Posted on Leave a comment

ஈழத்தமிழர் அகதியல்லர் – இந்துக்கள் | அகரமுதல்வன்

எனது அம்மம்மா ஒரு சைவ வைதீகவாதி. அவள் எப்போதும் சொல்லிக்கொண்டே
இருப்பாள். ‘இந்தியா எங்களைக் கைவிடாது. இந்தியா எங்களைக் கைவிடாது.’ எப்படி இவ்வாறு
நம்பிக்கையாகச் சொல்கிறாய் என்று கேட்டால், ‘அங்குதான் இந்துக்களின் அதிக இதயம் துடிக்கிறது’
என்பாள். அம்மம்மா இறந்துபோவதற்கு ஓராண்டிற்கு முன்னால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்
களத்தில் ஒரு பதுங்குகுழியில் இருமிக்கொண்டு சொன்னாள். ‘இந்தியா எங்களைக் கைவிட்டுவிட்டது.’
இப்போது நான் ‘இந்தியா எங்களைக் கைவிடாது’ என ஒவ்வொரு ஈழத்தமிழ் அகதியாகவும் நின்றுகொண்டு
சொல்கிறேன். ஒருபொழுதும் அம்மம்மா பதுங்குகுழியில் இருந்து சொன்னதைப் போலச் சொல்லுமளவிற்கு
இன்றைய இந்திய அரசாங்கம் எம்மைக் கைவிடாது என மனந்துணிகிறேன்.



(Image thanks: IndiaToday.in)

பிரதமர் மோடியின் இந்திய அரசினால் கொண்டுவரப் பட்டிருக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பாக இந்தியாவில் அகதியாக வாழ்ந்து வருகிற ஈழத்தமிழர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அதேவேளையில் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் தானென்று இந்திய நாடாளுமன்றத்தில் எழுந்த ஒவ்வொரு குரலும் அதிர்ச்சி அடைந்த மக்களுக்கு ஒருவித ஆறுதலையும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் வழங்கியுள்ளது. ஈழத்தமிழர்களை இந்துக்கள் என்கிற அடையாளத்திற்குள் சேர்ப்பது தொடர்பாக அல்லது அந்த அடையாளத்தை முன்னிறுத்துவதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட இன்று ஈழத்தமிழர்கள் இந்துக்கள் தானென அடையாளம் வழங்கும் விநோதமான திருப்பம் அரசியல் வெளியில் நிகழ்ந்திருக்கிறது. இப்படியொரு அதிர்ச்சிகரமான நிகழ்வின் விளைவு இந்தியப்பரப்பில் ஈழத்தமிழர்களை இந்துக்கள் என அடையாளம் காட்டியிருப்பதானது சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்று. ஈழத்தமிழர் அகதியல்லர்இந்துக்கள் என்பதை இந்தியாவின் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூறியிருக்கும் இந்த உரைகள் மிக முக்கியமானவை.
ஈழத்தமிழர்கள் தமது சொந்தநாட்டில் நிகழ்ந்த இனப்பகைமையினாலும் வன்முறை யுத்தத்தினாலும்தான் புலம்பெயர்ந்து இந்தியாவிற்கு வந்தனரே அல்லாமல் மதப்பிரச்சினையால் அல்ல என இந்தியளவில் வெளியான ஒருவரின் கருத்தை வாசித்ததும் மனம் பதைபதைத்தது. பெளத்த வெறிகொண்ட தேரவாத பெளத்த சிந்தனையால் உருவாக்கப்பட்ட அரசபடையினரால் பல்லாயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்கள் (இந்துக்கள்) இலங்கைத்தீவில் கொல்லப்பட்டனர். ஆயின் இங்கே நிகழ்ந்திருப்பது இந்துக்கள் மீதான பெளத்தத்தின் ஒன்றுதிரட்டப்பட்ட படுகொலை அன்றி வேறெதுவும் இல்லை. அப்படியாக புத்தனின் கோரப்பற்களிலிருந்து உயிர்தப்பி இந்திய மண்ணிற்குள் அடைக்கலம் தேடிய ஈழ இந்துக்களை இன்றைய இந்திய அரசு கைவிடாது என்றுதான் ஈழத்தமிழ் அகதிகள் நம்புகின்றனர். கடந்தகாலத்தில் (காங்கிரஸ் ஆட்சியில்) தனது ஒட்டுமொத்தமான நலன்களின் பொருட்டு ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை கண்டும் காணாது இருந்ததைப் போல இன்றைய அரசசும் இருந்துவிடக் கூடாது என்பதும் ஈழத்தமிழர்களின் விருப்பமாக இருக்கிறது.
எனவே இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படாதது தொடர்பாக இந்துத்துவஈழஆதரவு என்ற ஒரு புள்ளியில் இயங்கும் சக்திகள் தமது மனக்கிடக்கையை வெளிப்படுத்தவேண்டும். இந்தியாவில் வாழுகிற ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவேண்டியதன் தார்மீகமான பொறுப்பை அதிகாரத்திலுள்ள கொள்கை வகுப்புவாதிகளுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை நான் மேற்கூறியவர்களுக்கே இருக்கிறது. இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதன் பிறகு முகாமிலிருக்கும் ஒரு ஈழத்தமிழ் அகதி அழுதுகொண்டே
இருபது வருஷமாய் இந்த அகதி முகாமிற்குள்ள வாழ்ந்திட்டு இருக்கிறன். என்ர பிள்ளையள், என்ர பிள்ளையளோட பிள்ளையள் என்று ரெண்டு தலைமுறை அகதி முகாமிற்குள்ளேயே வாழ்ந்திட்டு இருக்கு. அகதி முகாமிற்குள்ளேயே ரெண்டு கோவில் கட்டியிருக்கிறம். தமிழ் பேசக்கூடிய இந்து அகதியாக இருந்தும் இந்தியாவில் குடியுரிமை இல்லை என்று கேள்விப்பட்டு மனம் நொந்து போனோம். காங்கிரஸ் ஆட்சியிலேதான் நாங்கள் பயந்து போயிருந்தோம். மோடி ஆட்சிக்கு வரவேண்டுமென விரும்பிய கோடிக்கணக்கான இந்திய மக்களைப் போல முகாமில் வாழும் நாங்களும் விரும்பினோம். ஆனால் அவரின் ஆட்சியில் இப்படியொரு அறிவிப்பை ஏன் சொல்லியிருக்கினம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த முடிவை இந்த அரசாங்கம் மறுபரீசீலனைக்கு உட்படுத்தி ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்துக்கள் என்கிற அடிப்படையில் குடியுரிமை வழங்குமென நம்புகிறோம் என்கிறார்.
இப்படியானதொரு நம்பிக்கையையே ஈழத்தமிழ் அகதிகள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தமிழ்மக்கள் விரும்பக்கூடிய தீர்வைப் பெற்றுத்தந்து விடுமென நம்புகின்றனர். இந்துக்களாகிய ஈழத்தமிழ் மக்களைக் கொன்று நரபலி ஆடிய பெளத்த ஆட்சியாளர்களின் அதிகாரக் களமாக இன்னும் தீவிரம் பெற்றிருக்கும் இலங்கை அரசியலையும் அதன் இந்திய எதிர்ப்புவாதத்தையும் அறிந்துகொள்ளுமளவிற்கு இந்தியஇந்துத்துவகொள்கைசார் அறிவுஜீவிகள் இல்லையோ என்கிற மனக்குறை என்னைப்போன்ற ஈழத்தமிழர்களுக்கு இருக்கவே செய்கிறது.
ஏனெனில் இந்தக் குடியுரிமை மசோதா கொண்டுவரப்பட்டு இந்தியளவில் எதிர்ப்பும்ஆதரவும் ஒருசேர எழுந்திருக்கும் இந்நேரத்தில் விவாதிக்கப்படும் கருத்துக்களில் மிகமோசமான புத்திபூர்வமற்ற கருத்துகள் ஏராளமானவை. அதிலொன்று ஈழத்தமிழ் அகதிகள் இந்திய நிலவெளிக்குள் புலம்பெயரக் காரணமாக இருந்தது இனரீதியான முரண்பாடுகளே அன்றி மதரீதியான ஒடுக்குதல் இல்லையெனக் கூறுவதேயாகும். இதுவொரு அடிமுட்டாள்தனமான அரசியல் பார்வை. மேலும் கழுத்தைச் சுற்றிக் கண்ணில் கொத்தநிற்கும் பாம்பைக் கயிறென நினைக்கும் விபரீதமான புரிதல்.
இலங்கைத்தீவில் தொடர்ந்து நடந்துவரும் தமிழ்சிங்கள இன முறுகலை சரியாகப் புரிந்துகொள்ள விரும்புகிற இந்தியர்கள் மிகக்குறைவானவர்களே. ஏனெனில் அவர்களுக்கு இதுவொரு அண்டைநாட்டுச் செய்தி. ஆனால் உண்மை அதுவல்ல. இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் நூறாண்டு காலமாக பெளத்த சிங்கள ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதற்கும்இனப்படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணம் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என்கிற ஒற்றைக்காரணமே. இந்துக்கள் என்றால் இந்தியாவின் நீட்சியாக இலங்கைத்தீவை அபகரிக்கவந்தவர்கள் என்பதே தேரவாத பெளத்தர்களின் கொலைச்சிந்தனையாக இருக்கிறது. சோகம் என்னவெனில் பாகிஸ்தானில் சிறுபான்மையாக இருக்கிற இந்துக்களை ஏற்றுக்கொள்ளும் இந்தக்குடியுரிமை மசோதா ஏன் ஈழத்தமிழ் இந்துக்களை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை? அப்படியெனில் ஈழத்தமிழ் இந்துக்களை சிங்கள பெரும்பான்மைவாத பெளத்தத்தின் நரபலிக்கு விட்டுக்கொடுத்துவிட இன்றைய இந்தியாவும் தயாராக இருக்கிறதா?
குடியுரிமை மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய அனைவரும் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் எனக் குறிப்பிட்டதனை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இப்படியொரு கருத்தினை தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் ஒருவர் சொல்லியிருந்தால் அவருக்கு மிக சுலபமாக இந்துத்துவவாதி பட்டம் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று முற்போக்குச் சக்திகளாக சொல்லப்படும் அனைவரும் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சத்தமாக ஆற்றுகிற உரைகள் ஒருவிதத்தில் மகிழ்ச்சியைத் தருகின்றது. இலங்கைத்தீவு என்பது பெளத்த நாடுஅது பெளத்தர்களுக்கே சொந்தமானது என சிங்கள ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில் அங்குள்ள சிறுபான்மை இனமான தமிழ்மக்கள் இந்துக்கள் என்கிற வகையில் அடக்குமுறைக்கு உள்ளாவதை இன்னும் இந்தியாவின் இந்துத்துவக் கரிசனம் கொண்ட கண்கள் உற்றுப் பார்க்கவில்லையோ?
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் தமிழர் நிலங்களில் இருந்த இந்துக் கோவில்களை இடித்தழித்து அதே இடத்தில புத்தவிகாரையைக் கட்டியெழுப்பி வருகிற அநீதிகளை இந்துத்துவர்களின் இணையத்தளமான ஸ்வராஜ்யா
(SWARAJYA)
செய்தியாக ஆவணப்படுத்தியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்துக்களின் வணக்கஸ்தலங்களையே இடித்துப்புதைக்கும் செயலென்பது மதரீதியான ஒடுக்குதல்கள் இல்லையா? ஆக இலங்கைத்தீவினுடைய அரசியல் மையங்கொண்டிருக்கும் இனப்பிரச்சினை என்கிற பதத்தின் அடியாழத்தில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் பெளத்தஇந்து மோதலை வரலாற்றின் குகையிலிருந்து கண்டுணர்ந்தால் இப்படியொரு முடிவு இந்திய அதிகாரமட்டத்தில் எட்டப்பட்டிருக்காது என்பது எனது துணிபு.
இந்தப் பின்னணியில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு வழங்கப்படவேண்டிய குடியுரிமை சார்ந்து மிகுந்த கவனம் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது சட்டமன்ற தீர்மானத்தில் இரட்டைக் குடியுரிமை சார்ந்து வெளியிட்ட அறிக்கை மிகவும் முக்கியமானதொரு நிலைப்பாடு. அதனைக் கருத்தில் கொண்டேனும் இந்த அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்பதே ஒவ்வொரு ஈழ அகதியினதும் எதிர்பார்ப்பு. இந்தியாவிற்கும் ஈழத்தமிழர்களுக்கும் வரலாற்று ரீதியாக இருக்கும் மதரீதியானஅரசியல் ரீதியானபண்பாட்டு ரீதியான உறவுகள் குறித்து ஒரு கருத்தியல் பிரசாரத்தினை இந்துத்துவ சக்திகள் முன்னெடுக்க வேண்டும். ஒரு பண்பாட்டுச் செழுமை வாய்ந்த ஈழத்தமிழினத்தை குடியுரிமை அற்ற அகதிகளாக இந்திய நிலத்தில் ஆக்கிவைப்பதன் மூலம் கேள்விக்குட்படுத்தப்படுவது இந்து தர்மமும் கூடத்தான். ஆக திபெத்திய பெளத்தனை குடியுரிமை உள்ளவனாக ஆக்கும் இந்திய நாடுஈழத்தமிழனை ஏன் புறங்கை கொண்டு தட்டுகிறது? என்கிற வினாவை ஒவ்வொரு இந்திய மனமும் தனக்குள் கேட்பதன் வாயிலாக ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க அரசிடம் வேண்டுகோள் வைக்கமுடியுமென நம்புகிறேன்.


Leave a Reply