Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 2) | ஹரி கிருஷ்ணன்

கேள்வி: கிருஷ்ணனுடைய மாயை என்ற ஸஞ்சயன் அனுமானம் எந்த அளவுக்கு உண்மை?
 
இந்திரனிடமிருநது பெற்ற வாசவி சக்தியைக் கர்ணன், தான் போர்க்களத்துக்கு வந்த முதல் நாளிலேயே பயன்படுத்தி இருக்கலாமே. அவ்வாறு செய்யாமல், அந்த அஸ்திரத்தை ஏன் கடோத்கசனின்மேல் வீணடித்தான் என்று திருதராஷ்டிரன் எழுப்பிய கேள்விக்கு ஸஞ்சயன் சொன்ன பதிலைச் சென்றமுறை பார்த்தோம். இதற்கு, கிருஷ்ணன் உண்டாக்கிய மாயைதான் காரணம் என்ற தொனியில் ஸஞ்சயனின் விடை அமைந்திருந்தது. ஆனால், கர்ணன் களத்துக்கு வந்த பதினோராம் நாள் யுத்தத்திலிருந்து, கடோத்கசன் மீது அவன் இந்திரன் கொடுத்த சக்தியாயுதத்தை வீணடித்த பதினான்காம் நாள் இரவு நடந்த நிகழ்ச்சிகளை வரிசைப் படுத்தி, மிகச் சுருக்கமாக high-lights மட்டும் பார்த்துக்கொண்டு வந்தால், கர்ணனிடத்திலிருந்த சக்தி அஸ்திரத்திலிருந்து தப்பியது கிருஷ்ணன் உண்டாக்கிய மாயையாலா அல்லது வேறு காரணங்களாலா என்பது தெளிவாகும் என்று சொல்லியிருந்தோம். இப்போது கர்ணன் யுத்தகளத்துக்குள் நுழைந்த பதினோராம் நாள் யுத்தத்திலிருந்து பதினான்காம் நாள் இரவு யுத்தத்தில் கடோத்கசனைக் கொன்றது வரையில் நடந்தனவற்றை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம். அதாவது கிட்டத்தட்ட 300-400 பக்கங்களின் சுருக்கத்தைப் பார்க்கப் போகிறோம்.
பத்தாம் நாள் பீஷ்மர் விழுந்தார். பீஷ்மர் உயிரோடு இருக்கும் வரை போர்புரிய மாட்டேன் என்று சபதம் செய்திருந்த கர்ணன், பதினோராம் நாள் யுத்தத்துக்கு வந்தான். பீஷ்மருடைய மரணத்துக்குப் பிறகே போருக்கு வருவேன் என்று அவன் உத்தியோக பர்வத்தில் மூன்று வெவ்வேறு சமயங்களில் சபதம் செய்கிறான். அதில் மூன்றாவது முறையாகச் செய்யும் சபதத்தில் இவ்வாறு சொல்கிறான்:
Alone I will exterminate the army of the Pandavas! The fame, however, of such a feat will attach to Bhishma, O tiger among kings, for this Bhishma, O monarch, hath been made by thee the commander of thy forces, and the renown always attacheth to the leader and not to those that fight under him. I will not, therefore, O king, fight as long as Gangas son liveth! After Bhishma, however, hath been laid low, I will fight with all the Maharathas of the enemy united together! (கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்ப்பு, உத்யோக பர்வம் 169ம் பகுதி)
 
அதாவது, நான் ஒருவனாகவே பாண்டவர்களை அழிப்பேன். ஆனால், பீஷ்மரின் தலைமையில் போரிட்டால், பாண்டவர்களை நான் அழித்ததற்கான எல்லாப் புகழும் சேனைத் தலைவர் என்ற முறையில் பீஷ்மரைச் சேரும். ஆகவே, இன்னொருவர் தலைமையின்கீழ் நான் போரிட மாட்டேன் என்று சொன்ன கர்ணன், இப்போது துரோணருடைய தலைமையின்கீழ் போரிட வந்திருப்பதே பெரிய நகைமுரண். அது போகட்டும். இந்தப் பதினோராவது நாள் யுத்தத்திலிருந்து நடந்தவை என்ன? வரிசைப்படிப் பார்ப்போம்.
 
பதினோராம் நாள்
 
இன்று நான் யுதிஷ்டிரனை சிறைப் பிடிப்பேன். ஆனால் ஒன்று. நான் அவ்வாறு சிறையெடுக்கும் சமயத்தில் அர்ஜுனன் குறுக்கிடக் கூடாது. அப்படி அவன் குறுக்கிடாமல் நீ பார்த்துக் கொண்டால் யுதிஷ்டிரனைச் சிறைப் பிடிக்கிறேன் என்று துரோணர், துரியோதனனுக்கு வாக்களித்திருந்தார். அன்று நடந்த யுத்தத்தில் பீமன், சல்யன், சாந்தனீகன், கர்ணனுடைய மகன் விருஷசேனன், அர்ஜுனனுடைய மகன் அபிமன்யு என்று பலர் தமக்குள் போர்புரிந்து கொண்டார்கள். துரோணர், தருமபுத்திரனை ஏறத்தாழ சிறைப்பிடித்துவிட்டார் என்ற நிலையில் மின்னல் வேகத்தில் அங்கே வந்த அர்ஜுனன் அவரைத் தடுத்துவிட்டான். துரோணரால் தர்மபுத்திரனைச் சிறைப்பிடிக்க முடியவில்லை. அன்று கர்ணன் களத்தில்தான் இருந்தான். அவனால் முடிந்திருந்தால், துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் புகுந்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் யுதிஷ்டிரன் ஒருவேளை சிறைப்பிடிக்கப் பட்டிருக்கலாம். கர்ணன் அவ்வாறு குறுக்கிடவில்லை.
 
பன்னிரண்டாம் நாள்
 
அர்ஜுனனை சம்சப்தகர்கள் வெகுதொலைவுக்கு இழுத்துச் சென்றிருந்தனர். பகதத்தனும் அவனுடைய யானையான சுப்ரதீகமும் பாண்டவர் சைனியத்தைக் கலங்கடித்தனர். பீமன், சாத்யகி, அபிமன்யு என்று பலர் முயன்றும் சுப்ரதீகத்தின் அட்டகாசத்தைத் தடுக்க முடியவில்லை. எங்கிருந்தோ முளைத்த அர்ஜுனன் அன்று சுப்ரதீகத்தை அடக்கினான். அதைத் தொடர்ந்துதான் அர்ஜுனன்மீது பகதத்தன் வைஷ்ணவாஸ்திரத்தை எறிகிறான். அவன் அப்படி எறியும்போது, கிருஷ்ணன் தன் குதிரைச் சவுக்கையும் கீழே போட்டுவிட்டு, முழுமையான நிராயுதபாணியாக எழுந்து நின்று அந்த அஸ்திரத்தைத் தன் மார்பில் ஏற்றுக் கொள்கிறான். அது அவன் கழுத்தில் மாலையாக விழுகிறது. கிருஷ்ணா, நீ இப்படிக் குறுக்கிட்டிருக்கக்கூடாது என்று ஆட்சேபித்த அர்ஜுனனுக்கு, இது என் பொருள். என்னிடம் திரும்ப வந்துவிட்டது. பூமாதேவி கேட்டுக்கொண்டதன் பேரின் இதை நான் நரகாசுரனுக்குக் கொடுத்திருந்தேன். அவனிடமிருந்து பகதத்தனிடத்தில் இது வந்திருக்கிறது. இப்போது அவன் தன்னுடைய அங்குசத்தின்மேல் அபிமந்திரிந்து உன்மீது எய்தான். இனி நீ போரைத் தொடர்க என்று கிருஷ்ணன் பதில் சொன்னான். அதைத் தொடர்ந்து பகதத்தன் மீது அர்ஜுனன் எய்த அம்பு அவனுடைய மார்பைத் துளைத்து, அவன் உயிரைக் கவர்ந்தது. கிஸாரி மோகன் கங்கூலி சொல்கிறார்:
 
The son of Pandu then, with a straight shaft furnished with a crescent-shaped head, pierced the bosom of king Bhagadatta. His breast, being pierced through by the diadem-decked (Arjuna), king Bhagadatta, deprived of life, threw down his bow and arrows. Loosened from his head, the valuable piece of cloth that had served him for a turban, fell down, like a petal from a lotus when its stalk is violently struck.
 
கர்ணன் அன்று பகதத்தனுக்கு அருகிலேயேதான் இருந்தான். பகதத்தனுக்கு உதவியாக அர்ஜுனோடு போர்புரிந்து, கர்ணன் அர்ஜுனனைத் தடுத்திருக்கலாம். கர்ணன் அப்படி எதையுமே செய்யவில்லை.
 
பதின்மூன்றாம் நாள்
 
அன்றும் சம்சப்தகர்கள் அர்ஜுனனுக்கு சவால்விட்டு, அவனை யுத்தகளத்தின் தெற்குக் கடைக்கோடிக்கு இழுத்துச் சென்றிருந்தனர். அன்றுதான் அபிமன்யு சக்கர வியூகத்துக்குள் நுழைந்து, கர்ணன் உள்ளிட்ட கௌரவ மஹாரதிகளைத் தோற்கடித்திருந்தான். இப்படி அர்ஜுனனைத் தொலைதூரத்துக்கு இழுத்துச் சென்றால்தான் அபிமன்யு சக்கர வியூகத்துக்குள்ளே வருவான் என்பது ஏற்பாடு. அப்படியானால், அர்ஜுனனை அந்த இடத்திலிருந்து விலக்க துரோணாசாரியார் சம்சப்தகர்களைத் தற்கொலைப் படையாக உபயோகித்துக் கொண்டது ஏன்? கர்ணனைவிட்டு அர்ஜுனனைத் தடுத்திருக்கலாமே! அவனிடம்தான் இந்த மகத்தான சக்தி அஸ்திரம் இருக்கிறதே! துரோணர் கர்ணனிடம் இந்த வேலையை ஒப்படைக்கவில்லையே! அவனால் அர்ஜுனனைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை துரோணாசாரியருக்கு இருக்கவில்லையே!
 
பதினான்காம் நாள்
 
ஜயத்ரத வதம் நடந்த தினம். அன்று துரோணர், கௌரப் படைகளை அர்த்த-பத்ம-அர்த்த சக்கர வியூகங்களாக அமைத்து, இந்த வியூகங்களுக்குள் ஒரு ஊசி வியூகத்தை ஏற்படுத்தி, அந்த ஊசியின் காதுப் பகுதியில் ஜயத்ரதனை நிறுத்தியிருந்தார். ஜயத்ரதனுடைய பாதுகாப்புக்காக நின்ற மஹாரதிகளில் கர்ணனும் ஒருவன். ஜயத்ரதன் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு அருகில் பீமனுக்கும் கர்ணனுக்கும் போர் மூண்டது. பீமன் கர்ணனை அன்று மூன்றுக்கும் மேற்பட்ட முறைகள் தோற்கடித்தான். கதாயுதப் போரிலில்லை; விற்போரில்தான். கர்ணனுடைய தேர்களைச் சிதைத்து அவனைத் தரையிலே நிற்கவைத்தான். இப்படித் தொடர்ந்து தோற்கடித்துக்கொண்டிருந்த பீமனிடத்தில் ஆயுதங்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. யுத்தத்தில், கையிலுள்ள ஆயுதங்கள் செலவழியும்; சாரணர்கள் (Scouts) ஆயுதங்களைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். அப்படி, சாரணர்களிடமிருந்தும் ஆயுதங்களைப் பெறமுடியாத நிலையில் இருந்தான் பீமன். பலமுறை பீமனிடம் தோற்றிருந்த கர்ணன், ஆயுதக் குறைபாட்டோடு இருந்த பீமனை வென்றான். அர்ஜுனனைத் தவிர மற்றவர்களைக் கொல்ல மாட்டேன் என்று குந்தியிடம் அவன் வாக்களித்திருந்தான். இது, கர்ணனே குந்திக்குத் தந்த வாக்கு; குந்தி கர்ணனிடம் கேட்டுப் பெற்றதன்று. ஆகவே கர்ணன் பீமனைக் கொல்லவில்லை. அதற்கு பதிலாக பீமனை, காட்டுக்குப் போ. பயிற்சியில்லாமல் உயர்ந்த வீரர்களோடு போர்புரிய வராதே என்றெல்லாம் பலவிதமாக அவமானப்படுத்தினான். தேரில்லாமல் தரையில் நின்றுகொண்டிருந்த பீமனைத் தன் வில் நுனியால் தொட்டான். வீரர்களுக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய அவமானம் இது. ஜயத்ரத வதத்துக்காக அந்த இடத்தை நெருங்கிக்கொண்டிருந்த அர்ஜுனன் இதைப் பார்த்தான். சூரியனோ அஸ்தமனத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சூர்யாஸ்தமனத்துக்குள் ஜயத்ரதனைக் கொல்லாவிட்டால் தீயில் பாய்வேன் என்று சபதம் செய்திருந்த அர்ஜுனன் பீமனுக்கும் கர்ணனுக்கும் குறுக்கே வந்தான். Then the ape-bannered (Arjuna), urged by Kesava, shot at the Sutas son, O king, many shafts whetted on stone. Those arrows adorned with gold, shot by Parthas arms and issuing out of Gandiva, entered Karnas body, like cranes into the Krauncha mountains. With those arrows shot from Gandiva which entered Karnas body like so many snakes, Dhananjaya drove the Sutas son from Bhimasenas vicinity. His bow cut off by Bhima, and himself afflicted with the arrows of Dhananjaya, Karna quickly fled away from Bhima on his great car. என்று இந்த இடத்தை கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்க்கிறார். (துரோண பர்வம், அத்தியாயம் 138)
 
ஜயத்ரதனுக்குப் பாதுகாவலாக நிறுத்தப்பட்டிருந்த கர்ணன், அர்ஜுனனுடைய காண்டீவத்திலிருந்து புறப்படும் அம்புகளைச் சமாளிக்க முடியாமல் அந்த இடத்தைவிட்டு கிருபருடைய தேரில் ஏறிக்கொண்டு ஓடிப் போனான். கர்ணன் இந்தச் சமயத்திலாவது அர்ஜுனன் பேரில் அந்த மகத்தான சக்தியாயுதத்தை எய்திருக்கலாம். எய்யவில்லை.
 
ஜயத்ரத வதம் முடிந்தபிறகு எப்போதும்போல சூரிய அஸ்தமனத்துடன் போர் நிற்காமல் இரவெல்லாம் தொடர்ந்தது. இரவு ஆக ஆக அரக்கர்களுக்கு பலம் அதிகரிக்கும். அரக்கனான கடோத்கசனுக்கு பலம் ஏறிக்கொண்டே போனது. கடோத்கசன் ஏற்படுத்துகிற அழிவைப் பொறுக்க முடியாமல் கௌரவப் படைகள் கர்ணனிடத்தில் தஞ்சம் புகுந்தன. இதற்குமேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில் கர்ணன் அந்த இந்திரன் கொடுத்த சக்தி ஆயுதத்தைக் கடோத்கசன் மீது எய்தான்.
சக்தியாயுதம் என்பது அவ்வளவு பெரிய ஆற்றலுடையதா? உத்யோக பர்வத்தில் கர்ணனிடத்தில் பீஷ்மர் கேட்கிறார்: The shaft that the illustrious and adorable chief of the celestials, the great Indra, gave thee, thou wilt see, will be broken and reduced to ashes when struck by Kesava with his discus. That other shaft of serpentine mouth that shineth (in thy quiver) and is respectfully worshipped by thee with flowery garlands, will, O Karna, when struck by the son of Pandu with his shafts, perish with thee
அந்த சக்தியாயுதம் என்ன அவ்வளவு பெரியதா? கிருஷ்ணனுடை சக்ராயுதம் பட்டால் அது பொடிப் பொடியாகப் போய் சாம்பலாகும் என்கிறார் பீஷ்மர். அதற்குக் கர்ணன், ஆமாம். கிருஷ்ணனுடைய தன்மை அப்படிப்பட்டது; அதற்கும் மேற்பட்டது. நான் மறுக்கவில்லை என்கிறான்.
Karna said, Without doubt, the chief of the Vrishnis is even so. Further, I admit, that that high-souled one is even more than that. Let, however, the Grandsire listen to the effect of the bit of harsh speech that he hath uttered. I lay down my weapons. The Grandsire will henceforth behold me in court only and not in battle. After thou hast become quiet, the rulers of the earth will behold my prowess in this world. (உத்தியோக பர்வம், அத்தியாயம் 62)
 
அர்ஜுனனிடத்தில் சக்ராயுதத்துக்குச் சற்றும் குறையாத பாசுபதாஸ்திரம் இருந்தது. இந்திரனுடைய வஜ்ராயுதமும் இருந்தது. இந்திரனுடைய வஜ்ராயுதத்தைப் பயன்படுத்தித்தான் அவன் நிவாத கவசர்களை அழித்திருந்தான். எனவே அர்ஜுனனிடம் சக்தியாயுதத்துக்கு மாற்று இல்லாமலில்லை. கண்ணனுடைய சக்ராயுதம், அதற்குச் சற்றும் குறையாத பாசுபாதாஸ்திரம் இந்திரனுடைய வஜ்ராயுதம் என்று சகலவிதமான மாற்று ஆயுதங்களும் அர்ஜுனனுடைய துணைக்கிருந்தன.
 
அதற்குமேல், இந்திரன் இந்த சக்தியாயுதத்தைக் கர்ணனுக்குத் தரும்போது, மற்ற எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திய பிறகே இதைப் பயன்படுத்தவேண்டும்; உன்னுடைய உயிருக்குப் பேராபத்து இருக்கும் நிலையில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருந்தான். தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் கட்டம் வரையில் கடோத்கசனோடு கர்ணன் போர்புரிந்திருநதான். வேறுவழியே இல்லாத நிலையில்தான் சக்தியாயுதத்தை கடோத்கசன் மீது எய்தான்.
 
அவ்வாறு எய்யப்படாமல் இருந்திருந்தாலும் எதுவும் நடந்திருக்காது. அர்ஜுனனிடத்திலேயே சக்தியாயுதத்தைவிட அபரிமிதமான ஆற்றலுள்ள ஆயுதங்கள் இருந்தன. ஒருவேளை அவையே இல்லாமல் போயிருந்தாலும் கண்ணனுடைய சக்ராயுதம் அந்த நேரத்தில் சும்மா இருந்திருக்காது. அதற்குமேல், கடோத்கச வதம் நடந்த சிலமணி நேரத்துக்கு முன்னால்தான் கர்ணன் பீமனிடத்திலேயே மூன்று நான்கு முறை விற்போரில் தோற்று, தேரிழந்து நின்றிருக்கிறான். அர்ஜுனனோடு நேருக்கு நேர் மோதி தோற்று ஓடியிருக்கிறான். சக்தியாயுதத்தை கடோத்கசன்பேரில் வீணடித்திராவிட்டாலும் அது அர்ஜுனனை வெல்ல ஒரு காரணியாக இருந்திருக்கவே போவதில்லை.
Leave a Reply