Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 5) | தமிழில்: ஜனனி ரமேஷ்

பகுதி 5(17)
செல்வி. மோடாக் சாட்சி (பி. டபிள்யூ 60) :
இந்த
சாட்சியின் சான்றாவணத்தில் என் வழக்கு தொடர்பாக இரண்டு அல்லது மூன்று வரிகளே உள்ளன.
தனது சான்றாவணத்தின் பக்கம் 277ல் சாட்சி கூறுவதாவதுள்: ‘1948 ஜனவரி 14 அன்று ரயில்
பயணத்தின் போது, ஆப்தே மற்றும் கோட்சே இருவருக்குமான உரையாடலிலிருந்து சிவாஜி பூங்கா
அருகிலுள்ள சாவர்க்கர் சதனுக்குப் போக விரும்பியதாகத் தெரிய வந்தது’ என்கிறார்.
கோட்சேவும்
ஆப்தேவும் என்னைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்பியதாக இந்தச் சாட்சி எந்த இடத்திலும்
சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாவர்க்கர் சதனுக்குப் போவதென்றால் சாவர்க்கரைச்
சந்திக்கத்தான் செல்லவேண்டும் என்று அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. சாவர்க்கர் சதன்
குறித்து ப்ராஸிக்யூஷன் தரப்பே அளித்த சான்றின் அடிப்படையில், மேற்கண்ட விளக்கத்தைப்
பார்க்கும்போது, ஆப்தேவும், கோட்சேவும், சாவர்க்கர் சதனில் வாடகைக்குக் குடியிருக்கும்
பரிச்சயமான பலரை அல்லது என் செயலரின் பொறுப்பில் தரைத்தளத்தில் இருந்த இந்து சங்கதன்
அலுவலகத்தில் அடிக்கடி கூடும் அவர்களது நண்பர்களான இந்து சபா ஊழியர்களைப் பார்க்க விரும்பியிருக்கலாம்.
நான் முதல் தளத்தில் வசிப்பதால், அலுவலகத்துக்கு வரும் மக்கள் கட்டாயமாக என்னைப் பார்க்க
வர வேண்டிய அவசியமில்லை. சாவர்க்கர் சதனுக்குப் பலமுறை வந்திருந்தாலும் என்னை ஒரே ஒருமுறைதான்
பார்த்ததாக ப்ராஸிக்யூஷன் தரப்பு சாட்சியான பேட்ஜே அவரது சான்றாவணத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்
(பக்கம் 222).
வாக்குமூலம்
பக்கம் 278ல் சாட்சி மேலும் கூறுகையில் ‘சாவர்க்கர் சதனுக்கு எதிரே தனது வாகனத்தை நிறுத்தியபோது
ஆப்தேவும், கோட்சேவும் இறங்கிக் கொண்டனர். ஆனால் அவர்கள் உண்மையில் சாவர்க்கர் சதனுக்குள்தான்
நுழைந்ததைத்தான் பார்க்கவில்லை’ என்கிறார். எனவே இந்த சாட்சிக்கு என்னைப் பொருத்தவரை
எந்த முக்கியத்துவமோ, உறுதிப்படுத்தும் மதிப்போ கிடையாது.
ஆப்தே
மற்றும் கோட்சேவை இருவராகவோ, இருவரில் ஒருவராகவோ, என் வீட்டுக்கு வந்ததை நான் பார்க்கவுமில்லை,
கேட்கவுமில்லை. மேலும் இருவரையும் சேர்ந்தோ, தனித்தனியாகவோ, அந்நாளிலோ, அடுத்த நாள்களிலோ,
பார்க்கவுமில்லை என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
(18) டாக்டர் ஜே சி ஜெயின் (பி.
டபிள்யூ. 67)
டாக்டர்
ஜெயின் என்னை நேரடியாகவும், உறுதியாகவும், குறிப்பிடும் ஒரே பகுதி அவருடைய வாக்குமூலத்தின்
பக்கங்கள் 299-300. அவர் பதிவு செய்துள்ளதாவது: ‘அகமதுநகரில் மதன்லாலின் பணிகளைக் கேட்ட
பிறகு இந்து மகாசபாவின் வீர சாவர்க்கர் என்னை (மதன்லால்) வரச் சொல்லி இரண்டு மணி நேரம்
பேசினார்’ என்று மதன்லால் சொன்னார். மேலும் வீர சாவர்க்கர் அவருடைய முதுகில் தட்டி
“தொடர்ந்து செய்” என்றார். அவ்வளவுதான்.
டாக்டர்
ஜெயினிடம் மதன்லால் சொன்னதாகக் கூறப்படும் இக்கதை குறித்து எனது கருத்தைக் கீழ்க்கண்டவாறு
சமர்ப்பிக்கிறேன்:
முதலாவதாக,
நான் மதன்லால் என்பவர் பற்றிக் கேள்விப்படவும் இல்லை, அவர் என்னைச் சந்திக்கவும் இல்லை,
அவரது பணிகள் குறித்து என்னிடம் விவரிக்கவும் இல்லை. அவருடன் எந்தச் சூழலிலும் உரையாடவும்
இல்லை. அவருடைய பணியைப் பாராட்டி அவர் முதுகில் தட்டி “தொடர்ந்து செய்” என்று சொல்லவும்
இல்லை.
இரண்டாவதாக,
என்னைச் சந்தித்த கதையை டாக்டர் ஜெயினிடம் மதன்லாலே சொன்னார் என்று வைத்துக் கொண்டாலும்,
அகமத் நகரில் ‘மதன்லால் பணி’ குறித்துத் தனது சான்றாவணப் பக்கம் 229ல் ஜெயின், ‘அகமத்
நகரில் தனது பணிகள் பற்றி என்னிடம் மதன்லால் விவரித்தார்’ என்று கூறியதுடன் ‘பட்வர்த்தன்
கூட்டத்தில் மதன்லால் தகராறு செய்ததுடன் என்னைத் தாக்கினார்; அகதிகள் மற்றும் இந்துக்களுக்காகத்
தன்னார்வக் குழுவை அமைத்தார்; நகரில் கட்சியைத் தொடங்கி ஆயுதங்களை வாங்கிக் குவித்ததுடன்
முஸ்லிம் பழக்கடைக்காரர்களை விரட்டி அடித்தார்’ என்றும் பதிவு செய்துள்ளார். அகமத்
நகரில் அவருடைய பணிகள் என்று ஜெயினே குறிப்பிட்டுள்ளார். பிறகு வீர சவார்க்கரைச் சந்தித்து
அகமத் நகரில் தனது பணிகளை அவரிடம் விவரித்ததாக மதன்லால் தன்னிடம் சொன்னதாகவும் ஜெயின்
குறிப்பிடுகிறார்.
இந்தத்
தொடர்ச்சியை நுணுக்கமாகக் கவனிக்கும் போது “இவற்றை” அல்லது “பணிகளில்” சிலவற்றை மட்டுமே
என்னிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது. என்னை மதன்லால் சந்திக்க வந்த கதையைச் சொன்ன பிறகே
ஜெயின் அதன் பிற்பகுதியை பக்கம் 300ல் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்: ‘ஏதோவொரு தலைவரைக்
கொல்ல அவரது கட்சி சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் அந்தத் தலைவர் காந்திஜி என்றும்
கடைசியாகத் தன்னிடம் மதன்லால் தெரிவித்தாகவும்’ கூறுகிறார். எனவே இக்கதையின் தொடர்ச்சியிலிருந்து
காந்திஜியைக் கொலை செய்யும் சதித்திட்டம் தனியான திட்டம் என்பதும், “அகமத் நகரில் மதன்லால்
பணிகள்” என்று ஜெயின் முன்னர் சொன்ன நிகழ்வுகளின் பட்டியலில் இது சேராது என்பதும் தெளிவு.
எனவே
இதன் காரணமாக மதன்லால் என்னிடம் சொன்னதாகக் கூறப்படும் விஷயங்களில் அகமத் நகர் பணிகள்
மட்டுமே அடங்கும் என்றும் காந்திஜியைக் கொலை செய்யும் சதித்திட்டம் குறித்து என்னிடம்
எதுவும் கூறவில்லை என்பதும் தெளிவு. மேலும் மற்றும் இந்த அனுமானம் தவிர்த்துக் கவனிக்க
வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில், டாக்டர் ஜெயினின் சாட்சியம் முழுவதும் காந்திஜியைக்
கொல்லும் சதித்திட்டம் பற்றி மதன்லால் என்னிடம் கூறியதற்கு ஆதரவாகவோ, அந்தக் கட்சியுடன்
எனக்குக் குறைந்தபட்சம் தொடர்போ, அறிவோ இருப்பதாகவோ, ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.
மாறாக, மதன்லாலின் கட்சி உறுப்பினர்களின் பெயர்களோ, ஏனைய விவரங்களோ, அவரைப் பற்றியோ
கூட அதிகம் தெரியாது என்று டாக்டர் ஜெயின் தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளார். (பி. டபிள்யூ
67 பக்கங்கள் 306 & 308).
கூறப்படும்
சதித்திட்டத்துடன் என்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்புபடுத்த முடியாத சூழலில், மதன்லால்
என்னைச் சந்தித்தது குறித்த இந்தப் பதிவுக்கு எந்த சாட்சியும் இல்லை என்பதைத் தாழ்மையுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்றாவதாக,
டாக்டர் ஜெயின் அல்லது திரு அங்கத் சிங்க் அல்லது மாண்புமிகு திரு தேசாய் ஆகியோர் எந்த
நிலையிலும் மதன்லால் கதையை நம்பவோ அல்லது அது பற்றிய குறிப்புகளையோ பதிவு செய்யவில்லை
என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக்
கதையின் சாரங்கள் பிரத்யேகமாக நினைவாற்றலின் அடிப்படையில் டாக்டர் ஜெயின் அளித்திருக்கும்
பட்சத்தில், பழமொழிக்கேற்ப விலாங்கு மீனைப் போன்று மனித நினைவும் ஞாபகமும் நழுவும்
தன்மை கொண்டதால், ஒன்றுக்கொன்று மாறுபடும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
மதன்லால் என்னைச் சந்திக்க வந்ததைக் குறிக்கும் அப்பகுதி, என்னைத் தொடர்புபடுத்தும்
ஒரே பகுதி, காவல் துறையின் அழுத்தம் காரணமாகப் புனையப்பட்டுள்ளது என்பது கீழ்க்காணும்
காரணங்களால் தெள்ளத் தெளிவாகிறது:
நான்காவதாக,
என்னைப் பற்றிய மதன்லாலின் கதை குறித்த டாக்டர் ஜெயினின் கருத்திலுள்ள நேர்மை தொடர்பாக
எனது மேற்கண்ட ஆட்சேபணை, சந்தேகத்துக்கு இடமின்றித் தோன்றியதற்குக் காரணம், குற்றவியல்
நீதிபதி முன்பான தனது வாக்குமூலத்தில், அவர் இதுபோல் எதையுமே பதிவு செய்யவில்லை என்பதுதான்.
குற்ற வழக்கு விசாரணை முறைத் தொகுப்புச் சட்டம் பிரிவு 161ன் கீழ் அளிக்கும் வாக்குமூலத்தை
விட பிரிவு 164ன் கீழ் அளிக்கும் வாக்குமூலத்துக்குச் சான்றளிப்பு ஆற்றலும் மதிப்பும்
அதிகம். ஆனால் பம்பாய் குற்றவியல் நீதிபதி முன்பு அவர் அளித்த புனிதமான உறுதிமொழி மீதான
வாக்குமூலத்தில், நீதிமன்றத்தில் இருந்து காவல் துறையை அப்புறப்படுத்தி, அழுத்தத்திலிருந்து
டாக்டர் ஜெயினின் மனச்சாட்சியை சிறிது நேரம் விடுவித்த போது, மதன்லால் என்னைச் சந்தித்தார்
என்னும் தற்போதைய பொய்யான கட்டுக்கதையை டாக்டர் ஜெயின் அப்போது கூறவில்லை.
அவர்
அதைச் சொன்னார் என்றோ, குற்றவியல் நீதிபதி அதைப் பதிவு செய்யவில்லை என்றோ பொருளல்ல.
டாக்டர் ஜெயின் அதை அவரிடம் சொல்லவே இல்லை. குறுக்கு விசாரணையின் போது பக்கம் 303ல்
தனது சாட்சியில் அவர் தெளிவுபடுத்தியதாவது: ‘வீர சாவர்க்கர் தனக்குச் சொல்லி அனுப்பியதாக
மதன்லால் கூறியதாகவோ, இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவருடன் உரையாடியதாகவோ, தன் முதுகில்
தட்டி “தொடர்ந்து செய்யுங்கள்” என்று சொன்னதாகவோ நான் குற்றவியல் நீதிபதி முன்னிலையில்
பதிவு செய்யவே இல்லை. காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த போது கூட ‘தொடர்ந்து செய்யுங்கள்’
என்பது குறித்த எந்தப் பதிவும் இல்லை. இந்த நீதிமன்றத்தின் முன் மறு விசாரணையின் போது
டாக்டர் ஜெயின் ப்ராசிக்யூஷனை இதிலிருந்து விடுவிக்க முயன்று கடைசியில் சிக்கலை இன்னும்
அதிகமாக்கிவிட்டார். அதாவது மதன்லால் என்னைச் சந்தித்தது தொடர்பான கதையை ஏற்கெனவே காவல்
துறை மற்றும் மாண்புமிகு உள்துறை உறுப்பினர் (ஜெயின் வாக்குமூலம் பக்கம் 311) ஆகியோரிடம்
தெரிவித்துவிட்டதால், குற்றவியல் நீதிபதி முன்பு சொல்லவில்லை என்று பதிலளித்துள்ளார்.
காவல்துறை
மற்றும் அமைச்சரிடம் மதன்லால் கதையிலுள்ள முக்கிய விவரங்கள் அனைத்தையும் மீண்டும் ஒரு
முறை ஜெயின் தனது வாக்குமூலத்தில் குற்றவியல் நீதிபதியிடம், விற்பனை செய்த புத்தகங்கள்
மற்றும் வெடி மருந்துகள் உள்படக், கூறியுள்ள நிலையில் அவரது பதில் அர்த்தமற்றதாக உள்ளது.
இருப்பினும் குற்றவியல் நீதிபதியிடம், மதன்லால் என்னைச் சந்தித்தாகக் கூறப்படுவதை,
அதாவது, இப்போது ப்ராக்சிக்யூஷன் தரப்பு எனக்கு எதிராக வழக்கின் தொடக்கப் புள்ளியாக்க
எண்ணுவதை மட்டும் டாக்டர் ஜெயின் சொல்லவில்லை. இதுபோன்ற புனைந்துரைக்கப்பட்ட கதைகளை
புனிதமான உறுதிமொழியின் அடிப்படையில் உண்மையானவை என்று குற்றவியல் நீதிபதி முன்பாக
கூறும் நிலையில் டாக்டர் ஜெயின் இல்லை என்பதே உண்மையான காரணமாகும்.
ஐந்தாவதாகப்,
படுகொலை திட்டம் குறித்து டாக்டர் ஜெயினிடம் உண்மையிலேயே மதன்லால் கூறியிருந்தால் அதைத்
தடுக்கச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் ஏன் கூறவில்லை? ஒரு நல்ல குடிமகனாக குற்றவியல்
சதித் திட்டங்களை உரிய நேரத்தில் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு உதவுவது தனது கடமை என்பதை
அறிவேன் என்று டாக்டர் ஜெயின் தனது வாக்குமூலத்தில் (பக்கம் 303) ஒப்புக் கொண்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் இத்தகவலை முன் கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை என்று பின்னர் கடிந்து
கொண்டார். சதித் திட்டம் தொடர்பான மதன்லால் கதையைத் தான் முக்கியமாகக் கருதவில்லை என்பதே
டாக்டர் ஜெயினின் ஒரே பதிலாக இருந்தது (பக்கம் 309). ஆனால் அவரது இந்தச் சமாதானம் முற்றிலும்
பொய் என்பதற்கு, இதை முக்கியமாகக் கருதி தில்லியிலுள்ள அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக
இருக்குமாறு கூறுவார் என்ற நோக்கில் ஜெய் பிரகாஷிடம் “தில்லியில் நடைபெறவிருக்கும்
மிகப் பெரிய சதித்திட்டம்” பற்றி விவரித்ததற்கு அவரது சொந்த ஒப்புதல் வாக்குமூலமே சாட்சியாகும்
(ஜெயின் வாக்குமூலம் பக்கம் 301).
தில்லியிலுள்ள
அரசை எச்சரிக்கும் அளவுக்கு இந்தக் கதை முக்கியம் எனில் பம்பாய் அரசிடமும் தகவல் தெரிவிக்கும்
அளவுக்கு அது நிச்சயம் முக்கியம் ஆகும். பம்பாய் காவல் துறையிடம் தகவலைத் தெரிவிக்கத்
தான் அச்சப்படுவதாகவும், ஆனால் குண்டு வெடிப்பு நடந்த பிறகு எந்தத் தயக்கமும் இல்லாமல்
தொடர்பு கொண்ட பம்பாய் பிரதமரிடம் சொல்ல பயப்படவில்லை என்று இன்னொரு சமாதானம் சொல்கிறார்
டாக்டர் ஜெயின். இந்தக் குழப்பமும், சுய-முரண்பாடும் கொண்ட இச்சாட்சியின் குணமே, இப்போது
அவர் சொன்னது போன்றும், பின்னர் புனைந்தது போன்றும், மதன்லாலிடம் இருந்து எந்தவொரு
கதையையும் டாக்டர் ஜெயின் கேட்கவில்லை என்னும் தவிர்க்க முடியாத முடிவுக்கு நம்மை அழைத்துச்
செல்கிறது.
ஆறாவதாக,
குண்டு வெடிப்புக்குப் பிறகு இந்த முழுக் கதையையும் டாக்டர் ஜெயின் மற்றும் அங்கத்
சிங்க் புனையத் தூண்டிய நோக்கமும் கூட அவர்களது வாக்குமூலத்தின் உட்பொருளைக் கூர்ந்து
படித்தால் சுயமாகவே வெளிப்படையாகும். மதன்லாலுடன் டாக்டர் ஜெயின் நெருக்கமாகவே இருந்துள்ளார்.
மதன்லாலிடமிருந்து அவருக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. சில கடிதங்கள் அவர் வசம்
இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனது புத்தகங்களை விற்பதற்காக பல நபர்களை மதன்லால்
சந்தித்துள்ளதால் டாக்டர் ஜெயினுடனான மதன்லாலின் தொடர்பைப் பலர் அறிந்துள்ளனர். எனவே
1948 ஜனவரி 21 தேதியிட்ட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் காந்திஜியின் பிரார்த்தனைக்
கூட்டத்தில் குண்டு வெடித்ததாகவும், குற்றத்தைச் செய்ததற்காக மதன்லால் என்பவர் கைது
செய்யப்பட்டதகாவும், அதைப் படித்தவுடன் தனக்கும் ஏதேனும் பிரச்சினை வருமோ என்று பயந்து
கவலைப்பட்டதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதற்கு முன்பாகவே ‘டைம்ஸ்
ஆஃப் இந்தியா’ நாளேட்டில் மதன்லால் என்ற பெயரைத் தான் படித்ததாகவும் டாக்டர் ஜெயின்
ஒப்புக் கொள்கிறார் (டாக்டர் ஜெயின் வாக்குமூலம் பக்கம் 301).
மதன்லாலுடன்
தங்களுக்கு இருக்கும் நெருக்கமான தொடர்பு பற்றி அவர் கட்டாயம் வெளிப்படுத்துவது குறித்தும்,
அதன் தொடர்ச்சியாக ஏற்படவுள்ள இடர் பற்றியும், டாக்டர் ஜெயின் மற்றும் திரு அங்கத்
சிங்க் ஆகியோர் அறிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கையாகத் தங்களைத் தயார்ப்படுத்திக்
கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. சதித் திட்டம் தொடர்பாக ஏதோவொரு தகவல், உண்மையோ,
பொய்யோ, அதை அதிகாரிகளுக்குத் தெரிவித்து உதவுவதன் மூலம் தங்களை வீரம் மிக்க குடிமகன்களாகக்
காட்டிக் கொள்ளும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விடவும் வேறென்ன சிறப்பாக இருக்க
இயலும்? குண்டு வெடிப்பின் பின்னணியில் ஏதோவொரு சதித் திட்டம் இருப்பதாக அன்றைய காலைத்
தினசரிகள் ஏற்கெனவே குறிப்பாக செய்தி வெளியிட்டிருந்தன. டாக்டர் ஜெயின் அந்தக் குறிப்பையே
தனது கதையின் அடிப்படையாக எடுத்துக் கொண்டார்.
மதன்லால்
இந்து சிந்தனையுடன் அகதிகளிடம் பணியாற்றிக் கொண்டிருப்பதையும், நான் இந்து சங்கதான்களின்
அங்கீகரிக்கப்பட்ட தலைவராக மக்களிடையே பிரபலமாக இருப்பதையும் டாக்டர் ஜெயின் அறிவார்.
மதன்லாலுடனும் சதித் திட்டத்துடனும் என்னைத் தொடர்புபடுத்திக் கதைக்குள் பொருத்திவிட்டால்,
காவல் துறைக்கும் பொது மக்களுக்கும் கட்டாயம் அதுவொரு தலைப்புச் செய்தியாக மிகப் பெரிய
அளவில் பரபரப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாகக் காவல் துறைக்கு முன் கூட்டியே சதித்
திட்டம் பற்றிய தகவலைத் தெரிவிக்காமல் இருந்த குற்றத்துக்காக டாக்டர் ஜெயின் கட்டாயம்
மன்னிக்கப்படுவார். எனவேதான் டாக்டர் ஜெயின் அவசர அவசரமாக உள்துறை உறுப்பினரிடம் தனது
கற்பனைக் கதையைக் கூறியுள்ளார். டாக்டர் ஜெயின் சாட்சியிலுள்ள இந்த முரணும், குழப்பமுமே,
இந்தக் கதையின் தோற்றம் புனைவு என்பதைச் சாத்தியமாக்குகிறது.
ஏழாவதாக,
இந்த நீதிமன்றத்தின் முன்பு மதன்லால் அளித்த வாக்குமூலத்தில் மகாத்மா காந்திக்குக்
கெடுதல் விளைவிக்கும் எந்தச் சதித்திட்டத்தையும் மறுத்ததுடன், அதுபோன்ற சதித்திட்டத்தில்
தான் எப்போதுமே ஈடுபட்டதில்லை என்றும் கூறியுள்ளார். இந்தப் பதிவே டாக்டர் ஜெயின் கதையை
ஏற்றுக் கொள்ள முடியாததாக்கி உள்ளது.
எட்டாவதாக,
டாக்டர் ஜெயின் என்னைத் தொடர்புபடுத்தி, அதாவது, மதன்லால் என்னைச் சந்தித்ததாகக் கூறப்படுவது
பற்றி டாக்டர் ஜெயினிடம் அவர் சொன்னதைத் துல்லியம் மற்றும் உண்மை என்றே வைத்துக் கொண்டாலும்,
டாக்டர் ஜெயினிடம் மதன்லால் சொன்னது உண்மைதானா என்பதை நிரூபிக்க இது போதுமானதாக இல்லை.
மதன்லால் குறித்த ஜெயின் மற்றும் அங்கத் ஆகியோரின் கருத்து, அவர்களே சொன்ன வார்த்தைகள்
மூலமாகவே மேற்கோள் காட்டுவதெனில் ‘தன்னைப் பற்றியே அதிகம் பீற்றிக் கொள்ளும் இளைஞனின்
பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை’ என்பதே. ஆனால் இவரைப் போன்ற
இளைஞர் ஒருவர், டாக்டர் ஜெயினின் மனத்தில் தன்னைப் பற்றிய நல்ல அபிப்பிரயாயத்தையும்,
முக்கியத்துவத்தையும் அழுத்தமாக உணர்த்த, இதுபோன்ற ஒரு கதையை, அதாவது, இந்து மகா சபையின்
தலைவரான வீர சாவர்க்கரே தன்னை அழைத்து முதுகில் தட்டி வாழ்த்தினார் என்று கூற எண்ணுவது
இயற்கையே.
மதன்லால்
என்னைச் சந்திக்க வந்த போது டாக்டர் ஜெயின் உடனில்லை என்பதுடன் மதன்லாலுக்கும் எனக்கும்
இடையே நடைபெற்றதாகச் சொல்லப்படும் உரையாடலைத் தனிப்பட்ட முறையில் அவர் கேட்கவும் இல்லை
என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே டாக்டர் ஜெயினிடம் மதன்லால் சொன்னதாகக் கூறப்படுவது,
நான் மதன்லாலிடம் கூறியதாக அவரே சொன்ன கட்டுக்கதை ஆகும். ஆகவே ஜெயினிடம் சொன்னது செவி
வழிச் செய்தியே தவிர, அதன் உண்மை மற்றும் நம்பகத் தன்மையை அவர் உறுதிப்படுத்தியிருக்க
வாய்ப்பே இல்லை. அதேபோல் மதன்லால் என்னைச் சந்தித்ததாகக் கூறப்படும் கதை தொடர்பாக அதை
நிரூபிக்கப் ப்ராசிக்யூஷன் தரப்பும் எந்தவொரு சான்றாவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
ஆகவே நான் தாழ்மையுடன் சமர்ப்பிப்பது என்னவெனில், டாக்டர் ஜெயின் சாட்சியின் சான்றாவணப்
பக்கங்களில் இடம்பெற்றுள்ள இப்பகுதி, அதாவது, மதன்லால் என்னைச் சந்தித்தாகக் கூறப்படும்
கதையும் இருவருக்கும் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் உரையாடலும், தெளிவற்ற, உறுதிப்படுத்தப்படாத,
நிரூபிக்கப்படாத, செவி வழிச் செய்தியே ஆகும். ஆகவே சட்டப்படி இவை ஏற்கத்தக்கதல்ல என்பதுடன்,
ஒருவேளை இவை பதிவு செய்யப்பட்டிருப்பின், இந்த நீதிமன்றம் அவற்றைக் கருத்தில் கொள்ளாமல்
நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மதன்லால் என்னைச் சந்தித்தாகக் கூறப்படும்
கட்டுக்கதையின் ஆசிரியர் யாராக இருந்தாலும் அது முழுவதும் பொய் என்பதை மீண்டும் ஒரு
முறை தாழ்மையுடன் வலியுறுத்துகிறேன். நான் மதன்லால் என்பவர் பற்றிக் கேள்விப்பட்டதும்
இல்லை, அவரைச் சந்தித்ததும் இல்லை.
(19)
திரு அங்கத் சிங்க் மற்றும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு தேசாய் (பி. டபிள்யூ
72 மற்றும் 78) சாட்சி குறித்து நான் சமர்ப்பிப்பது என்னவெனில்:
முதலாவதாக,
இது செவிவழிச் செய்தி என்பதாலும், அதிலும் மூன்றாம் தரச் செவிவழிச் செய்தி என்பதாலும்,
சட்டத்தின் முன்பு இதைச் சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. சாட்சிகளிடமிருந்து நீதிமன்றம்
கதையைக் கேட்கிறது. அக்கதையை டாக்டர் ஜெயினிடம் இருந்தும், அதை அவர் மதன்லாலிடம் இருந்தும்
கேட்கிறார். மொத்தத்தில், சொன்னதாகக் கூறப்படும் கதை உறுதிப்படுத்தப்படாதது, நிரூபிக்கப்படாதது
மற்றும் ஆதாரமற்றது என்பதுடன் மதன்லாலே இதுபோல் தான் யாரிடமும் சொல்லவில்லை என்றும்
அத்தனையும் பொய் என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இரண்டாவதாக,
இந்தக் கதை, உண்மையோ, பொய்யோ, மதன்லால் டாக்டர் ஜெயினிடம் உண்மையிலேயே சொல்லப்பட்டது
என்பதை நிரூபிக்க மட்டுமே இவ்விருவர்களின் சான்றாவணம் எனில், நான் தாழ்மையுடன் சமர்ப்பிப்பது
என்னவெனில் ஜெயின் இதை பலரிடம் சொன்னார் என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு கூட நிரூபிக்க
முடியாது. மதன்லால் இதைத் தன்னிடம் சொல்லும்போது நான் தனியாக விடப்பட்டேன் என்று ஜெயின்
தெளிவாகச் சொன்னதே இதற்குக் காரணம் ஆகும் (ஜெயின் வாக்குமூலம் பக்கக் 299). இதைத் தவிர
இந்தக் கதையை மதன்லால் டாக்டர் ஜெயினிடம் சொன்னார் என்பதை நிரூபிக்க வேறொரு சாட்சியும்
இல்லை. மதன்லால் அவரிடம் எதுவுமே சொல்லவில்லை என்றாலும் கூட ஜெயின் அதை ஏராளமான நபர்களிடம்
சொல்லி இருக்கலாம்.
மூன்றாவதாக,
இதுபோன்ற சான்றாவணம் ஐ.இ.ஏ. பிரிவு 157ன் கீழ் ஏற்கத்தக்கதல்ல என்பது கீழ்க்காணும்
(சர்க்காரின் இந்தியச் சாட்சியச் சட்டம், 7வது பதிப்பு பக்கம் 1374ல் இருந்து எடுக்கப்பட்டுள்ள)
சிறு சுருக்கத்திலிருந்து விளங்கும்: “உங்களின் பல நண்பர்களுக்குச் சொல்லிவிட்டுப்
பின்னர் அவர்களை நீங்கள் சொன்னது உண்மை என்று நிரூபிக்கச் சாட்சிகளாக வரச் சொல்லி சாட்சிகளை
உருவாக்குவது சுலபம். இந்தப் பிரிவு காதால் கேட்ட சாட்சியை உறுதிப்படுத்தும் சான்றாக
ஏற்றுக் கொள்வதில்லை”.
நான்காவதாக,
இந்த இரு சாட்சிகளின் சான்றாவணமும் பிரிவு 157ன் கீழ் வராததற்கு இன்னொரு காரணம் அதில்
குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை நிறைவு செய்யாமையே ஆகும்.
ஐந்தாவதாக,
அங்கத் சிங்கின் சான்றாவணம், ஒரு கதை ஒருவர் வாயிலிருந்து மற்றொருவர் வாய்க்குச் செல்லும்போது
மாறுபடுவதுடன் அபாயகரமாகவும் இருப்பதைச் சிறப்பாகத் தெளிவுபடுத்தி உள்ளார். மேலும்
கதை சொல்பவர்கள் எழுத்துபூர்வமாக எதையும் பதிவு செய்யாத நிலையில், காதால் கேட்ட சாட்சிகளை
நம்புவது அநீதி ஆகும். இதை அங்கத் சிங்கே எழுத்துபூர்வமாக எதையும் பதிவு செய்யவில்லை
என்று ஒப்புக் கொண்டுள்ளார் (அங்கத் சின் வாக்குமூலம் பக்கம் 334). உதாரணத்துக்கு அங்கத்
சிங்க் (வாக்குமூலம் பக்கம் 332 & 333ல்) கூறுவதாவது: ‘மதன்லால் தன்னிடம் (ஜெயின்)
சொன்னதாக டாக்டர் ஜெயின் கூறுவது என்னவெனில் “என்னுடைய (மதன்லால்) கட்சிக்கு ஆதரவராகச்
சாவர்க்கர் இருக்கிறார், அதாவது மதன்லால் சொல்வதுபோல் சதித் திட்டத்தின் பின்னணியில்
சாவர்க்கர் உள்ளார் என்றும் இது உண்மையாகும்” என்பதாகும். இப்போது டாக்டர் ஜெயினின்
வாக்குமூலம் முழுவதிலும், எந்தவொரு இடத்திலும், சாவர்க்கர் தனது கட்சிக்கு ஆதரவாக அல்லது
சதிக்கு உடந்தையாக இருப்பதாக மதன்லால் அவரிடம் கூறியதாக ஓரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.
மேலும் இந்த நெறி தவறிய கதையை அங்கத் சிங்கிடம் மீண்டும் ஒரு முறை சொன்னதாகவும் டாக்டர்
ஜெயின் பதிவு செய்யவில்லை. எனக்கு பாதிப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே ஜெயின் தனது
சாட்சியில் மீண்டும் சொன்ன இக்கதையின் தொடர்ச்சியைக் கூட அங்கத் சிங்க் திரித்துள்ளார்.
எனவே அங்கத் சிங்கின் இந்த வாக்குமூலம் செவிவழிச் செய்தி மட்டுமின்றி, தீய நோக்கம்
கொண்ட செவி வழிச் செய்தியுமாகும்.
ஆறாவதாக,
மாண்புமிகு அமைச்சர் வாக்குமூலத்தில் கவனிக்க வேண்டிய முதல் அம்சம் என்னவெனில் இது
1948 ஜனவரி 21 தொடங்குவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இதைப் படிக்க வேண்டும். இந்தக்
கதை குறித்து எந்த நேரத்திலும் எந்தக் குறிப்புகளையும் எழுதவில்லை என்பதையும் அமைச்சர்
ஒப்புக் கொள்கிறார் (பி. டபிள்யூ 78 பக்கம் 38). மேலும் டாக்டர் ஜெயின் அவரிடம் சொன்னதை
மட்டுமே தொடர்புபடுத்தி உள்ளதால், இவரது சாட்சிக்கும் திரு அங்கத் சிங்கைப் போன்றே
எந்த உண்மையான மதிப்பும் இல்லை.
ஆகவே
நான் மீண்டும் ஒருமுறை தாழ்மையுடன் சமர்ப்பிப்பது என்னவெனில் மதன்லால் என்னை ஒருபோதும்
சந்திக்கவே இல்லை என்பதுடன் நானும் அவருடன் எந்தத் தருணத்திலும் எந்தவிதமான பேச்சுவார்த்தையையும்
வைத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மேற்கண்ட பத்திகள்
18 மற்றும் 19 அளிக்கப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில், நான் குற்றவாளி அல்லது நிரபராதி
எப்படியிருப்பினும், டாக்டர் ஜெயின், அங்கத் சிங்க் மற்றும் மாண்புமிகு மொரார்ஜி தேசாய்
ஆகியோரின் சான்றாவணங்களைப் பரிசீலனையிலிருந்து விலக்க வேண்டுமென நீதிமன்றத்தைத் தாழ்மையுடன்
கேட்டுக் கொள்கிறேன்.
(20) ட்ரங்கால் அழைப்பு
1948
ஜனவரி 9 காலை 9.20 மணிக்கு தில்லி 8024ல் இருந்து பம்பாய் 60201க்குப் பதிவு செய்யப்பட்ட
தொலைபேசி அழைப்பு (பி 70) தொடர்பாக இதுவரை பி.டபிள்யூ 23, பி.டபிள்யூ 40, பி.டபிள்யூ
41, பி.டபிள்யூ 42, பி.டபிள்யூ 93 என மொத்தமாக 5 சாட்சிகளை ப்ராசிக்யூஷன் தரப்பு விசாரித்துள்ளது.
நேரத்தையும் ஆற்றலையும் வீணடித்த பிறகு ப்ராசிக்யூஷன் தரப்பு கடைசியாக சாதித்தது என்ன?
யாரோ ஒருவர் (அவர் யார் என்று எவருக்குமே தெரியாது) தாம்லே அல்லது கசர்-க்கு (இதிலும்
தெளிவில்லை) ட்ரங்க் கால் பதிவு செய்தார் என்பது மட்டுமே. தாம்லே அல்லது கசர் என்ற
பெயரில் அப்போது யாருமே இல்லாததால் கடைசியில் அந்த ட்ரங்க் கால் அழைப்பும் பயனற்றுப்
போய்விட்டது. மேலும் ப்ராசிக்யூஷன் தரப்புக்கு அந்த ட்ரங்க் கால் அழைப்பின் உள்ளடக்கம்
கூடத் தெரியவில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பி.70 மற்றும் பி.59 ஆகியவற்றின்
பொருண்மைகள் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடுவதால் இரண்டையுமே சேர்த்துப் படிக்க வேண்டும்.
சாவர்க்கர் சதன் தரைத்தளத்தில் படிக்கும் அறையில் ஒரு தொலைபேசி இணைப்பு இருப்பதும்,
அதை அந்த வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பவர்களும், இந்து சங்கதான் அலுவலகத்துக்கு
வரும் இந்து மகாசபா செயலாளர்களும், ஊழியர்களும் பயன்படுத்துகின்றனர் என்பதும் ஏற்கெனவே
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது (பி. டபிள்யூ 57 பக்கம் 24 & 25, பி. டபிள்யூ 130 பக்கம்
7 பார்க்கவும்). மகாசபா பணிகள் தொடர்பாக தில்லியிலுள்ள இந்து சபா பவனிலிருந்து ஏராளமான
ட்ரங்க் கால் அழைப்புகள் என் வீட்டிலுள்ள இந்து சங்கதான் அலுவலகத்துக்கு வரும்.
இந்த
ட்ரங்க் கால் தனிநபர் அழைப்பாக தாம்லே மற்றும் கசர் ஆகிய பெயர்களில் பதிவு செய்யப்பட்டனவே
தவிர என் அலுவலகச் செயலாளர்கள் பெயர்களில் அல்ல. தில்லியிலுள்ள தாம்லே அல்லது கசர்
ஆகியோரின் நண்பர்கள் யாரேனும் சட்ட ரீதியான பணிகளுக்காக அந்த ட்ரங்க் கால் அழைப்பைப்
பதிவு செய்திருக்கலாம். தொலைபேசி அழைப்பின் இரு முனைகளிலும் எனது பெயர் எங்கேயும் தொடர்புபடுத்தப்படவில்லை.
இருப்பினும் ப்ராசிக்யூஷன் தரப்பு இந்த ட்ரங்க் கால் அழைப்பு யாருக்கு எதிரானது என்று
யாருக்குமே தெரியாமல் நிரூபிக்க முயன்று, கடைசியில் எதையுமே நிருபிக்க முடியவில்லை
என்பதை மட்டுமே நிரூபிக்க, ஐந்து சாட்சிகளையும் மிகத் தீவிரமாக விசாரித்து வெற்றி பெற்றுள்ளது.
(21) தி இந்து ராஷ்ட்ர தளம்
இந்து
சங்கதான் இயக்கத்தின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளப் பல இந்து தன்னார்வ அமைப்புகள் உள்ளன.
அவை பல்வேறு தளங்களில் தனித்தனியாக இயங்கி வருகின்றன. அவற்றுள் இந்து ராஷ்ட்ர தளம்
ஒன்றாகும். கோட்சே, ஆப்தே மற்றும் ஏனைய ஊழியர்கள் அதை நிர்வகித்து வருகின்றனர். அதன்
உறுப்பினர்களுள் (பக்கம் 232) ஒருவரான பேட்ஜ் தளத்தின் நோக்கம் தேர்தல்களில் மகாசபா
வேட்பாளர்களுக்கு உதவுவது, பிரசாரப் பணிகளை மேற்கொள்வது, ஒழுங்குபடுத்துவது மற்றும்
கட்டுப்பாட்டைப் பராமரிப்பது ஆகியவை என்று தனது வாக்குமூலத்தில் (பக்கம் 245) கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர்கள் அழுத்தம் தந்தபோதும் அதன் தலைவராகவோ உறுப்பினராகவோ என்னை நான் அடையாளப்படுத்திக்
கொள்ளாததற்குக் காரணம் மகாசபாவின் தலைவர் என்ற முறையில் ஏனைய இந்து சங்கதான் துணை அமைப்புகளின்
மீது எனக்கிருக்கும் அனுதாபம் மட்டுமே ஆகும். இந்த அமைப்பு வெளிப்படையான மற்றும் மக்களுக்கான
அமைப்பாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வருகிறது. அதன் வருடந்திர முகாம்களில் கூட
நான் பங்கேற்க முடியாமல் போனதால் சில தருணங்களில் அவர்களது மன வருத்தத்தையும் சம்பாதிக்க
நேர்ந்தது. ஏனைய இந்து தன்னார்வ அமைப்புகளைப் பொதுவாக வாழ்த்தியது போலவே நான் இதையும்
வாழ்த்தினேன். அவ்வளவே.

(தொடரும்…)

Leave a Reply