Posted on Leave a comment

பெரு வெடிப்புக் கோட்பாடும், பரிபாடலும் | கணேஷ் லக்ஷ்மிநாராயணன்

சுஜாதா,
‘கடவுள் இருக்கிறாரா?’ என்று ஒரு அருமையான புத்தகம் எழுதினார். தன் வாழ்நாளின்
கடைசிப் படைப்பாக, ‘வாரம் ஒரு பாசுரம்’ எழுதியவர், இளமையில், ‘அறிவியலுக்குக்
கடவுள் தேவைதானா?’ என்று ஆராய்ந்து எழுதிய புத்தகம் அது.
அதை
முடிக்கும்போது, ‘கடவுள் இருக்கிறாரா?’ என்ற கேள்விக்கு, ‘அறிவியலின் பதில்
இருக்கலாம்; ஆன்மிகத்தின் பதில் இருக்கிறார்; என் பதில் IT DEPENDS’ என்று
முடித்திருப்பார்.
அறிவியலுக்கு,
கடவுள் தேவைப்படுவதன் இடங்கள், குறைந்து கொண்டேதான் வருகின்றன. பௌதிக விதிகளின்
அர்த்தம் விரிய விரிய, புற நிகழ்வுகள் பலவற்றையும் அது விளக்கி விடுகிறது. ஆனால்,
அறிவியலில் கூட, சில விஷயங்களுக்கு இன்னும் கடவுளோ, அவர் போல் ஏதோ தேவைப்படுகிறது.
அவற்றில் இரண்டு இடங்கள் முக்கியமானவை.
1.
பிரபஞ்சம் ஒரு, மிக, மிக அடர்த்தியான முட்டையில் இருந்து, வெடித்துச் சிதறி, நேரம்
தோன்றி, அணுத் துகள்கள் பறந்து, அவை இணைந்து, அணுக்கள் பிறந்து, அவை ஒன்றை,
மற்றொன்றைக் கவர்ந்து வாயுக்கள் வீசி, நெருப்பு பரவி, திடப் பொருட்கள் மிதந்து,
இவையெல்லாம் குளிர்ந்து நீர் உண்டாகி, நிலம் வெளிப்பட்டு, உயிர்கள் தோன்றி, இதோ,
நாமெல்லாம் அதைப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டோம்.
அழகிய
தமிழில், பெரியாழ்வார் இதே விஷயத்தைக், கிட்டத்தட்ட இந்த பெரு வெடிப்பு கோட்பாடு
(big bang theory) விளக்குவது போலவே, சொல்லி இருக்கிறார்.
பண்டை
நான்மறையும் வேள்வியும் கேள்வி பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே
(பெரியாழ்வார்
)
ஆனால்,
இந்த முட்டை, எப்படி இப்படி அடர்த்தி ஆயிற்று? முட்டைக்கு முன் என்ன இருந்தது? அது
ஏன் வெடித்தது? இந்தக் கேள்விக்கு விடை இல்லை. ‘இந்த இடத்தில்தான், ஆத்திகரும்,
நாத்திகரும் அடித்துக் கொள்கிறார்கள்’ என்பது போல் எழுதியிருப்பார் சுஜாதா.
2.
பிரபஞ்ச விதிகளில் காணப்படும் அழகிய ஒழுங்குணர்ச்சி மற்றும் ‘மகத்தான சமச்சீர்’
(super symmetry).
Big
Bang Theory என்று ஒரு அமெரிக்க காமெடி நிகழ்ச்சி. அதில் வரும் ஷெல்டன் ஒரு
விஞ்ஞானி. நாத்திகவாதி. அவனைச் சிறு பையனாக ஆக்கி Young Sheldon என்று இன்னொரு
நிகழ்ச்சி.
நிகழ்ச்சியின்
வாரநிகழ்வு (episode) ஒன்றில், தீவிர ஆத்திகவாதியான அவன் அம்மாவுக்கு கூட, கடவுள்
உண்மையாகவே இருக்கின்றாரா என்ற தவிப்பு வந்து விடும். சமீபத்தில், அந்த ஊரில்
நடந்த ஒரு பெரிய சோக நிகழ்வை, கடவுளின் செயல் என்று கடந்து செல்ல முடியாத
மனநிலையில் உழல்வாள்.
அப்போது
அந்த சிறு பையன், அம்மாவிடம் ‘இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் ஒரு துல்லியம்
இருக்கிறது. பௌதிக விதிகளில், சமன்பாடுகளின் மாறிலிகள் (constants), சிறிது விலகி
இருந்தாலும், உயிரினங்கள் இருக்க முடியாது’ என்று சொல்லுவான். இந்தப்
பிரபஞ்சத்தில், ஒழுங்கும், அழகு உணர்ச்சியும், எல்லாவற்றுக்கும் ஒரு காரணமும்,
இருப்பதை நாம் காண்கிறோம். இது சுயம்புவாக முளைத்ததா? உறுதியாய் இன்னும்
அறிவியலில் பதிலில்லை.
இந்த
இரண்டுக்கும், அறிவியல் விடை தேடுவதைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சுஜாதாவின்
புத்தகத்தில் Roger Penrose என்பவரைப் பற்றி எழுதியிருப்பார். இவர் ஆக்ஸ்போர்டு
கணிதப் பேராசிரியர். ஸ்டீபென் ஹாகிங், ‘ஒருமித்த கணத்தை’ (Singularity)
சிந்தித்தபோது, அவருடன் பங்களித்தவர். இவர் 2010ல், ஒரு புதிய கோட்பாட்டை முன்
வைத்தார். ‘conformal cyclic cosmology (CCC)’ என்று பெயரிடப்பட்ட இந்தக்
கோட்பாடு, பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலைக்கு ஒரு புதிய விளக்கத்தைக் கொடுக்கிறது.
இந்த
‘சுழற்சிப் பிரபஞ்சவியல் (CCC)’ என்ன சொல்லுகிறது என்று பார்க்கும் முன், கொஞ்சம்
பரிபாடல் பக்கம் போய் விட்டு வருவோம். பரிபாடல் சங்க நூல்களில் ஓன்று. இதில்
சொல்லப்படும் கோள் நிலைகளை வைத்து, இது இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது
என்கிறார்கள்.
தொல்
முறை இயற்கையின் மதிய…
… … … … … … … … … … …மரபிற்று ஆக,
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
(பரிபாடல்
– பாடல் 2 )
‘திருமாலே..
பல ஊழிகளுக்கு முன்னால், ஒரு பண்டைக் காலத்தில், எல்லாம் அழிந்து போயின.
சூரியனும், சந்திரர்களும், எல்லா நட்சத்திரங்களும் மறைந்து போயின. இந்த உலகமும்,
பிரபஞ்சமும் பாழ்பட்டுப் போய், ஒன்றும் இல்லாமல் போயின. இப்படிப் பல ஊழிகள்
கடந்தன…’
கொசுறாக
இன்னொன்றையும் பார்த்து விடலாம். இதைப் பூஜைகள் தொடங்கும் முன் வரும் சங்கல்ப
மந்திரத்தில் எல்லோரும் கேட்டிருப்போம் – ‘மமோபார்த்த சமஸ்த..’
முப்பது
கல்பங்கள்; ஒவ்வவொரு கல்பத்திலும் பதினாலு மன்வந்தரங்கள், மன்வந்தரங்கள் ஒன்றுக்கு
எழுபத்தியோரு மகா யுகங்கள், ஒரு மகா யுகத்துக்கு, நாலு யுகங்கள்..
‘இப்போது
நடப்பது – இரண்டாவது கல்பம் – ஸ்வேத வராக கல்பம்; ஏழாவது மன்வந்தரம் – ‘வைவசுவத’
மன்வந்தரம்; கலியுகம்.’
சுழற்சிப்
பிரபஞ்சவியலின் (CCC) தேவை என்ன? ரோஜேர் பென்ரோசுக்கு, பெரு வெடிப்பின் ஆரம்ப
நிலையின் விளக்கத்தில் திருப்தி ஏற்படவில்லை. ‘அது, அப்படித்தான் இருந்தது.
வெடித்தது. அதற்கு முன்னால் என்ன என்று எல்லாம் கேட்கக் கூடாது. அதற்கு முன் காலமே
இல்லை’ என்ற முரட்டு வாதங்களில் சமாதானமடையாமல் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
எளிய
முறையில் இதைப் புரிந்து கொள்ள முயன்றால், பிரபஞ்சம் ஒரு சுழற்சி என்கிறது இந்தக்
கோட்பாடு. இந்தப் பிரபஞ்சம் சுருங்கிக் கரந்து, ஆதி முட்டைக்குள் அடங்கி, எல்லா
சக்தியையும் தன்னுள் உண்டு, வெடித்துச் சிதறி – மீண்டும் முதலிருந்து.
கிட்டத்தட்ட,
இந்தப் பாசுரத்தில் சடகோபர் சொல்வது போல. சிவன், பிரம்மா, இந்திரன் முதல் எல்லா
தேவர்களையும், எல்லா உலகங்களையும், பஞ்ச பூதங்களையும், ஒரு பொருளையும் விடாது
எல்லாவற்றையும், தன்னுள்ளே வாங்கி, மறைத்து, ஆலிலை மேல் உறங்குகிறான் பெருமாள்.
நளிர்
மதி சடையனும் நான்முக கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க
ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
அகப்பட கரந்து ஓர் ஆலிலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே
(நம்மாழ்வார்)
இந்தக்
கோட்பாட்டை, ரோஜேர் 2010ல் முதலில் முன்மொழிந்தார். புறச் சான்றுகள் இல்லாததால்,
அறிவியலார் பலரும் இதைக் கழுவி ஊற்றினார்கள்.
சென்ற
வருடம் (2018), அவருக்கு இதை நிரூபிக்க ஒரு சான்று கிடைத்தது. ‘கடந்த பெரு
வெடிப்புக்கு முன் இருந்த பழைய பிரபஞ்சத்தின் தடங்களை கண்டுபிடித்து விட்டோம்
என்று நினைக்கிறோம்’ என்று ஒரு கட்டுரை எழுதினார்.
இதை
Microwave கதிர்களை வைத்து, Wilkinson Microwave Anisotropy Probe ( WMAP) என்னும்
ஒரு உத்தியில், பரிசோதனை செய்து, படம் வரைந்து, சமன்பாடுகளைச் சரி
செய்து….இதற்கு மேல் புரியும்படி, எளிய தமிழில் எழுத வேண்டுமானால், வாத்தியார்
சுஜாதாதான் வைகுண்டத்தில் இருந்து தொடர வேண்டும்.
இப்போது
அந்தப் பரிபாடல் பாடலை மீண்டும் முழுவதுமாகப், பார்த்து விடலாம்.
தொல்
முறை இயற்கையின் மதிய………..
……………………………………………………. மரபிற்று ஆக,
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையின் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழ் ஊழ் ஊழியும்;
செந் தீச்சுடரிய ஊழியும் பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர் தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
கேழல்
திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ நிற் பேணுதும், தொழுதும்,
கரு
வளர் – ஆதி முட்டை; இசையின் – சத்தத்துடன்; உரு அறிவாரா ஒன்று – முதல் துகள்கள் ;
ஊழ் ஊழ் – வாயுக்கள்; தண் பெயல் – குளிர்ந்த மழை; வெள்ளம் மூழ்கி ஆர் தருபு –
வெள்ளத்தில் மூழ்கி யுகங்கள் கரைந்து; மீண்டும் பீடு உயர்பு ஈண்டி – அவை மீண்டும்
பெருமையுடன் எழுந்தன; இரு நிலம் – பூமி; கேழல் திகழ் வரக் கோலம் – வராகம்; ஆழி
முதல்வன் – திருமால்.
(பரி
பாடல்)
எல்லாமும்
மறைந்து, பின் எல்லாமும் ஒரு ஆதி முட்டையாகி, அதில் இருந்து பெரு வெளி, நெருப்பு,
நீர், காற்று, அண்டங்கள் எல்லாம் தோன்றி, அவை நீரிலும், பனியிலும் மூழ்கி இருக்க,
வராக அவதாரம் எடுத்து, மீண்டும் அவை பீடுடன் விளங்கச் செய்தவன் திருமால் என்கிறது
இந்தப் பாடல்.
நான்
சுழற்சிப் பிரபஞ்சவியல் (CCC) பரிபாடலில் இருக்கிறது என்று சொல்ல வரவில்லை. இதே
விளக்கம் வேதங்களில் இருக்கிறது என்று பல பேர் எழுதி இருக்கிறார்கள்.
பிரளயங்களும்,
அவை வரும் போது கடவுள் மனிதர்களைக் காப்பதும், இதே மாதிரி, பல மதங்களிலும்
இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் அறிவியல் ஒத்துக் கொள்ளாது. அதற்குப் பரிசோதனைகள்
வேண்டும், டேட்டா வேண்டும். கணிதம் ஒத்துப் போக வேண்டும்.
என்னுடைய
வியப்பு அதுவல்ல. பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் பற்றி அழகு தமிழில், கிட்டத்தட்ட
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், நம் முன்னோர் எழுதி வைத்து, அதை நாம் இன்னும்
படிக்கக் கிடைத்துக் கொண்டு இருப்பதுதான்.
பரிபாடல்,
நமக்கு முழுமையாகக் கிடைக்காத ஒரு பொக்கிஷம். பெருமாளைப் பற்றிய முழுமையான
வர்ணனைகள் அடங்கிய அற்புத வரிகள் அதில் இருக்கின்றன.
முருகனும்,
திருப்பரங்குன்றமும், திருமாலிருஞ்சோலையும், வைகையும், மதுரையும், வானவியல்
குறிப்புகளும் உள்ளன. பாடலுக்கு, ராகத்துடன் பாட பண்கள் அமைத்தவரின் பெயர்களுடன்,
படிக்க படிக்க பிரமிக்க வைக்கும் நூல்.
‘பரிபாடல்தான்,
பக்தி இலக்கியத்துக்கு முன்னோடி’ என்பார் சுஜாதா, தன் ‘ஆழ்வார்கள் ஒரு எளிய
அறிமுகம்’ என்ற புத்தகத்தில். 
பாசுரங்களின் பல பாடல்களின் மூலம், பரிபாடலில் இருக்கிறது. பரிபால்
சொல்லும், பிரபஞ்சத்தின் ஆரம்பத்தையும், சுழற்சியையும் ஆழ்வார்கள், அற்புதத்
தமிழில் எழுதி மகிழ்ந்து இருக்கிறார்கள்.
படைத்த
பாரிடந் தளந்த துண்டு மிழ்ந்து பெளவநீர்
படைத்த டைத்ததிற் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
என்கிறார்
திருமழிசையாழ்வார் திருச்சந்த விருத்தத்தில். ‘படைத்தவனும் அவனே, படைத்ததை, தன்
திருவடிகளால் அளந்தவனும் அவனே!, அளந்ததை உண்டு, உமிழ்ந்தவனும் அவனே’ என்கிறார்.
‘பெளவநீர் படைத்து, அதில் கிடந்து, அதைக் கடைந்து’ – பெளவநீர் எது? பாற்கடல்
வெறும் கடலா?
காட்டி
நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டை
கோட்டையினில் கழித்து என்னை உன் கொழும் சோதி உயரத்து
கூட்டு அரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே
என்கிறார்
பெரியாழ்வார். ‘உலகத்தைக் காட்டிப், பின் மறைத்து, பின் உமிழ்ந்து, பஞ்ச பூதங்களை
வைத்து அமைத்தவனே, என்னை இந்த சுழற்சியில் சிக்க வைக்காமல், நித்ய சூரிகள் வாழும்
வைகுண்டம் என்னும் தனி முட்டைக் கோட்டையில், உன் திருவடிகளில் எப்போதும் இருக்கச்
செய்வது எப்போது?’ என்று கேட்கிறார்.
தாமிரபரணி
தண்ணீர் குடித்த சடகோபரை மிஞ்ச, இந்த அறிவு சார்ந்த விஷயங்களில் ஆளே இல்லை. இரண்டே
வரிகளில் சொல்லி விட்டுப் போய் விடுகிறார் இந்தப் பிரபஞ்ச ரகசியத்தை.
தானே
உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே.
‘தன்னையே
படைத்து, எல்லா உலகையும் படைத்து, அதை அளந்து, உண்டு, உமிழ்ந்து, மீண்டும்
ஆள்வானே..’ என்று எளிய வார்த்தைகளில், மிகப் பெரிய விஷயங்களைச் சொல்லிச் செல்லும்
நம்மாழ்வார்தான், சுஜாதாவுக்குப் பிடித்த ஆழ்வார் என்பதில் ஆச்சரியம் இல்லை.
சுழற்சிப்
பிரபஞ்சவியல் கோட்பாடு இன்னமும் முழுதாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. அது நடந்தால்,
ஆதி முட்டை எப்படி உண்டானது என்பதற்கு விளக்கம் கிடைத்து விடும். அதற்குப் பிறகும்
கேள்விகள் நீண்டு கொண்டே போகும். ஏன் பிரபஞ்சம் இப்படி ஊசலாடுகிறது? ஆடுகிறதா?
ஆட்டுவிக்கப்படுகிறதா?
இன்னொரு
கேள்வியும், பதில் இல்லாமல் இருக்கிறது. பிரபஞ்சத்தின் ‘மகத்தான சமச்சீர்’ (super
symeetry). இதை விளக்குவதற்கு ‘தரநிலை மாதிரி’ (standard model) என்று ஓன்று
தயாரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு அணுத்துகளுக்கும் (sub atomic particles) ஒரு
மாற்றுத்துகள் இருக்கிறது என்பது இந்தக் கோட்பாடு. Higgs-Boson பரிசோதனைகள்
இதற்காகவே. இதுவரை ஒன்றுதான் கிடைத்து இருக்கிறது. மற்ற துகள்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவியலுக்கு
கடவுள் தேவையா என்ற கேள்விக்குப் பதில், ஐன்ஸ்டீனின் இந்த வரிகளில் இருக்கலாம்.
‘பிரபஞ்சத்தில் நாம் ஆழ்ந்து புரிந்து கொள்ள இயலாதது என்பது, நாம் அதைப் பற்றி
அறிந்து கொள்ள முடியும் என்பதே.’
அறிவியலுக்குத்
தேவையோ இல்லையோ, ஐம்பது வயது ஆகி விட்ட எனக்கு, கடவுள் கண்டிப்பாகத்
தேவைப்படுகிறார். ‘கடவுளே இயற்கை, இயற்கையே கடவுள்’ என்று சொல்லும், தமிழின்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த பரிபாடல் வரிகள் பிரமிக்க
வைப்பவை. இந்த மனநிலை வந்து விட்டால், இதை உள் வாங்கித் தெளிந்து விட்டால்,
கோயில், கோயிலாய் அலைய வேண்டியதில்லை.
‘பெரிதில்
தோன்றி, பெரிதால் மேவப்பட்டு, பெரிதொடு சென்றடையும்’ என்ற விஷிட்டாத்வைதம்
புரிந்து விட்டால், தேடல் நின்று விடும்.
நின்
வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள  25
நின்
தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள;  30
நின்
உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன எல்லாம்.  35
சூரியனின்
ஒளியும், வெப்பமும் நீயே
சந்திரனின் குளிர்ந்த தன்மையும் நீயே
மழையின் பெருந்தன்மையும் அதன் வழங்கலும் நீயே
பூமியின் பொறுமையும், வளங்களும் நீயே
பூக்களின் மணமும், காந்தியும் நீயே
ஞாலத்து நீரின் தோற்றமும், விரிவும் நீயே
வானத்தின் உருவமும், ஒலியும் நீயே
காற்றின் ஆரம்பமும், முடிவும் நீயே
ஆதலால்
அவையும், இவையும், உவையும், பிறவும்
உன்னில் இருந்தே தொடங்கிப் பிரிந்து
உன்னையே வந்து தழுவிக் கொள்பவையே!
அப்படிப்பட்ட
நிலை எத்தனை பேருக்கு வரும் என்று தெரியவில்லை. அது இயலாத என்னைப் போன்றோருக்கு
வாழ்க்கையின் கவனச் சிதறல்களுக்கு நடுவே கடவுளை வணங்குவதற்கு ஒரு உருவமும்
தேவைப்படுகிறது.
‘எல்லா
தெய்வ உருவங்களும் ஒன்றின் பலவே. அவர் உனது செயல்களை முடித்துத் தரும் ஏவலாள்,
உன்னைக் காப்பவன்’ என்ற திருமாலைப் பற்றிய, இந்தப் பழைமையான பரிபாடல் வரிகள்.
எந்தக் கடவுளுக்கும் பொருந்தும் என்பது, நம் தமிழில் எனக்கு மிகவும் பிடித்த,
பெருமிதம் கொள்ள வைத்த விஷயம்.
அழல்
புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும் கடம்பும், நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே நின் ஆர்வலர் 70
தொழுத
கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே!
அவரவர் ஏவலாளனும் நீயே!
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே!
(பரிபாடல்
– பாடல் 4)
கடுவன்
இளவெயினனார்
தீக்கதிர்களைப் போல் பரந்து விரிந்து
குளிர்ச்சியான நிழலைத் தரும் ஆல், கடம்பு மரங்களிலும்;
ஆறுகளின் நடுவிலும்; காற்று வீசாத குன்றங்களின் மேலேயும்;
விரும்பத்தகும் இடங்களில் எல்லாம்
வேறு வேறு பெயர்களில் நிறைந்த பெரு உருவே!
உன்னைக் கை கூப்பித் தொழுவோர் கை பற்றி வரமளிப்பவனே!
அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றும் ஏவலாளன் நீயே!
அவர்களின் செல்வங்களுக்கு எல்லாம் காவலாளியும் நீயே!

Leave a Reply