குடியுரிமைச் சட்டத் திருத்தம் (CAA) லோக் சபாவிலும் ராஜ்ய சபாவிலும் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்கிறது. மிக நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினை இது. பல்லாண்டுகளாக வேண்டுமென்றே காங்கிரஸ் அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கும் முக்கியமான சட்டங்களையெல்லாம் மோடி தலைமையிலான இந்த பாஜக அரசு தைரியமாக சட்டப்படி நிறைவேற்றிக்கொண்டு வருகிறது. அதில் மிக முக்கியமானது இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம்.
அஸ்ஸாமில் தேசியக் குடியுரிமைப் பதிவேடு (NRC) நிறைவேற்றப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டதன் பெயரில் மத்திய அரசு அதை நிறைவேற்றியது. இதை ஒட்டியே தேசியக் குடியுரிமை திருத்தமும் (CAA) நிறைவேற்றப்பட்டதால், இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று எதிர்க்கட்சிகள் பல வதந்திகளைக் கிளப்பி விட்டன. அஸ்ஸாமில் சட்ட விரோதமாகக் குடியேறிய ஹிந்துக்களுக்குக் குடியுரிமை தரவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றன எதிர்க்கட்சிகள். மத்திய அரசு தெளிவாக இவை இரண்டும் ஒன்றல்ல என்று சொன்னாலும் எதிர்க்கட்சிகள் அதை ஏற்றுக்கொள்ளாமல் நாடு முழுக்க பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கின.
தேசியக் குடியுரிமை பதிவேட்டை எல்லா மாநிலங்களிலும் இந்த அரசு கொண்டு வரப் போகிறது என்றும், அதில் முஸ்லிம்கள் மட்டுமே வேண்டுமென்றே குறிவைக்கப்படுவார்கள் என்ற பொய்யையும் பல முஸ்லிம்கள் நம்பினர். வேறு பல முஸ்லிம்கள் இதனைப் பொய் என்று தெரிந்துகொண்டாலும், இதை எதிர்க்க முன்வராமல், அமைதியாக இருந்து ஆதரித்தனர். அஸ்ஸாமில் கொண்டு வரப்பட்டது போன்ற அதே அடிப்படையில் இந்தியா முழுக்க தேசியக் குடியுரிமை பதிவேட்டைக் கொண்டு வரமுடியாது என்பது குழந்தைக்கும் தெரியும்.
இந்தியா முழுக்க தேசியக் குடியுரிமைப் பதிவேட்டில் அனைவரும் பதிந்துகொள்ள வேண்டும் என்று ஒருவேளை ஆணை வந்தாலும், அது பல வகைகளில் இந்தியர்கள், அதாவது எந்த மதத்தைச் சேர்ந்த இந்தியராக இருந்தாலும் அவர்கள் தங்கள் குடியுரிமையை மிக எளிதாக நிரூபிக்கும் வண்ணமே இருக்கும். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஒட்டிப் பல பொய்களை அவிழ்த்துவிட்டனர்.
(Image from:
ahmedabadmirror.indiatimes.com)
இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அவதிப்பட்டு இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் மதச் சிறுபான்மையினர் (கிறித்துவர், பார்சிக்கள், சீக்கியர்கள், ஹிந்துக்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள்) மட்டுமே இந்தியர்களாக முடியும் என்பது சட்ட திருத்தத்தின் முக்கியப் பிரிவு. இதில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் பொய்ப் பிரசாரம் செய்தனர். முஸ்லிம்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்! இவர்கள் அங்கே மத ரீதியாகக் கொடுமை செய்யப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை! ஷியா – ஸுன்னி பிரச்சினையைக் கணக்கில் கொண்டாலும், முஸ்லிம்கள் தஞ்சம் புக சுற்றி ஏகப்பட்ட இஸ்லாமிய நாடுகள் உள்ளன. ஆனால், வழக்கம்போல வெகுஜன முஸ்லிம்களைப் பகடைக் காயாக்கினர் எதிர்க்கட்சிகள்.
பாஜக அரசுக்கு எதிராக எப்போது வாய்ப்புக் கிடைக்கும் கலவரம் செய்யலாம் என்று காத்திருக்கும் இந்திய எதிர்ப்புக் கட்சிகள் உடனே இந்த வாய்ப்பைப் பிடித்துக்கொண்டன. ஹிந்து விரோத திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை தொடர்ந்து தினமும் பொய்களையும் வதந்திகளையும் பரப்பின. கூடுதலாக, இலங்கையில் உள்ள ஹிந்துக்களான ஈழத் தமிழர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று திமுகவும் காங்கிரஸும் பேச ஆரம்பித்தன.
* இத்தனை வருடம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் ஈழத் தமிழர்களை ஹிந்துக்களாக அங்கீகரித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை?
* ஏன் திமுக இத்தனை காலம் ஈழத் தமிழர்களை இன அடிப்படையில் மட்டுமே பார்த்தது?
* இங்கே ஈழத் தமிழர்களின் ஆதரவாளர்களாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு அரசியல் செய்பவர்கள் (வைகோ, திருமாவளவன், நெடுமாறன் போன்றவர்கள்) ஏன் ஈழத் தமிழர்கள் ஹிந்துக்களே என்று இத்தனை நாள் சொல்லவில்லை? ஏன் இவர்கள் தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எப்போதும் எடுத்து வந்தார்கள்? ஏன் இப்போது திடீரென்று ஈழத் தமிழர்கள் ஹிந்துக்களே என்கிறார்கள்? (இதில் நெடுமாறன் தற்போது, “ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை தரப்பட்டால் சிங்கள அரசு ஈழத் தமிழர்களை ஒருபோதும் ஈழத்துக்குத் திரும்ப அனுமதிக்காது” என்று கருத்து சொல்லியுள்ளார்.)
* சிங்கள இனவாத அரசு என்பதுதானே இவர்களது இத்தனை நாள் முழக்கம்? சிங்கள பௌத்த மதவாத அரசு என்று ஏன் இத்தனை நாள் சொல்லவில்லை? எப்போதும் தமிழ்நாட்டில் பௌத்தத்தைத் தூக்கிப் பிடிக்கும் திருமாவளன் எப்படி சிங்கள பௌத்தத்தை எதிர்க்கிறார்.
* எல்.டி.டி.ஈ அழிக்கப்படுகிறது என்ற போர்வையில் தமிழ் ஹிந்துக்கள் அங்கே கொன்று குவிக்கப்பட்டபோது இந்தியாவில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்தது என்ன? அப்போது அரசில் பங்கு பெற்றிருந்த திமுக செய்தது என்ன? அன்றெல்லாம் தமிழர்கள் இன ரீதியாக இருந்தபோது இன்றெப்படி திடீரென்று ஈழத் தமிழர்கள் ஹிந்து மத ரீதியிலான மக்கள் ஆனார்கள்?
இத்தனை இரட்டை நிலைப்பாட்டுடன், பொய்யுடன் இந்தப் பிரச்சினையை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அணுகுகின்றன. இதையெல்லாம் யோசிக்க விடாமல் ‘முஸ்லிம்கள் மத ரீதியாகத் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்’ என்ற பொய்யையே திரும்ப திரும்பச் சொல்லி வருகின்றன இக்கட்சிகள். உண்மையில் இந்த சட்டத் திருத்தத்துக்கும் இங்கே வசிக்கும் இந்தியர்களான முஸ்லிம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இன்னும் சொல்லப் போனால், இங்கே வசிக்கும் முஸ்லிம்கள் இந்தியக் குடிமக்களே என்று சந்தேகமே இல்லாமல் இந்தச் சட்டத் திருத்தம் சொல்லியுள்ளது என்பதுதான் உண்மை. இந்தச் சட்டத் திருத்தத்தின் நோக்கம், அண்டை முஸ்லிம் நாடுகளில் உள்ள மதச் சிறும்பான்மையினர் பற்றி மட்டுமே அன்றி, இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களைப் பற்றியது அல்ல.
அஸ்ஸாம் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டைப் பொருத்தவரை 1985ல் ராஜிவ் தலைமையிலான அரசு ஓர் ஒப்பந்தத்தை அசாம் மாணவர் அமைப்புடனும் வேறு சில குழுக்களுடனும் கையெழுத்திட்டது. அதன்படி 1971 மார்ச் 24ம் தேதிக்கு முன்பு அசாமில் வாழ்ந்ததாக நிரூபிக்கமுடியாதவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று கருதப்படுவார்கள். ஆனால் இந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் நிறைவேற்றப்படவே இல்லை.
பின்பு 2003ல் மன்மோகன் சிங், அண்டை முஸ்லிம் நாடுகளில் உள்ள மதச் சிறுபான்மையினர் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்பதைச் சொல்லி அவர்களுக்கு இந்தியா அடைக்கலம் தரவேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே பேசினார்.
எனவே மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்தம் திடீர் என்று வந்த ஒன்றல்ல. பல்லாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஒரு சட்டத் திருத்தம்.
அஸ்ஸாமில் குடியுரிமைப் பதிவேடு என்பது உச்சநீதிமன்றம் பலமுறை நிறைவேற்றச் சொன்ன ஒரு விஷயம். அஸ்ஸாமில் 2016 ஜனவரி 31க்குள் இதைச் செய்து முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 2014ல் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனாலும் முதல் பதிவேட்டின் அறிக்கை டிசம்பர் 2017ல்தான் வெளியிடப்பட்டது. இரண்டாவது வரைவு ஜூலை 30,
2018ல்தான் வெளியிடப்பட்டது. இதை எதையும் கணக்கில் கொள்ளாமல், வேண்டுமென்றே உண்மைகளை மறைத்து, பொய்யைப் பரப்பி, இத்தனை தேவையற்ற பதற்றத்தை நாடு முழுக்கப் பரப்புகின்றன எதிர்க்கட்சிகள். குடியுரிமைப் பதிவேடு (NRC) பிரச்சினை இருக்கும்போதே குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் (CAA) மத்திய அரசு கொண்டு வந்தது வசதியாகப் போயிற்று இவர்களுக்கு.
2018ல்தான் வெளியிடப்பட்டது. இதை எதையும் கணக்கில் கொள்ளாமல், வேண்டுமென்றே உண்மைகளை மறைத்து, பொய்யைப் பரப்பி, இத்தனை தேவையற்ற பதற்றத்தை நாடு முழுக்கப் பரப்புகின்றன எதிர்க்கட்சிகள். குடியுரிமைப் பதிவேடு (NRC) பிரச்சினை இருக்கும்போதே குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் (CAA) மத்திய அரசு கொண்டு வந்தது வசதியாகப் போயிற்று இவர்களுக்கு.
பெரும்பாலான மக்கள் அமைதியாகவும் உண்மையை உணர்ந்தும்தான் இருக்கின்றனர். இதைக் கண்டு எரிச்சலான நடுநிலையற்ற ஊடகங்கள் இந்தியாவே பற்றி எரிவது போன்ற பிரமையை உண்டாக்குகின்றன. உண்மையில் போராடுவது பொதுமக்கள் அல்ல. நகர்ப்புற நக்ஸல்களும் கம்யூனிஸ்ட்டுகளும் இந்திய எதிர்ப்பாளர்களும் மட்டுமே. ஆனாலும், இந்தியா முழுமைக்கும் ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் மக்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற ஒரு அமைதியான வாழிடம், இந்தியாவில் வாழும் எந்த ஒரு மதச் சிறுபான்மையினருக்கும் உலகில் எங்கேயும் கிடைக்கமுடியாது என்பதே நிதர்சனம். அதேபோல் உலக ஹிந்துக்களுக்கான ஒரு அமைதியான வாழிடமாக இந்தியாவே இருக்கமுடியும். உலக ஹிந்துக்களை, மதரீதியாகத் துன்புறுத்தப்படும் ஹிந்துக்களை இந்தியா அங்கீகரிக்கவேண்டும். இதைச் செய்யாவிட்டால் பாஜக அரசு அமைந்து எந்த ஒரு பயனும் இல்லை. இதற்காகத்தான் மக்களும் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதுவும் தொடர்ச்சியாக இரண்டு முறை!
ஹிந்துக்களுக்கு, அதுவும் இஸ்லாமிய நாட்டில் மத ரீதியாகக் கொடுமைப்படுத்தப்படும் ஹிந்துக்களுக்கு ஆதரவு தருவது என்பதும், இங்கே இருக்கும் முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதும் ஒன்றுடன் ஒன்று தொடர்பே இல்லாதது. முதலாவது உண்மை, பின்னது அநியாயமான பொய். இந்திய நாட்டில் மதவேறுபாடின்றி எந்த ஒரு இந்தியனுக்கும் ஒரே போன்ற உரிமையே உள்ளது. இது இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கிறித்துவருக்கும் நிச்சயம் நன்றாகத் தெரியும். ஆனாலும் இவர்களைக் கேடயமாக்கி எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான பொய்ப்பிரசாரத்தில் ஈடுபடுகின்றன. அதற்கு சில முஸ்லிம்களும் கிறித்துவர்களும் துணை போகிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது.
ஏன் எதிர்க்கட்சிகள் இப்படிச் செய்கிறார்கள்?
* பாஜகவின் தொடர் வெற்றி தரும் அச்சம்.
* முஸ்லிம்கள், கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் பரவலாக பாஜக அரசின் மீது கொள்ளும் நம்பிக்கை.
* ஓட்டரசியல், மத வெறுப்பரசியல் செய்ய முடியாதபடி இந்தியர் என்ற எண்ணம் இந்திய முழுமைக்கும் பரவிவிடுமோ என்கிற அச்சம்.
* நாட்டை எப்போதும் ஒரு கொதி நிலையில் வைத்திருப்பதன் மூலம் பாஜக அரசுக்கு எப்படியாவது ஒரு கெட்ட பெயரை கொண்டு வந்துவிட முடியாதா என்கிற ஏக்கம்.
* சட்டப்பிரிவு 370 திரும்பப் பெறப்பட்டது, அயோத்தியில் ராமர் கோவில் தீர்ப்பு போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நகர்வுகள் எவ்வித ஒரு சிறு கீறலையும் கூட நாட்டில் கொண்டு வரவில்லை என்ற கோபம்.
எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையைப் பரப்ப இவையெல்லாம்தான் காரணம்.
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் சொன்ன பொய்களையெல்லாம் ஒருவேளை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அவை கீழே உள்ள உண்மைகளை விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்தியாவில் சட்ட விரோதமாகக் குடியேறி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வசிக்கும் மதச் சிறுபான்மையினரில் கிறித்துவர்களும் இந்தியக் குடியுரிமை பெறலாம் என்று சட்டம் அங்கீகரிக்கிறது. அப்படியானால் பாஜக அரசு கிறித்துவ சிறுபான்மையினரை ஏற்றுக்கொள்கிறது என்று எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளத் தயாரா?
* மியான்மார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஹிந்துச் சிறுபான்மையினரைப் பற்றி இந்த அரசு எதுவும் சொல்லவில்லை. அப்படியானால் இந்தச் சட்டம் மத அடிப்படையில் அமைந்த ஒன்றல்ல என்று எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா?
* இலங்கைத் தமிழர்கள் ஹிந்துக்களே. அவர்களை ஏற்றுக்கொள்ள இந்த அரசு இச்சட்ட திருத்தத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியானால் இந்தச் சட்டம் ஹிந்துக்களைக் குறி வைத்து எழுதப்பட்ட சட்டத் திருத்தம் அல்ல என்று எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா?
எதிர்க்கட்சிகளின் பித்தலாட்டங்களுக்கு இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகள்.
இலங்கையில் நடப்பது ஹிந்து ஒழிப்பே என்று பேசிய ஒரே குரல் ஹிந்துத்துவர்களின் குரல் மட்டுமே. அப்போது ஈழத் தமிழர்களை மத ரீதியாகப் பிளவு படுத்தப் பார்க்கிறார்கள் என்று இங்கிருக்கும் ஈழத் தமிழ் ஆதரவு வியாபாரிகள் கூவினார்கள். இலங்கையில் ஹிந்து நாடு ஒன்று அமையுமானால் அதை நிச்சயம் ஆதரிக்கவேண்டும் என்று எழுத்தாளரும் ஹிந்துத்துவருமான அரவிந்தன் நீலகண்டன் மிக வெளிப்படையாகவே பேசினார். அப்போதெல்லாம் அதை எதிர்த்தவர்கள், இன்று ஒரு சட்ட திருத்தம் வரவும், ஈழத் தமிழர்களும் ஹிந்துக்களே என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
திராவிடக் கட்சிகள் எத்தனை முறை இங்கே இருக்கும் ஈழத்தமிழர்களின் அகதி முகாமுக்குப் போயிருக்கிறார்கள்? ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கை குறித்து இவர்களுக்கு என்ன அக்கறை உள்ளது? ஈழத்தமிழர்களைத் தங்கள் கொள்கை அரசியலுக்கு கருவேப்பிலையைப் போல் பயன்படுத்துவதன்றி இந்த கட்சிகள் செய்தவைதான் என்ன? இவை எதற்கும் இக்கட்சிகளிடம் நேர்மையான பதில் இருக்காது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்தம் அண்டை இஸ்லாமிய நாடுகளில் சொல்லொணாத் துன்பத்தில் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கூட இழந்து வாழும் சிறுபான்மையினருக்கானது மட்டுமே. இது ஹிந்துக்களுக்கு உதவுமா என்றால், ஆம் உதவும், உதவவேண்டும், அது இந்திய அரசின் கடமை, ஒவ்வொரு இந்தியனின் கடமை, ஒவ்வொரு ஹிந்துவின் கனவு. இதைச் செய்வதால் அடுத்து வரும் தேர்தலில் இந்த அரசு தோற்றாலும் கவலையில்லை. ஓட்டுக்காக மட்டுமே நாட்டை ஆள முடியாது.
அதேபோல் இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் ஹிந்துக்களுக்கும் இந்த அரசு உரிய உரிமைகளை வழங்க ஆவன செய்யவேண்டும். இதுநாள் வரை இப்படியான அகதிகள் இந்தியக் குடியுரிமை பெறவேண்டும் என்று கேட்டதாக நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையை ஒட்டிப் பேசிய அகதிகள் சிலர், தாங்கள் இந்தியக் குடியுரிமை கேட்டதாகச் சொன்னார்கள். இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள்!
ஈழத் தமிழர்களின் உரிமைக்காக இங்கே தமிழ்நாட்டில் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் அத்தனை பேரும் ஹிந்து எதிரிகளாகவும் இந்திய எதிரிகளாகவும் நகர்ப்புற நக்ஸல்களாகவும் இருப்பது தற்செயல் அல்ல. இப்படி இருந்தால் இங்கே தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஈழத் தமிழர்கள் பற்றிய பிம்பம் என்னவாக இருக்கும் என்பதைத் தனியே சொல்லவேண்டியதில்லை. இந்தச் சட்டத் திருத்தம் வந்த பிறகுதான் பலரின் இரட்டை நாக்குகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. ஈழத் தமிழர்கள் இனியாவது ஹிந்து, இந்திய எதிர்ப்பாளர்களிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்ளவேண்டும். அதற்கான அவசியம் இப்போது மிக முக்கியமாகிறது.
ஈழத் தமிழ் அகதிகள் ஹிந்துக்களே என்று ஹிந்து விரோத திராவிடக் கட்சிகளைச் சொல்ல வைத்தது இந்த குடியுரிமைச் சட்டத்தின் ஆகப்பெரிய சாதனை. இனி ஈழத்தமிழ் ஹிந்து அகதிகள் விஷயத்தில் திராவிடக் கட்சிகளுக்கு இரட்டை வேடம் போட வாய்ப்பில்லை என்பது பெரிய நிம்மதி. இதை ஈழத் தமிழர்களும் நிச்சயம் உணர்ந்துகொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன்.