Posted on Leave a comment

அச்சமறியா போர்ப் பறவை: குலாலை இஸ்மாயில் | ராம் ஸ்ரீதர்திடீரென்று
நடக்கவில்லை என்றாலும், ஒருநாள்
காலையில் எங்கெங்கு பார்த்தாலும்
அந்தப் பெண்ணின் முகம்தான்
பாகிஸ்தானின் அதிகமாகத் தேடப்பட்டு
வரும் குற்றவாளி என்ற அச்சுறுத்தலான
வாசகங்களுடன்அனைத்துக் காவல்
நிலையங்கள், விமான நிலையங்கள்,
பஸ்
/
ட்ரெயின் நிலையங்கள் சகலத்திலும் குலாலை இஸ்மாயில் (Gulalai Ismail) முகம்தான்!
அவர்
மீது தேசத் துரோக
வழக்கு! மனித உரிமைப் பாதுகாவலர்கள்
அவர் பக்கம் நின்றாலும்,
பாகிஸ்தானில் மனித உரிமையாவது
மண்ணாவது? அதுவும் ஒரு
பெண்ணுக்கு!
மனித
உரிமைப் பாதுகாவலர்கள் குலாலை மேல் சுமத்தப்பட்ட
குற்றங்கள் எல்லாமே போலியானவை
என்று போராடினர். பாகிஸ்தானின்
ராணுவம் செய்துவரும் அத்துமீறல்களை
வெளிச்சம் போட்டுக் காட்டியது
குலாலை செய்த மாபெரும்
தவறு. பாகிஸ்தானின் ஒவ்வொரு
இண்டு இடுக்கையும் சல்லடை
போட்டுத் தேடி வந்தனர் பாகிஸ்தானின் ரகசியப் பிரிவைச் சார்ந்த உளவுப்படை போலிசார்.
இவை
எல்லாவற்றையும் மீறி 32 வயதான
குலாலை இஸ்மாயில் பாகிஸ்தானின்
அச்சுறுத்தும் போலிஸ் / ராணுவ
வலையிலிருந்து தப்பி இறுதியில்
அமெரிக்காவில் ப்ரூக்ளினில் (Brooklyn) உள்ள அவர் சகோதரியிடம்
வந்து சேர்ந்து விட்டார்.
அமெரிக்க அரசிடம் அரசியல்
புகலிடம் (Political Asylum) கேட்டு
விண்ணப்பித்துள்ள இவர்,
தனக்கு அது கிடைத்துவிடும் என நம்புகிறார். நியூயார்க் நகரம் வந்து
சேர்ந்து சிறிது காலம்
கழிந்தும் தான்
பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை
குலாலையால் நம்ப முடியவில்லை.
தொடர்ச்சியாக, மனித உரிமை
ஆர்வலர்களையும், அரசைச் சேர்ந்த
அதிகாரிகளையும் தொடர்ந்து சந்தித்துப்
பேசி வருகிறார். 
பாகிஸ்தானில்
இன்னமும் இருக்கும் அவருடைய
பெற்றோர்கள் பற்றிய சிந்தனை
குலாலைக்கு அதிகமாகவே உள்ளது.
பாகிஸ்தானிலிருந்து எப்படித் தப்பினார் குலாலை?
இந்தக்
கேள்வியை அவரிடம் கேட்டபோது
மிகச் சுருக்கமாக அங்கிருந்த எந்த
விமான நிலையத்திலிருந்தும் நான்
பறக்கவில்லை என்கிறார்.
இதற்கு
மேல் என்னிடம் கேட்காதீர்கள்.
நான் தப்பி வந்த
விதத்தை விவரித்தால் நிறைய
நல்லவர்களின் உயிருக்கு ஆபத்தாக
முடியும் என்கிறார். 
குலாலைக்கு
ஏற்பட்ட துன்பங்கள் பாகிஸ்தானின்
உண்மை முகத்தைக் காட்டுகின்றன. தனிமனித உரிமையைத் துச்சமாக
மதித்து, பெண்களையும், வயதானவர்களையும் கூட மிகக்
கொடுமையான அடக்குமுறை மூலம்
அடக்கி ஒடுக்கும் பாகிஸ்தானைப்
பற்றி யாரும் பேச
விரும்புவதில்லை.
பாகிஸ்தானில்
பெண்கள் உரிமைகளுக்காக குலாலை
இஸ்மாயில் தொடர்ந்து மிகத்
தீவிரமாகக் குரல் கொடுத்து
வந்தார். பாகிஸ்தான் அரசும்
அதனுடைய ரகசியப் பாதுகாப்புப்
படையும் பெண்கள் மீது
ஏவிவிடும் அதீத
அடக்குமுறை, வன்கொடுமைகள், இன்னபிற
உரிமை மீறல்கள் போன்றவற்றை
வெளியுலகம் அறியச் செய்ய
தொடர்ந்து போராடி வந்தார். 
ராணுவம்
சர்வ வல்லமை வாய்ந்ததாக
அடக்கியாளும் (வெளியுலகுக்கு என்னதான்
ஜனநாயக முகமூடியைக் காட்டினாலும்) பாகிஸ்தான் போன்ற ஒரு
நாட்டில் ஒரு மாற்றுப்புள்ளி எங்கேயாவது தோன்றியே
ஆகவேண்டும் என்பதே குலாலை
போன்ற எண்ணற்ற மக்களின்
நம்பிக்கை.
பாகிஸ்தானிய
அரசு அதிகாரிகள் குலாலை போன்ற போராளிகள்
பற்றித் தொடர்ந்து வாய்
திறக்க மறுத்து வருகிறார்கள்.
குலாலை இஸ்மாயில் பாகிஸ்தானில் இருந்து துணிகரமாகத் தப்பித்த விஷயம்
மேலைநாட்டு ஊடகங்களில் பெரிதாகப்
பேசப்பட்டபோதும் அதைப்
பற்றி கருத்து தெரிவிக்கவும் மறுத்து வருகின்றனர். 
மனித
உரிமை மறுக்கப்பட்டு, இதுபோன்று
அடியோடு நசுக்கப்படும் நிகழ்வுகளை சர்வதேச
ஊடகங்களின் கவனத்திலிருந்து திசைதிருப்பவே
பாகிஸ்தான் காஷ்மீர் மீது
இந்தியா கொண்டுவந்த மாற்றங்களைத்
தொடர்ந்து கூக்குரலிட்டுக் கண்டனம் செய்து உலக
அரங்கில் ஆதரவு தேட
மிகுந்த முயற்சிகளைச் செய்து
வருகிறது.
ஒருபுறம்
அந்தநாட்டின் பொருளாதாரம் மிக
மோசமாக இருக்கிறது. மறுபக்கம்
எவ்வளவு முயற்சி செய்தாலும்
உலக அரங்கில் அந்த
நாட்டிற்குப் பெரிய அளவில்
ஆதரவுக் குரல் கொடுக்க
பல நாடுகள் இதுவரை
முன்வரவில்லை.
குலாலை அமெரிக்காவுக்குப் புகலிடம் கேட்டு
வந்துள்ள கோரிக்கையை நியாயமாகப்
பரிசீலனை செய்துவருகிறோம், அவருக்கு
வேண்டிய உதவிகளைச் செய்து
கொடுப்போம். பாகிஸ்தானுக்குத் திரும்பினால்
அவர் உயிருக்கு எந்தவித
உத்தரவாதமும் இல்லை என்பதையும்
அறிந்துள்ளோம் என்று அமெரிக்க செனட்டர்களில்
பிரபலமானவர்களில் ஒருவராக
விளங்கும் நியூ யார்க்
நகர செனட்டரான சார்லஸ்
ஷூமர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான்
பாதுகாப்புப் படையினர் தங்களுடைய
பிடியிலிருந்து குலாலை எப்படியோ
தப்பிவிட்டார் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
அவரை
வெகு தீவிரமாகக் கண்காணித்து
வந்தும் எப்படியோ தப்பித்து,
நாங்கள் அணுகமுடியாத இடத்துக்குச்
சென்றுவிட்டார் என்று
தன்னைப் பற்றி விவரங்கள்
சொல்ல விரும்பாத ஒரு
பாதுகாப்பு அதிகாரி அமெரிக்க
நியூ யார்க் டைம்ஸ்
பத்திரிகை நிருபர் ஒருவரிடம்
சொன்னதாக அந்த நாளிதழ்
தகவல் வெளியிட்டது.
குலாலை இஸ்மாயில் பாகிஸ்தானுக்குள் சுதந்திரமாகப் பயணம்
செய்யவே தடைகள் இருந்தபோது,
நாட்டை விட்டே எப்படித் தப்பித்தார் என்பது பாகிஸ்தான் அரசுக்கு ஒரு புரியாத ஒரு
புதிராகவே விளங்குகிறது.
அவர்
தப்பிக்க உதவியவர்கள் தரை
மார்க்கமாக ஆப்கானிஸ்தான் அல்லது
ஈரான் வழியாகத் தப்ப
உதவினார்களா அல்லது கடல்
மார்க்கமாக ஏதேனும் ஒரு
ஐரோப்பிய நகருக்குத் தப்பிக்க
வைத்து அங்கிருந்து அமெரிக்கா
தப்பவைத்தார்களா என்பது
யாருக்கும் தெரியவில்லை.
தனி
மனித உரிமையைப் பற்றி (குறிப்பாகப் பெண்களின்
உரிமை) இப்போது பேச
ஆரம்பித்தவர் அல்ல குலாலை. கிட்டத்தட்ட
அவருடைய 16 வயதிலிருந்து 16 வருடங்களாகக்
குரல் கொடுத்து வருகிறார்.
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்,
பெண்கள் மீது பாகிஸ்தானில் இருக்கும் அடக்குமுறை,
அதை எதிர்த்தவர்கள் / எதிர்த்துக்
குரல் கொடுத்தவர்கள் ஆகியோருக்கு
ஏற்பட்ட பயங்கர முடிவுகள்
போன்றவற்றைப் பற்றி குலாலை அசராது
பேசி வருகிறார். பெண்கள் சிறுவயதிலேயே
எப்படி திருமணத்துக்கு வற்புறுத்தப் படுகிறார்கள், காதல் என்று
ஏதாவது இருந்தால் நடக்கும்
கௌரவக் கொலைகள் என்று
குலாலை தொடாத விஷயமே
இல்லை. 
பெண்கள்
மீது ஏவி விடப்படும் அடக்குமுறைகள்,
அநீதிகள், பாகிஸ்தான் ராணுவ
வீரர்கள் எப்படித் தத்தம்
வீரத்தை அப்பாவிப் பெண்களைக்
கெடுத்துs சீரழிப்பது மூலம்
வெளிப்படுத்துகிறார்கள் போன்றவற்றைப்
பற்றி 2019 ஜனவரியில் குலாலை முகநூல் மற்றும்
ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தினார். இது மட்டுமல்லாமல், ஆண்டாண்டு
காலமாக பாகிஸ்தானில் தன்னுடைய
பஷ்டூன் இன மக்கள்
மீது நடக்கும் அடக்குமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார், தன்
இன மக்களின் ஆதார
உரிமைகளை பாகிஸ்தான்
ராணுவம் அடியோடு நசுக்குவதை
எதிர்த்து நடைபெற்ற பேரணியில்
குலாலை கலந்துகொண்டு பேசினார்.
இதனால்
எரிச்சலடைந்த பாகிஸ்தான் ராணுவம்
குலாலை மீது தேசத்துரோக
வழக்கை ஏவியது. பிற
மக்களை அரசுக்கு எதிராகக்
கலகம் செய்யத் தூண்டுகிறார்
என்றும் அவர் மீது
பழி சுமத்தப்பட்டது. 2019
மே மாதம் குலாலை
மீது அரசு
தொடுத்துள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து
ஓடப் பார்க்கிறார்
என்று அரசால்
தேடப்படும் குற்றவாளி (Fugitive) என்ற குற்றம் சுமத்தப்பட்டது. தன்னை ஒரேயடியாகத் தீர்த்து
விட முயற்சி நடக்கிறது
என்பதை குலாலை உணர்ந்துகொண்டார்.
இது
பற்றிய தகவலை அவருடைய
நண்பர் ஒருவர் குலாலை
வீட்டுத் தொலைபேசியில்
தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் உள்ள
அந்த வீட்டில்தான் குலாலை
தன் வயது முதிர்ந்த
பெற்றோருடன் வசித்துவந்தார். ஊடகங்கள் முழுக்க
உன்னைப் பற்றிய செய்திதான்.
உன் இருப்பிடத்தைச் சோதனை
செய்து உன்னைக் கைது
செய்ய உளவுப்படை போலிஸ்
வருகிறது. இதுதான் நீ
இங்கிருந்து கிளப்புவதற்குச் சரியான
தருணம். உடனே கிளம்பு என்று
தொலைபேசியில் தெரிவித்தார் அந்த
நண்பர். 
மாற்று
உடை,
கையில் அலைபேசி என
எதுவும் இல்லாமல் வீட்டைவிட்டு
உடனே வெளியேறினார் குலாலை.
அலைபேசி தன் வசம்
இருந்தால், அதன் மூலம்
தன் இருப்பிடத்தைப் பற்றி
அறிந்துகொள்ள உளவுப்படை போலிஸால்
முடியும் என்பதை குலாலை
அறிந்திருந்தார். 
நீங்கள் பயந்தீர்களா என்ன? 
குலாலை
இந்தக் கேள்விக்குப் புன்னகைத்தவாறே பதில் சொன்னார்,
எதையும்
நினைத்துப் பார்க்கக் கூட
எனக்கு
நேரமில்லை. பயப்படுவதற்கோ, தைரியமாக
இருப்பதற்கோ நேரமில்லை. அது
தப்பிப்பதற்கான நேரம் என்றார்
அவர்.
அடுத்த
மூன்று மாதங்களை ஒரு
இடத்திலிருந்து இன்னொரு இடம்
என்று மாறி மாறி
பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் நாடோடி வாழ்க்கை
நடத்தினார் குலாலை. தனக்கு
மிக நம்பகமான மிகச்
சில நண்பர்களை மட்டுமே
நம்பினார் அவர். இஸ்லாமியப் பெண்
என்பதால் முகத்திலிருந்து
கால் வரை

மறைக்கப்பட்ட உடை அவருக்குப்
பெரிதும் உதவியாக இருந்தது.
மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் நகரங்கள் பலவற்றில்
இருக்கும் சோதனைச் சாவடிகளைக் கடக்கும் போதெல்லாம் மிகவும்
பயந்திருந்தார் குலாலை. 
இதுபோன்ற
ஒரு தருணத்தில் தன்
தந்தையின் நெருங்கிய நண்பர்
வீட்டிற்கு முன்னறிவிப்பு எதுவும்
இன்றி ஒருமுறை திடீரென்று
சென்று அந்த வீட்டில்
இருந்தவர்களை துணுக்குறச் செய்ததை
எண்ணி இப்போதும் வருந்துகிறார்
குலாலை. என்
தந்தையின் நண்பர் என்னைப்
பார்த்ததும் மிகவும் பயந்துவிட்டார்.
ஏனென்றால் நான் அரசால்
மிகத் தீவிரமாகத் தேடப்படும்
குற்றவாளி. எனக்கு உதவி
செய்வது தெரிந்தால் அவர்
குடும்பத்துக்குக் கிடைக்கும்
தண்டனை மிகக் கொடூரமானதாக
இருக்கும். அதனால் ஒரே
இரவில் அங்கிருந்து வெளிவந்து,
நண்பர் ஏற்பாடு செய்த
டாக்சி மூலம் வேறிடத்திற்குச் சென்று விட்டேன்.
ஒளிந்து வாழ்வது ஒன்றும்
ரசிக்கத்தக்க அனுபவமல்ல,
என்றார் அவர்.
குலாலை
முன்னெச்சரிக்கையாக முதலிலேயே
அமெரிக்க விஸாவுக்கு விண்ணப்பித்து
அதை வாங்கி வைத்திருந்தார்.
ஏனென்றால் அங்கு அவருடைய
இரு சகோதரிகளும், இரு
சகோதரர்களும் ஏற்கெனவே அமெரிக்காவில் குடியேறி இருந்தனர்.
அவர்களைச் சந்திப்பதற்காக முன்பே
(
நேரான வழியில்) அமெரிக்கா
சென்றுவந்த அனுபவமும்
அவருக்கு உண்டு.
குலாலைக்குத்
தன் பெற்றோரை எண்ணி
இன்னமும் பயமாகவே இருக்கிறது என்கிறார்.
அவர் அமெரிக்கா தப்பிச் செல்ல
பண உதவி செய்தார்கள் என்று
அவர்கள் எந்த நேரமும்
கைதாகலாம் என்ற என்ற
அச்சமும் அவருக்கு உள்ளது.
ஆனால், உண்மையில் குலாலையின்
பெற்றோர்கள் அவருக்குப் பணஉதவி
எதுவும் செய்யவில்லை.
இருந்தாலும்
குலாலையின் பெற்றோர் மீது
தீவிரக் கண்காணிப்பு இருந்து
வருகிறது. அமெரிக்காவில் இருக்கும்
பாகிஸ்தானிய உளவுப்படை ஆட்கள்
யாராவது பார்த்தாலும் குலாலைக்குப்
பிரச்சினைதான். 2019 செப்டம்பர்
மாதம் அமெரிக்கா சென்று அடைந்துவிட்டாலும் இன்னமும் பயத்துடன், தனியாக
வெளியே எங்கும் செல்லாமல்
கூடியவரை சகோதரியின் வீட்டிலேயே
இருக்கிறார் குலாலை. அங்கு இருக்கும் தன்
குடும்பத்தினருக்கு விதவிதமான
பாகிஸ்தானிய உணவுகளைச் சமைத்துப்
பரிமாறுவதில் ஆர்வம் காட்டுகிறார்.
இதுபோன்ற
மனித உரிமை வழக்குகளை
எடுத்து நடத்திவரும் மஸ்ரூர் ஷா என்ற
வழக்கறிஞர், குலாலை
மறுபடியும் பாகிஸ்தானிய அரசு
அதிகாரிகளிடம் சிக்கினால் அவருக்கு
நிச்சயம் மரண தண்டனைதான் என்கிறார். குலாலை அமைதி
மற்றும் ஜனநாயகத்துக்கான குரல் என்று
ஒரு அமைப்பை ஏற்படுத்தி
அதன் மூலம் தன்
போன்ற பெண்களுக்கு உதவி
செய்து வருகிறார். சட்டம்
படிக்கும் திட்டமும் அவரிடம்
உள்ளது. ஆனால், மறுபடியும்
தன் பெற்றோரைப் பார்க்கவே
முடியாது என்ற உண்மை
அவரை மிகவும் வாட்டுகிறது.நான் அந்த
நாட்டிலிருந்து வெளிவந்தபோதே இது
ஒரு வழிப்பாதை என்பதை
உணர்ந்து கொண்டேன். அமெரிக்க
மண்ணை மிதித்தவுடன் இனி
இதுதான் என் பூமி
என்ற எண்ணத்தையும் என்னுள்
விதைத்துக்கொண்டேன் என்கிறார்
குலாலை.
தகவல்கள் நன்றி:

நியூ யார்க் டைம்ஸ் தினசரி, Front-line Defenders இயக்க இணையத்தளம், Peace Direct இயக்க இணையத்தளம், Undispatch இணையத்தளம், Secure Avaaz இயக்க இணையத்தளம்.

Leave a Reply