Posted on Leave a comment

திராவிட மாயை (பாகம் 3) என்ற புத்தகத்தின் முன்னுரை | சுப்பு



(திராவிட மாயை மூன்று
பாகங்கள், சுப்பு, 
ரேர் பப்ளிகேஷன்ஸ், 400 ரூ (மூன்று பாகங்களும் சேர்த்து)
எம்.ஜி.ஆருடைய அரசியல்தான் இதில் (திராவிட மாயை 3ம் பாகத்தில்)
அதிகம் பேசப்படுகிறது இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரஹத்தின் போது போலீஸ்காரர்களுக்கு சவரம் செய்ய மாட்டேன்
என்று சபதம் எடுத்து, அதன் விளைவாக ஆறுமாத சிறைத் தண்டனை பெற்ற நாவிதரின் பெயர் வைரப்பன்.
கதர் ஆடையையும் கழுத்தில் உள்ள தாலியையும், கை வளையல்களையும் தவிர மற்ற எல்லா ஆபரணங்களையும்
நாட்டுப் பணிக்காக அகற்றிவிட்டவர் வை.மு.கோதைநாயகி, ‘சாதி ஒழிய வேண்டும்’ என்று குரல்
கொடுத்தவர் ஜி.சுப்ரமணிய ஐயர்- காங்கிரஸ் பேரியக்கத்தின் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தை
முன் மொழிந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு (28-02-1885). வெள்ளையனுடைய வியாபார நோக்கம்
கெடும்படியாக கப்பலோட்டியவர் வ.உ.சிதம்பரனார். ஆங்கிலேயரின் தலைமைப்பீடமான லண்டன் நகரிலேயே
கலகக்கொடி உயர்த்தியவர் வ.வே.சு.ஐயர். ஆப்கானிஸ்தானுடைய காபூல் நகரில் ‘இந்திய சுதந்திர
சர்க்கார்’’ என்ற அமைப்பை உருவாக்கிய செண்பகராமன், காந்தியப் போராட்டங்களின் முதல்
களப்பலியான தில்லையாடி வள்ளியம்மை, பின்னி மில் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய திரு.வி.
கல்யாணசுந்தரனார், அப்பழுக்கற்ற அரசியல்வாதி ராஜாஜி, மக்கள் தலைவர் கு.காமராஜ், திண்டுக்கல்
சர்தார் சாகிப், குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த பசும்பொன் முத்துராமலிங்க
தேவர், கல்வியாளர் டி.எஸ். அவினாசிலிங்கம் செட்டியார், ஜோசப் செல்லதுரை கொர்நீலியஸ்
என்ற இயற்பெயர் கொண்ட பொருளாதார மேதை குமரப்பா. கொடிகாத்த திருப்பூர் குமரன், கே.பி.
சுந்தரம்பாள், கக்கன் என்று முடிவில்லாத பட்டியல் இது.
தமிழகமே தேசியத்தில் மூழ்கி இருந்த போது, அதிலிருந்து விலகி
வேறுபட்டு நின்றவர்கள் மிகச் சிலரே. அந்தக் கூட்டத்தின் முன்னணித் தலைவர் ஈ.வெ.ராமசாமி.
இவருடைய அடிப்படைக் கொள்கை வெள்ளைக்காரனுக்கு வெண்சாமரம் வீசுவது. கௌரவக் குறைவான இந்த
வேலைக்கு நியாயம் கற்பிப்பதற்காக அவர் கையில் எடுத்த காரணம் பிராமண துவேஷம். மற்றபடி
அன்றாட வசனங்களும் அடிக்கடி ஒப்பனைகளும் மாறி வரும். ஹிந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு,
சாதி ஒழிப்பு என்பதெல்லாம் இவர் சால்ஜாப்புக்காக ஏற்படுத்திக் கொண்ட மேற்பூச்சுக்களே.
இப்படிப்பட்ட தலைவரின் வாரிசுகளுக்கு எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட யோக்கியதை
இல்லை என்பதுதான் நம்முடைய கட்சி. ஈ.வெ.ரா. என்பவர் தமிழ் மொழியின் எதிரி, இந்திய தேசத்தின்
எதிரி என்பது புத்தகத்தின் உள்ளே விவரிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். என்ற தமிழ்ப்பற்றாளரை
இந்திய ஒற்றுமையில் அக்கறை கொண்டவரை, ஹிந்து மதச்சார்புடையவரை திராவிடர் கழகத்தவர்கள்
கொண்டாடுவதற்கு எந்த பாத்தியதையும் இல்லை. ஈ.வெ.ரா.வின் திசையிலிருந்து விலகிப் பயணித்தவர்
எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். மட்டுமல்ல, அவரை வழிநடத்திச் சென்ற சி.என்.அண்ணாதுரையும் பிற்காலங்களில்
எவ்வாறு பண்பட்டிருந்தார் என்பதையும், இந்திய அரசமைப்புக்குள் தன்னுடைய கட்சியை அழகாகப்
பொருத்திக் கொண்டார் என்பதையும் இதில் எழுதியுள்ளேன். ஈ.வெ.ரா.வின் வெகுஜன விரோதப்
பாதையிலிருந்து விலகித் தன் கட்சியை நடத்தியவர் அண்ணாதுரை. ஆனால் அண்ணாதுரையின் கொள்கைகளை
அண்ணாதுரையின் மறைவிற்குப் பிறகு கருணாநிதி மறந்துவிட்டார். கட்சியை ஈ.வெ.ரா.விடம்
அடமானம் வைத்துவிட்டார். அடுத்த கட்டத்தில் இந்தச் சீர்கேட்டில் இருந்து விலகி, எம்.ஜி.ஆர்.
அண்ணாதுரையின் பாதையில் அ.தி.மு.க.வை நடத்திச் சென்றார்.
திராவிடர் கழகத்தின் அமைப்பு விதிகளின்படி அதில் பிராமணர்கள்
உறுப்பினர் ஆக முடியாது. ஆனால் தி.மு.க.வில் இந்தத் தடையில்லை. அண்ணாதுரை தி.மு.க.வில்
பிராமணர்களைச் சேர்த்துக் கொண்டார். தி.மு.க.வைச் சேர்ந்த நாத்திகம் ராமசாமி இதைக்
கண்டித்து எழுதினார். ‘மன்றம்’ என்ற தி.மு.க. அதிகாரப்பூர்வ இதழில் நெடுஞ்செழியன் பிராமணர்களை
சேர்த்துக் கொள்வது சரிதான் என்று விளக்கக் கட்டுரை எழுதினார்.  
‘நாத்திகம்’ என்று பெயர் வைக்கப்பட்ட இதழுக்கு தி.மு.க.வின்
‘நம் நாடு’ இதழில் (1958) விளம்பரம் தர முயற்சிக்கப்பட்டது. அதை தி.மு.க. தலைமை ஏற்க
மறுக்கிறது. ‘நாத்திகம்’ இதழை தி.மு.க.வின் ஏடாகக் கருதக் கூடாது என்று தி.மு.க. தரப்பில்
விளக்கம் வருகிறது. இதன் விளைவாக நாத்திகம் ராமசாமி தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்படுகிறார். 
(- திராவிட மாயை-ஒரு பார்வை- இரண்டாம் பகுதி /பக் 18.)
காலம் சென்ற மு.கருணாநிதியின் தலைமையில் இயங்கிய தி.மு.க.,
அண்ணா போட்ட வழியில் போவதில்லை; எம்.ஜி.ஆரை மதிப்பதில்லை. இது பொதுவெளியில் அனைவராலும்
அறியப்பட்ட விஷயம். ஆகவே அதுகுறித்து இங்கே விவரித்து எழுதவில்லை. ஆதாரங்களைத் திரட்டி,
தமிழக அரசியலின் குறிப்பிட்ட காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் படியாக (1967-1981) ‘எம்.ஜி.ஆர்.
– தி.க. உறவு பற்றிய அலசல்’ என்ற தலைப்பில் ‘விஜயபாரதம்’ வார இதழில் 25-11-2016 முதல்
26-05-2017 வரை எழுதினேன். அது தொகுக்கப்பட்டு ‘திராவிட மாயை ஒரு பார்வை மூன்றாம் பகுதி’
என்ற தலைப்பில் இந்தப் புத்தகமாக உருவெடுத்திருக்கிறது. படித்துப் பயன்பெறுக. இதை,
ஈடுபாட்டு உணர்வோடு தட்டச்சு செய்து கொடுத்த திருமதி எஸ். பிரேமாவுக்கு நன்றி. தொடரை
வெளியிட்ட ‘விஜயபாரதம்’ இதழுக்கும் என்னுடைய உதவியாளராகச் செயல்பட்ட வி.எஸ். ரவிச்சந்திரனுக்கும்,
நண்பர் வி.வெங்கட் குமாருக்கும், தேவைப்பட்ட பொழுது விவரங்களைத் தேடிக்கொடுத்த பெரியவர்
வி.ராஜகோபாலனுக்கும், நண்பர் பா.கிருஷ்ணனுக்கும் என்னுடைய நன்றி.
*
எம்.ஜி.ராமச்சந்திரன் என்று அதிகாரப்பூர்வமாகவும் புரட்சித்
தலைவர் என்று அவருடைய கட்சிக்காரர்களாலும், எம்.ஜி.ஆர் என்று தமிழ் மக்களாலும் அழைக்கப்பட்டவரின்
ஆளுமை இருபது ஆண்டு காலம் தமிழகத்தின் அரசியல் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது
என்பதை யாரும் மறுக்க முடியாது. அவருடைய திரைப்படங்களைப் போலவே அரசியல் வாழ்க்கையும்
திருப்பங்களும் மோதல்களும் நிறைந்த சுவாரஸ்யமான நகர்வு.
தமிழக அரசியல் வரலாற்றை அதிலும் திராவிட இயக்கங்களை மையமாகக்
கொண்டு ஆவணப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய முயற்சி. இதில் 1917 முதல் 1944 வரையிலான
காலகட்டம் ‘திராவிட மாயை – ஒரு பார்வை – முதல் பகுதி’ என்று முதலில் இணையத்திலும்
(தமிழ் ஹிந்து) பிறகு புத்தகமாகவும் வெளிவந்தது. அடுத்த பகுதி ‘துக்ளக்’ வார இதழில்
தொடராக 103 வாரங்கள் வெளிவந்து வாசகர்களின் ஆதரவைப் பெற்றது. இது ‘திராவிட மாயை – ஒரு
பார்வை – இரண்டாம் பகுதி’ என்ற பெயரில் புத்தகமாக வந்தது. இது குறிப்பிடும் காலகட்டம்
1944 முதல் 1967 வரை. உங்கள் கையிலிருக்கும் ‘திராவிட மாயை ஒரு பார்வை மூன்றாம் பகுதி’
1967 முதல் 1981 வரை உள்ள காலகட்டத்தைக் குறிப்பிடும் பகுதியாகும்.
இந்தக் காலம் எம்.ஜி.ஆருடைய காலம், அவருடைய ஆளுமை முழுமையாக
வெளிப்பட்ட காலம். திராவிட இயக்கத்தின் போக்கை மடைமாற்றியவர் எம்.ஜி.ஆர். என்பதை இனிவரும்
பக்கங்களில் நிறுவ முயற்சிக்கிறேன். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆர். என்ற அதிசய
மனிதரைப் புரிந்து கொள்ள ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.
சி.எல். ராமகிருஷ்ணன் என்பவர் அதிகம் அறியப்படாத ஆனால் உத்தமரான
ஒரு காவல்துறை அதிகாரி (DGP). எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாதபடி இருப்பது இவருடைய
வாழ்க்கை . சி.எல்.ராமகிருஷ்ணன் மத்தியப் புலனாய்வுத் துறையின் (சிபிஐ) தமிழகப் பிரிவில்
பணியாற்றி வந்தார். ஒரு நாள் அவருக்கு அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு
வந்தது. சென்று சந்தித்தார்.
சி.எல்.ஆருடைய பொருளாதாரப் பின்புலங்களைக் கேட்டுத் தெரிந்து
கொண்ட எம்.ஜி.ஆர்., ஓர் காவல் துறை உயர் அதிகாரி வாடகை வீட்டில் வசிப்பதைத் தான் விரும்பவில்லை
என்று தெரிவித்தார். வீட்டுவசதி வாரியத்தில் ஒரு வீடு ஒதுக்கீடு செய்வதாகச் சொல்லி
அதை ஏற்றுக் கொள்ளும்படி வலியுறுத்தினார். வீட்டுவசதி வாரியத்தினுடைய ஒதுக்கீட்டைப்
பெற்றுக் கொண்டாலும் அதற்கான மாதத் தவணையை தன்னால் கட்ட இயலாது என்று சொல்லி சி.எல்.
ஆர். மறுத்துவிட்டார். விஷயம் இதோடு முடியவில்லை.
வீட்டுவசதி வாரியத்தின் ஜீப்பும், அதிகாரிகளும் மறுநாள் காலையில்
சி.எல்.ஆர். வீட்டிற்கே வந்துவிட்டார்கள். முதுலமைச்சரின் உத்தரவுப்படி அவர்களுடைய
வேண்டுகோளை மறுக்கமுடியாமல் குறைந்த அளவு வருமானம் உடையவர்களுக்கான வீட்டைப் பெற்றுக்
கொண்டார் சி.எல்.ஆர். இருந்தாலும் அவர் போலீஸ்காரர் அல்லவா. எம்.ஜி.ஆர். எப்படித் தன்னைத்
தேர்வு செய்தார் என்ற கேள்வி அவரிடம் இருந்தது. விசாரித்துப் பார்த்தார். அவருக்கு
கிடைத்தது இனிய அதிர்ச்சி.
அப்பழுக்கில்லாத அதிகாரிகளில் சிலருக்கு எம்.ஜி.ஆர். உதவியிருக்கிறார்
என்பதுதான் அந்தச் செய்தி. கட்சிக்காரராக இருந்தபோதிலும், திரையுலகப் பிரமுகராக இருந்த
நேரத்திலும் முதலமைச்சராகப் பதவி வகித்த போதிலும் எம்.ஜி.ஆர். கருணையோடு நீட்டிய கரங்களால்
பயனடைந்தவர் எத்தனை பேர் என்பதைப்பற்றித் தனியாக ஒரு புத்தகமே எழுதலாம்.
இத்தகைய சம்பவங்களுக்கு இந்தப் புத்தகத்தில் முக்கியத்துவம்
தரவில்லை. எம்.ஜி.ஆருடைய அரசியல்தான் இதில் அதிகம் பேசப்படுகிறது…
திராவிட மாயை முதல் பகுதி, இரண்டாம் பகுதி மற்றும் மூன்றாம்
பகுதியை மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு முரண்பாடு தென்படலாம். முதல் இரண்டு பகுதிகளில்
சி.என்.அண்ணாதுரை மீது வீசப்படும் வெளிச்சம் விமர்சனத் தன்மையோடு இருப்பதாகவும் மூன்றாம்
பகுதி அவருடைய கீர்த்தியைக் கூட்டுவதாகவும் தோன்றலாம். இந்தச் சிக்கல் என்னுடைய வார்த்தைகளாலும்
வாக்கியங்களாலும் ஏற்பட்டதல்ல. அதற்குக் காரணம் அண்ணாதுரையின் பொதுவாழ்க்கையில் ஏற்பட்ட
அல்லது அவரே ஏற்படுத்திக்கொண்ட கொள்கை மாறுதல்கள்தான்.
தேசவிரோதியான ஈ.வெ.ரா.வின் சீடராக பொதுவாழ்க்கையைத் தொடங்கிய
அவர் ஒரு நீண்ட நெடிய பயணத்தில் வெகுஜனத் தலைவராக உருவெடுத்து, இந்திய அரசியல் நெறிகளுக்கு
உட்பட்டு ஆட்சி செய்கிற முதலமைச்சராகி, மறைந்தார். திராவிட மாயை புத்தகத்தின் மூன்று
பகுதிகளும் வெவ்வேறு காலப்பகுதிகளைப் பற்றி விவரிப்பதால் இதனூடே முரண்பாடு இருப்பதாகத்
தோன்றலாம், அவ்வளவுதான்.
என்னைப் பொருத்தவரை அண்ணாதுரை என்பவரை ‘சேற்றில் மலர்ந்த
செந்தாமரை’ என்று சொல்லலாம். எம்.ஜி.ஆர். அரசில் அமைச்சராக இருந்த வி.வி.சுவாமிநாதனுக்கும்
பெரியவர் கே.ராஜாராமின் குடும்பத்தினருக்கும் என்னுடைய நன்றி. சோதனையான இன்றையச் சூழலில்
என்னைக் காவல் அரணாகக் காத்திருக்கும் தமிழ் வாசகர்களுக்கு நன்றி.
அன்புடன், 

‘திராவிட மாயை’ சுப்பு

Leave a Reply