Posted on Leave a comment

இந்திய இறைமையும் ஈழப் போராட்டமும் – அகரமுதல்வன்


இலங்கைத்தீவில் நிகழ்ந்து வருகிற தமிழ் – சிங்கள இனப்பிரச்சினையென்பது வெறும்
இனப்பிரச்சினை மட்டுமல்ல. அதன் பின்னணியில் தேரவாத பெளத்தமதத்தின் பெருந்தேசியவாத
கோட்பாடு அச்சாக இருக்கிறது. இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து
அப்பாவித்தமிழ் மக்களையும் பெளத்த மதமே கொன்றது. ஈழத்தில் உள்ள தமிழர்கள் என்போர்
இந்துக்கள். அவர்கள் பெளத்த மதத்தின் எதிரிகள். இந்தியாவின் நீட்சியாக
இந்தத்தீவில் மிச்சமிருப்பவர்கள், ஈழத்தில் உள்ள தமிழர்களை அழிக்காமல் போனால்
இலங்கைத்தீவும் இந்தியாவின் (இந்துக்களின்) வசம் ஆகிவிடுமென ஒவ்வொரு சிங்கள
ஆட்சியாளர்களும் தமது ஆட்சிக்காலத்தில் நரபலி ஆடுகிறார்கள்.
இங்கே கூறப்படும் பெளத்த – இந்து வரலாற்றுப் பகையை சிங்கள – தமிழ்
இனப்பிரச்சனையோடு புரிந்துகொள்ளும் இந்தியர் சிலரைத்தான் காணமுடிகிறது. மாறாக
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அவர்களின் அரசியல்பூர்வமான
அலைக்கழிவுகளையும் மிகவும் கொச்சைப்படுத்தி
ப் பேசவல்ல எத்தனையோ
பேரை சந்தித்திருக்கிறேன். இந்திய இறைமையை நேசிக்கவல்லவர்கள் ஈழத்தமிழரின்
போரட்டத்தையும் ஆதரிக்கவேண்டியவர்கள் எனும் கூற்றை அவர்கள் நம்பமறுப்பதும் உண்டு.
இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்களுக்கான விடுதலை என்பது தென்னாசிய பிராந்திய அளவில்
என்றென்றைக்கும் இந்தியாவிற்கு ஒரு பாதுகாப்பு அரண் என்பதை இந்திய அரசியல்
புத்திஜீவிகள் புரியமறுப்பது வேதனை தருகிறது. இதன் இன்னொரு பக்கத்தில் ஈழத்தமிழ்
ஆதரவு சக்திகளாக இந்திய நிலவெளியில் இருக்கும் சில அரசியல் கட்சிகள் – அமைப்புகள்
உள்நாட்டு அரசியலின்பால் இந்திய வெறுப்புவாதத்தை
ப் பேசுவதும் நான்
மேற்கூறிய அவர்களின் நிலைப்பாடுகளுக்கு காரணமாக அமையலாம். ஆனால் இந்த
நொண்டிச்சாட்டை காரணம் காட்டி தமது வரலாற்றுப் பொறுப்பிலிருந்து இந்திய
இறைமையாளர்கள் நழுவமுடியாது.
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த மாபெரும்
மனிதப்படுகொலையை அடுத்து இலங்கையின் அரசியல் களமானது பல்வேறு காட்சிகளை
அரங்கேற்றியிருக்கிறது. இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு யுத்த வெற்றி அளித்த
மகிழ்ச்சி ஒருபுறமெனினும் யுத்தக்குற்றச்சாட்டு இன்னொரு புறத்தில் நின்று
மிரட்டியது. ஆனால் சிங்கள ராஜதந்திரிகள் அதனை சர்வதேச தளத்தில் சரியாக எதிர்கொண்டு
வெற்றியும் கண்டனர். நிகழ்ந்த யுத்தத்தின் உண்மைத்தன்மையை அறிய சர்வதேச விசாரணை வேண்டுமென
மனிதஉரிமை ஆர்வலர்கள் உலக அரங்கில் குரலெழுப்பியபோது படுகொலையின் ராஜதந்திரிகள்
உள்ளக விசாரணைக் குழு அமைத்து அந்தப் பொறியிலிருந்தும் தமது நவீன பெளத்த சிங்கள
மன்னரான மஹிந்த ராஜபக்ச உட்பட அனைவரையும் காப்பாற்றினர்.
இலங்கையின் நவீன சிங்கள பெளத்த வரலாற்றில் இத்தனை லட்சம் தமிழர்களை
(இந்துக்களை) முள்ளிவாய்க்காலில் அழித்த மஹிந்த ராஜபக்சவே புதிய துட்டகாமினியென*
எத்தனையோ பிக்குகள் மீண்டும் மீண்டும் சொல்லிவருகின்றனர். பெளத்த சிங்களவர்களின்
கருத்துப்படியே மஹிந்த ராஜபக்ச துட்டகாமினி என்றால் ஈழத்தமிழர்களின் நவீன வரலாற்றில்
சோழநாட்டைச் சேர்ந்த எல்லாளமன்னன்* பிரபாகரன் அன்றி வேறு எவர். ஆக
பிரபாகரனையும் அவரது படைபலங்களையும் வெற்றிகொண்டு அவர் தேசத்து மக்களைக்
கொன்றுகுவிப்பதானது இந்துக்களான சோழ வம்சத்தை வீழ்த்துவதற்கு நிகரானது என தேரவாத
பெளத்தமனம் தனது வெற்றிவாத உரைகளில் சுட்டிக்காட்டுகிறது. ஆயின் இப்படியொரு
நேரடியான பச்சைப்படுகொலை முள்ளிவாய்க்காலில் நிகழும் போது இந்திய இறைமையாளர்கள்
அதற்கு எதிராக ஏன் அணிதிரளவில்லை? அவர்களை எது தடுத்தது?
இவ்வளவு வெளிப்படையாக உலகின் பல்வேறு ஆயுத சக்திகளை ஒன்று திரட்டி இந்து சமுத்திரத்தில்
கொல்லப்பட்ட லட்சோப லட்ச தமிழ் மக்களின் நீதிக்காக ஏன் அவர்கள் குரல்
எழுப்பவில்லை? சைவ சமயத்தின் நால்வர்களில் இருவரான சம்பந்தரும், சுந்தரரும் பாடிய
திருக்கேதீஸ்வரத்தையும், திருக்கோணேஸ்வரத்தையும் கொண்டிருக்கும் அந்த மண்ணில்
கோவிலை வழிபடும் உரிமைகூட இன்று தமிழர்களுக்கு இல்லாமல் போயிருப்பது குறித்து ஏன்
இங்குள்ள ஆதீனங்கள் கூட பேசுவதில்லை. இந்த மர்மமோ என்னை நெடுநாளாய்
தீண்டிக்கொண்டேயிருக்கிறது.
இன்றைய சூழலில் ஈழத்தமிழர்களுக்கு நிம்மதியான ஒரு வாழ்வு கிடைத்து விட்டதாக
ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மஹிந்த
ராஜபக்ச நவீன துட்டகாமினியாக தேர்தலில் தோல்வியுற்று ரணில் – மைத்திரி அரசு
பதவிக்கு வருகையில் இலங்கைத்தீவெங்கும் சமாதானமும் அமைதியும் திரும்பியதாக
ப் பல உலகநாடுகளின்
தலைவர்கள் வாழ்த்தினார்கள். அதற்கு ஏற்ப புதிய அரசு தன்னைத்தானே  ‘நல்லிணக்க அரசு’ என அழைத்துக்கொண்டது.
தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதில் தமக்கு எந்தத் தடையுமில்லையென
தேர்தல் பிரசார மேடைகளில் முழங்கிய ரணில் – மைத்திரி ஆகிய இருவரும் தேர்தல்
முடிவுகளுக்கு பின்னர் தமிழர்களுக்கு அரசியல் தீர்வா என அதிர்ச்சியடைந்தனர். ஒரு
புத்த பிக்கு மிக அண்மையில் பேசிய காணொளி ஒன்று வெளியானது. (தமிழர்கள்) நீங்கள்
இந்துக்கள்தானே, இந்தியாவிற்கே போங்கள் என்கிறார். கோவிலுக்குரிய காணிகளில்* விகாரைகளை
ஒருபுறம் பிக்குகள் எழுப்புகின்றனர். மறுபுறம் இந்து மயானங்களை அழித்து மசூதிகளை
எழுப்புகின்றனர் இலங்கை அரசின் கூட்டாளிகளான இஸ்லாமிய அரசியல்வாதிகள்.
மாபெரும் போரழிவுக்குப் பின்னர் வறுமையும் வாழ்வின் மீதான பிடிப்பின்மையும் உளவியல் சிதைவுகளும்
சனங்களின் மத்தியில் நிரம்பிக்கிடகின்றன. அப்படியானதொரு சூழலை
த் தமக்கு சாதகமாகப்
பயன்படுத்திக்கொள்ளும் ஏராளமான கிறிஸ்துவ சபைகள் மதமாற்ற நடவடிக்கைகளில்
ஈடுபடுகின்றன. போரினால் அதிகமாக பாதிக்கப்பட்ட கிராமங்களை இலக்குவைத்து நடக்கும்
இந்தச் செயற்பாட்டை அருவருக்க வேண்டியிருக்கிறது.
கிளிநொச்சியை ஒட்டிய கிராமமொன்றில் வாழும் எனது பள்ளித்தோழி, எறிகணை வீச்சில்
இரண்டு கால்களையும் இழந்தாள். அவளைச் சந்தித்த மதமாற்ற ஊழியர்கள் உரையாடிய விதத்தை
என்னோடு பகிர்ந்திருந்தாள். ஆண்டவர் ஒருவரே மீட்பர். அவரே எம்மை இந்த
பாதாளத்திலிருந்து ஒளிவீசும் மலைக்கு
க் கூட்டிச்செல்வார் என
பிரசங்கித்திருக்கிறார்கள். அவளோ அவர்களை
த் திட்டிப் பேசி
வீட்டிலிருந்து வெளியேற்றியிருக்கிறாள்.
யுத்த காலத்திற்குப் பின்னரான இந்தக்கால கட்டத்தில் தமிழர்கள் எதிர்கொண்டிருக்கும் இப்படியொரு
மும்முனைச்சிக்கலை கவனத்தில் கொள்ளவேண்டும். சைவக் கோவில்களை அழித்து விகாரைகளும்,
மசூதிகளும் எழும்பியாடும் இந்தப் பேரழிவையாவது தடுக்கவேண்டாமா? நாதியற்று நிற்கும்
ஈழத்தமிழர்களை நான் கூறும் இந்து வேரினால் கூட சொந்தம் கொண்டாட முடியாதா? ஈழத்தமிழர்
விடயத்தில் கடந்தகாலத்தின் காங்கிரஸ் இந்தியா கொண்டிருந்த நிலைப்பாட்டையா நிகழ்கால
பா.ஜ.க இந்தியா பேணப்போகிறது?
ஈழத்தமிழ் அறிவுப்புலத்திற்கும் – இந்திய அறிவுப்புலத்திற்குமான ஒரு விரிவான
உறவாடல் அரசியல் ரீதியாக உருவாகாமல் இருப்பது ஆபத்தானது. ஈழத்தமிழர்களையும்
அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளையும், உரிமைக்கான அபிலாஷைகளையும் இந்திய நிலவெளியெங்கும்
எடுத்தியம்ப வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இங்கு அதற்கான
சாத்தியங்கள் மிகச்சவாலாக இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது
கட்டியெழுப்பபட்டிருக்கும் பொய்களும், புனைகதைகளும், அவதூறுகளும் ஏராளமானவை.
மேலும் இந்திய இறைமைக்கு எதிரானவரே பிரபாகரன் என்ற பொய்யான பிம்பமும்
உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு – இந்தியா எனும் உள்நாட்டு அரசியல்
வாக்குவாதங்களில் ஈழ அரசியல் பேசப்படுவதும் இதற்கு
க் காரணமாக
இருக்கிறது. பிரபாகரனின் அரசியல் நிலைப்பாடு இந்திய இறைமைக்கு எதிராக இருந்ததாக
வரலாற்றில் ஓரிடமும் இருந்ததில்லை. ராஜீவ்காந்தியின் அமைதிப்படை காலகட்டத்தில்
நடந்த இந்திய – புலிகள் மோதல் கூட அந்த நிலைப்பாட்டில் தோன்றியதில்லை என்பது
யாவரும் அறிந்தவொன்று. நான் மேற்கூறிய கருத்தினை உறுதிப்படுத்தும் வகையில் தமிழீழ
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின்
2008ம் ஆண்டு மாவீரர் தின உரையின் சிறிய பகுதியை கீழே இணைக்கிறேன்.
“எமது விடுதலை இயக்கமும் சரி, எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும்,
எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.
இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்து விடவே சித்தமாக
இருக்கிறோம். எமது நல்லெண்ணெத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக்
கட்டியெழுபுவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது
மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு எம்மீதான தடையை
நீக்கி எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென அன்போடு
வேண்டிக்கொள்கிறேன்.
இன்று இந்தியத்தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு
அடங்கிக் கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.
எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து
வருகின்ற இந்தக் கால மாற்றத்திற்கு ஏற்ப இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது
உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம். அன்று இந்தியா
கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது
போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.
இனவாத சிங்கள அரசு தனது கபடநாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய
இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்துவிட்டது. இந்தப்
பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன்
ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது. நாம்
எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய
அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும் இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக்
கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச்சக்தியாகவே எமது மக்கள் என்றும்
கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்
சினை விடயத்தில்
இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும்
எதிர்பார்க்கிறார்கள்
. ”
இந்த உரையின் கடைசிவரியில் கூறப்படுவதைப் போல இந்தியப் பேரரசு சாதகமான
முடிவுகளை எடுக்குமென எதிர்பார்த்த – எதிர்பார்க்கும் ஈழத்தின் மூன்றாவது
தலைமுறையாய் நானிருக்கிறேன். இப்போதும் இந்தியத் தேசம் ஈழத்தமிழர்களுக்கு சாதகமான
முடிவுகளை எடுக்காது போனால் இலங்கைத்தீவில் மிச்சமிருக்கும் தமிழர்களும் தமது
பண்பாட்டு அடையாளங்களோடு அழிக்கப்பட்டு விடுவார்கள்.
மேலும் தனது தென்முனையிலும் ஒரு பீஜிங்கை எதிர்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம்
இந்தியாவிற்கு இன்றே தோன்றியிருக்கிறது. இராணுவ ரீதியாக புலிகள் தோற்கடிக்கப்பட்ட
பின் சிங்களவர்களிடமிருந்து இலங்கைத்தீவை சீனா கைப்பற்றியது. இந்து சமுத்திரத்தின்
கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாக
க் காணப்படும்
திருகோணமலையை சீனா தனது வசமாக்கியுள்ளது. அம்பாந்தோட்டையில் பிரமாண்ட துறைமுகத்தை
அமைத்துள்ளது. இந்தியப்பெருங்கடலை தனது ஆளுகைக்குள் கொண்டுவர விரும்பும்
சீனப்பேரரசுவிற்கு ஆதரவான இலங்கை – பெளத்த சிங்கள ஆட்சியாளர்களை இந்தியா எவ்வாறு
நேச சக்தியாக கருதுகிறதோ?
இன்றைக்கு தென்னிலங்கையில் சீனாவின் நிதியுதவியினால் நிறுவப்பட்டிருக்கும்
தாமரைக்கோபுரம் வெறுமென உயரத்தில் மட்டுமே கவனம் கொள்ளப்படவேண்டியதில்லை. சீனாவின்
ஆதிக்கத்தையும் தனது இந்தியப் பெருங்கடல் கண்காணிப்பையும் அது வெளிப்படையாக
உணர்த்தி நிற்கிறது. பெளத்த அரசுகள் ஒன்றுபட்டு இந்தியப்பெருங்கடலின் அரசியலை
தென்னாசியாவில் நிர்மாணிக்க துடிக்கின்றன. இது உட்புறமாக மட்டுமல்ல
வெளிப்புறமாகவும் இந்தியாவிற்கான அச்சுறுத்தலாக அமைகிறது. மேலும் இந்தியாவின்
நேரடியான அரசியல் – இராணுவ எதிரியான பாகிஸ்தானோடு இலங்கைக்கு இருக்கும் நெருக்கம்
இந்திய – பாகிஸ்தான் யுத்தகால வரலாற்றிலேயே இருக்கிறது. இந்தியாவை
த் தாக்கவல்ல
பாகிஸ்தானிய போர்க்கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பில் நிறுத்திவைக்கப்பட்டதை
இந்தியர்கள் மறந்தாலும் இந்திய நவீன வரலாறு மறக்காது. எதிரிக்கு எதிரி நண்பன்
என்கிற வகையில் இந்தப் பிராந்தியத்தில் சீனா – பாகிஸ்தான் உறவு கூட இந்தியாவிற்கு
எதிரான புள்ளியில் வலுப்படுத்தப்படலாம்.
ஆனால் இலங்கைத்தீவிலுள்ள அனைத்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும்
தமிழர்களுக்குச் சொந்தமானது. அப்படியான முக்கியத்துவம் வாய்ந்தவர்களை அதிகாரமற்று
அல்லற்படும் நிலைக்கு காலம் இட்டுச்சென்று இருக்கிறது. புலிகளுக்கு எதிரான இறுதி
யுத்தத்தில் பங்கெடுப்பதற்கு இந்திய காங்கிரஸ் அரசுக்கு
த் தனிப்பட்ட
பகைமையிருந்ததைப் போலவே பாகிஸ்தானுக்கும் இருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து
புலிகள் இயக்கத்தினரால் இஸ்லாமியர்கள் ஒரேநாளில் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை இலங்கை
அரசாங்கம் பாகிஸ்தானின் காதில் மிகவலுவாகச் சொன்னது. அதாவது தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கம் என்பது ஒரு இந்து
த் தீவிரவாத அமைப்பு, இந்திய நீட்சி கொண்டவர்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு
எதிரானவர்கள், அவர்களை அழிக்கவேண்டுமென கொழும்பு மீண்டும் மீண்டும் ராஜதந்திர
வலியுறுத்தலை
ச் செய்தது. பாகிஸ்தானையும் இந்தியாவையும் ஒரே குடையின் கீழ் திரட்டி ஒரு
யுத்தவெற்றியைப் பெற்ற சிங்கள பெளத்த சாதுரியத்தை எண்ணிப்பார்ப்பது சிவனின்
அடியையும் முடியையும் காணத்துடிப்பது மாதிரியாகிவிடும்.
இந்த சம்பவங்களின் நீட்சியாகவே பாகிஸ்தானின் இன்றைய பிரதமர் தனது இரண்டு
உரைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளை இந்துத் தீவிரவாத இயக்கமென
அடையாளப்படுத்துகிறார். இம்ரான்கானின் இந்தக்கூற்றில் இருக்கக் கூடிய
அடையாளப்படுத்தல் எந்த நோக்கம் கொண்டது என்பனை நிதானித்து
க் கண்டடையவேண்டியுள்ளது.
உலகம் பூராக மனித உயிர்களை அச்சுறுத்திவருகிற இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதன்
பொருட்டும் ‘புலிகள் இந்து
த் தீவிரவாதிகள்’ என்று சொல்லி நீர்த்துப்போகச் செய்யமுடியாது. இந்த ஆண்டின்
ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு
த் தாக்குதலின் பிறகே
இம்ரான்கான் இவ்வாறு குறிப்பிடுவதை
த் தொடங்கியிருக்கிறார். புலிகளிற்குப் பிறகான ஒட்டுமொத்த
இலங்கைத்தீவின் அரசியலில் ஈழத்தமிழர்களும் இல்லை, இந்தியாவும் இல்லை என்பது
உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இலங்கையின் கிழக்கு மாகாணம் கிட்டத்தட்ட முஸ்லிம்
நாட்டைப் போன்று பச்சைநிறத்தினால் சூழப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் வைத்தே
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை அணுகவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை
அழிப்பதற்கு இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட மறைமுக ஜிகாத்துக்கள் ஒரே நாளில்
இலங்கையை குண்டுகளால் கோரமாக உலுக்கினர். வீடு வீடாகத் தேடி ஆயுதக்கிடங்குகளை
கண்டுபிடித்தனர்.
இந்தச் சம்பவத்தை கூர்ந்து அவதானித்தால் இலங்கைத்தீவில் தமிழர்களின் கதி
என்னவென்று விளங்கும். ஒருபுறம் சீன – சிங்கள பவுத்த ஆதிக்கம். இன்னொரு புறம்
இஸ்லாமிய அடிப்படைவாத எழுச்சி – மறுபுறம் கிறிஸ்துவ மதமாற்ற நடவடிக்கைகள் என ஒரு
குழம்பிய சித்திரம் போல ஆகியிருக்கிறது.
 
(கொலம்ப மேதாலங்க தேரர்)
சென்ற மாதத்தின் இறுதி நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிகழ்ந்திருக்கும்
ஒரு சம்பவம் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது. தமிழர்களின் பிரதேசமான
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ளது நீராவியடிப்பிள்ளையார் கோவில். அந்தக் கோவில்
வளாகத்திலேயே மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் புத்தவிகாரை கட்டப்பட்டது. ‘குருகந்த
புராண ரஜமகா’ என்
று அந்த விகாரைக்குப் பெயரிடப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பெளத்த பிக்குவான
கொலம்ப மேதாலங்க தேரர் புற்றுநோய் காரணமாக கொழும்பில் காலமானார். ஆனால் அவரின்
உடலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்திலேயே எரியூட்டப்படவேண்டுமென சிங்களப்
பவுத்த பெருந்தேசியவாத பிக்குகள் முல்லைத்தீவிற்கு
ப் படையெடுத்தனர்.
தமிழ்ச் சனங்கள் அதனை ஏற்க மறுத்தனர். நாம் வணங்கும் கோவில் வளாகத்தில் எப்படி
எரியூட்ட முடியுமென வாதாடினார்கள். நீதிமன்றம் எரியூட்டுவதற்கு வேறொரு இடத்தை
ப் பரிந்துரைத்து
தீர்ப்பு வழங்கியது. ஆனால் தேரவாத பெளத்தத்தின் மகாவம்சம் மனவுலகம் அதனை ஏற்க
மறுத்து, கோவிலை ஒட்டியுள்ள அதே சூழலில் அந்தப் பிக்குவின் உடலை எரியூட்டுகிறது.
நான் குறிப்பிடும் இந்தக் களேபரங்கள் இணையத்தில் காணொளியாகவே இருக்கிறது.
ஆனால் இதற்கு எந்தக் குரலையும் காட்டாது மழையில் நனைந்த கோழியைப் போல ஒதுங்கி நிற்கிறது
நல்லிணக்க அரசு. பிக்குகள் சனங்களை மிரட்டுகின்றனர். சனங்களை நோக்கி சிங்களத்தில்
வசைபாடுகின்றனர். ஆகம – பாஷவ – ரட்ட (ஒருமதம், ஓர் இனம், ஓர் அரசு) என்று
மிரட்டுகின்றனர். இந்துக்கள் வணங்கக்கூடிய எத்தனை ஆலயங்கள் இலங்கைத்தீவு எங்கும்
அழிக்கப்பட்டிருக்கிறது என இந்துத்துவர்கள் கணக்கெடுத்தால் இதன் கோரமுகம்
புரியும்.
இன்றைய இந்தியப் பேரரசு இப்படியான காரியங்கள் நடப்பதைத் தடுக்கவேண்டும். இந்த
அரசினால் முடியாது போனால் எந்த அரசினாலும் முடியாது என்பது எனது கருத்து. நாம்
கேட்பது நிம்மதியான வாழ்க்கையைத்தானே அன்றி வானின் நட்சத்திரங்களை அல்ல. நாம்
கேட்பது எங்கள் பூர்விக நிலத்தை – எங்கள் கடலை – எங்கள் காற்றை – எங்கள் கடவுளரை –
எங்கள் கோவிலை – எங்கள் புன்னகையை – எங்கள் அச்சமின்மையை – எங்கள் விடுதலையை!
இதன்பொருட்டு மேற்கூறியவற்றின் வந்தடைவாக ஈழத்தமிழர் விடயம் சார்ந்து இந்திய
அறிவுஜீவிகள் ஒரு சரியான புரிதலுக்கு வரவேண்டும். எழுமாத்திரமாக ஒரு பொழுதும்
ஈழத்தை அணுகாதிருப்பதும் ஒருவகையில் ஈழத்தமிழருக்கு செய்யும் உதவியாகவே நான்
பொருள் கொள்வேன். அறிவார்ந்த புத்திபூர்வமான சக்திகள் ஒன்றாக சேர்ந்து ஈழத்தமிழர்
பிரச்
சினையை இந்திய நிலவெளியெங்கும் அறிமுகப்படுத்தவேண்டும் என்பதே இந்தக்
கட்டுரையின் நோக்கம்.
*துட்டகாமினி- ஒரு சிங்கள மன்னன்.
 *எல்லாளன் – சைவத் தமிழ் மன்னன்

Posted on Leave a comment

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் – தமிழில்: ஹரன் பிரசன்னா



முன்னாள் பிரதமர் ராஜீவுக்கு ஜக்மோஹன் எழுதிய கடிதம். ஜக்மோஹன்
ஜம்மு காஷ்மீரின் கவர்னராக இரண்டு முறை பதவி வகித்தவர். இந்தக் கடிம் ஜக்மோஹனால் ஏப்ரல்
20, 1990 அன்று ராஜீவுக்கு எழுதப்பட்டது. ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை இக்கடிதம் மிகத்
துல்லியமாக அன்றே வெளிப்படுத்தியது என்ற குறிப்புடன் ‘இந்திய எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை
இந்தக் கடிதத்தை வெளியிட்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் இங்கே.
காஷ்மீரில்
பாரத மாதாவைக் கைவிட்டீர்கள்!
அன்புள்ள ஸ்ரீ ராஜீவ் காந்தி,
April 21, 1990
இந்த திறந்த மடலை உங்களுக்கு எழுத வைத்துவிட்டீர்கள். கட்சி
அரசியலில் இருந்து தொடர்ந்து நான் விலகியே இருந்து வந்திருக்கிறேன். இருக்கும் கொஞ்சம்
திறமையையும் ஆற்றலையும், சில ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்ய பயன்படுத்தவே விரும்புகிறேன்.
சமீபத்தில் மாதா வைஷ்ணவோ தேவி கோவில் வளாகத்தை மேம்படுத்த உதவியது போல. இப்படிச் செய்து
நம் கலாசார மறுமலர்ச்சிக்கு உதவவில்லை என்றால், விரைவாக அழிந்துவரும் இதுபோன்ற அமைப்புகளைக்
காப்பாற்ற முடியாமலேயே போய்விடும். இந்த அமைப்புகளின் உன்னதமான நோக்கங்கள் (அவை சட்ட
அல்லது நீதி அமைப்புகளாக இருந்தாலும்) அதன் சாரத்தை இழந்துவிடும். நீதியின் ஆன்மாவும்
உண்மையும் இன்றைய அரசியல் சூழலால் இல்லாமல் ஆக்கப்பட்டுவிடும்.
நீங்களும் உங்கள் நண்பர் டாக்டர் ஃபரூக் அப்துல்லாவும் காஷ்மீர்
தொடர்பாகப் பொய்யான ஒரு சித்திரத்தை வரையப் பார்க்கிறீர்கள். உங்கள் கட்சியின் மூத்த
உறுப்பினர்கள் ஷிவ் ஷங்கர் மற்றும் என்.கே.பி.சால்வே போன்றவர்கள், வெளிப்படையாக உங்கள்
அறிவுறுத்தலின் பேரில், எனக்கெதிரான மனநிலையை உருவாக்க நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
துர்க்மன் கேட்டில் 14 வருடங்களுக்கு முன்பு நடந்த பழைய நிகழ்ச்சியைக் கையில் எடுக்கிறார்
ஷிவ் ஷங்கர். என்.கே.பி.சால்வே எனது பேட்டியை எடுத்துக்கொண்டு, எனக்கு எதிராக மதவாதக்
குற்றச்சாட்டுகளை வாரி இறைக்கிறார். அப்படி ஒரு பேட்டியை நான் தரவே இல்லை!
மணி சங்கர் ஐயரும் சில பத்திரிகைகளில் தன் விஷக் கருத்துகளைப்
பதிவு செய்கிறார். ஆனாலும், இந்தத் தொடர்ச்சியான மூர்க்கமான தவறான தகவல் அம்புகளுக்கு
பதில் அளிக்காமல் அமைதியாகவே இருந்தேன். ஒட்டுமொத்தமாகப் பொய்களைச் சொன்ன சில பத்திரிகைகளுக்கு
மட்டும் சரியான தகவல்களை எப்போதாவது எழுதினேன். எனது நோக்கம், இந்த நாட்டுக்கும் வரலாற்றுக்கும்
நான் செய்யவேண்டியதாக நம்பும் கல்வி மற்றும் வரலாற்று ரீதியிலான புத்தகத்தில் மட்டும்
இவற்றை எழுதினால் போதும் என்பதுதான்.
ஆனால், ராஜஸ்தான் தேர்தல் கூட்டங்களில் நீங்கள் பேசியவற்றின்
சில பகுதிகளை என் நண்பர்கள் காட்டினார்கள். இதுதான் எல்லை என்று அப்போதுதான் நினைத்தேன்.
உங்கள் திரிபுகளுக்கான நோக்கங்களைச் சொல்லாவிட்டால், நீங்கள் என்னைப் பற்றிய தவறான
எண்ணத்தை இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது நாடு முழுக்கப் பரப்புவீர்கள் என்பதை உணர்ந்தேன்.
எச்சரிக்கை மணி
1988 தொடக்கம் முதலே, காஷ்மீரில் சூழத் துவங்கி இருக்கும் புயல்
பற்றிய ‘எச்சரிக்கை மணி’களை உங்களுக்கு அனுப்பத் துவங்கி விட்டேன் என்பதை நினைவுறுத்த
வேண்டுமா என்ன? ஆனால் உங்களுக்கும், உங்களைச் சுற்றி உள்ள அதிகார வர்க்கத்தினருக்கும்,
இந்த எச்சரிக்கையைப் பார்க்க நேரமோ ஆர்வமோ இதுகுறித்த தரிசனமோ இல்லை. இவற்றைப் பொருட்படுத்தாமல்
இருப்பது, உண்மையான வரலாற்றுப் பரிமாணத்துக்குத் தீங்கிழைப்பது என்று அவர்களுக்குத்
தெளிவாகத் தெரியும்.
உதாரணமாக சில எச்சரிக்கை மணிகளை இங்கே சொல்ல விரும்புகிறேன்.
ஆகஸ்ட் 1988ல், வெளிப்படையான மற்றும் மறைமுகமான சூழலை ஆய்வு செய்த பின்னர், இப்படித்
தொகுத்துச் சொல்லி இருந்தேன்: “குறுங்குழு மதவாக்காரர்களும், அடிப்படைவாதிகளும் அதிகம்
வேலை செய்கிறார்கள். நாசவேலைகள் அதிகரிக்கின்றன. எல்லை தாண்டி நடக்கும் விஷயங்களின்
நிழல்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. இன்னும் நிறைய நடக்கலாம்.”
ஏப்ரல் 1989ல் உடனடி நடவடிக்கை வேண்டி தீவிரமாகக் கெஞ்சினேன்.
நான் சொன்னேன்: “சூழல் மிக வேகமாக மோசமாகிக்கொண்டிருக்கிறது. இனி மீட்கவே முடியாது
என்னும் ஒரு புள்ளியைக் கிட்டத்தட்ட அடைந்துவிட்டது. கடந்த ஐந்து நாள்களாக, பெரிய அளவில்
தீவைத்தல், துப்பாக்கிச் சூடு, வேலை நிறுத்தம், உயிரிழப்பு என வன்முறை தலைவிரித்தாடுகிறது.
நிலைமை கை மீறிப் போய்விட்டது. ஐரிஷ் பிரச்சினையைப் பற்றிப் பேசும்போது பிரிட்டிஷ்
பிரதமர் டிஸ்ரேலி சொன்னார், ‘முதல்நாள் உருளைக் கிழங்கு, மறுநாள் போப்’ என்று. காஷ்மீரில்
இன்று இதே நிலைதான். நேற்று மக்பூல் பட், இன்று சத்தானின் வேதங்கள் (சாத்தானிக் வெர்சஸ்).
நாளை அடக்குமுறை நாளாக இருக்கும். பிறகு வேறொன்றாக இருக்கும். முதலமைச்சர் தனித்து
விடப்பட்ட தீவு போல் இருக்கிறார். ஏற்கெனவே அவர் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும்
செயலிழந்துவிட்டார். ஒருவேளை அரசியலமைப்பு ரீதியிலான சடங்குகள் செய்யவேண்டியது மட்டுமே
பாக்கியாக இருக்கலாம். அவர் மீது சேறு நிறைந்திருக்கிறது. அவரை ஆதரிப்பது ஆபத்தானது.
இவரது தனிப்பட்ட பிறழ்ச்சிகள்கூட இவரது பொது வாழ்க்கையை நாசப்படுத்தி இருக்கிறது. இந்தச்
சூழல், செயல்திறன் மிகுந்த தலையீட்டை எதிர்நோக்கி நிற்கிறது. இன்றே செயல்படுவது சரியானது.
நாளை என்பது தாமதம் என்றாகிவிடக்கூடும்.”
துணைவேந்தர்களின் பெருக்கம்
மே மாதத்தில் மீண்டும், வளர்ந்துகொண்டே போகும் என் தவிப்பை வெளிப்படுத்தி
இருந்தேன். “இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு துணைவேந்தரின் வெற்றியிலும்
அவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அவர்களது பகைமை மத்திய அதிகாரிகளுக்கு எதிராகத்
திருப்பிவிடப்படுகிறது.” ஆனால் நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை. உங்களது செயலின்மை மர்மமாக
இருந்தது. இதற்கு இணையான இன்னொரு மர்மம், இரண்டாம் முறையாக நான் நியமிக்கப்பட்டபோதும்
இருந்தது. எப்படி நான் சட்டென மதவாதி ஆனேன்? முஸ்லிம் எதிரியானேன்? இன்னும் என்னதான்
இல்லை?
ஜூலை 1989ல் நான் ராஜினாமா செய்தபோது, ஒரு வெறுப்பும் இல்லை.
தென் டெல்லியின் நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிடவேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள்.
பெரும்பாலும் நம் நாட்டில் நிலவிய அரசியல் சூழல் குறித்த பொதுவான வெறுப்பு எனக்கு இருந்ததால்,
அந்த வாய்ப்பை நான் மறுத்தேன். ஜம்மு காஷ்மீர் கவர்னராக நான் இரண்டாவது முறையாகப் பதவி
ஏற்பதில் உங்களுக்கு கருத்து மாறுபாடு இருக்குமானால் நீங்கள் நேரடியான அணுகுமுறையின்
மூலம் என்னைப் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லி இருக்கலாம். கிட்டத்தட்ட இனி திரும்பவே
முடியாது என்னும் புள்ளியை அடையும் முன்பாக நான் ஒருமுறைக்கு இரண்டு முறை ஆலோசித்திருப்பேன்.
பொய்யான குற்றச்சாட்டுகளை என் மீது சொல்லவேண்டிய அவசியம் உங்களுக்கு வந்திருக்காது.
(நன்றி:
Indian Express)
ஒருவேளை நீங்கள் உண்மையையும் எப்போதும் ஒரேபோல் இருப்பதையும்
நல்ல குணங்களாகக் கருதாமல் இருந்திருக்கலாம். நம் தேசியச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்
சத்யமேவ ஜயதே என்னும் வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் என்று நினைத்திருக்கலாம். அந்த
வார்த்தைகள், நம் நாட்டை சரியான பாதையில் வழிநடத்தி நியாயமான வழிகளில் உண்மையான இந்தியாவை
உருவாக்க உதவும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை அதிகாரம்
மட்டுமே உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். அதிகாரம், எந்த வழியிலும் சரி, என்ன
விலை கொடுத்தாலும் சரி!
நான் இங்கே வருவதற்கு முன்பும் பின்பும் நிலவும்
சூழ்நிலைகளின் நிதர்சனத்தை, நீங்களும் உங்கள் நண்பர்களும் தவறான வழியில்
திரிக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், ஜனவரி 19, 1990ல் கவர்னர் ஆட்சி
அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, இங்கே ஒட்டுமொத்தமாக மனரீதியிலான ஒப்புதல்
இருந்தது. டிசம்பர் 8, 1989ல் டாக்டர் ருபையா சயீத்தின் கடத்தலுக்கு ஒரு நாள்
முன்பு கூட, இந்த மாநிலத்தை பயங்கரவாதக் கழுகு முழு மூர்க்கத்துடன் சுழன்றடித்தது.
11 மாதத்தில் 351 வெடிகுண்டு வெடிப்புகள் உட்பட 1600 வன்முறைச் செயல்கள் அரங்கேறின.
1990 ஜனவரி 1 முதல் ஜனவரி 19 வரை, இங்கே 319 வன்முறைச் செயல்கள், 21 தாக்குதல்கள்,
114 வெடிகுண்டு வெடிப்புகள், 112 தீ வைப்புகள், 72 கும்பல் வன்முறைகள் நிகழ்ந்தன.
நாசவேலைக்காரர்கள் இங்கே அதிகார அமைப்பை முற்றிலும்
கைப்பற்றியதைக் கவனிக்க ஒருவேளை நீங்கள் அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம்.
உதாரணமாக, உளவுத்துறை தந்த துப்பை அடிப்படையாகக் கொண்டு ஷாபிர் அஹ்மது ஷா
செப்டம்பர் 1989ல் கைது செய்யப்பட்டபோது, ஸ்ரீநகர் உதவி கமிஷ்னர் அவரைக் காவலில்
வைக்கத் தேவையான வாரண்ட்டில் கையெழுத்திட மறுத்துவிட்டார். ஆனந்த்நாக் என்னும்
உதவி கமிஷ்னரும் இதே போன்றே நடந்துகொண்டார். அதோடு, மாநிலத்தின் வழக்கை நடத்த
அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தனது பொறுப்பை அரசாங்கத்திடமும்
கூடுதல் அட்வகேட் ஜெனரலிடமும் தள்ளிவிட அவர் முயன்றார். அவர்களும் ஆஜராகவில்லை!
 
நவம்பர் 22 1989ல் நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டெடுப்பின்போது
என்ன நடந்தது என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? சில வாக்குச்சாவடிகளுக்கு முன்பு ‘வாக்களிப்பவருக்கு
இது தரப்படும்’ என்ற அறிவிப்புப் பலகையுடன் அதனருகில் தொலைக்காட்சிப் பெட்டிகள்
வைக்கப்பட்டிருந்தன. டாக்டர் ஃபரூக் அப்துல்லாவின் நிர்வாகத்தைச் சேர்ந்த எவரும்,
அதிகாரத்தை மீறிச் செயல்படும் இந்த அறிவிப்பை நீக்க எந்த ஒரு நடவடிக்கையையும்
எடுக்கவில்லை.
இணை அமைச்சராக இருந்த சேர்ந்த குலாம் ரசூல் கர்-ரின் சொந்த
ஊர் சோபோர் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதேபோல், லெஜிஸ்லேடிவ்
கவுன்சிலின் சேர்மனான ஹபிபுல்லாவுக்கும், முன்னாள் நேஷனல் கான்ஃபரன்ஸ் எம்.பியும்
இணை அமைச்சருமான அப்துல் ஷா வகிலுக்கும் இதுதான் சொந்த ஊர். இருந்தாலும் சோபோர்
நகரத்தில் ஐந்து வாக்குகள் மட்டுமே பதிவாகின. அன்றைய காங்கிரஸ் (ஐ) அமைச்சர்
இஃப்திகார் ஹுசைன் அன்சாரியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும்
பட்டாணில் ஒரு வாக்கு கூடப் பதிவாகவில்லை. இதுதான் இந்த மாநிலத்தைச் சேர்ந்த
உங்கள் தலைவர்களின் ஈடுபாடும் நிலைப்பாடும். இருந்தும் நீங்கள் நினைக்கிறீர்கள்,
நாச வேலையையும் தீவிரவாதத்தையும் இத்தகைய அரசியலாலும் நிர்வாகத்தாலும் எதிர்கொள்ள
முடியும் என்று.
 
நம்பிக்கை இழந்த காவல்துறை 
அந்த சமயத்தில் காவல்துறை நம்பிக்கை இழந்தது. உளவுத்துறை
விரைவாக செயலற்றுப் போனது. டோபாக் (TOPAC) போன்ற நாசவேலைகள் குறித்த செய்திகளை
சேவை அமைப்புகளில் ஊடுருவி இருந்தவர்கள் கொண்டு வந்தபோது, டாக்டர் அப்துல்லா
வெளிநாடு போய்க்கொண்டிருந்தார். பயங்கரமான தீவிரவாதிகள் 70 பேரை விடுதலை
செய்துகொண்டிருந்தார். இவர்கள் பயங்கரமான ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி
பெற்றவர்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகளோடு தொடர்பில்
இருந்தவர்கள். பாகிஸ்தானுக்குச் செல்லவும் வரவும் உதவும் குறுக்கு வழிகளை
அறிந்தவர்கள். தலைமை நீதிபதியால் கண்காணிக்கப்படும் மூன்று நபர்கள் அடங்கிய
அறிவுறுத்தல் மன்றம் இவர்களைக் காவலில் வைக்க ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
 
அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் விடுதலை செய்ததால்,
நாசவேலை மற்றும் தீவிரவாத வலைப்பின்னலில் அவர்களால் முக்கியமான பதவிகளைப் பிடிக்க
முடிந்தது. இதனால் தீவிரவாதத்தின் சங்கிலித் தொடர் ஒன்று முழுமையானது. இவர்கள்
மீண்டும் பாகிஸ்தான் போய் அங்கிருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து கொலைகளிலும்
ஆள்கடத்தல்களிலும் மற்ற தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட்டார்கள்.
விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவனான, கேண்டர்பாலைச் சேர்ந்த மொஹமத் தௌத் கான், அல்
பகர் என்னும் ஒரு தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவனான். 2500 காஷ்மீர் இளைஞர்களை
அந்த அமைப்பில் பங்கெடுக்க வைப்பதில் முக்கியப் பங்காற்றினான். 70 தீவிரவாதிகளை விடுவித்து
அதனால் ஏற்பட்ட பயங்கரமான குற்றங்களுக்கு யாரைக் குற்றம் சொல்லவேண்டும்? ‘ஜக்மோகன்
காரணி (Factor) என்று நீங்கள் யாரிடம் சொல்கிறீர்களோ அவர்களே இக்கேள்விக்கு
பதிலளிக்கட்டும்.
 
கிடைக்கும் ஆதாரங்களை வைத்துப் பார்த்தால், ஜனவரி 19,
1990க்கு முன்பு அந்தத் தீவிரவாதி தலைவனாகிவிட்டான். பொதுமக்களின் மனதை
ஆக்கிரமிக்கும் அளவுக்கு, அவனுக்குத் தேவையான களம் அமைத்துக்
கொடுக்கப்பட்டுவிட்டது. ஒரு கடலில் மீன் போல அவனால் நீந்தமுடியும். அதற்குப் பின்
கடல் அவனைச் சூழ்ந்துகொள்வதால் என்ன ஆகிவிடும்?
 
காஷ்மீர் தொடர்பான உங்களது எல்லாக் கவனக்குறைவுப்
பாவங்களையும் நீங்கள் மறைக்கப் பார்க்கிறீர்கள். உங்களது சின்னத்தனமான
அரசியலுக்காக இதைச் செய்கிறீர்கள். மக்களைப் பிளவுபடுத்தி, அதனால் ஒரு வாக்கு
வங்கி உருவாக்குவதைத் தாண்டி இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை. காஷ்மீர் முஸ்லிம்
இளைஞர்கள் உள்ளிட்ட மொத்த காஷ்மீர் மக்களும் நான் முதன்முறை ஏப்ரல் 26 1984 முதல்
ஜூலை 12 1989 வரை கவர்னாக இருந்தபோது என் மீது கொண்டிருந்த மரியாதையைக் குலைக்க
நீங்கள் சிறப்புக் கவனம் எடுத்துக்கொள்கிறீர்கள். எல்லா உண்மைகளையும் தாண்டி,
தாக்குப் பிடிக்க முடியாத ஆதாரங்களைக்கொண்ட உங்கள் தனிப்பட்ட பிரகடனங்கள் மூலம்
என்னை முஸ்லிம்களின் எதிரி என்று முத்திரை குத்தத் தொடங்கினீர்கள்.
 
இந்த நேரத்தில், ‘டெல்லி என்னும் சுவர்களுக்குட்பட்ட நகரம்:
ஷாஜஹானாபாத்தை உயிர்ப்பித்தல்’ (Rebuilding Shahjahanabad) என்ற என் புத்தகத்தில்
முன்வைத்த மூன்று முக்கியமான யோசனைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர
விரும்புகிறேன்: ஒன்று, ஜாமா மசூதி மற்றும் ரெட் ஃபோர்ட்டுக்கு இடையே பசுமைப்
பகுதியை உருவாக்குவது தொடர்பானது. இரண்டாவது, நாடாளுமன்ற வளாகத்தையும் ஜாமா மசூதி
வளாகத்தையும் இணைக்கும் சாலையை உருவாக்குவது. மூன்றாவது, நகரின் கலாசாரத்தைப்
பறைசாற்றும் வகையில், பழம்பெரும் பண்பாட்டை புதுமையான வடிவத்தில் வெளிப்படுத்தும்
வகையில், மாதா சுந்தரி சாலை – மிண்ட்டோ சாலைக்கும் இடையே இரண்டாவது ஷாஜஹானாபாத்தை
உருவாக்குவது. இந்த யோசனைகளெல்லாம் முஸ்லிம் எதிரியான ஒருவனின் சிந்தனையில் வருமா
என்ன என்று உங்களைக் கேட்கிறேன்.
 
நாடாளுமன்றத்தை துஷ்பிரயோகம் செய்தல் 
காஷ்மீர முஸ்லிம்களிடையே எனக்கிருக்கும் பிம்பத்தைக்
குறைக்கும் வகையில் நீங்களும் உங்கள் நண்பர்களும் நாடாளுமன்றத்தை துஷ்பிரயோகம்
செய்கிறீர்கள். எம்.பியான என்.கே.பி. சால்வே மே 25 1990ல் ராஜ்ய சபாவில் செய்தவையே
இதற்கான ஆதாரம். பாம்பேவின் வாரப் பத்திரிகையான தி கரண்ட்டில் நான் கொடுத்ததாகச்
சொல்லப்படும் பேட்டியை (அப்படி ஒரு பேட்டியை நான் தரவே இல்லை) முன்வைத்து, சால்வே
கொஞ்சம்கூட நியாயமற்ற கருத்துகளைக் கூறினார்: “மதச்சார்புக்கு ஒரு வகையான மாதிரி
உண்டு. அதை உணரமுடியும். எனவே அவர் (கவர்னர்) தீவிரவாதிகளையும் குற்றவாளிகளையும்
நீக்கும் போர்வையில் ஒட்டுமொத்த சமூகத்தையும் நீக்குவதான மகிழ்ச்சியில்
இருக்கிறார். தற்போது கவர்னர் தனது தகாத கொடிய வெறுப்புச் செயலுக்கு அதிகப்படியான
வெட்கமற்ற செயல் ஒன்றையும் செய்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் உள்ள
ஒவ்வொருவரையும் போராளி என்று சொல்லி இருக்கிறார்.”
 
எனக்கு சால்வேவைத் தெரியும். அவர் செய்தது அவராகவே செய்தது
என்று நான் நினைக்கவில்லை. அவரது பின்னணிக்கும் பயிற்சிக்கும் தொடர்பற்ற ஒன்றை
அவர் சொல்ல வைக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், எந்த
ஒருவரும், அதுவும் சால்வேவைப் போன்ற முக்கியமான ஜூரி, இப்படி ஒரு பேட்டி என்னால்
தரப்பட்டதா என்ற சிறிய விஷயத்தை முதலில் பார்த்திருக்கவேண்டும். ஒருவேளை பேட்டி
தரப்பட்டிருந்தால், என்னைக் குறிப்பவை உண்மையிலேயே என்னால் சொல்லப்பட்டதா என்றும்
பார்க்கவேண்டும். வெளிப்படையான அவசரம் இதிலேயே தெரிகிறது. இந்தப் பிரச்சினை மே 25
அன்று எழுப்பப்பட்டது. இந்த வாரப் பத்திரிகையின் தேதி மே 26-ஜூன் 2 1990 என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில் நான் கொடுக்காத இந்தப் பேட்டியை அடிப்படையாக
வைத்து நீங்கள் மே 25 அன்றே ஒரு கடிதத்தை அவசரமாக ஜனாதிபதிக்கு அனுப்பி
இருக்கிறீர்கள். மதவெறிக் கருத்துக்களைக் கொண்டிருக்கும் மனிதர் ஒருவரை கவர்னராக
வி.பி.சிங் நியமித்ததாக நீங்கள் விளக்கம் அளித்திருந்தீர்கள். இந்தக் கடிதம் மே 25
அன்று பரவலாக வெளிவரும்படியும் பார்த்துக்கொண்டீர்கள்.
 
மார்ச் 7 1990ல் நடைபெற்ற ஸ்ரீநகருக்கான அனைத்துக் கட்சிக்
கூட்டத்தின்போது, நான் 370வது பிரிவை 1986லேயே ரத்து செய்ய விரும்புவதாக நீங்கள்
சொன்னீர்கள். இந்த காலகட்டம் முக்கியமான காலகட்டம். தீவிரவாதத்துக்கு எதிராக நான்
போராடிய கடுமையான காலகட்டம். நாசவேலைகளின் தீய வெளிப்பாடுகளுக்குப் பின் ஜனவரி 26
1990ல் நிலைமை கொஞ்சம் முன்னேற ஆரம்பித்த காலகட்டம். நீங்கள் நினைத்தீர்கள்,
உண்மையை எனக்கெதிராகத் திரிக்க இதுதான் சரியான சமயம் என்று. உங்களது இந்தச் செயல்
பொறுப்பானதா பொறுப்பற்றதா என்பதை நாட்டு மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.
1986 ஆகஸ்ட் – செப்டெம்பரில் நான் உண்மையிலேயே சொன்னது: ‘370வது
பிரிவு என்பது, சொர்க்கத்தின் இதயத்தில் ஒட்டுண்ணிகள் பெருக இடமளிக்கும் களம்
அன்றி வேறில்லை. இது ஏழைகளை ஒட்டிக்கொள்கிறது. அவர்களைக் கானல் நீர் போல
ஏமாற்றுகிறது. அதிகார வர்க்கத்தினருக்கு நியாயமற்ற முறையில் பணத்தைக் கொண்டு
வருகிறது. புதிய சுல்தான்களின் ஈகோவை விசிறிவிடுகிறது. சுருக்கத்தில், இது
நீதியற்ற ஒரு நிலத்தை உருவாக்குகிறது, ரத்தமும் முரண்பாடுகளும் நிறைந்த ஒரு
நிலத்தை உருவாக்குகிறது. வஞ்சகமும் போலித்தனமும் வாய்ப்பேச்சும் கொண்ட ஒரு அரசியலை
உருவாக்குகிறது.
 
நாசவேலைகளை இது பெருகச் செய்கிறது. இரண்டு நாடுகள் என்ற
ஆரோக்கியமற்ற கருத்தாக்கத்தை இது உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தியா என்னும்
கருத்தாக்கத்தை இது மூச்சுமுட்டச் செய்கிறது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான
சமூக, கலாசாரப் பார்வையை இது மறைக்கிறது. தீவிரவாத நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக
இது அமையக்கூடும். இதன் அதிர்வுகளால் ஏற்படும் எதிர்பார்க்கவே முடியாத விளைவுகளை
நம் நாடு முழுவதும் உணரக்கூடும்.
 
நான் சொல்லி இருந்தேன், ‘370வது பிரிவை நீக்குவது அல்லது
அமலாக்குவது பிரச்சினை தொடர்பான அடிப்படையான விஷயத்தை மறந்துவிட்டோம். அது, இது
தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். இன்னும் வரும் காலங்களில், ஆளும் அரசின்
கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக இது மாறும். அதிகாரத்திலும்,
நீதித்துறையிலும் சில தனிப்பட்ட லாபங்களுக்கு இது பயன்படுத்தப்படும்.
அரசியல்வாதிகளைத் தாண்டி, செல்வந்தர்கள் செல்வத்தைக் குவிக்க வசதியான ஒன்றாக இதைப்
பார்க்கிறார்கள். இந்த மாநிலத்துக்கு ஆரோக்கியமான நிதிச் சட்டங்கள் வருவதை இவர்கள்
அனுமதிப்பதில்லை.
 
சொத்து வரி, நகர்ப்புற சில வரம்புச் சட்டம், கொடை வரி
மற்றும் பல நல்ல சட்டங்கள் இந்த மாநிலத்தில் 370வது பிரிவைக் காரணக் காட்டி
அனுமதிக்கப்படவில்லை. உண்மையில் 370வது பிரிவு தங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறது,
தங்களுக்கான நீதியை மறுக்கிறது, அதேபோல் பொருளாதார முன்னேற்றத்தில் தங்களுக்குக்
கிடைக்கவேண்டிய நியாயமான பங்கைத் தடை செய்கிறது என்பதைப் பொது மக்கள் உணராத
வகையில் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.’
 
என் நிலைப்பாடு என்னவென்றால், 370வது பிரிவு என்னும் தடைச்
சுவரின் மூலம் காஷ்மீரத்து மக்கள் சுரண்டப்பட்டிருக்கிறார்கள். உண்மையான நிலை
அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லப்படவேண்டும். இது தொடர்பாக ஏகப்பட்ட யோசனைகளை நான்
தெரிவித்திருந்தேன். அதேபோல், சீர்திருத்தம் மற்றும் நிர்வாக மறு கட்டமைப்பு
தொடர்பாகவும் சொல்லி இருந்தேன். இவை கண்டுகொள்ளப்படவில்லை. மிகச் சிறந்த வாய்ப்பு
வீணடிக்கப்பட்டது.
 
தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகள் என் கருத்தை வலுப்படுத்தி
இருக்கின்றன. அதாவது 370வது பிரிவும் அதன் உபரி விளைபொருளான ஜம்மு காஷ்மீருக்குத்
தனி அரசியலைமப்புச் சட்டம் என்பதும் போகவேண்டும். இது சட்டத்தாலும்
அரசியலைப்பாலும் செய்யப்பட முடியக்கூடியது என்பதற்காக மட்டும் சொல்லவில்லை. நம்
கடந்த கால வரலாற்றின் அடிப்படையிலான காரணங்களாலும், நிகழ்கால வாழ்க்கைக்குத் தேவை
என்பதாலும் இது போகவேண்டும் என்கிறேன். ஊழல் மேட்டுக்குடியினரின் தொடர்ச்சியான
வளர்ச்சிக்கு மட்டுமே இந்தப் பிரிவு உதவுகிறது. இது இளைஞர்களின் மனதில் தவறான
கருத்தைக் கொண்டு வருகிறது. மாநில ரீதியான பதற்றத்தையும் மோதல்களையும் இது
உருவாக்குக்கிறது. சுயாட்சி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாலும், நிதர்சனத்தில்
அது சாத்தியமில்லை.
 
தனித்துவம் மிக்க கலாசாரம் கொண்ட காஷ்மீரை இந்தப் பிரிவு
இல்லாமலேயே பாதுகாக்கமுடியும். இந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் வேறு மாநிலத்தைச்
சேர்ந்த ஒருவரை மணந்துகொண்டால் அவர்களது உரிமைகள் பறிபோகும் என்பது
பிற்போக்குத்தனமானது. 44 வருடங்களாக இந்த மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு அவர்களது
எளிய அடிப்படை உரிமையும் ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இது
எல்லாவற்றுக்கும் மேலே, பரந்து விரிந்த இந்தியாவின் பன்முகத் தன்மையின் தேவையோடும்
நிதர்சனத்தோடும் இது பொருந்தி வரவில்லை.
 
இன்றைய இந்தியாவின் தேவை, இந்தியாவின் ஆன்மாவையும்
ஆசைகளையும் குலைத்து, வலிமையற்ற தலைமையால் ஒரு சிறிய ‘வாழைப்பழ குடியரசாக’
மாற்றப்படும் வெற்று இறையாண்மை அல்ல. மாறாக, நீதியின்பாலும் நியாயத்தின்பாலும்,
உண்மையையும் நேர்மையும் கருணையும் கொண்ட புதிய சமூக, அரசியல் மற்றும் கலாசார
இந்தியாவே தேவை. தூய்மையான தீவிரமான துடிப்பான உள்ளார்ந்த அமைப்புதான் வேண்டும்.
இதுவே உண்மையான சுதந்திரம், உண்மையான ஜனநாயகம், உண்மையான எழுச்சியை அனைவருக்கும்
தரும்.
 
நான் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். மற்ற
மாநிலங்கள் கூடுதல் சுயாட்சி அதிகாரத்தைக் கேட்கும்போது, அவர்கள் தனித்துப்
போகவேண்டும் என்ற பொருளில் அதைக் கேட்பதில்லை. அவர்கள் உண்மையிலேயே அதிகாரப்
பரவலாக்கலை விரும்புகிறார்கள். இதனால் நிர்வாகத்தையும் வளர்ச்சிப் பணிகளையும்
விரைவாக மேற்கொள்ள முடியும். இதனால் மக்கள் சேவையின் தரம் கூடும். காஷ்மீரில்
370வது பிரிவைத் தொடர்ந்து வைத்திருக்க எழும் கோரிக்கை, அதாவது 1953ல் இருந்து
நீர்த்துப் போகாமல் இருப்பதாகச் சொல்லப்படும் ‘அசலான தூய்மை’, வேறொரு நோக்கத்தில்
இருந்து உருவாகி இருக்கிறது. மைய நீரோட்டத்தில் இருந்து விலகி இருக்கும் ஒரு
தெளிவான தந்திரம் இது. தனி நாடு, தனிக் கொடி, முதலமைச்சருக்கு பதிலாக ஒரு பிரதமரை
வைத்துக்கொள்ள விரும்புவது, கவர்னருக்குப் பதிலாக சாத்ர்-இ-ரியாசாத்தை
வைத்துக்கொள்வது, கூடுதல் அதிகாரம் மற்றும் ஆதரவைப் பெறுவது போன்றவற்றுக்காகத்தானே
ஒழிய, மக்களுக்கான நன்மைக்காகவோ, அமைதி மற்றும் வளர்ச்சிக்காகவோ அல்லது
பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பதை அடைவதற்காகவோ அல்ல. நியோ எலைட்டுகள் என்று
அறியப்படும் ‘நியோ ஷேக்’குகளின் தேவைகளுக்காகத்தான்.
 
வாக்கு வங்கியின் காவலாளியாகவே தொடர விரும்புபவர்கள்
தொடர்ந்து சொல்வார்கள், 370வது பிரிவு என்பது நம்பிக்கையின்பாற்பட்டது என்று.
அதற்கு மேல் சொல்லமாட்டார்கள். அவர்களை அவர்களே இப்படிக் கேட்டுக்கொள்வதில்லை:
நம்பிக்கை என்றால் என்ன? அதன் காரணம் என்ன? இந்திய அரசியலைமைப்புக்குள் இந்த மாநிலத்தைக்
கொண்டு வந்து அதற்கு கூடுதல் ஒளியுள்ள, கூர்மையான நம்பிக்கையைத் தரவேண்டாமா?
இப்படித் தருவதன் மூலம் இதை கூடுதல் நீதியும் அர்த்தமும் கொண்டதாக்கவேண்டாமா?
 
இதே ரீதியில்தான், ‘வரலாற்றுத் தேவையும் சுயாட்சியும்’
இவர்களால் அணுகப்பட்டிருக்கின்றன. நடைமுறையில் இவற்றுக்கான பொருள் என்ன?
வரலாற்றுத் தேவை என்பது, காஷ்மீர் என்பது இந்தியாவின் பகுதி என்று, அதீதமாகச்
செலவு செய்து ஒரு கையால் ஒரு காகிதத்தில் எழுதித் தருவதும், நிதர்சனத்தில்,
இன்னொரு கையால் தங்கத் தட்டில் எழுதித் தருவதுமா? சுயாட்சி என்றால் என்ன? அல்லது 1953க்கு
முன் அல்லது 1953க்குப் பின் என்று சொல்லப்படும் நிலை உணர்த்துவதுதான் என்ன?
காஷ்மீரத்தின் தலைவர்கள் இப்படிச் சொல்ல இது வழிவகுக்காதா: ‘நீ அனுப்பு, நான்
செலவு செய்கிறேன். ஊழல் மிகுந்த, உணர்ச்சியற்ற, தன்னலம் மிகுந்த குழு ஒன்றை நான்
உருவாக்கினாலும், நிலைமை கட்டுக்கடங்காமல் மோசமாகி டாமோக்ளெஸ்ஸின் வாள் உன் தலை
மீது தொங்கினாலும், நீ இல்லை என்று சொல்லக்கூடாது.’
 
(அடுத்த இதழில்
முடிவடையும்)

Posted on Leave a comment

திருப்பங்களுடன் கூடிய ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு | லக்ஷ்மணப் பெருமாள்



ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21, 2019 நள்ளிரவில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதே வழக்கு சம்பந்தமாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பிப்ரவரி, 2018ல் கைது செய்யப்பட்டார். 23 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் கார்த்தி சிதம்பரம் விடுவிக்கப்பட்டார். இந்தக் கைதின் பின்னணி என்ன என்பதைப் பார்க்கும் முன், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு என்றால் என்ன, இந்த வழக்கிற்கும் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவருக்குமான தொடர்பு என்ன என்று பார்த்தல் ஒரு திரைப்படத்திற்கான கதை கிடைக்கிறது. அந்த அளவிற்கு இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்களுடன் கூடிய அம்சங்கள் நடந்தேறி உள்ளன. 


ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு:

இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகிய இருவருக்கும் சொந்தமான நிறுவனம்தான் ஐ.என்.எக்ஸ் மீடியா. 2007ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தமது நிறுவனத்திற்கு அந்நிய முதலீடு தேவைப்படுவதாக, மார்ச் 2007ல், மத்திய நிதி அமைச்சகத்தை அணுகுகிறது. 14.98 லட்சம் ஈக்விட்டி ஷேர்ஸும், 31.22 லட்சம் கண்வெர்டிபில் நான்-குமுலேட்டிவ் ரீடீமபில் ப்ரிபிரேன்ஸ் ஷேர்ஸும் (convertible non-cumulative redeemable preference shares) தேவைப்படுவதாகவும், அதற்கு அனுமதி கேட்டு மத்திய நிதி அமைச்சகத்தை அணுகுகிறார்கள். ஒரு ஷேர் 10 ரூபாய் வீதம் விலை வைத்து, மூன்று அந்நிய முதலீட்டாளர்களால் இந்த பங்குகள் விலைக்கு வாங்கப்பட்டு, அவர்களும் முதலீட்டாளர்களாக இருப்பார்கள் என்றும், அதை அன்னிய நேரடி முதலீட்டின் மூலம் கொண்டு வரவும் அனுமதி கேட்கப்படுகிறது.

இந்தக் கோரிக்கை விடுக்கப்படும்போது மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். மத்திய நிதி அமைச்சகக் கட்டுப்பாட்டிலுள்ள ஃபாரின் இன்வெஸ்ட்மென்ட் ப்ரோமோசன் போர்ட் (Foreign Investment Promotion Board) மே 2017லேயே அனுமதிக்கிறது. 4.62 கோடி வரை நிதியை ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்குக் கொண்டு வர அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் கொண்டு வரப்படும் நிதியைத் தனது இன்னொரு நிறுவனமான ஐஎன்எக்ஸ் நியூஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்ய கோரிக்கை வைக்கிறது. அதற்கு அனுமதி அளிக்க எப்ஐபிபி மறுத்துவிடுகிறது. அந்நிய நேரடி முதலீட்டில் 305 கோடி வரை ஐ.என்.எக்ஸ் மீடியா பணத்தைக் கொண்டு வந்து விடுகிறது. அனுமதிக்கப்பட்ட ஒரு ஷேரின் விலை 10 ரூபாய் என்பதற்குப் பதிலாக 80 மடங்கிற்கும் அதிகமாக 862 ஷேர்கள் மூலமாகவே 305 கோடி ரூபாய் முதலீடாகக் கொண்டு வந்துள்ளது. 

ஜனவரி 2008ல், ஐ.என்.எக்ஸ் மீடியா மொரிசியஸ் நாட்டிலுள்ள மூன்று நிறுவனங்கள் மூலம் முறைகேடாகக் கொண்டு வந்த முதலீட்டை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழுள்ள மத்தியப் புலனாய்வுத் துறை கண்டுபிடித்து விடுகிறது. அன்னிய முதலீடு தொடர்பான விவகாரம் என்பதால், மும்பை வரிவருவாய்த் துறை, இதை அமலாக்கத் துறையின் (Enforcement Directorate) கவனத்திற்குக் கொண்டு செல்கிறது. அதன்பிறகு இந்த வழக்கைக் கையில் எடுத்த அமலாக்கத்துறை 2010ம் ஆண்டு அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஐ.என்.எக்ஸ் மீடியா மீது வழக்கு தொடர்ந்தது. 

அமலாக்கத்துறை இதில் ஊழல் நடந்துள்ள வாய்ப்புகள் நிறைய உள்ளதாகவும், முக்கியப் புள்ளிகள் இதன் பின்னணியில் இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் சிபிஐ கவனத்திற்குக் கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் சிபிஐ மே 2017ல் ஐஎன்எக்ஸ் மீடியா மீது முதல் தகவல் அறிக்கையை (FIR) அளித்து வழக்கை முடுக்கி விடுகிறது. அவ்வாறானால் 2008 முதல் 2017 வரை என்ன நடந்தது என்கிற கேள்வி எழுகிறது. இந்தக் கால இடைவெளியில் நடந்த விஷயங்களைப் பார்க்கலாம்.

4.62 கோடிக்குப் பதிலாக 305 கோடி அளவிற்கான முதலீட்டை முறைகேடாகக் கொண்டு வந்த ஐஎன்எக்ஸ் மீடியா, இந்தப் பணத்தை ஐஎன்எக்ஸ் நியூஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தங்களது புதிய நிறுவனத்திற்கு மாற்ற பாரின் இன்வெஸ்ட்மென்ட் ப்ரோமோசன் போர்டிடம் அனுமதி கோருகிறது. ஆரம்பத்தில் இதற்கு அனுமதி அளிக்க மறுத்தது பாரின் இன்வெஸ்ட்மென்ட் ப்ரோமோசன் போர்ட் (FIPB). இங்கிருந்து தான் கதை ஆரம்பிக்கிறது. 

முறைகேடாகக் கொண்டுவரப்பட்ட முதலீட்டிற்கான அனுமதியை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்பதற்காக ஐஎன்எக்ஸ் மீடியா, செஸ் மானேஜ்மென்ட் செர்விசெஸ் பிரைவேட் லிமிடெட் (Chess Management Services Pvt Ltd) என்ற நிறுவனத்தை அணுகுகிறது. மத்திய நிதி அமைச்சகத்தை நட்பு ரீதியாக அணுகி இந்த விஷயத்தை முடித்துத் தர கோரிக்கை வைக்கிறது. ஐஎன்எக்ஸ் மீடியா செஸ் மானேஜ்மென்ட் செர்விசெஸ் பிரைவேட் லிமிடெட்டை அணுகக் காரணம், அதன் நிறுவனத் தலைவர் அப்போதைய நிதி அமைச்சரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இதன் அடிப்படையில் சிபிஐ சில காரணங்களை அடுக்குகிறது.

கார்த்தி சிதம்பரம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, தமது தந்தையை சந்திக்க ஏற்பாடு செய்ததாகவும், நிதி அமைச்சரான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியாவிடம், புதிதாகப் பணத்தைக் கொண்டு வர அனுமதி கேட்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தியதாகவும், ஏற்கெனவே 305 கோடியை முறைகேடாகக் கொண்டு வந்ததன் மீது நடவடிக்கை எடுக்காமல் அதற்கு ப.சிதம்பரம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அனுமதி அளித்தார் என்பதே சிபிஐ முன்வைக்கும் குற்றச்சாட்டு. 

சிபிஐயின் இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் இந்திராணி முகர்ஜி, ஜூலை 21, 2019 அன்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறியதும், சிதம்பரத்தை அனுமதி கோரி சந்தித்ததாகவும் வாக்கு மூலம் அளித்தார். தமது வாக்குமூலத்தில், ப.சிதம்பரத்தின் அறிவுரையின் பேரில்தான் ஏ.எஸ்.சி.பி.எல் நிறுவனத்தை (Advantage Strategic Consulting Pvt. Ltd) அணுகியதாகவும், அந்த நிறுவனத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் (3.5 கோடி) அளவிற்குக் கொடுத்தால், எப்.ஐ.பி.பி மூலமாக முறைகேடாகக் கொண்டு வந்த 305கோடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்படும் என்று ப.சிதம்பரம் உறுதி அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆவதற்கு முன்பு வரை, ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிக்கையை ஏற்று, கைது நடவடிக்கை எடுக்க விடாமல் தடை செய்து வந்த டெல்லி உயர்நீதி மன்றம், இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்திற்குப் பிறகு அவரைக் கைது செய்ய அனுமதி அளித்தது. முன்ஜாமீன் தேவைப்பட்டால் ப.சிதம்பரம் மூன்று நாட்களுக்குள் உச்சநீதி மன்றத்தை அணுகி ஜாமீன் பெற கோரிக்கை வைக்கலாம் என்றும் அறிவுறுத்தியது. டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்தை இந்த வழக்கின் முக்கிய ஆணிவேர் என்று காரணம் காட்டிக் கைது செய்ய அனுமதித்தது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 21, 2019ல் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் அதன் பிறகு மூன்று முறை முன்ஜாமீன் கோரியும், உச்சநீதிமன்றம் மூன்று முறையும் நிராகரித்துள்ளது. இக்கட்டுரை எழுதப்படும் இந்நேரத்தில், ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 03, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரம் ஏர்செல் மாக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டு 20க்கும் மேற்பட்ட தடவை முன்ஜாமீன் கேட்டு, நீதிமன்றத்தின் மூலம் முன்ஜாமீன் பெற்றார் என்பதும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக மகன் கைதிற்குப் பின்னர் தாமாகவே, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தன்னைக் கைது செய்யக் கூடாது என முன்ஜாமீன் கோரினார். இதை விட விசித்திரமாக ஒன்று  நடந்தது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நீதிமன்றக் காவல்தான் கேட்பார்கள். ஆனால் ப.சிதம்பரம் தமக்கு நீதி மன்றக் காவல் கூடாது என்றும், சிபிஐ விசாரணை மட்டுமே வேண்டும் என்றும் கோர்ட்டில் கோரிக்கை வைத்தார். ஆனால் அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு திகார் ஜெயிலில் நீதிமன்றக் காவலில் தற்போது உள்ளார்.

இந்த வழக்கில் அப்ரூவர் ஆகியுள்ள இந்திராணி முகர்ஜியும், பீட்டர் முகர்ஜியும், அவர்களது மகள் சோனா போராவைக் கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஎன்எக்ஸ் மீடியா மீது, பணத்தை முறைகேடாகக் கொண்டு வந்தது, ஐஎன்எக்ஸ் மீடியாவிலிருந்து ஐஎன்எக்ஸ் நியூஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அனுமதி மறுத்தும் பணத்தைக் கொண்டு சென்றது போன்ற வழக்குகளும் உள்ளன. ப.சிதம்பரம் மீது, முறைகேடாக அனுமதி வழங்கியது, அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்ட விதி மீறலில் ஈடுபட்டது போன்ற வழக்குகள் உள்ளன. 

கார்த்தி சிதம்பரம் 10 லட்சம் ரூபாயை ஏஎஸ்சிபிஎல் மூலமாக லஞ்சமாகப் பெற்றார் என்பதே சிபிஐ முன்வைத்த குற்றச்சாட்டு. இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் பெயரில் பில்கள், இன்வாய்ஸ் உள்ளன என்று சிபிஐ நேரடியாகக் குற்றம் சாட்டியது. அதன் அடிப்படையில்தான் கார்த்தி சிதம்பரமும் கைது செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் எஸ்.பாஸ்கர ராமனும் குற்றம் சுமத்தப்பட்டவர். அவர்தான் செஸ் மானேஜ்மெண்ட் செர்விசெஸ் நிறுவனத்திற்கு ஆடிட்டர் ஆவார். ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்திற்கு 3.5 கோடி அளவிற்கு ஐஎன்எக்ஸ் மீடியா பணம் செலுத்தி உள்ளது என்பதும் ஏஎஸ்சிபிஎல் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தின் ஷெல் கம்பெனி என்பதே சிபிஐயின் வாதமாக உள்ளது.

யாருடையது இந்த ஏஎஸ்சிபிஎல் நிறுவனம்? அதற்கும் கார்த்தி சிதம்பரத்திற்கும் என்ன தொடர்பு? இந்த வழக்கைப் பொருத்தவரையில் அமலாக்கத் துறைக்கும் (ED) , தேசிய புலனாய்வுத் துறைக்கும் (CBI) உள்ள சவாலே ஏஎஸ்சிபிஎல் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் என்று நிருபிப்பதுதான். 

ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்தின் இயக்குநர்கள் ரவி விஸ்வநாதன் மற்றும் பத்மா பாஸ்கரராமன். எஸ்.பாஸ்கர ராமனின் மனைவிதான் பத்மா பாஸ்கர ராமன். பத்மா பாஸ்கர ராமனின் சகோதரர்தான் ரவி விஸ்வநாதன். எகானாமிக் டைம்ஸ் புலானய்வு செய்து வெளியிட்டுள்ள செய்தியில் இடம் பெற்றுள்ள விஷயங்களைத் தருகிறேன். “அமலாக்கத்துறையிடம், கார்த்தி சிதம்பரம் மற்றும் எஸ்.பாஸ்கர ராமனின் அறிவுரையின் பேரில்தான் இன்வாய்ஸ் மற்றும் அனைத்துப் பத்திரங்களிலும் கையெழுத்து வைத்ததாக ரவி விஸ்வநாதனும் பத்மா பாஸ்கர ராமனும் தெரிவித்துள்ளனர்” என்று கூறி உள்ளது.

மேலும் இன்னொரு செய்தியில், ஐஎன்எக்ஸ் மீடியாவின் உயர் அதிகாரிகள் அமலாக்கத்துறையிடம் 3.3 கோடி அளவிற்கு, கார்த்தி சிதம்பரத்தின் அறிவுரையில் பேரில் ASPCL, Geben Trading Limited (கார்த்தியின் நண்பர் நிறுவனம்) மற்றும் North Star Software Solutions Private Limited, Mumbai ஆகிய நிறுவனங்களின் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கு இன்வாய்ஸ் சமர்ப்பிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்

இந்த வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், எஸ் பாஸ்கர ராமன், பத்மா பாஸ்கர ராமன், ரவி விஸ்வநாதன் ஆகியோருக்கான தொடர்புகள் மற்றும் உறவு முறைகளை வைத்து சாமானியனாக நாம் இதில் தவறு நடந்துள்ளது என்று யூகிக்கலாம். தவறுகள் நடந்துள்ளன என்பதில் சந்தேகமில்லை என்றாலும், சட்டத்தின் முன்பாக ஏஎஸ்சிபில் நிறுவனம் கார்த்தியின் பினாமி (ஷெல் கம்பெனி) நிறுவனம் என்றோ அல்லது ஏஎஸ்பிஎல் மூலமாக பணம் ஏதேனும் வழியில் கார்த்தியின் நிறுவனத்திற்குக் கைமாறியது என்றோ நிருபிக்க வேண்டிய நிலையில் உள்ளது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை. ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்திற்கும் செஸ் மானேஜ்மெண்ட் நிறுவனத்திற்கும் இடையில் பணப்பரிவர்த்தனைகள் ஏதும் நடந்துள்ளதா என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சிபிஐ. மேலும் ஐஎன்எக்ஸ் மீடியாவிடமிருந்து சேகரிக்கப்படும் ஆதாரங்கள் சிபிஐக்கும், அமலாக்கத் துறைக்கும் வலு சேர்க்கக்கூடியதாக உள்ளது. எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கும் ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்திற்கும் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்பது உண்மை. ஆனால் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதே கார்த்தியின் வாதமாக உள்ளது. இந்தப் புள்ளிகளை சிபிஐயும் அமலாக்கத்துரையும் இணைத்துவிட்டாலே போதும், கார்த்தி சிதம்பரம், ப.சிதம்பரம், பாஸ்கரராமன், எப்ஐபிபி அதிகாரிகள் முறைகேடாக அனுமதி வழங்கினார்கள் என்பது எளிதாக நிரூபிக்கப்பட்டுவிடும்.




Posted on Leave a comment

கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் – சில குறிப்புகள் | ஓகை நடராஜன்



மதுரை மாவட்டம் கீழடியில் செய்யப்பட்ட நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சியின்
அறிக்கையை தமிழக அரசு செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையை
வைத்து இரண்டு நாட்கள் கழித்துப் பல பதிவுகள் புற்றீசல் போலக் கிளம்பி வந்து, தமிழர்
நாகரிகம் என்ற ஒரு நாகரிகத்தை உருவாக்கிப் பறைசாற்றுகின்றன. வரலாறு வெற்றி பெற்றவர்களால்
எழுதப்பட்டிருக்கிறது என்கிற பாதி பொய்யை யார் உரக்கச் செல்கிறார்களோ அவர்கள் இப்போது
பொய் வரலாற்றை எழுதி வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சிகளிலேயே மிகவும் முக்கியமானது
என்று கீழடி ஆராய்ச்சிதான் எனச் சொல்ல முடியாது என்றாலும், குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சிகளில்
அதுவும் ஒன்று என்று நிச்சயமாகக் கூற முடியும். ஏற்கெனவே பல சான்றுகளால் நிரூபிக்கப்பட்ட
ஒரு மிகப்பெரிய நகர நாகரிகம், கண்டுபிடிக்கப்பட்ட அதன் சில கட்டுமானங்களாலும் கிடைத்த
பழம் பொருட்களாலும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பிராமி எழுத்துக்கள் பொறித்த
பானையோடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதிலும் இதன் காலகட்டம் கிமு 585 என்று கண்டறியப்பட்டிருப்பதும்
முக்கியமான நிகழ்வு.
இந்த அகழ்வாராய்ச்சி நடந்த இடமான பள்ளிச் சந்தை என்ற இடம் உண்மையில்
கீழடி என்று அழைக்கப்படுவது அவ்வளவு சரி இல்லை. இது கொந்தகை என்ற ஒரு பெரிய ஊரில் உள்ளது.
கொந்தகை என்ற ஊர் பல கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிற ஒரு சதுர்வேதிமங்கலம்.
இப்பொழுதும் இங்கு இருக்கும் கொந்தகை என்ற ஊர் பழைய கொந்தகையின் இடுகாடு என்று கல்வெட்டு
ஆய்வாளர் எஸ்.ராமசந்திரன் கூறுகிறார். இந்த இடத்தில் அதிக அளவில் தோண்டினால் நமக்கு
மேலும் மேலும் பல செய்திகள் கிடைக்கும். ஆனால் உண்மையில் இந்த அகழ்வாராய்ச்சி இப்போது
தமிழர்களுக்கு நன்மை செய்திருக்கிறதா என்று பார்த்தோமானால் சில வருத்தமான நிகழ்வுகள்
நடக்கின்றன.
திராவிட அரசியல் அல்லது திராவிட கருத்தாக்கம் என்பது பொய்களால்
கட்டப்பட்ட மிகப்பெரிய மாளிகை. அந்த மாளிகையின் தற்போதைய கூட்டாளிகளான கம்யூனிஸ்டுகள்,
தமிழ்த் தேசியவாதிகள் போன்றோர் கீழடி அகழ்வாராய்ச்சியை வைத்து கீழ்த்தரமான அரசியலில்
ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய அறிவாயுதங்கள் ஆய்வறிக்கைக்குப் பிறகான
இரண்டே நாட்களில் கூர் தீட்டப்பட்டு உண்மைகளைக் குத்திக்குதற ஆரம்பித்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் பல இடங்களில் செய்த அய்வுகளின்போது இதைப் போன்ற
பல பழம்பொருட்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை
ஓடுகள் ஏராளமாய் கொடுமணலில் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் அதிக அளவில் பிராமி
எழுத்துகள் பொறித்த பானை ஓடுகள் கிடைத்த இடம் கொடுமணல்தான். அந்த இடத்தில் தற்போது
இந்தியத் தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டிருக்கிறது. ஆனால் கீழடி அகழ்வாராய்ச்சி
முடிவுகளின் எதிர்வினைகளால் திராவிட கருத்தாக்கக்காரர்களின் ஹிடன் அஜெண்டா என்று சொல்லப்படுகிற
மறைந்திருக்கும் நோக்கங்களை செயல்படுத்த எத்தனிக்கிறார்கள்.
முதலில் இங்கு வழிபாட்டுப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை
என்பதைச் சொல்கிறார்கள். ஏதேனும் ஒன்றுக்கு சான்று இல்லை என்றால் அது இல்லை என்பதற்குச்
சான்று என எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது அடிப்படை உண்மை. ஆனால் எப்பொழுதுமே அடிப்படை
உண்மைகளை மதிக்காதவர்கள் இப்பொழுதும் அதை மதிக்காமல் அவ்வாறு சொல்கிறார்கள். அங்கு
போர்க்கருவிகள் கூடக் கிடைக்கவில்லை என்பதால் அந்நாட்களில் போர் நிகழாமல் இருந்தது
என்று கூற முடியுமா! மேலும் இதைத் தமிழர் நாகரிகம் என்று சொல்வது எந்தளவுக்கு சரி என்பது
தெரியவில்லை. இது வைகைக்கரை நாகரிகம் என்றே அழைக்கப்பட வேண்டும்.
அதாவது இந்தியா
முழுமைக்கும் நடந்த இரண்டாம் நகர மயமாக்கலின் ஒரு பகுதிதான் இந்த நாகரிகம் என்பதே இந்த
அகழ்வாராய்ச்சி சொல்லும் உண்மை. முதல் நகரமயமாக்கல் என்பது சிந்துச் சமவெளி நாகரிகத்துடன்
தொடர்புடையது.

தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல இடங்களில், வட
இந்தியாவில், இலங்கையில் நடந்த பல ஆராய்ச்சிகள் மூலம் ஏராளமான தரவுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.
வரலாற்றை முடிவு செய்யும்பொழுது தனித்து தமிழ்நாட்டுத் தரவுகளை மட்டும் வைத்து வரலாறாகக்
கட்டமைக்க முடியாது. கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் இருக்கும் சின்னங்கள்: ஏணி, மீன்,
சுழல்வரிகள், ஸ்வஸ்திகா, திரிசூலம், சூரியன், வண்டி, இலை, அலைகோடுகள், இன்ன பிற. இதில்
திரிசூலம், ஸ்வஸ்திக் போன்ற சின்னங்கள் எவற்றைக் குறிக்கின்றன? மேலும் அங்கு கிடைத்த
பெயர்கள், ஆதன், திஸன், உதிரன், எயினி, சுரமா, சாத்தன், எராவதன், சாந்தன், மாடைசி,
சேந்தன் அவதி, வேந்தன், முயன், சாம்பன், பெரயன், குவிரன் குறவன் போன்றவை. இவற்றில்
தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன, பிராகிருதப் பெயர்கள் இருக்கின்றன, சம்ஸ்கிருதப் பெயர்கள்
இருக்கின்றன.
இலங்கை திஸ்சமஹரமாவில் கண்டெடுக்கப்பட்ட ராஜகடசா, குதசா போன்ற
பெயர்களும் கீழடியில் காணக் கிடைக்கின்றன. நான்கு, ஐந்து, ஆறாம் நூற்றாண்டு காலத்திலேயே
பாண்டிய மன்னனுக்கும் இலங்கைக்கும் மண உறவுகள் இருந்தன என்பதை மகாவம்சம் தெளிவாகச்
சொல்கிறது. தமிழ் பிராமிக்குத் தொடர்பில்லாத எழுத்தைக் கொண்ட திஸன் என்ற பெயர் இலங்கைத்
தொடர்பையும் தமிழ் அல்லாத மொழித் தொடர்பையும் சுட்டிக் காட்டுகின்றது. திஸ்ஸநாயகே என்ற
சிங்களரின் பெயர்களை நாம் இன்றளவும் காண்கிறோம்.
இவ்வாறெல்லாம் இருக்கும்போது இந்தக் காலகட்டத்தை எப்படித் தனித்து
தமிழர் நாகரிகம் என்று குறிக்க இயலும்? பொதுவாகத் தமிழ் தேசிய மற்றும் திராவிடக் கழகக்
காரர்களால் சொல்லப்படும் ஒரு குற்றச்சாட்டு, மத்திய அரசும் அதன் தொல்லியல் துறையும்
தமிழரின் தொன்மை மற்றும் பெருமைகளை மூடிமறைக்கப் பார்க்கிறது என்பது. எந்தவித ஆதாரமும்
இல்லாதது இந்தக் குற்றச்சாட்டு. தமிழக மக்களின் உணர்வுகளைக் கீறிப் பார்க்கும் நோக்கம்
தாண்டி, இதற்கும் உண்மைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
உண்மையில் அகில இந்திய நாகரிக வளர்ச்சித் தொடர்பு, மொழித் தொடர்பு
இவற்றையும் நம் நாட்டின் தொன்மை வழிபாடு இந்து மதம் சார்ந்தது என்பதையும் கங்கணம் கட்டிக்கொண்டு
தொடர்ந்து மூடிமறைக்கப் பார்ப்பது யார் என்றால் இந்த தமிழ்த்தேசியக்காரர்களும் திராவிடக்காரர்களும்தான்.
அதைக் கீழடியிலும் செய்ய பெருமுயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது தமிழ்நாட்டில் திடீரென்று தோன்றியிருக்கும் நூற்றுக்கணக்கான
உடனடி அதிரடி அகழ்வாராய்ச்சியாளர்கள் தங்களுடைய தாந்தோன்றித்தனமான எண்ணத்தை கருத்து
என்ற போர்வையில் பொதுவெளியில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கீழடியில் இன்னும் ஐந்தாம்
கட்ட ஆராய்ச்சி நடக்க இருக்கிறது. அதில் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம். அப்பொழுது
வரலாறு தன்னைத் தானே கட்டமைத்துக் கொள்ளும். வரலாற்றை நாம் அதன்போக்கில் விடுவோம்.