Posted on Leave a comment

விஞ்ஞானப்புதினங்களின்பார்வையில் (தற்போதுநிகழ்காலமாகிவிட்ட) எதிர்காலம் | ராம்ஸ்ரீதர்

சிறிது
காலம் முன் வரை விஞ்ஞானப் புதினங்கள் (நாவல்கள் மற்றும் திரைப்படங்கள்) எதிர்காலத்துடன்
ஒரு சிக்கலான தொடர்பையே வைத்துக் கொண்டுந்திருந்தன.
பெரும்பாலும்
இந்த வகை நாவல்கள் / திரைப்படங்களில் எதிர்காலத்தில் மனிதன் அற்புதமான / ஆச்சரியமான
விஷயங்களைச் சாதிப்பான். உதாரணத்திற்கு, பறக்கும் கார்கள், சுயமாகப் பறந்து செல்ல தனிமனித
ஜெட் பேக்குகள் (Jetpacks), எரிமலையின் அருகாமையில் உல்லாச சுற்றுலா – இதுபோன்றவை.
உண்மையைச்
சொல்லப்போனால் இதுபோன்ற மகிழ்ச்சியான / ஒளிமயமான எதிர்காலம் போரடிக்கும் என்று தோன்றியதாலோ
என்னவோ, இப்போது, சமீபகாலமாக, வரும் படைப்புகள் (நாவல்கள் / திரைப்படங்கள்) எல்லாமே
எதிர்காலத்தை மிக அச்சுறுத்தும் வகையில் காட்டுகின்றன.
விஞ்ஞானப்
புதினங்களை சுலபாமாக இரு வகையாகப் பிரித்துவிடலாம்; எடுத்ததெற்கெல்லாம் விண்வெளி, வேற்று
கிரக மனிதர்கள், அண்டவெளிப் பயணம், பிற கிரகங்களை மனிதகுலம் ஆக்கிரமிப்பது போன்ற
Hard Science Fiction; மற்றொரு புறம், விஞ்ஞான உலகில் திடீரெனத் தோன்றுவதாக / கண்டுபிடிக்கப்படுவதாக
நிகழும் மாற்றங்களை விவரிக்கும் நாவல்கள் / திரைப்படங்கள் போன்ற Soft Science
Fiction.
ஆங்கிலத்தில்,
முதல்வகை படைப்புகள் ஏராளம். இப்போது இரண்டாவது வகை படைப்புகளும் பல்கிப் பெருகிவருகின்றன.
இதில்
அலுப்பூட்டும் வண்ணம், திரும்பத் திரும்ப Zombie-க்கள் எனப்படும் நடைபிணங்களின் அட்டகாசங்களை
விவரித்து / காட்டி அலுக்க வைக்கிறார்கள். அல்லது, ஒரு கொடூர வைரஸ் தாக்குதல், உலகில்
பெரும்பான்மையான மனிதர்கள் இறந்துவிட, மீதியிருக்கும் சொற்ப மனிதர்கள், மிஞ்சியிருக்கும்
சொற்ப உணவுக்காகப் போராடுவது. கடந்த வருடங்களில் இது போன்ற அச்சுறுத்தும் விஞ்ஞான விபரீதங்களைப்
பற்றி புத்தகங்கள் / திரைப்படங்கள் நிறைய வந்திருந்தாலும், சமீபத்தில், இது போன்ற ஒரு
அச்சுறுத்தும் சூழ்நிலை விவரிப்பை (Scenario) ஆரம்பித்தது, 2007-ல் The Road என்ற மிகப்
புகழ்பெற்ற நாவலை எழுதிய கோர்மாக் மெக்கார்தி (Cormac McCarthy) என்ற புண்ணியவான்
(புலிட்ஸர் விருதினை வென்றவர்). இது 2009-ல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது.
இதே
பாணியைப் பின்பற்றி இப்போது எக்கச்சக்கமான புத்தகங்கள் / திரைப்படங்கள். இவ்வகையான
அச்சுறுத்தும் எதிர்கால நிகழ்வுகளை post – apocalyptic என்றும் dystopian என்றும் அழைக்கிறார்கள்.
Apocalypse
(அபோகாலிப்ஸ்) என்பது பேரழிவு. பைபிளில் புதிய ஏற்பாட்டில் (New Testament) இது பற்றிக்
குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதையும் பெருவெள்ளம் சூழ்ந்து அழிப்பதாக விவரம்
உள்ளது. இதற்குப் பின் நடக்கும் நிகழ்வுகளையே post – apocalyptic படைப்புகள் (அதீதமான
கற்பனையுடன்) விவரிக்கின்றன.
இந்த
அபோகாலிப்ஸ் என்ற வார்த்தை வேண்டுமானால் நாம் அதிகம் கேள்விப்படாததாக இருக்கலாம். ஆனால்,
பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மஹாபாரதத்தில் இதுபற்றிய (பெரும் வெள்ளத்தினால் வரும்
பேரழிவு) விவரிக்கப்பட்டுள்ளது.
பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும் இடையேயான குருஷேத்திர யுத்தம் முடிவுக்கு வந்து கிருஷ்ணபரமாத்மாவின்
உதவியால் கௌரவர்கள் அடியோடு அழிக்கப்படுகிறார்கள். தன்னுடைய மகன்கள் எல்லோரும் இறந்ததினால்
வருந்தும் காந்தாரி, கோபத்தில் கிருஷ்ணரைப் பார்த்துச் சாபமிடுகிறாள். “நான் உன்னை
விஷ்ணுவின் வடிவாகவே பாவித்து பூஜை செய்தேன். ஆனால், நீ இப்படியெல்லாம் நடக்கும் என்று
தெரிந்தும் இந்தப் போர் மூள்வதைத் தடுக்க முற்படவில்லை. என்னுடைய பக்தி உண்மையானால்,
இன்னும் 36 வருடத்தில் ஒரு பெரும் வெள்ளம் சூழ்ந்து துவாரகை மட்டுமல்ல, இந்த உலகமே
அழிந்து போகும்
என்று சொல்லும் காந்தாரியிடம், கிருஷ்ணர்
சொல்கிறார். “உன் பக்தி உண்மை காந்தாரி. இன்னும் 36 வருடங்களில் நீ சொன்னது போலவே ஒரு
பெருவெள்ளத்தில் இந்த உலகம் அழியும்
என்று வாக்கு கொடுக்கிறார்.
போரில்
வெற்றி பெற்றாலும் தங்களுடைய சொந்தங்கள் அனைவரையும் இழந்ததால் துன்புறும் பாண்டவர்கள்
ஐவரும், தங்கள் குல மக்கள் சிலரை அரசாள வைத்துவிட்டு நெடும்பயணமாகப் பல கோயில்களுக்கு
பாப விமோசனம் பெறும் நோக்கில் செல்கிறார்கள். இவர்கள் யாரும் இல்லாததால் அந்த மக்கள்
தறிகெட்டு போய் குடித்துக், கும்மாளமிட்டு வாழ்வைக் கொண்டாடுகிறார்கள். இதனிடையே, துவாரகையிலிருக்கும்
சிலர், கிருஷ்ணர் மற்றும் ஜாம்பவதிக்கும் பிறந்த சம்பா என்ற மகனுக்குப் பெண் வேடமிட்டு,
கர்ப்பவதி போல நடிக்க வைத்து, அங்கிருக்கும் சில முனிவர்களிடம் விளையாட்டாக “இந்தப்
பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும்?
என்று கேட்கிறார்கள். உண்மையை உணர்ந்த முனிவர்கள்,
“ஒரு இரும்பு உலக்கைப் பிறக்கும். அதனால் உங்கள் இனமே பூண்டோடு அழியும்

என்று சபித்துவிடுகிறார்கள்.
அதுபோலவே
சம்பாவிற்கு ஒரு உலக்கை பிறக்கிறது. இதை அறியும் அரசன் உக்கிரசேனன், அந்த உலக்கையைத்
தூள்தூள்ளாக்கி கடலில் கரைக்க ஆணையிடுகிறார்.
கிருஷ்ணரிடம்
“இது என்ன விபரீதம்?
என்று கேட்க, அவர் புன்னகைத்து, “கால சக்கரம்
சுழல்வதை யாராலும் நிறுத்த முடியாது. காந்தாரி இட்ட சாபம் பலிக்கும் நேரம் வந்துவிட்டது

என்று சொல்கிறார்.


கடலில்
கரைக்கப்பட்ட உலக்கையின் ஒரு துண்டை ஒரு மீன் விழுங்கிவிடுகிறது. அந்த மீனைத் தூண்டிலில்
பிடிக்கும் ஒரு வேடன், மீனின் வயிற்றில் இருக்கும் துண்டை எடுத்து அதை வைத்து ஒரு அம்பு
நுனியைத் தயாரிக்கிறான். ஒரு மரத்தின் கிளையில் சாய்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்
கிருஷ்னரின் வெண்பாதத்தை தூர இருந்து பார்க்கும் அந்த வேடன், அதைப் புறா என்று நினைத்து
அம்பெய்தி விடுகிறான். கிருஷ்ணரின் அவதாரம் இவ்வாறாக முடிவுக்குவந்தவுடன், கடல் கொந்தளித்து
பெரும் வெள்ளம் வந்து உலகை அழிக்கிறது.
Dystopia
(டிஸ்டோபியா) என்பது Utopia (உடோபியா) என்பதின் எதிர் / மாற்று வடிவம். உடோபியா என்பது
ஒரு கற்பனை உலகம். இங்கே, சகல வசதிகளுடனும், செழிப்பாக, எந்தவித பிரச்சினைகளும் இன்றி
மனிதர்கள் வாழ்வதாக 16-ம் நூற்றாண்டில் தாமஸ் மோர் (Thomas More) என்பவர் விவரித்தார்.
இந்த உடோபியா என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து உருவானது. இதற்குப் பொருள் ‘இல்லாத
உலகம்
என்பதே.
இப்போது
வரும் படைப்புகள் இதற்கு நேர் எதிர்மாறான ஒரு உலகத்தை (பசி, பட்டினி, நோய் போன்ற தீராத
பிரச்சினைகளுடன்) விவரிக்கும் போது உடோபியா (Utopia) என்பதற்கு எதிர்வார்த்தையாக டிஸ்டோபியா
(Dystopia) என்ற பதத்தை உபயோகிப்பதனால் இவ்வகை படைப்புகள் dystopian என்று அழைக்கப்படுகின்றன.
நாம்
இப்போது 21-ம் நூற்றாண்டுக்குள் நுழைந்துவிட்டபடியால், கடந்தகாலத்தில் இந்த நூற்றாண்டின்
ஆரம்பத்தில் நடப்பது போன்ற சில கற்பனைப் படைப்புகளில் அதனை எழுதியவர்கள் எப்படிக் கற்பனை
செய்தார்கள் என்பது பற்றி ஆராயலாம். இவர்கள் கற்பனையில் 2020ல் துவங்கும் தசாப்தம்
(decade) மிக மோசமாக இருக்கும் என்றே கணித்துள்ளார்கள்.மிக மோசமான டிஸ்டோபிய சூழ்நிலைகளையே
பெரும்பாலான எழுத்தாளர்கள் விவரித்துள்ளார்கள். பி.டி (P D) ஜேம்ஸ் என்ற பிரபல எழுத்தாளர்
1992-ல் எழுதிய தி சில்ட்ரன் ஆஃப் மென் (The Children of Men) என்ற கதையில் 1995க்குப்
பிறகு உலகில் குழந்தைகளே பிறப்பதில்லை. உலகெங்கும் பசி, பட்டினி போன்ற காரணங்களால்
நிறைய தற்கொலைகள் போன்ற துயர சம்பவங்கள் உலகைச் சூழ்கின்றன. கதை நடக்கும் வருடமாக
2021ஜக் குறிப்பிடுகிறார் கதாசிரியர்.
இதற்கு
நேரெதிர்மாறாக, ரெய்ன் ஆஃப் ஃபயர் (Reign of Fire) என்ற திரைப்படத்தில் நம் உலகை தீ
காக்கும் பிரமாண்டமான ட்ராகன்கள் (dragons) சூழ்ந்துவிடுகின்றன. கண்ணில் கண்டவற்றை
எல்லாம் பொசுக்குகின்றன. அவற்றை மனித இனம் அடக்க, பெரும் போராட்டம் நிகழ்கிறது.
2002ல் வெளிவந்த இந்தப் படத்தில் கதை நடப்பது 2020ல் என்று காட்டுவார்கள். இதைத் தவிர,
திகில் கதை எழுத்தாளர் ஸ்டீஃப ன் கிங் (ரிச்சர்ட் பாக்மன் -Richard Bachman- என்ற புனைபெயரில்)
1982ல் எழுதிய தன்னுடைய ரன்னிங் மேன் (Running Man) நாவலில், 2025ல், அமெரிக்கா பொருளாதார
வீழ்ச்சியைச் சந்திக்கும். இதனால் உண்டாகும் தீவிரமான பிரச்சினைகளால் மக்கள் மிக ஆபத்தான
ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு உயிர் பிழைக்க வழி தேடுவார்கள் என்று குறிப்பிட்டிருப்பார்.
பின்னர், இந்த நாவலைத் தழுவி, அதே பெயரில் 1987ல் ஆர்னால்ட் ஷ்வார்ஸ்நெக்கர் நடிக்கப்
படமாக எடுத்து, படமும் பெரும் வெற்றியைப் பெற்றது.
1950லேயே
ரே பிராட்பரி (Ray Bradbury) என்ற புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைவு எழுத்தாளர் எழுதிய
There will come Soft Rains என்ற சிறுகதையில் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் நடக்கும்
ஒரு அணுஆயுத விபத்தால் ஒரு நள்ளிரவில் உலகமே அணுக்கதிர் வீச்சுக்கு ஆளாகி அழிந்துவிடும்
என்று கணித்திருப்பார். கதை நடக்கும் வருடம் 2026 என்று எழுதியிருப்பார் ரே பிராட்பரி.
1982ல் ஹாரிஸன் ஃபோர்ட் (Harisson Ford) நடித்து, பிரபல இயக்குநர் ரிட்லி ஸ்காட்
(Ridley Scott) இயக்கிய தி ப்ளேட் ரன்னர் (The Blade Runner) மிகப் பெரும் வெற்றியும்,
புகழையும் பெற்றது. இந்தப் படம் 2019ல் லாஸ் ஏஞ்சலஸில் (Los Angeles) நடைபெறுவது போல
படமாக்கப் பட்டிருக்கும். இது பிலிப் கே. டிக் (Philip K.Dick) என்பவர் 1968ல் எழுதிய
‘Do Androids Dream of Electric Sheep?
என்ற கதையைத் தழுவியதாகும். இதே படம் ப்ளேட்
ரன்னர் 2049 (The Blade Runner 2049) என்ற பெயரில், டெனிஸ் வில்யனுவி (Denis
Villeneuve) என்பவர் இயக்கத்தில், 2017ல் எடுத்து வெளிவந்தது. ஆனால் அது எதிர்பார்த்த
அளவு வெற்றிபெறவில்லை.
இது
மிகப் பெரிய பட்டியல். நிறைய புத்தகங்களும், திரைப்படங்களும் இந்த தசாபத்தில்
(2020-ல் ஆரம்பித்து 10 வருடங்கள்) நடைபெறும் கதை அம்சங்களுடன் வந்துள்ளன. எல்லாவற்றையும்
குறிப்பிடுவது நேர விரயம். பொதுவாக விஞ்ஞானப் புனைவு எழுத்தாளர்கள் தங்களைச் சுற்றி
நடப்பதைப் பார்த்து, உள்வாங்கிக் கொண்டு, எதிர்காலம் இப்படி இருக்கலாம் என்ற கற்பனையில்
பல சமயம் நிறைய வரம்பு மீறிப் போய்விடுகிறார்கள். ஆனால், 1970 / 80 / 90 களில் எழுதியவர்கள்
2020 எப்படியிருக்கும் என்று எப்படிச் சரியாக யூகிக்க முடியும்?
நாம்
இந்தக் கதைகள் / திரைப்படங்களில் உள்ள அச்சுறுத்தும் சூழ்நிலையை வேறு விதமாகச் சிந்தித்துப்
பார்க்கலாம். இப்போதைய நிலை உலகில் மோசம் என்றாலும் இன்னும் டிஸ்டோபியா / அபோகாலிப்ஸ்
(dystopia / apocalypse) என்றளவு மோசமாகவில்லையே?
அதனால்
உள்ள மட்டும் நம் சூழ்நிலையை சந்தோஷமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம். பறக்கும் கார்கள்,
சுயமாகப் பறந்து செல்ல தனிமனித ஜெட் பேக்குகள் (Jetpacks) என்று முன்னர் குறிப்பிட்ட
மாதிரி நல்ல முன்னேற்றங்களை மட்டுமே மனதில் கொண்டு, தைரியமாக எதிர்காலத்தை மேற்கொள்ளலாம்.
எதிர்காலம் எப்படியிருக்கும் என்றும் நாம் எப்படி அனுமானிக்க முடியும்?ஏனென்றால், வேறு
சில படைப்புகளில் (நாவல்கள் / திரைப்படங்களில்) அடுத்த தசாப்தம் (2030ல் ஆரம்பித்து
10 வருடங்கள்) இதைவிட மோசமாக இருக்கும் என்றே கணித்துள்ளார்கள்.
நாம்
எப்போது போல இதைப் பற்றிய நேர்மறையான அணுகுமுறையுடன் (positive attitude) அணுகுவோம்.
நன்றி:
இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டிய (நான் படித்து / பார்த்து அனுபவித்த) விஞ்ஞானப் புதினங்கள்
/ மற்றும் அவற்றைத் தழுவியெடுத்த திரைப்படங்கள் / மஹாபாரதக் குறிப்பு / David
Baker, Lecturer in Big History, Macquarie University, Australia.

Leave a Reply