Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 26 | சுப்பு

முசலம்மா

பாரதீப்பிற்கு நான் போனவுடனேயே என்னுடைய சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்ற பிரச்சினை எழுந்தது. நானோ சைவம். இந்த மாதிரி விஷயங்களைக் கூடத் தனிமனிதனிடம் விடாமல் நாலுபேர் கூடிப்பேசித் தீர்ப்பது என்கிற மரபு அங்கே இருந்தது. முசலம்மா (மூதாட்டி) எனக்காக சமையல் செய்வது என்று முடிவாகியது. முசலம்மா மீனவர் இனத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும், அவர் இந்தத் தொழில் எதையும் செய்வதில்லை. இறந்துபோன கணவர் சார்பாக முசலம்மாவுக்கு அரசாங்க பென்ஷன் வந்து கொண்டிருந்தது. இந்த ஜனங்களோடு வாழ்ந்தாலும் அவர் யாருடனும் ஒட்டுவதில்லை. முசலம்மா சிறுவயதில் பர்மாவில் படித்துக் கொண்டிருந்தபோது, பர்மீஸ், ஆங்கிலம், நாகரீகம் ஆகியவற்றைத் தெரிந்து வைத்திருந்தார். முசலம்மாவின் பேச்சு, பாவனை, நடை எல்லாவற்றிலும் ஒரு ராணுவக் கட்டுப்பாடிருக்கும். கழுத்துவரை மூடிய ஜாக்கெட்தான், கால்வரை மூடிய புடவைதான் அவருடைய ஆடை.
முதல் நாள் அவர் என்னைக் கேட்டார்.
உங்களுக்கு என்ன பிடிக்கும்?”
இங்கேதான் காய்கறிகள் கிடைக்காதேயம்மா. ஏதோ தயிர் சாதமும், உருளைக்கிழங்கு கறியும் இருந்தால் போதும்.”
அடுத்த ஒன்பது மாதங்களுக்கு அடுத்த கேள்வி அவர் என்னைக் கேட்கவில்லை. தினமும் தயிர் சாதமும், உருளைக்கிழங்கு கறியும்தான். ஆனால் அதை என்னிடம் சேர்ப்பிக்கும் முறையில் ஒரு படைவீரனின் ஒழுங்கு இருக்கும். என்னுடன் வேறு யாராவது இருந்தால் முசலம்மா வரமாட்டார். சாப்பிடும் நேரமாகிவிட்டது? சாப்பாட்டைக் கொண்டு வரலாமா? என்று ஒரு பையன் கேட்பான். சரி. கிழவியின் ஜபர்தஸ்த் ஆரம்பமாகிவிட்டது என்று சொல்லிக்கொண்டே என்னோடிருந்தவன் எழுந்து போவான்.
அரிக்கன் விளக்கை ஏந்தியபடி ஒரு சிறுவன். அவனைத் தொடர்ந்து முசலம்மா. ஒரு கையில் மூடிய தயிர் சாதம் பிளேட்டில். அதற்குள் தனிக்கிண்ணத்தில் உருளைக்கிழங்கு கறி. இன்னொரு கையில் தண்ணீர்ச் சொம்பு. என்னுடைய பானையிலிருக்கும் நீர் அவருடைய தரக்கட்டுப்பாட்டுக்கு ஒத்துப்போகாது. சாப்பாட்டை வைத்துவிட்டுக் கதவை மூடிக்கொண்டு போய்விடுவார். பிறகு தட்டை எடுக்க வரும்போது. லேசாகப் பார்த்துவிட்டு சரியாகச் சாப்பிடவில்லையே என்பார். நான் பதில் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்க மாட்டார்.
சில மாதங்களுக்குப் பிறகு முசலம்மாவிடம் இரவில் மட்டும் சமைத்தால் போதும் என்று சொல்லிவிட்டேன். பகல் உணவு டீக்கடையில். டீக்கடையிலோ, தட்டிலிருக்கும் பொருளைப் பார்க்க முடியாதபடி ஈக்கள் மறைத்திருக்கும். ஒரு கையை வாய்க்கு முன்னால் ஆட்டிக்கொண்டே இன்னொரு கையால் சாப்பிட வேண்டும். நாளடைவில் ஈயோடு போராடியபடி சாப்பிடுவது எனக்குப் பழகிவிட்டது.
முசலம்மாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒருமுறை சென்னைக்கு வந்தபோது நல்ல புடவை ஒன்றை வாங்கி பாரதீப்புக்கு கொண்டுபோனேன். ஆனால், அது கைகூடவில்லை. முசலம்மா புறப்பட்டு எங்கேயோ போய்விட்டார். அதற்குப் பிறகு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒன்பது மாத காலம் தன்னுடைய பொருளையும், உழைப்பையும் எனக்காகக் கொடுத்த முசலம்மாவுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
*
குடிசையில் என்னுடைய கட்டிலுக்கு மேலே, கூரையில் கைக்கு எட்டும்படியாக பதப்படுத்தப்பட்ட திருக்கைவால் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். ஆறடி நீளமுள்ள இந்த வால் லேசாகப் பட்டாலே தோலுறிந்து போகும். குண்டாக்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பதற்காக இந்த ஆயுதம். குடிசையில், என்னுடைய தலைமாட்டில் சிறிய கன்னியாகுமரி படம் ஒன்றிருந்தது. இந்தப் படத்திற்கு நான் பூசையென்று எதுவும் செய்யாதிருந்தேன். இதனால் தெய்வக்குத்தம் ஏற்படும் என்று இங்குள்ளவர்கள் என்னிடம் எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். தினமும் முன்னிரவில் குண்டா ஒருவன் என் குடிசையின் வாசலில் தென்படுவான். ஆனால் ஒரு நாளும் என்னிடம் திருடியதில்லை. ஒருமுறை அவனைக் கண்டபோது அங்கேயே கேட்டேன்.
தினமும் அங்கே என்ன பார்க்கிறாய்?”
குண்டா நிமிடத்தில் கோபிகை ஆகிவிட்டான். தலை குனிந்து, முகம் சிவந்து அவன் சொன்னது:
இதுவும் தொழில்தானே, ஆகவே முதலில் தேவிக்கு வணக்கம்.”
என்னுடைய குடிசையின் சுற்றுப்புரத்தில் ஜனங்கள் அசுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். எத்தனை முறை சொன்னாலும் இவர்களுக்கு உறைப்பதாயில்லை. ஒரு நாள் கன்னியாகுமரியிடம் நீயே உன் இடத்தைக் காப்பாற்றிக்கொள் என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டேன். திரும்பி வந்தபோது என்னுடைய கட்டிலில் ராஜாராவ் தூங்கிக் கொண்டிருந்தான். ராஜாராவ் எனக்கு நெருங்கிய நண்பன். இந்த ஜனங்களுக்குப் பஞ்சாயத்து செய்பவன். வாய்மையின் வடிவம். நூறு மீனவர் குப்பங்களில் பஞ்சாயத்தில் ராஜாராமின் வார்த்தைக்கு மரியாதையிருந்தது. யாருக்காவது இன்னொருவன் பேச்சில் சந்தேகமிருந்தால் ராஜாராவ் முன்னால் இதைச் சொல்ல முடியமா? என்று கேட்குமளவிற்கு ராஜாராவின் புகழ் வளர்ந்திருந்தது. நான் வந்தவுடன் ராஜாராவ் எழுந்துவிட்டான். எழுந்ததும் என் கையைப் பிடித்துக் கொண்டு இந்த இடத்தில் ஏதோ விசேஷமிருக்கிறது என்றான். தொடர்ந்து அவன் சொன்னது:
பத்து வருடங்களுக்கு முன் காக்கிநாடாவில் மீனவர்களுக்கிடையில் பெரும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கலெக்டர் சமரச முயற்சிகள் செய்தார். சமரசக் கூட்டமொன்று காக்கிநாடாவிலுள்ள கல்யாண மண்டபத்தில் கூட்டப்பட்டது. என்னைச் சார்ந்தவர்கள் எல்லாம் அங்கே போய்விட்டார்கள். நான் தனியாக வந்தபோது கூட்டம் எந்தக் கல்யாண மண்டபத்தில் என்ற விவரம் தெரியாமல் விழித்தேன். பிறகு ஒரு ரிக்ஷாவை அமர்த்திக்கொண்டு, ஒவ்வொரு மண்டபமாக விசாரிக்கலாமென்று நினைத்து ஒரு கல்யாண மண்டபத்திற்குள் நுழைந்தேன். அந்தத் திண்ணையில் வெண்தாடியுடைய முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு நான் வணக்கம் செய்தேன். அவர் என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்டார். இரண்டு கேள்விகளுக்கும் நான் சரியாக விடையளித்தேன். அவரை என் வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். அவரோ இப்போது உனக்கு அந்த யோக்யதை கிடையாது. சமயம் வரும்போது நானே வருகிறேன் என்றார். புறப்படும்போது அவரை வணங்கினேன். அவர ஆத்ம சுத்தி சுகம் ஜய என்றார். அன்று முதல் எனக்கு எந்த சந்தேகம் ஏற்பட்டாலும், நான் அந்த வாசகத்தையே நினைவு கூறுகிறேன். இன்று என்னுடைய புகழுக்கும் நீதி வழங்கும் திறனுக்கும் அந்த வாசகமே காரணம்.”
பல வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் மதியம் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். என் கண்முன்னே அந்த முதியவர். நான் மெய் மறந்து போனேன். அவரை வீட்டுக்குள் அழைத்துப் போனேன். அவர் என்னைப் பற்றி விசாரித்தார். எனக்குத் திருமணமாகிவிட்டது. குழந்தையுமிருக்கிறது என்றேன். நான் சொன்ன தகுதி என்னவென்று இப்போது விளங்குகிறதா? என்று கேட்டார். நான் தலையசைத்தேன். அவர் அன்று அங்கே உணவருந்தினார். பின்னர் வெளியில் வந்து கை கழுவிக்கொண்டு என் கண்முன்பே மறைந்து போனார் என்று சொல்லி நிறுத்திவிட்டு, நான் இங்கே படுத்திருக்கும்போது என் கனவில் அவர் வந்தார் என்றான். இனிமேல் இங்கே யாரும் தவறான வார்த்தைகளைப் பேசக்கூடாது என்றான்.
ராஜாராவ் கட்டளையின்படி என் குடிசை பஜனைமடமாக்கப்பட்டது. ஊர் ஜனங்கள் அந்த இடத்தில் அசுத்தம் செய்வதை நிறுத்திவிட்டார்கள். மாதமொருமுறை பௌர்ணமியன்று விடிய விடிய பஜனை. கடற்கரைக் குளிருக்கு ஏற்றவாறு சுடச்சுட சேமியா பாயசம்தான் பிரஸாதம். வீரபத்திர சாமி எழுதிய பாடலை ராஜாராவ் அழகாகப் பாடுவான். இளைஞர்கள் தாளம் போட ஆரம்பித்தால் கை கீழே இறங்க அரைமணி நேரம் ஆகும். நான்தான் பூசாரி.
பாரதீப்பிலிருந்து சுறா வாங்குவதற்காக இன்னொரு இடத்திற்குப் பயணம். கால்வாயில் போகும் படகில் நாடு பிடிக்கப்போகும் வெள்ளைக்காரனைப் போல் சாமான்களையும், ஆட்களையும் ஏற்றிக்கொண்டு த்விபாஷியோடு பயணம். மகாநதி கடலில் கலக்கும் இடம் அது. நூற்றுக்கணக்கான சிறு மணல் திட்டுக்கள். தாவரமே இருக்காது. குடிநீர் கிடையாது. வெய்யில் மண்டையைப் பிளக்கும். இந்தப் பிரதேசத்தில் குடிநீர் எடுக்க அரை நாள் படகுப் பயணம் போக வேண்டும். என்னிடம் ஸ்டவ், கெரஸின், காய்கறிகள், எண்ணெய், அரிசி, பருப்பு, குடிநீர் எல்லாம் தயார். சமைப்பதற்கு வகை இல்லை. என்னோடு வந்தவர்கள் அங்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் மீன் குழம்புச் சோறு சாப்பிட்டுக் கொண்டார்கள். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எனக்கு சைவ சாப்பாடு கிடைக்கும் என்று சொல்லிவிட்டு அந்தத்தீவைச் சுற்றி வந்தேன்.
தீவின் மறுபக்கத்தில் ஒரு வயதான மலையாளி சாராயம் விற்றுக் கொண்டிருந்தார். என் பிரச்சினையைச் சொன்னவுடன் அவருக்கு ஏக குஷியாகிவிட்டது. ஆளில்லாத காட்டில் சாப்பிடுவதற்கு ஏற்ற பண்டமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவருக்கு என்னுடைய வருகை லாட்டரிப் பரிசு போலாயிற்று. தொடர்ந்து அங்கிருந்த நான்கு நாட்களும் அவருடைய கை வண்ணத்தில் அருமையான சாப்பாடு. சாராயக் கடையில் கூரையிலிருந்தே கொடுங்களூர் பகவதி அவ்வப்போது புன்னகை செய்வாள். புறப்படும்போது மீதமிருந்த காய்கறிகளையும், மளிகைச் சாமான்களையும் பெரியவரிடமே கொடுத்துவிட்டேன்.
*
என்னைப் பார்ப்பதற்காக விஷ்ணு பாரதீப் வந்தான். விஷ்ணு வந்தது துர்கா பூஜை சமயம். இருவரும் புறப்பட்டு கட்டாக் வந்து நான்கு நாட்கள் தங்கியிருந்தோம். ஒவ்வொரு சாலைச் சந்திப்பிலும் அழகான பராசக்தியை விதவிதமாக அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள். அதற்கெதிரே மேடை போட்டு, மெல்லிசை, நடனம், கிராமிய வாத்யம் இப்படி ஏதாவது ஒன்று. சுற்றியிருக்கிற கிராமங்களில் இருந்து மக்கள் வந்து கட்டாக் ரயில் நிலையத்தருகில் கூடுவார்கள். குறைந்தது நூறு சைக்கிள் ரிக்ஷாக்கள் அங்கே அணிவகுத்திருக்கும். சைக்கிள் ரிக்ஷாக்களில் குடும்பம் குடும்பமாய் ஏறிக்கொண்டபின் அவை ஊர்வலமாய் வந்து ஒவ்வொரு பந்தலையும் பார்வையிடும். இந்த ஊர்வலம் இப்படி நகர்ந்து கொண்டே போய் முதல் ரிக்ஷா தொடங்கிய இடத்திற்குப் போகும்போது அடுத்த வரிசை தயாராயிருக்கும்.
நானும், விஷ்ணுவும் பஜாரிலுள்ள பந்தலுக்குப் போனோம். அங்கே முதலமைச்சர் வருவதாக இருந்ததால் யாரையும் அனுமதிக்கவில்லை. என் நண்பன் பராசக்தியைப் பார்க்க விரும்புகிறான் என்று அந்தப் பூசாரியைக் கேட்கும்படி விஷ்ணுவிடம் சொன்னேன். விஷ்ணு கேட்டு வந்தான். பூசாரி மறுத்துவிட்டதாகச் சொன்னான்.
நீ என்ன கேட்டாய்? என்றேன்.
என் நண்பன் பூஜை செய்ய விரும்புகிறான் என்று கேட்டேன் என்றான்.
உன் மொழி பெயர்ப்பு தவறானது. ப்ரார்த்தனை செய்ய விரும்புகிறான் என்று கேள் என்றேன்.
இந்த முறை என்னை மட்டும் உள்ளேவிட பூசாரி ஒத்துக்கொண்டார். பராசக்தியின் முன் நான் அமர்ந்தேன். ஒரு மணி நேரம் கழித்து கண் விழித்துப் பார்த்தபோது முதலமைச்சர் வந்துவிட்டுப் போய்விட்டதாக விஷ்ணு சொன்னான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதீப்பில் ஒரு தகராறில் நான் கலந்து கொண்டேன். குண்டாக்களை எதிர்த்து யாரும் ஏதும் செய்ய முடியாதிருந்தபோது பத்து இளைஞர்களைத் திரட்டி, ஒருநாள் இரண்டு குண்டாக்களை அடித்து நொறுக்கிவிட்டேன். அதிர்ஷ்டவசமாக இது வேறு விதமாக வெடித்து, பாரதீப்பிலிருந்த இரண்டு கோஷ்டிகளின் தகராறாக மாறிவிட்டது. எங்களை மறந்துவிட்டார்கள்.
ஒருமுறை பாரதீப்பிலிருந்து கட்டாக்கிற்கு நூறு கிலோ மீட்டர் தூரம் லாரியில் வந்தேன். துறைமுகத்தில் சரளைக்கற்களைக் கொட்டிவிட்டுத் திரும்பும் லாரி அது. என்னை முதுகுவலி முன்னறிவிப்பின்றித் தாக்கியது. தூக்கி தூக்கிப் போடும் லாரியில், சரளைக் கற்கள் உடம்பைப் பதம்பார்க்க மல்லாந்து படுத்துக்கொண்டுமரண அவஸ்தை.
பாரதீப்பில் எனக்கு மலேரியா காய்ச்சல் வந்துவிட்டது. ஜனங்கள் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்தார்கள். ராஜாராவ் வீட்டிலிருந்து அவ்வப்போது சுடச்சுடக் கஞ்சி. கொண்டம்மா கணவன் காலையிலும், மாலையிலும் மெயின் ரோடுக்குப் போய் டாக்டரை டபிள்ஸ் அழைத்துவர வேண்டும். இன்னொருவனுக்கு மருந்து மாத்திரை கொடுக்கும் பொறுப்பு. சத்யா என்ற நண்பனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னைக் கட்டிலோடு தூக்கிக் கொண்டு போய் தன் வீட்டில் வைத்துக் கொண்டான். அவனும் அவன் மனைவியும் ஒரு கும்மட்டி அடுப்பை என் கட்டிலுக்கு அடியே வைத்து மாற்றி மாற்றி ஊதிக் கொண்டேயிருந்தார்கள். உடல்நிலை சரியான பிறகுகூட என்னைத் தனியாக அனுப்ப மனமில்லாமல் சத்யா சென்னைக்கு வந்து என்னை விட்டுவிட்டுப் போனான்.

தொடரும்

Leave a Reply