தமிழில் சமயம் வளர்க்கும் இதழ்களை இன்றைக்கு விரல் விட்டு எண்ணி விடலாம். சமய இதழ்கள் என்ற பெயரில் இன்றைக்கு ஆன்மிக, பக்தி இதழ்களும், ஜோதிடம் சார்ந்த இதழ்களுமே அதிக அளவில் வெளிவருகின்றன. ஆனால், நம் தேசத்தின் விடுதலைக்கு முன்பு சைவம், வைணவம், சைவ சித்தாந்தம், அத்வைதம் சார்ந்து பல இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஆதினங்கள் வெளியிட்ட சமயம் சார்ந்த இதழ்கள் தவிர்த்து தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாகவும் பலர் பல இதழ்களைத் தொடங்கி நடத்தியிருக்கின்றனர். அக்காலச் சமய இதழ்களைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகமே இக்கட்டுரை.
தத்துவபோதினி
இந்து சமயம் சார்ந்த தமிழின் முதல் இதழ் இதுதான். 1864ல், சென்னை பிரம சமாஜத்தைச் சேர்ந்த சுப்பராயலு செட்டியார், ராஜகோபாலாசாரியார், ஸ்ரீதரன் ஆகியோர் ஒன்றிணைந்து இவ்விதழைத் தொடங்கினர். சாந்தோமில் தத்துவ போதினி அச்சுக்கூடம் என்ற ஒன்றை நிர்மாணித்து அதன் மூலம் இவ்விதழை வெளியிட்டனர். இவ்வச்சுக்கூடம் அமைப்பதற்கு வள்ளல் பாண்டித்துரையின் தந்தை பொன்னுசாமி தேவர் அவர்கள் அக்காலத்தில் 1000 ரூபாய் நன்கொடையளித்திருக்கிறார். இவ்விதழில் சமாஜக் கொள்கைகளுடன் இந்துமத, சமுதாய முன்னேற்றம் சார்ந்த விஷயங்கள் அதிகம் இடம்பெற்றன. தமிழர்களால் துவங்கி நடத்தப்பட்ட முதல் இந்து சமயம் சார்ந்த இதழ் இது எனலாம்.
இதில் சமயம் மட்டுமல்லாது பெண்கள் நலம், கல்வி பற்றியும் மிக விரிவான கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக பால்ய மணத்தைக் கண்டித்தும், கைம்பெண் மணத்தை ஆதரித்தும், பெண் கல்வியின் இன்றியமையாமை குறித்தும் பல கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.
ஆகஸ்ட் 1865 இதழில் வெளியாகி இருக்கும் ஆசிரியர் கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதி இது.
‘தத்துவ போதினிகர்த்தர்களுக்கு..
சோதரர்களே! நம்மதேசத்தாருக்கு மிகுந்த க்ஷேமகரமான ஒரு பிரயத்தனம் ரங்கநாதசாஸ்திரி யவர்களால் செய்யப்படுகிறதென்று கேள்விப்பட்டு, அதை நம்மவரனைவர்க்குந் தெரிவிக்க நான் விருப்பங்கொண்டிருக்கின்றமையால் நீங்கள் தயை செய்து இந்தச் சஞ்சிகையை உங்கள் பத்திரிகையில் பிரசுரப்படுத்துவீர்களென்று கோருகிறேன்.
நமதுதேசத்தில் பாலுண்னும் பெண்களுக்கு விவாகம் செய்வதினாலும், பெண்களுக்குப் புனர்விவாகம் செய்யாமையினாலும், விளைகின்ற அளவற்ற தீமைகளை நேராய்க்கண்டும் கேட்டும் அனுபவித்து மிருப்பதினால், இத்தீமைகளை நிவர்த்திக்க மேற்கண்ட ரங்கநாதசாஸ்திரிகள் வெகுநாளாய் யோசித்திருந்ததாய்க் காண்கிறது. பிரகிருதத்தில் சங்கராசாரியர் மடம் இவ்விடம் வந்திருக்கின்றமையால் அந்த மடாதிபதியின் சகாயத்தால் அவர் இப் புகழ்பொருந்திய கோரிக்கையை நிறைவேற்ற யத்தனித்ததாய் கேள்விப்படுகிறேன். இவர் பிரயத்தனத்தின் உத்தேசியம் என்னவெனில் பிரகிருதத்தில் நடந்தேறிவரும் பொம்மைக் கல்லியாணங்களை நிறுத்திவிட்டு பெண்களுக்கு வயதும் பகுத்தறிவும் வந்தபிறகு கல்லியாணம் செய்விக்கவேண்டுமென்பது தான். இப்பால் நிஷ்பக்ஷபாதமாய் உரைக்கத்தக்க பண்டிதர்களை விசாரிக்குமளவில், இத்தன்மையான விவாஹத்துக்கு சாஸ்திர பாதகமில்லையென்றும், ஆகிலும், புதுமையானதாகையால் உலகத்தார் ஒப்பமாட்டார்களென்றும் விடையுரைத்தார்கள். லவுகிகயுக்திகளை யோசிக்கையில் அளவற்ற நன்மையளிக்கத்தக்க இக்காரியத்துக்குச் சாஸ்திர பாதகமும் இல்லாவிடில் அதையனுசரிக்க என்ன தடையுண்டோ என்னாலறியக்கூடவில்லை. கடவுளின் கிருபையினால் இக்காரியம் கைக்கூடிவருமெனில் இதற்காக முயற்சியும் ரங்கநாதசாஸ்திரியவர்களுடைய பேரும் பிரதிஷ்டையும் இந்த பூமியுள்ளவரையில் நிலைத்திருக்குமென்பதில் சந்தேகமில்லை.’
1865 முதல் இதே குழுவினரால் ‘விவேக விளக்கம்’ என்ற இதழும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்துமத சீர்த்திருத்தி
சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆர்வமும் சமயப்பற்றும் உள்ளவர்கள் பல இதழ்களைத் துவங்கி நடத்தினர். தீவிர மதப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த கிறித்துவ மதத்தினரின் செயல்களைக் கண்டிக்கும் விதமாகவும் அவர்களை விமர்சித்தும் பல இதழ்கள் வெளிவந்தன. அவ்வாறு இந்து மதத்தில் செய்ய வேண்டிய சீர்த்திருத்தங்களை வலியுறுத்தி வந்த இதழே ‘இந்துமத சீர்த்திருத்தி’ என்பது. இது, 1883 முதல் பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்தது. கே. ஆறுமுகம் பிள்ளை என்பவர் இதன் ஆசிரியராக இருந்தார்.
ப்ரம்மவித்தியா
தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் என இருமொழி இதழாக வெளிவந்த இதழ். 1886 முதல் சிதம்பரத்தில் இருந்து வெளியான இவ்விதழை கு.சீனிவாச சாஸ்திரியார் ஆசிரியராக இருந்து வெளியிட்டார். சமயம், வைதீக நெறிகள், தத்துவ விளக்கங்கள் சார்ந்த விஷயங்கள் இவ்விதழில் அதிகம் வெளியாகியிருக்கின்றன. சுவையான வாசகர் கடிதங்களும், அதற்கான அறிவார்ந்த பதில்களும் வெளியாகியுள்ளன. அந்நிய மதப் பிரசாரங்களைக் கண்டித்துப் பல கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.
1888ம் வருடத்து இதழ் ஒன்றிலிருந்து ‘இந்துவுக்கும் பாதிரிக்கும் சம்பாஷணை’ என்ற தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி :-
இந்து : உங்கள் தேசத்தார் கிறிஸ்து மதஸ்தரானது நியாயத்தாலா? நம்பிக்கையாலா? அக்கிரமத்தாலா?
பாதிரி : நம்பிக்கையால் தான்.
இந்து : நியாயமில்லாமல் நம்புவது விவேகமா? அவிவேகமா?
பாதிரி : கடவுளிடம் நியாயம் பார்க்கப்படாது.
இந்து : கடவுள் அநியாயஸ்தரோ?
பாதிரி : அல்ல, அல்ல. நியாயஸ்தர் தான்.
இந்து : நியாயஸ்தரானால் அவரிடம் அநியாயம் இருக்குமா?
பாதிரி : எப்படிப் பேசினாலும் வாயை யடக்குகிறீர்களே?
இந்து: இயற்கையாக மூக்கில்லாதவன் பிறரையும் அவ்வாறு செய்யக் கருதி வெட்டவெளியினின்று பரம்பொருளே! பாபநாசா! மூக்கை யிழந்த எனக்குப் பிரத்தியக்ஷமாக நீ தரிசனந் தந்தாய் என்று சொல்லி நன்றாய் ஆநந்தக் கூத்தாடி, மற்றவரையும் மூக்கையறுத்துக் கொண்டு வரச் செய்து, அவர்களும் இதனுண்மையை அறிந்து கொண்டு தாங்களும் பிறர் மூக்கை யறுக்கப் பிரயத்தனப்படுவதற்கும் கிறிஸ்துப் பாதிரிகளுக்கும் வித்தியாசமிருக்கின்றதா?
பாதிரி: பாதிரிகள் உண்மையாய் உழைப்பவர்கள். மூக்கறையர்களுக்கும் பாதிரிகளுக்கும் ஒற்றுமை சொல்லப்படாது.
இந்து: பாதிரிகளும் பொய்யை மெய்போல் காட்டிப் பேசுகிறார்கள். மூக்கறையரும் அப்படித்தான் பேசுகின்றார்கள்.
பாதிரி: உபாத்தியாயரே! உமது மதசித்தாந்தம் ஆக்ஷேபங்களில்லாம லிருக்கின்றனவா?
இந்து: எனது மதத்திற்கு உம்மைக் கூப்பிடும்போது, உமது சங்கைகளுக்கு சமாதானம் சொல்வேன். எனக்கு செலவு தாரும்.
பாதிரி : போய் வாரும்.
*
1888 ஜனவரி இதழில் வெளியான ஒர் அறிவிப்பு.
‘அறிவிப்பு’
‘இந்து டிராக்ட் ஸொஸைட்டி’
தாய் தந்தைகள் நெடுநாள் அருந்தவம் புரிந்து பெற்றெடுத்த பிள்ளைகளைப் பாதிரிகள் துர்ப்போதனை செய்து வெகு சுலபமாய்க் கிறிஸ்தவராக்கின்றதைத் தடுக்கும் பொருட்டு, இந்துமதாபிவிருத்தி செய்யும் பொருட்டும் 1887௵ ஏப்ரல் ௴ 27 உ சென்னையில் இந்து டிராக்ட் ஸொஸைட்டியென ஓர் சங்கம் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது, அதில் மெம்பராகச் சேர விருப்பமுள்ள உள்ளூரார்க்கும் வெளியூரார்க்கும் குறைந்தது சந்தா 1-4-0. இச்சங்கத்துக்குத் தருமமாகப் பொருளளிப்போர் அளிக்கலாம். இச்சங்கம் திரவிய சகாயம் செய்யும் தாதாக்கள் கைகளையே நோக்குகின்றது, இந்து மதாபிமானிகள் ஒவ்வொருவரும் இதை ஆதரிக்க வேண்டும், இச்சங்கத்தில், தற்காலம் ஒவ்வொரு தடவைக்கும் பதினாயிரம் வீதம் சிறு பத்திரங்கள் அச்சடித்து மெம்பர்களுக்கனுப்புவதோடு கிறிஸ்தவரால் உபத்திரவமுண்டாகும் பலவூர்களிலும் அனுப்பி இலவசமாகப் பரவச் செய்யப்படுகின்றன. இன்னும் அனேக காரியங்கள் செய்ய வேண்டும். யாவும் பொருளாலேயே ஆகவேண்டுமென அறிந்த விஷயமே. இதற்காக இந்து டிராக்ட் ஸொஸைட்டி தருமமென இங்கிலீஷ், தமிழ் தெலுங்கு இம்மூன்று பாஷைகளும் சேர்த்து அச்சிட்டு ஸ்டாம்புடனே புத்தகங்கள் வெளிப்பட்டிருக்கின்றன, அதில் இஷ்டமான தொகை கையொப்பமிட்டு பொக்கிஷதார் கையெழுத்திட்ட ரசீதின் பேரில் ஏஜெண்டுகளிடத்திலாவது பில் கலெக்டரிடத்திலாவது பணம் கொடுக்க வேண்டியது, மற்றப்படி யாரிடத்திலும் பணம் தரப்படாது.
இச்சங்கத்தைப் பற்றி யாதேனுமறிய விரும்புவோர் அரை அணா லேபிலாவது ரிப்ளை கார்ட்டாவது அனுப்ப வேண்டியது.
கஅஅஎ௵ இங்ஙனம்
நவம்பர் மீ 30 உ பொன்னரங்கபிள்ளை
சென்னை ௸ சங்கத்தின்
அக்கிராசனாதிபதி
– இவ்வாறு பல்வேறு பகுதிகளைக் கொண்டிருந்த இவ்விதழுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இது, 1888 முதல் மாதமிருமுறை இதழாக வெளியானது. இரண்யகர்ப்ப ரகுநாத பாஸ்கர சேதுபதி அவர்களின் பொருளுதவியால் இவ்விதழ் நடத்தப் பெற்றது. இப்பத்திரிகையின் ஆசிரியரான சீனிவாச சாஸ்திரியார், 1888 முதல் ‘சன்மார்க்க போதினி’ என்ற இதழையும் நடத்தி வந்திருக்கிறார்.
ஞான சாகரம்
மறைமலையடிகளால் 1902ல் ஆரம்பித்து நடத்தப்பட்ட சைவ சமயம், தனித்தமிழ் சார்ந்த இதழ். சைவம் சார்ந்த விழுமிய கருத்துக்களும், தனித்தமிழ்க் கொள்கைகளை விளக்கும் கட்டுரைகளும் கொண்டது. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் என்பதை விளக்கும் வகையில் தொடர்ந்து பல கட்டுரைகள் இவ்விதழில் வெளியாகியிருக்கின்றன. மாணிக்கவாசகர் காலம், சைவ சமயப் பெரியோர்களின் வாழ்க்கை வரலாறு, கருத்து விளக்கக் கட்டுரைகள், மறைமலையடிகள் ஆற்றிய சொற்பொழிவுகள், அவரது தொடரான குமுதவல்லி போன்றவை இவ்விதழில் வெளியாகி இருக்கின்றன. மிக நீண்ட காலம் நடைபெற்ற இதழ் இது.
இகபரசுகசாதனி
கொ.லோகநாத முதலியார் இதன் ஆசிரியர். 1903, மே மாதம் முதல் சென்னையிலிருந்து வெளியான இந்து சமயம் சார்ந்த 16 பக்கங்கள் மட்டுமே கொண்ட இதழ். இம்மை, மறுமை நல்வாழ்விற்கான பல்வேறு கட்டுரைகளைத் தாங்கி வந்திருக்கிறது. ஔவையார் சரித்திரம், பொய்யாமொழிப் புலவர் சரித்திரம், மத ஆராய்ச்சி, நாயன்மார் வரலாறு என பல விஷயங்களைத் தாங்கிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
ஆரியன்
கும்பகோணத்தில் இருந்து ஆகஸ்ட் 1906 முதல் வெளிவந்த இதழ். ஆசிரியரின் பெயர் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. ‘லோகோபகார சிந்தையுள்ள பிராம்மண ஸன்னியாஸி ஒருவர்களது பார்வையில் நடத்தப்படுகின்றது’ என்ற குறிப்பு காணப்படுகிறது. யோகி போகி ஸம்வாதம், ஸ்ரீ சங்கரபகவத்பாத சரித்திரம், பிரபஞ்ச நாடகம், நசிகேதஸ் போன்ற கட்டுரைகள் காணப்படுகின்றன.
வேதாந்த தீபிகை
1910ல் சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளியான வைணவம் சார்ந்த தமிழ்ச் சிற்றிதழ். அஹோபில மடத்துச் சிஷ்ய சபையின் சார்பாக இவ்விதழ் வெளிவந்திருக்கிறது. ஆரம்பத்தில் எஸ். வாஸூதேவாச்சாரியார் இதன் ஆசிரியராக இருந்தார். மணிப்பிரவாள நடையில் வைணவம் மற்றும் இந்து சமயம் சார்ந்த பல செய்திகளைக் கொண்டதாக இவ்விதழ் இருந்தது. ஸம்ஸ்கிருத ஸ்லோகங்களும் அதன் விளக்கங்களும் நிறைய இடம் பெற்றிருக்கின்றன. விசிஷ்டாத்வைத விளக்கம், ஜீவாத்மா-பரமாத்மா தத்துவ விளக்கம், பாகவதம் போன்ற பல செய்திகள் இவ்விதழில் காணப்படுகின்ரன. ‘கடிதங்கள்’ என்ற பகுதி சுவையான பல விவாதங்களைக் கொண்டதாக உள்ளது. வாஸூதேவாச்சாரியாருக்குப் பின் வழக்குரைஞர் திவான்பகதூர் டி.டி.ரங்காச்சார்யரின் ஆசிரியர் பொறுப்பில் இவ்விதழ் மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது.
சித்தாந்தம்
சித்தாந்தம், 1912ல், சென்னையில் இருந்து வெளிவந்தது. சைவ சித்தாந்த சமாஜத்தின் மாதாந்திரத் தமிழ் இதழ். இதன் ஆசிரியர் சித்தாந்த சரபம், அஷ்டாவதானி பூவை கலியாண சுந்தர முதலியார். (இவர் துறவு நெறி மேற்கொண்ட பின் சிவஸ்ரீ கல்யாணசுந்தர யதீந்திரர் என்று அழைக்கப்பட்டிருக்கிறார். ‘மணவழகு’ என்ற புனைபெயரில் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.) இது சைவ சித்தாந்தக் கருத்துகளையும், சமய, தத்துவக் குறிப்புகளையும் உள்ளடக்கமாகக் கொண்டது. ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளை, தி.அரங்கசாமிநாயுடு, கி.குப்புசாமி, மெய்கண்ட முதலியார், பண்டிதை அசலாம்பிகை அம்மாள், காசிவாசி செந்திநாதையர், துடிசை கிழார் அ.சிதம்பரனார், நாகை ஸி. கோபாலகிருஷ்ணன் எனப் பல சித்தாந்தப் பெருமக்கள் இவ்விதழில் கட்டுரைகளை எழுதியுள்ளனர். சைவ சித்தாந்தக் கருத்துக்கள் வினா – விடையாக பல்வேறு விளக்கங்களுடன் இடம் பெற்றிருக்கின்றன.
பாஷை என்பதை ‘பாழை’ என்றே இந்த இதழ்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆகம விளக்கம் பற்றிய கட்டுரைகளும் உள்ளன. பூவை கலியாண சுந்தர முதலியாரின் மறைவிற்குப் பின் வி.உலகநாத முதலியார் இதன் ஆசிரியராக இருந்து நடத்தியிருக்கிறார். சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் மூலமாக வெளிவந்த இவ்விதழ், தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
சைவம்
சென்னை சிவனடியார் திருகூட்டம் என்றழைக்கப்படும் சைவ மஹா சபையின் மாதாந்திர இதழ் இது. சென்னை ஏழுகிணறு பகுதியில், 1914ல் ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழின் நோக்கம் சைவத்தின் பெருமையைப் பரப்புவதும், பழமையைப் போற்றுவதும். இருக்கம் ஆதிமூல முதலியார் இதன் ஆசிரியர். சைவத்தின் உயர்வு, சைவ சமயத்தின் உண்மை, அதனைப் பரப்பச் செய்ய வேண்டியது பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன. பெரிய புராணம் தொடராக வெளியாகியுள்ளது. சாத்திர விளக்கம், நாம விளக்கம் என பல விளக்கக் கட்டுரைகள் காணப்படுகின்றன. சிவஞான போதம், தேவார, திருவாசகப் பாடல் விளக்கங்கள், நூல் அறிமுகப் பகுதி போன்றவையும் அமைந்துள்ளன. இதழின் தலையங்கம் ஒன்றில், வாசிப்போர் உள்ளம் நெகிழும்படி கீழ்கண்டவாறு அதன் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
சந்தாதாரர்களுக்கு விஞ்ஞாபனம்
இக்காலத்தில் சைவ சமயபரிபாலனம் செய்வாரில்லை. கை ஒழுக்கங்கள் குன்றிப்போயின. ஒவ்வோர் காலத்தில் ஒவ்வொர் சைவாபிமானிகள் வெளிப்பட்டுச்செய்யும் முயற்சிகளும் அவ்வவர்களோடு அழிகின்றன. இப்படியே அடியேன் செய்யும் முயற்சிகளும் என்னோடேயழிந்து போகலாம். ஆதலால் நான் இப்போது தொடங்கி நடத்திவருவன என்றும் நிலைபெற்று மேலுமேலும் விருத்தியடையுமாறு பெருமுயற்சிகள் செய்துகொண்டிருக்கிறேன். நான் இன்னும் இரண்டொரு வருடம் உயிரோடிருந்தால் இம்முயற்சி இறைவனருளால் முற்றுப்பெறும். இதற்கிடையில் பத்திரிகைக்கு விஷயங்கள் எழுதுவதில் என்மனம் செல்லவில்லை. அவரவர்கள் பலபல உதவிகளை நாடி எழுதுங் கடிதங்களைக் கவனிக்கவும் இயலவில்லை. பத்திரிகை தாமதித்து அனுப்பநேரிடுகிறது. இக்குறைகளை சிலகாலம்வரை அன்பர்கள் பொறுத்துக்கொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்.
– இ. ஆதிமூல முதலியார்.
ஆரிய தர்மம்
இந்துக்களின் தர்ம நெறிகளை விளக்கும் வைதீக சமயம் சார்ந்த இதழ். காஞ்சி காமகோடி பீடாதிபதி அவர்களின் ஆசியுடன் கும்பகோணத்தில் இருந்து 1914 முதல் வெளிவந்திருக்கிறது. ப.பஞ்சாபகேச சாஸ்திரிகள் இதன் ஆசிரியர். ஸ்ரீரங்கம் ஸ்ரீவாணி விலாஸ பிரஸ்ஸில் அச்சிடப்பட்டு வெளியாகியிருக்கிறது. சங்கரரின் கொள்கைகளை முதன்மையாகக் கொண்ட இவ்விதழில் ஸ்ரீ சங்கரர் சரித்திரம், ஸ்ரீ சங்கர தத்துவங்கள், அம்பரீஷ சரித்திரம், ஈச்வர பூஜா விதானம், வியாஸகலீயம், மாயாசாஸ்திரம், ஸ்மிருதிகள், கல்வி, ஒழுக்கம், தவம், ஞான யோக விளக்கம் உள்பட பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. வசதியுள்ள பலர் நிதியுதவி செய்து இவ்விதழ் வளர்ச்சிக்கு ஊக்குவித்துள்ளனர்.
ஞானசூரியன்
ஞானசூரியன் யோக, ஞானத் தத்துவ விளக்கமாக 1922 ஏப்ரல் முதல் வெளிவந்த நூல். இரண்டு வருடங்கள் மட்டுமே வெளிவந்த இதன் ஆசிரியர் கருணையானந்த பூபதி அவர்கள். திருவாரூரைத் தலைமையகமாகக் கொண்டு இவ்விதழ் வெளியானது. இந்து சமயத்தின் யோக, ஞான, சமயக் கருத்துக்கள், தத்துவ விளக்கங்கள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. கூடவே முகமது நபியின் சரித்திரமும் தொடராக வெளியாகியுள்ளது. இஸ்லாமியக் கருத்து விளக்கங்களும் நிறைய இடம் பெற்றுள்ளன. ஆம். கருணையானந்த பூபதி பிறப்பால் ஓர் இஸ்லாமியர். அவரது இயற்பெயர் முகமது இப்ராஹிம். ’மணிமுத்து நாயகம்’ என்ற புனை பெயரிலும் எழுதியுள்ளார்.
‘வேதாந்த பாஸ்கரன்’, ‘ஞானக் களஞ்சியம்’,‘ஞானயோக ரகசியம்’, ’சர்வ மதஜீவகாருண்யம்’, ‘கந்தப்புகழ்’, ‘முருகப்புகழ்’, ‘திருப்பாவணி’,’காவடிக் கதம்பம்’, ‘முருகர் தியானம்’, ‘தெட்சணாமூர்த்தி பக்தி ரசக் கீர்த்தனை’ உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்குப் பெயர் சூட்டியவர் இவர்தான். கருணாநிதியின் தந்தை, தாய் இருவருமே கருணையானந்தபூபதியின் அத்யந்த பக்தர்கள்.
சன்மார்க்க பானு
ஜனவரி 1925 முதல் ராணிபேட்டையிலிருந்து பிரதிமாதம் பௌர்ணமி தோறும் வெளிவந்த இதழ் இது. இதன் ஆசிரியர் பண்டிட் பி. ஸ்ரீநிவாசலு நாயுடு. சரியை, கிரியை, ஞானம், யோகம் இவற்றை மையப்படுத்தி வெளியான இதழ். விழிப்புணர்வைத் தூண்டும் சமூக நலன் சார்ந்த செய்திகளும் இவ்விதழ்களில் இடம் பெற்றிருக்கின்றன.
ஹரிஸமய திவாகரம்
1923ல் துவங்கப்பட்ட வைணவ சமய இதழ். ஸ்ரீராமாநுஜரின் தத்துவம் கொள்கைகள், பெருமைகளை விளக்கும் இதழ். பண்டிதர் ஆ.அரங்கராமாநுஜன் இதன் ஆசிரியர். மதுரை ஹரிஸமய திவாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு இரு மாத இதழாக வெளியானது. வைஷ்ணவர்களின் பெருமை, ஸ்ரீபாஷ்யகாரர் சரித்திரம், ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம், கம்பநாட்டாழ்வார், தத்வத்ரய விசாரம், யக்ஷ ப்ரச்நம், வைஷ்ணவ தர்மம், ஸ்ரீராமாநுஜ சித்தாந்தப் ப்ரகாசிகை, ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்த சாரம், திவ்விய சூரி சரிதம், ருக்மாங்கத சரிதம், திருக்குறள் சமயம், திருக்குறள் கடவுள் வாழ்த்து ஆராய்ச்சி, நசிகேதோபாக்யானம், யாதவாப்யுதயம், கம்பராமாயணம் அரங்கேறிய காலம் என பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர், மு.இராகவையங்கார், உ.வே.நரசிம்ஹாச்சாரியார், உ.வே. அப்பணையங்கார் ஸ்வாமி, வி.எஸ்.ராமஸ்வாமி சாஸ்திரிகள் போன்ற பலர் இவ்விதழில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். வைணவ மடம் சார்ந்த பலர் இவ்விதழ் வளர்ச்சிக்கு நிதியுதவி செய்து ஊக்குவித்துள்ளனர்.
ஸன்மார்க்கப் பர்தர்சினீ
மதுரையிலிருந்து, தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகளின் ஆசிரியர் பொறுப்பில் 1933, செப்டம்பர் முதல் வெளியான மாத இதழ் இது. ராமாயணம், மகாபாரதம், அவற்றின் சிறப்பான தத்துவங்கள், கீதையின் பெருமை, சங்கர விஜயம் போன்றவற்றைப் பற்றிய தொடர் கட்டுரைகளைத் தாங்கி வந்திருக்கிறது. புராணக் கதைகளும், கட்டுரைகளும் வெளியாகியிருக்கின்றன. ஆலய நுழைவுப் போராட்டம் பற்றிய செய்திகளும் வெளியாகியுள்ளன.
திருப்புகழ் அமிர்தம்
திருப்புகழின் பெருமையை விளக்க வெளிவந்த இந்த இதழ் கிருபானந்த வாரியாரின் ஆசிரியர் பொறுப்பில் காங்கேயநல்லூரில் இருந்து வெளியானது. 1935ல் துவங்கப்பட்ட இவ்விதழில் முருகனின் பெருமை, திருப்புகழின் அருமை, சிறப்புகள், முருகன் அருள் புரியும் விதம், ஆலயங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றன. திருப்புகழ் பாடல்களின் விரிவான விளக்கவுரை மாதந்தோறும் இடம் பெற்றது.
அம்ருதலஹரி
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஆசிரியராக இருந்து நடத்திய வைணவ சமய இதழ். 1938ல் காஞ்சியில் இருந்து வெளிவந்த இவ்விதழ் பின்னர் ஸ்ரீரங்கத்தில் இருந்து வெளிவந்தது. பிற்காலத்தில் ஸுந்தரராஜாச்சாரியார் இதன் ஆசிரியராக இருந்தார். வைணவம் சார்ந்த பல தத்துவ விளக்கங்கள், விவாதங்கள் மிக விரிவாக இடம் பெற்றுள்ளன. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சியில் நடக்கும் அரிய விழாவான அத்திகிரி வைபவம் எனப்படும் அத்தி வரதர் வைபவம் பற்றிய சுவையான செய்திகள் இவ்விதழ் ஒன்றில் காணப்படுகிறது. வடகலை, தென்கலை விவாதங்கள், என குழு சார்ந்த விவாதங்களும் இடம் பெற்றுள்ளன. பல க்ரந்தங்களுக்கு, பாடல்களுக்கு பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் விளக்கவுரை அவரது மேதைமையைப் பறை சாற்றுகிறது. பாஷ்ய விளக்கங்கள், முமூக்ஷுப்படிக்கான விளக்கங்கள் போன்றவை மணிப்ரவாளமாக எழுதப்பட்டுள்ளன. இவ்விதழின் ஆசிரியர் அண்ணங்கராச்சாரியார், பிற்காலத்தில் ‘ஸ்ரீராமநுஜன்’ என்ற இதழையும் துவங்கி நடத்தியிருக்கிறார்.
மாத்வ மித்திரன்
மத்வ சமய விளக்கக் கொள்கைகள் கொண்ட மாத இதழ். 1940களில் கும்பகோணத்தில் இருந்து வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் ரங்கனாதாச்சாரிய பாகவதர் இவ்விதழில் பகவத்கீதை விளக்கம், ஹரிகதாம்ருதஸாரம், ஸ்ரீமாத்வ விஜயம், குரு ஆபோத தௌம்யர் போன்ற பல தலைப்புகளில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மாத்வ சமயம் சார்ந்து வெளிவந்த அக்காலத்தின் ஒரே தமிழ் இதழ் இதுதான். இது பற்றி அந்த இதழில் காணப்படும் குறிப்பு:- ‘மாத்வர்களின் சாஸ்திரீயமான தமிழ் பத்திரிகை இது ஒன்றே. ஸ்ரீ மத்வ மதத்தின் அரிய இரகசியங்கள், ஸம்பிரதாயங்கள், மாகாத்மியங்கள், புராண சரிதைகள், மாத்வ வகுப்பு புண்ய புருஷர்களின் சரித்திரங்கள், வேதாந்த சர்ச்சைகள், தர்ம சாஸ்திர விசாரங்கள், தினசரி விரதாதி குறிப்பு, மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் முதலான அநேக கிரந்தங்களின் மொழிபெயர்ப்புகள் முதலிய எண்ணிறைந்த விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. ஸ்ரீ மத்வ மதத்தை சுலபமாய் அறிந்து கொள்ள இப்பத்திரிகைக்கு உடனே சந்தாதாரர்களால் சேருங்கள்’ என்கிறது.
ஞானசம்பந்தம்
1941 டிசம்பரில் ஆரம்பித்து தருமபுர ஆதினத்தாரால் நடத்தப்பட்ட இதழ் இது. ஒடுக்கம் ஸ்ரீ சிவகுருநாதத் தம்பிரான் ஆசிரியராக இருந்து நடத்தியிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் இவ்விதழில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சைவ சமயத்தின் சிறப்பு, வேதத்தின் பெருமை, ஆகமத்தின் முக்கியத்துவம், ஞான சம்பந்தரின் அருள் பாடல் விளக்கங்கள், தருக்கசங்கிரக விளக்கம் என பல்வேறு செய்திகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்திருக்கிறது. சி.கே.சுப்பிரமணிய முதலியார், கா.ம.வேங்கடராமையா, பாலூர் கண்ணப்ப முதலியார், பண்டிதர் நாராயணசாமி அடிகள், சுவாமிநாத சிவாசாரியார் உள்ளிட்ட பலர் இவ்விதழில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். சமயம் சார்ந்த நூல்களின் நூல் விமர்சனமாக ‘மதிப்புரை’ப் பகுதி இவ்விதழில் இடம் பெற்றுள்ளது. சைவ சமயத்தின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்வதற்காக வெளிவந்த இதழ் இது என்கிறது பத்திரிகைக் குறிப்பு.
பிற்காலத்தில் இவ்விதழை சோமசுந்தரத் தம்பிரான் ஆசிரியராக இருந்து நடத்தினார். அவரது ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்தபோது சமூக நலன் சார்ந்த கட்டுரைகளும், தொல்காப்பிய விளக்கம், திருக்குறள் மேன்மை போன்ற இலக்கியக் கட்டுரைகளும் ராசி பலன் போன்ற பகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
இவை தவிர்த்து மேலும் பல சமயம் சார்ந்த இதழ்கள் வெளியாகியிருக்கின்றன. ‘ஜே.கிருஷ்ணமூர்த்தியே அடுத்த அவதார புருடர்’ என்பதை வலியுறுத்தி தியாசபிகல் சொஸைட்டி சார்பாக 1909 முதல் ‘பூர்ண சந்திரோதயம்’ என்ற மாத இதழ் வெளியாகியிருக்கிறது. (ஜே.கே. அதை உதறிவிட்டுச் சென்றது வரலாறு) ‘தர்மபோதினி’ என்ற சமய, சமூக இதழ், தர்மபுரியிலிருந்து ஏப்ரல் 1924 முதல் வெளியாகியுள்ளது. காரைக்குடியை அடுத்த பலவான்குடியிலிருந்து ’சிவநேசன்’ என்னும் பெயரில் தமிழ் மற்றும் சைவ சமயம் சார்ந்த இதழ் 1933ல் வெளிவந்துள்ளது. வீர சைவம் சார்பாக 1934 முதல் ’சிவபக்தன்’ என்ற இதழ் வெளிவந்துள்ளது. வைணவம் சார்ந்த கருத்துக்களையும், திருப்பதி வேங்கடவன் பெருமையையும் மக்களிடையே பரப்ப தஞ்சாவூரின் கோவில்வெண்ணியிலிருந்து 1942 மே மாதம் முதல் ஸ்ரீவேங்கட க்ருபா என்ற இதழ் வெளியாகியிருக்கிறது. சந்தானகோபாலன் ஆசிரியராக இருந்து நடத்தியிருக்கிறார். திருக்கோயில் என்ற இதழ் தமிழக அரசின் சார்பாக பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.