Posted on Leave a comment

பாண்டி இலக்கியத் திருவிழா 2019 | ஜடாயுஇந்தியாவின் முக்கிய நகரங்களில் Lit Fest எனப்படும்
வருடாந்திர இலக்கியக் கூடுகைகள் அண்மைக் காலங்களில் பிரபலமாகி வருகின்றன. 2006ம் ஆண்டிலிருந்து
நடந்து வரும் ஜெய்ப்பூர் Lit Fest திருவிழாவை அடியொற்றி தில்லி, மும்பை, சென்னை, கோவா,
கல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத், லக்னோ போன்ற நகரங்களிலும் இத்தகைய
திருவிழாக்கள் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகின்றன. இந்த நிகழ்வுகளுக்கான ஒரு குறிப்பிட்ட
வடிவமும் உருவாகி விட்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் வாழும் பெருமளவு ஆங்கிலம் சார்ந்த
நடுத்தர, மேல்தட்டு வாசகர்களையும், எழுத்தாளர்களையும் மையப்படுத்திய இந்த நிகழ்வுகளில்
உரைகளும், அமர்வுகளும் எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும். இலக்கியம் என்ற
பெயர் இருந்தாலும் சமகால அரசியல், பொருளாதாரம், சமூகப் போக்குகள் குறித்த விவாதங்களும்,
சர்ச்சைகளுமே அதிகமாகவும், மையமாகவும் இருக்கும். இந்த நிகழ்வுகளை நடத்துவதிலும் பிரபலமாக்குவதிலும்
தேசிய அளவிலான ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஊடகங்கள், ஆங்கில பதிப்பகங்கள் மற்றும்
ஆங்கில செய்தித்தாள்களின் பங்கு கணிசமானது. தமிழ் வாசகர்களுக்குப் பரிச்சயமான உள்ளூர்
இலக்கியக் கூட்டங்கள் போன்றவையல்ல இவை. பெரும் தொழில்முறை நேர்த்தியுடன், நட்சத்திர
அந்தஸ்துள்ள வளாகங்களில் ஏற்பாடு செய்யப் பட்டு, புகழ்பெற்ற பிரபலங்களும் எழுத்தாளர்களும்
பேச்சாளர்களும் பங்குகொள்ள 2-3 நாட்களாக நடைபெறும் மெகா நிகழ்வுகள்.
2018ம் ஆண்டு தொடங்கப் பட்டு இந்த வருடம் இரண்டாம்
முறையாக கடந்த செப்டம்பர் 27,28,29 தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்ற Pondy Lit
Fest திருவிழாவும் ஒருவகையில் மேற்கூறிய நிகழ்வுகளின் வகைமையைச் சார்ந்ததுதான். என்றாலும்
அதற்கென்று ஒரு குறிப்பிட்ட தனித்துவமும் சிறப்பும் இருந்தது. ‘பாரத சக்தி’ என்ற பெயரும்,
http://pondylitfest.com/ தளத்தில் முகப்பு வாசகமாக உள்ள ஸ்ரீ அரவிந்தரின் மேற்கோளுமே,
அதனை இதுபோன்ற மற்ற அனைத்து Lit Fest நிகழ்வுகளிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுயது.
“India is the Bharat Shakti, the living energy of a great spiritual conception,
and fidelity to it is the very principle of her existence” என்பது அந்த முகப்பு வாசகம்.
மற்ற Lit Fest நிகழ்வுகள் அனைத்தும் இந்தியாவையும்,
அதன் தேசியத்தையும், பண்பாட்டையும் குறித்த எதிர்மறைக் கருத்து நிலைப்பாடுகளையே மையப்
படுத்தி வருகின்றன என்பது கண்கூடு. அரசியல் ரீதியாக பா.ஜ.கவையும் பண்பாட்டு ரீதியாக
இந்துமதத்தையும் கடுமையாக எதிர்க்கக் கூடிய மார்க்சிய, செக்யுலரிச, லிபரல் முகாம்களைச்
சார்ந்த எழுத்தாளர்களும், கல்வியாளர்களுமே அவற்றில் முக்கியப் பேச்சாளர்களாக அழைக்கப்படுகின்றனர்.
இந்த எதிர்மறைப் போக்கிற்கான தீர்க்கமான எதிர்க்குரலாகவும், அதே சமயம் ஆக்கபூர்வமாகவும்
நேர்மறையாகவும் இந்திய தேசியம் மற்றும் இந்துப் பண்பாட்டுக்கு உகந்த கருத்துப் பரவலை
முன்னிறுத்துவதாகவும் இந்த வருட பாண்டி இலக்கியத் திருவிழா அமைந்தது. Republic தொலைக்காட்சி
இந்த நிகழ்வுக்கான முக்கிய ஊடக ஆதரவாக இருந்தது.
முதல் நாள் (செப்டம்பர் 27)மாலை புதுச்சேரி மாநில
ஆளுனர் கிரண் பேடி விழாவைத் தொடங்கி வைத்தார். புதுச்சேரியின் பாரம்பரியச் சிறப்பையும்,
அங்கு நிலவும் சுதந்திரமான, ஆரோக்கியமான சூழலையும் தான் அங்கு வந்து சேர்ந்தது குறித்த
அதிர்ஷ்டத்தையும் சுவையாக விவரித்தார். இறுதி நாள் அமர்வில் கேரள மாநில ஆளுனர் ஆரிஃப்
முகமது கான் சிறப்புரையாற்றினார். 1980களில் ஷா பானு வழக்கில் காங்கிரஸ் முஸ்லிம் அடிப்படைவாத்திற்கு
அடிபணிந்ததை எதிர்த்து அக்கட்சியிலிருந்து வெளியேறியவரான கான், காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை
நீக்குவதற்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தவர். இன்று நாட்டில் தேசபக்த முஸ்லிம்களைப்
பிரதிநிதித்துவம் செய்யும் முக்கியக் குரல் அவருடையது என்றே கூறலாம்.
நிகழ்வின் பெரும்பாலான அமர்வுகள் நெறிப்படுத்தப்பட்ட
கலந்துரையாடல்கள் (panel discussion)வடிவில் இருந்தன. பேசுபொருள்களும் பல தரபட்டவை.
பாரதமாதா என்ற கருத்தாக்கம், இந்திய தேசியவாதம், இந்துத்துவம் vs இந்துமதம், ஜம்மு
காஷ்மீர், தமிழ்ப் பண்பாடு, சமூக ஊடகங்களின் தாக்கம், உலக அரங்கில் இந்தியா, வெளியுறவுக்
கொள்கைகள், பொருளாதார வளர்ச்சி, சூழலியல், தேசிய பாதுகாப்பு, சமீபத்திய வரலாற்று /
அகழாய்வு கண்டுபிடிப்புகள், இந்தியாவில் அறிவியல் துறைகள், பாரம்பரியம் vs நவீனத்துவம்
ஆகிய விஷயங்கள் முக்கியமாகப் பேசப்பட்டவை.
“மகாபாரதம்: பழமையா, நவீனத்துவமா, பின்நவீனத்துவமா?”
என்ற கலந்துரையாடலில் நானும் அரவிந்தன் நீலகண்டனும் பேசினோம். ‘நம் நாட்டு மரபுகள்:
புதிய பார்வைகள்’ என்ற அமர்வை அரவிந்தன் நீலகண்டன் நெறிப்படுத்தினார், நானும் கணேஷ்
லட்சுமிநாராயணனும் அதில் உரையாற்றினோம். நான் நெறிப்படுத்திய ‘தமிழ் கலாசாரப் போக்குகள்’
என்ற அமர்வில் தொல்லியல் அறிஞர் டாக்டர் நாகசாமி தனது உரையை வழங்கினார். விழா அமைப்பாளர்கள்
சார்பில் அவருக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
‘தமிழ் ஊடகம்: பிரசினைகளும் கவலைகளும்’ என்ற அமர்வு
அரவிந்தன் நீலகண்டன் நெறிப்படுத்தலில் முற்றிலுமாக தமிழிலேயே நிகழ்ந்தது. ஹரன் பிரசன்னா,
ம.வெங்கடேசன், எஸ்.ஜி.சூர்யா இதில் கலந்து கொண்டனர்.
‘துயரங்களும் பிழைத்திருத்தலும்: சில கதையாடல்கள்’
என்ற அமர்வு முக்கியமான ஒன்றாக எனக்குப் பட்டது. கோவாவில் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு, 1980களின்
காஷ்மீர் பயங்கரவாதம், மரிச்சபி (மேற்கு வங்கம்)படுகொலை, தேசப்பிரிவினையின் போது வங்கத்தில்
நிகழ்ந்த வன்முறை – இவற்றால் நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் வம்சாவளியையும்
சார்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர். அவர்கள் கூறிய விவரணங்கள் பதைபதைப்பையும் நெகிழ்ச்சியையும்
ஏற்படுத்துவதாக இருந்தன. இந்து சமுதாயங்கள் தங்களுக்கு இழைக்கப் பட்ட கொடுகைகளையும்,
தங்களது உரிமை இழப்புகளையும் வரலாற்றில் பதிவு செய்யவேண்டியது எவ்வளவு முக்கியமானது
என்பதை இந்த அமர்வு உணர்த்தியது.
‘மக்களின் எதிரி யார்: மைய ஊடகங்களா சமூக ஊடகங்களா?’
என்ற அமர்வு சிறப்பாக இருந்தது. மோதி அரசுக்கும் இந்து சமுதாயத்திற்கும் எதிராக பொய்யாக
உருவாக்கப் படும் போலி செய்திகளைத் தோலுரித்து, ஊடகங்களால் இருட்டிப்பு செய்யப் படும்
செய்திகளை கவனப் படுத்தும் Opindia.com தளத்தை நடத்தி வரும் நூபுர் ஷர்மா, பசுக்காவலர்கள்
வன்முறை செய்கிறார்கள் என்று வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை களத்தில் சென்று ஆராய்ந்து
பசுக்கடத்தல் காரர்களின் அத்துமீறல் மற்றும் அராஜகத்தை வெளிக்கொணர்ந்து ஸ்வராஜ்யா இதழில்
பதிவு செய்து வரும் ஸ்வாதி கோயல் ஷர்மா ஆகியோர் சிறப்பான கருத்துக்களை இந்த அமர்வில்
கூறினர்.
‘பழையதைத் தோண்டுவதில் ஏதேனும் நன்மை உண்டா?’ என்ற
அமர்வை சமூக ஊடக பிரபலமும், தில்லி ஜே என் யு பல்கலை பேராசிரியருமான ஆனந்த் ரங்கநாதன்
சிறப்பாக நெறிப்படுத்தினார் (இவர் இந்த இலக்கியத் திருவிழாவின் ஒட்டுமொத்த நெறியாளரும்
கூட). இதில், சமீபத்தில் ராக்கிகர்ஹியில் கண்டெடுக்கப் பட்ட சிந்துவெளி காலத்திய அகழாய்வுப்
பொருட்களை மரபணு ரீதியாக ஆராய்ச்சி செய்த அறிவியலாளர் நீரஜ் ராய், ஆரியப் படையெடுப்புக்
கோட்பாடு முற்றிலுமாக இந்த ஆராய்ச்சியால் முறியடிக்கப் படும் என்ற அளவில் கருத்துத்
தெரிவித்தார். அரவிந்தன் நீலகண்டன் திராவிட இனவாதக் கொள்கை எந்த அளவுக்கு ஆதாரமற்றது
என்று விளக்கினார். வரலாற்றாசிரியர் மீனாட்சி ஜெயின் அயோத்தி ராமஜன்மபூமியில் பல நூற்றாண்டுகளாக
‘மக்கள் குடியிருப்பு’ என்பதாக இன்றி வழிபாட்டிடம் என்பதற்கான அகழாய்வு சான்றுகள் கிடைத்துள்ளதை
விவரித்தார்.
இது தவிர, சில தனிப்பட்ட நேர்காணல்களும் இருந்தன.
காஷ்மீரில் அடுத்து என்ன செய்தால் அமைதி திரும்பும், அங்கிருந்து துரத்தப்பட்ட இந்துக்கள்
திரும்பச் செல்வார்கள் என்பது குறித்து சுஷீல் பண்டிட் உடனான நேர்காணல். ‘இருபத்தொன்றாம்
நூற்றாண்டில் ஆர் எஸ் எஸ்’ என்ற நூலின் ஆசிரியரான சுனில் அம்பேகர் உடனான நேர்காணல்.
இஸ்லாமியப் படையெடுப்பில் கோயில்கள் அழிப்பின் போது தெய்வச் சிலைகள் பாதுகாக்கப் பட்டது,
மீண்டும் மீண்டும் கோயில்கள் எழுந்தது குறித்த வரலாற்றைக் கூறும் Flight of
Deities and Rebirth of Temples என்ற நூல் குறித்து அதன் ஆசிரியர் மீனாட்சி ஜெயின்
உடனான நேர்காணல். இவை நான் பார்த்தவற்றில் முக்கியமானவை.
இந்த இலக்கியத் திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும்
வீடியோ பதிவு செய்யப் பட்டு PLF யூட்ப்யூப் சேனலில் வலையேற்றப்பட்டு வருகின்றன. அவற்றை
இங்கு காணலாம் – https://www.youtube.com/channel/UCCIWgcLRmJqUCuN-VuMHnLw/videos
இத்தகைய இலக்கியத் திருவிழாக்களின் முக்கியத்துவம்
என்பது தேசிய அளவில், வாசிப்பும் சிந்தனையும் கொண்ட மக்களிடையே உருவாகி வரும் கருத்தியல்,
வாழ்க்கை மதிப்பீடுகள், அரசியல் ஆதரவு நிலைகள், அறிவுசார் உரையாடல்கள், கோட்பாட்டு
வாதங்கள் ஆகியவற்றின் ஒரு பகுதியாகவும் எதிரொலியாகவும் அவை உள்ளன என்பதுதான். அண்மைக்காலங்களில்
இந்திய மொழிகளின் வெகுஜன ஊடகங்களிலும், இலக்கியப் போக்குகளிலும் கூட தேசிய அளவிலான
சிந்தனைகள் மற்றும் ஆங்கில ஊடகங்களின் தாக்கம் அதிகரித்து வருவதைக் காணமுடியும். அந்த
வகையில் பாண்டி இலக்கியத் திருவிழா என்பது இந்திய தேசியவாத, இந்துப் பண்பாட்டுத் தரப்பின்
ஒரு முக்கியமான அறிவு சார்ந்த குரலாக உருப்பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

Leave a Reply