Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 27 | சுப்பு

சமாசார்

பாரதீப்பிலிருந்து
சென்னைக்கு ஐஸ்மீன் அனுப்பிக் கொண்டிருந்தபோது, மகாநதியில் வெள்ளம் வந்து பாலம் உடைந்துவிட்டது.
சென்னை கல்கத்தா ரயில் வேறு வழியாகத் திருப்பிவிடப்பட்டது. ஆகவே, என்னுடைய தொழிலில்
ஒரு இடைவேளை.
இந்த நேரத்தில்
நான் நண்பர் சித்தார்த்தனோடு சேர்ந்து சில முயற்சிகளில் ஈடுபட்டேன்.
நானும் நண்பர் சித்தார்த்தனும்
அந்த வயதுக்கே உரித்தான ஆர்வத்தோடும் புரிதலோடும் பல பரிசோதனை முயற்சிகளில் எங்களை
ஈடுபடுத்திக்கொண்டிருந்தோம். அறிவியலின் அளவுகோலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை (Para
Science Club) தெரிந்துகொள்வதற்காக ஒரு மாதாந்திர சந்திப்பை நடத்தினோம். சென்னை துரைப்பாக்கம்
டி.பி.ஜெயின் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ரமேஷ் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.
சுட்டி இதழின் ஆசிரியர் பேராசிரியர் சுந்தர் உடனிருந்தார். தொலைவில் உணர்தல், பறக்கும்
தட்டுகள், விண்வெளி மனிதர்கள் பற்றிய பத்திரிகைகளையெல்லாம் வெளிநாட்டிலிருந்து வரவழைத்துப்
படிப்பது எங்களுக்கு வழக்கமாக இருந்தது.
இந்தக் காலகட்டத்தில்
‘வெளிச்சப்புள்ளி’ என்கிற அறிவியல் ஆர்வத்தின் விளைவாக அறிவியல் கதையையும் எழுதினேன்.
அந்தக் கதை தொடர்பான சில தொழில்நுட்பச் சந்தேகங்களுக்கு நண்பர் பி.சி. ஸ்ரீராம் (ஒளிப்பதிவாளர்)
விடையளித்தார். அவரோடு கொஞ்சம் பரிச்சயம் உண்டு.
ஒரு குறிப்பிட்ட
காரணத்தால் பல மாதங்களுக்குப் பிறகு அறிவியல் க்ளப் முடிவுக்கு வந்தது. அந்தக் காரணம்
நிஜ நாடகம் அல்லது வீதி நாடகம்.
வீதி நாடகக்குழு
அமைத்து அதன் மூலம் எங்களுடைய கருத்துக்களை மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டும் என்பது
திட்டம். இந்த முயற்சியில் இருவர் இணைந்து கொண்டார்கள். ஒருவர் துரை. துரை ‘ஆதிசங்கரர்’
என்ற சமஸ்கிருத திரைப்படத்தை இயக்கிய ஜீ.வி.அய்யரின் உதவியாளர். இவர்தான் பின்னாட்களில்
‘நக்கீரன்’ இதழுக்கு ஆசிரியராக இருந்தார். இன்னொருவர் மலேசியாவிலிருந்து தமிழ் ஆய்வுக்காக
சென்னை வந்திருந்த ந.முருகேச பாண்டியன். திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மேன்சனில் ந.முருகேச
பாண்டியன் தங்கியிருந்தார். நிஜ நாடகம் குறித்த திட்டமிடுதல் எல்லாம் அவர் அறையில்தான்
நடக்கும். சிற்றுண்டிச் செலவுகள் அவருடையதென்பதை சொல்லத் தேவையில்லை.
முருகேச பாண்டியன்
தங்கியிருந்த அறையில் ஒரு எழுத்தாளரும் இருந்தார். அவர் ஒரு வார இதழில் அப்போது வேலை
செய்துகொண்டிருந்தார். ஒருநாள் நான் தவறுதலாக எழுத்தாளரின் செருப்பை போட்டுக்கொண்டு
வந்துவிட்டேன். நான் திருவல்லிக்கேணி மேன்சனுக்குப் போய் அவருடைய செருப்பைக் கொடுத்துவிட்டு
என்னுடைய செருப்பைப் போட்டுக்கொண்டு வரவேண்டும். என்ன செய்வது. நான் போகும் நேரத்தில்
எழுத்தாளர் அறையிலிருப்பதில்லை. எனவே செருப்பு பிரச்சினைக்கு எளிதில் தீர்வு கிடைக்கவில்லை.
முருகேச பாண்டியனிடம் “இரண்டுமே சாதாரண ஹவாய் செருப்புகள்தான். அவர் அதை வைத்துக்கொள்ளட்டும்.
நான் இதை வைத்துக்கொள்கிறேன்” என்று சொல்லிப் பார்த்தேன். இந்த சமரசத்திற்கு எழுத்தாளர்
உடன்படவில்லை. இறுதியாக ஒரு நாள் முருகேச பாண்டியன் அறைக்குப் போனபோது அறை பூட்டியிருந்தது.
முருகேச பாண்டியனும் இல்லை, எழுத்தாளரும் இல்லை. எனக்கிருந்த கோபத்தில் ஒரு பேப்பரில்
‘இரண்டு செருப்பையும் நீங்களே வைத்துக்கொள்ளலாம். இதற்கு மேலும் விஷயத்தை வளரவிட்டால்
நடப்பது வேற’ என்று எழுதி, கடிதத்தையும் செருப்பையும் கதவுக்கு மேலே உள்ள இடைவெளி வழியாக
அறைக்குள்ளே போட்டுவிட்டேன். வெறுங்காலோடு வீடு திரும்பினேன்.
அதற்குப் பிறகு
நிஜநாடக விஷயத்தில் முருகேச பாண்டியன் அக்கறை காட்டவில்லை. துரையும் பத்திரிகை வேலைக்குப்
போய்விட்டார். எழுத்தாளர் நல்லவர். அவர் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையுமில்லை.
அந்த எழுத்தாளரின்
பெயர் பிரபஞ்சன்.
அறிவியல், புனைகதை,
வீதி நாடகம் என்று அலைந்துகொண்டிருந்த என்னை வழக்கம் போல் நெறிப்படுத்தியது ஆர்.எஸ்.எஸ்தான்.
சங்கக் கட்டளைப்படி
நான் சமாசார் செய்தி ஸ்தாபனத்தின் நிருபராக வேலைக்குச் சேர்ந்தேன். சமாசார் ஆர்.எஸ்.எஸ்.
சார்புடைய ஸ்தாபனம். திருவல்லிக்கேணியில் எனக்கென்று டெலிபோன் வசதியுடன் கூடிய தனி
அலுவலகம் இருந்தது. அன்றாடம் விருந்துகளில் கலந்து கொள்ளக்கூடிய வசதி இருந்தது. மற்றபடி
சிறப்பாகச் செய்வதற்கு ஒன்றுமில்லை. தில்லி அலுவலகத்திலிருந்து வரும் கடிதங்கள் இந்தியில்
இருக்கும். அவற்றை நான் படித்துப் பார்த்ததேயில்லை. எனக்கு இந்தி தெரியாது என்று அவர்களுக்குத்
தெரியும். நான் எனக்குத் தேவையானவற்றை ஆங்கிலத்திலேயே எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன்.
விரைவிலேயே எனக்கு
இந்த வேலை சலித்துவிட்டது. பெரும்பாலான நிருபர்கள் குடிப்பதைப் பற்றியும் compliments
பற்றியுமே பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்குள்ளே ஏகப்பட்ட ஜாதிப்பிரிவினை வேறு.
Upcountry என்று சொல்லப்படும் வெளி மாநில பத்திரிகையாளருக்கு உள்
ளூர் நிருபர்களைக் கண்டால் இளப்பம். தமிழ்ப்
பத்திரிகை நிருபர்களுக்கோ, ஆங்கிலப் பத்திரிக்கை நிருபர்களைக் கண்டால் பயம்.
பிரதமர் மொரார்ஜி
தேசாயின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டேன். அத்தனை பேர் முன்னிலையில்
தி.மு.க.வோடு தாங்கள் எப்போதும் கூட்டு வைத்துக் கொண்டதில்லை என்று அவர் சாதித்தார்.
திரு.சோ அவர்களும் அங்கிருந்தார். ஒரு சாதாரண அரசியல் நிகழ்ச்சியை ஒழுங்காக நினைவுகூர
முடியாதவர் எப்படி இந்த நாட்டை ஆள முடியும் என்று எனக்குப் புதிராய் இருந்தது. பத்திரிகைகள்
இதை வெளியிடத் தவறிவிட்டன என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
சமாசார் செய்தி
ஸ்தாபனத்தின் செய்திகள் இந்தியாவெங்கும் நூறு இதழ்களுக்குப் போய்க் கொண்டிருந்தன. தமிழ்நாட்டுப்
பிரதிநிதி என்ற முறையில், தமிழ்நாடு சட்டமன்றத்திலும், சட்டமன்ற மேலவையிலும் பத்திரிகையாளர்
பகுதியில் எனக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அரசியலின் மையக் களமான சட்டமன்ற
நடவடிக்கைகளை உள்ளிருந்து கவனிப்பதற்கு எனக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்திருந்தது.
அதில் ஒன்று…
காஞ்சிபுரத்தில்
இருக்கும் சங்கர மடத்தின் எதிரில் ஈ.வெ.ராவுக்கு சிலை வைப்பதற்கான முயற்சி செய்தது
திராவிடர் கழகம். தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே அந்த இடம் தரப்பட்டுவிட்டது. ஆனால் அந்தச்
சிலையை வைக்க அதிமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்படவில்லை. மு.கருணாநிதி முதல்வராக இருந்த
காலத்தில் அதற்கான ஒப்புதலைக் கொடுத்துவிட்டார். ஆனால் சிலையை அமைப்பதற்குள் ஆட்சி
மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கிளப்பினார் மு.கருணாநிதி.
அந்த விவாதம் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. என்னைப் பொருத்தவரை திராவிடர் கழகத்தின் ஆஸ்தான
கொள்கைகளிலிருந்து எம்.ஜி.ஆர் விலகி நின்றார் என்பதற்கான முக்கியமான சான்று இது. அப்போது
எதிர்கட்சித்தலைவராக இருந்த கருணாநிதிக்கும் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கும் நடந்த உரையாடலில்
இருந்து சில பகுதிகள் இங்கே:
எதிர்கட்சித்தலைவர்
கருணாநிதி: பெரியார் நூற்றாண்டு விழாவை இந்த அரசு கொண்டாடுகிறது. ஆனால், காஞ்சிபுரத்தில்
பெரியார் சிலை வைக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தார் தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே
அதற்கான இடத்தையும் பணத்தைக் கட்டி வாங்கி, பராமரிப்புச் செலவுக்கான பணத்தையும் கட்டி,
கழக ஆட்சியில் அந்த இடம் தரப்பட்டுவிட்டது. ஆனால் அந்தச் சிலையை வைக்க இந்த ஆட்சியில்
அனுமதி அளிக்கப்படவில்லை.     
எம்.ஜி.ஆர்.: அவர்கள்
கேட்டிருந்த இடம் மத நம்பிக்கைக்குரியவர்களுடைய, மடம் போன்ற, கோயில் போன்ற இடத்துக்கு
எதிராக, இடைஞ்சலாக இருக்கின்ற இடத்தைக் கேட்டதாக குடியரசுத்தலைவர் ஆட்சிக்காலத்தில்
அது பற்றி பரிசீலிக்கப்பட்டு, கூடாது – முடியாது என்று மறுக்கப்பட்டுவிட்டது. நான்
காஞ்சிபுரத்துக்குச் சென்றபோது அந்த இடத்தைப் பார்க்க நேரிட்டது. அங்கிருந்து வந்தபிறகு
உத்தரவே போட்டுவிட்டேன். வேறு ஒரு இடத்தை அவர்கள் கேட்பார்களானால் அந்த இடத்தைக் கொடுக்க
வேண்டும் என்று உத்திரவிட்டு சில மாதங்களாகின்றன.
மு. கருணாநிதி:
சங்கராச்சாரியார் மடம் இருக்கிறதென்றால் அந்த இடத்துக்கு எதிரிலே பெரியாருடைய சிலை
இருக்கக்கூடாது என்பது என்ன நியாயம் என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை, போக்குவரத்துக்கு
இடைஞ்சலான இடம் என்பதால் அதை அனுமதிக்கவில்லை என்ற கருத்தை முதலமைச்சர் சொல்வார் என்று
நினைத்திருந்தேன். சங்கராச்சாரியாருக்காகத்தான் அது அனுமதிக்கப்படவில்லை என்று திட்டவட்டமாக
முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர்.: நான்
சங்கராச்சாரியாருக்காகத்தான் சொல்வதாக இருந்தால் அதைத் துணிவோடு சொல்கின்றவன். ஏனென்றால்,
அவரைச் சந்தித்து அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டு, கருத்துக்கள் பரிமாறிக்கொண்டு
வந்தவன் நான். அந்த வகையில் ஒரு துறவிக்கு அடையாளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை
இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதிலே எனக்குக் கொஞ்சமும்
சந்தேகமில்லை. இட நெருக்கடியும் இருக்கிறது. எதிர்காலத்தில் அரசியல் நெருக்கடிகள்,
மத நெருக்கடிகள் போன்ற குழப்பங்கள் வரலாம். அதெல்லாம் தோன்றக்கூடாது என்பதற்காகத்தான்
இந்த நிலைமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். முதலமைச்சர் என்ற நிலைமையில் இங்கேயே
பதில் சொல்லிவிடுகிறேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த இடத்தில் சிலை வைக்க இந்த
அரசு அனுமதிக்காது….
இன்னொருமுறை தி.மு.கழகம்
தொடர்ந்து சந்தித்து வரும் தேர்தல் தோல்விகளைப் பற்றி குறிப்பிட்ட கருணாநிதி ‘தேர்தல்கள்,
ஒரு நாட்டின் வரலாற்றில் புரண்டு வரக்கூடிய சில பக்கங்கள். அதிலும் திண்டுக்கல் இடைத்தேர்தல்
அப்பக்கத்தில் தேடிப் பார்க்க வேண்டிய ஒரு வரி, அவ்வளவுதான்… பொதுத் தேர்தல் என்பது
ஒரு பக்கம், இடைத்தேர்தல் ஒரு வரி. ஆகவே நான் அதில் அதிக கவனம் செலுத்த விரும்பவில்லை’
என்று பேசினார்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்
தி.மு.க இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற போது இதே கருணாநிதி எவ்வளவு தூரம் எகிறிக் குதித்தார்
என்பது என் நினைவுக்கு வந்தது. அதை சில பத்திரிகையாளரிடம் சொன்னேன். அவர்கள் ரசிக்கவில்லை.
எப்படி மக்கள் வாக்களிக்கின்ற தேர்தலில் கருணாநிதி வெற்றிபெற முடியாதோ அதுபோலவே பத்திரிகையாளர்கள்
மட்டுமே வாக்களிக்கின்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.
சட்டமன்ற விவாதங்களில்
கருணாநிதியின் முழுச் சாதுர்யமும் வெளிப்பட்டது. நாளிதழ்களும் அவற்றை முதல் பக்கச்
செய்திகளாக வெளியிட்டன. ஆனால், தி.மு.கவும் செய்தி ஊடகங்களும் எவ்வளவு முயன்றாலும்
எம்.ஜி.ஆர் செல்வாக்கை அசைக்க முடியவில்லை.
எம்.ஜி.ஆர் அரசு
மீது தி.மு.வும் இந்திரா காங்கிரஸும் கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தில் கருணாநிதி
பேசினார். (நவம்பர் 1979). பல்கேரியா பால்டிகா ஊழல் என்ற பூதத்தை முன் வைத்தார் (நவம்பர்
1979). ஏகப்பட்ட ஆதாரங்கள், கடிதங்கள், தொலைபேசி உரையாடல்கள் என்று அவர் நிகழ்த்திய
உரையை தி.மு.கவினர் பெரிதாகக் கொண்டாடினார்கள். வாய் பிளந்த எம்.ஜி.ஆர் கப்பலை விழுங்குவது
போல கார்டூன் படம் போட்டு, ‘ஊழல் திலகம், சுப்ரீம் கோர்ட் நீதிபதி விசாரணை கமிஷன் வருவதாக
அறிவித்து இன்று வெற்றிகரமான ஐம்பதாவது நாள்’, ‘அறுவதாவது நாள்’ என்று முரசொலியில்
அன்றாடம் கட்டம் கட்டப்பட்டது. அடிப்படையில் எம்.ஜி.ஆர் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிவிட்டார்
என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால் இதற்குப் பலகாலங்களுக்குப் பிறகு கருணாநிதி முதலமைச்சராக
ஆனபோது பல்கேரியா – பால்டிகா ஊழல் பற்றிப் பேசவே இல்லை. சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசு சார்பாக
மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. மாநாட்டை மு.கருணாநிதி புறக்கணித்தார். மாநாட்டில்
பேசிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நிகழ்ச்சியை மதுரையில் நடத்துவதற்குக் காரணம் காஞ்சி
சங்கராச்சாரியாரின் அறிவுரை என்று குறிப்பிட்டார் (ஜனவரி 1980). இது திராவிட இயக்கங்களுக்கு
மிகப் பெரிய அடியாக அமைந்தது.
பிரதமர் இந்திராவின்
நிருபர் கூட்டத்தில் அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தும் கேள்வியைக் கேட்டேன். அந்தக்
கேள்வி, பதில் எல்லாம் பத்திரிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பெற்றதில் மகிழ்ச்சியடைந்தேன்
(ஏப்ரல் 1980).
… தொடரும்

Leave a Reply