Posted on Leave a comment

அந்தமானில் இருந்து கடிதங்கள் – ஏழாவது கடிதம் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா

4-8-1918
போர்ட் ப்ளேயர்.

என் அன்பிற்குரிய சகோதரா.
உன் கடிதத்தைப் படித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த வருடம் நீ குறித்த நேரத்தில் பார்சல்களையும் கடிதங்களையும் அனுப்பியதால் எங்களுக்கு மனு போட்டு அவை குறித்துக் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவை சரியான நேரத்தில் கிடைத்தன. இதனால் எங்களுக்கு மன உளைச்சலும் குறைந்தது. என் கடிதத்திற்கு பதில் கடிதம், பிறகு சகோதரருக்கு நீ அனுப்பிய பார்சல், பிறகு இந்தக் கடிதம் என உன்னிடம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தொடர்பு கொள்ள முடிந்திருக்கிறது. இதே நடைமுறையை முடிந்த வரையில் தொடரவும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில மாநாட்டில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செய்தி வரவேற்கத்தக்கது. மற்ற மாகாண மாநாடுகளைக் காட்டிலும் பம்பாய் மாகாண மாநாடு இந்த விஷயத்தில் தீவிர அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. எனக்குத் தெரிந்தவரை சென்ற வருடம் உத்திரப் பிரதேச மாகாண மாநாடும் ஆந்திர மாகாண மாநாடும் கூட இதே போல அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனத் தீர்மானம் இயற்றின. அதிலும் ஆந்திர மாகாணம் நிறைவேற்றிய தீர்மானம், மிகவும் ஆணித்தரமான வார்த்தைகளால் ஆந்திரர்களின் ஆதரவை விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தெரிவித்திருந்தது. இதனை நீங்கள் தொடர்ந்து எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதி வர வேண்டும். அரசியல் கைதிகளை விடுவிப்பதே இந்தியர்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியைக் குறைக்க ஒரே வழி என்பதை உணர்த்த வேண்டும். இவை எல்லாம் உண்மை எனும் பட்சத்தில் காங்கிரஸ் ஏன் அரசியல் கைதிகள் சார்பில் பரிந்து பேசத் தயங்குகிறது என்பது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. இந்த தேசத்திற்காக உழைத்த சக போராளிகளின்பால் குறைந்தபட்ச மனிதநேயத்தைக் கூட காங்கிரஸ் காட்ட மறுப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அரசியல் கைதிகளிடம் கருணையுடன் பேச அவர்கள் ஏன் நடுங்குகிறார்கள் என்று தெரியவில்லை. சென்ற வருடம் அவர்கள் போர்க் கைதிகள் குறித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் அப்போதும் அவர்கள் அரசியல் கைதிகளைப் பற்றி வாய் திறக்கவில்லை. அரசியல் கைதிகளின் நிலை நாளுக்கு நாள் இங்கு மிகவும் மோசமடைந்து வருவது என்னவோ அவர்களுக்கும் தெரியும். அரசியல் கைதிகளின் தியாகங்களும் தொண்டும் போர்க் கைதிகளின் தியாகத்திற்கும் தொண்டிற்கும் எந்த விதத்திலும் குறைந்ததில்லை. போர்க் கைதிகளுக்காவது போர் முடிந்தவுடன் விடிவு காலம் பிறக்கும். மக்களிடையே பொறுப்பான தலைவர்கள் என்று பெயரெடுத்து உலவி வரும் ஆட்கள் இதற்காக இன்னமும் தீவிரமாகப் போராட வேண்டும். ஆனால் இங்கே பொறுப்பான என்பதுதான் பிரச்சினையே. போர்க் கைதிகளைப் பற்றிப் பேசுவது பாதுகாப்பானது. ஆனால் மற்றவர்களைப் பற்றிப் பேசினால் அவர்களது முதலாளிகளின் கண்ணோட்டத்தில் பொறுப்பான தலைவன் என்ற நிலையில் இருந்து மாறி விடக்கூடும். இல்லையென்றால் பல்வேறு மாகாண கவுன்சில்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறித் தீர்மானங்களைப் போட்டுவிட்ட பின்னும் காங்கிரஸ் அதனைத் தீர்மானமாக நிறைவேற்றாமல் இருப்பதன் காரணம் எதுவும் எனக்குப் புரியவில்லை. காங்கிரசில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிலரின் கருத்துக்களைப் பிரதிபலிப்பது மட்டுமே அதன் வேலை இல்லை. மாறாக அதற்கு ஆதரவையும் வலிமையையும் கொடுக்கும் பல்வேறு தரப்பு மக்களின் கருத்தையே அது பிரதிபலிக்க வேண்டும். பல மாகாணங்கள் பல முறை தீர்மானங்கள் நிறைவேற்றிய பின்னும் பல பத்திரிகைகள் இதனைப் பற்றி எழுதிய பின்னும் காங்கிரஸ் தலைவர்களே பலரும் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நிலையில் நாங்கள் யாருக்காகப் போராடினோமோ அவர்கள் எங்களுக்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது எங்கள் உரிமை அல்லவா? அதிலும் ஆஸ்திரி, ஐரிஷ மற்றும் போயர் மக்கள் தங்கள் நாட்டின் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தைரியமாகவும் நேர்மையுடன் குரல் கொடுக்கும்போது அதனைப் பற்றியெல்லாம் அறிந்து வைத்திருக்கும் காங்கிரஸ், ஆந்திரா அல்லது மகாராஷ்டிரா மாகாணங்கள் நிறைவேற்றிய தீர்மானங்களைப் போல நிறைவேற்ற வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட வேண்டும். சில வயதானவர்கள் இதனைச் செய்ய அஞ்சுவார்கள் என்றால் இதனை நிறைவேற்றும்போது அவர்கள் கலந்து கொள்ளாமல் இருக்கட்டும். இதற்குப் பயப்படும் ‘பொறுப்பானவர்கள்’ சிலரைப் போல நீங்களும் மௌனமாக இருப்பது தவறல்லவா?
மேலும் இதுபோன்ற தீர்மானங்கள் பலனுள்ளவையாக இருக்க ஒன்றிரண்டு காரியங்களை முன்னெச்சரிக்கையாக நாம் செய்யவேண்டும். பல பத்திரிகைகள் அரசியல் கைதிகளைப் பற்றி எழுதுகின்றன. ஆனால் அவை எழுதப்படும் விதம், அரசியல் கைதிகள் என்றால் என்னவென்று பாமர மக்களுக்கு மட்டுமில்லாமல் அரசாங்கத்துக்கும் கூடப் புரியாத வண்ணம் குழப்பமாக இருக்கின்றது. சில சமயம் அது போர்க் கைதிகளையும் சில சமயம் நாடு கடத்தப்பட்டவர்களையும் குறிக்கிறது. ஆனால் அரசியல் கைதிகளைப் பற்றித் தெளிவாக என்றும் சொன்னதில்லை. இதனைப் பற்றி நான் உன்னிடம் சென்ற வருடம் கூறியிருந்தேன். மிஸ்டர் போனர்லா அவர்களும் ஐரிஷ் கைதிகளை குறித்துக் கூறுகையில் அவர்கள் எவரும் தனிப்பட்ட முறையில் தீவைப்பு உட்பட எந்தக் காரணங்களுக்காவும் கைதாகவில்லை என்றார். ஆனால் மிஸ்டர் போனர்லவின் அரசு போர் துவங்கியவுடன் அவர்கள் எல்லோரையும் விடுதலை செய்தது. அதனால் குற்றவாளிகள் என்ற வார்த்தை இந்தியாவின் ‘பொறுப்புமிக்க’ தலைவர்களுக்கு ஏன் தயக்கம் ஏற்படுத்த வேண்டும்? அரசின் தவறுகளை, தனிப்பட்ட முறையில் செய்த குற்றங்கள் என்ற போர்வையைப் போட்டு ஏன் மூட வேண்டும்? போத்தா ஒரு பிரதமர், ரெட்மாண்ட் ஒரு பாராளுமன்ற கட்சியின் தலைவர். இருந்தும் அவர்கள் தங்கள் அரசின் எதிரிகளும் புரட்சியாளர்களுமான கைதிகளை விடுதலை செய்தனர். ஆனால் நம்முடைய காங்கிரஸ்காரர்களோ தங்களைப் பொறுப்பானவர்கள் என்று கருதிக்கொள்கிறார்கள். நகரத்தின் எல்லையில் நின்று பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும் பிச்சைக்காரன் கூட இந்த நகர சபைத் தலைவர்களை விடப் பொறுப்பானவன், உயர்ந்தவன் என்று சொல்வேன். ஆகவே எதிர்காலத்தில் இத்தகைய தீர்மானங்கள் அரசியல் கைதிகள் என்றால், குற்றவாளியோ அல்லது இல்லையோ, தனிப்பட்ட செயல்களுக்காவோ அல்லது பொதுக் காரணங்களுக்காகவோ, (இது என்ன என்று எனக்குப் புரிவதே இல்லை) அரசியல் நோக்கத்திற்காகச் செய்து கைதானவர்கள் அனைவரையும் குறிக்கும் என்று தெளிவாக்கப்படவேண்டும். செயலின் நோக்கம்தான் அது அரசியல் காரணமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எந்த ஒரு காரியமும் உள்ளபடியே அரசியலாகாது. என்னுடைய பட்டினிக்காக நான் புரட்சியில் ஈடுபட்டால் அது அரசியல் காரியமாகாது. பொது நோக்கம் பொது உரிமையைக் காப்பதற்காகச் செய்யப்படும் போராட்டமே அரசியல் செயல்பாடாகும். குண்டர்கள் போரிடுவது பொது நலத்திற்காகச் செய்யப்படும் தியாகம் என்று கருதப்படாது. ஆனால் தீவைப்பு போன்ற கொடுஞ்செயல்கள் பிரிட்டிஷ் அரசால் அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்பட்டவை என்று கருதப்பட்டிருக்கின்றன. ஏனென்றால் தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காகவோ அல்லது தனிப்பட்ட லாபம் கருதியோ அவை செய்யப்படவில்லை. மாறாகப் பொது நன்மையைக் கருதிச் செய்யப்பட்டவை. முறைகள் தவறாக இருக்கலாம், சில நேரம் அவை கொடுஞ்செயல்களாகக் கூட இருக்கலாம். ஆனால் பொது நலன் கருதி அவை செய்யப்பட்டிருந்தால் அவை மன்னிக்கப்படலாம். நான் இதனை வலியுறுத்தக் காரணம், ஒருவேளை பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக இருந்தால் (அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று நான் நினைக்கிறேன்) இந்தக் காரணம் நமக்கு ஒரு தடையாக இருக்கும். அரசு தங்கள் விருப்பம் போல இதற்கு ஒரு விளக்கம் கொடுக்கலாம். ஆகவே இதனைத் தெளிவுபடுத்துவது நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். இதனை மற்ற பத்திரிகையாளர்களும் தலைவர்களும் நினைவில் கொள்ள வேண்டும்.
1)   எனக்கு நீ எழுதும் கடிதங்களில் ஏதேனும் மாகாண மாநாடுகளில் இது குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா என்பதையும், சென்ற வருடம் காங்கிரஸ் இதனைத் தங்கள் கமிட்டி கூட்டத்தில் விவாதித்ததா என்பதையும் பற்றி எழுது. எத்தனை பத்திரிகைகள் இதனை ஆதரித்து முழுமனதாகக் கட்டுரைகள் வெளியிட்டன என்பதையும், இந்த வருடம் இது குறித்து காங்கிரஸ் ஏதேனும் செய்ய இயலுமா என்பதையும் குறித்து எழுதவும். நீ இது குறித்து எழுதும்போது போர்க் கைதிகள் மட்டும் அல்லாமல் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்கள் குறித்தும் எழுது.
2)   பொது மக்கள் பலராலும் மனு அளிக்கப்பட வேண்டும் என்ற விஷயம் என்னவாயிற்று? நீ இது குறித்து உன் சென்ற கடிதத்தில் எதுவும் எழுதவில்லை. அந்த உத்தேசத்தைக் கைவிட வேண்டாம். போர் முடிந்த பிறகு அதனை மேலும் பலனளிக்கும் விதத்தில் செய்யலாம் என்று ஒத்தி வைத்திருப்பாய் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் அதுவும் சரியான முடிவுதான். அதேவேளையில் ‘மாண்டேகு அவர்களிடம் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து மனு ஒன்று அளிக்கப்பட்டது’ என்று ஒரு கடிதத்தில் படித்தேன். அது சரியான தகவல்தானா?
3)   கூட்டங்கள் கூட்டி பிரசாரம் செய்வது குறித்து நீ கூறியிருந்தாய். அது ஒருமுறை மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து செய்யப்படவேண்டும்.
4)   காங்கிரசும் மாநாடுகளும், இதுகுறித்து விளக்க நடத்தப்படும் தனிப்பட்ட சந்திப்புகளும், பத்திரிகைகள் இதுகுறித்து தொடர்ந்து கவனம் செலுத்துவதும், பாராளுமன்றத்தில் மாகாண கவுன்சிலில் இதுகுறித்துக் கேள்வி எழுப்புவதும் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடத்தப்படவேண்டும். இந்த விஷயத்தில் மேலும் என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து உன்னுடைய ஒவ்வொரு கடிதத்திலும் எனக்கு எழுது. அதேபோல ஒவ்வொரு முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போதும் அரசியல் கைதிகள் என்பவர் யார் என்பதைத் தெளிவுபடுத்த மறக்க வேண்டாம். இதுகுறித்து மக்களுக்கும் அரசுக்கும் விளங்கும் வகையில் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும்.
இதனைப் பற்றி எழுதும்போது நான் இந்தப் போராட்டத்தின் தார்மீக விளைவுகள் குறித்து அக்கறை கொண்டேனே தவிர இதன் பலன் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி விவாதிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அரசிற்குச் சென்ற வருடம் நான் அளித்த மனு ஒன்றில் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்பது இந்தியாவில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஒரு முற்போக்கான அரசு அமைவதோடு மிகவும் தொடர்புடைய விஷயம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளேன். ஆனால் அத்தகைய பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உடனடியாக வரும் என்று கூற இயலாது. இது நடக்காத காரியம் என்றாலும் நாம் இதனைத் தொடர்ந்து செய்யவேண்டும். இது தேசிய அளவில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தும். தியாகிகளையும் அவர்களுடைய சுதந்திரத்திற்கான போராட்டத்தைப் பற்றியும் அறியும்பொழுது பொது மக்களில் பலரும் போராட முன்வருவர். போராளிகளைக் குறித்து நன்றியுடன் நினைவுகூர்தலே மேற்கொண்டு இத்தகைய போராட்டங்களுக்குத் தொண்டர்களைச் சேர்க்கும்.
திரு மாண்டேகு அவர்களுக்கும் வைஸ்ராய் அவர்களுக்கும் நான் அனுப்பியிருந்த மனுவில் இத்தகைய பொது மன்னிப்பு குறித்து வெளிப்படையாக எழுதியிருந்தேன். அதில் இந்தியாவில் மாற்றங்கள் ஏற்படுத்துவதாக இருந்தால், அதிலும் அவர்கள் இந்தியாவில் ஒரு பொறுப்பான அரசை ஏற்படுத்த விழைவதாக இருந்தால், எங்களை இப்படிச் சிறையில் வைத்து வாட்டுவது அந்த முயற்சியினை அர்த்தமற்றதாக ஆக்கிவிடும் என்று கூறியிருந்தேன். அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படாமல் ஒரு பொறுப்பான அரசை அமைப்பது என்பது அந்த அரசிற்கு ஒரு பெரும் பாரமாகவே அமையும். நாங்கள் தொடர்ந்து சிறையில் இருப்பது மக்களுக்கு அந்த அரசின் மேல் ஒரு சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும். அதனால் பரஸ்பர நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கும் அரசிற்கு அது தோல்வியாகவே முடியும். ஏனெனில் சுயாட்சி கொடுக்கப்பட்டாலும் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என்றால் அது மக்களிடையே அவநம்பிக்கையைத்தான் ஏற்படுத்தும். சகோதரர்கள் பிரிக்கப்பட்டு ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கையில் எங்கிருந்து சமுதாயத்தில் நம்பிக்கையும் அமைதியும் ஏற்படும்? ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ஒரு தகப்பனோ, ஒரு சகோதரனோ, ஒரு நண்பனோ பிரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறோம். ஆகவே நான் சுயலாபத்திற்காக அல்லாமல் நேர்மையுடனும் இதயச் சுத்தியுடனும் இதனைக் கூறுகிறேன். அரசியல் கைதிகளைப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யாமல் எந்த விதமான பொறுப்பான அரசாங்கமும் அரசு அமைக்க இயலாது. அரசை எதிர்த்துப் பேசினால் வழக்கு, அரசு சந்தேகப்படாமல் இருக்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருப்பது பொறுப்பான அரசின் நடைமுறைக்கு ஒவ்வாதது. இது சுல்தான்களின் ஆட்சிக்கு ஒப்பானது. ஆகவே சுயாட்சியும் பொது மன்னிப்பும் ஒருங்கே செயல்படுத்தப் படவேண்டியது அவசியம். என்னுடைய பொது மன்னிப்பைக் கோரி அனுப்பிய மனுவில் மேலும் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தியிருக்கிறேன். இதனை அமல்படுத்த என்னுடைய விடுதலைதான் தடையாக இருக்குமென்றால் என் விடுதலையைப் புறந்தள்ள நான் தயார். அதனால் எனக்கு மனக்கவலை எதுவும் இல்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட திரு மாண்டேகு அவர்களின் நடைமுறை இந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. புரட்சியாளர்கள் தங்களுடைய தற்போதைய அணுகுமுறைகளைக் கைவிட்டுவிட்டு, அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கும் விதத்தில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அமையக்கூடிய பொறுப்பான காரியங்களைச் செய்ய வேண்டும். அத்தகைய அரசு என்பது வைஸ் ரீகல் கவுன்சில் என்ற மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டுமே அல்லாது அதிலும் மாநில கவுன்சில்கள் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கக் கூடாது. அப்படி ஒரு அரசு அமையும்பட்சத்தில் அது அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதில் துவங்கவேண்டும். இங்குள்ள கைதிகள் மட்டுமல்லாமல் அமெரிக்கா ஐரோப்பா நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் போராளிகளுக்கும் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் நானும் என்னைப் போலவே ஒத்த கருத்துடைய பலரும் அந்த அரசியல் சாசனத்தை ஏற்போம். அரசு வாய்ப்பளிக்கும் பட்சத்தில் அத்தகைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இதுகாறும் எங்கள் மேல் வெறுப்புக் கொண்டிருக்கும் கவுன்சில் உறுப்பினர்களுடனும் சேர்ந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம். பெரும் ஆபத்துகள் நிறைந்த புரட்சிகளை நாங்கள் வேடிக்கைக்காகச் செய்யவில்லை. பாதுகாப்பான உயர்ந்த இலட்சியங்களுடன் கூடிய வழிமுறைகள் இருக்கும்பொழுது யாரேனும் ஆபத்தான புரட்சி வழிமுறைகளை மேற்கொள்வார்களா? அதற்கு சட்டரீதியான வழிமுறை அவர்களுக்கு இருக்கவேண்டும். அரசியல் சாசனமே இல்லாதபொழுது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் போராட்டம் என்பது கேலிக்குரியது. அதேநேரத்தில் இங்கிலாந்தில் இருப்பது போல அரசியல் சட்ட ரீதியான வழிமுறைகள் இருக்கும்போது புரட்சி என்று பேசுவது தவறு மட்டுமல்ல, குற்றமும் கூட.
நான் இதனைச் சென்ற அக்டோபர் மாதம் அரசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தேன். சமீபத்திய மாற்றங்கள் எனக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றன. முறையானபடி ஒழுங்காக இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் நாம் ஏற்றுக்கொளும்படியான ஒரு வழிமுறை நமக்குக் கிடைக்கலாம். இதனை வைஸ்ராயின் கவனத்திற்கு மீண்டும் ஒருமுறை நான் கொண்டு வருகிறேன். என்னுடைய மனுவின் மேல் ஏதேனும் முடிவு எடுக்க இந்திய அரசு தீர்மானித்து இருக்கிறதா என்று கேட்கிறேன். எனக்கு 1-2-1918 அன்று வைஸ் ரீகல் அரசிடம் இருந்து, அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது குறித்துப் பரிசீலித்து வருவதாக பதில் கிடைத்தது. போர் முடிந்த பிறகு இந்தக் கோரிக்கையை வைக்குமாறு அரசு கூறியிருந்தது. எனக்காக நீ அதுகுறித்து விசாரிக்கவும். ஏனென்றால் இந்த அரசமைப்பில் இதுகுறித்து விசாரிக்க நான் பலரையும் குஷிப்படுத்த வேண்டியிருக்கிறது.
நீ உன்னுடைய போன கடிதத்தில் இரண்டாவது வகுப்பிற்கு நாங்கள் உயர்த்தப் பட்டிருப்பதால் என்னென்ன அனுகூலங்கள் என்று கேட்டிருந்தாய். சிறைக்கு வெளியே செல்ல அனுமதி உண்டா? இல்லை. எழுதுவதற்கான பொருட்களை வைத்துக்கொள்ள அனுமதி உண்டா? இல்லை. என் சகோதரனுடன் பேசுவதற்கோ அவனுடன் தங்குவதற்கோ அனுமதி உண்டா? இல்லை. கடும் பணிச்சுமைகளில் இருந்து விடுப்பு உண்டா? இல்லை. சிறையில் அடைபட்டுக் கிடைக்காமல் வார்டராகப் பதவி உயர்வு கொடுக்கப்படுமா? இல்லை. சிறையில் ஒழுங்காக நடத்தப்படுவோமா? இல்லை. கூடுதலாகக் கடிதங்களுக்கு அனுமதி உண்டா? இல்லை. வீட்டில் இருந்து பார்வையாளர்கள் வந்து பார்க்க அனுமதி உண்டா? மற்றவர்களுக்கு ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்த அனுமதி உண்டு. நான் இங்கு வந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. எனக்கு அனுமதி கிடையாது. இரண்டாம் வகுப்புக் கைதியாக நாம் உயர்த்தப்பட்டு இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளலாம் அவ்வளவுதான். வேறொரு அனுகூலமும் இதில் கிடையாது. புரிந்ததா டாக்டர்?

சிறையில் வேறு என்ன அனுகூலங்கள் இருக்கின்றன? என்னுடைய உடலில் வலு இருக்குபோழுது என்னால் இத்தகைய விஷயங்கள் எல்லாவற்றையும் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆனால் இந்த வருடம் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. இதனைச் சொல்ல எனக்கு விருப்பமில்லை, இருந்தாலும் என் கடமை என்பதனால் நான் இதனைச் சொல்கிறேன். பகவத் கீதையைப் படிக்கும் எனக்கும் என் சகோதரனுக்கும் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அதனைத் தாங்கும் திடம் இருக்கின்றது. வருடத்திற்கு ஒருநாள் எங்களுக்கு மகிழ்ச்சியான நாள். அது வீட்டிற்குக் கடிதம் எழுதும் நாள். ஆனால் இந்த வருடம் அதைக் கூட மகிழ்ச்சியுடன் என்னால் செய்ய இயலவில்லை. பழைய நினைவுகள் பசுமையாக மனதில் வந்து வருடி மகிழ்ச்சியைத் தந்தாலும் என்னுடைய உடல் இந்தக் கடிதத்தை எழுவதற்கே சிரமப்படுகிறது. சென்ற வருடம் மார்ச் மாதத்தின் போது நான் 119 பவுண்டுகள் (54 கிலோ) இருந்தேன். இப்போது என்னுடைய எடை 98 பவுண்டுகளாகக் (44.5 கிலோ) குறைந்திருக்கிறது. நாங்கள் இங்கே வரும்போது என்ன எடை இருந்தோமோ அதுவே எங்களுடைய சாதாரணமான எடை என்று கணக்கெடுக்கிறார்கள். அது தவறு. ஏனென்றால் நாங்கள் இங்கே வருவதற்கு முன்பே பல வருடங்கள் சிறையில் இன்னல்களுக்கு ஆளாகி, பிறகுதான் இங்கே வருகிறோம். ஆனாலும் நான் இங்கே வரும்போது 111 பவுண்டுகள் இருந்தேன். கடுமையான வயிற்றுப்போக்கும், அதற்குச் சரியான மருத்துவம் பார்க்காததாலும், நோய் என்னை எலும்புக்கூடாக மாற்றிவிட்டது. எட்டு வருடங்களுக்கு நான் இத்தகைய இன்னல்களைத் தாங்கிக்கொண்டிருந்தேன். இங்குள்ள இன்னல்களும் அச்சுறுத்தும் சூழலும் எத்தகைய மன உறுதி படைத்தவரையும் நிலை குலையச் செய்து விடும். ஆனால் இவற்றைக் கடந்த எட்டு வருடங்களாகத் தாங்கும் வலிமையை எனக்குக் கடவுள் கொடுத்திருந்தார். ஆனால் இப்போது என்னால் இவற்றைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஒவ்வொரு நாளும் நான் வலுவிழந்து வருகிறேன். சமீபத்தில் மெடிகல் சூப்பரின்டன்டென்ட் என் மீது கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டதன் விளைவாக, இப்போது மருத்துவமனையின் உணவு கிடைக்கிறது. அது கொஞ்சம் நன்றாகச் சமைக்கப்பட்டிருக்கும். இவ்வளவு பலகீனத்திலும் நான் பணி செய்து கொண்டுதான் இருக்கிறேன். மருத்துவமனையில் தங்கி இருக்கவில்லை. எனக்கு அரிசிச் சாதமும் பாலும் பிரெட்டும் இப்போது தருகிறார்கள். இது முன்பு இருந்ததை விடப் பரவாயில்லை. இதனால் ஓரளவு முன்னேற்றம் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இப்படியே வலுவிழந்து இருந்தால் இங்கே அந்தமானில் பலருடைய மரணத்திற்கும் காரணமான காச நோய் வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இங்குள்ள சூழலில் ஏதேனும் மாற்றம் வந்தால்தான் என்னால் அதிலிருந்து தப்பிக்க முடியும். சிறையில் மாற்றம் என்பது இப்போதிருக்கும் நிலையை விட மோசமான நிலைக்குச் செல்வது என்பதே. இங்கு ஒரே சூழலில் இருப்பது சோர்வை வரவழைக்கிறது. ஆனாலும் இத்தகைய சிறைச் சூழல்கள் உடனடியாகக் கொல்லாது. வலுவிழக்க வைக்கும். அதே நேரம் நீங்கள் அதைத் தாக்குப் பிடிக்கும்படியாகவும் இருக்கும். இப்படிப்பட்ட மோசமான சூழலில் தாக்குப் பிடித்து எண்பது வயது வரை வாழ்ந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள். ஆகவே உடல் எவ்வளவு வலுவிழந்தாலும் பரவாயில்லை. மரணத்தை வரவழைக்கும் கொள்ளை நோய்கள் ஏதேனும் வராமல் இருந்தால் சரி.
இவை எல்லாம் உடல் ரீதியானதுதான். ஆனால் நெருப்பின் ஊடே இருக்கும் ஒரு நபர் அதன் சூட்டைத் தவிர்க்க முடியாதுதான். ஆனாலும் இங்குள்ள இன்னல் நிறைந்த சூழலை எதிர்கொள்ளும் நெஞ்சுறுதி இன்னமும் இருக்கிறது என்பதை நான் சொல்லவேண்டும். இதனால் மேற்கொண்டு எந்த இன்னல்கள் வந்தாலும் அவற்றையும் சமாளிக்க இயலும். சகோதரனுடைய உடல்நலம் என்னை விடக் கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் தலைவலி அவனுடைய உடல் எடையை 106 பவுண்டுகளாகக் குறைத்துவிட்டது.
என்னுடைய மதிப்பையும் அன்பையும் மேடம் காமாவிடம் கூறவும். அவர்கள் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன். குழந்தைகளுடன் விளையாடிப் போக்க வேண்டிய பொழுதை அவர்கள் இப்போது தலைமறைவாக வேறொரு நாட்டில் கழிக்க வேண்டியிருக்கிறது. அம்மா எப்படி இருக்கிறார்கள்? நம் சகோதரி எப்படி இருக்கிறாள்? எவ்வளவு கஷ்டங்களைச் சந்தித்தாலும் அவளிடம் சொல். அவளுடைய சகோதரர்கள் இங்கே அதை விடப் பெரிய கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்று. அது மட்டுமில்லாமல் அவளுடைய வசந்த் அவள் அருகில் இருக்கிறார். அவரைப் பார்த்தாலே அவளுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போய்விடும். சகோதரனுடைய அன்பு அவளுக்கு எப்போதும் உண்டு என்று கூறவும். யமுனா பாயிடமும் மற்றும் நம் மைத்துனியிடமும் என் அன்பான விசாரிப்புகளைக் கூறவும். சாந்தா தேறிவருகிறாள் என்பதை அறிந்து மகிழ்ச்சி. அப்புறம், நீ உன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த அன்பான டாக்டரிடம் என்னுடைய மன்னிப்புகளைத் தெரிவிக்கவும். நான் அவருடைய நட்பைப் பெரிதும் மதிக்கிறேன் என்று கூறவும். அவருக்கோ என்னுடைய மைத்துனர்களான பாலு, அண்ணா மற்றும் என் கல்லூரிக் கால நண்பர்களுக்கும் நான் எதையும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன். ஆனால் நான் அவர்கள் எல்லோரையும் நினைவில் வைத்திருக்கிறேன் என்று கூறவும். என்னுடைய ரஞ்சன் குட்டி எப்படி இருக்கிறான்? அவனுக்கு என்னைத் தெரியுமா? மீண்டும் பிளேக் நோய் பரவும் அபாயம் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அதனால் எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்கவும். உங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கவும். அது மிகவும் முக்கியம்.

இப்படிக்கு
அன்புள்ள தாத்யா.

Leave a Reply