Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 22 | சுப்பு

பகுதி 22



தமிழ்நாட்டில்
இந்திரா காங்கிரஸும் அதிமுகவும் வலது கம்யூனிஸ்டும் கூட்டணி வைத்துப் போட்டியிட்டு
பெரும் வெற்றி பெற்றன (36/40).
சீக்கிரத்திலேயே
ஜனதா கட்சியின் சாயம் வெளுத்துவிட்டது. சரண் சிங் ஒரு பக்கமும் ஜகஜீவன்ராம் ஒரு பக்கமும்
இழுத்த இழுப்பில் மொரார்ஜியின் ஆட்சி ஆட்டம் கண்டது.
தமிழக
சட்டமன்றத்துக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி அமைத்து, அதிமுக
வெற்றிபெற்று எம்.ஜி.ஆர் முதலமைச்சராகப் பதவியேற்றார் (30-06-1977).
கடன்
பிரச்சினையில் சிக்கிக்கொண்டு சங்கப் பணியில் ஈடுபடாமல் இருந்த எனக்கு மீண்டும் ஒரு
நல்ல வாய்ப்பு கிடைத்தது. தமிழறிஞர்களின் கூட்டமைப்பாக ‘தேசிய சிந்தனைக் கழகம்’ உருவாக்கப்பட்டது.
நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைவராக இருந்தார். வழிகாட்டும் குழுவில் கோபால்ஜீயும்
துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமியும் பங்கெடுத்தனர். இந்த ஐந்து நாள் விழாவிற்கு (1978
ஜனவரி) முழுப் பொறுப்பும் சண்முகநாதன்ஜீயினுடையது. நான் அவருக்கு உதவியாக இருந்தேன்.
சென்னை
டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏ.வி.எம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்த
நிகழ்ச்சிகளைக் கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்தார்.
அதற்கடுத்து சுப்புவின் கவிதை – சண்முகநாதன்ஜீ எனக்குக் கொடுத்த சலுகை.
காற்றடித்த
பக்கமாகப் போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கை பெசன்ட் நகர் தொடர்புகளால் நிலைபெற்றது.
முதலில் ரமணன் பிறகு ராகவன். அந்தக் காலகட்டத்தில் இதற்குச் சாட்சியாக இருந்தவர்கள்
இருவர். ஒருவர் கௌரி சங்கர் என்ற நண்பர். இன்னொருவர் சிவன் கோவில் அர்ச்சகர் சந்துரு.
சந்துரு
வைதீகமான குடும்பத்தைச் சார்ந்தவன். காஞ்சிபுரத்திலுள்ள வேத பாடசாலையில் படித்து முடித்துவிட்டு
வந்து பெசன்ட் நகரிலுள்ள சிவன் கோவிலில் அராளகேசி சந்நிதியில் அர்ச்சகராக இருந்தான்.
உலகமே அறியாத சந்துரு என்னிடம் ஓயாமல் இரண்டு விஷயங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருப்பான்.
ஒன்று காஞ்சி மகாசுவாமிகளின் பெருமை. இன்னொன்று எம்.ஜி.ஆரின் பெருமை.
காஞ்சிபுரத்தில்
நடந்த அதிமுக பொதுக்கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார். கட்டுக்கடங்காதக் கூட்டம்.
மேடைக்கு அருகிலுள்ள பகுதியில் சந்துருவும் மற்ற வேத பாடசாலை பசங்களும் இடம்பிடித்துவிட்டார்கள்.
ஆனால் கூட்டத்தில் சிக்கிய சிறுவர்களை யாரோ துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக
சந்துருவை. குடுமியைப் பிடித்து இழுத்தார்கள். வலி தாங்காமல் சந்துரு திரும்பிப் பார்த்தால்
யார் இழுத்தது என்பது தெரியாது.
மேடையில்
இருந்த எம்.ஜி.ஆர் இந்தக் காட்சியைக் கவனித்துவிட்டார். ஒரு தொண்டரை அனுப்பி சந்துருவையும்
அவனுடைய கூட்டாளிகளையும் அழைத்துவந்து மேடையிலிருக்கும்படி செய்துவிட்டார். எனவே சந்துருவைப்
பொருத்தவரை மகாசுவாமிகளுக்கு அடுத்த இடம் எம்.ஜி.ஆருக்குத்தான்.
ராகவன்
வீட்டில் தங்கியிருந்தாலும் நான் அங்கே அதிகம் இருப்பதில்லை. நானும் கௌரியும் சவுக்குத்
தோப்பில் பேசிக் கொண்டிருப்போம். திருவான்மியூர் யோகியைப் பார்க்கப் போவோம். அவர் கஞ்சி
ஊற்றுவார். எத்தனையோ நாள் அந்தக் கஞ்சியைக் குடித்தே என் ஜீவனம் நடந்திருக்கிறது. திருவான்மியூரில்
உள்ள ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்குப் போவோம். சில சமயங்களில் மாங்காடு காமாக்ஷி அம்மன்
கோயிலுக்குப் போவதும் உண்டு. கௌரிசங்கர் கனிந்த உள்ளம் படைத்தவன். தெருவில் போகும்போது
அடிபட்டுக் கிடந்த காக்காயை ப்ளூ கிராஸில் சேர்த்தால்தான் ‘அவனால் அடுத்த வேலை செய்ய
முடியும்’. நோயுற்ற தாய் தந்தையருக்குப் பணிவிடைகள் செய்வான். வீட்டில் சமைப்பதும்
அவன்தான். செய்தித்தாளில் வரும் கொலை, தற்கொலை, விபத்து பற்றிப் படித்துவிட்டு மனவாட்டத்தோடு
இருப்பான். கௌரிசங்கர் எப்போதும் மகான்களைப் பற்றியே பேசுவான். சேஷாத்ரி சுவாமிகளைப்
பற்றியும் பூண்டி மகானைப் பற்றியும் சொல்வான். இந்த நேரத்தில் பரணீதரன் எழுதிய ‘அருணாசல
மகிமை’ எங்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தது. கடற்கரை மணலில் உட்கார்ந்து கொண்டு
சேஷாத்திரி சுவாமிகளை அவருடைய சிற்றப்பா, வைதீக கர்மங்கள் செய்வதற்காக இழுத்துவரும்
காட்சியை மீண்டும் மீண்டும் கற்பனை செய்து பார்ப்போம். நித்தமும் பராசக்தியோடு பழகுபவருக்கு
நீத்தார் கடன் அவசியமில்லை என்பது எங்கள் தீர்மானம்.
தை
வெள்ளிக்கிழமையன்று அராளகேசி அம்மனுக்கு என்ன அலங்காரம் செய்யலாம் என்று சந்துரு எங்களோடு
ஆலோசனை செய்வான். அலங்காரம் செய்யும்வரை அதையே கற்பனை செய்வோம். செய்த பிறகு கண்கொட்டாமல்
அம்பாளையே பார்த்துக் கொண்டிருப்போம். மின் விளக்குகள் இல்லாமல் குத்து விளக்குகளின்
குறைந்த வெளிச்சத்தில் அம்பாளைப் பார்ப்பது எங்களுடைய ப்ரத்யேகமான விருப்பம். அதற்காகவே
மின்சாரத்தடை ஏற்படாதா என்று ஏக்கத்துடன் இருப்போம். நாங்கள் கோயிலில் இருக்கும்போது
மின்சாரத்தடை ஏற்பட்டுவிட்டால் நான் அவனையோ அவன் என்னையோ கூவி அழைத்துக் கொண்டு இருட்டில்
ஓடுவோம். மின்சாரம் வருவதற்குள் பார்த்துவிட வேண்டும் என்ற அவசரம். ஓடும்போது யார்
மீதாவது இடித்துவிட, அவர்கள் எங்களைச் சபிப்பார்கள். சமயத்தில் கோயிலை மூடுவதற்கு முன்னால்
எங்களுக்காக சந்துரு சந்நிதியில் மின்விளக்கை அணைத்துக் காட்டுவான்.
இந்த
பெஸன்ட் நகர் மாமிகளெல்லாம் பார்க்கும்படியாக இவளை ஒருநாள் ஆளுக்கொரு பக்கம் கையைப்
பிடித்து அழைத்துப் போய்விடவேண்டும் என்று பேசிக் கொள்வோம்.
பெஸன்ட்
நகர் அருகில் உள்ள பாம்பன் ஸ்வாமிகள் சமாதிக்கு நாங்கள் அடிக்கடி போவோம். ஒருமுறை அங்கிருந்த
பெரியவர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம். கட்டையான உருவமும் வெண்தாடியும் கொண்ட அவருடைய
வார்த்தைகள் மிகத் தெளிவாக இருந்தன. இவ்வளவு நன்றாகச் சொல்கிறாரே என்று அவர் என்ன படித்திருக்கிறார்
என்று விசாரித்தேன். அவர் சொன்னது:
‘எனக்கு
எழுதப்படிக்கத் தெரியாது. பாம்பன் சாமிகள் சமாதியானவுடன் அவரை இந்த இடத்திற்குக் கொண்டு
வந்து அடக்கம் செய்தார்கள். நான் இங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தேன். சுவாமிகளின்
பக்தர்களுக்கு இங்கே கட்டடம் கட்டும் அளவிற்கு வசதி இல்லை. வெறும் மேடை மட்டும் இருந்தது.
இந்த இடத்தை யாரும் அசுத்தம் செய்யாமல் பார்த்துக் கொள்ளுமாறு அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.
நானும் அப்படியே செய்தேன். அதற்காக விசேஷ நாட்களில் அவர்கள் வரும்போது எனக்குச் சில்லறை
கொடுப்பார்கள். மற்றபடி எதுவும் எனக்குத் தெரியாது. இந்த சிமெண்ட் தரையில்தான் (சமாதி)
நான் தூங்குவேன். அதுதான் நான் படித்த பாடம்” என்றார் அவர்…
ஒவ்வொரு
கடன்காரராக ராகவன் வீட்டுக்கு விஜயம் செய்தார்கள். கேட்ட கேள்வியையே அவர்கள் மீண்டும்
கேட்டுக் கொண்டிருந்தார்கள். என்னை அதிகமாக அவர்கள் திட்டவில்லை. என்றாலும், இவர்களுடைய
கடனை எப்படி அடைப்பது என்பது எனக்குப் பிரச்சினையாயிருந்தது. யாருக்கும் பயன்படாமல்
பாரமாகிவிடுவோமோ என்ற கவலை ஏற்பட்டது. யோசித்துப் பார்த்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும்
என்று முடிவு செய்தேன். தற்கொலைதான் முடிவு என்று ஆனவுடன் அதற்கான நாளையும் குறித்துவிட்டேன்.
ஆனால் ராமானுஜம் என்ற நண்பன் இதை எப்படியோ யூகித்துவிட்டான். இந்த சமயத்தில் இரண்டு
நாட்களாக என் கூடவே இருந்து இது நிறைவேறாமல் செய்தான்.
மீண்டும்
ஒரு நாள் குறித்தேன். இந்தமுறை ராஜேந்திரன் என்னிடம் தற்கொலை முயற்சி எவ்வளவு தவறானது
என்பதுபற்றி ஒரு மணி நேரம் பேசினான். “நீ ஏன் இதையே பேசிக் கொண்டிருக்கிறாய்” என்று
கேட்டதற்கு “ஏதோ, என் மனதில் பட்டதைச் சொல்கிறேன்” என்றான். அவனை விட்டுவிட்டு பெஸன்ட்
நகர் சிவன் கோயிலுக்குப் போனேன்.
கோயிலில்
சந்துரு வேத கிளாஸ் நடத்துவான். நான் வேதம் கற்றுக்கொள்ள வேண்டுமென்பது சந்துருவின்
விருப்பம். எனக்கும் ஆசைதான். ஆனால் பூணூல் போட்டுக்கொள்ளாமல் வேதம் படிக்க முடியாது.
எனக்கு உபநயனம் நடந்தது என்றாலும் பாரதியாரால் ஏற்பட்ட தாக்கத்தினால், நான் பூணூல்
அணிவதில்லை. சட்டை போட்டுக்கொண்டுவிட்டால், உள்ளே பூணூல் இல்லை என்பது தெரியாது என்ற
யோசனை சொல்லப்பட்டது. இப்படி ஏமாற்றி, வேதம் படிப்பது எனக்குப் பிடிக்கவில்லை. மறுத்துவிட்டேன்.
சந்துரு
என்னைத் தனியாகக் கூப்பிட்டு “செவ்வாய்க்கிழமை அம்பாளுக்கு விசேஷ அலங்காரமிருக்கிறது.
நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்” என்றான். நானோ ஞாயிற்றுக்கிழமைக்கு நாள் குறித்திருக்கிறேன்.
சரி இரண்டு நாள் தள்ளிப் போடுவோம் என்று நினைத்துக்கொண்டேன். ஞாயிற்றுக் கிழமையன்று
வீட்டுக்குப் போனேன். இப்போது நயினா, அம்மா, தம்பிகளோடு சென்னையின் தெற்குப்பகுதியான
சிட்லபாக்கத்தில் குடியிருந்தார்கள். நயினாவுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் சென்னையிலேயே
வேலை. தம்பி ரவீந்திரனும் சம்பாதிக்கத் தொடங்கியிருந்தான். வீடு இருக்கும் தெருவின்
தொடக்கத்தில் முத்தாலம்மன் கோவில். நான் போயிருந்த நேரத்தில் கோவிலிலிருந்து ஒரு நோட்டீஸ்
கொடுத்தார்கள். அதில் ‘நாயகி நான்முகி நாராயணி’ எனத் தொடங்கும் பாடல் அச்சிடப்பட்டிருந்தது.
அம்மாவிடம் இதைக் காட்டிப் பொருளை விளக்கச் சொன்னேன். அம்மா ‘இது அபிராமி அந்தாதி’
என்று சொல்லிப் பாடலை விளக்கினார். வீட்டிலிருந்த அபிராமி அந்தாதி புத்தகத்தையும் எடுத்துக்
கொடுத்தார். புத்தகத்தோடு பெஸன்ட் நகர் வந்தேன்.
மறுநாள்
அபிராமி அந்தாதியைப் படிக்க வேண்டுமென்று முயன்றபோது ராகவன் வீட்டில் சூழ்நிலை சரியில்லை.
தோளில் ஒரு ஜோல்னாப்பையை மாட்டிக்கொண்டு காந்தி மண்டபத்திற்கு நடந்தேன். காந்தி மண்டபத்திற்குப்
பின்னால் உள்ள சிறுவர் பூங்காவிற்கு வந்த பிறகுதான் நான் செய்தது முட்டாள்தனம் என்று
தெரிந்தது. அன்று காணும் பொங்கல், 1978, ஜனவரி, சென்னை நகரத்தின் மக்கட்தொகையில் பாதிப்பேர்
அங்கே கூடியிருந்தார்கள். சிறுவர் பூங்காவிற்குப் பக்கத்தில் கவர்னர் மாளிகைக்குப்
போவதற்கு ஒரு வழியுண்டு. அந்த வழியில் யாரும் போகாமலிருப்பதற்காக அங்கே ஒரு போலிஸ்
ஏட்டு நின்று கொண்டிருந்தார். ஏட்டை அணுகி, “ஐயா, நான் கொஞ்சம் படிக்க வேண்டும். இங்கே
உட்கார்ந்து கொள்ளலாமா?” என்று கேட்டேன். ஏட்டு ஒரேடியாக உற்சாகமாகிவிட்டார். “இந்த
மெட்ராஸில இன்னிக்கு படிக்கணும்னு சொல்றவன் நீதாம்பா” என்று சொல்லி என்னை அங்கே மரத்தடியில்
உட்கார வைத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் தன் செலவில் எனக்குப் பால் வாங்கிக்
கொடுத்தார். போலிஸ்காரர்களால் தாக்கப்பட்டுத்தான் நமக்குப் பழக்கம். முதன்முதலாக ஒரு
போலிஸ்காரரால் கௌரவிக்கப்பட்டேன். பராசக்தியின் அருட்பார்வை நம்மீது படுவதற்கு இது
நல்ல அறிகுறி என்று மகிழ்ந்து அபிராமி அந்தாதியைப் படிக்கத் தொடங்கினேன்.
படித்து
முடித்தப்பிறகு எனக்குப் புதுத்தெம்பு வந்தது. அபிராமி அந்தாதியை நூற்றியெட்டு நாட்கள்
பாராயணம் செய்ய முடிவு செய்தேன். அதற்குள் என் பிரச்சினைகள் தீர்வதற்கு பராசக்தி ஏற்பாடு
செய்ய வேண்டுமென்று அவளோடு ஒரு மானசீக ஒப்பந்தம் செய்து கொண்டேன். மறுநாள் காலையில்
எழுந்து, குளித்துவிட்டு, அபிராமி அந்தாதியுடன் பெசன்ட் நகர் மகாலட்சுமி கோவிலுக்குப்
போனேன். அங்கே வசதிப்படவில்லை. வெளியே வந்தபோது எதிரே கௌரிசங்கர். சவுக்குத் தோப்பில்
உட்கார்ந்துகொண்டு அபிராமி அந்தாதி படிக்கப் போகிறதாகக் கூறி அவனையும் அழைத்தேன். அவனும்கூட
வந்தான். சவுக்குத் தோப்பில் படிப்பதைவிட திருவான்மியூர் யோகியின் முன் படிக்கலாம்
என்றான். எனக்கு அதில் இஷ்டமில்லை.
யோகி
மௌனமாயிருப்பவர். மௌன விரதம் இருப்பவர்முன் சத்தம் போட்டுப் படிப்பது எனக்கு அநாகரிகமாகத்
தெரிந்தது. கௌரிசங்கர் விடாப்பிடியாக வற்புறுத்தினான். “சரி அங்கே போகலாம். ஆனால் அவரை
ஒரு வார்த்தை நீ கேட்டுவிடு” என்றேன்.
திருவான்மியூர்
கடற்கரைக் குப்பத்தில் அருகில் ஒரு குளம். குளத்தங்கரையில் சிறிய சிவன் கோயில். கோயில்
என்றால் சிவலிங்கம் இருக்கும். அறையும் முன்பகுதியும்தான். கோயிலின் உள்ளிருந்து கோயிலைத்
துளைத்துக் கொண்டு ஒரு அரசமரம். அதோடு பிணைந்த வேம்பு. இந்த கோயிலுக்குள்ளே இருந்து
வருகிறார் யோகி. நானும் கௌரியும் கருவறையின் வெளியே. யோகி உள்ளே. தன்னுடைய நண்பன் அபிராமி
அந்தாதி படிக்க விரும்புவதாகக் கௌரி தெரிவித்தான். அவர் என்ன சொன்னார் என்று எனக்குத்
தெரியவில்லை. கௌரி என்னைப் பார்த்துத் தலையசைத்தான். நான் படிக்க ஆரம்பித்தேன். ஒரு
தாளக்கட்டு தானே உருவாயிற்று.
படித்துக்கொண்டிருக்கும்போது
திடீரென்று உடலில் ஒரு மின்சார அதிர்வு ஏற்பட்டது. இது கழுத்துக்குக் கீழே இரண்டு கைகளிலும்
மார்பிலும் பரவியது. வாய் படித்துக்கொண்டேயிருந்தாலும் சுயநினைவு நழுவத் தொடங்கியது.
ஒரு ஒளி வட்டம் உருவாகி எதிரில் இருந்த சுவரோடு என்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டு
சுற்றியது. அடடா நமக்குச் சமாதி கிட்டிவிட்டது என்று நினைத்தேன். அதற்கு நான் தயாராகவில்லை.
எதிர்ச்சுவற்றில் ஒரு பழைய காலண்டரில் பார்வதி, பரமேஸ்வரன். “அம்மா, எனக்குச் சமாதி
வேண்டாம். இந்த நிலையில் நான் சமாதியானால் கடனுக்குப் பயந்து சாமியார் ஆகிவிட்டான்
என்பார்கள். என்னை விட்டுவிடு” என்று பார்வதியிடம் வேண்டிக் கொண்டேன். இதை நினைத்த
உடனே சுற்றல் நின்று போயிற்று. உணர்வும் சரியாயிற்று. தொடர்ந்து அந்தாதியைப் படித்து
முடித்தேன்.
வெளியில்
வந்தவுடன் கௌரியிடம் விஷயத்தைச் சொன்னேன். இது யோகியின் அருளால்தான் நடந்திருக்க வேண்டும்
என்று அவன் சொன்னான். மறுநாள் முதல் தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு மகாலக்ஷ்மி
கோயிலுக்குப் போக ஆரம்பித்தேன். மகாலக்ஷ்மி கோயிலிலிருந்து சிவன் கோயில் – அராளகேசி
சமேத ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோயில். அங்கே மங்கள துர்க்கை சந்நிதியில் அபிராமி அந்தாதி.
அந்தாதி என்பது என்னைப் பொறுத்தவரை தோத்திரமாக இல்லை. அவளோடு நடத்தும் சம்பாஷணையாகவே
இருந்தது.
மாலை
நேரங்களை அடையாரில் ராமானுஜம் வீட்டில் செலவழிப்பேன். ராமானுஜம் விஷ்ணுவின் மாமன் மகன்.
இவனும் இவன் சுற்றத்தாரும் எனக்கு செய்த உதவிகளை நான் ஈடு செய்ய முடியாது. ராமானுஜத்திற்கு
எப்போதும் திருப்பாவை ஸ்மரணைதான். அது இல்லாமல் அவனால் சிந்திக்க முடியாது. அவனுக்கு
பெரம்பூரில் வேலை. “இங்கேயிருந்து பெரம்பூருக்குப் பஸ்ஸில் போனால் எவ்வளவு நேரம் ஆகும்?”
என்று கேட்டால் “இருபது தடவை திருப்பாவை சொல்வதற்குள் போய்விடலாம்” என்பான். எந்த ஊரைப்பற்றிச்
சொல்வதென்றாலும் முதலில் அதற்கு அருகிலுள்ள வைணவஸ்தலத்தைப் பற்றிச் சொல்லி விட்டுத்தான்,
அந்த ஊரைப்பற்றிச் சொல்வான். திருப்பாவை பாராயணம்தான் இவனுடைய மூச்சு. ராமானுஜத்தின்
திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நான் பெங்களூர் போனேன். அங்கே எனக்குப் பல அதிசயங்கள்
காத்திருந்தன.

… தொடரும்

Leave a Reply