Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை – லாலா லஜ்பத் ராய் (பகுதி 6) | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

பகுதி 6 


சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தின் வரலாறு 
இந்தக் கட்டுரையில் சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவம் மற்றும் தனிப்பட்ட வகுப்புவாத விருப்பங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய வரலாற்றைப் பற்றி எழுத விழைகிறேன். 19ம் நூற்றாண்டின் எழுபதுகளில்தான் அலிகரில் எம்.ஏ.ஓ. கல்லூரியை நிறுவுவதற்கான இயக்கம் தொடங்கப்பட்டது. அதே நேரத்தில்தான் ஆர்ய சமாஜ் நிறுவப்பட்டது. 1877ம் ஆண்டு இம்பீரியல் தர்பார் நிகழ்வில் இந்த இரண்டு இயக்கங்களின் நிறுவநர்களும் டெல்லியில் சந்தித்தபோது அவர்கள் மனதில் ஒரு ஐக்கிய இந்தியாவின் யோசனை இருந்தது. ஆனால் ஒரு பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியாவை ஒன்றிணைக்க இயலாது என்பதை அவர்கள் விரைவில் கண்டறிந்தனர்.. இந்திய தேசிய காங்கிரஸ் அப்போது உருவாகியிருக்கவில்லை. சர் சையத்தின் மனதில் இந்திய முஸ்லிம்கள் அரசாங்கத்தின் கீழோ அல்லது அதற்கு வெளியிலோ செழிப்பான நிலையை அடைய, மேற்கத்திய அறிவைப் பெறவேண்டும் என்றும், அதற்காக இழந்த நேரத்தை ஈடுகட்ட வேண்டும் என்றும் ஓர் எண்ணம் இருந்தது.
செல்வாக்கு மிக்க ஹிந்துக்கள் சர் சையதின் யோசனையை முன்னெடுத்துச் செல்வதற்குத் தங்கள் ஆதரவை அளித்து, பொருளாதார உதவியும் புரிந்தனர். பணக்கார ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து இளவரசர்கள் அலிகார் எம்.ஏ. கல்லூரியின் நிதிக்கு தாராளமாக சந்தா செலுத்தினர். ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்த கல்லூரி என்பதன் கருத்தாக்கம் வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பண்புகள் மற்றும் வகுப்புவாதப் பெருமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே அங்கே வகுப்புவாத உணர்வு அதிகரிப்பது தவிர்க்க இயலாதது. அது இந்தக் கல்லூரியிலும் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. அலிகார் கல்லூரியின் வெற்றியும் பிரபலமும் பெரும்பாலும் அதன் முன்னாள் மாணவர்கள் அரசாங்கத்தில் உயர் மற்றும் லாபகரமான பதவிகளைப் பெறுவதைப் பொருத்தே இருந்தது. முதலில் உயர் அதிகாரிகளிடம் சையத்திற்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு இந்த நோக்கத்திற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் இனவாத உரிமைகோரல்களை வலியுறுத்துவது அவசியமானது என்று பின்னர் கண்டறியப்பட்டது. அரசாங்க சேவைகளில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒப்பீட்டுப் புள்ளிவிவரங்கள் முகமதியக் கல்வி மாநாட்டின் ஆரம்ப நாட்களில் இருந்தே விவாதிக்கப்பட்டு அதன் சிறப்பியல்பு அம்சங்களில் ஒன்றாக மாறியது.
சர் சையத் ஒரு சிறந்த மதச் சீர்திருத்தவாதி. இஸ்லாத்தின் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியதன் மூலமும் அதன் பகுத்தறிவுத்தன்மையை அதிகரிக்க முயன்றதன் மூலமும் அவர் முஸ்லிம் உலமாக்களின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டார். எனவே அவர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இருப்பினும் அரசாங்கத்துடனான கூட்டணியில் அவரது பலம் இருந்தது. இந்தக் கூட்டணியைப் பற்றிய யோசனை இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்படுவதற்கு முன்பே அவரது மனதில் இருந்ததா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆனால் காங்கிரஸ் உருவான பின் அவரது அரசியல் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக இது மாறியது என்பதை உறுதியாகச் சொல்லலாம். இப்படியாக அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் ஹிந்துக்களுக்கு எதிராகவும் அரசிற்கு ஆதரவாகவும் திரும்பியது.
மறுபுறம், பஞ்சாபில் ஆர்ய சமாஜ் நடவடிக்கைகள் பண்டைய இந்தியாவின் மகிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கின. தவிர முஸ்லிம் ஆட்சியாளர்களால் ஹிந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும் பேசத்தொடங்கின. இந்த ஆர்ய சமாஜிஸ்டுகள் தங்கள் அரசியல் சுதந்திரம் குறித்த கருத்துக்களை தாமஸ் பெயின், ஜோசப் மஸ்ஸினி, ஜார்ஜ் வாஷிங்டன் போன்றவர்களிடமிருந்து பெற்றனர். அவர்கள் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிராக, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக, ஒன்றுபட முயன்றனர். டி.ஏ.வி கல்லூரி ஹிந்து ஒற்றுமை, ஹிந்து முன்னேற்றம் மற்றும் ஹிந்து ஒருங்கிணைப்புக்காக முன் நின்றது.
இப்படியாக, கடுமையாகப் பிளவுபட்ட ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் இரண்டு பிரிவுகள் உருவாயின. அவற்றில் ஒன்று அரசியல் சுதந்திரத்தை முன்வைத்தது, மற்றொன்று ஆளும் சக்தியுடனான கூட்டணியைப் போதித்தது. இந்த வேறுபாடு பின்னர் தீப்பிழம்புகளாக வெடித்த நெருப்பின் அடித்தளமாக மாறியது. தற்போது ஒரு ஐக்கிய இந்தியாவின் அனைத்து நம்பிக்கைகளையும் இதுவே சாம்பலாக்க முயல்கிறது. ஒருபுறம் அலிகாரில் படித்த முஸ்லிம்களும், மறுபுறம் ஆர்ய சமாஜிஸ்டுகளும், தத்தமது சமூகங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்று அவர்களுடைய நலன்களை முன்னெடுத்துச் சென்றனர்.
முஸ்லிம்களின் தரப்பிலிருந்து வந்த இனவாத பிரதிநிதித்துவம் மற்றும் தனி வாக்காளர்களுக்கான கோரிக்கை, அவர்களுடைய சமூக முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தின் அடுத்த, இயல்பான படியாகும். அரசாங்கம் அதன் பங்கிற்கு சர் சையத் மற்றும் அவரைச் சார்ந்த முஸ்லிம்களிடத்தில் ஒரு இயற்கையான, வரவேற்கத்தக்க கூட்டாளியைக் கண்டறிந்து, சட்டமன்றங்கள் மற்றும் ராணுவத்தில் சிறப்பு பிரதிநிதித்துவத்திற்கான அவர்களின் கோரிக்கைகளை ஊக்குவிக்கத் தொடங்கியது. முஸ்லிம்களின் “அரசியல் முக்கியத்துவம்” ஒரு போர்க்குரலின் முக்கியத்துவத்தைப் பெற்றது. இந்தியா முழுவதிலும் உள்ள ஹிந்துக்கள் இதை எதிர்த்தனர், உ.பி மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த ஹிந்துக்கள் மிகவும் அதிகமாக எதிர்த்தனர். இந்த யோசனையின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் அறிய விரும்புவோருக்கு, “தோழர்”-ன் ஆரம்பத் தொகுதிகள் ஒரு சுவாரஸ்யமான மற்றும் வெளிப்படைத்தன்மையான ஆய்வை வழங்கும்.
முஸ்லிம்களின் அரசியல் முக்கியத்துவம் குறித்த கோரிக்கையின் ஆணிவேராக இருந்தது என்ன? அவர்கள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் ஆட்சியாளர்களாக இருந்தனர் என்பதும், இந்தியாவுக்கு வெளியே இன்னும் பல சுதந்திரமான முஸ்லிம் நாடுகள் இருந்தன என்பதும் இரண்டு காரணங்கள். 1877-78ல் ரஷ்யாவுடனான போரில் துருக்கியர்களுக்கு எந்தவொரு உதவியையும் இந்திய முஸ்லிம்கள் அனுப்புவதை சர் சையது அவர்களே எதிர்த்தார் என்பது அனைவரும் அறிந்த வரலாற்று உண்மை. அவர் உலகளாவிய-இஸ்லாமியரா என்று எனக்குத் தெரியவில்லை. இல்லை என்று நான் நினைக்கிறேன். எவ்வாறாயினும், இந்திய முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம் நாடுகளின் விவகாரங்களில் தலையிட வேண்டும் என்ற கருத்தை அவர் கடுமையாக எதிர்த்தார்.
எவ்வாறாயினும் இந்திய முஸ்லிம்கள், கிரேட் பிரிட்டனும் பிற ஐரோப்பிய சக்திகளைப் போலவே அதன் ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்றவாறு மட்டுமே முஸ்லிம் நாடுகளில் மீது அக்கறை கொண்டுள்ளது என்பதை விரைவில் கண்டுபிடித்தனர். இந்திய முஸ்லிம்களைப் பற்றிய இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறை இந்தியாவுக்கு வெளியே உள்ள முஸ்லிம் நாடுகளின் விவகாரங்களில் அவர்கள் தீவிர அக்கறை காட்டுவதைத் தடுக்க முயலும் ஒரு போதைப்பொருள் மட்டுமே என்று சந்தேகங்கள் எழுந்தன. படித்த முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் கூட்டணி வைத்திருப்பது அதன் இயல்பான செல்வாக்கை மக்களிடையே ஏற்படுத்தியது. உயர்குடியினரும் சாதாரணர்களும் அரசு தங்கள் நண்பர், ஹிந்துக்களுக்கு எதிரானது என்ற கருத்தாக்கத்தை உள்வாங்கிக்கொண்டனர். யூரோப்பியர்களும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் அவர்கள் மனத்தில் இந்தக் கருத்தைத் திணித்தனர்.
ஆனால் இதற்கான எதிர்வினை வர வேண்டுமல்லவா. அது இரண்டு வழிகளில் வந்தது. முதலாவதாக, முஸ்லிம்கள் தங்கள் கோரிக்கைகளை மிக அதிகமாக, அரசாங்கம் கூட அவற்றை நிறைவேற்ற முடியாத அளவிற்கு உயர்த்தத் தொடங்கினர். இரண்டாவதாக, துருக்கி மற்றும் எகிப்தின் முஸ்லிம் சாம்ராஜ்யங்களின் படிப்படியான வீழ்ச்சி மற்றும் சிதைவு ஆகியவை பிரிட்டிஷ் நட்பின் மதிப்பைக் குறித்து இந்திய முஸ்லிம்களின் கண்களைத் திறந்தன. முதலில் எகிப்தின் மீதான ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது; அதன் பின் துருக்கிய சாம்ராஜ்யம் கிறிஸ்தவ மாகாணங்களின் இழப்பால் சுருங்கியது. அடுத்ததாக முஸ்லிம் நாடான திரிப்போலி மீது இத்தாலி போர் தொடுத்தது. இறுதியாக துருக்கியுடனான போர் நிகழ்ந்து. துருக்கிய சாம்ராஜ்யத்தை செவெரஸ் ஒப்பந்தத்தால் சிதைத்தது. இது சில முஸ்லிம் தலைவர்களின் அரசியல் கருத்துக்களில் முழுமையான மாற்றத்தைக் கொண்டு வந்து ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றிய யோசனையை உருவாக்கியது.
இந்தக் காலகட்டத்தில் அரசோடு கூட்டணி வைத்து அதன் மீதான அரசியல் சார்பை வளர்த்த அணிக்கு எதிராக அரசியல் சுதந்திரத்தின் நோக்கங்களுக்காக இந்துக்களுடன் கூட்டணியில் நின்ற முஸ்லிம் தலைவர்கள் யாரும் இல்லை என்று நான் கூற முயலவில்லை. இறந்தவர்களில் திருவாளர்கள் பத்ருதீன் தியாப்ஜி, ரஹ்மத்துல்லா, ரசூல், மற்றும் தற்போது இருப்பவர்களில் மௌலானா அபுல் கலாம் ஆசாத், எம்.ஏ.ஜின்னா, ஹசன் இமாம், மற்றும் மஜார்-உல்-ஹக் ஆகியோர் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான அரசியல் ஒற்றுமையின் பக்கம் நிற்கிறார்கள்.
கிரேட் பிரிட்டனின் சிறந்த முற்போக்குச் சிந்தனையாளரும் அரசியல்வாதியுமான லார்ட் மோர்லி, இந்திய அதிகாரத்துவத்தின் அழுத்தத்தின் காரணமாக, இந்தியாவில் சமூகரீதியான பிரதிநிதித்துவத்திற்கான அனுமதியை ஒருவழியாக வழங்கினார். இந்த ஏற்பாடு பின்னர் இரு சமூகங்களின் முற்போக்குத் தலைவர்களாலும் லக்னோ ஒப்பந்தத்தின் படி அங்கீகரிக்கப்பட்டது.
இது சுருக்கமாக, சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தின் வரலாறு. அதன் அவசியம் குறித்தோ அதை எதிர்த்தோ நான் எதுவும் கூறவில்லை, அதற்கு முன் நான் மறைந்த சர் சையத் அகமது கானின் கொள்கை குறித்து சுருக்கமாக கருத்து தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் இந்தியாவில் உலகளாவிய-இஸ்லாமியத்தின் வளர்ச்சியைக் கண்டறியவும் விரும்புகிறேன்.

Leave a Reply