Posted on Leave a comment

கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் – சில குறிப்புகள் | ஓகை நடராஜன்மதுரை மாவட்டம் கீழடியில் செய்யப்பட்ட நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சியின்
அறிக்கையை தமிழக அரசு செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையை
வைத்து இரண்டு நாட்கள் கழித்துப் பல பதிவுகள் புற்றீசல் போலக் கிளம்பி வந்து, தமிழர்
நாகரிகம் என்ற ஒரு நாகரிகத்தை உருவாக்கிப் பறைசாற்றுகின்றன. வரலாறு வெற்றி பெற்றவர்களால்
எழுதப்பட்டிருக்கிறது என்கிற பாதி பொய்யை யார் உரக்கச் செல்கிறார்களோ அவர்கள் இப்போது
பொய் வரலாற்றை எழுதி வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சிகளிலேயே மிகவும் முக்கியமானது
என்று கீழடி ஆராய்ச்சிதான் எனச் சொல்ல முடியாது என்றாலும், குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சிகளில்
அதுவும் ஒன்று என்று நிச்சயமாகக் கூற முடியும். ஏற்கெனவே பல சான்றுகளால் நிரூபிக்கப்பட்ட
ஒரு மிகப்பெரிய நகர நாகரிகம், கண்டுபிடிக்கப்பட்ட அதன் சில கட்டுமானங்களாலும் கிடைத்த
பழம் பொருட்களாலும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பிராமி எழுத்துக்கள் பொறித்த
பானையோடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதிலும் இதன் காலகட்டம் கிமு 585 என்று கண்டறியப்பட்டிருப்பதும்
முக்கியமான நிகழ்வு.
இந்த அகழ்வாராய்ச்சி நடந்த இடமான பள்ளிச் சந்தை என்ற இடம் உண்மையில்
கீழடி என்று அழைக்கப்படுவது அவ்வளவு சரி இல்லை. இது கொந்தகை என்ற ஒரு பெரிய ஊரில் உள்ளது.
கொந்தகை என்ற ஊர் பல கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிற ஒரு சதுர்வேதிமங்கலம்.
இப்பொழுதும் இங்கு இருக்கும் கொந்தகை என்ற ஊர் பழைய கொந்தகையின் இடுகாடு என்று கல்வெட்டு
ஆய்வாளர் எஸ்.ராமசந்திரன் கூறுகிறார். இந்த இடத்தில் அதிக அளவில் தோண்டினால் நமக்கு
மேலும் மேலும் பல செய்திகள் கிடைக்கும். ஆனால் உண்மையில் இந்த அகழ்வாராய்ச்சி இப்போது
தமிழர்களுக்கு நன்மை செய்திருக்கிறதா என்று பார்த்தோமானால் சில வருத்தமான நிகழ்வுகள்
நடக்கின்றன.
திராவிட அரசியல் அல்லது திராவிட கருத்தாக்கம் என்பது பொய்களால்
கட்டப்பட்ட மிகப்பெரிய மாளிகை. அந்த மாளிகையின் தற்போதைய கூட்டாளிகளான கம்யூனிஸ்டுகள்,
தமிழ்த் தேசியவாதிகள் போன்றோர் கீழடி அகழ்வாராய்ச்சியை வைத்து கீழ்த்தரமான அரசியலில்
ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய அறிவாயுதங்கள் ஆய்வறிக்கைக்குப் பிறகான
இரண்டே நாட்களில் கூர் தீட்டப்பட்டு உண்மைகளைக் குத்திக்குதற ஆரம்பித்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் பல இடங்களில் செய்த அய்வுகளின்போது இதைப் போன்ற
பல பழம்பொருட்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை
ஓடுகள் ஏராளமாய் கொடுமணலில் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் அதிக அளவில் பிராமி
எழுத்துகள் பொறித்த பானை ஓடுகள் கிடைத்த இடம் கொடுமணல்தான். அந்த இடத்தில் தற்போது
இந்தியத் தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டிருக்கிறது. ஆனால் கீழடி அகழ்வாராய்ச்சி
முடிவுகளின் எதிர்வினைகளால் திராவிட கருத்தாக்கக்காரர்களின் ஹிடன் அஜெண்டா என்று சொல்லப்படுகிற
மறைந்திருக்கும் நோக்கங்களை செயல்படுத்த எத்தனிக்கிறார்கள்.
முதலில் இங்கு வழிபாட்டுப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை
என்பதைச் சொல்கிறார்கள். ஏதேனும் ஒன்றுக்கு சான்று இல்லை என்றால் அது இல்லை என்பதற்குச்
சான்று என எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது அடிப்படை உண்மை. ஆனால் எப்பொழுதுமே அடிப்படை
உண்மைகளை மதிக்காதவர்கள் இப்பொழுதும் அதை மதிக்காமல் அவ்வாறு சொல்கிறார்கள். அங்கு
போர்க்கருவிகள் கூடக் கிடைக்கவில்லை என்பதால் அந்நாட்களில் போர் நிகழாமல் இருந்தது
என்று கூற முடியுமா! மேலும் இதைத் தமிழர் நாகரிகம் என்று சொல்வது எந்தளவுக்கு சரி என்பது
தெரியவில்லை. இது வைகைக்கரை நாகரிகம் என்றே அழைக்கப்பட வேண்டும்.
அதாவது இந்தியா
முழுமைக்கும் நடந்த இரண்டாம் நகர மயமாக்கலின் ஒரு பகுதிதான் இந்த நாகரிகம் என்பதே இந்த
அகழ்வாராய்ச்சி சொல்லும் உண்மை. முதல் நகரமயமாக்கல் என்பது சிந்துச் சமவெளி நாகரிகத்துடன்
தொடர்புடையது.

தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல இடங்களில், வட
இந்தியாவில், இலங்கையில் நடந்த பல ஆராய்ச்சிகள் மூலம் ஏராளமான தரவுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.
வரலாற்றை முடிவு செய்யும்பொழுது தனித்து தமிழ்நாட்டுத் தரவுகளை மட்டும் வைத்து வரலாறாகக்
கட்டமைக்க முடியாது. கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் இருக்கும் சின்னங்கள்: ஏணி, மீன்,
சுழல்வரிகள், ஸ்வஸ்திகா, திரிசூலம், சூரியன், வண்டி, இலை, அலைகோடுகள், இன்ன பிற. இதில்
திரிசூலம், ஸ்வஸ்திக் போன்ற சின்னங்கள் எவற்றைக் குறிக்கின்றன? மேலும் அங்கு கிடைத்த
பெயர்கள், ஆதன், திஸன், உதிரன், எயினி, சுரமா, சாத்தன், எராவதன், சாந்தன், மாடைசி,
சேந்தன் அவதி, வேந்தன், முயன், சாம்பன், பெரயன், குவிரன் குறவன் போன்றவை. இவற்றில்
தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன, பிராகிருதப் பெயர்கள் இருக்கின்றன, சம்ஸ்கிருதப் பெயர்கள்
இருக்கின்றன.
இலங்கை திஸ்சமஹரமாவில் கண்டெடுக்கப்பட்ட ராஜகடசா, குதசா போன்ற
பெயர்களும் கீழடியில் காணக் கிடைக்கின்றன. நான்கு, ஐந்து, ஆறாம் நூற்றாண்டு காலத்திலேயே
பாண்டிய மன்னனுக்கும் இலங்கைக்கும் மண உறவுகள் இருந்தன என்பதை மகாவம்சம் தெளிவாகச்
சொல்கிறது. தமிழ் பிராமிக்குத் தொடர்பில்லாத எழுத்தைக் கொண்ட திஸன் என்ற பெயர் இலங்கைத்
தொடர்பையும் தமிழ் அல்லாத மொழித் தொடர்பையும் சுட்டிக் காட்டுகின்றது. திஸ்ஸநாயகே என்ற
சிங்களரின் பெயர்களை நாம் இன்றளவும் காண்கிறோம்.
இவ்வாறெல்லாம் இருக்கும்போது இந்தக் காலகட்டத்தை எப்படித் தனித்து
தமிழர் நாகரிகம் என்று குறிக்க இயலும்? பொதுவாகத் தமிழ் தேசிய மற்றும் திராவிடக் கழகக்
காரர்களால் சொல்லப்படும் ஒரு குற்றச்சாட்டு, மத்திய அரசும் அதன் தொல்லியல் துறையும்
தமிழரின் தொன்மை மற்றும் பெருமைகளை மூடிமறைக்கப் பார்க்கிறது என்பது. எந்தவித ஆதாரமும்
இல்லாதது இந்தக் குற்றச்சாட்டு. தமிழக மக்களின் உணர்வுகளைக் கீறிப் பார்க்கும் நோக்கம்
தாண்டி, இதற்கும் உண்மைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
உண்மையில் அகில இந்திய நாகரிக வளர்ச்சித் தொடர்பு, மொழித் தொடர்பு
இவற்றையும் நம் நாட்டின் தொன்மை வழிபாடு இந்து மதம் சார்ந்தது என்பதையும் கங்கணம் கட்டிக்கொண்டு
தொடர்ந்து மூடிமறைக்கப் பார்ப்பது யார் என்றால் இந்த தமிழ்த்தேசியக்காரர்களும் திராவிடக்காரர்களும்தான்.
அதைக் கீழடியிலும் செய்ய பெருமுயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது தமிழ்நாட்டில் திடீரென்று தோன்றியிருக்கும் நூற்றுக்கணக்கான
உடனடி அதிரடி அகழ்வாராய்ச்சியாளர்கள் தங்களுடைய தாந்தோன்றித்தனமான எண்ணத்தை கருத்து
என்ற போர்வையில் பொதுவெளியில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கீழடியில் இன்னும் ஐந்தாம்
கட்ட ஆராய்ச்சி நடக்க இருக்கிறது. அதில் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம். அப்பொழுது
வரலாறு தன்னைத் தானே கட்டமைத்துக் கொள்ளும். வரலாற்றை நாம் அதன்போக்கில் விடுவோம்.

Leave a Reply