Posted on Leave a comment

சில நேரங்களில் சில பதிவுகள் – 24 | சுப்பு

நம்ம ஆஞ்சநேயர்
அடையாறு பகுதியில் ஆர்.எஸ்.எஸ் வேலைகளில் நானும் நண்பர்களும் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகவும் சிலர் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். கல்லூரி மாணவர்களைக் குறிவைத்துச் செயல்பட்ட இவர்களில் முக்கியமானவர் பின்னாளில் வழக்கறிஞராகி, உயர்நீதிமன்ற நீதிபதியாகி ஓய்வும் பெற்றுவிட்டார். இன்னொருவர் தோழர் சித்தார்த்தன். சித்தார்த்தனோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. பெரியாரியக் கொள்கைகளுக்காகத் தன் வாழ்நாளைச் செலவிட்ட குருவிக்கரம்பை வேலுவின் மகன் சித்தார்த்தன். அடையார்வாசி. சித்தார்த்தன் மார்க்சிஸ்ட் சிந்தனையுடையவன். முதலில் இவனைச் சந்தித்தபோது இலக்கியம் குறித்துப் பேசினோம். நான் ஒவ்வொன்றாக ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களை உச்சரித்துக் கொண்டிருந்தபோது அவன் “நீங்கள் வண்ண நிலவனைப் படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டான்.
“அவர் எந்தப் பத்திரிகையில் எழுதுகிறார்?” என்றேன்.
“பத்திரிகைகளில் அவர் எழுத மாட்டார்” என்றான்.
“பின்னே, நாமே அவரைத் தேடிப்போய் படிக்க வேண்டுமா?” என்றேன்.
“இல்லை. இலக்கியத் தரமான கதைகளை வெளியிடுவதற்கென்றே இதழ்கள் இருக்கின்றன. கணையாழியை நீங்கள் பார்த்ததில்லையா?” என்றான்.
“லைப்ரரியில் பார்த்திருக்கிறேன். அதில் படம் போடுவதில்லையே. அதனால் எனக்குப் பிடிக்காது” என்றேன்.
சித்தார்த்தன் எனக்கு ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலைக் கொடுத்தான். இதைக் கையில் எடுத்தவுடன் கீழே வைக்காமல் படித்து முடித்தேன். இது எனக்குள் பல விஷயங்களைப் புரட்டிப் போட்டது. பிறகு ஆன்டன்செகாவ், பால்ஸாக், துர்கனேவ், ஆல்வர் காம்யூ, பிறகு புதுமைப்பித்தனில் தொடங்கி பூமணி வரை படித்தேன். இலக்கியத் தொடர்பு என்னை கலாபூர்வமான உலகத்தைக் காணச் செய்தது. சித்தார்த்தனும் நானும் சேர்ந்து ‘வெளிப்பாடு’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினோம்.
பொதுவுடைமைக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் புதிய அலைத் திரைப்படங்களான அங்கூர், நிஷாந்த், மன்தன் போன்ற ஷ்யாம் பெனெகல் இயக்கிய ஹிந்தித் திரைப்படங்களுக்கு சித்தார்த்தன் என்னை அழைத்துச் செல்வான். பொருள் முதல் வாதமா கருத்து முதல் வாதமா என்பதில் எங்களுக்குள் கட்சி பேதம் இருந்தாலும் ஷ்யாம் பெனெகலை ரசிப்பதில் கருத்தொற்றுமை இருந்தது.
அங்கூர் (1974)என்பது ஹைதராபாதிற்கு அருகே உள்ள ஒரு கிராமத்துக் கதை. இந்த கதையில் ஷபனா ஆஸ்மியின் பெயர் லட்சுமி. லட்சுமியும் அவளுடைய ஊமைக் கணவனும் ஏழை தலித்துகள். கிராமப் பண்ணையாரான சூர்யாவின் வீட்டில் லட்சுமியும் அவரது கணவனும் வேலையாட்களாக இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் லட்சுமி, முதலாளியின் ஆசைக்கு இடம் கொடுக்கிறாள். கிராமம் முழுவதும் முதலாளிக்கும் லட்சுமிக்கும் உள்ள கள்ள உறவு பற்றியே பேச்சாய் இருக்கிறது…
கடைசிக் காட்சியில் ஒரு சிறுவன் சூர்யா வீட்டின் மீது கல்லை எரிவதாக முடித்திருப்பார் இயக்குநர் ஷ்யாம் பெனெகல்.
நிஷாந்த் (1975) படத்திலும் ஷபனா ஆஸ்மிதான் மையப்புள்ளி. இந்தப் படத்தில் அவருடைய பெயர் சுசீலா. கிராமத்து அழகியான சுசீலா பண்ணையாரால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்படுகிறாள். சுசிலாவின் கணவர் பள்ளிக்கூட வாத்தியார். அவர், காவல் நிலையம் கலெக்டர் அலுவலகம் என்று எங்கே போய் முறையிட்டாலும் நீதி கிடைப்பதாக இல்லை. இறுதியில் கிராமத்துப் பூசாரியின் தலைமையில் மக்கள் ஒன்றுதிரண்டு பண்ணையாரைக் கொலை செய்துவிடுகிறார்கள்.
இந்தப் படங்களையெல்லாம் பார்த்தவுடன் எனக்கு புரட்சியின் மீது பிடிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது சித்தார்த்தனின் நினைப்பு.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இந்தியச் சூழலில் சமயம் சார்ந்த தீர்வுதான் சரிப்படும். இதைத்தான் பூசாரியின் தலைமை என்பதாக இயக்குநர் படம்பிடித்திருக்கிறார் என்று சொல்லி அவனை மடக்கிவிட்டேன்.
நாளடைவில் எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. இருந்தாலும் அவ்வப்போது கொள்கை உரசல்களும் உண்டு. ஒருநாள் இரவு பத்து மணியிருக்கும். நானும், சித்தார்த்தனும் பேசிக் கொண்டிருந்தோம். பராசக்தி உண்டு என்பதை அவனிடம் நிரூபிக்க முயன்றேன். நான் எதைச் சொன்னாலும் அவன் ஒத்துக் கொள்வதாயில்லை. நாகரிகமாக மறுத்துவிட்டான். எனக்குக் கோபம் வந்துவிட்டது.
“இதோ பார். மணி பத்தாகிறது. நான் காலையில் சாப்பிட்டதுதான். நம் இருவரிடமும் காசில்லை. இந்த வேளையில் ராகவன் வீட்டுக்குப் போனாலும் எதுவும் மிச்சமிருக்குமோ என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும். பராசக்தி என்னைப் பட்டினி போட மாட்டாள். நீயே பார்” என்றேன்.
நான் இதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே அங்கே சேகர் என்ற பையன் வேகமாக சைக்கிளில் வந்து இறங்கினான். இவன் எனக்கு நெருங்கிய நண்பனில்லை. கொஞ்சம் பழக்கம். அவ்வளவுதான். தவிர, ஒரு சண்டையில் இவனுடைய அண்ணனின் மூக்கெலும்பை நான் உடைத்திருக்கிறேன். சேகர் என்னிடம் “ஹலோ” என்றான். பக்கத்திலிருந்து டீக்கடையின் கல்லாவில் பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு, “நான் வரேம்மா. நீயே வேண்டியதைச் சாப்பிட்டுவிடு” என்று சொல்லிவிட்டு அவசரமாய்ப் போய்விட்டான்.
*
காலில் செருப்பு இல்லாமல், பட்டன் இல்லாத சட்டையோடும், பரட்டைத் தலையோடும் நான் ஒரு பைராகிபோல் உலவி வந்தேன். எனக்குத் தெரிந்த பாரதியார் பாடல்களை உரக்கப் பாடிக்கொண்டே நடந்தேன். இந்த மாதிரி ஒருமுறை பாடிக்கொண்டே போனபோது சரமாரியாகக் கற்கள் வந்து விழுந்தன. என்னைப் பைத்தியக்காரனென்று நினைத்து சிறுவர்கள் கல்லால் அடித்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பற்றி ரமணனிடம் சொன்னபோது அவனை யாரும் கல்லால் அடிக்கவில்லையே என்று வருத்தப்பட்டான்.
ரமணனோடு ஒருநாள் மாலை கடற்கரையில் உட்கார்ந்திருந்தபோது, நினைவு தப்பியது. கடலும், கரையும் நானும், என் கையிலிருந்த சுண்டலும் ஒன்றாகச் சுழன்றோம். பாகுபாடுகள் அழிந்தன. நினைவை நிலைநிறுத்த என்ன செய்வதென்று தெரியாமல் ஓடினேன். அருகிலிருந்த ராகவன் வீட்டுக்குள் நுழைந்தேன். சமையல்கட்டு வாணலியில் கத்திரிக்காய் கறி வெந்து கொண்டிருந்தது. கையில் சுடச்சுட அந்தக் கறியை அள்ளி வாயில் போட்டுக் கொண்டேன். நாக்கு சுட்டு, வாய் வெந்து புறையேறியது. கண்ணில் நீர் வடிந்தது. ஒரே எரிச்சல். நான் நானானேன். எனக்குத் தியான முறைகள் எதுவும் தெரியவில்லை. இந்த மாதிரி திடீர் அனுபவங்கள் ஏற்பட்டபோது ராட்சச வைத்தியத்தைத் தவிர வேறு என்ன செய்வதென்றும் தெரியவில்லை.
பெரும்பாலான நேரங்களில் நான் ரமணன் வீட்டிலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஒருமுறை ரமணன் அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டார்கள். ஆகவே, சாப்பிடு என்று என்னைச் சொல்ல ஆளில்லை. ஆகவே, சாப்பிடவில்லை. அது பற்றிய உணர்வுமில்லை. மூன்றாவது நாள் மதியம் நடக்கும்போது கால்கள் தடுமாறின. ஏன் இவ்வளவு பலகீனமாக இருக்கிறது என்று ஆராய்ந்தபோதுதான் ஒழுங்காகச் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆயிற்று என்று தெரிய வந்தது. உடனடியாக சாப்பிட வசதி இல்லை. அன்று இரவு ராகவன் வருவதற்குள் நான் தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் ராகவன் தயவில் பசியாறினேன்.
ரமணனுடைய நண்பன் ரவியின் தொடர்பு எனக்கு மிகவும் பயன்பட்டது. ரவியின் சந்திப்புக்குப் பிறகு எனக்குத் தத்துவத்தில் ஆர்வம் பிறந்தது. தத்துவப் படிப்பு என் அறிவுத்தளத்தை விசாலமாக்கி பார்வையைக் கூர்மையாக்கியது.
ரவி வீட்டில் ஒருநாள் ரமணனும் மற்ற நண்பர்களும் கவிதை பற்றிய சர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள். இந்த சபைகளில் என்னுடைய பங்கு எதுவுமிருக்காது. வாயே திறக்க மாட்டேன். ‘எது கவிதை’ என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டுக்கும் அந்த அறைக்கும் நடுவிலிருந்த திரையை விலக்கி, ரவியின் மனைவி ஷோபனா முகம் காட்டினாள். “மோகத்தைக் கொன்று விடு, அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு. இதுதான் கவிதை” என்றாள். மானசீகமாக அவளுக்கு மதிப்பெண்களை அள்ளிப் போட்டேன். அவள்தான் அன்றைய தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி.
எனக்குத் தெரிந்த பெண்ணொருத்தி என்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருந்தாள். இவள் கல்லூரி பொருளாதாரப் பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்டு என்னை ஒருநாள் நச்சரித்துக் கொண்டிருந்தாள். கடைசி வருடக் கல்லூரிப் படிப்பில் ஏற்படும் சந்தேகத்தை, கல்லூரிக்குள் நுழையாத என்னுடைய விஷய ஞானத்தால் தீர்க்க முடியாது. அந்தப் பெண்ணும் விடுவதாயில்லை. புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். Keynesian Propensity theory பற்றிய பாடம் அது. பராசக்தியிடம் பிரார்த்தித்துவிட்டு ஒரு மணி நேரம் அந்தப் பாடத்தைப் படித்தேன். பிறகு இரண்டு மணி நேரம் அவளுக்கு அதை விளக்கினேன்.
மறுநாள் அதே புத்தகத்தை எடுத்து, அதே பாடத்தைப் படித்துப் பார்த்தேன். அட்சரம்கூடப் புரியவில்லை. இதற்குப் பிறகு இரண்டு மாத காலம் முதலிலிருந்து தொடங்கிப் பொருளாதாரத்தைப் படித்த பிறகுதான் அந்தப் பாடம் விளங்கியது.
*
சிங்கப் பெருமாள் கோயிலில் ராமு ஐயங்கார் என்ற பெரியவர் இருந்தார். நம்மைப் பார்த்தவுடன் ஆரூடம் சொல்லிவிடுவார். ரமணன் அப்பா சேஷன் இவரைப் பார்க்கப் போவார். பலமுறை என்னை அழைத்தும் நான் போகவில்லை. பிறகு ரமணன் வற்புறுத்தியதால் நான், ரமணன், ராகவன், ராமானுஜம் இன்னும் சில நண்பர்களோடு சிங்கப்பெருமாள் கோயிலுக்குப் போனேன்.
ராமு அய்யங்கார் வீட்டில் அடியெடுத்து வைத்தவுடனே எனக்கு ஒரு வினோதமான உணர்வு ஏற்பட்டது. நல்ல விருந்து பரிமாறப்பட்ட இலையில் அசிங்கத்தை வைத்தது போல் இருந்தது. இவரைப் பார்க்க நமக்குத் தகுதி கிடையாது என்று நினைத்து கதவோரமாக உட்கார்ந்தேன். ரமணனும் நண்பர்களும் அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அவரைப் பார்க்கவில்லை. அவர் என்னைப் பார்த்து “டேய் இவனுக்கு ஒன்றும் சொல்ல முடியாதுடா” என்றார். சரி ஜென்மாந்திரக் குப்பையெல்லாம் இவருக்குத் தெரிந்துவிட்டது. அதுதான் இப்படிச் சொல்கிறார் என்று குறுகினேன். “இவனுடைய பிரகாசம் அதிகமாயிருக்கிறது. அதனால் எதுவும் சொல்ல முடியாது” என்றார். அருகில் வந்து அமரச் சொன்னார். “உனக்கு என்ன வேண்டும்?” என்றார். நானறியாமல் என்னிலிருந்து “பராசக்தியைப் பார்க்க வேண்டும்” என்ற வார்த்தைகள் வெளிப்பட்டன. நான் சொல்லி முடிப்பதற்குள் “ஏன் நாலு நாளுக்கு முன்னே பார்த்தியே. போறாதோ?” என்றார். என்னிடம் வார்த்தையில்லை.
நான்கு நாட்களுக்கு முன்னர் சிவன் கோவில் மங்கள துர்க்கை சந்நிதியில் அபிராமி அந்தாதி படிக்கும்போது அம்பாள் தன் பாதத்தை என் தலையில் வைத்தது போலிருந்தது. நமக்குத் தகுதியில்லை என்று அவள் பாதத்தைத் தட்டிவிட்டுவிட்டேன். ரமணனுக்கு மட்டும் விஷயம் தெரியும். ரமணன் அதை அய்யங்காரிடம் தெரிவித்தான். மற்றவர்கள் இப்போது ராமு ஐயங்காரிடம் கேட்க வேண்டியிருந்ததைக் கேட்டவுடன் புறப்பட்டோம். புறப்படுவதற்கு முன் அவரை நமஸ்கரித்தேன். “அபிராமி அந்தாதி இன்று எத்தனை நாள்?” என்றார். ‘நூற்றி நாலாவது நாள்” என்றேன். “நூற்றி எட்டாவது நாள் அபிராமி தோட்டைக் கழற்றிப் போடுவாள். ஆனால் உனக்கு இது நடக்கும்போது எந்தப் பாதிப்பும் இருக்காது. மனம் அமைதியாகவே இருக்கும்” என்றார்.
வெளியே வந்தோம். நண்பர்கள் பார்வையில் புதிய மரியாதை தென்பட்டது. ராகவன், “Let us have a treat” என்று சொல்லி எல்லோருக்கும் பாஸந்தி வாங்கிக் கொடுத்தான். ரமணன் என்னைத் தனியாக அழைத்து “டால்ஸ்டாய் கதையை ஞாபகம் வைத்துக்கொள்” என்றான். டால்ஸ்டாய் கதையை நான் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் சொல்லுவேன். கடவுள் ஓரிரவு ஏழைத் தச்சனுடைய கனவில் வந்தாராம். நாளை உன்னை நேரே வந்து சந்திக்கிறேன் என்றாராம். மறுநாள் பூராவும் தச்சன் காத்திருந்தும் கடவுள் வரவில்லை. வருத்தத்துடன் தச்சன் தூங்கியபோது மீண்டும் கனவில் கடவுள். ஏனையா என்னை ஏமாற்றினீர் என்று தச்சன் கடவுளைக் கேட்டான். நான் உன்னை ஏமாற்றவில்லையே. காலையில் கோச் வண்டியில் சிக்காமல் ஒரு கிழவியைக் காப்பாற்றினாயே, அந்தக் கிழவியும்; மதியம் சாப்பிடும்போது ஐயா என்று குரல் கேட்டவுடன், உனக்காக வைத்திருந்த உணவைப் போட்டாயே, அந்தப் பிச்சைக்காரனும் நான்தான் என்றாராம் கடவுள். இதுதான் கதை. ஆகவே, நான் கவனமாக இருக்க வேண்டும்.
பஸ்ஸில் வரும்போதே பராசக்தியை எதிர்பார்த்தேன். சாலை ஓர மரம் பராசக்தியாக இருக்குமோ? மரத்தின் அடியில் குப்பையைப் பொறுக்கும் சிறுமியோ, பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நண்பனோ என்று ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். இரண்டு நாட்களாக இரவு பகலாக நானே ஆச்சரியப்படும்படி வேறு சிந்தனையே இல்லை. மூன்றாம் நாள் இரவு அசதியில் நன்றாகத் தூங்கிவிட்டேன். பாதி இரவில் பராசக்தியின் பாதம் பட்டது. உடலெங்கும் மின்சார ஓட்டம். கண் விழிக்காமலே உறங்கிவிட்டேன்.
காலையில் ராகவன் “ஏண்டா, தள்ளிப் படுக்கக்கூடாது” என்றான். “ஏன், என்னாயிற்று?” என்றேன். “ராத்திரி பாத்ரூம் போவதற்காக எழுந்தவன் உன்னை மிதித்துவிட்டேன். அதற்குப் பிறகு என்னால் தூங்க முடியவில்லை. விடியும்வரை படுக்கையில் உட்கார்ந்துகொண்டு காயத்ரி ஜபம் செய்து கொண்டிருந்தேன்” என்றான். நம்ம லெவலுக்கு ராகவன்தான் பராசக்தி என்பதை யூகித்துக் கொண்டேன். நான் அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை. கோவிலுக்குப் புறப்பட்டேன்.
சிவன் கோயிலுக்கு வந்து ராமர் சந்நிதியில் நிற்கும்போது “காதைப்பார்” என்று காதின் உள்ளே ஒரு குரல் கேட்டது. திரும்பினால் அராளகேசி. அருகில் சென்றால் அம்பாளுடைய வலது காதில் தோடில்லை. அப்போதும் எனக்கு உறைக்கவில்லை. “சந்துருவைக் கூப்பிடுங்கள்” என்று மேனேஜரிடம் சொன்னேன். அவர் வந்து “என்ன விஷயம்?” என்றார். “அம்பாள் காதில் தோட்டைக் காணோம். சந்துருவை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என்றேன்.
“நீர்தானய்யா அபிராம பட்டர். அதுதான் தோடு விழுந்துவிட்டது” என்றார் அவர். சந்துரு வந்து பார்த்தபோது தோடு கீழே கிடந்தது. அப்போது கௌரிசங்கர் கோவிலுக்குள் நுழைந்தான். அவனிடம் விஷயத்தைச் சொன்னேன். அந்த சமயத்தில் என் மனோநிலை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்தப் பதட்டமும் இல்லை. ஆரவாரமும் இல்லை. அய்யங்கார் சொன்னதை நினைவு கூர்ந்தேன்.
ரமணன் வீட்டுக்குப் போனேன். “ரமணா, உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்” என்றேன். “இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அவன் அரைமணி நேரம் அக்காள் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். பிறகு ரமணனும் நானும் வெளியே வந்தோம். அவனிடம் சொன்னவுடனே, அவன் ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லி, அவர் உடனே அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய் என்று அமர்க்களப்படுத்திவிட்டார்.
அன்று மாலை ரமணன் வீட்டுக்கு வக்கீல் ரவி வந்தான். நானும், ரமணனும், ரவியும், கௌரியும் கோவிலுக்குப் போனோம். உள்ளே நுழையும்போது சந்தேக புத்தி தன் வேலையைக் காட்டியது. ‘Perhaps it was a coincidence’ என்று நினைத்தேன். சந்நிதியில் நின்று அம்பாளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கரெண்ட் கட். கண் முன்னே இரண்டு காதுகளிலிருந்தும் தோடு கழன்று கீழே விழுந்தது.
நான் அந்தாதி சொல்லத் துவங்கினேன்.
அந்தாதி முடிந்து கண் விழித்துப் பார்த்தபோது கௌரி மட்டும் உடனிருந்தான். “நீ ரொம்ப சத்தம் போட்டுட்டே. அதனால அவங்க போயிட்டாங்க” என்றான். அவர்களைப் பார்ப்பதற்காக கௌரியும் நானும் கடற்கரையை நோக்கி நடந்தோம்.
நானும், ராகவனும் ஒருநாள் ஈராஸ் தியேட்டரில் சினிமாவுக்குப் போனோம். இந்திப்படம். டைட்டிலில் ‘காளி சரண் என்று பெயர் போட்டவுடன் ராகவன், “ஆஹா, என்ன பெயர்?” என்றான். எனக்கோ கழுத்தில் விறைப்பு. கபாலத்திற்குள் ரத்தப் பாய்ச்சல். கண்கள் சொருகி, தலை வலி ஆரம்பித்தது. எதேச்சையாகத் தோட்டத்துப் பூவைப் பார்த்தாலோ, எதிரில் உள்ள குழந்தை சிரித்தாலோ இந்தத் தலைவலி அனுபவம் ஏற்படுவதுண்டு.
மறுநாள் தலைவலியைச் சரி செய்ய ராமு அய்யங்காரிடம் போனேன். அய்யங்கார் நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டார். தலையை மேலே உயர்த்தி எங்கோ பார்த்தபடி “இப்போது எப்படியிருக்கிறது?” என்று கேட்டார். அவர் சொல்லும் போதே கழுத்தில் விறைப்பு தளர்ந்தது. மெள்ள மெள்ள தலையிலிருந்து பளு இறங்கியது. கமென்ட்ரி மாதிரி அவர் பேசிக் கொண்டேயிருந்தார். நரம்புகளில் முறுக்கு அவிழ்ந்தது. வலி குறைந்தது. தலையிலிருந்து கழுத்து, தோள்பட்டை வழியாகக் கீழே போய்விட்டது. காற்றின் நுண்ணிழை போன்ற கரங்களால் என்னை வருடி, வைத்தியம் செய்தது யார் என்ற கேள்வி மிஞ்சியது. அய்யங்காரைக் கேட்டேன்.  “எல்லாம் நம்ம ஆஞ்சநேயர்தான்டா” என்றார் அவர். உடல் பதறிவிட்டது எனக்கு. சிறிது நேரம் சமாளித்துப் பேசிவிட்டு சீக்கிரமே அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன்.
…தொடரும்

Leave a Reply