ஹிந்துத்துவ அறிவியக்கச் செயல்பாடும் சென்னைப் புத்தகக் கண்காட்சியும் | ஹரன் பிரசன்னா
43வது சென்னைப் புத்தகக் கண்காட்சி 2020 ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. பல லட்சம் மக்கள் கலந்துகொண்ட இந்தப் புத்தகக் கண்காட்சியில் பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் விற்பனையாயின. தமிழ்நாடு முழுக்கப் புத்தகக் கண்காட்சிகள் நடந்தாலும், சென்னைப் புத்தகக் கண்காட்சியைப் போல மிகப் பெரிய வெற்றி பெற்ற புத்தகக் கண்காட்சி பிறிதொன்றில்லை எனலாம். இந்தியா முழுவதிலும் நடக்கும் பல புத்தகக் கண்காட்சிகளிலும்கூட, இந்த அளவு வாசகர்கள் திரளாக வந்திருந்து புத்தகங்கள் வாங்குவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் மட்டும்தான். அந்த அளவுக்கு சென்னையின் ஒரு அடையாளமாகவே மாறிப் போயிருக்கிறது சென்னைப் புத்தகக் கண்காட்சி.

இந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்தோமானால், அரசியல் புத்தகங்களில் பெரும்பாலும் கண்ணில் பட்டவை இடதுசாரிகளின் புத்தகங்களும், திராவிட அரசியலையும் ஈவெராவையும் விதந்தோதும் புத்தகங்களும்தான். ஹிந்துத்துவ இயக்கங்களையும் ஹிந்துத்துவத் தலைவர்களையும் பற்றிய புத்தகங்கள் மிகச் சொற்பமே. அதேபோல் திராவிட, கம்யூனிஸ சித்தாந்தங்களை மிகக் கறாராக வெளியில் இருந்து விமர்சிக்கும் புத்தகங்களும் மிகக் குறைவே.இதற்கான காரணங்களை மிக எளிதாகவே ஊகிக்கலாம்.

* ஹிந்துத்துவ இயக்கங்களையும் ஹிந்துத்துவ சித்தாந்தத்தையும் விமர்சித்தால் மட்டுமே இங்கே செல்லுபடியாகும் என்ற நிலை மிகத் தெளிவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மிக நீண்ட காலத் தொடர் செயல்பாட்டின் வெற்றி இது.

* இஸ்லாமிய, கிறித்துவ அடிப்படைவாதத்தை ஆதரித்தாலும்கூட அந்த எழுத்தாளர்கள் முற்போக்காளர்கள் என்றே அறியப்படுவார்கள். ஆனால் யாரேனும் ஒருவர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை ஹிந்துத்துவக் கருத்தியலின் தேவையைப் பற்றி மிக நடுநிலையாக ஒரு புத்தகம் எழுதினாலும் போதும், அவர் ஹிந்துத்துவ ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்படுவார். தன் மீதான கறை நீங்க அவர் எதிர்முனைக்குச் சென்று ஹிந்துத்துவ இயக்கங்களை வசைபாடினால் மட்டுமே அவர் மீதான கறை நீங்கும்.

* ஹிந்துத்துவ ஆதரவாளர்களாக அறியப்படும் எழுத்தாளர்கள் இங்கே இருட்டடிப்புச் செய்யப்பட்டுப் புறக்கணிக்கப்படுவார்கள். இதனால் ஒரு எழுத்தாளர் தன்னை எக்காரணம் கொண்டும் ஹிந்துத்துவ எழுத்தாளர் என்று அறிவித்துக்கொள்ள முன்வரமாட்டார்.

* ஒருவர் ஹிந்துத்துவ ஆதரவாளராக இருந்து, அவர் எழுதுவது தூய இலக்கியம் என்றாலும் கூட இங்கே அவர் புறக்கணிக்கவே படுவார். எனவே இலக்கியவாதிகள்கூட தங்கள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, ஒன்று அமைதியாக இருப்பார்கள் அல்லது தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக ஹிந்துத்துவத்துக்கு எதிராகப் பேசுவார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் யார்தான் ஹிந்துத்துவ ஆதரவுப் புத்தகங்களை எழுத முன்வருவார்கள்? அப்படியே எழுதினாலும் எத்தனை பதிப்பகங்கள் அதைப் பதிப்பக்க முன்வரும்? தொடர்ச்சியாக இத்தகைய புத்தகங்களைப் பதிப்பிக்கும் ஒரு சில பதிப்பகங்களும் கூட முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறது என்பதே யதார்த்தம். இன்றைய சூழலில் ஹிந்துத்துவ எதிர்ப்பாளராக இருப்பதே பல வகைகளில் நல்லது என்பதால், அதுவே வாய்ப்பரசியல் செய்ய வசதியானது என்பதால் பலரும் ஹிந்துத்துவக் கருத்துக்களைத் தாங்கிய புத்தகங்களைப் பதிப்பிப்பதில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார்கள்.

இதில் நம் தரப்புக்காரர்களின் பலவீனமும் ஒன்று உள்ளது. எதிர்த்தரப்புக்காரர்கள் எப்போதாவது ஹிந்து ஆதரவுக் கருத்துக்களை எழுதினால், அதன் உள்நோக்கம் என்ன என்றுகூட யோசிக்காமல் உடனடியாக அதை ஆதரித்துப் பேசுவார்கள், எழுதுவார்கள். ஆனால் ஹிந்துத்துவ ஆதரவுத் தரப்பின் கருத்தை எந்த ஒரு நிலையில் ஹிந்துத்துவ எதிர்ப்பாளர்கள் ஆதரித்து எழுதவோ பேசவோ மாட்டவே மாட்டார்கள். இதைப் புரிந்துகொள்வது முக்கியம். இதைப் புரிந்துகொண்டால்தான் எப்படி ஹிந்துத்துவ ஆதரவு எழுத்தாளர்கள் இங்கே அமைதியாக்கப்படுகிறார்கள் என்பதை உணர முடியும்.இப்படியான பல காரணங்களால், எல்லாக் கருத்துகளையும் வெளியிடும் ஒரு தளமாகச் செயல்படும் பொதுவான பதிப்பகங்கள் கூட ஹிந்துத்துவ ஆதரவுப் புத்தகங்களை வெளியிட முன்வருவதில்லை. அல்லது நூறு ஹிந்துத்துவ எதிர்க்கருத்துகள் அல்லது இடதுசாரிக் கருத்தியல் புத்தகங்களைக் கொண்டு வரும்போது ஒன்றிரண்டு ஹிந்துத்துவ ஆதரவுக் கருத்துகளைக் கொண்ட புத்தகங்களைக் கொண்டு வருகின்றன.

இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என அனைவரும் இந்தப் போலி முற்போக்கு நடுநிலையில் பீடிக்கப்பட்டிருப்பதால், புத்தகக் கண்காட்சியில் எவ்விதமான புத்தகங்கள் இருக்கும்? அப்படியானால் ஹிந்துத்துவ இயக்கங்கள் இதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

இந்த அறிவியக்க சூழலைப் பற்றி இன்னும் தமிழக ஹிந்துத்துவ இயக்கங்கள் பெரிய அளவில் புரிந்து கொள்ளவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. விஜயபாரதம் என்ற ஒரு பதிப்பகத்தை மட்டுமே ஹிந்துத்துவப் புத்தகங்களை மட்டுமே வெளியிடும் பதிப்பகம் என்று கூறலாம். தடம் பதிப்பகம் இப்போதுதான் சில புத்தகங்களை வெளியிடத் துவங்கி இருக்கிறது. மற்றபடி வேறு எந்த ஒரு பதிப்பகத்தையும் இப்படி ஹிந்துத்துவக் கருத்தியல் சார்ந்த புத்தகங்களை மட்டுமே வெளியிடும் புத்தகம் என்று சொல்லிவிடமுடியாது.

அதே சமயம் இடதுசாரி கருத்தியல் தொடர்பான கருத்துக்களை மட்டுமே வெளியிடும் பதிப்பகம் என்றால் குறைந்தது ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களாவது இருக்கும். அதேபோல் திராவிட இயக்கக் கருத்தியலைச் சார்ந்த புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்கள் நூறாவது இருக்கும்.

இதற்கு என்ன காரணம்? மிக முக்கியமான காரணம், ஹிந்துத்துவ இயக்கங்கள் எப்போதும் தங்கள் ஆற்றலை சேவையின்பால் மட்டுமே செலவிட விரும்புகின்றன. அறிவியக்கச் செயல்பாடு என்பது சேவைக்குத் துணை செய்வதாகவே இருக்கவேண்டும் என்கிற அடிப்படை மனநிலையில் இருந்து இவர்களால் வெளியே வரவே முடியவில்லை. உண்மையில் நாம் இந்தக் கருத்தைப் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் இன்றைய சூழலில் இப்படி நாம் சிக்கிக்கொள்வது நமக்கு அதிக பலனைத் தரப்போவதில்லை. நம் எதிரிகள் நம் ஆயுதங்களைத் தீர்மானிப்பார்கள் என்பதையும் நாம் கருத்தில்கொள்ளத்தான் வேண்டும்.

மானுட சேவை என்பது எத்தனை முக்கியமானதோ அதற்கு ஈடாக இந்த அறிவியக்கச் செயல்பாட்டையும் முன்னெடுக்க வேண்டும். இல்லையென்றால் நாம் கருத்தியல் ரீதியாக மிக பலவீனமானவர்கள் என்கிற மாயை மீண்டும் மீண்டும் எதிர்த்தரப்புக் காரர்களால் சொல்லப்பட்டு அது உண்மை என்றாக்கப்பட்டுவிடும். ஏற்கெனவே அப்படி ஆக்கப்பட்டுவிட்டது. இந்த நொடியிலாவது நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால், நம்மால் மீண்டும் சரிசெய்யவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம்.

அப்படியானால் ஹிந்துத்துவ இயக்கங்களும் ஹிந்துத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் அரசியல் அமைப்புகளும் என்ன செய்யவேண்டும்?

* தொடர்ந்து ஹிந்த்துத்துவ அறிவியக்கம் சார்ந்த புத்தகங்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அந்தப் புத்தகங்கள் 16 பக்க ப்ரவுச்சர்கள் போல் இல்லாமல், தெளிவான திட்டத்துடன் கூடிய நூலாக உருவாக்கப்படவேண்டும்.

* நூல் கட்டுமானம், அட்டை என எல்லாவற்றிலும் கவனம் எடுத்து மிகச் சிறப்பான தயாரிப்பில் கொண்டு வரவேண்டும்.

* அறிவியக்கம் சார்ந்தது என்பதால் அதோடு நேரடித் தொடர்பற்ற தீவிர நவீன இலக்கியப் படைப்புகளில் இருந்து விலகி இருக்கக்கூடாது. ஹிந்துத்துவ சித்தாந்தத்தைப் பற்றிய நல்ல நேர்மையான புரிதல் உள்ள இலக்கியவாதிகளின் தீவிரமான படைப்புகள் வெளிவர இயன்றவற்றைச் செய்துகொண்டே இருக்கவேண்டும். வெங்கட் சாமிநாதன், பைரப்பா போன்ற பிதாமகர்களை இங்கே நினைவுகூரலாம்.

* இவற்றையெல்லாம் விட மிக முக்கியமான விஷயம், ஹிந்துத்துவப் புத்தகங்கள் வெளிவந்தால் அவற்றை வாங்கி வாசித்து அதைப் பற்றி விவாதிக்கவோ எழுதவோ செய்யவேண்டும். இல்லையென்றால் மேலதிகப் புத்தகங்கள் வராது என்பதோடு, எழுதுபவர்கள் தங்கள் ஊக்கத்தையும் இழந்து விடுவார்கள். அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன் போன்ற இன்றைய எழுத்தாளர்களின் புத்தகங்களை இங்கே நினைவுகூரலாம்.

* ஹிந்துத்தவ அரசியல் அமைப்புகள் இத்தகைய புத்தகங்களைத் தங்கள் தொண்டர்களுக்குக் கொண்டு சேர்ப்பது மிக முக்கியமானது. தொண்டர்களை சித்தாந்த ரீதியாகத் தயார்ப்படுத்த இது போன்ற புத்தகங்களின் தேவை அவசியம். புத்தகங்கள் மட்டுமே தெளிவான ஒரு பார்வையை ஹிந்துத்துவ அரசியல் தொண்டர்களுக்குத் தரமுடியும்.

* ஹிந்துத்துவ ஆதரவுப் புத்தகங்களைப் பரவலாக்குவது போலவே, ஹிந்துத்துவ எதிர்ப்புப் புத்தகங்களின் பொய்களையும் இணையாக அம்பலப்படுத்தவேண்டும்.

* ஹிந்துத்துவ ஆதரவுப் புத்தகங்கள் நூலக ஆணைகளில் புறக்கணிக்கப்பட்டால் அது தொடர்பாக வெளிப்படையாகப் போராட வேண்டும். பொய்களைச் சுமந்து திரியும் புத்தகங்கள் நூலகங்களுக்கு வாங்கப்பட்டால் அதை எதிர்த்தும் போராடவேண்டும்.

இப்படிப் பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு செயல்படாவிட்டால், சென்னைப் புத்தகக் கண்காட்சி என்றல்ல, எந்தப் புத்தகக் கண்காட்சிக்குப் போனாலும் ஈவெராவும் மாவோவுமே நம்மை வரவேற்பார்கள். ஹிந்துத்துவ அரசியல் இயக்கங்கள் இதைப் புரிந்துகொண்டு செயலாற்றவேண்டியது உடனடியாக மேற்கொள்ளவேண்டிய முக்கியமான செயல்பாடு என்பதில் மாற்றுக் கருத்தே இருக்கமுடியாது.

Leave a Reply