Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 25 | சுப்பு

கொண்டம்மா
அடையாரில்
(1978 தீபாவளி) நானும், சித்தார்த்தனும் இன்னொரு நண்பனோடு பேசிக்கொண்டே சாலையைக்
கடந்தபோது ஒரு கார் என் மீது மோதியது. தூக்கியடிக்கப்பட்ட நான் காரின் பானட்டில்
விழுந்தேன். காரின் கண்ணாடியில் என் தலை மோதியது. நான் அங்கிருந்து கீழே உருள,
கார் கடந்து போய்விட்டது. அந்தரத்தில் இருந்த கணத்தில் என்முன் பார்வதி அக்காவின்
தோற்றம். கீழே விழுந்ததும் உடனே எழுந்து கார் நம்பரைக் குறித்து அங்கிருந்த
போலீஸ்காரரிடம் கொடுத்தேன்.
ராயப்பேட்டை
ஆஸ்பத்திரியில் காயங்களுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டேன். போலிஸ் கேஸ் பதிவு
செய்யப்பட்டது. தலையை எக்ஸ்ரே எடுத்தார்கள். அதை யார் பார்க்க வேண்டுமோ அந்த
டாக்டரைத் தேடிக்கொண்டு அரைமணி நேரம் அலைந்தேன். பிறகு மனசு வெறுத்துப்போய்
டீக்கடையில் எக்ஸ்ரேயை அடமானம் வைத்து டீ குடித்துவிட்டு நடந்தே பெசன்ட் நகருக்கு
வந்துவிட்டேன். இந்த விபத்தில் பட்ட அடியால் முதுகெலும்பு எவ்வளவு
பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரத்தைப் பல வருடங்களுக்குப் பிறகு தெரிந்து
கொண்டேன்…
கடலில்
விசைப்படகைச் செலுத்தி மீன் பிடிக்கலாம் என்று நினைத்து அஸ்வத்தாமாவை வாங்கினோம். அந்த
ஆசை நிராசையாக முடிந்துவிட்டது. இருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் மீன்பிடி தொழில்
பற்றிய விவரங்கள், நுட்பங்கள் என் மூளைக்குள் ஏறிவிட்டன. வெளியூரிலிருந்து மீன்
கொள்முதல் செய்து அதை சென்னைக்கு அனுப்பி விற்பனை செய்யலாம் என்கிற யோசனை
வலுவடைந்தது. அதற்காக உப்படாவுக்குப் போனேன்.
ஒவ்வொரு
ஊரிலும் அங்குள்ள கடல் அமைப்பு, கரை அமைப்பு ஆகியவற்றைப் பொருத்து சில விசேஷமான
மீன்பிடிக்கும் முறைகள் உண்டு. ராமேஸ்வரத்தில் விசைப்படகுகள் அதிகம். நாகப்பட்டினத்தில்
நாட்கணக்கில் பயணம் செய்து காலா மீன் பிடிப்பார்கள். காணாமல்போன மீனவர்களைப்
பற்றிய பத்திரிகைச் செய்தியில் இவர்கள்தான் அதிகமிருப்பார்கள். சென்னையிலுள்ள
குப்பத்தைச் சேர்ந்தவர்கள் பண்ணில் (nylon twine) கட்டப்பட்ட தூண்டில் மூலம் சுறா
பிடிப்பதில் நிபுணர்கள். வாய் அல்லது கழுத்தில் சிக்கிய பண்ணை இழுத்துக்கொண்டு
சுறா தண்ணீரைக் கிழித்துக்கொண்டு பறக்கும். போகும் வேகத்தில் கட்டுமரத்தையும்
இழுத்துக்கொண்டு போகும். சுறாவின் ஓட்டத்திற்குத் தகுந்தவாறு கட்டுமரத்தில்
இருப்பவர்கள் பண்ணை விட்டுக் கொண்டு போவார்கள். ஆங்கில திரைப்படத்தில் கௌபாய்கள்
இடுப்பில் கயிற்றைச் சுருட்டி தொங்கவிட்டுக் கொண்டு இருப்பார்களல்லவா,
அதுபோலத்தான். ஒரு கட்டத்தில் சுறா களைத்து, ஓட்டத்தை நிறுத்திவிடும். அதோடு சுறா
வேட்டை ஓவர். சுறா வேட்டையில் விரல்களை இழந்த மீனவர்களும் உண்டு. பண்ணுடைய
கூர்மையும், சுறாவுடைய வேகமும் ஒத்துழைத்தால், சமயத்தில் மீனவரின் கைவிரல்கள்
அறுபட்டுவிடும்.
அடுத்த
வியாபார முயற்சிக்காக காக்கிநாடாவுக்கு அருகிலுள்ள உப்படாவுக்குப் போனபோது அங்கே
உள்ள மீன்பிடி முறை ஒன்றைப் பற்றி அறிந்தேன். முதலில் தனியாக ஒரு சின்ன படகு. அதில்
இருப்பவன்தான் வேட்டைக்குத் தலைவன். அவனைத் தொடர்ந்து நூறு பெரிய படகுகள். இந்தப்
படகுகளில் ஆட்கள் வலைகளோடு தயாராயிருப்பார்கள். முதல் படகுக்கும் இவர்களுக்கும்
இடையே ஒரு கிலோ மீட்டருக்கு மேல் இடைவெளி. தலைவன் படகை நிறுத்திவிட்டு,
தன்னிடமிருக்கும் மூங்கில் குழாயை – இரண்டு அடி நீளக்குழாய் – தண்ணீருக்குள்
செலுத்தி மேல் பக்கத்தில் காது வைத்துக் கேட்பான். சிறிது நேரத்திற்குப் பிறகு
மற்றவர்களுக்கு அருகே வருமாறு சைகை மூலம் அழைப்பு. சில படகுகள் வரும். அந்த
இடத்தில் எந்த ஆழத்தில், என்ன மீன்கள், எவ்வளவு இருக்கிறது என்பதைத் துல்லியமாகக்
கணித்துச் சொல்வான். அவர்கள் வலை போடுவார்கள். தலைவன் அடுத்த இடத்தை நோக்கிப்
படகைச் செலுத்த, மீதமுள்ள படகுகள் அவனைப் பின் தொடரும். இந்த மீன்பிடி முறை
வேறெங்கும் இருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை.
உப்படாவிலிருந்து
ஐஸ்மீனை வாங்கி நான் சென்னைக்கு அனுப்புவேன். ராஜேந்திரன் சிந்தாதிரிப்பேட்டை
மார்க்கெட்டில் ஐஸ்மீனை ஏலம்விட்டுப் பணமாக்குவான். ஒரு மாத காலத்தில் இது முடிவு
பெற்றுவிட்டாலும் இதைத் தொடர்ந்து சில வருடங்கள் நாங்கள் செய்த ஐஸ்மீன்
வியாபாரத்திற்கு இது பயிற்சியாயிருந்தது. உப்படாவிற்குப் பிறகு நான்
பாரதீப்புக்குப் போனேன். பாரதீப் ஒரிஸ்ஸாவின் துறைமுகம். உப்படாவில் எனக்குப்
பழக்கமாயிருந்த சில ஆந்திர மீனவர்கள் இங்கே தொழில் செய்து கொண்டிருந்தார்கள். பாரதீப்
சுறா வேட்டைக்குப் பேர் போனது. சுறாவிற்குக் கல்கத்தாவில் விலை கிடையாது. ஆகவே,
மலையாளிகள் சுறாவைக் கருவாடாக்கி கேரளாவுக்கு எடுத்துப் போய்க் கொண்டிருந்தார்கள்.
நான் சுறாவை வாங்கி, ஐஸ்மீனாக சென்னைக்கு அனுப்பினேன். இந்த வியாபாரம்
ஒழுங்காகவும் லாபகரமாகவும் நடந்தது.
பாரதீப்
நாட்கள் என்னால் மறக்க முடியாதவை. பாரதீப் துறைமுகம் முழுதாகக் கட்டப்படாத
நிலையில், ஆந்திர மீனவர்கள் அங்கே ஒரு காலனியை உருவாக்கியிருந்தார்கள். நல்ல
வருமானம் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ஒரியாக்கார குண்டர்கள் செய்த எல்லாக்
கொடுமைகளையும் இவர்கள் சகித்துக் கொண்டார்கள். பகலெல்லாம் கலகலப்பாக இருக்கும்
இந்தக் காலனியில் விளக்கு வைத்தால் எங்கும் பெண்களின் அழுகுரல்தான். மதுவின்
பிரவாகம்தான். இரவில் வெகுநேரம் வரை எல்லா பக்கங்களிலிருந்தும் ஆண்களின் ஆபாசமான
வசவுகளும் கூக்குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கும். மதுவின் கொடுமையைப் பற்றியும்
மதுவிலக்கை வற்புறுத்திய மகாத்மா காந்தியின் பெருமைபற்றியும் பாரதீப்
நாட்களில்தான் நான் தெரிந்துகொண்டேன்.
கொண்டம்மா
என்ற இளம்பெண் அங்கே வியாபாரிகளுக்கு ஏஜண்டாக இருந்தாள். எனக்கும் இவள்தான்
ஏஜெண்ட். எப்போதும் உற்சாகமாயிருக்கும் இந்த இருபத்து இரண்டு வயதுப்பெண்ணுக்கு
நான்கு குழந்தைகள். ஒரு குழந்தை எப்போதும் இவள் இடுப்பிலேயே குடியிருக்கும். கொண்டம்மாவைச்
சுற்றி நோட்டுப் புத்தகமும் பேனாவும் வைத்துக்கொண்டு என்னைப்போல ஐந்து
வியாபாரிகள். ஒவ்வொரு ஏலத்தையும் நாங்கள் குறித்துக் கொள்வோம். அவளுக்கு
நோட்டுப்புத்தகம் தேவையில்லை. எந்த ஏலம் எவ்வளவு போயிற்று, அதை யார் எடுத்தார்கள்,
யாருடைய வலை மீன் அது, அவர்களுக்கு இன்னும் எவ்வளவு பாக்கி என்பது போன்ற ஏராளமான
விவரங்களை எப்போது கேட்டாலும் சொல்லும் அபாரமான ஞாபக சக்தி அவளுக்கிருந்தது. இடையிடையே
குழந்தைகளின் நச்சரிப்பு.
பகல்
பன்னிரண்டு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை ஓடி ஓடி உழைத்து கொண்டம்மாள் தினசரி
ஐநூறு ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதிப்பாள். சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு
குழந்தைகளோடு வீடு திரும்பும்போது, கொண்டம்மாவின் கணவனை சீட்டாட்ட பாக்கிக்காக
எவனாவது ஒருவன் சட்டையைப் பிடித்துக் கொண்டிருப்பான். இது அன்றாடம் நடக்கும்
நிகழ்ச்சி. கணவனைப் பிடித்தவனுக்கு அலட்சியமாய் ஒரு தட்டு. இருநூறோ, முந்நூறோ
அங்கேயே கணக்குத் தீர்க்கப்படும். கணவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனால்,
அதற்குள் அவனுக்குப் போதை தெளிந்துவிட்டிருக்கும். ‘ஏன் சமையல் செய்யவில்லை’ என்று
அவளை எட்டி உதைப்பான்.
கொண்டம்மாள்
என்னை உரிமையுடன் கேலி செய்வாள். Bertrand Russel எழுதிய Problems of philosophy
புத்தகத்தை வைத்துக்கொண்டு, நான் யோசித்துக் கொண்டிருப்பேன். ‘அதிகம் படித்தால்
மறை கழண்டு விடும்’ என்பாள். கொண்டம்மாள் எனக்கு ஒரு சாய வேட்டி வாங்கிக்
கொடுத்தாள். கணவனிடம் இப்படிக் கஷ்டப்படுகிறாளே என்ற எண்ணத்தில் ‘நீயேன் வேறு
ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது’ என்று கேட்டுவிட்டேன். வாழ
விருப்பமில்லையென்றால் இங்கே பெண்கள் தாலியைக் கழட்டிக் கணவனிடம் கொடுத்துவிட்டு
வேறு ஒருவனோடு வாழலாம். அதற்கு அவ்வளவாக மரியாதை இராது என்றாலும், பெரிய
குற்றமாகக் கருதமாட்டார்கள். கொண்டம்மாள் என் நோக்கத்தைத் தவறாகப் புரிந்து
கொண்டாள். ஊர்ப் பஞ்சாயத்தில் புகார் செய்துவிட்டாள். பஞ்சாயத்தாருக்கு என்னைப்
பற்றிய நல்ல அபிப்பிராயம் இருந்ததால் என்னிடம் ‘உன்னுடைய கொள்கைகளை இந்த ஊரில்
நிறைவேற்ற முடியாது. வீணாக வம்பில் மாட்டிக் கொள்ளாதே’ என்று சொல்லியதோடு,
விவகாரம் முற்றுப் பெற்றது.
ஊருக்கு
நடுவே என் குடிசையிருந்தது. அந்த வழியாகப் பெண்கள் தண்ணீர் எடுப்பதற்காகப் போய்க்
கொண்டிருப்பார்கள். என்னுடைய குடிசையில் தண்ணீர்ப் பானை உண்டு. தண்ணீர் எடுத்து
வருவதற்கென்று தனியாக ஆள் கிடையாது. எப்போதாவது பானையில் தண்ணீர் இல்லாவிட்டால்
கட்டிலில் உட்கார்ந்தபடியே குரல் கொடுப்பேன். யாராவது ஒரு பெண் உள்ளே வருவாள். பானையை
எடுத்து இடுப்பில் வைத்துக் கொள்வாள். நான் சொல்லாமலேயே அழுக்குத் துணிகளை எடுத்து
அந்தப் பானைக்குள் திணித்துக் கொள்வாள். பிறகு பானை கழுவப்பட்டு, குடிநீர் நிரப்பப்பட்டு
வந்து சேரும். துணிமணிகள் துவைக்கப்பட்டு, யாராவது லாண்டிரிக்குப் போகிறவர் மூலமாக
இஸ்திரி போடப்பட்டு என் இருப்பிடத்திற்கு வந்து விடும். சில நாட்களுக்குப் பிறகு,
‘பாபு, நீங்கள் இரண்டு ரூபாய் இஸ்திரிக்காசு தர வேண்டும்’ என்று அந்தப் பெண்
கேட்கும்போது, ‘இந்த ஊரே இப்படித்தான் என்னை ஏமாற்றிப் பிழைக்கிறது’ என்று
சலித்துக் கொள்வேன். ஏகப்பட்ட சாட்சியங்களை வைத்து அவள் நிரூபணம் செய்த பிறகு
இரண்டு ரூபாய் கைமாறும்.
இடையில்
சென்னையில் நடந்த ரமணன் – அனு திருமணத்திற்கு பாரதீப்பிலிருந்து வந்து போனேன்.
மீன்
கொள்முதல் செய்த பாரதீப்பிலும் பராசக்தி என்னை பத்திரமாக வைத்திருந்தாள். கட்டாக்கிலிருந்து
பாரதீப் போகும் வழியில், மெயின் ரோடிலிருந்து தெற்கே ஐந்து கிலோ மீட்டர்
தூரத்திலிருந்த ஒரு கிராமத்திற்கு கொண்டம்மாள் கணவனை அழைத்துக் கொண்டு வியாபார
நிமித்தமாகப் போனேன். அங்கே எனக்கு நாராயணனை அறிமுகம் செய்து வைத்தார்கள். நாராயணன்
எட்டு வருஷமாக சாப்பிடுவதில்லையாம். ஆனால் ஆற்றுக்குப்போய் மீன் பிடித்துக்
கொண்டுதானிருந்தான். அழகான உடற்கட்டு, ஒளி ததும்பும் பார்வை. இளம் வயது அரவிந்தர்
போல தாடி. நாராயணன் கிரேக்கச் சிலைக்கு இந்தியச் சாயம் பூசியது போலிருந்தான். கொண்டம்மா
கணவனை துபாஷியாக்கி நான் நாராயணனைக் கேட்டேன்.
‘நாராயணா,
நீ என் சாப்பிடுவதில்லை?’
‘ஏன்
சாப்பிட வேண்டும்?’
‘உயிர்
வாழ்வதற்கு’.
‘நான்
உயிரோடுதானே இருக்கிறேன்’.
சாப்பிடாமல்
இருக்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு எப்படி ஏற்பட்டது என்று கேட்டேன். பங்காளிகளுக்குள்
சொத்துத் தகராறு ஏற்பட்டதாகவும் வயிற்றுப் பசியால்தானே இதெல்லாம் ஏற்படுகிறது
என்று தான் வருத்தப்பட்டதாகவும் சொன்னான். இவ்வளவு பொறுமையாக சொல்லிக் கொண்டு
வந்தவன், அப்போது தான் குருவைச் சந்தித்ததாகவும் அவர் சாப்பிடாமலிருக்கும் வழியைக்
கற்றுக் கொடுத்ததாகவும் கூறி சட்டென்று முடித்துவிட்டான். குருவைப் பற்றியோ,
அவருடைய செயல்முறை பற்றியோ எதுவும் கூற மறுத்துவிட்டான்.
நாராயணன்
யாரிடமும் இவ்வளவு விவரமாகப் பேசியது இல்லையென்று அங்கிருந்தவர்கள்
ஆச்சரியப்பட்டார்கள். நேரம் அதிகமாகிவிட்டதால் அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன். கொஞ்ச
தூரம் போனதும் கொண்டம்மா கணவனை அனுப்பி நாராயணனிடம் போய் ‘என்னிடம் மட்டும் ஏன்
பேசினான்?’ என்று கேட்டு வரச் சொன்னேன். கொட்டுகிற மழையில் நான் தொடர்ந்து நடந்து
போய்க் கொண்டிருந்தேன். ஊருக்குள் போய்விட்டுக் கொண்டம்மா கணவன் வேகமாக ஓடி
வந்தான். உரத்த குரலில் அவன் கொண்டு வந்த பதிலில் ஒரு வார்த்தைதான் இருந்தது.
காளி.

தொடரும்


Leave a Reply