Posted on Leave a comment

அந்தமானில் இருந்து கடிதங்கள் – வீர் சாவர்க்கர் (கடிதம் 5) | தமிழில்: VV பாலா

செல்லுலார் சிறை. 

6-7.1916 
போர்ட் ப்ளேயர் 
எனதன்பிற்குரிய பால் மற்றும் இனிய சாந்தா. 

காதல் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கப்போகும் உங்கள் இருவருக்கும் எனது மற்றும் என் சகோதரனுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வின் இரண்டாவது கட்டத்தில் நீங்கள் நுழைகிறீர்கள். வாழ்வில் முதலில் நாம் கடக்க வேண்டிய நிலையான தியாகம் மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவற்றில் நீ முழுமையாகத் தேர்ந்திருக்கிறாய். சம்ஸ்க்ருதம் மற்றும் ஆங்கில மொழிகளைக் கற்றுக்கொண்டு நீ பாரம்பரிய மற்றும் நவீன அறிவையும் பெற்றிருக்கிறாய். மருத்துவத்தில் நீ கடைசியாகத் தேர்ச்சி பெற்ற தேர்வின் மூலம் உலகத்தின் எந்த இடத்திலும் சென்று, எத்தகைய சட்ட ரீதியான இடையூறுகள் இருந்தாலும் பணியாற்றும் திறனைப் பெற்றிருக்கிறாய். உன்னுடைய கவிதை மற்றும் கட்டுரைகள் மூலம் நீ ஏற்கெனவே மகாராஷ்டிரத்தின் இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறாய். இந்தத் துறையில் நீ இதைவிடச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கமுடியாது என்று கூடச் சொல்வேன். நம் தேசத்திற்குப் பெரும் இன்னல்கள் வந்தபோது பெரும்பாலானவர்கள்போலப் புறமுதுகு காட்டாமல் நீ துணிந்து நின்று அவற்றை எதிர்கொண்டாய். எந்த உற்சாகத்தைத் தங்கள் இளைஞர்களிடம் கொண்டு வர வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்க்கின்றனவோ, அந்த உற்சாகத்தை உன்னிடத்தில் நீ கொண்டிருக்கிறாய். சமுதாயத்தில் அங்கீகாரம் இல்லாது போனாலும் தியாகம் செய்ய துணிந்த நீ இப்போது வாழ்வின் இரண்டாவது கட்டத்தில் சாந்தாவுடன் மணவாழ்வில் இணைய இருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும். இந்த மணவாழ்க்கை உனக்கும் சாந்தாவிற்கும் ரோஜா மலர்கள் தூவிய பாதையாக, இன்பமானதாக இருக்கட்டும். உங்களது இல்லற வாழ்க்கை மிகவும் இனிமையானதாக இருக்கட்டும். இல்லற வாழ்வின் இனிமை மட்டுமே இன்னும் அதன் வீழ்ச்சியைச் சந்திக்காமல் இருக்கும் வரம் பெற்றிருக்கிறது. 

உன்னுடைய மனதை ஏதேனும் ஒரு புத்திசாலி பெங்காலி பெண் திருடினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று நான் உனக்கு இதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தது உனக்கு நினைவு இருக்கலாம். நான் எதிர்பார்த்தது கிட்டத்தட்ட நடந்துவிட்டது. நம் நாட்டில் உள்ள மக்கள் ஜாதி மற்றும் பிராந்தியம் போன்ற பிரிவுகளால் பிளவுபட்டு இருக்கிறார்கள். இந்தப் பிளவுகளை மீறி அவர்கள் திருமணம் செய்து கொள்வது இந்து சமுதாயத்தில் உள்ள இதுபோன்ற செயற்கையான பிரிவுகளை இல்லாமல் செய்துவிடும். அந்த நாளைக் காண நான் ஏங்குகிறேன். இத்தகைய தடைகளை உடைத்து நம் பண்பாடு காட்டாற்று வெள்ளம் போலச் சீறிப் பாய்ந்து செல்லவேண்டும். கால்நடைகளின் இனப்பெருக்கம் நல்ல முறையில் ஆரோக்கியமானதாக நடக்கவேண்டும் என்று கவலைப்படும் நாம், மனிதர்களின் வருங்கால வம்சம் குறித்து அந்த அளவு அக்கறை கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பல நூற்றாண்டுகளாக குழந்தைத் திருமணம் மற்றும் பிரதிநிதி மூலம் திருமணம் ஆகியவை இங்கு நடந்து வருகின்றன. உடலுக்கும் மனதிற்கும் ஆன்மாவிற்கும் மேன்மையைக் கொடுக்கக் கூடிய காதல் என்ற உணர்வு இங்கு பல நூற்றாண்டுகளாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் தவிர்க்கமுடியாத விளைவாக நம் இனம் வீர்யம் இன்றி வலுவிழந்து இருக்கிறது. இதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனால் நம்மிடையே இருக்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் இதற்கு ஒரு முக்கியக் காரணம். நம் மதத்தின் அதிகார பீடங்கள் இத்தகைய காதலை மறுதலிக்காமல் அங்கீகரிக்கவேண்டும். ஆகையால், வயதும் கல்வியும் உங்கள் ஒருவருக்கு ஒருவர் இடையே ஏற்பட்ட பரஸ்பர கவர்ச்சியும் உங்களிடையே காதலாக மலர்ந்தது எனக்கு மகிழ்ச்சியைத்தான் தருகிறது. நமக்கு நெருக்கமானவர்கள் இதனை அங்கீகரித்திருக்கிறார்கள் என்பதே போதுமானது. இந்த விஷயத்தில் நம் குடும்பம் பின்தங்கி இருக்கவில்லை என்பதை அறிந்து மகிழ்ந்தேன். நம் சகோதரர் இதற்கு ஒப்புக்கொண்டு ஆசீர்வதித்தார் என்பதே போதும், இது எனக்கும் விருப்பமான ஒன்றுதான் என்பதை முடிவு செய்ய. 

நீங்கள் எங்கே குடியிருக்க போகிறீர்கள் டாக்டர் அய்யா? முதல் கடிதம் போஸ்ட் ஆபீசில் தவறுதலாகத் தொலைந்து போய்விட்டதால் நேற்றுதான் இரண்டாவது கடிதம் எழுத எனக்கு அனுமதி கொடுத்தார்கள். இது உனக்குப் பதட்டத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு இதன் மூலம் உன்னுடைய தற்போதைய முகவரி கிடைத்தது. நீ தற்போது பம்பாயில் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். நீ அந்த நெரிசல் மிகுந்த சுகாதாரம் குறைந்த நகரத்திலா குடியேறப் போகிறாய்? அதற்கு பதில் சாயாஜி ஆண்டுவரும், தற்போது நன்றாக வளர்ந்து வரும் பரோடா சரியான இடமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் களநிலவரம் அறிந்த நீ எடுக்கும் முடிவு சரியானதாகத்தான் இருக்கும். நான் உன்னிடம் வலியுறுத்த போவது ஒன்றே ஒன்றுதான். எக்காரணம் கொண்டும் உன் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உன் ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள்ளாதே. நம் தனிப்பட்ட நலன் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்வது மற்றவர்கள் விஷயத்தில் வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் உனக்கு அது பொருந்தாது. நீ உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், அது ஆப்பிரிக்கக் காடுகளாகட்டும் அல்லது அமெரிக்காவாகட்டும், நீ படித்திருக்கும் மருத்துவப் படிப்பு உன் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உன் பாதுகாப்பிற்கும் உதவும். எங்கெல்லாம் மரணம் இருக்கின்றதோ, அங்கெல்லாம் டாக்டர்களும் இருப்பார்கள். இதைச் சொல்வதற்காக என்னை நீ கோபித்துக்கொள்ளாதே. நான் மருத்துவ படிப்பின் உயர்வினைக் குறிப்பிடவே இதனைச் சொன்னேன். எனவே உன் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பு வரும் வகையில் எதையும் செய்யாதே, அதேபோல சாந்தாவின் உடல் ஆரோக்கியத்தையும் நன்றாகப் பார்த்துக்கொள். அவளை நிறையப் படிப்பதற்கும் எழுதுவதற்கும் உற்சாகப்படுத்து. ஆனால் ஒரு பெண்ணின் முதல் கவனம் அவளது ஆரோக்கியத்தில்தான் இருக்கவேண்டும். இது அவள் மட்டுமில்லாமல் அவளுடைய வருங்கால சந்ததிக்காகவும் அவள் மேற்கொள்ள வேண்டிய கடமை. அவளுடைய உடம்பில் இருந்து வீணாகும் ஒவ்வொரு துளி சக்தியும் எதிர்கால சந்ததியை பலவீனமாக்கும். அவள் நேற்றைய மற்றும் வருங்கால சந்ததியின் இணைப்புப் பாலம். வருங்கால சந்ததியின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யப் போகிறவள் பெண். அதனால் ஒரு மனைவி தன்னுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மிகவும் கவனமாகப் பேணிப் பாதுகாக்கவேண்டும். அதனால் படிப்போ அல்லது பொழுதுபோக்கோ, அவளது சக்தியை வீணடிக்கும் விதத்தில் இருக்கக்கூடாது. மாறாக அவளுடைய அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் விதத்தில் மட்டுமே இருக்கவேண்டும். 

என்னைப் பற்றிக் கூறுவதற்கு விசேடமாக ஒன்றும் இல்லை. என்னுடைய கடைசிக் கடிதம் உனக்குக் கிடைத்தபோது நான் எப்படி இருந்தேனோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறேன். ஒரு கைதியின் வாழ்க்கையில், அதிலும் குறிப்பாக போர்ட் ப்ளேயரில் இருக்கும் கைதியின் வாழ்கையில் மாற்றம் என்ற ஒன்று அகராதியிலேயே இருக்காது. போரினால் உங்கள் பகுதியில் வாழ்கை மிகவும் பாதிப்பை உணர்ந்தது என்றாய், ஆனால் இங்கே போர்ட் ப்ளேயரில் அதன் சுவடே தெரியவில்லை. போரினால் இங்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசவையிலிருந்து பெருமையுடன் அறிக்கை வெளியிடலாம். எங்களுடைய ஏற்றுமதி இறக்குமதிகளில் எந்த மாறுதலும் இல்லை. நாங்கள் இரவெல்லாம் விளக்கை அணைக்காமல் ஏற்றியே வைத்திருக்கிறோம். எங்களுடைய சர்வதேசத் தகவல் தொடர்புகள் எல்லாம் எப்போதும் போல அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மிஸ்டர் அஸ்கித் எங்களைப் பார்த்துப் பொறாமைப்படக் காரணங்கள் இருக்கின்றன. எங்களுக்கு சாப்பாட்டின் அளவோ அல்லது உருளைக்கிழங்கின் அளவோ குறைக்கப்படவில்லை. ஆனால் ஜெர்மானியர்களுக்கு இதுபோலக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் உண்ண வேண்டியதை நாங்களே விளைவிக்கின்றோம். எங்களுடைய சிறைச் சுவர்கள் சீனப் பெருஞ்சுவர்களைக் காட்டிலும் பெருமை மிக்கவை. அந்தப் பெருஞ்சுவரினால் அந்நியர்கள் உள்ளே ஊடுருவாமல் தடுக்க மட்டும்தான் முடிந்தது. ஆனால் இந்தச் சுவர்கள் அதைச் செய்வதோடு உள்ளிருப்பவர்கள் வெளியே செல்ல முடியாத படியும் தடுக்கின்றன. மரணம் வலியில்லாததாக இருக்கிறது. போர் என்பது முடிவிற்கு வந்ததும் எங்களுடைய வாழ்கை மனித குலத்திற்கு ஒரு மாதிரி போலக் காண்பிக்கப்படலாம். மரணத்தையே வெட்கமுற வைக்கும் விதத்தில் ஒரு அமைதியான வாழ்க்கை அல்லது பிழைத்திருத்தல் என்றும் சொல்லலாம். 

நேர்காணலைப் பொருத்தவரையில் நாம் போர் முடியும்வரை காத்திருக்கலாம். அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கத் தயங்குவதின் காரணத்தை நாம் ஓரளவிற்குப் புரிந்துகொள்ளலாம். அதற்குப் பின்னும்கூட நீ அனுமதிவேண்டி எழுதும் கடிதத்தில் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கத் துடித்துக்கொண்டிருக்கிறோம் என்ற ரீதியில் இல்லாமல், ஐந்து வருடங்கள் ஆனபிறகு எல்லாக் கைதிகளுக்கும் வழங்கப்படும் சலுகை இது, அதனால் நமக்கும் வழங்கப்படவேண்டும் என்றே கேட்கவேண்டும். அப்போது அனுமதி மறுக்கப்பட்டாலும் இந்த இரக்கமில்லாத அந்நியர் கண்களுக்கு நம் பிரிவின் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறோம் என்பதைக் காட்டாமல் இருந்தோம் என்ற திருப்தியாவது இருக்கும். மேலும் இங்கு நிலைமையை சீராக்க வேண்டி நீ எந்த வேண்டுகோள் விடுப்பதாக இருந்தாலும் அதனை டெல்லிக்கு நேரடியாக எழுதவும். ஏனென்றால் இங்குள்ள அதிகாரிகளுக்கு நிலைமையை சீராக்கும் விதத்தில் எதனையும் தீர்மானிக்கும் அதிகாரம் கிடையாது. அவர்களால் செய்ய முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்யாதிருக்கும் பட்சத்தில் நான் அவர்களைச் செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுத்து அவற்றை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறேன். இங்குள்ள கொடுமைகளால் நான் மனமுடைந்து போகமாட்டேன் என்று உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும், நான் இத்தகைய கொடுமைகளை அனுபவிக்கக் காரணமான சமூக, அரசியல் மற்றும் இலக்கியப் பணிகளில் ஈடுபடாமல் இருக்கவேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், ஒரு விஷயத்தை நினைத்துப் பார் என் சகோதரனே! அல்லல்படுவதும் ஒரு வேலைதானே. கிறிஸ்தவ மதத்திற்காக யார் அதிகம் வேலை செய்தார்கள்? வேலை செய்தவர்களா அல்லது அமைதியாக அல்லல்களை அனுபவித்தவர்களா? இருவருமேதான். ஆனால் நல்ல விஷயங்களுக்காக வெளியே வேலை செய்பவர்களைக் காட்டிலும் அதே காரணங்களுக்காகச் சிறையில் அடைபட்டு அல்லல்படுபவர்கள் கூடுதலாக வேலை செய்கிறவர்கள் என்று நான் கருதுகிறேன். அல்லல்படுவது என்பது நம்மை மேற்கொண்டு பணி செய்யத் தூண்டும் உந்து சக்தியாக இருக்கின்றது. சமுதாயத்தில் உள்ள சிறந்த மக்கள் அல்லலுராமல், மற்றவர்கள் பணி செய்ய இயலாது. இரண்டுமே மகத்தானது, அதே நேரம் இரண்டுமே தவிர்க்க இயலாதது. அதனால் இதில் இரண்டில் எதனைச் செய்ய நாம் பணிக்கப்பட்டாலும் நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. இது எனக்குக் கிடைத்த பாக்கியம் என்றே நான் கருதுகிறேன். ஆகவே சகோதரா, மற்றவர்கள் எல்லாம் வெளியில் மகிழ்ச்சியாக இருக்க நான் மட்டும் இங்கே இருட்டறையில் அல்லல்படுகிறேன் என்று கவலை கொள்ளவேண்டாம். 

நம் பாரதத் தாயின் பாதங்களுக்கு சேவை செய்ய ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். காத்திருந்து அல்லல்படுவோரும் அதில் அடக்கம் என்பதை நீ மனதில் கொள்ள வேண்டும்.
காத்திருத்தல் மட்டுமல்லாமல் அல்லலும் பட்டு அதனை தீரத்துடன் எதிர்கொள்வோரும் பெரும் பணி செய்பவர்கள்தான். பாறைகளை செதுக்கி அவற்றை அடுக்கும் பணி சிறப்பான ஒன்றுதான். ஆனால் தேவாலயச் சுவர்களில் இந்தப் பாறைகளைத் தாங்கும் சிமெண்டும் அதேபோல இன்றியமையாததுதான். அமைதியாகத் தியாகம் புரிவோர் இத்தகையவர்கள்தான்.

பால், உனக்கு நம்புவதற்குக் கடினமாக இருக்கும், ஆனால் உடல் ரீதியாக நான் படும் ஒவ்வொரு அவஸ்தையும் என் அமைதியான ஆன்மாவின் சக்தியினால் காணாமல் போகின்றது. இந்த அமைதித் தென்றல் என்னை வருடிச் செல்கிறது. கல்லூரியில் படிக்கும்போது இறுதித் தேர்வை எழுதி முடித்துவிட்டு அதன் முடிவுகளுக்காகக் காத்திருப்பவனைப் போல நான் உணர்கிறேன். நம் தாய்நாட்டின் விடுதலைக்காக நான் எதிர்கொள்ளும் பரிட்சையே இது. அதனால் இதனை நான் திருப்தியுடன் எதிர்கொள்கிறேன். விடுதலை என்ற அற்புதச் செய்திக்காக நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். பகலில் கடுமையாக உழைக்கிறேன். அதனால் இரவுப்பொழுது நெருங்கியதும் நன்றாக உறங்கவும் செய்கிறேன். சில நாட்கள் சில கெட்ட கனவுகள் வந்து என்னைத் தொந்தரவு செய்யும். ஆனால் விழித்துக் கொண்டவுடன் மனம் மீண்டும் அமைதியாக ஆகிவிடும். சில சமயம் நான் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவுடன் கடல் அலைகளின் சாத்தான் ஜன்னல் வழியாக எனக்குக் கேட்கும். தன்னைத் தானே பரிகசித்துக்கொண்டு சிரித்த ராஜனின் கதை பற்றி காளிதாசன் எழுதிய வரிகள் எனக்கு நினைவிற்கு வருகின்றன. நானும் என்னை அதேபோல கற்பனை செய்துகொண்டு சிரித்துக்கொள்கிறேன். கடுமையான பணிகள் ஒரு புறம், அமைதியான மனம் மறுபுறம் என்று இருப்பதினால் இதுபோன்ற சிந்தனைகள் வருகின்றன. இது சிறையில் படும் அல்லல்களினால் ஏற்படும் அயர்ச்சியைப் போக்க உதவுகிறது. அதனால், நானும் நம் சகோதரனும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம், இந்த அடிமை வாழ்வில் வரக்கூடிய எல்லா இன்னல்களையும் ஏற்றுச் சமாளிக்கத் தயாராக இருக்கிறோம்.

உன்னுடைய திருமண வைபவம் குறித்த விபரங்கள் மிக நன்றாக விவரிக்கப்பட்டிருந்தது. அதை எழுதியவர் நல்ல திறன் படைத்தவர் என்றாலும் அவரின் தயக்கமே அவருக்குப் பெரிய தடைக்கல்லாக இருக்கும். அவர் முதலில் சிறிய கதைகள் சிலவற்றை எழுதி அவற்றைப் பிரசுரத்திற்கு அனுப்பவேண்டும். அவை பிரசுரமானால் அவருக்கு அது தைரியத்தை அளிக்கும். உதாரணத்திற்கு அவர் நம் சாதி அமைப்பை எடுத்துக்கொள்ளலாம். அது எத்தகை தீமையை விளைவிக்கின்றது என்பதை விளக்கும் வகையில் அவர் கதை எழுதலாம். மனிதகுலம் தன் மாபெரும் இலக்கை நோக்கி முன்னேற அது எப்படி ஒரு தடைக்கல்லாக இருக்கின்றது என்பதை அதில் விளக்கலாம். அதன் பிறகு அவர் பெரிய கதைகளை எழுதலாம். அவரையும் சகோதரர் யமராஜ் அவர்களையும் நான் விசாரித்ததாகச் சொல்லவும். என்னுடைய பால்ய கால நண்பர்களையும் கல்லூரித் தோழர்களையும் மற்றும் எனக்கு நெருக்கமானவர்கள் எல்லோரையும் நான் விசாரித்ததாகக் கூறவும். என் ப்ரிய ரிஷியின் இருப்பிடம் பற்றித் தெரிந்துகொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. அவன் இன்னமும் அதே அலுவலகத்தில் அதே பணியில் இருக்கின்றானா? அப்புறம் என்னுடைய புதிய நண்பர்களும். எனக்கு அவனைப் பற்றிய நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அவனும் இதேபோல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் என்னிடம் மிகவும் கனிவாக நடந்து கொண்டான். புத்திசாலித்தனமும் சுறுசுறுப்பும் ஒருசேரப் பெற்றவன் அவன். உன் திருமணத்தில் கலந்துகொண்ட பேராசிரியரின் பெயரை நான் மறந்துவிட்டேன். அவருக்கும் என் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மேடம் காமாவிற்கும் என் வந்தனங்கள். போரினால் மேடம் காமாவிற்கு பெரும் இன்னல்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். அவருக்கு என் அன்பினைக் கூறவும். அவருடன் பாரீசில் நான் பார்த்த நண்பர்கள், அதிலும் குறிப்பாக அந்த சந்நியாசி, அவர்கள் என் நினைவில் எப்போதும் இருக்கிறார்கள் என்று கூறவும். நீ அனுப்பி வைத்த படங்களைப் பார்க்கும்போதெல்லாம் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். எனதன்பிற்குரிய இயேசுவாகினி மிகவும் அமைதியாக ஒரு தேவதை போலக் காட்சியளிக்கிறாள். பம்பாய் சிறையில் என்னை அவள் காண வந்தபோது அங்கிருந்த அதிகாரி ஒருவரும் இதே கருத்தைச் சொன்னார். அக்காவிற்கும் சாந்தாவிற்கும் என் அன்பு நிறைந்த விசாரிப்புகளைக் கூறவும். எனக்கு அவர்கள் எல்லோரையும் நினைத்தாலே பெருமையாக இருக்கின்றது. அடுத்த முறை என் ப்ரிய யாமனேவின் கடிதத்தின் மொழிபெயர்ப்பை அனுப்ப மறக்கவேண்டாம். நல்ல குணவதி, அவளுக்கு என் அனுதாபங்கள். அமைதியாக எல்லாவற்றயும் பொறுத்துக்கொள்ளும் அவளுக்குப் பெருமைகள் உண்டாகட்டும். அவளுடைய பெற்றோர்கள் ஆட்சேபித்தால் அவளை பம்பாய் வரச் சொல்லி வற்புறுத்தவேண்டாம். அவர்களுடைய அன்பும் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் மதிக்கப்பட வேண்டும். மற்ற சகோதரர்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்? அம்மாவிற்கும் சித்திக்கும் என்னுடைய வந்தனங்கள்.

அன்புடன்
உங்களுடைய தாத்யா.


Leave a Reply