Posted on Leave a comment

அந்தமானிலிருந்து கடிதங்கள் – 9வது கடிதம் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா

ஒன்பதாவது
கடிதம்
செல்லுலார்
சிறை
போர்ட்
ப்ளேயர்
6-7-1920
அன்பிற்குரிய
பால்,
நீ
இங்கு வருவதை ஒத்திப்போட்டுக்கொண்டே இருந்த போது எனக்கு மிகுந்த மன உளைச்சல் உண்டாகியது.
ஆனால் 2-6-1920 தேதியில் நீ போட்ட கடிதம் அந்த மன உளைச்சலை நீக்கியது. நீ என்னைப் பிரியும்
போது எப்படி இருந்ததோ அப்படியேதான் என் உடல் நிலை இப்போதும் இருக்கிறது. மேலும் மோசமாக
ஆகவில்லை. ஆனால் நீ சென்ற பிறகு நம் சகோதரரின் உடல் நிலை மிகவும் மோசமாக ஆகியிருக்கிறது.
பிரச்சினை அதேதான். அஜீரணமும் கல்லீரல் கோளாறும். அவருடைய தற்போதைய எடை 106 பவுண்டுகள்
(48கிலோ). நான் இப்படி எழுதுவதனால் எங்கள் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாக நினைத்துவிட
வேண்டாம். அப்படி இல்லை. நான் உள்ளது உள்ளபடி எழுதுகிறேன். இதைவிட மோசமாக ஏதேனும் ஆனால்
அதைப் பற்றியும் நான் உனக்குத் தகவல் தெரிவிப்பேன்.
ஒருவழியாக
பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. நூற்றுகணக்கானோர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்காகப் பெரிய அளவில் உழைத்த பம்பாய் தேசிய யூனியன், நம் தலைவர்கள் மற்றும் இந்திய
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என மாபெரும் கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணைத்து
நடத்திய நம் தேசப்பற்று மிக்க மக்கள் ஆகியோருக்கு நன்றி. அந்த மனுவில் கையெழுத்து வாங்க
நடந்த மாபெரும் இயக்கத்தில் குறைந்த காலத்தில் கிட்டத்தட்ட 75000 பேர் கையெழுத்திட்டதனால்
அது அரசிற்கு மாபெரும் அழுத்தத்தைக் கொடுத்தது என்பது உண்மை. எப்படி இருந்தாலும் இது
அரசியல் கைதிகளின் மற்றும் அவர்கள் போராடிய நோக்கம் இரண்டின் தார்மிக நிலையையும் மேலும்
உயர்த்தியது. மேலும் நாங்கள் விடுதலை அடைய வேண்டும் மக்களே விரும்பியதால், இப்போது
நாங்கள் ஒருவேளை விடுதலை அடைந்தாலும் அந்த விடுதலை மேலும் தகுதி வாய்ந்ததாக ஆகும்.
எங்கள்பால் கருணையும் அக்கறையும் காண்பித்த நாட்டுமக்களுக்கு நாங்கள் எவ்வளவு நன்றி
சொன்னாலும் தகும்.
நாங்கள்
எதிர்பார்த்ததையும் விட அதிகமாக அவர்கள் எங்கள்பால் அக்கறை கொண்டதாகவே நான் நினைக்கிறேன்.
அவர்கள் முயற்சிகள் முழுவதும் பலனளிக்காமலும் இல்லை. எங்கள் இரண்டு பேருக்கும் பொது
மன்னிப்பு வழங்கப்படவில்லை என்றாலும் எங்களுடன் இருக்கும் நூற்றுகணக்கான அரசியல் கைதிகளுக்கு
விடுதலை கிடைக்கிறது என்ற செய்தி எங்களுக்கு ஆறுதலை அளிக்கிறது. நாங்கள் கடந்த எட்டு
வருடங்களாக செய்த வேலைமறுப்புகள், கொடுத்த கடிதங்கள், மனுக்கள், பத்திரிகைகள் கொடுத்த
அழுத்தங்கள் எல்லாவற்றிற்கும் பலன் கிடைத்திருக்கிறது.
2-4-1920
அன்று நான் அரசு சமீபத்தில் வழங்கியிருக்கும் பொது மன்னிப்பு குறித்து ஒரு புதிய மனுவை
அளித்துள்ளேன். அதில் 1918ம் ஆண்டு நான் சமர்ப்பித்த மனுவில் நான் பொது மன்னிப்பை இன்னமும்
சிறையில் இருப்போருக்கும் மற்றும் மற்ற நாடுகளில் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கும்
நீட்டிக்க வேண்டும் என கோரியிருந்தேன். அதில் இந்திய அரசியல் சூழல் குறித்த என்னுடைய
நிலைப்பாட்டையும் தெளிவாக விளக்கியிருந்தேன். குறிப்பாக அதிகாரவர்க்கத்தில் விவாதிக்கப்பட்டு
என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு நான் விளக்கமளித்திருந்தேன்.
இயற்கையில்
கிடைக்கும் வளங்களைப் பெற உழைக்கும் மனிதகுலத்தை மொத்த பூமிக்கும் குடிமகன்களாகப் பார்க்க
வேண்டும் என்ற சிந்தனையை இந்த நாடு மானுடத்திற்கு வழங்கியிருக்கிறது. சூரியனுக்குக்
கீழ் வரும் இந்த பூமியில் இருக்கும் அனைவரும் ஒரே குடியை சார்ந்தவர்கள். மற்ற பிரிவினைகளும்
வேறுபாடுகளும் தவிர்க்கமுடியாதவை என்றாலும் அவை செயற்கையானவையே. எனவே அரசியல் கோட்பாடுகள்
மற்றும் கலைகளின் இறுதி இலட்சியம், நாடுகள் அனைத்தும் இணைய வேண்டும் என்பதே. அவற்றின்
சுய தேவைகளுக்காக அரசியல் கோட்பாடுகள் இருக்கலாம். எப்படி ஒரு உயிரின் தேவைக்கு ஒவ்வொரு
அணுவும் இருக்கிறதோ, அப்படி குடும்பங்களும் இனக்குழுக்களும் சேர்ந்து ஒரு தேசத்திற்கான
தேவைகளை பூர்த்தி செய்யும். ஆனால் மானுடம் என்பதே எல்லாவற்றிற்கும் மேலான தேசப்பற்று.
ஆகவே பல முரண்களைக் கொண்ட இனக்குழுக்களையும் தேசங்களையும் ஒருங்கிணைப்பதில் வெற்றி
கண்ட எந்த ஒரு ராஜ்ஜியமோ அல்லது காமன்வெல்த்தோ, அது இந்த உயர்ந்த இலட்சியத்தை அடைவதில்
ஒரு படி முன்னே சென்றிருக்கிறது என்றே அர்த்தம். அந்த காமன்வெல்த் அது பிரிட்டிஷாக
இருக்கட்டும் அல்லது இந்தியனாக இருக்கட்டும் அல்லது வேறு நல்ல பெயர் கிடைக்கும் வரை
ஆர்யன் காம்ன்வெல்த் என்று கூட அழைக்கலாம், அதற்கு அந்த உயர்ந்த இலட்சியத்தை அடைய நான்
மனப்பூர்வமாக ஒத்துழைப்பேன். இந்த நோக்கத்திற்காக உழைக்க நான் தயாராக இருக்கிறேன்.
ஆகவே அரசு தங்கள் கண்ணோட்டத்தை மாற்றி அதன் மூலம் இந்தியா அரசியல்சட்டத்தின் அடிப்படையில்
சுதந்திரத்தை நோக்கி முன்னேற வழிவகுத்திருக்கிறது என்பது வரவேற்கத்தக்க ஒன்று. இதன்மூலம்
என்னைபோன்ற புரட்சியாளர்கள் தங்கள் பாதையை விடுத்து இங்கிலாந்துடன் ஒரு கௌரவமான ஒப்பந்தத்திற்கு
உடன்பட வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் முன்னேற்றத்திற்கும் ஒரு வழி இருக்கிறது.
மானுடமே
மேலான தேசபக்தி என்ற இந்தச் சிந்தனைதான் எங்களுக்கு அந்த மானுடத்தின் ஒரு பகுதி சீரழிக்கப்படும்
போது கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் நாங்கள் வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சை
போன்ற புரட்சியைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் வலிமையை வலிமையால் எதிர்கொள்வது என்று நாங்கள்
முடிவெடுத்த போதும்கூட நாங்கள் எப்போதும் வன்முறையை ஆதரித்ததில்லை.ஏனென்றால் வன்முறை
என்பது உயிரை மாய்ப்பது. நான் எப்போதும் எனக்காகவோ அல்லது என் தேசதிற்காகவோ வன்முறையை
ஒரு அணுகுமுறையாக யோசித்துக்கூடப் பார்த்ததில்லை. அதனாலேயே வலிமை குன்றிய நேர்மையாளர்கள்
மீது வன்முறை பிரயோகிக்கப்படும்போது நான் அதை எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறேன்.
இந்தியாவிலும் சரி, மற்ற நாடுகளிலும் சரி, போராளிகள் வன்முறையைக் கைக்கொள்ளும்போது
நான் அதனை எதிர்த்தே வந்திருக்கிறேன். அந்நியர்கள் இந்தியர்களை ஆள்வதை எதிர்ப்பதைப்
போலவே நான் இந்தியாவில் நிலவும் சாதி மற்றும் தீண்டாமை பிரச்சினைகளையும் எதிர்த்து
வந்திருக்கிறேன்.
நாங்கள்
வேறு வழியில்லாமல்தான் புரட்சியைத் தேர்ந்தெடுத்தோம்; அதன் மீது விருப்பம் கொண்டு அல்ல.இந்தியா
மற்றும் இங்கிலாந்தின் நோக்கங்கள் பாதுகாக்கப்பட அவற்றின் லட்சியங்கள் அமைதியான முறையில்
சுமுகமான பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமாகப் படிப்படியாக முன்னேற வேண்டும் என்றே நாங்கள்
நினைக்கிறோம். அதற்கு வாய்ப்பிருக்கும் பட்சத்தில் அமைதியான வழிமுறைகளை கைக்கொள்ளும்
முதல் ஆளாக நான் இருப்பேன். வளர்ச்சிக்கான சக்திகள் தொடர்ந்து தடையில்லாமல் முன்னேற,
புரட்சி போன்ற அரசியல் சட்ட மீறல்களை நாங்கள் கைவிடுவோம்.
எங்களுடைய
சட்ட மீறல்களுக்கான காரணங்களை அரசாங்கம் தனது மாற்றங்கள் மூலம் நீக்குமானால் அதன் காரணமாகப்
புரட்சியும் ஓயும். முன்னேற்றமே எங்கள் எல்லோருடைய லட்சியமாவும் அமையும். அத்தகைய மாற்றத்திற்கு
ஒரு தொண்டனாக நான் என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன். எங்கள் தலைமுறையின் மிக பெரிய
கனவான இந்த நாட்டின் சுதந்திரம் என்ற இலக்கை நோக்கி அது செல்லுமானால் அதற்கு நான் முழுமூச்சுடன்
உழைக்கத் தயார்.
நான்
புரட்சியாளர்களின் முகாம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டு இருந்த போதும் என்னுடைய கருத்து
இதுவாகத்தான் இருந்திருக்கிறது. இப்போது தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு பன்னிரண்டு
வருடங்கள் ஆனபின்பும் என் எண்ணம் அதுவாகத்தான் இருக்கிறது. வாள்முனையில் எங்களுக்கு
விதிக்கப்பட்ட சட்டங்களை அனுசரிக்கவும் அவற்றிற்கு விசுவாசமாக இருப்பதும் எங்களுக்குக்
கஷ்டமாக இருப்பது உண்மைதான். அதிலும் அடக்குமுறைக்கு முகமூடியாக அரசியல்சட்டம் பயன்படுத்தப்படும்போது
அதற்கு விசுவாசமாக இருப்பது மிகவும் கடினம். ஆனால் சட்டத்திற்கு உட்பட்டே நாம் நடக்க
வேண்டும் அதுவே நம் கடமை என்றே நாங்கள் எப்போதும் நினைத்து வந்திருக்கிறோம். சமுதாயத்திற்கு
நன்மையைப் பயக்கும் எந்த சட்டத்தையும் மதிப்பது நேர்மையான மனிதர்களின் இயல்பாகவே இருந்திருகிறது.
இந்திய
காபினெட் மற்றும் உயர் அதிகாரிகள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி ஒன்று. “இந்தியாவில்
இருந்த பண்டைய மன்னர்களை எதிர்த்து நீங்கள் புரட்சி செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
அவர்கள் யானையின் காலால் மிதிபட வைத்திருப்பார்களே
என்பது.
அதற்கு என்னுடைய பதில்: இந்தியா மட்டுமல்ல, இங்கிலாந்து உட்பட உலகின் பல நாடுகளிலும்
புரட்சி செய்பவர்களின் கதி அதுவாகத்தான் இருக்கும். ஆனால் ஏன் ஜெர்மானியர்கள் தங்களிடம்
பிடிபட்டவர்களை ஒழுங்காக நடத்தவில்லை, அவர்களுக்குப் பசிக்கு உணவாக பிரெட்டும்வெண்ணெய்யும்
கூட வழங்கவில்லை என்று உலகம் முழுக்க பிரிட்டிஷ் மக்கள் பிரசாரம் செய்கிறார்கள்? ஒரு
காலத்தில் போர்க் கைதிகளை தார் மற்றும் மொலோச் போன்ற போர்க்கடவுள்களுக்கு பலியாக கொடுக்கும்
வழக்கம் கூடத்தான் இருந்தது. ஆனால் இன்று நாம் நாகரீகத்தில் முன்னேறியிருக்கிறோம்.
அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முயற்சியால் விளைந்த ஒன்று. ஆகவே அதன் பலன் ஒட்டுமொத்த
மனிதகுலத்திற்கும் போய்ச் சேர வேண்டும். காட்டுமிராண்டித்தனமான காலங்களையும் ஒப்பிட்டு
எனக்கு ஒழுங்கான விசாரணையும் தண்டனையும் வழங்கப்பட்டு இருக்கிறது என்பது உண்மைதான்.
எனக்கு நரமாமிசம் சாப்பிடும் மக்கள் கூட்டம் வழங்கும் தண்டனையைவிட மேலான தண்டனையைத்தான்
வழங்கியிருக்கிறோம் என்று அரசும் நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் ஒன்றை
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பண்டைய காலங்களில் ஆட்சியாளர்கள் புரட்சி செய்பவர்களைக்
கொடுஞ்சித்ரவதை செய்ததைப் போலவே தங்கள் கை ஓங்கியவுடன் புரட்சியாளர்களும் ஆட்சியாளர்களை
சித்ரவதை செய்திருக்கிறார்கள். என்னையும் மற்ற புரட்சியாளர்களையும் நியாயமான முறையில்
நடத்தி இருக்கிறோம் என்று பிரிட்டிஷ் மக்கள் நினைத்தால் அவர்கள் ஒன்றை நினைவில் இருத்த
வேண்டும். இங்கிருக்கும் நிலைமை தலைகீழாக மாறினால் எங்கள் கைக்கு அதிகாரம் வரும்போது
நாங்கள் உங்களை இதே போல நியாயமான முறையில்தான் நடத்துவோம்.
இந்த
மனுவின் வாயிலாக எங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று பெரிய நம்பிக்கை எதுவும் கொள்ள
வேண்டாம். எங்களுக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை இருந்ததில்லை, அதனால் விடுதலை ஆகாவிடினும்
எங்களுக்குப் பெருத்த ஏமாற்றமும் இல்லை. எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் மனோநிலையில்
நாங்கள் இருக்கிறோம். பால், உன்னால் முடிந்ததை நீ முயன்றாய். உன் விடாமுயற்சியால் இன்று
பல அரசியல் கைதிகள் விடுதலை ஆகிறார்கள். நாங்கள் இருவர் விடுதலை ஆகாவிட்டாலும் பல நூறு
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உன் முயற்சி வழிகோலியிருக்கிறது.
உன்னை
நல்ல ஆரோக்கியத்துடன் பார்ப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நண்பர்களுக்கும் மற்ற
உறவினர்களுக்கும் என்னுடைய அன்பையும் விசாரிப்புகளையும் கூறவும்.
என்றும்
உன் அன்பிற்குரிய சகோதரன்
தாத்யா.


Leave a Reply