தரம்பாலின் ‘அழகிய நதி’: விரைவில் பூரணகுணம் உண்டாகட்டும் | டி.கே.ஹரி, ஹேமா ஹரி
தரம்பாலை நேரில் சந்திக்கும் பாக்கியம் எங்களுக்கும் கிடைத்திருக்கிறது. எங்களுடைய பாரத் க்யான் அமைப்பின் பணிகள் தொடர்பாக அவரை வார்தாவில் சேவா கிராமில் சென்று சந்தித்திருக்கிறோம். அவருடைய கட்டிலில் அவருக்கு அருகில் அமர்ந்து பல நாட்கள் பாடம் கற்றிருக்கிறோம்.

திரும்ப வரும்போது இந்தியா ஆஃபீஸ் ரெக்கார்ட்ஸ், பிரிட்டிஷ் மியூசியம் ஆகியவற்றுக்குச் சென்று கைப்பட எழுதி எடுத்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டபோது குழந்தைபோல் அவர் முகம் குதுகலித்தது. நாங்கள் இங்கிலாந்துக்கு ஆய்வுக்காகச் சென்றபோது ஒரு மாத காலம் தினமும் அவரைப் போலவே எங்களுக்கான ஆய்வுத் தரவுகளைக் கைப்பட எழுதி எடுத்தோம். ராமர் நடந்து சென்ற பாதையில் நடக்கும்போது கிடைக்கும் ஒரு சந்தோஷம், அப்படி அவரைப் போலவே எழுதி எடுத்தபோதும் கிடைத்தது. இங்கிலாந்தில் இருந்து தரம்பால் பெரிய அளவு டிரங்க் பெட்டிகளில் எடுத்துவந்த கையெழுத்துப் பிரதிகளைத் தொட்டுப் பார்த்தபோது நம் முன்னோர்களைத் தொட்டு உணர்ந்த பரவசம் கிடைத்தது. அந்த பெட்டிகளில் சில வார்தாவிலும் சில சென்னையிலும் இன்றும் இருக்கின்றன. அந்த ஆவணங்களை தரம்பாலின் அனுமதியுடனும் வழிகாட்டுதலுடனும் நமது கடந்த காலம் பற்றிய எங்கள் பாரத் க்யான் ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக்கொண்டும் இருக்கிறோம்.

தரம்பால் சென்னையோடு மிக நெருங்கிய உறவு கொண்டவர். அவருடைய பிரிட்டிஷ் காலத் தரவுகளில் செங்கல்பட்டு பற்றிய ஆவணங்கள் அதிகம் உண்டு என்பது ஒருபக்கம் இருந்தாலும் Patriotic and People oriented Science and Technology (PPST) என்ற சென்னை அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். பிற மொழிகளைவிட தமிழ்நாட்டுடனும் தமிழ் மக்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அந்த வகையில் இந்தப் புத்தகம் (இப்போதாவது) தமிழில் வருவது அவருக்குச் செய்யும் மிகப் பெரிய அஞ்சலியே. அந்த வகையில் மகாதேவன் மிக முக்கியமான பணியைச் செய்திருக்கிறார்.

மேற்கத்திய சிந்தனை, இடதுசாரிப் பார்வை, எதிர்மறை உணர்வுகள் இப்படியான விஷயங்களே அச்சு ஊடகம், காட்சி ஊடகம் எங்கும் நிரம்பி வழிகின்றன. அதை மாற்ற வேண்டுமென்றால் வரலாற்று உண்மைகளை, ஆதாரபூர்வமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம். அதை மிக அழுத்தமாகச் செய்யும் தரம்பாலின் படைப்புகள் அனைத்து பிராந்திய மொழிகளிலும் கொண்டுசெல்லப்படவேண்டும். அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் பாடமாகவும் வைக்கப்படவேண்டும்.

*

எளிய மனிதர்கள் மீதான அக்கறை, அவர்களுடைய தொழில் நேர்த்தி மீதான மரியாதை இதுவே தரம்பாலின் ஆதார அம்சமாக எனக்குத் தோன்றுகிறது. அவருடைய வாழ்வின் பல கட்டங்கள் கிராமப்புற வாழ்க்கை, அது தொடர்பான கனவுகள் ஆகியவற்றால் நிறைந்ததாகவே இருந்தது. அதோடு சமகாலத்தில் இளைய தலைமுறையினர் வெற்று ஆடம்பரம், நுகர்வு வெறி, பொறுப்பற்ற தன்மை, பொய்யான வாழ்க்கை ஆகியவற்றில் ஈடுபட்டுவருவது குறித்து மிகுந்த கவலையும் கொண்டிருந்தார்.

எளிய மனிதர்கள் மீதான மரியாதை, நவீன வாழ்க்கையின் வீழ்ச்சி இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பான பார்வைதான் நமது கடந்த காலத்தை நோக்கிய அவருடைய ஆய்வுகளுக்கு ஆதாரமாகவும் இருந்தன. அவர் அந்த ஆய்வுகளை அறிவியல்பூர்வமாக, வலுவான வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொண்டதற்கு காந்தியுடனான மற்றும் நவீன உலகுடனான அவருடைய பரிச்சயமே காரணமாக அமைந்தது.

ராமாயண காலத்தில் சேது பாலம் கட்டப்பட்டது பற்றி மிகத் துல்லியமாக விவரிக்கப்பட்டிருக்கிறதுமகாபாரக் காலத்தில் ஓரிடத்தில் நடக்கும் நிகழ்வுகளை வேறொரு இடத்தில் இருந்துகொண்டு ஏதோவொரு தொலைத்தொடர்பு வசதி இருந்ததுபோலவே விவரித்திருக்கிறார்கள். இதுபோல் எண்ணற்ற நவீன கால விஷயங்கள் நமது ஆதிகால இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் வெறும் புராண கட்டுக்கதை என்பதாகவே நவீன உலகம் ஒதுக்கிவருகிறது.

எனவே, எளிய மனிதர்களான நமது முன்னோர்கள் மகத்தான சாதனைகளைச் செய்தவர்கள் என்பதை நவீன மனிதர்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பிய தரம்பால் மிகப் பொருத்தமான வழியைக் கண்டுபிடித்தார். மேற்கத்திய நவீன சிந்தனைகளால் சூழப்பட்டவர்களுக்கு மேற்கத்திய ஆதாரங்கள், ஆவணங்களையே சான்றாக முன்வைத்தார். தரம்பால் தொகுத்த தரவுகள் அனைத்தும் ஏதேனும் இந்திய மொழியில், ஏதேனும் இந்தியத் துறை சார் நிபுணர்களால் எழுதப்பட்டிருந்தால் அவை மேற்குலக, இடதுசாரி அறிவுஜீவி வர்க்கத்தாலும் அவர்களுடைய இந்திய சீடர்களாலும் ஒரேயடியாகப் புறம் தள்ளப்பட்டிருக்கும். அம்மை நோய்க்கிருமிகளைக் கொண்டே அம்மை நோய்க்கு தடுப்பு மற்றும் முறி மருந்து கண்டுபிடித்த நம் முன்னோர்களைப் போலவே தரம்பால், மேற்கத்திய (பிரிட்டிஷ்) ஆவணங்களைக் கொண்டே மேற்கத்திய வரலாற்றுப் புனைவுகளை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

நவீன மனிதர்கள் புரிந்துகொள்ளும் வரலாற்று மொழியில், அவர்களுக்குத் தேவைப்படும் அறிவியல்பூர்வ ஆதாரங்களுடன் நமது முன்னோர்களை, நமது கடந்த காலத்தைப் பற்றிய உண்மையான சித்திரத்தை முன்வைத்திருக்கிறார். மேற்குலகம் உருவாக்கி வைத்த இந்தியாவுக்கு மாற்றான உண்மையான, இன்னொரு இந்தியாவை நமக்குக் காட்டியிருக்கிறார். தரம்பாலின் ஆங்கிலப் பதிப்பாளரான க்ளாட் ஆல்வரெஸ் தனது பதிப்பகத்துக்கு அதர் இந்தியா பிரஸ் என்று பெயர் சூட்டுவதற்கான முக்கியக் காரணமாகவும் அதுவே அமைந்தது.

*

இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஆவணங்கள்