Posted on Leave a comment

திருப்பங்களுடன் கூடிய ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு | லக்ஷ்மணப் பெருமாள்



ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21, 2019 நள்ளிரவில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதே வழக்கு சம்பந்தமாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பிப்ரவரி, 2018ல் கைது செய்யப்பட்டார். 23 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் கார்த்தி சிதம்பரம் விடுவிக்கப்பட்டார். இந்தக் கைதின் பின்னணி என்ன என்பதைப் பார்க்கும் முன், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு என்றால் என்ன, இந்த வழக்கிற்கும் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவருக்குமான தொடர்பு என்ன என்று பார்த்தல் ஒரு திரைப்படத்திற்கான கதை கிடைக்கிறது. அந்த அளவிற்கு இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்களுடன் கூடிய அம்சங்கள் நடந்தேறி உள்ளன. 


ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு:

இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகிய இருவருக்கும் சொந்தமான நிறுவனம்தான் ஐ.என்.எக்ஸ் மீடியா. 2007ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தமது நிறுவனத்திற்கு அந்நிய முதலீடு தேவைப்படுவதாக, மார்ச் 2007ல், மத்திய நிதி அமைச்சகத்தை அணுகுகிறது. 14.98 லட்சம் ஈக்விட்டி ஷேர்ஸும், 31.22 லட்சம் கண்வெர்டிபில் நான்-குமுலேட்டிவ் ரீடீமபில் ப்ரிபிரேன்ஸ் ஷேர்ஸும் (convertible non-cumulative redeemable preference shares) தேவைப்படுவதாகவும், அதற்கு அனுமதி கேட்டு மத்திய நிதி அமைச்சகத்தை அணுகுகிறார்கள். ஒரு ஷேர் 10 ரூபாய் வீதம் விலை வைத்து, மூன்று அந்நிய முதலீட்டாளர்களால் இந்த பங்குகள் விலைக்கு வாங்கப்பட்டு, அவர்களும் முதலீட்டாளர்களாக இருப்பார்கள் என்றும், அதை அன்னிய நேரடி முதலீட்டின் மூலம் கொண்டு வரவும் அனுமதி கேட்கப்படுகிறது.

இந்தக் கோரிக்கை விடுக்கப்படும்போது மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். மத்திய நிதி அமைச்சகக் கட்டுப்பாட்டிலுள்ள ஃபாரின் இன்வெஸ்ட்மென்ட் ப்ரோமோசன் போர்ட் (Foreign Investment Promotion Board) மே 2017லேயே அனுமதிக்கிறது. 4.62 கோடி வரை நிதியை ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்குக் கொண்டு வர அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் கொண்டு வரப்படும் நிதியைத் தனது இன்னொரு நிறுவனமான ஐஎன்எக்ஸ் நியூஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்ய கோரிக்கை வைக்கிறது. அதற்கு அனுமதி அளிக்க எப்ஐபிபி மறுத்துவிடுகிறது. அந்நிய நேரடி முதலீட்டில் 305 கோடி வரை ஐ.என்.எக்ஸ் மீடியா பணத்தைக் கொண்டு வந்து விடுகிறது. அனுமதிக்கப்பட்ட ஒரு ஷேரின் விலை 10 ரூபாய் என்பதற்குப் பதிலாக 80 மடங்கிற்கும் அதிகமாக 862 ஷேர்கள் மூலமாகவே 305 கோடி ரூபாய் முதலீடாகக் கொண்டு வந்துள்ளது. 

ஜனவரி 2008ல், ஐ.என்.எக்ஸ் மீடியா மொரிசியஸ் நாட்டிலுள்ள மூன்று நிறுவனங்கள் மூலம் முறைகேடாகக் கொண்டு வந்த முதலீட்டை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழுள்ள மத்தியப் புலனாய்வுத் துறை கண்டுபிடித்து விடுகிறது. அன்னிய முதலீடு தொடர்பான விவகாரம் என்பதால், மும்பை வரிவருவாய்த் துறை, இதை அமலாக்கத் துறையின் (Enforcement Directorate) கவனத்திற்குக் கொண்டு செல்கிறது. அதன்பிறகு இந்த வழக்கைக் கையில் எடுத்த அமலாக்கத்துறை 2010ம் ஆண்டு அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஐ.என்.எக்ஸ் மீடியா மீது வழக்கு தொடர்ந்தது. 

அமலாக்கத்துறை இதில் ஊழல் நடந்துள்ள வாய்ப்புகள் நிறைய உள்ளதாகவும், முக்கியப் புள்ளிகள் இதன் பின்னணியில் இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் சிபிஐ கவனத்திற்குக் கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் சிபிஐ மே 2017ல் ஐஎன்எக்ஸ் மீடியா மீது முதல் தகவல் அறிக்கையை (FIR) அளித்து வழக்கை முடுக்கி விடுகிறது. அவ்வாறானால் 2008 முதல் 2017 வரை என்ன நடந்தது என்கிற கேள்வி எழுகிறது. இந்தக் கால இடைவெளியில் நடந்த விஷயங்களைப் பார்க்கலாம்.

4.62 கோடிக்குப் பதிலாக 305 கோடி அளவிற்கான முதலீட்டை முறைகேடாகக் கொண்டு வந்த ஐஎன்எக்ஸ் மீடியா, இந்தப் பணத்தை ஐஎன்எக்ஸ் நியூஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தங்களது புதிய நிறுவனத்திற்கு மாற்ற பாரின் இன்வெஸ்ட்மென்ட் ப்ரோமோசன் போர்டிடம் அனுமதி கோருகிறது. ஆரம்பத்தில் இதற்கு அனுமதி அளிக்க மறுத்தது பாரின் இன்வெஸ்ட்மென்ட் ப்ரோமோசன் போர்ட் (FIPB). இங்கிருந்து தான் கதை ஆரம்பிக்கிறது. 

முறைகேடாகக் கொண்டுவரப்பட்ட முதலீட்டிற்கான அனுமதியை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்பதற்காக ஐஎன்எக்ஸ் மீடியா, செஸ் மானேஜ்மென்ட் செர்விசெஸ் பிரைவேட் லிமிடெட் (Chess Management Services Pvt Ltd) என்ற நிறுவனத்தை அணுகுகிறது. மத்திய நிதி அமைச்சகத்தை நட்பு ரீதியாக அணுகி இந்த விஷயத்தை முடித்துத் தர கோரிக்கை வைக்கிறது. ஐஎன்எக்ஸ் மீடியா செஸ் மானேஜ்மென்ட் செர்விசெஸ் பிரைவேட் லிமிடெட்டை அணுகக் காரணம், அதன் நிறுவனத் தலைவர் அப்போதைய நிதி அமைச்சரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இதன் அடிப்படையில் சிபிஐ சில காரணங்களை அடுக்குகிறது.

கார்த்தி சிதம்பரம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, தமது தந்தையை சந்திக்க ஏற்பாடு செய்ததாகவும், நிதி அமைச்சரான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியாவிடம், புதிதாகப் பணத்தைக் கொண்டு வர அனுமதி கேட்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தியதாகவும், ஏற்கெனவே 305 கோடியை முறைகேடாகக் கொண்டு வந்ததன் மீது நடவடிக்கை எடுக்காமல் அதற்கு ப.சிதம்பரம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அனுமதி அளித்தார் என்பதே சிபிஐ முன்வைக்கும் குற்றச்சாட்டு. 

சிபிஐயின் இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் இந்திராணி முகர்ஜி, ஜூலை 21, 2019 அன்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறியதும், சிதம்பரத்தை அனுமதி கோரி சந்தித்ததாகவும் வாக்கு மூலம் அளித்தார். தமது வாக்குமூலத்தில், ப.சிதம்பரத்தின் அறிவுரையின் பேரில்தான் ஏ.எஸ்.சி.பி.எல் நிறுவனத்தை (Advantage Strategic Consulting Pvt. Ltd) அணுகியதாகவும், அந்த நிறுவனத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் (3.5 கோடி) அளவிற்குக் கொடுத்தால், எப்.ஐ.பி.பி மூலமாக முறைகேடாகக் கொண்டு வந்த 305கோடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்படும் என்று ப.சிதம்பரம் உறுதி அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆவதற்கு முன்பு வரை, ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிக்கையை ஏற்று, கைது நடவடிக்கை எடுக்க விடாமல் தடை செய்து வந்த டெல்லி உயர்நீதி மன்றம், இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்திற்குப் பிறகு அவரைக் கைது செய்ய அனுமதி அளித்தது. முன்ஜாமீன் தேவைப்பட்டால் ப.சிதம்பரம் மூன்று நாட்களுக்குள் உச்சநீதி மன்றத்தை அணுகி ஜாமீன் பெற கோரிக்கை வைக்கலாம் என்றும் அறிவுறுத்தியது. டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்தை இந்த வழக்கின் முக்கிய ஆணிவேர் என்று காரணம் காட்டிக் கைது செய்ய அனுமதித்தது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 21, 2019ல் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் அதன் பிறகு மூன்று முறை முன்ஜாமீன் கோரியும், உச்சநீதிமன்றம் மூன்று முறையும் நிராகரித்துள்ளது. இக்கட்டுரை எழுதப்படும் இந்நேரத்தில், ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 03, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரம் ஏர்செல் மாக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டு 20க்கும் மேற்பட்ட தடவை முன்ஜாமீன் கேட்டு, நீதிமன்றத்தின் மூலம் முன்ஜாமீன் பெற்றார் என்பதும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக மகன் கைதிற்குப் பின்னர் தாமாகவே, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தன்னைக் கைது செய்யக் கூடாது என முன்ஜாமீன் கோரினார். இதை விட விசித்திரமாக ஒன்று  நடந்தது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நீதிமன்றக் காவல்தான் கேட்பார்கள். ஆனால் ப.சிதம்பரம் தமக்கு நீதி மன்றக் காவல் கூடாது என்றும், சிபிஐ விசாரணை மட்டுமே வேண்டும் என்றும் கோர்ட்டில் கோரிக்கை வைத்தார். ஆனால் அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு திகார் ஜெயிலில் நீதிமன்றக் காவலில் தற்போது உள்ளார்.

இந்த வழக்கில் அப்ரூவர் ஆகியுள்ள இந்திராணி முகர்ஜியும், பீட்டர் முகர்ஜியும், அவர்களது மகள் சோனா போராவைக் கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஎன்எக்ஸ் மீடியா மீது, பணத்தை முறைகேடாகக் கொண்டு வந்தது, ஐஎன்எக்ஸ் மீடியாவிலிருந்து ஐஎன்எக்ஸ் நியூஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அனுமதி மறுத்தும் பணத்தைக் கொண்டு சென்றது போன்ற வழக்குகளும் உள்ளன. ப.சிதம்பரம் மீது, முறைகேடாக அனுமதி வழங்கியது, அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்ட விதி மீறலில் ஈடுபட்டது போன்ற வழக்குகள் உள்ளன. 

கார்த்தி சிதம்பரம் 10 லட்சம் ரூபாயை ஏஎஸ்சிபிஎல் மூலமாக லஞ்சமாகப் பெற்றார் என்பதே சிபிஐ முன்வைத்த குற்றச்சாட்டு. இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் பெயரில் பில்கள், இன்வாய்ஸ் உள்ளன என்று சிபிஐ நேரடியாகக் குற்றம் சாட்டியது. அதன் அடிப்படையில்தான் கார்த்தி சிதம்பரமும் கைது செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் எஸ்.பாஸ்கர ராமனும் குற்றம் சுமத்தப்பட்டவர். அவர்தான் செஸ் மானேஜ்மெண்ட் செர்விசெஸ் நிறுவனத்திற்கு ஆடிட்டர் ஆவார். ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்திற்கு 3.5 கோடி அளவிற்கு ஐஎன்எக்ஸ் மீடியா பணம் செலுத்தி உள்ளது என்பதும் ஏஎஸ்சிபிஎல் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தின் ஷெல் கம்பெனி என்பதே சிபிஐயின் வாதமாக உள்ளது.

யாருடையது இந்த ஏஎஸ்சிபிஎல் நிறுவனம்? அதற்கும் கார்த்தி சிதம்பரத்திற்கும் என்ன தொடர்பு? இந்த வழக்கைப் பொருத்தவரையில் அமலாக்கத் துறைக்கும் (ED) , தேசிய புலனாய்வுத் துறைக்கும் (CBI) உள்ள சவாலே ஏஎஸ்சிபிஎல் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் என்று நிருபிப்பதுதான். 

ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்தின் இயக்குநர்கள் ரவி விஸ்வநாதன் மற்றும் பத்மா பாஸ்கரராமன். எஸ்.பாஸ்கர ராமனின் மனைவிதான் பத்மா பாஸ்கர ராமன். பத்மா பாஸ்கர ராமனின் சகோதரர்தான் ரவி விஸ்வநாதன். எகானாமிக் டைம்ஸ் புலானய்வு செய்து வெளியிட்டுள்ள செய்தியில் இடம் பெற்றுள்ள விஷயங்களைத் தருகிறேன். “அமலாக்கத்துறையிடம், கார்த்தி சிதம்பரம் மற்றும் எஸ்.பாஸ்கர ராமனின் அறிவுரையின் பேரில்தான் இன்வாய்ஸ் மற்றும் அனைத்துப் பத்திரங்களிலும் கையெழுத்து வைத்ததாக ரவி விஸ்வநாதனும் பத்மா பாஸ்கர ராமனும் தெரிவித்துள்ளனர்” என்று கூறி உள்ளது.

மேலும் இன்னொரு செய்தியில், ஐஎன்எக்ஸ் மீடியாவின் உயர் அதிகாரிகள் அமலாக்கத்துறையிடம் 3.3 கோடி அளவிற்கு, கார்த்தி சிதம்பரத்தின் அறிவுரையில் பேரில் ASPCL, Geben Trading Limited (கார்த்தியின் நண்பர் நிறுவனம்) மற்றும் North Star Software Solutions Private Limited, Mumbai ஆகிய நிறுவனங்களின் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கு இன்வாய்ஸ் சமர்ப்பிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்

இந்த வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், எஸ் பாஸ்கர ராமன், பத்மா பாஸ்கர ராமன், ரவி விஸ்வநாதன் ஆகியோருக்கான தொடர்புகள் மற்றும் உறவு முறைகளை வைத்து சாமானியனாக நாம் இதில் தவறு நடந்துள்ளது என்று யூகிக்கலாம். தவறுகள் நடந்துள்ளன என்பதில் சந்தேகமில்லை என்றாலும், சட்டத்தின் முன்பாக ஏஎஸ்சிபில் நிறுவனம் கார்த்தியின் பினாமி (ஷெல் கம்பெனி) நிறுவனம் என்றோ அல்லது ஏஎஸ்பிஎல் மூலமாக பணம் ஏதேனும் வழியில் கார்த்தியின் நிறுவனத்திற்குக் கைமாறியது என்றோ நிருபிக்க வேண்டிய நிலையில் உள்ளது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை. ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்திற்கும் செஸ் மானேஜ்மெண்ட் நிறுவனத்திற்கும் இடையில் பணப்பரிவர்த்தனைகள் ஏதும் நடந்துள்ளதா என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சிபிஐ. மேலும் ஐஎன்எக்ஸ் மீடியாவிடமிருந்து சேகரிக்கப்படும் ஆதாரங்கள் சிபிஐக்கும், அமலாக்கத் துறைக்கும் வலு சேர்க்கக்கூடியதாக உள்ளது. எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கும் ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்திற்கும் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்பது உண்மை. ஆனால் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதே கார்த்தியின் வாதமாக உள்ளது. இந்தப் புள்ளிகளை சிபிஐயும் அமலாக்கத்துரையும் இணைத்துவிட்டாலே போதும், கார்த்தி சிதம்பரம், ப.சிதம்பரம், பாஸ்கரராமன், எப்ஐபிபி அதிகாரிகள் முறைகேடாக அனுமதி வழங்கினார்கள் என்பது எளிதாக நிரூபிக்கப்பட்டுவிடும்.




Leave a Reply