுக்கும் நன்றி. நம் கடவுளர்களை மீண்டும் இந்தியாவுக்கு
மீட்டெடுப்பதில் தொடர்ந்து செயலாற்றவே உறுதி கொண்டிருக்கிறோம். 



#BringOurGodsHome
#IndiaPrideProject

Posted on Leave a comment

அஞ்சலி: அருண் ஜெயிட்லி (1952-2019) | திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர்

(புகைப்படம் நன்றி: India Today)

23
வயது. வழக்கறிஞர் படிப்பில் துடிப்புடன், அதுவும் தில்லியில், மேல் தட்டு பஞ்சாபி குடும்பத்தில்
பிறந்த, திரைப்பட நடிகர் போல் தோற்றம் கொண்ட ஒரு இளைஞனின் சிந்தனை எப்படி இருக்கும்?
தொழில் முறையில் எப்படி வளர்வோம், சமுதாயத்தில் தன்னுடைய அந்தஸ்தை கார், பங்களா, பெண்கள்
என்று எப்படி படாடோபமாக வெளிப்படுத்துவது என்றுதானே இருக்கும்? ஆனால் அந்த இளைஞன் அருண்
ஜெயிட்லி ஆக இருந் ததால்… அவசர நிலை மிசா பிரகடனத்தை எப்படி எதிர்ப்பது என்ற தேசிய
சிந்தனை இருந்தது. பிரதமர் இந்திராவின் கொடும்பாவியை எரிக்கும் துணிவும் இருந்தது.
ஏபிவிபி
செயலாளராக இருந்த அருண், தன் அரசியல் வாழ்க்கையின் முதல் படியில், நானாஜி தேஷ்முக்,
வாஜ்பாய், அத்வானி போன்ற, நாட்டின் பெரும்தலைவர்களுடன் 19 மாதம் சிறையில் கழித்தார்
(1975-1977). என்று, எப்படி, எவ்வாறு பொழுது புலரும் என்று தெரியாத, இந்திய சரித்திரத்தின்
கருப்பு நாட்கள் அவை. மற்ற சாதாரண இளைஞர்களின் நம்பிக்கையை அந்தச் சிறைவாசம் உடைத்திருக்கும்.
அருண்
ஜி, லோக் நாயக் ஜெ.பியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் இருந்தார்.
அரசியல் ஜெயிட்லி
1977ல்
ஜன சங்கம், பின்னர் 1990 முதல் பாஜக நிர்வாகக் குழுவில் உறுப்பினராக செயல்படத் துவங்கினார்.
இருப்பினும் இவர் மக்களவைத் தேர்தலில் 2014ல் மட்டுமே போட்டியிட்டார். 2014ல் பாராளுமன்றத்
தேர்தலில் காப்டன் அமரீந்தர் சிங்கிடம் தோல்வி. இது சிறிய பின்னடைவாக ஆனது சற்று வருத்தம்
அளிக்கும் விஷயம். ராஜ்ய சபை உறுப்பினராகவே, தன் அரசியல், அமைச்சகப் பணியினைத் தொடர்ந்தார்.
வழக்கறிஞர் ஜெயிட்லி
1989ல்
வி.பி.சிங் இவரை கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் ஆக்கினார். போபோர்ஸ் ஊழல் வழக்கிற்குத்
தேவையான தகவல்களைத் திரட்டும் பொறுப்பு அருண் ஜிக்கு வழங்கப்பட்டது. ஒரு சுப்ரீம் கோர்ட்
வக்கீலாக அருண் ஜீயின் கட்சிக்காரர்கள், பெப்சி, கோக் போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள்!
அத்வானி, ஷரத் யாதவ், சிந்தியா போன்ற பெரும் அரசியல்வாதிகள். தொழில் முறையில், அருண்
ஜி, இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
அமைச்சர் ஜெயிட்லி
உலக
வர்த்தக நிறுவனம் (WTO), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), சட்ட விரோதமான கறுப்புப் பணச்
சலவை எதிர்ப்பு (AML) போன்றவற்றில் அருண் ஜியின் பெரும் உழைப்பை நாடு பெற்றிருக்கிறது.
தகவல்,
தொலைத் தொடர்பு, சட்டம், அரசின் முதலீடு துறப்பு, கப்பல்துறை, நிதி, உள்துறை என்று
அருண் ஜியின் கைவண்ணம் கண்ட அமைச்சகங்கள் பல. ஆனால் சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய
நிதிச் சீர்திருத்தங்களான, டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி, IBC எனப்படும் நொடித்து முதலீடு
இழந்த கம்பெனிகளை சரிவர மூடி, கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் காப்பாற்றும் திட்டம், அருண்
ஜி நிதி அமைச்சராக இருக்கையில் நிறைவேறின. இவற்றைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மிகப்
பெரும் துணிச்சல் தேவை. அந்தத் துணிவு, அருண் ஜி கொடுத்த நம்பிக்கையால் நரேந்திர மோதி
அரசிடம் இருந்தது. அரசியல் வாதிகளிடமிருந்து, இலவசத்தை மட்டுமே பார்த்திருந்த இந்தியாவில்,
இந்தத் திட்டங்களும், எரிவாயு மானியக் குறைப்பும், இந்த அரசுக்கு அதன் நேர்மை கொடுத்த
துணிவு.
நண்பர் ஜெயிட்லி
2002.
கொடூரமாக நிகழ்த்தப்பட்ட கோத்ரா ரயில் எரிப்பிற்கு எதிர்வினையாக, குஜராத்தில் வன்முறை
வெடித்தது. காங்கிரஸ் தயவில் வாழ்கின்ற இந்திய ஊடகங்கள், தங்கள் வெறுப்பினைக் குவித்து,
நரேந்திர மோதி அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தின. செக்யூலர் விஷத்தில் தீண்டப்பட்டு,
கட்சியிலேயே, குறைவான நபர்கள் மட்டுமே மோதி ஜிக்கு ஆதரவாக இருந்தார்கள். உண்மை ஏறத்தாழ
சிறு நூலிழையில் ஊசல் ஆடிக் கொண்டு இருந்தது. அப்போது அருண் ஜியின் மோதி ஆதரவுப் பேச்சு
உண்மைக்கு சுவாசம் தந்தது. பிரதமர் வாஜ்பாய் அனுமதியுடன், மோதி அரசு குஜராத்தில் தொடர்ந்தது.
ஒரு
நல்ல திறமையான வழக்கறிஞராக, பத்திரிகைகளின் பொய் ஒப்பனை விலக்கி, உண்மை நிலவரத்தைப்
புரிந்து கொள்ளவும், அதைத் தெளிவுற சபையில் எடுத்துச் சொல்லவும் அருண் ஜிக்குத் தெரிந்திருந்தது.
அந்த சம்பவம் மோதி ஜி – அருண் ஜி இருவருக்கும் இடையில் ஒரு நட்புப் பிணைப்பை உருவாக்கியது.
அந்த நட்பின் நற்பயனை, இந்நாடு பின்னாளில் அடைந்தது.
மனிதர் ஜெயிட்லி
குற்றமற்றவர்கள்,
குறை சொல்ல முடியாதவர்கள் யார்? சிதம்பரம் போன்ற, காங்கிரசின் சில முக்கியத் தலைவர்களுடன்
இவருக்கிருந்த தனிப்பட்ட நட்பினால், ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளில் சுணக்கம்
ஏற்பட்டது என்பது ஒரு குற்றச்சாட்டு.
ஆனால்
குஜராத்தில் இருந்து வந்த பிரதமர் நரேந்திர மோதி, முற்றிலும் புதிய சூழலில், அதுவும்,
கயமை நிறைந்த, நுனி நாக்கு ஆங்கிலமும், வன்மமும் நிறைந்த லுட்யன்கள் / கான் மார்க்கெட்
இருட்டுக் கனவான்களை சமாளித்ததில் அருண் ஜெயிட்லியின் பங்கு மகத்தானது. இழுக்கல் உடையுழி
ஊற்றுக்கோல் போல் அருண் ஜி செயல்பட்டார்.
நாடு
ஒரு திறமையான வழக்கறிஞரை, அவரது குடும்பம் குடும்பத் தலைவனை, பாரதீய ஜனதா கட்சி ஒரு
உன்னதமான தலைவரை இழந்து சோகத்தில் தவிக்கிறது.

போய் வாருங்கள் அருண் ஜி.
பாரதீயத்தின் விதைகள், விழுதுகளாக உயிர்த்து, பாரதம் இன்று பாதுகாப்பான கைகளில் இருக்கிறது.
உங்கள் உழைப்பால் கிட்டிய பயனை, இந்த தேசம் மறவாது நெடுங்காலம் நினைவில் வைத்திருக்கும். 

Posted on Leave a comment

370 வது பிரிவு நீக்கம் | ஓகை நடராஜன்


(புகைப்படம் நன்றி: Business Today)

‘பெரிதினும் பெரிது கேள்’ – பாரதியின் இந்த வாக்குக்கு ஏற்ப அண்மையில் நடந்திருக்கும் ஒரு விஷயம், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவு விலக்கி வைக்கப்பட்டிருப்பது. இதன் விளைவாக காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டிருந்த தனி நபர்களுக்கான சிறப்பு உரிமை தரும் 35ஏ என்கிற பிரிவும் செயலற்றதாக்கப்பட்டிருக்கிறது. இதை ஏன் நாம் பெரிதினும் பெரிது கேள் என்ற அளவில் சொல்ல வேண்டும்? சீர் செய்ய முடியாது என்கிற நிலைக்கு கிட்டத்தட்ட வந்துவிட்ட ஒரு பிரச்சினை இது. உலக நாடுகளில் பல இடங்களில் இருக்கும் எல்லைத் தகராறுகளில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளில் மிக முக்கியமானதும் அபாயகரமானதுமான பிரச்சினை இதுவே. இதைக் காரணம் காட்டி உலக வல்லரசுகள் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு பேரபாயம் எப்பொழுதும் நம் தலைக்கு மேல் ஆயிரம் கத்திகளாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மிக லாகவமாக, இனி எதிர்காலத்தில் வேறு பிரச்சினைகள் வராத அளவிற்குத் தீர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு காரியம் 370வது பிரிவு நீக்கம். நாம் இதை இப்படித்தான் வர்ணிக்க முடியும். ‘பெரிதினும் பெரிது கேள்.’ இதற்கு மேல் வார்த்தைகள் இதற்கு இல்லை என்ற அளவில் பாரதி இதை நமக்கு அன்றே சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்.

இந்தக் காஷ்மீர் பிரச்சினைக்கு ஆரம்பகால காரணமாக அதுவரை நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் எடுத்த ஒரு முக்கியமான முடிவைச் சொல்லலாம். இந்தியா பாகிஸ்தான் பிரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை அவர்கள் செயல்படுத்தி நமக்குச் சுதந்திரத்தை வழங்கினார்கள். அதேபோல ஆங்கிலேய அரசுக்குக் கப்பம் கட்டுகின்ற பல சிறிய பெரிய சமஸ்தானங்களை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சேர்த்துவிட்டுச் சென்றிருந்ததால் இன்றைக்கு உலக அரசியல் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் அந்த அளவுக்குப் பொறுப்பை நாம் ஆங்கிலேயரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்களே இரண்டாம் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் இருந்த உலக அரசியல் காரணமாகத் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று இந்தியாவை விட்டு வெளியேறினார்கள்.

அப்படி அவர்கள் வெளியேறியபோது அவர்கள் விட்டுச் சென்ற குழப்பங்களை நாமே தீர்க்க வேண்டிய நிலையில், சர்தார் வல்லபபாய் படேல் மிகச் சாதுரியமாக அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்தார். ஆனாலும் அவருக்கு மேல் அதிகாரத்தில் பிரதமராக இருந்த நேரு, காஷ்மீர் பிரச்சினையை மட்டும் தாமாகக் கையாண்டு அதை இந்த அளவுக்கான குழப்பத்தின் உச்சிக்கு செலுத்திவிட்டுச் சென்றுவிட்டார். காஷ்மீருக்கான உரிமையை பாகிஸ்தான் அதற்கு சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து கேட்க ஆரம்பித்துவிட்டது. அதற்குக் காரணம் அந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது மட்டுமே. ஆனால் உலக நாடுகளும் இந்தக் காரணத்துக்காக அவ்வப்போது பாகிஸ்தான் பக்கமும் இந்தியா பக்கமும் மாறி மாறி இருந்து கொண்டு இருந்தாலும், ஒரு மிகப் பெரிய உண்மையை உலக மக்களும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளும் உணர்ந்திருக்கின்றன. அதாவது இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருந்தாலும், இந்துக்களின் நாடாக இருந்தாலும், மிகப்பெரிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் நாடாகவும் இருக்கிறது. ஏறத்தாழ எல்லா மாநிலங்களிலும் கணிசமான அளவில் முஸ்லிம்கள் பரவியிருப்பதை இந்தியாவின் ஒரு தன்மையாகவே உலகம் பார்க்கிறது. அந்த அளவில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால் அது பாகிஸ்தானுடன் சேர வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் பொருளற்றதாகிப் போய்விடுகிறது.

ஆனால் பாகிஸ்தான் என்கிற நாடோ அன்றிலிருந்து இன்றுவரை தனது மொத்த அரசியலையும் ராணுவத்தையும் காஷ்மீருக்காகவே அலைக்கழித்து, கிட்டத்தட்ட பித்து பிடித்த நிலையில், இவ்வளவு நாளும் வேறு எந்தத் துறையிலும் எதையும் சாதிக்காமல் இருந்து வந்திருக்கிறது. இப்போது அந்தப் பித்தின் உச்சத்தில் இருக்கிறது. இதற்காக மூன்று முறை நம் மீது போர் தொடுத்துத் தோற்றும் போயிருக்கிறது. இதனால் இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்கிற ஒரு வேட்கை பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் தேசியக் கொள்கைக்கும் ஆதாரமாகவே எப்பவும் இருந்துகொண்டிருந்தது. சென்ற 5 ஆண்டு பாஜகவின் ஆட்சியின்போது இதில் ஈடுபடாமல் உலகளாவிய கௌரவத்தைப் பெற்று தன்னிகரற்று பாரதத்தை செலுத்திய பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய 2019 தேர்தலுக்கான அறிக்கையில் இந்த 370 பிரிவை நீக்குவதாக வாக்குறுதி அளித்து, அதை மீண்டும் ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களில் சட்டென நிறைவேற்றியது.

இதனால் ஏற்படப் போகும் மாற்றங்களை யூகிப்போம்.

இந்தச் செயலாக்கத்தில் உச்சகட்ட பாதகமாக என்ன நிகழும்? பாகிஸ்தானின் தற்போதைய மும்முரமும் அதற்குத் துணை போகின்ற சீனாவின் அடாவடித்தனமும் இதை ஒரு மூன்றாவது உலகப் போருக்கு இட்டுச் செல்லக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இது பயமுறுத்தல் இல்லை. மூன்றாவது உலகப்போருக்கான சாத்தியம் தற்போதைய உலக அரசியலில் உலகின் பல இடங்களில் இருந்துகொண்டே இருக்கிறது. இதன் பின்னணியில் இதற்கான வல்லமையோடு இருக்கக்கூடிய ஒரு நாடு சீனா. சீனாவின் ஈடுபாடில்லாமல் ஒரு உலகப்போர் இனிமேல் வருவதற்கு வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்பொழுது இந்த காஷ்மீர் பிரச்சினையில் சீனாவின் நேரடித் தலையீடு நடக்க ஆரம்பித்திருக்கிறது. அதிலும் இந்த காஷ்மீர் பிரச்சினையினால் சீனாவுக்கு நேரடி பாதிப்புகள் அதிகமாகவே இருக்கப் போகின்றன. அதனால், மூன்றாவது உலகப் போருக்கு இட்டுச்செல்லக்கூடிய ஒரு பேரபாயமான நடவடிக்கையாக இதை நாம் காணலாம்.

ஆனால் அதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கலாமா என்று கேட்டால் அதைவிட பைத்தியக்காரத்தனமும் பய்ந்தாங்கொள்ளித்தனமும் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தியா என்கிற நாடு உலகின் உன்னதமான நாடாக இருந்த ஒரு காலகட்டத்தை எட்டிப் பிடிக்கச் சென்று கொண்டிருக்க வேண்டிய நிலையில், அதற்கு மிகப் பெரும் தடைக்கல்லாக இருக்கிற இந்தக் காஷ்மீர் பிரச்சினையை தீர்த்துக் கட்டினால்தான் இந்தியா தனது உன்னதத்தை நோக்கிய பயணத்தைச் செய்ய முடியும்.

இதற்கு அடுத்தபடியாக அடுத்த ஒரு நிகழ் சாத்தியம் என்று பார்த்தோமானால் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஓர் அணு ஆயுதப்போர் நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தான் அணு ஆயுத நாடு. அதன் தற்போதைய நிலையில் அதன் ராணுவ பலம், இந்தியாவின் ராணுவ பலத்தோடு ஒப்பிடக்கூடிய நிலையில் இல்லை. அதுமட்டுமல்ல, இந்தியாவின் முப்படைகளின் வளர்ச்சி பாகிஸ்தானை விட பன்மடங்கு உயர்ந்து இருக்கிறது. ஆகவே ஒரு போரில் பாகிஸ்தான் நமக்கு ஏதாவது ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்றால் அது பாகிஸ்தானின் அணு ஆயுதப் பிரயோகமாக மட்டுமே இருக்க முடியும். இந்த ஒரு செயல் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த அழிவுக்கு இட்டுச் சென்றுவிடும். இந்தியாவுக்கு அணு ஆயுத வலிமை இருந்தாலும், பாகிஸ்தான் அதைப் பற்றிக் கவலைப்படாமல், தன் அழிவையும் மீறி இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்பையே பெரிதாக எண்ணும் அளவுக்கு அங்கு ராணுவ மனநிலை அந்த நாடு பிறந்ததிலிருந்து வளர்ந்திருக்கிறது. அதற்காக நாம் நம் காரியங்களைச் செய்யாமல் இருக்க முடியாது. இதையும் சமாளிப்பதற்கான தீர்வுகளை யோசித்துக்கொண்டே இருப்பதுதான் நமக்கிருக்கும் கடமை.

இந்த இரண்டு விதமான பேரபாயங்களையும் அதன் சாத்தியங்களையும் தாண்டி வேறு என்னென்ன நடக்கும்? இதனால் நமக்குப் பல நன்மைகள் கண்ணுக்குத் தென்படுகின்றன. இது நமக்கு மட்டுமல்ல பாகிஸ்தானுக்கும் நன்மை பயக்கக் கூடியது. உலகத்துக்கே நன்மை பயக்கக் கூடியது. இந்திய தேசிய நீரோட்டத்தில் காஷ்மீரும் கலந்து, இப்பொழுது இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்கள் எப்படித் தங்களுடைய மொழி மற்றும் கலாசாரத் தனித்தன்மையைப் பேணிக்கொண்டே இந்திய தேசியத்தில் அங்கமாகவும் இருக்கின்றனவோ அதைப் போலவே காஷ்மீரும் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இதில் லடாக் என்கிற பிரதேசத்தைப் பிரித்தெடுத்து அந்த மாநில மக்கள் நன்றாக வாழ்வதற்கான வழியை ஒரு மாயாஜாலம் போல இந்த முடிவு மூலமாக அரசு செய்திருக்கிறது. இனிமேல் லடாக் என்பது அங்கிருக்கும் கார்கில் நகரத்தையும் சேர்த்து அமைதிப்பூங்காவாகவும், முன்னேற்றக் களமாகவும் மாறப்போகின்றது. இதை உடனடி நிகழ்வாக நாம் இந்த முடிவிலிருந்து பார்க்கலாம்.

ஜம்மு-காஷ்மீர் என்ற இரண்டு பகுதிகளில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் ஜம்முவையும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கையும் பிரிக்காமல் வைத்திருப்பது, அதுவும் தற்காலிகமாக ஒரு சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக வைத்திருப்பது, அருமையான ஒரு முடிவு. விரைவில் அங்கு சுமுகமான சூழல் எட்டப்படுவதற்கான அனைத்து வேலைகளையும் ஒவ்வொன்றாகச் செய்ய ஆரம்பித்தால் அங்கே இயல்புநிலை விரைவிலேயே திரும்புவதற்கு வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருக்கின்றன. அதாவது அந்த மாநிலங்களுக்கான தனித்தன்மையை பாதிக்கும் எந்தச் செயலையும் செய்யாமல், தேசிய நீரோட்டத்தில் இணைக்க நாம் வடகிழக்கு மாநிலங்களைக் கையாளுவதைப் போலவே செய்துவிட்டால் வருங்காலத்தில் பிரிவினை கோஷங்களுக்கான சாத்தியங்கள் மறைந்து போகும். மேலும் அங்கு வரப்போகும் பொருளாதார முன்னேற்றங்கள் பக்கத்திலேயே இருக்கும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய நிலை வரும்பொழுது அங்கிருக்கும் மக்களின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறும். இந்திய அரசாங்கத்தின் மேல் விதைக்கப்படும் வெறுப்புணர்வை விமர்சனங்களையும் இந்த முன்னேற்றம் நிச்சயமாக நீக்கிவிடும்.

இந்த நிலையில் நாம் ஒரு சிறு ஒப்பீட்டை தமிழ்நாட்டில் செய்து பார்க்கலாம். தமிழ்நாட்டில் தென்படுகிற பிரிவினைவாத சக்திகள், எப்போது பாகிஸ்தான் என்ற தனிநாடு வேண்டும் என்ற எண்ணம் உதித்ததோ அப்போதே தொடங்கிவிட்டது. இதற்காகவே ஈ.வெ.ராமசாமி ஜின்னாவின் காலில் விழுந்து திராவிடஸ்தான் கேட்டிருக்கிறார். நல்ல வேலையாக ஜின்னாவுக்கு இருந்த இயல்பான சுயநலத்தால் இதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். ஆனால் அப்போது விதைக்கப்பட்ட அந்தப் பிரிவினை கோஷம், இன்றுவரை சீமைக் கருவேலம் எப்படித் தமிழ்நாட்டில் பரந்துவிரிந்து தன்னுடைய இருப்பை உறுதி செய்திருக்கிறதோ அப்படி உறுதி செய்திருக்கிறது. பொதுவான தமிழ் மக்கள் இந்த எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதில்லை. ஆனாலும் அந்த நிலை இப்போது ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இப்போது கிட்டத்திட்ட பாகிஸ்தான் ஆதரவாகவே திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய நிலைப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதும் கூட தமிழ்நாட்டுப் பிரிவினைவாதத்தின் ஒரு மூர்க்கமான வெளிப்பாடுதான்.

காஷ்மீரில் இனி நடக்கும் நிகழ்வுகள் இங்கே தமிழ்நாட்டிலும் மறைமுகமாக, மென்மையாக பிரிவினை எண்ணமற்ற ஒரு நிலையை உருவாக்கும் என்று நம்பலாம். பெரிதினும் பெரிது கேட்டு, பெரிதினும் பெரிது வரப்போகும் ஒரு பெரிய முடிவு 370வது பிரிவை நீக்கியதுதான்.

இந்தப் பிரச்சினையை நமது அரசு கையாண்ட விதமும் நிறைவேற்றிய விதமும் கிட்டத்தட்ட உலகமும், ஏன் நாமம் கூட எதிர்பாராத ஒரு நிகழ்வு. இதைச் செயல்படுத்துவதில் இருந்த லாகவம் பிரமிக்கத்தக்கது. அதற்குப்பின்னால் கொடுக்கப்பட்ட வியூகம் பிரம்மாண்டமானது. இதைப் பழுதின்றி செயல்படும் திட்டமாக வடிவமைத்திருப்பது எண்ணி எண்ணிப் பார்த்து வியந்து மாளாத அளவுக்கு ஓர் அற்புதம்!