Posted on Leave a comment

அயோத்தி தீர்ப்பு – உண்மை மதச்சார்பின்மையின் வெற்றி | அரவிந்தன் நீலகண்டன்


அயோத்தியில்
ஸ்ரீ ராமருக்கு கோவில் கட்ட இறுதியாக அனுமதி கிடைத்துவிட்டது. பிரச்சினை ஒரு
முடிவுக்கு வந்துவிட்டது. ஏறக்குறைய 500 ஆண்டுகளாக இந்துக்கள் மேற்கொண்ட ஒரு
பெரும் தொடர் போராட்டம் அமைதியான ஆர்ப்பாட்டமற்ற வெற்றியை அடைந்திருக்கிறது.
சர்வதேச
அளவில் மதச்சார்பின்மைக்குக் கிடைத்த மிகப் பெரிய சமீபத்திய வெற்றி இதுதான்.
ஸ்வராஜ்யா
பத்திரிகையின் இணைய ஆசிரியர் ஆருஷ் தாண்டன் தீர்ப்பு வரும் அன்று அதிகாலை தனது
ட்விட்டரில் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டினார்:
‘சற்றேறக்குறைய
100 கோடி மக்களைக் கொண்ட மதத்தின் சமுதாயம், அதன் மிக மிக ஆதாரமான புனித இடத்தில் கோவில்
கட்ட வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய மதச்சார்பற்ற நாட்டின் நீதிமன்றத்தை
நம்பிக் காத்திருக்கிறார்கள். இதை போல் வேறெங்காவது பார்க்க முடியுமா?’
பின்னர்
அன்று காலை பத்திரிகையாளர் மின்ஹாஸ் மெர்ச்சண்ட் இதே விஷயத்தை மீண்டும்
சுட்டிக்காட்டினார்.
இந்தியா
போல தன்னியல்பிலேயே மதச்சார்பின்மை கொண்ட தேசத்தில்தான் 80 விழுக்காடு
பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் 70 ஆண்டுகளாக தாம் கோவில் கட்ட சட்டபூர்வமான ஒரு
தீர்ப்புக்காகக் காத்திருப்பார்கள். இந்தியாவுக்கு மத சகிப்புத்தன்மை குறித்து
உபதேசப் பேருரை செய்யும் மேற்கத்திய ஜனநாயகங்கள் கொஞ்சம் தங்கள் வரலாறுகளைப்
பார்த்தால் நலம்.
அப்படியானால்
டிசம்பர் 6 1992?
இந்தியாவின்
சராசரி முஸ்லிமுக்கு இது மிகப்பெரிய துயரத்தை அளித்தது. அது முழுமையாகப் புரிந்து
கொள்ளக் கூடியதுதான். இதன் விளைவாக முஸ்லிம் சகோதரர்கள் இயல்பாக, பாதுகாப்பற்ற
உணர்வில் ஆழ்ந்தார்கள். அன்னிய முதலீட்டில் ஊட்டி வளர்க்கப்பட்ட பயங்கரவாத
இயக்கங்களுக்கு இரையானார்கள். இது ஒரு விஷச்சுழலை உருவாக்கியது.
ஆனால்
இதை உருவாக்கியவர்கள் இந்துத்துவர்கள் அல்ல.
இதை
உருவாக்கியவர்கள் இடதுசாரிகள். மார்க்ஸியவாதிகள்.
தொடக்கம்
முதல் ஹிந்துத்துவ இயக்கங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிவந்த ஒரு விஷயம், இது
ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள மதப்பிரச்சினை அல்ல என்பதுதான்.
ஹிந்துத்துவ இயக்கத் தலைவர்களில் ஒருவரும் உத்தரப் பிரதேச மாநில முதல்வராகவும்
இருந்த கல்யாண் சிங் உருக்கமாக சொன்னார்:  ‘நாங்கள் ஸ்ரீ ராம ஜென்மபூமியாக தலைமுறை
தலைமுறையாக வழிபடும் இந்த இடத்தை எங்களுக்கு விட்டுக் கொடுங்கள். எங்கள் தலைகளில்
செங்கல்கள் சுமந்து இதே சரயு நதிக் கரையில் பிரம்மாண்டமான மசூதியை நாங்கள்
கட்டித்தருகிறோம்.’
அதற்கு
இஸ்லாமிய சகோதரர்கள் பெரிய அளவில் ஒத்துக் கொண்டார்கள் எனக் கூறுகிறார்
அகழ்வாராய்ச்சியாளர் கே.கே.முகமது அவர்கள். அதை இல்லாமல் ஆக்கியவர்கள் மார்க்சியக்
குறுங்குழு ஒன்று என்கிறார் அவர்.
அக்காலகட்டத்தில்
வெளிப்படையாகக் களமிறங்கியவர்கள் பெரும் மார்க்சிய அறிவுஜீவிகள். ஆனால் அவர்கள்
அனைவரும் கச்சிதமாக கல்வி சமூக-வரலாற்று ஆராய்ச்சி அமைப்புகளில் மிகப் பெரிய
பொறுப்புகளில் இருந்தார்கள். அவர்கள்தான் பாடநூல்களை வடிவமைத்தார்கள். அவர்களை
பொதுவாக மக்கள் வரலாற்று அறிஞர்களாகப் பார்த்தார்களே தவிர ஒரு அரசியல் தரப்பின்
சித்தாந்தத் தரகர்களாகப் பார்க்கவில்லை.
அவர்கள்
அந்த இடம் மசூதிதான் என்றார்கள். ஹிந்துக்களின் கோரிக்கைக்கு வரலாற்று ஆதாரம்
எதுவுமில்லை என்றார்கள். புராண மத நம்பிக்கைகளை வரலாறாகத் திரித்து அரசியல்
செய்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்றார்கள்.
ஜனவரி
1991ல் மார்க்ஸிய வரலாற்றறிஞர்களான ஆர்.எஸ்.ஷர்மா, இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாப்பர்
உட்பட 42 அறிவுஜீவிகள் ஒரு பொது அறிவிப்பு வெளியிட்டார்கள். ‘அங்கே கோவில் இருந்ததற்கான
சான்றுகளே இல்லை.’
இன்னும்
கூட சொன்னார்கள், ‘ராமரைக் கும்பிடும் வழக்கமும் அயோத்தியைப் புனிதமாகக்
கருதுவதும் கூட பின்னாட்களில் ஏற்பட்டதுதான்.’
ஹிந்து
தரப்பினருக்குப் பொதுவாக நவீனத்துவ பரிபாஷைகள் நிரம்பிய அறிவியக்கத் தந்திரங்களில்
பரிச்சயமில்லை. இடதுசாரிகள் அடித்து ஆடினார்கள். ராமர் பிறந்ததே ஆப்கனிஸ்தானில்
என்றார்கள். பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தார்கள். இரு தரப்பினரிடமும் அரசு
ஆதாரங்கள் கேட்டபோது பாபர் மசூதிக் குழுவினருக்கு ஆதரவாக ஆதாரங்களை அளிக்கிறோம்;
ஆனால் நாங்கள் பாரபட்சமற்ற அறிவியல் நோக்கு கொண்ட வரலாற்றாசிரியர்களின் தனிக்குழு
என அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று கேட்டார்கள். ஏற்கெனவே பாப்ரி ‘மசூதி’ ஆலோசனைக்
குழுக்களிலும் இருந்த இந்த பெருமக்களின் கோரிக்கையை அரசு மறுத்துவிட்டது. பேச்சு
வார்த்தைகள் நடந்தபோது ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. ஆதாரமே இல்லை என்று சொன்ன
ராமர் கோவிலுக்கு ஆதாரங்களை விஸ்வ ஹிந்து பரிஷத் அளித்தது. அதிர்ச்சி அடைந்த
அறிவுஜீவிகள் அதனைப் படிக்கத் தங்களுக்குக் கால அவகாசம் வேண்டுமென்று கேட்டார்கள்.
அகழ்வாராய்ச்சியாளர்
பி.பி.லால், ராம ஜென்ம பூமி – பாப்ரி அமைப்பு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்தவர்.
அவர் அங்கே தூண்களின் அடித்தளங்கள் இருப்பதை உறுதி செய்தார். இடதுசாரிகளோ, இல்லவே
இல்லை அது பொய், லால் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறார் என்றார்கள். அவரது ஒரிஜினல்
அறிக்கையில் அவர் அதைக் கூறவே இல்லை என்றார்கள். அகழ்வாராய்ச்சியாளர் கே.கே.முகமது
இதை மறுத்தார். 1977களில் பாப்ரி அமைப்பினையொட்டி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில்
இருந்த ஒரே முஸ்லிம் தான் மட்டுமே என்பதை நினைவுபடுத்திய அவர் ‘பாப்ரி அருகே
அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்துக்கு நான் சென்று பார்த்தேன். அங்கே தூண்களின்
அடித்தளங்கள் இருப்பதைக் கண்டேன்’ எனத் திட்டவட்டமாக கூறினார்.
தண்டனையாக
அதன் பின்னர் கே.கே.முகமது இடமாற்றமும் செய்யப்பட்டார். ஆனால் அவர் அதைக்
குறித்தெல்லாம் கவலை அடையவில்லை. அவர் கூறிய சான்றாதாரம் இந்தியன் எக்ஸ்பிரஸில்
வெளிவந்தது. கேகே முகமது அவர்களின் சாட்சியத்தை வெளியே கொண்டு வர உதவியவர் ஐராவதம்
மகாதேவன்.
ஆனால்
இடதுசாரிகள் விடவில்லை. நாடு முழுக்கத் தங்கள் இயக்கங்களைப் பயன்படுத்தி, பெரிய
பிரசாரம் செய்தார்கள். ‘புத்த கயாவின் கதை என்ன? அதை ஹிந்துக்கள் அழிக்கவில்லையா?
ஆக்கிரமிக்கவில்லையா?’ என்று கேட்டார்கள்.
ஆனால்
உண்மை அப்படி அல்ல. வரலாற்றாராய்ச்சியாளர் டாக்டர்.அப்துல் குதோஸ் அன்ஸாரி
விளக்கினார்:
‘பௌத்தம்
செழித்து வளர்ந்திருந்த புத்த கயா பகுதியில் இஸ்லாமின் சிலை உடைப்புத் தீவிரம்
பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்திருக்க வேண்டும். இதன் விளைவாக அங்கே பௌத்தர்களே
இல்லாமல் அழிந்துவிட்ட நிலையில் அங்கு (சிதைக்கப்பட்ட) பௌத்த விகாரங்களை வழிபட,
பராமரிக்க ஆளில்லாத நிலையில் பிராமணர்கள் தங்கள் மதக்கடமைக்கு வெளியே சென்று
அந்தப் பணிகளையும் செய்ய வேண்டியிருந்தது.’
ஆனால்
இத்தகைய வரலாற்று நுண் உண்மைகளைக் குறித்துப் பேசிடும் நிலையில் இல்லை இடதுசாரி
பிரசாரகர்கள். வலுவான ஊடகமும் அதிகார வர்க்கமும் ஒரு பக்கம் அணிதிரள, அயோத்தியில்
ராமனுக்கு ஓர் ஆலயம் இல்லையா என்கிற ஆதங்கம் வெகுஜன மக்கள் மனத்தில் அலையடிக்க
ஆரம்பித்தது. இஸ்லாமியர் மனத்திலோ, அது ஒரு மசூதி என்கிற எண்ணம் ஆழப்பதியத்
தொடங்கியது.
இந்நிலையில்
அக்டோபர்-நவம்பர் 1990 – தேவ தீபாவளி எனப்படும் வடநாட்டு கார்த்திகா பௌர்ணமி
தினத்தன்று அயோத்தியில் குழுமிய கரசேவர்களை முலாயம் சிங் யாதவின் அரசு படுகொலை
செய்தது. அதிகாரபூர்வமாக 13 முதல் 16 என்கிறார்கள். ஆனால் நிச்சயம் ஐம்பதுக்கு
அதிகம் கரசேவகர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. பல உடல்கள் மண் சாக்கில் கட்டி சரயு
நதிக்குள் வீசப்பட்டு பின்னர் அழுகி உருகுலைந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டன.
இதன்
விளைவாக அடுத்த தேர்தலில் உத்தர பிரதேசத்தை பாஜக வென்றது. கல்யாண் சிங்
முதலமைச்சரானார். சர்ச்சைக்குட்பட்ட நிலத்தை சுற்றி நிலத்தைக் கையகப்படுத்தினார்.
இதற்கு
எதிராக மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. கரசேவகர்கள் கடும் வருத்தமடைந்தனர். ஆனால்
1991ல், உச்சநீதிமன்றம் சொன்னதைக் கேட்டு அமைதி காத்தனர். உடனே ஊடகங்கள் ‘கரசேவை
பிசுபிசுத்துவிட்டது; ராமஜென்மபூமி மீட்பு இயக்கம் சக்தி இழந்துவிட்டது’ என்று
பேசின.
1991ல்
கூறப்பட்ட தீர்ப்பு 1992 இறுதியில் கூட கொடுக்கப்படவில்லை. இத்தனை
உணர்ச்சிபூர்வமான விஷயத்தில், லட்சக்கணக்கான மக்கள் தேசமெங்கும் இருந்து வந்து
அயோத்தியில் குழுமியிருக்கும் ஒரு விஷயத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது சில
வாரங்கள் தாமதமானால் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு வருடம் தாமதமானால்? தங்கள்
பொறுமை அதிகார வர்க்கத்தால் துச்சமாக விளையாட்டுப் பொருளாக்கப்படுகிறது என்பதைப்
புரிந்து கொண்டனர் கரசேவகர்கள். அதனால்தான் டிசம்பர் ஆறு 1992ல் பொங்கியெழுந்தனர்.
அது துரோகமென்றால், துரோகத்தின் முதல் கல்லை இந்த நாட்டின் போலி மதச்சார்பின்மை
பேசும் அதிகார வர்க்கம் அவர்கள்மீது வீசியது.
இக்கும்மட்டங்கள்
இடிக்கப்பட்ட பின்னர் 1993 ஜனவரியில் சென்னையில் ஒரு சர்வமத தலைவர்களும்
அரசியல்வாதிகளும் கொண்ட ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முக்கிய பேச்சாளராக
இருந்தவர் காந்தியரும் வரலாற்றாசிரியருமான தரம்பால்.
தரம்பால்
அந்த இடிப்பு பெரும்பான்மை இந்தியர்களுக்கு நன்மையைத் தந்ததாகவே கூறினார்.
மக்களின் உணர்ச்சியின் வெளிப்பாடு இது, இதற்கு ஒரு தனி இயக்கமோ அல்லது கட்சியோ
பொறுப்பாக முடியாது என்றார்.
விடுதலைக்குப்
பின்னர் இந்திய அரசுக்கும் பாரத தேசத்துக்கும் ஏற்பட்ட பிளவை இந்த இயக்கம் சமன்
செய்கிறது. அது வெற்றி அடையுமா என்னவாகும் என்பது தெரியாது என்பதுதான் உண்மை –
இதுதான் அவரது மைய கருத்து.
அதன்
பின்னர் 2003ல் வழக்குக்காக அகழ்வாராய்ச்சி ஆரம்பித்தது. ஒரு கனேடிய புவியியல்
நிறுவனம் முதலில் ஆராய்ந்து, அங்கே பாப்ரி அமைப்புக்குக் கீழே மற்றொரு அமைப்பு
இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தது. அகழ்வாராய்ச்சியில் தேவநாகரி
கல்வெட்டு உட்பட, சில மனித உருக்கொண்ட விக்கிரகங்களும் கிடைக்க ஆரம்பித்தன. நவீத்
யார் கான் என்ற ஒரு பாப்ரி ‘மசூதி’ ஆதரவாளர் அகழ்வாராய்ச்சிக்குத் தடை விதிக்க
கோரி உச்சநீதிமன்றத்திடம் கோர, அது தள்ளுபடி ஆயிற்று.
ஜூன்
மாதத்தில் மீண்டும் ஊடக காமெடி தொடங்கியது. ஜூன் 11 2003ல் வெளியான செய்திகளில் ‘பாப்ரி
மசூதிக்குக் கீழே ஓர் அமைப்பு இருப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை’ என்பதாகச்
செய்திகள் வெளியாயின. ஆனால் இந்தச் செய்திகளைப் படிக்கும்போது எந்த அளவுக்குத்
தங்கள் வாசகர்களை எவ்வித மனச்சாட்சியும் இல்லாமல் மடையர்கள் என இந்தப்
பத்திரிகைகள் கருதுகின்றன என்பது புரியும். உதாரணமாக, ’தி ஹிந்து’ தனது செய்தியின்
தொடக்கத்தில் இப்படி முழங்கியது:
‘இந்திய
அகழ்வாராய்ச்சிக் கழகம் தனது அறிக்கையில் பாப்ரி மசூதியின் கீழே வேறொரு அமைப்பு
இருப்பதற்கான எவ்வித அமைப்புரீதியிலான வித்தியாசங்களையும் தான் தோண்டிய 15 புதிய
குழிகளிலும் காண முடியவில்லை என்று சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.’
ஆனால்
உண்மை இப்படி இருந்தது. அது முக்கியப்படுத்தப்படாமல் அதே செய்தியில்
குறிப்பிடப்பட்டது.
‘அமைப்புரீதியிலான
வித்தியாசங்களைத் தான் ஆராய்ச்சி மேற்கொண்ட வேறு 15 குழிகளில் கண்டறிந்ததாக
அறிக்கை சொல்கிறது.’
இப்போது
நாம் அனைவரும் மனச்சாட்சியைத் தொட்டு கேட்க வேண்டிய கேள்வி – எது இந்திய
மதச்சார்பின்மைக்கும் அற உணர்வுக்கும் எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய அநீதி?
திட்டமிட்டுப் பொய் பிரசாரம் செய்து, இல்லாத மசூதியான ஒரு கும்மட்டத்தை, ஒரு
மசூதியாக சிறுபான்மை மக்கள் மனத்தில் பதித்த இந்தப் படித்த அயோக்கியர்களின் செயலா?
அல்லது தாக்கப்பட்டு, குண்டடி பட்டு மீண்டும் மீண்டும் இந்தியாவின் உச்ச
மட்டங்களில் அமர்ந்திருக்கும் அதிகார வர்க்கத்தினரால் ஏமாற்றப்பட்டு, அந்தக்
கும்மட்டத்தை ஏறி உடைத்த கரசேவகர்களின் செயலா?
அந்த
இடம் இந்த தேசத்தின் ஆதார தேசிய உணர்ச்சியுடன் தொடர்புடையது. இந்த தேசம் முழுவதும்
அனைத்து சமுதாய மக்களிடமும் ஆழமான பண்பாட்டு ஆன்மிக உணர்ச்சியுடன் இணைந்த ஒரு
பெயர் ஸ்ரீ ராமன். ஆதிகவி வான்மீகிக்கு அவன் ஆதர்ச நாயகன். அகநானூற்றுக் கவி
கடுவன் மள்ளனாருக்கும் வேடுவப் பெண் சபரிக்கும் அவன் தெய்வம். குகனுக்கு சகோதரன்.
ஆனால் அவனையும் கூட கேள்விக்கு உட்படுத்தும் மரபு ஹிந்துக்களுடையது. எனவேதான் அவன்
பாரதத்தின் தேசிய நாயகன். ராம ரசத்தைப் பருகுங்கள் என்று சிந்து நதிக்கரை
சீக்கியர் கபீர் கானத்தைப் பாடுகிறார். பிபரே ராமரசம் என்ற காவேரிக்கரை
தென்னிந்தியர் போதேந்திரர் கானத்தைப் பாடுகிறார். இப்படி அனைவரையும் இணைக்கும்
பண்பாட்டு உன்னதம் ராமன்.
பாஜக
ஏன் ஒரு அரசாணையைப் பிறப்பித்து ராமர் கோவில் கட்டியிருக்கக் கூடாது என்று 2019
தேர்தலின்போது சிலர் கேட்டார்கள். அது அரசியல் ஆதாயத்தைத் தந்திருக்கலாம். ஆனால் தேசம்
முழுமைக்கும் சொந்தமான ராமனுக்குக் கட்டப்படும் கோவிலாக அது அமையாது. அப்படி அமைய
இப்படிக் காத்திருந்து நீதிமன்றம் மூலமே செய்யப்படும் செயல்தான் ராமனுக்குப்
பெருமை தரும்.
இன்றைக்கு
அளித்த தீர்ப்பின் மூலம் பாரதத்தின் உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கும்
பாரததேசத்தின் ஆன்மாவுக்கும் இடையில் ஏற்பட்ட செயற்கை நேருவியப் பிளவை அகற்ற
முன்வந்திருக்கிறது. அதற்கான ஆன்ம பலம் நம் அரசியல் சாசனத்துக்கு உள்ளது என்பதைக்
காட்டியிருக்கிறது.

இது இந்த தேசத்தின் பண்பாட்டின் பெருமை. ராம நாம வேள்வியின்
மகிமை.

Leave a Reply