Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) – பாகம் 10 – லாலா லஜ்பத் ராய் | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்



பகுதி 10 – சுத்தி, சங்கதன், டான்ஸிம் இயக்கங்கள்
ஆர்ய சமாஜத்தால்
பிரசாரம் செய்து வளர்க்கப்பட்ட ஆக்ரோஷமான ஹிந்துமதம், ஆரம்பத்தில் அரசியல் கலக்காமல்
இருந்தது. ஆனால் அது பின்னால் அரசியல் கருத்தாங்களால் வலுப்பெற்றது என்பதை மறுக்க இயலாது.
நாம் இப்போது அடிக்கடி
கேள்விப்படுகின்ற ‘சுத்தி’ இயக்கத்தின் தோற்றத்தையும் கட்டமைப்பையும் ஆராய்வதற்கு இது
ஒரு பொருத்தமான இடமாகத் தோன்றுகிறது. இந்த இயக்கம் ஆர்ய சமாஜம், ஏன் சீக்கிய மதத்தைப்
போலப் பழமையானது. ஆர்ய சமாஜ், தான் பிரசாரம் செய்து வரும் மதம் உலகளாவிய மதம் என்று
கூறுகிறது. உலகம் முழுவதையும் அதன் குடைக்கீழ் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வகையில் அதன் கூற்றுகள் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைப் போன்ற குறிக்கோள்களைக் கொண்டதாகவும்
பரந்ததாகவும் உள்ளன. ஒரு காலத்தில், ஆர்ய சமாஜின் மிகவும் கட்டுப்பாடான பிரிவு அவர்கள்
இந்துக்கள் அல்லாதவர்கள் என்று கூரைமேலிருந்து பறைசாற்றிக்கொண்டிருந்தது; தவிர, அவர்கள்
இந்துக்கள் அல்லாதவர்களுடன் சாப்பிடவும் குடிக்கவும் திருமணம் செய்து கொள்ளவும் சுதந்திரம்
அளிக்கப்பட்டிருந்தது; மேலும் இந்துக்கள் கூட ஆர்ய சமாஜில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு
ஒரு குறிப்பிட்ட அளவு சுத்திக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற முறை இருந்தது.
அரசியல் கருத்தாக்கங்கள் கொண்ட மற்றொரு பிரிவு, சுவாமி ஷ்ரதானந்த்
(அப்போதைய லாலா முன்ஷி ராம்) தலைவராக இருந்த மகாத்மா கட்சியின் இந்த கூற்றுக்கள் அனைத்தையும்
எதிர்த்துவந்தது.
இந்தக் கட்சியைப் பொருத்தவரை, சுத்தி என்பது மதமாற்றத்திற்கான ஒரு சடங்கு,
அதாவது சர்சில் அனுமதிப்பதற்குத் தேவையான ஒரு முறை. அதற்கு எந்த அரசியல் முக்கியத்துவமும்
இல்லை. சிறிது காலத்திற்கு, லாலா முன்ஷி ராமின் கட்சி இந்த அணுகுமுறையைத் தக்க வைத்துக்
கொண்டது. அவர்களில் சிலர் கோட்பாட்டு ரீதியாகத் தாங்கள் நம்பியதை நடைமுறைக்குக் கொண்டுவர
முயன்றனர். அந்த நேரத்தில்தான் தற்போது பிரபலமான தரம்பால் ஒரு ஹீரோவாக மாற்றப்பட்டார்.
விரைவில், இந்த யோசனையை வலியுறுத்துவதன் மூலமும், அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதன்
மூலமும், இந்து சமூகத்தின் அனுதாபத்தை இழக்க நேரிடும் என்பதை அவர்கள் கண்டுகொண்டனர்.
அது அவர்களுக்குச் சிக்கலைத் தோற்றுவித்தது. ஏனெனில் அவர்களை இயக்கும் உதவிகள் பலவற்றைத்
தந்துகொண்டிருந்தது அந்தப் பொது இந்து சமூகம்தான். எனவே அவர்கள் தங்கள் எண்ணத்தையும்
அணுகுமுறையையும் மாற்றிக்கொண்டனர்.
நான் அப்போது ஆர்ய
சமாஜின் தீவிர உறுப்பினராக இருந்ததால், ஐக்கிய மாகாணங்கள், ராஜ்புதானாவின் மல்கனா மற்றும்
பிற ராஜபுத்திரர்களை ஆர்ய சமாஜத்திற்குள் கொண்டுவர கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன
என்பதை அறிவேன். அலிகார் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள சிலர் சமாஜத்திற்குள் கொண்டு
வரப்பட்டனர் என்பது கூட உண்மையே. இருப்பினும், மல்கனாக்கள் ‘ஆரியர்களாக’ இருக்க விரும்பவில்லை;
அவர்கள் விரும்பியது மீண்டும் தங்கள் சொந்தச் சாதியில் சேர்க்கப்பட வேண்டும், அதுவும்
சமமான அடிப்படையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதைத்தான். இதற்கு மரபுவழி ராஜபுத்திரர்கள்
உடன்பட மாட்டார்கள். எனவே, மரபுவழி ராஜபுத்திரர்கள் அவர்களைச் சேர்த்துக்கொள்ளச் சம்மதிக்கும்
வரை இந்த விஷயம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த அணுகுமுறை மாற்றத்தின் பின்னணி
என்ன என்பதும் தெளிவு. முஸ்லிம் சமூகத்தின் வகுப்புவாத
க் கோரிக்கைகள், மியான் பாஸ்ல்-இ-ஹுசைனின் கொள்கைகள்,
முல்தான் கலவரம் ஆகியவை இந்த மாற்றத்தை உருவாக்கத் தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
சுத்தி என்ற கொள்கை இப்போது இந்து மகாசபாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முடிவின்
பின்னணியில் உள்ள யோசனை ஓரளவு அரசியல், ஓரளவு வகுப்புவாதம், ஓரளவு மனிதாபிமானம் கலந்தது
என்பதை நான் ஏற்றுக்கொள்ளச் சித்தமாக இருக்கிறேன். இறுதியில் உள்ளது தீண்டத்தகாதவர்களின்
சுத்தியில் தெளிவாக வெளிப்படுகிறது.
மரபுவழி இந்துக்களின்
அணுகுமுறையில் ஏற்பட்ட இந்த மாற்றம் முஸ்லிம்களை எரிச்சலடையச் செய்வது இயல்பான ஒன்று.
ஏனெனில் இந்த மாற்றம் இந்திய வரலாற்றில் முற்றிலும் புதிய அத்தியாயத்தைத் திறக்கிறது.
இந்த இயக்கம் எழுப்பிய கேள்வி அடிப்படையானது. இஸ்லாமிய தரப்புப் பார்வையை ஒருவர் புரிந்து
கொள்ளவும், அதற்கான பின்னணியை உணரவும் முடியும் என்றாலும், ஹிந்து அல்லாத இயக்கங்கள்
மதமாற்றம் செய்வதற்கான சுதந்திரம் தரப்பட்டதன் காரணமாக, ஆர்ய சமாஜத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான
வழியை ஒருவர் காண முடியாது. இந்த இயக்கம் நிலை நிறுத்தப்பட்டது என்ற உண்மையை தத்துவ
ரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் தொடர்ச்சியாக நேரடி அரசியல் தாக்கங்கள் உள்ளன
என்பதை மறுக்க முடியாது. அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கான ஒரே வழி வகுப்புவாத
பிரதிநிதித்துவத்தை அகற்றுவதே ஆகும். இப்போதைக்கு, டெல்லி ஒற்றுமை மாநாட்டில் எடுக்கப்பட்ட
முடிவுகள் இந்த விஷயத்தில் இறுதி வார்த்தையாக ஏற்றுக்கொள்ளப்படலாம்
இந்தக் கட்டத்தில்
நாம் சங்கதன் மற்றும் டான்ஸிம் இயக்கங்களையும் விவாதிக்கலாம். சங்கதன் இயக்கம் (அல்லது
அதன் சரியான பெயரான இந்து சபா இயக்கம் என்று அழைக்கப்படுவது) ஒரு பழைய கருத்தாக்கத்தைக்
குறிக்கிறது. ஆர்ய சமாஜின் நிறுவனர் மனதில் இந்தக் குறிக்கோள் இருந்தது. ஆனால் சமாஜ்
அதன் குறுங்குழுவாத முன்னேற்றங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தியதால் அந்தக் குறிக்கோளை
உணரத் தவறிவிட்டது. எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் லாகூர் அரசு கல்லூரியின் மாணவனாக
இருந்தபோது, லாகூரில் உள்ள ஷேகுபுராவைச் சேர்ந்த ராஜா ஹர்பன்ஸ் சிங்கின் வீட்டில் ஒரு
இந்து சபை உருவாக்கப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. அந்த சபா ஆரம்பக் கட்டத்திலேயே
இறந்துவிட்டது. பின்னர் அந்த இயக்கம் கடந்த நூற்றாண்டின் இறுதியில் லாகூரின் ரெய்ஸில்
மறைந்த லாலா பால்மோகண்டின் வீட்டில் புத்துயிர் பெற்றது. எவ்வாறாயினும், மறைந்த ஆர்.பி.லால்
சந்த் உயிர்ப்பிக்கும் வரை இந்த அமைப்பு கூட கிட்டத்தட்ட உயிரற்றதாகவே இருந்தது.
ஆனால் எந்தக் காரணத்தாலோ
இந்த இயக்கம் ஒருபோதும் வேரூன்றவில்லை. தனிப்பட்ட உறுப்பினர்களுக்குப் பயனளித்துள்ளபோதிலும்
அது ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இதற்கு இரண்டு வலிமையான
போட்டியாளர்கள் இருந்தனர்: அரசியல் ரீதியாக இந்திய தேசிய காங்கிரஸ், சமூக-மத ரீதியாக
ஆர்ய சமாஜ். இந்த இரண்டு பெரும் சக்திகளுக்கு இடையே அது மாட்டிக்கொண்டது, அது ஒருபோதும்
வெற்றிபெறப் போதுமான அளவு தன்னை உயர்த்திக்கொள்ள முடியவில்லை. தற்போதைய இயக்கம் இந்து-முஸ்லிம்
நிலைமையின் ஒரு எதிர்வினை. அதன் நோக்கங்கள், குறிக்கோள்களில், அதன் அரசியலமைப்பில்
முஸ்லிம் விரோதப்போக்கு என்று எதுவுமில்லை. ஆனால், வெளிப்படையாகச் சொல்வதானால், அது
முஸ்லிம் விரோதமானது என்ற உண்மையே அதை உயிரோடு வைத்திருக்கிறது.
கிலாபத் கிளர்ச்சியை
ஆதரிப்பதற்காக முதலில் நிறுவப்பட்ட கிலாபத் குழுக்கள் தொடர்ந்து முறையான ஒரு மத பிரசாரத்தை
மேற்கொண்டுள்ளன, இதன் ஒரு பகுதியாவது, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான
தற்போதைய கசப்புக்கு இட்டுச்செல்லக்கூடியது. கோகனாடாவில், இந்திய முஸ்லிம்களை ஒழுங்குபடுத்த
கிலாபத் கமிட்டி பயன்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டது. டான்ஸிம் என்பது அதன் மற்றொரு
பெயர். இது வெளிப்படையான இந்து எதிர்ப்பு இயக்கமாகும்.
தனிப்பட்ட முறையில்,
இரு இயக்கங்களையும், அதாவது சங்கதன் மற்றும் டான்ஸிம் ஆகியவற்றை, நான் வரவேற்கிறேன்.
இந்துக்களின் வெவ்வேறு பிரிவுகளை ஒரு அமைப்பாக ஒரு பக்கமும், முஸ்லிம்களின் அனைத்து
வெவ்வேறு பிரிவுகளையும் இன்னொரு பக்கமும் ஒன்றிணைக்க முடிந்தால், இரண்டு முக்கிய அமைப்புகளும்
ஒருவருக்கொருவர் இணங்குவது ஒப்பீட்டளவில் எளிதான விஷயமாக இருக்கும். ஆனால் இந்தப் பணி
நம்பிக்கையற்றது. என்னைப் பொருத்தவரை, இரு இயக்கங்களுக்கும் செய்யக்கூடிய ஒரே வேலை
இரு சமூகங்களுக்கிடையில் ஏற்கெனவே இருக்கும் பிரிவை அதிகரிப்பதாகும். முஸ்லிம் இயக்கம்
உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பஞ்சம்,
வெள்ளம், பூகம்பங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் நிவாரணத்திற்காக முஸ்லிம்கள்
தங்கள் பணப்பையைத் திறக்கவில்லை என்பதையும் இந்திய முஸ்லிம்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை
மேம்படுத்துவதற்கு முஸ்லிம் பணம் மிகக் குறைவாகவே செலவிடப்படுகிறது என்பதையும் வருத்தத்துடன்
கவனிக்க முடிகிறது. இந்திய முஸ்லிம்கள், ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கானவர்கள் ஏதவாது
ஒரு பெயரில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்த நிகழ்வு இந்தியாவில் மட்டுமே
உள்ளது. எகிப்து, துருக்கி, மொராக்கோ, சூடான், சிரியா போன்ற பிற முஸ்லிம் நாடுகளில்
இப்படி நடப்பதில்லை.
உள் கட்டமைப்பைப்
பொருத்தவரை, இரு இயக்கங்களும் தோல்வியடையும் நிலையில் உள்ளன. குறுங்குழுவாதத்தின் புற்றுநோய்
ஏதாவது ஒரு விதத்தில் ஆபத்தானது.
சங்கதன் விஷயத்தில்,
ஆர்ய சமாஜ் மற்றும் சனாதன் தரம் சபை ஆகியவை அவ்வியக்கம் செழித்து வெற்றிபெற அனுமதிக்காது.
அவர்கள் தங்கள் செயல்பாடுகள் அல்லது செல்வாக்கை இந்து சபைக்கு மாற்றத் தயாராக இருப்பதாகத்
தெரியவில்லை. டான்ஸிம் விஷயத்தில், வெவ்வேறு முஸ்லிம் பிரிவுகள் ஒன்றிணைந்து அதை வெற்றிபெற
விடாது. எவ்வாறாயினும், இரு இயக்கங்களும் ஒருபுறம் முஸ்லிம்-விரோத உணர்வை உயிரோடு வைத்திருக்கவும்,
மற்றோரு புறம் இந்து எதிர்ப்பு உணர்வை உயிரோடு வைத்திருக்கவும் விளம்பரப்படுத்தப்படும்.

Leave a Reply