Posted on Leave a comment

பாஜகவும் திராவிட எதிர்ப்பும் | ஓகை நடராஜன்

தமிழக பாரதிய ஜனதா கட்சி, திராவிடக் கொள்கைகளுக்கு
எதிராக ஆரம்பத்திலிருந்து பிரசாரத்தைச் செய்துகொண்டு வருகிறது. ஆனால் இந்த பிரசாரத்தின்
தீவிரம் பொதுவாக வேண்டிய அளவில் இருப்பதில்லை. பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு
நேர் எதிரான கொள்கைகளை உடைய திராவிடக் கோட்பாட்டை கொள்கை அளவில் மிகத்தீவிரமாக எப்பொழுதும்
எதிர்க்க வேண்டிய நிலையில்தான் பாஜக, குறிப்பாக தமிழக பாஜக இருக்கிறது. இதில் அண்மையில்
சில நிகழ்வுகள் சில சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில் இந்தப் பிரச்சினையை
சற்று சீர்தூக்கிப் பார்க்க முற்படுகிறது இந்தக் கட்டுரை.
அன்மை சலசலப்புகள்
அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தகவல்
தொழில்நுட்பப் பிரிவு, திருவள்ளுவர் படத்தைக் காவி உடையில் வெளியிட்டது ஒரு சலசலப்பை
ஏற்படுத்தியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இது மிகப் பிரபலமாகி, திராவிடக் கொள்கைகளையும்
அந்தக் கொள்கை சார்ந்து பேசுபவர்களையும் தோலுரித்துக் காட்டியது. வரலாற்றை மாற்ற எல்லா
வகையான கருப்பு முறைகளையும் பயன்படுத்துகின்ற திராவிடக் கொள்கை ஆதரவாளர்களான திமுக,
கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களின் இரட்டை நிலைப்பாடுகளும் வரலாற்று
வஞ்சகமும் பளிச்சென்று வெளிப்பட்டன. தொலைக்காட்சி ஊடகங்கள் எவ்வளவுதான் இவர்களின் கருத்தைப்
புகுத்த முயற்சி செய்தாலும், அது பின்னடைவாகவே முடிந்தது.
ஆனால் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு
எடுத்தாண்ட இன்னொரு பிரச்சினை சற்று வேறு திசையில் போய்விட்டது. ஈவே ராமசாமி அவர்களின்
நினைவு நாளன்று, அவரது திருமணத்தை, இளம் வயதுப் பெண்ணைத் திருமணம் செய்ததை விமர்சித்து
ஒரு செய்தித் துணுக்கு வெளியிட்டது. இது கூட்டணிக் கட்சிகளின் வேண்டுகோளின்படி உடனடியாக
நீக்கப்பட்டாலும், அது இணையவெளியில் உயிர்வாழ்ந்த கொஞ்ச நேரத்தில் பலருக்கும் சென்றடைந்து
விட்டது. இந்த விஷயம் பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிகழ்வு என்றெண்ணி
ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்த விவாதங்கள் மேற்கொண்டு இருக்கின்றன. பாஜகவின் உள்ளிருந்தேகூட
இது சற்று நாகரிகக் குறைவான செயல் என்ற விமர்சனமும் எழுந்தது. வெறும் வாயை மெல்லும்
ஊடகங்களுக்கு அவல் கிடைத்தாற் போல் ஆகிவிட்டது.
இந்த விமர்சனத்தை நாம் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு
முன்னால் இந்த விவாதங்களினால் கட்டமைக்கப்படுகிற விஷயங்கள் என்னவென்று பார்த்தால்,
‘இறந்தவர்களை விமர்சிக்க கூடாது, பழைய வரலாறுகளைக் கையிலெடுத்துப் பேசக்கூடாது, ஈவெரா
என்பவரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தக் கூடாது’ என்பவைதான். இவையெல்லாம்
சற்றும் சரியற்ற, உண்மைக்குப் புறம்பான, நாம் பின்பற்ற முடியாத, பின்பற்றக்கூடாத கருத்துக்கள்!
இவையே ஊடகங்களால் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டுப் பரப்பப்படுகின்றன.
பாஜகவின் இந்திய மற்றும்
தமிழகத் தேவை
தேசபக்தியும் இந்துத்துவமும் பாஜகவின் உயிர்
மூச்சு. இவற்றை எதிர்க்கின்றவர்களுக்கு எதிரான பிரசாரத்தை செய்யவேண்டிய கடமை பாஜகவுக்கு
முதன்மையானது. ஆனால் இந்த மாதிரி திராவிடக் கொள்கை விமர்சனங்களை பாரதிய ஜனதா கட்சி
கையிலெடுக்கும்போது கைக்கொள்ள வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை மறக்காமல் பின்பற்றினால்,
திருவள்ளுவர் காவி பிரச்சினையில் கிடைத்த வெற்றியை பாரதிய ஜனதா கட்சி உறுதியாகப் பெறும்.
தமிழக மக்களை திராவிட மாயையிலிருந்து நிச்சயமாக மீட்டெடுக்கலாம். சரியான விமர்சனமாக
இருந்தாலும், சிற்சில புதைகுழிகளை உள்ளடக்கிய விமர்சனங்களை பாரதிய ஜனதா கட்சி செய்யும்பொழுது,
புகழ்பெற்ற திரைப்பட நகைச்சுவைக் காட்சியைப் போல் ‘கைய புடிச்சு இழுத்தியா’ என்ற மனப்பான்மை
தமிழக ஊடகங்களுக்கு வந்துவிடுகிறது. இதனால், பிரச்சினை நீர்த்துப் போவதோடு முயற்சிக்கு
எதிர்மறை பலனையும் கொண்டுவந்துவிடுகிறது.
பாஜக கொள்கை
2019ம் ஆண்டில் மிகப்பெரிய பெரும்பான்மையோடு
இந்திய அளவில் பாராளுமன்றத்தை வென்றெடுத்த பாரதிய ஜனதா கட்சி, சென்ற 5 ஆண்டுகளில் ஆட்சி
செய்தது போல அல்லாமல், தாம் நினைத்த, கொள்கை சார்ந்த பல நிலைப்பாடுகளை, அதன் தேர்தல்
வாக்குறுதிகளாகக் கொடுத்தனவற்றை, வரிசையாக நிறைவேற்றி வருகிறது. முத்தலாக் சட்டம்,
காஷ்மீர் பிரச்சினை சரி செய்யப்பட்டது, அயோத்திப் பிரச்சினையில் அமைதியாகக் காத்திருந்து
உச்சநீதிமன்றத்தில் வென்றது, தற்போது குடியுரிமை சட்டத் திருத்தம் எனத் தெளிவான உறுதியான
பாதையில் சென்று கொண்டிருக்கிறது மத்திய அரசு.
இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக ஆதரவைப்
பெற்ற பாஜக, தேர்தலில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது. பாரதிய ஜனதா
கட்சியின் மேல் மக்களுக்கு எதிர்ப்புணர்வை மிக எளிதாகத் தூண்டி விடக் கூடிய காரணிகளை
திராவிடக் கொள்கையாளர்கள் கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆகவே எடுக்கப்படவேண்டிய செயல்நிலைப்பாடுகளைத்
தெள்ளத்தெளிவாகத் தமிழகத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. திராவிடம் என்ற மாயையிலிருந்து
மக்களை மீட்டெடுக்க வேண்டும். இந்த திராவிட கொள்கை மற்ற மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமலும்
செய்துவிட வேண்டும். ஆகையால் மத்திய பாஜக இந்த விஷயத்தைப் பாராமுகமாகவோ அல்லது தேவையற்ற
ஒரு விஷயமாகவோ அல்லது தமிழக பாரதிய ஜனதா கட்சியே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அளவிலோ
விட்டுவிடுவது சரியாக இருக்காது. அதேநேரம் தமிழக பாரதிய ஜனதா கட்சி இது தொடர்பான நெறிமுறைகளை
மத்திய பாரதிய ஜனதா கட்சிக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதும் முக்கியம்.
திராவிடக் கொள்கை
இப்பொழுது இருக்கும் இந்தியக் கட்சிகளில்
ஒரு கொள்கை நிலைப்பாட்டைப் பின்பற்றி அதன்படி செயல்படுகிற ஒரே ஒரு கட்சியாக பாரதிய
ஜனதா கட்சியைச் சொல்லலாம். மற்ற எல்லாக் கட்சிகளும் தேர்தல் என்ற ஒரே அடிப்படையை மனதில்
வைத்து, எல்லாக் கொள்கைகளையும் ஓரளவுக்குத் துறந்துவிட்டன. இந்துத்துவக் காவலராக இந்திய
இறையாண்மையின் காவலராக, பண்பாட்டுக் காவலராக பாஜக தன்னை வடித்துக்கொண்டிருக்கிறது.
இதிலிருந்து ஒருவேளை தேர்தல் ஆதாயங்களுக்காக விலக நேர்ந்தாலும் அதை நெறிப்படுத்துகின்ற
இயக்கமாக ஆர்எஸ்எஸ் விளங்குகிறது. பாஜக ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பின்புலமாகக் கொண்டிருப்பதால்,
இந்துத்துவத்திற்கு எதிரான எதையும், இந்தியாவுக்கு எதிரான எதையும் ஆதரிக்கக் கூடாது
என்பது மட்டுமல்ல, அதனை எதிர்க்கவும், களை எடுக்கவும், சரி செய்யவும் வேண்டுமென்கிற
கொள்கைக்கு என்றென்றும் கட்டுப்பட்டிருக்கிறது. திராவிடக் கொள்கை என்று தனியாக ஒன்றை
விவரிக்கத் தேவை இல்லை! பாஜகவின் இந்தக் கடப்பாடுகளைத் தகர்த்தெறிவதுதான் அந்தக் கொள்கை
என்றால் அது மிகை ஆகாது.
திராவிடக் கொள்கை என்பது ஆரம்பத்திலிருந்தே
ஒரு கருப்புக் கொள்கை. நீதிக்கட்சி என்று ஆரம்பித்து, அதன் வளர்ச்சி, இந்து மதம், இந்தியப்
பண்பாடு, இந்தியா இவற்றுக்கான ஒட்டுமொத்த எதிர்ப்பு என்ற அளவிலேயே பரிமாணம் எடுத்து
வளர்ந்திருக்கிறது. பெரும்பாலும் ஜனநாயக முறைமைகளின் பலவீனங்களையும் சலுகைகளையும் கையிலெடுத்து,
பண்பாட்டு விரோதமான பரப்புரைகள் மற்றும் செயல்பாடுகளால் வளர்ந்து நிற்கிறது. திராவிடக்
கொள்கை முன்னெடுக்கின்ற முதன்மையான இந்துமத எதிர்ப்பாக பிராமண மேலாதிக்கத்தை முன்னிறுத்தி,
தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதால், அதில் இருந்த சில அரைகுறை உண்மைகள், அதனால் மக்களுக்கு
ஏற்பட்டிருந்த குழப்பம் ஆகியவை, இந்தக் கோட்பாட்டின் பெரும் தீமைகளை மக்கள் புரிந்து
கொள்ளாமல் போனதற்கும், ஒரு வாய்ப்பான காலகட்டத்தில் அதற்கு ஆதரவளித்தததற்கும் ஏதுவாக
இருந்தன. இந்த முறைகளால் வெற்றிக்கனியை அவ்வப்போது சுவைத்துக்கொண்டிருந்த திராவிடக்
கொள்கையாளர்கள், அதையே வாழ்நாள் கொள்கையாக ஊனோடும் உயிரோடும் கலந்த விஷயமாக செயல்படுத்த
ஆரம்பித்து அதன் பலாபலனை இன்றுவரை பெற்றுக் கொண்டும் இருக்கிறார்கள்.
அம்பேத்கர் நிலைப்பாடு
இந்தத் திராவிடக் கொள்கை நிலைப்பாட்டின்
இன்னொரு துணைக் கொள்கையாக அம்பேத்கரின் இந்துமத விமர்சன நிலைப்பாடு இவர்களுக்குப் பயன்பட்டது.
ஆனால் தனக்கும் தான் சார்ந்த சமுதாயத்திற்கும் ஏற்பட்ட நேரடியான பாதிப்புகளினால் அம்பேத்கர்
எடுத்த சில நிலைப்பாடுகளை, ஒரு பிராமண எதிர்ப்பு அல்லது இந்துத்துவ எதிர்ப்பாகச் சித்தரித்து,
அதையே அவர் உயிரினும் மேலாக நேசித்த இந்தியத் தன்மைக்கு எதிராகக் கொண்டு போய், இன்றைக்கு
அம்பேத்கர் என்பவர் திராவிடக் கொள்கையின் இன்னொரு தூண் என்ற அளவில் கட்டமைத்தார்கள்.
இந்தப் பிரசாரத்தில் பொருட்படுத்தத்தக்க வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சி இதன் தீமையை உணர்ந்து
அம்பேத்கரை உயர்த்தித் தூக்கிப்பிடித்து தன்னுடைய செயல்பாடுகளை நிகழ்த்திக் கொண்டிருப்பதால்,
பல திராவிடக் கொள்கை பரப்பாளர்கள் ‘அம்பேத்கர் கொள்கைகளைப் பரப்புரைக்காகப் பயன்படுத்துவது
இரு பக்கமும் கூரான கத்தியைப் போன்றது, எந்தநேரமும் தம்மைத் திருப்பித் தாக்கும்’ என்று
உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த அளவில் பாரதிய ஜனதா கட்சி, வரலாற்றுத் திரிபுகளையும்
தவறான காட்சிப்படுத்தலையும் மாற்ற, தங்களுடைய வரலாற்று நாயகர்களாக அம்பேத்கரையும் திருவள்ளுவரையும்
இன்ன பிறரையும் சித்தரிப்பதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.
பாஜக செயல்திட்டம்
இந்தப் பின்னணியில் தமிழக பாரதிய ஜனதா கட்சி,
திராவிட எதிர்ப்பையும், முதன்மையாக இதன் பிதாமகராக இருக்கும் ஈ.வெ.ராமசாமி என்கிற புனித
பிம்பத்தையும் உடைத்துத் தகர்த்து, தமிழக மக்களைக் கருப்பு மாயையில் இருந்து மீட்க
வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்டது போல இதை சர்வ ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும். எடுத்து
வைக்கிற ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கியே செல்ல வேண்டும்.
தன் வாழ்நாள் முழுவதும் சமுதாயத்திற்கு
ஒரு நன்மை கூடச் செய்யாதவர்கள் இந்தத் திராவிடக்காரர்கள், குறிப்பாக ஈ.வெ.ராமசாமி.
மாறாக அவர் பல தீமைகளை வாழ்க்கையாக வாழ்ந்து காட்டி இருக்கிறார். அதில் முதன்மையானது,
இந்த வளர்ப்புப் பெண்ணைத் தள்ளாத வயதில் திருமணம் செய்து, அதன் மூலமாகத் தன்னுடைய சொந்த
வளர்ப்புத் தொண்டர்களிடையே மிகக் கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு உள்ளான செயல்.
ஈ.வெ.ராமசாமி பேசிய பேச்சுகளும் அவரைப்
பற்றி மற்றவர்கள் பேசிய பேச்சுக்களும் பதிவுகளாக இருக்கின்றன. இந்தப் பதிவுகளில் இருந்து
எந்தப் பதிவை எடுத்து வாசித்துப் பார்த்தாலும், அது அவர்களை மக்களுக்குத் தோலுரித்துக்
காட்டும். அந்தப் பணியில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.
இது அவர்களின் கட்சிப்பணி மட்டுமல்ல, சமுதாயப் பணி மட்டுமல்ல, பாரதமாதாவுக்குக் காட்டுகின்ற
தேசபக்தியின் வெளிப்பாடு ஆகும்.

Leave a Reply